காதல் கணவன் 54

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"என்னை ஜட்ஜ் பண்ண உனக்கு உரிமை கிடையாது.." எச்சரித்தாள் அம்ருதா.

அவள் தந்த அறையை திருப்பி தந்தான் ஆரவ். இதுவரை எதிர்த்து கூட பேசிடாதவன் அடித்து விட்டது அதிர்ச்சியை தந்தது அவளுக்கும் பெற்றோருக்கும்.

"டேய்.." அப்பா சத்தமிட்டார்.

"கை நிறைய சம்பாதிச்சி கொண்டு வந்து தரான்னு அளவுக்கு அதிகமா ப்ரீடம் கொடுத்து கெடுத்து வச்சிட்டிங்க இவளை.." என்று பெற்றோரை காய்ந்த ஆரவ் சகோதரியின் புறம் திரும்பினான்.

"உன்னை கேள்வி கேட்க எனக்கு எப்படி ரூல்ஸ் இல்லையோ அதே போல என்னை கேள்வி கேட்க உனக்கும் ரூல்ஸ் கிடையாது. ஆமா நான் தேனை லவ் பண்றேன். அதுக்கு என்னங்கற இப்ப.? அவளைதான் கல்யாணமும் பண்ணிக்க போறேன்.." என்றவன் அவளை முறைத்து விட்டு தனது அறை நோக்கி நடந்தான்.

அம்ருதா கன்னத்தை பிடித்தபடி தரைப் பார்த்து நின்றாள். 'உன்னை காதலிச்சது தவிர எந்த பாவமும் செய்யல நான். என் குடும்பத்தையே எனக்கு எதிரியா மாத்தி‌ விட்டுட்ட வெற்றி. உன்னை விட்டு பிரிஞ்சதுக்காக ரொம்ப சந்தோசப்படுறேன்..' மனதுக்குள் வெம்பியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அப்பாவிற்கு மகளை கண்டு மனம் உடைந்தது. அறைக்குள் சென்றவள் கண்ணீரை துடைத்த வேளையில் உள்ளே வந்தார் ராமன்.

"அப்பா."

"தம்பிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. நீ பீல் பண்ணாத.." என்றவர் அவளின் இமைகளின் கீழ் துடைத்து விட்டார்.

"உனக்கு அவன் ஒத்து வரமாட்டான்னு அப்பவே உனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஆனா நீ அவனை லவ் பண்ணி தப்பை பண்ணிட்ட.."

'தப்புதான். தெரிஞ்சே பண்ணிட்டேன்..'

அவளின் தலையை வருடி விட்டார்.

"கவின் நல்ல பையனா இருக்கான்.. அவன் வீட்டுலயிருந்து வந்து பேச சொல்லு.." என்றார்‌.

"கொ.. கொஞ்ச நாள்ப்பா.." அந்த கொஞ்ச நாட்கள் வெற்றியை மறக்க தேவைப்பட்டது.

"சரி.." என்றவர் போய் விட்டார். அம்ருதா‌ சோகத்தோடு படுக்கையில் விழுந்தாள். கை அனிச்சையாக வயிற்றை வருடியது. இமைகள் தாண்டி வழிந்த கண்ணீரோடு தலையணையை எடுத்து முகத்தோடு வைத்து மறைத்துக் கொண்டாள்.

இனி வரும் நாட்களில் எப்பாடுப்பட்டாவது அவனை மறந்து விட வேண்டும் என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.

பாலாஜி மருத்துவரிடம் தவறாமல் கவுன்சிலிங் சென்றான்.

சக்தியும் கனிமொழியும் நேராய் கூட பார்த்துக் கொள்ளவில்லை.

ஞாயிறுகளில் வெற்றியின் அறைக்கு வந்தாள் பாரதி. இல்லையேல் இவன் அவளின் வீடு சென்றான். இருவருக்கும் இடையில் காதல் பூச்செடி போல வளர்ந்துக் கொண்டிருந்தது.

அன்றைய ஞாயிறில் காலை எட்டு மணிக்கே இவனின் அறைக்கு வந்து விட்டாள் பாரதி.

சமைத்துக் கொண்டிருந்தவனின் அருகே வந்து முதுகை அணைத்தாள்.

"மிஸ் பண்ணியா.?"

"ம். ஆமா. எப்ப இந்த மூனு மாசமும் இரண்டு வாரமும் முடியும்ன்னு இருக்கு.." என்றவளின் கையை பிடித்து பக்கத்தில் இழுத்து நிறுத்தினான். அவளின் நெற்றியில் சிறு முத்தம் பதித்தான்.

"சீக்கிரம் முடிஞ்சிடும்.." என்றான்.

வாணலியில் காய்கறிகளை வணக்கிக் கொண்டிருந்தவனின் இரு கரங்களுக்கும் இடையில் வந்து நின்றவள் அவனின் நெஞ்சில் சாய்ந்தாள். அவனின் இதய துடிப்பை ரசித்துக் கேட்டாள். அவனின் வாசத்தை சுவாசிக்க சுவாசிக்க மிகவும் பிடித்திருந்தது.

"உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு வெற்றி.."

குனிந்து அவளின் கண்களைப் பார்த்தவன் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான். "எனக்கும் பிடிச்சிருக்கு.."

"அப்படின்னா எனக்கு ஒரு கிஸ் கிடைக்குமா?" ஏக்கமாக கேட்டாள்.

அவளின் மறு கன்னத்தில் இதழ் பதித்தான்.

"எனக்கு இங்கே வேணும்.." தன் இதழ்களை தொட்டுக் காட்டிக் கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்தான் வழக்கம் போல.

"மூனே மாசம்.. ஊரறிய உன் கழுத்துல மாலை மாத்தி, தாலி கட்டிட்டேன்னா அப்புறம் இந்த லிப்ஸ்ல கோடி முத்தங்கள் தருவேன்.." இடது கையால் அவளை தன் நெஞ்சோடு அணைத்தபடி சொன்னான்.

"நான் அவளை போல பிரேக்கப் பண்ணிக்க மாட்டேன். உங்களுக்கு ஏன் என் மேல நம்பிக்கையே வரல.?" வருத்தமாக கேட்டாள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

"அப்படி இல்லடா.. உன்னை முழுசா நம்புறேன். இது எனக்கு நானே போட்டுக்கற கட்டுப்பாடு. அவ பிரேக்கப் பண்ணியபோது எவ்வளவு‌ வலிச்சதோ அதே அளவு வலிச்சது அவ எங்க குழந்தையை அழிச்சிட்டேன்னு சொன்னபோது. நான் அளவு மீறாம அவளோடு பழகியிருந்தா இந்த வலி டபுள் மடங்கா இருந்திருக்காது. அவ பிரகனென்ட்ன்னு சொன்னதும் அவ என் பொண்டாட்டி, நான் அவ புருசன்னு நினைச்சிட்டேன். ஒரு புது பேமிலியை கனவு கண்டு வச்சிருந்தேன். அந்த ஒரு வாரம் முழுக்க கனவுல கூட குழந்தைதான். பொதுவா குழந்தைங்க மேல அவ்வளவு அக்கறைன்னு சொல்ல மாட்டேன். ஆனா நான் உயிருக்கு உயிரா நேசிச்சவளோட வயித்துல என் குழந்தை.. எப்படி பீல் பண்ணேன்னு சொல்ல வார்த்தைகளே இல்ல. என் வாழ்க்கையில் நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது அப்போதுதான். நான்தான் அவசரப்பட்டேன் அப்ப. அதனாலதான் இப்ப ஒதுங்கியிருக்கேன்.. மூனரை மாசம் மட்டும் பொறுத்துக்க.." என்றவன் அவளின் கூந்தலில் விரல்களை நுழைத்தான். அவளின் பின்னந்தலையில் கை பதித்து அவளை தன்னோடு இன்னும் சற்று நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

பாரதிக்கு அம்ருதாவை நினைக்கும் போதெல்லாம் பொறாமையில் வெந்தது மனம்.

கவினின் முன்னால் வந்து நின்றாள் அம்ருதா. வங்கியின் கீழ் தளத்திலிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இறங்கியவன் "அம்ருதா.." என அழைத்தபடி அவளை அணைத்தான்.

தயக்கத்தோடு விலகி நின்றாள்.

"கவின்.. ஐயம் சாரி.." என்றாள்.

"பட் வொய்.?" சந்தேகமாக கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "நாம பிரேக்கப் பண்ணிக்கலாமா.?" எனக் கேட்டாள். கேட்ட நேரத்திலேயே கண்ணீர் கொட்டி விட்டது.

"என்னால முடியல கவின். உன்னோடு பழகவே முடியல. உன்னை ஏமாத்துற மாதிரி இருக்கு. அவனை மறக்க நினைச்சேன். அதுக்காகதான் என் வீட்டுல மாப்பிள்ளை கூட பார்க்க சொன்னேன். சரியான வரன் அமையலன்னு சொல்லிட்டாங்க.." என்றவள் புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னால அவனை மறக்கவே முடியல. நீ ரொம்ப நல்ல கேரக்டர். அவனை பார்க்கும் முன்னாடி நான் உன்னை பார்த்திருக்கலாம். இதயம் இந்த அளவுக்கு வலிச்சிருக்காது. தப்பு பண்ண அவனுக்கு துரோகம் செஞ்சா கூட ஒரு அர்த்தம் இருக்கும். ஆனா எந்த தப்பும் செய்யாத உன்கிட்ட நான் இதுக்கு மேலேயும் பழகினா கண்டிப்பா அது உனக்கு நான் செய்யுற ரொம்ப பெரிய துரோகமாதான் இருக்கும்.."

அவளின் கன்னங்களை அள்ளினான்.

"ஏன் அழற அம்ருதா.? உன்னை போல ஒரு பொக்கிஷம் என்னை விட்டு போறதுக்கு நான் வேணா அழலாம்.." அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

"இந்த மூனு மாசமும் என் லைஃப்ல பெஸ்டா பீல் பண்ணேன். உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னோட அத்தனை நடவடிக்கையும் பிடிக்கும். நீ அழ வேணாம். நான் உன்னோட பிரேக்கப்புக்கு அனுமதி தரேன். ஏன் தெரியுமா?" எனக் கேட்டவனை இமைகளின் நடுவில் நிரம்பிய கண்ணீரோடுப் பார்த்தாள்.

"ஏனா உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.." அவன் சொன்னது கேட்டு விம்மியழுதாள்.

அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவனின் தோளில் முகம் புதைத்தாள். குலுங்கி அழுதவளின் முதுகை வருடி தந்தான்.

"நீ சந்தோசமா இருக்கணும் அம்ருதா. என்னோடு இருப்பது உனக்கு அன்கம்பர்டபிளா இருந்தா விலகிக்கலாம் இரண்டு பேரும். உன்னை போல ஒருத்தி மறுபடியும் கிடைப்பாளான்னு தெரியல. ஆனா நிச்சயம் நான் உன்னை எப்பவும் மிஸ் பண்ணுவேன்.." என்றவன் அவளின் உச்சந்தலையில் உதடுகளை பதித்தான்‌.

அவள் அழுதுக் கொண்டே இருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு அவளை விலக்கி நிறுத்தினான்.

புன்னகை மாறாத முகத்தோடு அவளின் முகத்தை துடைத்தான்.

"நீ ஏஞ்சல். அதை நான் நல்லாவே உணர்ந்தேன். உன்னை, உன் சிறப்பை உணராத ஒருத்தனுக்காக லைப்பை வேஸ்ட் பண்ணிடாத. அவன் இல்லன்னாலும் உலகத்துல ஆயிரம் ஆண்கள் உண்டு.. ஆனா உன் லைஃப் போனா வராது. நல்லா யோசிச்சிக்கோ. நான் இங்கேதான் இருப்பேன். பிரெண்டா இருக்கலாம் எப்பவும். உன் மனசு எப்போதாவது மாறி, என்னை காதலிக்க நினைச்சாலும் என்னை தேடி வா.. நான் காத்திருப்பேன், கொஞ்ச நாளுக்காவது.."

அவளின் தலையை தடவியவன் அவளை தாண்டி நடந்தான். கலங்கிய தன் விழிகளை சுண்டு விரலால் சுண்டி விட்டான்.

அவனை பொறுத்தவரை அவள் உண்மையிலேயே தேவதைதான். அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டாள். அதிகமான நட்பையும், அன்பையும் காட்டினாள். அரை குறையாய் காதலித்த தன்னிடமே இவ்வளவு அன்பை பொழிந்தவள் உயிராய் காதலித்தவனிடம் எவ்வளவு அன்பை கொட்டியிருப்பாள் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. தனது சின்ன கோபத்திற்கே முகம் வாடுபவள் அவனின் கோபத்திற்கு எவ்வளவு பயந்தேன் என்று சொல்லும் வேளையிலெல்லாம் தனக்குள் உடைந்திருந்தான் அவன்.

'அவனுக்கு முன்னாடியே அவளை பார்த்திருக்கணும் நான்‌‌.. அவ மனசு முழுக்க நானா மட்டும்தான் இருந்திருக்கணும்.. வருவா கண்டிப்பா என்னை தேடி வருவா.. இல்லன்னாலும்‌‌ வர வைப்பேன்..' என்று மனதுக்குள் சொல்லியபடி வேலையை கவனிக்க சென்றான்.

விழிகளை துடைத்தபடி வங்கியினுள் நுழைந்தாள் அம்ருதா. யார் மீதோ மோதியவள் நிமிர்ந்துப் பார்த்தாள். வெற்றி நின்றிருந்தான். குழப்பத்தில் கண்களை சுருக்கினாள். கனவாக இருக்க கூடும் என்று அவள் நினைத்த வேளையில் "சார்.." என அழைத்தபடி வந்தார் அந்த பிராஞ்சின் அசிஸ்டென்ட் மேனேஜர்.

அம்ருதாவின் கண்ணீர் கோடிட்டு கறையாகி இருந்த கன்னங்களை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த வெற்றி அசிஸ்டென்ட் மேனேஜரின் குரலில் திரும்பினான்.

"வெல்கம் சார்.." என்று பூங்கொத்தை நீட்டினார் அவர். இரண்டு மாதங்கள் முன்புதான் அந்த வங்கியில் இணைந்திருந்தார் அவர்.

அவர் தந்ததை முகம் மலர பெற்றுக் கொண்டான் வெற்றி.

"என்ன அம்ருதா அப்படி பார்க்கிறிங்க.? இவர்தான் இனி நம்ம பிராஞ்ச்க்கு மேனேஜர்.. நாளையிலிருந்து அபிசியலா பொறுப்பேத்துக்க போறாரு. இன்னைக்கு சும்மா பார்த்துட்டு போக வந்திருக்காரு.." அறிமுகம் செய்து‌ வைத்தார் அவர்.

"கன்கிராட்ஸ்.." எரிச்சலை மறைத்தபடி சிறு குரலில் முணுமுணுத்தவள் அங்கிருந்து திரும்பி‌ நடந்தாள்.

அம்ருதாவின் முதுகை வெறித்தபடி உலகம் மறந்து நின்றவனை "சார்.." என அழைத்து நிகழ் காலத்திற்கு அழைத்து‌‌ வந்தார்‌ துணை மேனேஜர்.

"இப்படி வாங்க சார்.." அவன் பழகிய வங்கியிலேயே வழி நடத்திச் சென்றார் அவர்.

அம்ருதா ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தாள். தண்ணீரை பிடித்து முகத்தில் அடித்துக் கொண்டாள். இனி இவனோடு நேருக்கு நேர் நின்று வாழ்வது எப்படி சாத்தியம் என்று நினைத்து குழம்பினாள்.

நெடுமானஞ்சி வங்கிக்கு அத்தனை கிளைகள் இருக்கையில் இவன் ஏன் இதே வங்கிக்கு வந்து சேர்ந்தான் என்று கடுப்பானாள்.

வெற்றி வங்கியின் வரவேற்று கூடத்தில் நின்று சுற்றிலும் கவனித்தான். அதே போலதான் இருந்தது. பரபரப்பு குறையாமல், வியர்வையால் அழுக்கான சட்டைகளும், பெர்ஃப்யூம் வாசம் குறையாத, ஏசி காற்று மறையாத கோட் சூட்களும் ஒன்றாக நடந்துக் கொண்டிருந்தன. கசங்கியும், அயர்ன் பண்ணியது போன்று மடிப்பு கலையாமலும் வகை வகையாக எண்ணப்பட்டுக் கொண்டிருந்த பண தாள்கள்.

எத்தனையோ பேருக்கு நம்பிக்கையை தந்துக் கொண்டிருக்கும் இடம். எத்தனையோ பேரின் அவசர செலவுகளுக்கு கரம் நீட்டும் இடம். போகும் உயிரை பிடித்து வைக்க பணம் தரும் இடம். திருமண கனவுகளை‌ தயக்கமின்றி காண செய்யும் சேமிப்புகள் இருக்கும் இடம்.

இந்த வங்கியின் இப்போதைய வரவு செலவை இரு மடங்காக மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தவனை பாய்ந்து அணைத்தான் உயிர் நண்பன்.

"நண்பா நீ இல்லாம ரொம்ப போரடிச்சி போச்சிடா.." என்ற முத்துராமை தூரமாக இழுத்து நிறுத்தினான் அசிஸ்டென்ட் மேனேஜர்.

"அவர் நம்ம மேனேஜர்.."

"அதுக்கு முன்னாடியே இவன் எனக்கு பிரெண்டு.‌" என்றவன் "ஐ மிஸ் யூ மச்சி.." என்று மீண்டும் கட்டிக் கொண்டான்.

"நானும்தான்.." என்று நண்பனை திருப்பி அணைத்தான் அவன்‌.

"ஹாய் ஸ்டூடன்ட்ஸ்.." என்றபடியே வகுப்பறைக்குள் நுழைந்தான் சக்தி.

"இன்னைக்குதான் காலேஜோட பர்ஸ்ட் டே.. வந்தவுடனே மொக்கை போட்டுடாதடான்னு யாரும் நினைச்சிட வேணாம். நான் அப்படி ஏதும் பண்ணிட மாட்டேன்.." என்றபடியே தனது நோட்டை மேஜையில் வைத்துவிட்டு மாணவர்களை பார்த்தவன் சாக்பீஸோடு திரும்பினான்.

'வெல்கம்.' என்று எழுத நினைத்தவன் கடைசி எழுத்தை எழுதும் முன்பே நிறுத்தி விட்டான். பத்து நொடிகள் முன்பு விழிகளில் பதிந்த விசயம் இப்போதுதான் மூளைக்கு எட்டி இருந்து.

சாக்பீஸை தூர வீசிவிட்டு பற்களை கடித்தபடி திரும்பியவன் "உனக்கு இங்கே என்ன வேலை.?" எனக் கேட்டான் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவளை பார்த்து.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. யாரை பார்த்து சக்தி கத்தினான்னு உங்களுக்கு தெரியுமா?😁
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN