காதல் கணவன் 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தினம் பொழுதுகள் உதிப்பதும் மறைவதுமாக இருந்தன.

வங்கியில் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது. வெற்றி சந்தன கொடிக்கால் வந்துச் சேர்ந்தான்.

தேன்மொழி அண்ணனை காண அவனின் வீட்டிற்கு ஓடினாள். தங்கையை கண்டதும் மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டான் வெற்றி.

"நான் உன்னை தினமும் மிஸ் பண்ணேன் அண்ணா.. இன்னும் எத்தனை நாள் டிரெயினிங் இருக்கு?" ஏக்கமாக கேட்டாள்.

தங்கையின் தலையை வருடி தந்தவன் "இன்னும் இரண்டு மாசம்.. அப்புறம் அண்ணன் இங்கேயே வந்துடுவேன்.." என்றான்.

வீட்டில் நடப்பது அனைத்தையும் அண்ணனிடம் சொன்னாள் தேன்மொழி.

"பாலாவுக்கும் கீர்த்தனாவுக்கும் ஏதோ சண்டை அண்ணா. இரண்டு பேரும் பேசிக்கறது இல்ல. கனிக்கும் சக்திக்கும் ஏதோ சண்டை. அவங்களும் ஏதும் பேசிக்கறது இல்ல.." என்றவள் "அம்ருதா அண்ணியும் அவங்களோட புது லவ்வரும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க அண்ணா. அண்ணி அவங்களை தன் வீட்டுக்கு கூட்டி வந்து அறிமுகம் பண்ணி வச்சிருக்காங்க.." என்றாள்.

வெற்றி சிரித்தான்.

"அவ உன் அண்ணி இல்லம்மா.." என்றான்.

"அப்படியே கூப்பிட்டு பழகிட்டேன்.." என்று தலைகுனிந்தாள்.

"என்னை வேணாம்ன்னு சொல்லிட்டா அவ. இதுக்கு மேல அவ யாரை காதலிச்சா என்ன? யாரை வீட்டுக்கு கூட்டி வந்தா என்ன.?" எனக் கேட்டவன் தன்னிடமிருந்த உடையை அவளிடம்‌ தந்தான்.

"பாரதி இதை உனக்காக தந்து அனுப்பினா.."

அவன் தந்த சுடிதாரை பிரித்து பார்த்தாள். அழகாய் இருந்தது.

"தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு அண்ணா.."

அம்ருதா தன் குடும்பத்தோடு நெருங்கி பழகவே இல்லை என்ற விசயம் கூட அவனுக்கு இப்போதுதான் உறுத்தியது.

கைக்கு எட்டாத தென்றலை பிடிக்க நினைத்தது போல, கண்ணுக்கு தெரியாத நிலவின் நிழலை கைப்பிடிக்க நினைத்தது போலிருந்தது இந்த காதலை யோசிக்கையில்.

அன்று இரவு அவனை அந்த வீட்டிற்கு இழுத்துப் போனாள் தேன்மொழி. தோழியை தேடிதான் ஓடினான் அவன்.

கனிமொழியின் அறையில் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவள் தோழனின் காலடி சத்தத்தில் திரும்பினாள். "ஹாய் வெற்றி.." கைகளை அசைத்தாள்.

"டல்லா இருக்க.." என்றவனிடம் காரணத்தை சொல்லாதவள் "பாரதி அழகா இருக்கா.." என்றாள்.

"தேங்க்ஸ்.. நம்ம குடும்பத்துக்கு சரியா வருவா. உனக்கும் நல்ல தோழியா இருப்பா.."

அவன் தன் வரையிலும் நினைத்தது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.

"பாலா சொன்னான் கீர்த்து.." என்றபடி அவளின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

என்ன சொன்னான் என்று அவள் கேட்கவில்லை.

"சாரி. நாங்க சுயநலமா யோசிச்சிட்டோம். உன்னை காயப்படுத்த நினைக்கல.."

அவள் பதில் சொல்லவில்லை.

"எனக்காக அவனை மன்னிச்சிடு.."

"ம்ம்.."

"தேங்க்ஸ்.." என்றவன் அவளின் தோளோடு அணைத்தான்.

இந்த மன்னிப்பும், மனம் இறங்கலும் நண்பனுக்காக இல்லை. அவளுக்காகதான். ஆனால் நண்பனின் மனமும் நிறையட்டுமே என்று இப்படி சொல்லியிருந்தாள்.

தாயம்மாவிடம் வந்தான் வெற்றி. "பாட்டி என் ஜாதகம் வேணும்.. பொண்ணு வீட்டுல கேட்கறாங்க.." என்றான்.

"பொண்ணு போட்டோவிலேயே அழகுடா. நேர்ல இன்னும் லட்சணமா இருப்பான்னு நினைக்கிறேன்.." என்றபடியே பீரோவிலிருந்த அவனின் ஜாதகத்தை எடுத்து வந்து தந்தாள்.

வீட்டிலிருந்த அனைவருக்குமே பாரதியை பிடித்து விட்டது. அனைவரோடும் போனில் உரையாடினாள் அவள். சம்மந்தி வீட்டிலிருந்தவர்களும் கூட உரையாடினார்கள்.

சக்தியும் அவனும் அன்று இரவு உணவுக்கு வெளியே சென்றார்கள்.

"கனிமொழிகிட்ட வேற எந்த பிரச்சனையும் இல்லதானே?" சந்தேகமாக கேட்டான் வெற்றி.

"எதுவும் இல்ல.." என்றவன் அவளுக்கு நடந்த ஹராஸ்மெண்ட் பற்றி மட்டும் சொல்லவில்லை. சமீப காலமாகதான் கோபத்தை கை கொள்ளாமல் இருக்கிறான். அவனின் கோபத்தை தூண்டி விட விரும்பவில்லை சக்தி.

"காதலிக்கிறேன்னு மறுபடியும் உன்கிட்ட நெருங்கினாளா?"

"இல்ல.." எப்படி நெருங்குவாள் அவள்? இவன்தான் அவளின் முகத்தை கூட நேராக பார்க்க மறுத்தானே! மற்ற நேரங்களிலும் கீர்த்தனா அவளோடு ஒட்டிக் கொண்டு இருந்தாள்.‌ கனிமொழியை தனியே விடவில்லை அவள்.

மச்சானுக்கு ருசியான உணவு வகைகளை வாங்கி தந்தான் வெற்றி. "சின்னப் பொண்ணு.. மனசுல இயல்பா ஆசை வந்திருக்கும். நல்லது கெட்டது தெரியாத வயசு. அவளா ஏதாவது சொன்னா கூட மனசுல வச்சிக்காத. கண்டிப்பா உனக்கு ரொம்ப நல்ல பொண்ணு கிடைப்பா. எந்தவொரு செகண்ட்லயும் கனி மேல ஆசை வச்சிடாதே.." என்றான் கெஞ்சலாக.

வெற்றி சொல்லாவிட்டாலும் கூட சக்தி அப்படிதான் இருந்திருப்பான்.

பாரதியின் வீட்டிற்கு சென்று ஜாதகத்தை நீட்டினான் வெற்றி.

"ஜாதகம் பார்த்துட்டு தேதி குறிப்பதை பத்தி பேசலாம் தம்பி.." என்றார் பாரதியின் தந்தை.

வெற்றிக்கு இந்த ஜாதகத்தின் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஆனால் பாரதியின் பெற்றோரிடம் அதை சொல்ல முடியுமா? தேதியை எப்போதோ குறிக்கட்டும் என்ற எண்ணத்தோடு இருந்தான்.

பாரதியின் அம்மாவும் அப்பாவும் அவர்களின் குடும்ப ஜோசியரை சென்று பார்த்தனர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே பலிக்கும் என்பதாலும், எந்த சோதனையையும் சொல்லி அதற்கு பரிகாரம் தேட காசு பிடுங்க மாட்டார் என்பதாலும் அவருக்கு அந்த ஊரில் செல்வாக்கே இல்லை.

பாரதியின் ஜாதகத்தையும் வெற்றியின் ஜாதகத்தையும் கணித்தார் அந்த சோசியர். அரை மணி நேரம் கணக்குகளை போட்டார். ஜாதகங்களை ஆறு முறை புரட்டிப் பார்த்தார்.

"பொருந்தாத ஜாதகம்.." என்றார் அவர்.

"இன்னொரு முறை கணிச்சி பாருங்க.." என்றாள் பாரதியின் அம்மா.

"நீங்க தலைகீழா நின்னாலும் இந்த இரண்டு ஜாதகக்காரங்களுக்கும் கல்யாணம் நடக்காது. இதான் உண்மை.." என்றார் ஜாதகங்களை அவர்களிடமே திருப்பி தந்தபடி.

"ஏதாவது பரிகாரம்.." தயக்கத்தோடு இழுத்தார் பாரதியின் அப்பா.

"எந்த பரிகாரமும் இல்ல. நீங்க எந்த பரிகாரம் பண்ணாலும் சரி. இவங்க இரண்டு பேரும் ஜோடியாக மாட்டாங்க.." என்று விடாப்பிடியாக சொன்னார் அவர்.

பாரதியின் பெற்றோருக்கு முகம் வாடிப் போனது. இதுவரை இந்த சோசியரை தாண்டி எங்கேயும் சென்றதில்லை. ஆனால் இம்முறை மகளின் ஆசைக்காக இன்னொரு பிரபல சோசியரை சென்று பார்த்தனர்.

"பண்ணலாம்.." என்றார் ஜாதகத்தை எடுத்து தன் முன்னால் இருந்த மேஜையின் மீது போட்டபடி.

"ஆனா முன்னாடி பார்த்த ஜோசியர் நடக்காதுன்னு சொன்னாங்க.." தயங்கி சொன்னாள் பாரதியின் தாய்.

"எல்லா பிரச்சனைக்கும் பரிகாரம் இருக்கு. அதை சொல்லதானே நாங்க இருக்கோம்.." என்றவர் கண்களை மூடி சற்று நேரம் அமர்ந்தார்.

தியானம் செய்து முடித்து ஜாதகத்தை கணித்தார்.

"ஆறு மாசம் ஆகும்.." என்றார்.

இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

"ஆறு மாசம் கழிஞ்சாதான் இந்த ஜாதகங்களில் இருக்கும் தடைகளை எல்லாமே நீங்கும்.. இந்த ஆறு மாசத்துக்கும் உங்க பொண்ணு அணைக்கட்டு வினாயகருக்கு நெய்விளக்கு ஏத்தணும்.." என்றார்.

இருவரும் யோசித்து சரியென்று தலையசைத்தனர்.

"மாசம் மாசம் நிறை பௌர்ணமி அன்னைக்கு அணைக்கட்டு வினாயகருக்கு பூஜை பண்ணி பொங்கல் வைக்கணும். அந்த பூஜையை பெரும்பாலும் நான் செய்றது இல்ல. நிறைய வேலை. ஆனா இது ஆயிரங்காலத்து பயிரை மாதிரி ஒரு கல்யாணம்.. எந்த சீடர் கையிலும் இந்த பூஜையை தர விரும்பல. ஒவ்வொரு பூஜைக்கும் பத்தாயிரம் ஆகும். எனக்கு தனியா இரண்டாயிரம் தந்துடுங்க. சிறப்பா பண்ணிடலாம்.." என்றார்.

அவ்வளவு தொகையா என்று இருவருமே முதலில் யோசித்தனர். ஆனால் மகளுக்காகதானே என நினைத்து சரியென்று தலையசைத்து விட்டு வந்தனர்.

சோசியர் சொன்னது கேட்டு வெற்றிக்கும் கூட மனம் நெருடலாகதான் இருந்தது.

"ஆறு மாசம்தானே.?" என்றாள் பாரதி. அவளுக்காக சரியென்று தலையசைத்தான்.

மறுநாளிலிலிருந்து அணைக்கட்டு வினாயகருக்கு நெய்விளக்கு ஏற்றினாள் பாரதி. அவள் சாமியை கும்பிட்டுவிட்டு அந்த பக்கம் நகர்ந்ததும் இந்த பக்கம் வந்து நின்ற நரேஷ் தான் வாங்கி வந்திருந்த நெய்விளக்கை ஏற்றினான்.

"இது எதுக்கு?" எனக் கேட்டான் வண்டு.

"ஏதோ என் மன திருப்திக்கு.." சிரித்தபடி சொன்னவனை கேவலமாக பார்த்த வண்டு "கண்ணை மூடிக்கிட்டாவது அந்த அக்காகிட்ட‌ காதலை சொல்லியிருக்கலாமில்ல.? உன்னால முடியலன்னா சொல்லுண்ணா. உன் பேர்ல நானாவது ஒரு லெட்டர் எழுதி தந்துடுறேன்.." என்றான்.

வண்டுவின் தலையை கலைத்து விட்டவன் "அப்படியெல்லாம் நீ பண்ணிடாதே.." என்றான்.

"அப்புறம் எதுக்கு இந்த விளக்கு?"

"அவளுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்ன்னு வைக்கிறேன்டா.." என்றவன் சாமியை கும்பிட்டுவிட்டு நகர்ந்தான்.

வெற்றியின் வீட்டு பின்னாலிருந்த நதி கரையில் அமர்ந்திருந்தாள் அம்ருதா. அவளின் அருகில் அமர்ந்திருந்த வெற்றி அவளின் கை ரேகைகளை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.

"என்ன செய்ற.?" எனக் கேட்டவளிடம் "கை ரேகை படிக்கிறேன்.." என்றான்.

குறும்பாய் பார்த்தவளின் கைகளை விட்டவன் அவளின் கன்னங்களை அள்ளினான்.

"இப்ப என்ன.?"

"உன் உதட்டுல எத்தனை ரேகை இருக்குன்னு படிக்கிறேன்.." என்றான்.

அம்ருதா சிரித்தபடி பின்னால் நகர முயல, அவளின் சுடிதார் காலரை பற்றி தன்னருகே இழுத்தான்.

"தூரமா இருந்தே பார்க்கலாமே.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "இல்ல. உதட்டு ரேகைகளை கண்களால எண்ண முடியாது.." என்றான்.

"அப்புறம்.." தலைசாய்த்தவளின் அருகே நெருங்கியவன் "இதழாலதான் இதழின் ரேகைகளை எண்ண முடியும்.." என்றான். அவள் பதில் மொழி சொல்லும் முன் அவளின் இதழில் தன் இதழ்களை உரசினான்.

உதடுகள் உரச ஆரம்பித்த முத்தம் ஒருவர் மற்றவரின் உமிழ் நீரின் சுவையை அறியும் அளவுக்கு நீண்டு போனது. அவனின் பின்னந்தலை முடிகளை பற்றியது அவளின் ஒரு கரம். மற்றொரு கரமோ அவனின் சட்டையினை தாண்டி சென்று அவனின் முதுகினை அணைக்க ஆரம்பித்தது.

அவளாக சாய்ந்தாள். அவனாக சாய்த்தான்.

பட்டென்று எழுந்து அமர்ந்தாள் அம்ருதா. ஏசியினை கவனித்தாள். ரிப்பேராகி விட்டிருந்தது. எழுந்து சென்று பேனை சுழல விட்டாள்‌. வியர்த்திருந்த நெற்றியை துடைத்துக் கொண்டாள். இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.‌

கனவு. கனவே அவளை அப்படியொரு உணர்வுக்கு இழுத்து சென்று வந்து விட்டது. அவனின் இதழ் தீண்ட ஆசை வந்தது இந்த நடு இரவில்‌. வந்த ஆசைக்காக தன்னையே திட்டிக் கொண்டாள்.

"வெற்றி இனி அந்த பேங்க்கு வர மாட்டான். அவனை மறந்துடு அம்ருதா. கொஞ்ச நாள்ல எல்லாமே சரியா போயிடும். கொஞ்ச நாள்ல அவனை முழுசா மறந்திடலாம். கவின் க்யூட்டா இருக்கான். அவனை நேசி.. அவன்தான் உனக்கு கரெக்டானவன்.." என்று தனக்குதானே உபதேசம் சொல்லியபடி சென்று கட்டிலில் விழுந்தாள். வியர்த்து இருந்தாலும் கூட தலையோடு போர்வையை போர்த்திக் கொண்டாள்.

பாலாஜி தன் அம்மாவின் அறை முன்னால் நின்றான். மதிய வேளை. அவனுக்கு வங்கி விடுமுறை நாள்‌. சக்தி வெளியே போயிருந்தான். அறையில் தனியாக இருக்க முடியாமல் வெளியே வந்தவன் அம்மாவின் அறை முன் வந்து நின்றதும் பழைய எண்ணங்களில் புதைந்து போனான்.

மனம் அழ ஆரம்பித்தது. கதவை திறந்தான். உள்ளே நுழைந்தான். எப்போதும் அவனின் காலில் இருக்கும் ஷூ இன்று அவனது அறையில் ஓரமாக கிடந்தது.

"பாலாஜி.. உனக்கு அடி வேணுமா.? ஒழுங்கா உட்கார்ந்து படி.." அம்மாவின் மிரட்டல் குரல் அறை முழுக்க கேட்டது.

"தங்கம் பையா.. சாக்லேட் அதிகம் சாப்பிடாதே.." மாமன் வாங்கி வந்து தரும் சாக்லேட்ஸை அளவுக்கு மீறி உண்ணும் போதெல்லாம் அம்மா இப்படிதான் மிரட்டிக் கொண்டிருப்பாள்.

"வெற்றியும் நீயும் எப்போதும் ஒற்றுமையா இருக்கணும். அதுதான் அம்மாவோட ஆசை.." எப்போதும் இதை சொல்வாள்.

"அம்மா.." அழைத்தபடியே அறை முழுக்க கண்களை அலைபாய விட்டு தேடினான்.

"அம்மா என்கிட்ட வாங்களேன்.." கெஞ்சியபடி அம்மாவின் கட்டிலருகே சென்று அமர்ந்தான்.

"அம்மா.." என்று அழுதபடி தரையில் படுத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (சோசியக்காரன் பேச்சையெல்லாம் நம்பாதிங்கன்னு சொன்னா யார் கேட்கறா.?🤐 புத்தகமா வந்த என்னோட எட்டாவது நாவலான பூச்சூட வந்தேன் நாவல்ல கூட இந்த சோசியம்தான் ஒரு ஜோடியை பிரிச்சி விட்டிருக்கும்..)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN