காதல் கணவன் 48

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மருத்துவரின் முன்னால் அமர்ந்திருந்த கனிமொழியை சக்தியும் பாலாஜியும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"உனக்கு எப்படி இப்படி காயம் ஆச்சி பாப்பா?" மருத்துவர் நல்ல முறையில் விசாரித்தார்.

கனிமொழிக்கு காய்ச்சல் மூன்று மடங்கு அதிகமாகி விட்டது இப்போது. நாக்கு எழவில்லை.

"யார் உன்னை அடிச்சது பாப்பா.?" சக்தியும் பொறுமையோடு கேட்டான்.

அவளின் மௌனம் கண்டு கடுப்பாக இருந்தது‌.

"இப்ப வாயை திறக்கறியா இல்லையா?" கத்தினான்.

விம்மியழுதாள் அவள். அவனுக்கே புதிதாக இருந்தது. அவ்வளவு சீக்கிரத்தில் அழுது விட மாட்டாளே என்று குழம்பினான்.

"நீங்க போலிஸ்க்கு போன் பண்ணுங்க டாக்டர்.. அவங்ககிட்ட இவ உண்மையை சொல்லட்டும்.." பற்களை கடித்தபடி சொன்னான் சக்தி.

மறுப்பாக தலையசைத்தபடி இன்னும் அதிகமாக கண்ணீரை கொட்டினாள். "போலிஸ் வேணாம்.." என்றாள் அழுகை குரலில்.

பாலாஜி தங்கையின் அருகில் நெருங்கினான்.

"போலிஸ் உன்னை ஏதும் செய்ய மாட்டாங்க பாப்பா. உன்னை இப்படி செஞ்சவங்களைதான் பிடிப்பாங்க.." என்றான்.

"அவ அது கூட தெரியாத குழந்தையா?" சீறினான் சக்தி.

"எனக்கு ஊசி போட்டு அனுப்புங்க டாக்டர்.." மருத்துவரிடம் கெஞ்சினாள் அவள்.

சக்திக்கு பொறுமை தீர்ந்து விட்டது.

"என்ன ஆச்சின்னு சொல்றியா இல்லையா?" அதட்டலாக கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தவளை அடிக்க கையை ஓங்கினான். அவனை தூர தள்ளி விட்டான் பாலாஜி.

"மரியாதையா போ‌‌. என் தங்கச்சியை டச் பண்ணாத.." என்று எச்சரித்தான்.

சக்தி அவளை வெறித்தான். "இதுவே லாஸ்ட்.. இனி என்னோடு பேசிடாதே.." என்று சீறிவிட்டு வெளியே போனான்.

"நீங்க ட்ரீட்மெண்ட் கொடுங்க டாக்டர்.." என்ற பாலாஜியை குழப்பமாக பார்த்த மருத்துவர் "ஆனா விசயம் என்னன்னு தெரிய வேண்டாமா உங்களுக்கு?" எனக் கேட்டார்.

சக்தியின் கோபம் இவர்கள் இருவரும் கனிமொழியின் சொந்தக்காரர்கள்தான் என்ற முடிவுக்கு அவரை கொண்டு வந்திருந்தது.

"நான் அப்புறமா தெரிஞ்சிக்கிறேன்.. நீங்க ட்ரீட்மெண்ட் பண்ணுங்க.." என்றவன் தங்கையின் அழுத விழிகளை துடைத்து விட்டான்.

"எதுக்கும் பயப்படாத. நான் பக்கத்துல இருக்கும்போது உன்னை யாரும் எதுவும் சொல்லிடவும் முடியாது‌. செஞ்சிடவும் முடியாது.." என்றபடி அவளின் சுடு நெற்றியில் முத்தமிட்டான்.

கனிமொழிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

"நாளைக்கு காலையில் கூட்டி வாங்க.." என்று அனுப்பி வைத்தார் மருத்துவர். அழைத்துக் கொண்டு நடந்த பாலாஜியிடம் "ஒருநிமிசம்.." என்று நிறுத்தியவர் "ரொம்ப பயந்திருக்கா போல. நீங்களும் பயமுறுத்த வேண்டாம்.." என்றார்.

சரியென்று தலையசைத்து விட்டு அவளை அழைத்துப் போனான்.

சக்தி காரை உயிர்ப்பித்து உறுமல் சத்தத்தோடு வைத்திருந்தான்.

"பெட்ரோல் வேஸ்ட் பண்றான்.." என்று முனகியபடியே சென்று தங்கையை காரில் ஏற்றினான். அவளின் அருகில் அமர்ந்தான்.

"என் தனி வீட்டுல கொண்டுப் போய் விட்டுடு.." என்றான்.

பாலாஜியின் முடிவு கனிமொழிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவனின் தோளில் முகம் புதைத்து கண் மூடிக் கொண்டாள்.

சக்தி எரியும் சூரியனாக இருந்தான். காரின் வேகம் வழக்கத்தை விட கூடியிருந்தது.

"மெதுவா போடா.. எங்கேயாவது கொண்டு போய் இடிச்சி கொன்னுடாத.." என்ற பாலாஜியின் வார்த்தையை காதில் வாங்கவில்லை அவன். அவனின் கோபம் கண்டே அதிகம் பயந்தாள் கனிமொழி.

பாலாஜியின் வீட்டின் முன் நின்றது கார்.

கனிமொழியை கைப்பிடித்து இறக்கி விட்டான் பாலாஜி. சக்தி திரும்பிக் கூட பார்க்காமல்
அங்கிருந்துப் போய் விட்டான்.

ஐந்தாறு பெட்சீட்டுகளை தங்கையின் மீது போர்த்தி விட்டான் பாலாஜி. குக்கரில் கஞ்சியை காய்ச்சினான். அவள் மறுக்க மறுக்க ஊட்டி விட்டான். அவள் மாத்திரைகளை விழுங்கி முடிக்கும் வரை கட்டாயப்படுத்தியே அனைத்தையும் செய்ய வைத்தான்.

அவள் படுத்துக் கொண்டதும் சாய்வு நாற்காலியை கட்டிலின் அருகே போட்டு அமர்ந்தான். அவளின் கையை பற்றிக் கொண்டான்.

"உனக்கு சொல்ல விருப்பம் இல்லன்னா நீ எதையும் யார்க்கிட்டயும் சொல்ல வேணாம் கனி. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. எதை சொல்லணும் யார்கிட்ட சொல்லணும்ன்னு உனக்கு நல்லாவே தெரியும். நீ குழந்தை இல்ல. நீ மறைச்சா அதுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும். நான் எப்பவும் கட்டாயப்படுத்தவே மாட்டேன்.."

சிறு சத்தத்தோடு விம்மி அழுதாள்‌.

"பாலா‌‌.." என்றவள் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். முகத்தை மூடிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதாள். அவள் அழுவதை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"எங்க ஸ்கூல்ல சிலர் என்னை எப்பவும் துன்புறுத்திட்டே இருப்பாங்க பாலா.." என்றாள்.

"உன்னையா.?" என்று அதிர்ந்தவன் "ஏன்ம்மா?" என்றான். அவனுக்கு காரணம் புரியவேயில்லை.

"நா.. நான் ஒரு ஆ.. ஆண்மரமாம்.." என்று விக்கியவளை குழப்பமாக பார்த்தவன் "அப்படின்னா?" என்றான்.

"நான் காய்க்காத மரமாம். பூக்காத மரமாம்.."

'பூத்தும் காய்க்காம இருந்தாதானே அதை ஆண்மரம்ன்னு சொல்வாங்க‌‌..' என்று குழம்பியவனுக்கு இவளை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை.

"எனக்கு எதுவும் புரியல கனி.."

"நான் ரொம்ப நாளா ஏஜ் அட்டென்ட் பண்ணலன்னு அப்படி சொல்வாங்க பாலா‌‌.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் அவளின் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"கனி‌‌.. நீ.." வார்த்தைகள் வர மறுத்தது.

"நான் ஏஜ் அட்டென்ட் பண்ணாலும் அவங்க நம்பல. எனக்கு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க விருப்பம் இல்ல.." என்றபடி நடுங்கியவளின் முதுகை தேய்த்து விட்டவன் "விடு கனி பரவால்ல.. அவங்களை இக்னோர் பண்ணிடு.." என்றான்.

"இக்னோர் பண்ணா கூட என்னை தேடி வந்து அடிப்பாங்க அண்ணா.." என்று குலுங்கினாள். அவனுக்கு இதயம் நடுங்கியது.

"நீ திருப்பி அடிச்சிருக்க‌ வேண்டியதுதானே பாப்பா?" என்றான் கோபத்தோடு.

"எப்படி பாலா அடிப்பேன்? நான் அவங்களை திருப்பி அடிச்சா என்னை ஆண் மரம்ன்னுதானே கன்பார்மா சொல்வாங்க.?" எனக் கேட்டாள் அழுகையோடு.

சில நிமிடங்கள் அவனும் மௌனமாகி விட்டான்.

"ஒவ்வொரு முறையும் கோபம் வரும். அவங்களை திருப்பி அடிக்க தோணும். ஆனா நான் அப்படி அடிச்சிட்டா இருக்கும் மத்த பசங்களும் என்னை ஆண் மரம்ன்னு நினைப்பாங்க.."

"உனக்கு பைத்தியமா கனி? பெண்களுக்கு கோபம் வரதா? காளி பெண் இல்லையா? காளியெல்லாம் வதம் செய்யும்போது நீ திருப்பி அடிப்பதால் பெண் இல்லாம போயிடுவியா?" கோபமாக கேட்டான்.

பதில் சொல்லாமல் அழுதாள். அவளை புரிந்துக் கொள்ள முடிந்தது அவனால்.

சில வருடங்களாகவே ஒரே விதமான கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டவள் திருப்பி அடித்தால் ஆணை போல் சண்டைப் போடுகிறாய் என்று வார்த்தை வந்து விடுமோ என்று பயந்து அனைத்தையும் பொறுத்து போயுள்ளாள் என்று புரிந்துக் கொண்டான்.

குழந்தையின் மனதை விளையாட்டு போல கேலி கிண்டல் செய்து ரணங்களை உருவாக்கி வைத்த அவளின் நண்பர்களை வெறுத்தான்.

"எப்பவும் சின்ன சின்னதாதான் ஹராஸ் பண்ணுவாங்க. இது ஸ்கூல் முடியற டைம். அவங்களா வம்பு பண்ணினாலும் இக்னோர் பண்ணிடலாம்ன்னுதான் முடிவு பண்ணி இருந்தேன். இன்னைக்கு நானா விலகிப் போனாலும் கூட அவங்கதான் என்னை அடிச்சிட்டாங்க.."

இடையில் அவள் எதையோ விட்டுவிட்டது போலிருந்தது பாலாஜிக்கு. அவளை அதட்டி கேட்பது சரியென்று தோன்றவில்லை.

"பைப்பால அடிச்சிட்டாங்க‌‌.. பதிமூனு முறை அடிச்சிட்டாங்க.." என்றபடி அவனின் சட்டையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை அணைக்கவே பயமாக இருந்தது அவனுக்கு. வலிக்குமோ என்று தயங்கினான்.

"யார் அந்த ஸ்டூடன்ட்ஸ்ன்னு சொல்லு கனி‌‌.." என்றான் சிறு குரலில். கோபத்தில் ரத்தம் கொதித்தது அவனுக்கு.

இடம் வலமாக தலையசைத்தாள்.

"அவங்களை நீ காப்பாத்தி விடுவதால் என்ன பிரயோஜனம்?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.

"ஸ்கூல்தான் முடிஞ்சி போயிடுச்சி இல்லையா.? அப்புறம் என்ன?" எனக் கேட்டாள் அழுகையோடே.

"ஸ்கூல் முடிஞ்சாலும் நீ வாங்கிய அடி இல்லன்னு ஆகிடுமா? அவங்களுக்கு பனிஷ்மெண்ட் கிடைச்சே ஆகணும்.."

"ஐயோ வேணாம்‌ பாலா.. விசயம் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும். வீட்டுல யாருக்கும் சொல்லிடாதே.. ப்ளீஸ்‌. உன்னை கெஞ்சி கேட்கறேன்.." என்று விலகி அமர்ந்து கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவளின் கையை தட்டி விட்டான். பிச்சைக்காரியை போல செய்கிறாளே என்று கோபம் வந்தது.

"என்ன பழக்கம் இது? எதுக்கு கை கும்பிடுற?" என்று சீறினான்.

"ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லாம இரேன்.." அழுதாள்.

"ஏன் சொல்ல கூடாது? தப்பு உன் மேல கிடையாது.."

'ஐயோ பாலா.. என் அம்மாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்..' என நினைத்தவள் "உன்னை நம்பி சொன்னேன் இல்ல.? ப்ளீஸ் சொல்லாம இரேன்.." என்றாள்.

அவளை எரிச்சலோடு முறைத்தான்.

"ஸ்கூல் முடிஞ்சிடுச்சி. இனி அவங்களை எப்பவும் பார்க்கவே மாட்டேன். எதுக்கு பிரச்சனையை உருவாக்கணும்? அவங்க செஞ்ச தப்புக்கு ஆண்டவன் தண்டனை தருவான்.."

அழுது கெஞ்சியவளை காணுகையில் இதயம் தானாக கரைந்தது.

"ச.. சரி‌‌.." என்றான். "நான் யார்கிட்டயும் சொல்லல. இனி இந்த மாதிரி ஏதாவது நடந்தா முதல்ல என்கிட்டதான் வந்து சொல்லணும். சரியா?" எனக் கேட்டான்.

"ப்ராமிஸ்‌‌.." என்று காற்றில் கை அடித்தாள்.

தலையணையில் சாய்ந்தாள். அவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் குறைந்தது போலவும் இருந்தது. அதிகமானது போலவும் இருந்தது.

அவளின் தலையை வருடி விட்டவன் "நீ ஆண் மரம் கிடையாது. உனக்கு ஆண் குணம் கிடையாது. நீ பெண்தான். எதிர்க்கறதும்‌ சண்டை போடுறதும், தன் பிரச்சனைகளிலிருந்து தன்னைதானே சமாளிச்சிக்கிறதும் பெண் குணம் ஆண் குணம் கிடையாது. அது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமான குணம். நீ மனுசி இருக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. உயிரா இருந்தா போதும். புழுவா இருந்தாலும் எதிர்க்கும். நீ காளியின் குணமுடைய, பெண் ராணிகளின் பலரின் வீரமுடைய பெண். இன்னொரு முறை யாராவது வம்புக்கு வந்தா செவுல்ல நாலு விடு. அவ அங்கேயே மயங்கி விழுந்து செத்தாலும் பரவால்ல. அது எவ்வளவு பெரிய போலிஸ் கேஸ் ஆனாலும் நான் பார்த்துக்கறேன்.." என்றான்.

அவன் சொன்னதை கனவில் கூட செய்ய மாட்டோம் என்று தெரிந்து வைத்திருந்தவள் சரியென்று தலையசைத்தாள்.

அவள் உறங்கிய பிறகு பாலாஜி அவளை விட்டு நகர்ந்தான்.

'இவளை யார் அடிச்சிருப்பாங்க? கண்டிப்பா தெரிஞ்சிக்கிட்டே ஆகணும்..' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

காலையிலும் இரண்டு ஊசிகளை போட்டுதான் அனுப்பி வைத்தார் மருத்துவர். உடம்பின் தடிப்புகள் அடங்கி இருந்தது. ஆனால் தடிப்புகள் இருந்த இடம் சிவந்துப் போயிருந்தது. அவை மறைய சில நாட்கள் ஆகும் என்று அவளுக்கே புரிந்திருந்தது.

வீட்டுக்கு வந்தனர் இருவரும். சக்தி வீட்டில் இல்லை. அவனின் கோபம் வேறு அவளுக்கு உறுத்தலாக இருந்தது. மாலை வரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.

கீர்த்தனா தனது அறையின் கதவை திறந்தாள். பகல் நேரங்களில் பெரும்பாலான நேரத்தை இங்கேதான் செலவழித்துக் கொண்டிருந்தாள்.

அலங்கார மேஜையின் டிராவை இழுத்தாள். வகை வகையான கம்மல்கள் வரிசை கட்டியிருந்தன.

அனைத்தும் அவனுக்காக வாங்கியிருந்தாள். இதை அணிந்தால் அவன் தன்னை பார்ப்பானா, இதை அணிந்தால் அவன் தன்னை ரசிப்பானா என்று திருமணத்திற்கு முன்பு வரை வாங்கி குவித்து வைத்திருந்தாள்.

காதணிகளை காணும்போது கோபமாக வந்தது. அனைத்தையும் அள்ளி தூக்கி வீசினாள். மேல் சென்று தரையில் சிதறின கம்மல்கள்.

அழுகையாக வந்தது. தரையை பார்த்தபடி கண்ணீர் சிந்தினாள்.

"ஐ ஹேட் யூ பாலா.." என்றவளின் தோளில் படிந்தது கரம். திரும்பினாள். பாலாஜி அவளை உணர்ச்சிகளற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் வலது கையை தூக்கியவன் அவளின் உள்ளங்கையில் எதையோ வைத்து விட்டு திரும்பி நடந்தான். கையை பார்த்தாள். புது மாடல் கம்மல் ஒன்று இருந்தது கையில்.

வரும் வழியில் சாலையோர தள்ளுவண்டி கடையில் பார்த்துவிட்டு இதை வாங்கி வந்திருந்தான் அவன். இவளுக்கு பிடிக்கும் என்று நினைத்தான்.

கீர்த்தனா கோபத்தோடு கம்மலை தூக்கி அவன் மீது விட்டெறிந்தாள். அவனின் முதுகில் மோதி விழுந்தது கம்மல்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (ரொம்ப நாளா சண்டை போடுறாங்க.. சேர்த்து வச்சிடலாமா நட்புக்களே?)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN