காதல் கணவன் 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றிக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

"நிஜமாவா கேட்கிறிங்க?" சந்தேகத்தோடு கேட்டான்.

"பிடிக்கலன்னா சொல்லிடுங்க சார். அவமானப்படுத்தும் விதமா எதுவும் பேசிடாதிங்க. நான் கொஞ்சம் சென்சிடிவ்.." தயங்கி தயங்கி சொன்னாள்.

"ஐயயோ.. அப்படியெல்லாம் இல்லைங்க.." என்று மறுத்தவன் சில நொடிகள் யோசித்தான்.

"கொஞ்சம் பேசலாமா.? நான் என்னை பத்தி சொல்றேன். உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க.. நாம மேற்கொண்டு பேசலாம். ஏனா நான் என்னைப் பத்தி சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.."

இருவரும் இணைந்து அருகே இருந்த தேநீர் விடுதி ஒன்றிற்கு சென்றனர். பாரதிக்கு நிறையவே பயம் இருந்தது. அவன் தன்னை மறுத்து விடுவானோ என்று மனதுக்குள் கலங்கி கொண்டிருந்தாள். அம்மாவின் சொற்களும், வெற்றி அவளோடு பழகிய பழக்கமும் அவளுக்குள்ளும் காதலை உண்டாக்கியிருந்தது. அவனோடு வாழ வேண்டுமென்று கனவுகள் பிறந்திருந்தது. அவன் அறியாத நேரத்தில், இந்த இரு வாரங்களில் அவனை நிறையவே ரசித்து விட்டிருந்தாள்.

தேநீருக்கு சொல்லிவிட்டு இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

"என்னோட கோபம் பத்தி உங்களுக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் அதை டீடெயிலா சொல்லிடுறேன்.." என்றான் வெற்றி ஒரு உறுதியோடு.

ஏனெனில் அவனுக்கும் கூட அவளை பிடித்துதான் இருந்தத அம்முவிடம் கொண்ட அந்த அதீத காதல் இவளிடம் உண்டாகவில்லைதான். ஆனால் இவளிடம்‌‌ ஓர் ஈர்ப்பு இருந்தது. இவளோடு வாழ்ந்தால் வாழ்க்கை முழுமைக்கும் நிம்மதி இருக்கும் என்று நம்பினான். இவளை கைவிடுவது, அதுவும் அவளாக தேடிவந்து காதலைச் சொன்ன பிறகும் கைவிடுவது என்பது மாபெரும் முட்டாள்தனமாக தோன்றியது.

தனது அம்மாவின் மரணத்தால் உண்டான சுய கோபத்தையும், அதனால் உண்டான பின்விளைவுகளையும் பற்றி அவளிடம் தெளிவாக எடுத்துச் சொன்னான். அம்முவுடனான தனது காதலையும் மறைக்காமல் சொல்லி விட்டான்.

அவனின் கோபத்தை பற்றி அறிந்த பிறகு அவளுக்குள் சிறிது பரிதாபமும் வருத்தமும் தோன்றியது போலவே அவனது காதலை அறிந்த பிறகு பொறாமை வந்தது‌. தான் முன்பின் பார்த்திராத அந்த அம்முவின் மீது ஆத்திரம் வந்தது.

விலகிச் சென்ற அவளுக்கு மனதுக்குள் நன்றி கூறினாள். பிறக்காமலேயே இறந்துபோன அந்த குழந்தையின் மீது கருணை தோன்றியது. குழந்தை இறந்ததால் வெற்றி அடைந்த துக்கத்தை எப்பாடுப்பட்டாவது தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.

தனது குடும்பத்தைப் பற்றியும் தனது சகோதரனை பற்றியும் கூட விலாவாரியாகச் சொல்லி விட்டான் வெற்றி. அவன் கவனம் எடுத்துச் சொல்வதை அறிந்த பிறகு அவளுக்குள் இருந்த காதல் கூடிக்கொண்டே இருந்தது. முன்பு இருந்த காதலை விடவும் இப்போது பேச ஆரம்பித்த பிறகு அதே காதல் பல நூறு மடங்காக வளர்ந்து இருந்தது.

"என்னோட காதலை நான் இன்னமும் மறக்கல பாரதி. நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா அதுக்காக என்னை அவமானப்படுத்தியவளோட காலடியில் போய் விழ மாட்டேன். முடிஞ்சி போன விஷயத்துக்கு என்னால சாரி மட்டும்தான் கேட்க முடியும். நான் பிரெஸ்ஸானவன் கிடையாது. நீ நல்லா யோசிச்சு பாரு. என்னை விட நல்ல பையன் கூட உனக்கு கிடைப்பான். மெதுவா கூட நீ பதில் சொல்லலாம்.." என்றான்.

தேனீர் கோப்பையை பிடித்திருந்தவனின் கையைப் பற்றினாள் பாரதி.

"எனக்கு உங்களைப் பிடிச்சி இருக்கு சார்.. நான் உங்களோட மனசை விரும்புறேன். உங்களோட பாஸ்ட் எப்போதும் என் மனசை காயப்படுத்திடாதப்படி நான் இருப்பேன். நீங்க என்னை பத்தி கவலைப்பட வேண்டாம்.." என்றவள் தயங்கிய பிறகு அவன் முகம் பார்த்தாள்.

"உங்களுக்கு எப்படி ஒரு பாஸ்ட் இருக்கோ அதே போல எனக்கும் பாஸ்ட் இருக்கு சார்.." என்றவள் எழுந்து நின்றாள். சுற்று முற்றும் பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் கண்ணாக இருந்தனர்.

தான் அணிந்திருந்த புடவையை வலதுபக்க இடுப்போரத்திலிருந்து சற்று விலக்கினாள். வெற்றி அதிர்ச்சியோடு வேறு பக்கம் பார்க்க முயன்றான். "சார் நான் இங்கே தப்பா எதையும் காட்டல.." என்றாள்.

பாரதியின் வலது பக்க வயிற்றில் தழும்பு ஒன்று இருந்தது.

"இன்னும் என் வீட்டுக்கு கூட தெரியாது சார்.. நீங்க ஏதும் சொல்லிடாதிங்க.." என்றவள் சேலையை இழுத்து விட்டு கொண்டு இருக்கையில் அமர்ந்தாள்.

"என்ன இது.?" சந்தேகத்தோடு கேட்டான் வெற்றி.

"இரண்டு வருசம் முன்னாடி கல்கத்தாவில் இருந்த என் சித்தப்பா வீட்டில் தங்கி காலேஜ் படிச்சிட்டு இருந்த டைம்.." என்றவள் "ஒரு பிளாஷ்பேக் போயிட்டு வரலாமா சார்.?" எனக் கேட்டாள்.

"இந்த கதையோட மெயின் ஹீரோங்க நான். எனக்கு ஜோடி ஆக போறிங்க நீங்க.. உங்களுக்கு இல்லாத பிளாஷ்பேக்கா.? நாலு எபிசோடுக்கு கூட சேர்த்து பிளாஷ்பேக் சொல்லுங்கங்க.." என்றான்.

***

இரவு சூழ்ந்த நேரம். பாரதி தன் சித்தப்பா வீட்டை அடைய வேண்டுமென்று வேகமாக ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். வழியில் நிறைய டிராபிக் ஜாம். அனைத்தையும் கடப்பதற்குள் நடு இரவு ஆகிவிடுமோ என்று கூட பயந்து விட்டாள் அவள்.

ஆளில்லாத சாலையில் ஸ்கூட்டி நுழைந்தது. அந்த பாதையை சீக்கிரத்தில் கடந்துவிட வேண்டுமென்று ஆக்ஸிலேட்டரை முறுக்கினாள். பறக்காத குறையாக பாய்ந்து போனது ஸ்கூட்டி. அதே நேரத்தில் குறுக்கில் வந்தது கார் ஒன்று. இவள் மீது மோதாமல் இருப்பதற்காக வளைந்த கார் அருகே இருந்த காம்பவுண்ட் சுவர் ஒன்றில் மோதி இடித்து நின்றது.

பயத்தில் கை கால்கள் நடுங்கியபடி ஸ்கூட்டியில் இருந்து கீழே இறங்கினாள் பாரதி.

காரை‌ ஓட்டி வந்திருந்த நடுத்தர வயது பெண்மணி நெற்றியில் காயம்பட்டு ரத்தம் வழிய மயங்கிக் கொண்டிருந்தாள்.

அவசரமாக ஆம்புலன்ஸ்க்கு அழைத்தாள் பாரதி. அடிபட்ட அந்தப் பெண்மணியோடு மருத்துவமனைக்கு சென்றாள். அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பெண்மணி கண்விழிக்க இரண்டு நாட்களாவது ஆகும் என்று தெரிவித்தனர் மருத்துவர்கள்.

அந்த மருத்துவமனைக்குச் சென்ற பிறகுதான் அந்தப் பெண்மணியைப் பற்றி விபரம் தெரிந்தது. இரண்டு கிட்னிகளும் செயல்படாமல் தோல்வியுற்று விட்ட இளைஞன் ஒருவனின் தாய் அவர். தன் மகனுக்கு மறுநாள் காலையில் கிட்னி வழங்க இருந்தாராம். ஆனால் பாரதியை காப்பாற்ற முயன்றதில் கிட்னி வழங்க முடியாதபடி மயங்கி விட்டார் அவர்.

"நிறுத்துங்க.." என்ற வெற்றியின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவள் "என்னாச்சிங்க சார்?" என கேட்டாள்.

"அவங்க பையனுக்கு நீங்க கிட்னி கொடுத்தேன்னு சொல்லிடாதிங்க.." என்றான்.

தயக்கத்தோடு தலைகுனிந்தவள் "நான் கொடுத்துட்டேன் சார்.." என்றாள்.

அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை வெற்றிக்கு.

"என்னங்க நிஜமாவா சொல்றிங்க.?" என்று கேட்டான் நம்ப முடியாமல்.

"அந்த அம்மா ஸ்டீயரிங் வீலை திருப்பாம இருந்திருந்தா அன்னைக்கு நைட்டே நான் இறந்திருப்பேன் சார். அவங்களால ஒரு நொடியில உயிர் பிழைச்சேன். அவங்க பையனோட நிலைமை ரொம்ப மோசமா இருந்ததா சொன்னாங்க. அவசரமா கிட்னி ட்ரான்ஸ்பிளேஷன் பண்ணியாகணும். அந்த டைமுக்கு வேற யாருமே கிடைக்கல. அதனாலதான் நான் கொடுத்தேன். இது கருணையெல்லாம் கிடையாது சார். என்னோட உயிர காப்பாத்தி விட்டாங்க அவங்க. அவங்களுக்கு மறு உதவி பண்ணிட்டு வந்தேன் அவ்வளவுதான்.."

அவளின் முகத்தை குறுகுறுவென்று பார்த்தான் வெற்றி. வெட்கத்தோடு தலை குனிந்தாள் பாரதி.

"வீட்டுக்கு கூட தெரியாதுன்னா பிறகு எப்படிதான் சமாளிச்சிங்க.?" என்று கேட்டான் சந்தேகத்தோடு.

"பிரெண்ட் வீட்டிலேயே ஒரு வாரத்துக்கு தங்கிக்கறதா சொல்லிட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டேன் சார்.. ஆனா அதுல என்னை இம்ப்ரஸ் பண்ண விஷயம் என்னன்னா என்னோட கிட்னி அந்த பையனுக்கு ரொம்ப அழகாக பொருந்திப் போச்சி சார்.." என்றாள் கண்கள் மின்ன.

அந்த நினைவில், அந்த செயலில் கர்வம் கொண்டிருக்கிறாள் என்பதை வெற்றியால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு உயிரை காப்பாற்றி விடுவது என்பது சின்ன காரியமா.? சிறு தவறால் தாயை இழந்தவன் ஆயிற்றே அவனும்.?

"இன்னைக்கு வரைக்கும் என் வீட்டுக்கு தெரியாது சார் இது. என்ன இருந்தாலும் நாம கல்யாணம் பண்ணிக்க போறவங்க. நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது இல்லைங்களா.? அதனாலதான் நான் எல்லா உண்மைகளையும் சொல்லிட்டேன். ஒரு கிட்னி இருப்பதால நாம் குறைபட்டவ கிடையாது சார். நான் ரொம்ப ரொம்ப நார்மலா இருக்கேன். எந்த பிரச்சனையும் இல்ல.." என்று விளக்கிச் சொன்னாள்.

வெற்றி யோசித்தான். "சரி பாரதி. நான் என் வீட்டுல பேசுறேன். உங்க வீட்டுக்கு எப்ப வர முடியும்ன்னு அவங்களை கேட்டுட்டு சொல்றேன்.." என்றான்.

இருவரும் அங்கிருந்து கிளம்பினார். இருவரின் மனதிற்குள்ளும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.

தன் உயிரை காப்பாற்றிய அந்த பெண்மணியின் மகனுக்கு கிட்னியை தானமாக தந்தவள் அவன் யாரென்று கூட அவனின் முகம் பார்க்கவில்லை அப்போது.

ஆனால் அவள் யாரென்று அப்போதே அறிந்து விட்டிருந்தான் அவன். காற்று வாக்கில் வந்த காதலைப் போல போற போக்கில் ஒரு உயிரையே காப்பாற்றி சென்று விட்டவளை யார்தான் அறியாமல் இருப்பார்கள்.?

வெற்றியும் பாரதியும் அந்த தேனீர் விடுதியை விட்டு வெளியே செல்வதை பார்த்தபடி ஓரமாக நின்று இருந்தான் நரேஷ்.

நரேஷ் பாரதியைப் பற்றி அறிந்து இன்றோடு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. கிட்னி செயலிழந்து சாக கிடந்தவன் மீண்டும் கண் விழித்தபோது தேடியது தன் தாயின் முகத்தைதான்.

"உனக்கு கிட்னியை நான் தரவில்லை. வேறு ஒருத்தி தந்தாள்.." என்று தாயார் சொன்னபோது அதை நம்பவேயில்லை அவன். நடந்தது அனைத்தையும் அறிந்த பிறகு அவனால் சுத்தமாக நம்ப முடியவில்லை.

அது எப்படி ஒரு பெண் எதையும் யோசிக்காமல் முன்பின் தெரியாத ஒருவனுக்கு கிட்னியை தரமுடியும் என்று குழம்பினான். பாரதியைப் பற்றி விசாரித்து அவளைத் தேடிச் சென்றான். அவளுக்குதான் இவன் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவளின் முகத்தை பார்த்த கணமே இவனுக்குள் பலகோடி மாற்றங்கள். முதல் பார்வையில் வந்த காதல் இது. தனது சித்தியின் குழந்தையை கையில் ஏந்தியபடி வாசலில் நடமாடிக் கொண்டிருந்தவளை கண்ட நொடியில் விழுந்து விட்டான் நரேஷ்.

அவளிடம் தன் காதலை நேரில் சொல்ல தைரியம் இல்லை அவனுக்கு. இந்த மூன்று வருடத்தில் மூன்று கோடி முறையாவது அவளிடம் பேச முயற்சி செய்திருப்பான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே. அவளை நினைக்கையிலெல்லாம் மாபெரும் வீரனாக உணர்பவன் அவளின் அருகே நெருங்குகையில் மிகவும் மோசமான கோழையாக மாறினான்.

அவனின் இந்த மூன்று வருட தாமதத்திற்கு பலனாகத்தான் இப்போது வெற்றியைக் கைப்பிடிக்க இருந்தாள் பாரதி.

தோட்டத்தில் நின்று வானம் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. இலைகளின் சலசலப்பு கேட்டு திரும்பினாள். அவளின் மணவாளன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்

அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். அவளின் கைப்பிடித்து நிறுத்தினான் பாலாஜி.

"கொஞ்சம் பேசணும் கீர்த்தனா.." என்றான்.

மௌனமாக நின்றாள். அவளின் மௌனத்தையே சம்மதம் என்று எடுத்துக் கொண்ட பாலாஜி‌ "ஸ்கூல் காலேஜ் லீவ் விட்டாச்சி. தயவு செஞ்சு இந்த ஒன்றரை மாசத்துக்கு மட்டும் என் தங்கச்சியை இருபத்தி நாலு மணிநேரமும் கூடவே இருந்து பார்த்துக்க முடியுமா ப்ளீஸ்.?" என கேட்டான் கெஞ்சலாக.

அவன் கெஞ்சுவது பிடிக்காமல் "சரி.." என்றாள் பற்களைக் கடித்தபடி.

தன் முகத்தை நேர்கொண்டு பார்க்காமல் இருந்தவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான்.

"இந்த மூனு மாச விடுமுறைக்காக கண்டிப்பா நான் என்னோட மூனு ஜென்ம காதலை உனக்குத் திருப்பித் தருவேன் கீர்த்தனா.. என்னை நம்பலாம் நீ.." என்றான்.

"சீ போடா.." அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டு நடந்தாள்.

எப்போதும் சீறிக்கொண்டோ அல்லது அழுதுக் கொண்டோ இருப்பவள் இப்போது அது எதையும் செய்யாமல் இருப்பதே பாலாஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தனது வாழ்க்கை பழைய மகிழ்ச்சிக்கு திரும்பிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது அவனுக்கு.

சூழும் இருளை பார்த்தபடி திண்ணையில் இருந்த கட்டிலில் விழுந்தாள் பாரதி. கண்கள் முழுக்க கனவாக இருந்தது. அந்த கனவு முழுக்க வெற்றியாக இருந்தான்.

தனது அறையிலிருந்த வெற்றியும் பல நாட்களுக்கு பிறகு தனது அம்முவின் எண்ண சிறையிலிருந்து சுதந்திம் பெற்றவனாக உணர்ந்தான். பாரதியின் முகத்தை நினைத்தபடி உறங்க முயற்சித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (மீ டூ நரேஷ் - காதலிக்கறது முக்கியம் இல்ல பாஸ்.. அதை சொல்லணும். அதான் முக்கியம்)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN