காதல் கணவன் 58

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றி சக்தியை தாக்கும் முன் அவனை விலக்கி நிறுத்தினான் பாலாஜி.

"அவளை பிடிக்கலன்னு சொல்ல இவனுக்கு முழு உரிமை இருக்கு.." என்ற பாலாஜியை முறைத்தவன் "ஒரு பொய் சொல்றதால என்னவாகிட போறான் இவன்.?" எனத் திருப்பிக் கேட்டான்.

சக்தி தலையை கோதினான்.

"ஒரு பொய் உங்களுக்கு சாதாரணமா தெரியுதா.? அவ லைஃப்பை ராங்கா கைட் பண்ண என்னால முடியாது. அவளுக்கு ஏத்த ஒருத்தனைதான் வீட்டுல பார்ப்பாங்க. அவளுக்கு தேவையான லவ்வை அவன் தருவான். அதுக்கப்புறம் இவ தன் லைப்பை சரியா வழி நடத்துவா.."

"அவ உன்னை லவ் பண்றா. அவளால வேற யாரையும் லவ் பண்ண முடியாது.." வெற்றி சொன்னது கேட்டு கலகலவென சிரித்தான் சக்தி.

"நீ கூடதான் இரண்டாவது காதலியோடு இருக்க இப்ப. அவ வேற ஒருத்தனை லவ் பண்ண மாட்டாளா.? அமைதியா போடா. போய் உன் வேலையை பாரு.. நான் செய்றது எல்லாமே அவ நல்லதுக்குதான். அவளே சீக்கிரம் அதை புரிஞ்சிப்பா.." என்றவன் முதுகை தேய்த்துக் கொண்டான்.

"அரை மெண்டல் மாதிரியே தள்ளி விட்டுட்டான்.." முனகியபடியே வீட்டுக்குள் போனான்.

"சித்தி நம்ம பேச்சை கேட்கவே மாட்டாங்க.." பைக்கில் அண்ணனின் பின்னால் அமர்ந்தபடி சொன்னான் பாலாஜி.

"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.." பைக்கை செலுத்தினான் வெற்றி.

"இவ்வளவு சேலரி வாங்கற பேங்க் மேனேஜர் பைக்ல‌ வராருன்னு சொல்றாங்க பேங்க்ல. கார் வாங்கி டிரைவர் வச்சி.." மேலே சொல்லும் முன் இருவரும் மண் பாதையில் உருண்டிருந்தனர்.

வெற்றி கையை தேய்த்துக் கொண்டு எழுந்தான். கை முட்டியின் அருகே சிராய்ப்பு இருந்தது. கொஞ்சமாக ரத்தம் துளிர்த்திருந்தது. தம்பியை பார்த்தான். அவனும் உருண்டு புரண்டு எழுந்து நின்றிருந்தான். நல்லவேளையாக அவனுக்கு எதுவும் அடிப்படவில்லை.

"சாரி.." என்றான் பைக்கை எடுத்து நிறுத்தியபடி.‌ வண்டியை நின்ற இடத்திலே சாய்த்து விட்டிருந்தான். ரொம்பவும் மெதுவாக சென்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ இருவருக்குமே அவ்வளவாக அடிப்படவில்லை.

"தெரியாம கேட்டுட்டேன். அதுக்காக கொல்ல பார்க்கறியேடா.." எனக் கேட்டபடியே தன் கை கால்களை சரி பார்த்துக் கொண்டான் பாலாஜி.

"காரும் வேணாம். ஒன்னும் வேணாம்.." வெற்றி பைக்கை ஸ்டார்ட் செய்தான். உடனே உயிர் கொண்டு விட்டது. ஏனோ நரேஷின் நினைவு வந்தது. அவனுக்குதான் பாரதி கிட்னியை‌ தந்தாள் என்ற விசயம் அறிந்ததிலிருந்து நரேஷின் நினைவு அடிக்கடி‌ வந்தது. அவனின் காதலின் மீது சிறு பொறாமையும் கூட வந்தது.

பாரதி அவனை பற்றிய சொல்லிய நாளிலேயே "எனக்கு வாக்கு தந்துட்டேன்னு நீ யோசிக்க வேணாம்.‌ உனக்கு அவனை பிடிச்சிருந்தா நீ அவனையே லவ் பண்ணலாம். நான் விலக பீல் பண்ண மாட்டேன்.." என்றான்.

ஆனால் பாரதியோ "எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு வெற்றி.. மனசுல தோணிய ஆசையை அழிச்சிக்க முடியாது என்னால.. உங்களுக்கு கல்யாணம் செஞ்சிக்க விரும்புறேன். ஆயுளுக்கும் உங்களோடு வாழ விரும்புறேன்.." என்றாள்.

இவனுக்கும் அவளை பிடித்திருந்தது. அவள் தன் மீது வைத்துள்ள காதலும் பிடித்திருந்தது.

மறுநாள் வங்கியில்..

அம்ருதாவை அழைத்தான் வெற்றி. வந்து நின்றவளின் முன்னால் தாள்களை விசிறினான்.

"நீங்க ஏன் வொர்க் பண்றிங்க.? எனக்கு ஒன்னும் புரியல. போலியான ஆவணங்களை கொடுத்த பதினாலு கிளையண்ட்ஸ்க்கு லோன் கிடைச்சிருக்கு. அதுக்கு காரணம் உங்களோட சரிபார்ப்பும் உங்களோட கையெழுத்தும்தான்.."

அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தவள் தன் காலடியில் கிடந்த பேப்பர்களை எடுத்து பார்த்தாள். இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

"சார் நான் இந்த ஆவணங்கள்ல உள்ள இடங்களை நேர்ல பார்த்து கன்பார்ம் பண்ணிட்டுதான் ப்ரோஸஸ் பண்ணேன்.."

சிரித்தான் வெற்றி. இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்.

"இந்த நிலங்கள்,‌ வயல்கள், தொழிற்சாலைகள், வீடுகள் எல்லாமே பொய். எதுவுமே அவங்களோட பேர்ல கிடையாது. தந்தது முழுக்க பொய்யான ஆவணங்கள். அவங்களுக்கு லோன் கிடைக்க நீங்க எத்தனை பர்சன்டேஜ் லஞ்சம் வாங்கிட்டு கையெழுத்து போட்டிங்க.?" கோபத்தோடு கேட்டான்.

நிமிர்ந்துப் பார்த்து முறைத்தவள் "நான் லஞ்சம் வாங்க கிடையாது. நான் ஹன்ட்ரட் பர்சென்ட் கன்பார்ம் பண்ணிட்டுதான் மேல மூவ் பண்ணேன்.‌ நேர்ல போய் ஆய்வு செஞ்ச இடங்கள் அத்தனையும். அதுக்கு மேலேயும் ராங்ன்னா நீங்க லோன் வாங்கியவரைதான் கேட்கணும்.. சட்டபடி நடவடிக்கை எடுக்கணும்.." என்றாள்.

"நியாயமா பேசுங்க மேடம். தப்பு அத்தனையையும் உங்க மேல வச்சிட்டு யோக்கியம் மாதிரி பேசாதிங்க.. ஹெட் ஆபிஸ்க்கு உங்களை பத்திய கம்ப்ளைண்ட் போக போகுது. உங்க மேல விசாரணை இருக்கும். கூப்பிடும்போது வந்து சேருங்க. உங்க சஸ்பென்ஷன் ஆர்டர்.." என்று கடிதத்தை நீட்டினான்.

அம்ருதா‌ சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள். "நீ என்னை பழி வாங்கறதானே.?"

"எதுக்கு.? நீதானே என்னை இன்னைக்கு வரைக்கும் பழி வாங்கிட்டு இருக்க.. என் டைமை வேஸ்ட் பண்ணாம கிளம்பு.." என்றவன் இருக்கையில் அமர்ந்தான்.

கையிலிருந்த காகிதத்தை இறுக்கி பிடித்தாள். பற்களை கடித்தபடி அங்கிருந்து சென்றாள்.

ஞாயிற்றுக் கிழமை..

சக்தி வீட்டிற்கு வந்திருந்தான். அவனை யாருமே கண்டுக் கொள்ளவில்லை. வளர்மதி மட்டும் அழைத்து அவனுக்கு உணவை பரிமாறினாள்.

"என் பொண்ணு பண்ண தப்புக்கு நீ போய் வெளியே தங்கிட்டு இருக்க.. சாரிப்பா.." என்றாள்.

"சின்ன பொண்ணுதானே அத்தை.? சீக்கிரம் புரிஞ்சிப்பா.." என்றவனை பாட்டி முதற்கொண்டு அனைவருமே முறைத்தனர். அனைவருமே வளர்மதியோடு பேசி பார்த்து விட்டிருந்தனர். அவளை யாராலும் மாற்ற முடியவில்லை.

முற்பகல் வேளையில் மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர். மாப்பிள்ளைக்கு அவசர வேலை வந்து விட்டதால் அரை மணி தாமதத்திற்கு பிறகு வருவான் என்று சொன்னார்கள்.

கனிமொழியை அலங்கரித்து அழைத்து வந்தாள் கீர்த்தனா. அனைவருக்கும் காப்பியை வழங்கினாள்.

வெற்றியும் பாலாஜியும் ஒருபுறம் அமர்ந்திருந்தனர். சக்தி ஒரு மூலையில் நின்றபடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளம் நிறைவாகவே இருந்தது. மாப்பிள்ளையின் தாய் தகப்பனையும் சகோதரியையும் பிடித்திருந்தது. அவர்கள் கனிமொழியை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று நம்பினான்.

மாப்பிள்ளையை பற்றிய தகவல்கள் சொல்லப்பட்டது. பிசினஸ் செய்கிறான். அரண்மனை போல வீடுகள் உள்ளது. கனிமொழியை‌ தாலட்டும் அளவுக்கு மனம் உள்ளது. அவளை பொன்னால் சீராட்டும் அளவுக்கு பணமும் இருந்தது.

கனிமொழி குனிந்த தலை நிமிரவில்லை. உணர்ச்சிகள் தொலைத்து, சுய விருப்பு வெறுப்பு தொலைத்தவளாக நின்றிருந்தாள். அவளை காணும்போது மட்டும்தான் சக்திக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. விரைவில் அவளின் மனம் மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

கனிமொழியின் அழகை பற்றி மாப்பிள்ளையின் தாயார் புகழ்ந்துக் கொண்டிருந்த வேளையில் "மாப்பிள்ளை கார் வந்துடுச்சி.." என்று வெளியே ஓடினார் கனிமொழியின் தந்தை.

உள்ளே வந்த மாப்பிள்ளையை கண்டு முகம் சுருக்கினான் சக்தி.

"வாங்க தம்பி.." என அழைத்து காப்பியை தந்தாள் வளர்மதி.

காப்பி குடித்து முடித்து இன்னும் சில பல நிமிடங்கள் கடந்தபிறகு "பொண்ணை பிடிச்சிருக்கா தங்கம்.?" என்று மாப்பிள்ளையிடம் கேட்டாள் அவனின் அம்மா.

கனிமொழியை சில நொடிகள் எடைப் போட்டுப் பார்த்த மாப்பிள்ளை "ஓகே.." என்றான் தோள்களை குலுக்கி. "ஆனா அதுக்கும் முன்னாடி பொண்ணுக்கிட்ட பேசிட்டு வரேன்.." என்று எழுந்து நின்றான்.

"தேனு‌ அவங்களை காலி ரூம்க்கு கூட்டி போ‌.." தாத்தா சொன்னது கேட்டு எழுந்து நின்றான் சக்தி.

"த.. தப்பா எடுத்துக்காதிங்க. எங்களுக்கு மாப்பிள்ளையை பிடிக்கல. நீங்க வேற இடம் பாருங்க.." என்றான்.

கனிமொழி உட்பட அனைவருமே அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தனர்.

"என் பயோடேட்டாவை போன வாரமே உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிருந்தோம். நீங்க ஓகே சொன்னதாலதானே நாங்க பொண்ணு பார்க்க வந்தோம்.?" கோபத்தை மறைக்காமல் கேட்டான் மாப்பிள்ளை.

சுற்றியிருந்த தன் வீட்டு மனிதர்களை பார்த்தான் சக்தி. எல்லோருமே இவனை முறைத்தபடி நின்றிருந்தனர்.

"இப்ப உனக்கு என்ன பிரச்சனை சக்தி.? மாப்பிள்ளையை எங்க எல்லோருக்குமே பிடிச்சிதான் இருக்கு.." வளர்மதி எரிச்சலாக மொழிந்தாள்.

"சாரி. அவன் எங்க நாத்தனார் மகன். வெளியே இருக்கான். உங்களை பத்தி அதிகம் தெரியல. ஏதோ உளறிட்டு இருக்கான். தப்பா எடுத்துக்காதிங்க.." என்றாள்.

"அத்தை ஸ்டாப் இட். எனக்கு நிஜமாவே இந்த மாப்பிள்ளையை பிடிக்கல.." சக்தி சொன்னது கேட்டு ஆத்திரம்தான் அதிகம் வந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு.

"உனக்கு என்னடா வந்தது.? இத்தனை நாளா ஒன்னு சொல்லிட்டு இன்னைக்கு ஒன்னு சொல்லிட்டு இருக்க.." என்று திட்டினான் வெற்றி.

"பொண்ணு பார்க்க வந்ததுக்கு நல்ல மரியாதை தந்திருக்கிங்க.." என்ற மாப்பிள்ளையின் அப்பா "வாடா போலாம்.." என்று மகனை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தார்.

"நில்லுங்க.. நாம பேசிக்கலாம்.." கனிமொழியின் தந்தை பின்தொடர்ந்து ஓடினார். ஆனால் அவர்கள் சென்று விட்டனர்.

கார் காம்பவுண்டை கடந்து போய் விட்டது.

வெற்றியும் பாலாஜியும் சக்தியை முறைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றனர். கீர்த்தனா கனிமொழியை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

"ஏய் நில்லுடி.." சக்தியின் அழைப்பில் நின்றாள்.

"இங்கே வா.."

அருகில் வந்தவளிடம் "உனக்கு அவனை பிடிச்சிருந்ததா.?" எனக் கேட்டான்.

இல்லையென தலையசைத்தாள்.

"பார்த்திங்களா இவளுக்கே பிடிக்கல.."

"ஆனா எனக்கு அவரை கட்டிக்க சம்மதம்தான்.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் "பைத்தியமாடி நீ.?" என்றான் ஆத்திரத்தோடு.

"எனக்கு பிடிச்சவங்களோடு வாழ முடியாத பட்சத்துல என் அப்பா அம்மாவுக்கு பிடிச்சவங்களோடாவது வாழ்வதுதானே நியாயம்.?"

"பாப்பா.."

"எதுவா இருந்தாலும் என் பேரண்ட்ஸ்கிட்ட பேசிக்கங்க‌‌.." என்றவள் வெறுத்துப் போனவளாக அங்கிருந்து போனாள்.

"அதுதான் உனக்கு அவளை பிடிக்கலன்னு சொல்லிட்ட இல்ல.? அப்புறம் ஏன்டா அவ வாழ்க்கையை நாசம் பண்ற.?" தாயம்மா வருத்தமாக கேட்டாள்.

"சின்ன பொண்ணு இவ. இவளுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளையை பார்க்காம உங்க வயசுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்தா என்ன நியாயம்.?" என்றுக் கேட்டவனை வெறுப்போடு பார்த்தாள் வளர்மதி.

"அவருக்கு வெறும் முப்பத்தியெட்டுதான். அதுல என்ன நீ குறை கண்ட.?" என்ற அத்தையை கண்டு கண்களை மூடினான். கோபத்தில் எதையும் கத்தி வைக்க கூடாது என்று தன்னிடமே சொல்லிக் கொண்டான்.

"தேர்ட்டி எய்ட்.. இவளை விட இருபத்தியொரு வயசு பெரியவன். இருபத்தியிரண்டு வயசுக்குள்ள இருக்கற மாப்பிள்ளையை பாருங்க. அவளுக்கு எது சரியோ அதை செய்ங்க.." என்றான்.

"நீ என்ன லூசாடா மாப்ளை.? இருபத்தியிரண்டு வயசுல எவன் சம்பாதிக்கறான்.? எவனை நம்பி என் பொண்ணை கட்டி வைக்கிறது.?" என கேட்டார் மாமா.

"அப்படின்னா இருபத்தி நாலு அஞ்சில இருப்பவனை கட்டி வைங்க.."

"இந்த வயசுல எவன் செட்டில் ஆகியிருப்பான்.?" வளர்மதி கேட்ட கேள்வியில் அதிர்ந்தவன் "செட்டில்.? செட்டில் ஆன மாப்பிள்ளையா.? ஏன் உழைக்க ஆரம்பிச்ச ஒருத்தனை கட்டி வச்சா என்ன போக போகுது.? இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து அவங்க நிலமையை செட்டில் பண்ணிக்க போறாங்க.." என்றான்.

கனிமொழியின் தந்தை தன் தங்கையையும் தங்கை கணவரையும் பார்த்தார்.

"சாரி மாமா. நான் உங்களை ஹர்ட் பண்ண நினைக்கல. ஆனா சில விசயங்களுக்கு உங்க‌ வாழ்க்கையை உதாரணம் சொல்ல வேண்டி இருக்கு. மன்னிச்சிகங்க.." என்றவர் சக்தியின் புறம் திரும்பினார்.

"நீ சொல்ற வயசுல பசங்க கிடைப்பாங்க. ஆனா என் பொண்ணுக்கு நாங்க கஷ்டமில்லாத வாழ்க்கையை தர நினைக்கிறோம். சின்ன பையனா கட்டி வச்சா லவ் பண்ணுவான். ஆனா சம்பாதிக்க மாட்டான். இந்த வயசுலதான் சம்பாதிக்கணும். ஆனா இவளை பார்த்துட்டு லைப்பை கோட்டை விட்டுடுவான். பிசினஸ் ஆரம்பிச்சி நடத்திட்டு இருக்கும் சின்ன பையனை கட்டி வைக்க முடியாது. இந்த வயசுல அவன் பிசினஸ் பின்னாடி ஓடிட்டு இருப்பான். என் பொண்ணு கல்யாணமாகியும் தனிமையை அனுபவிப்பா.. இரண்டையும் மேனேஜ்‌‌ பண்ற மாதிரி ஒரு பையன் இருக்கலாம். ஆனா அப்படி ஒருவனை கண்டுபிடிக்கறது கஷ்டம். எங்க பொண்ணு மேல நீ காட்டுற வெறுப்பை பார்க்கிறதுக்கு பதிலா நல்லவனா ஒருத்தன் கிடைச்சா கட்டி வைக்கிறதுதான் எங்களுக்கு நல்லது. நீ சொல்ற மாதிரி ஒருத்தனுக்கு என் பொண்ணை கட்டி வச்சா அப்புறம் என் தங்கச்சி அனுபவிச்ச அதே கஷ்டத்தை என் மகளும் அனுபவிக்க வேண்டி வரும். என் பொண்ணு சந்தோசமா வாழணும். அவளுக்கு எந்த வித கஷ்டமும் இருக்க கூடாது. எந்த காலத்திலுமே வயசு வித்தியாசம் விசயம் கிடையாது. கம்பர்டபிளான லைஃப்தான் மேட்டர்.." என்றவர் தன் தங்கையின் புறம் திரும்பினார்.

"மறுபடி பொண்ணு பார்க்க வர அன்னைக்கு உன் பையனை வீட்டுக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிடு.." என்றுவிட்டு அங்கிருந்து போனார்.

வளர்மதி தலையை பிடித்தபடி சோஃபாவில் அமர்ந்தாள்.

"அவனோட மன்த்லி இன்கம் என்னன்னு தெரியுமா.? அவனுக்கு வீடு மட்டுமே நாலு இடத்துல இருக்கு. ஒவ்வொன்னும் பங்களா மாதிரி. நாசகதி பண்ணிட்ட.." என்று திட்டினாள்.

சக்தி அத்தையை முறைத்தான்.

"நீங்க அவனை கட்டிப்பிங்களா.?" கோபமாக கேட்டான்.

நிமிர்ந்துப் பார்த்து முறைத்தவள் "எனக்கு என்ன தேவையோ அதைதான் தேட முடியும். அனாதை நான். கூட்டு குடும்பம் தேவைப்பட்டது. உன் மாமாவை கட்டிக்கிட்டேன். என் பொண்ணுக்கு தேவை அவ திமிரை அடக்கற மனுசன்.." என்றாள்.

தலையை பிடித்தான் சக்தி.

"தப்பா பேசாதிங்க அத்தை. அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைங்க.."

"போடா டேய்.. நீ சொல்லியே கேட்காதவ நான் சொல்லியா கேட்க போறா.? இந்த இரண்டு வாரமா அவ நல்ல சாப்பாட்டு சாப்பிடல. உன் ரூமையும் உன் சேரையும் வெறிச்சிட்டே இருக்கா. அவளுக்கு திமிர். என்ன சொன்னாலும் அந்த திமிர் அடங்காது. அவளுக்காக ஓர் அளவுக்குதான் கருணை பார்க்க முடியும். அவ ஒழுங்கா வேற காலேஜ் சேர்ந்து படிக்கிறேன்னு சொல்லியிருந்தாலோ, உன்னை மறந்துடுவேன்னு சொல்லி இருந்தாலோ கண்டிப்பா அவளுக்கு இந்த மேரேஜை பிக்ஸ் பண்ணியிருக்க மாட்டேன்.."

சக்திக்கு தலையே வெடிப்பது போலிருந்தது. அத்தையின் நியாயம் புரிந்தது. அவள் தேர்ந்தெடுத்த வழிமுறை கூட சரியென்றுதான் தோன்றியது. ஆனால் அவள் தன் மகளுக்காக மாப்பிள்ளை தேடிய விதம்தான் அவனுக்கு பிடிக்கவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN