காதல் கணவன் 59

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனிமொழியின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சக்தி. சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள்.

"உனக்கு அறிவே இல்லையா பாப்பா.?" உள்ளே நுழைந்ததுமே கத்தினான்.

"அமைதியா போங்க மாமா.. இதுக்கு மேல என்னை உடைக்காதிங்க. எனக்கு கிரைம் பாரன்சிக் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. அப்ப சின்ன பொண்ணா இருந்தபோது அந்த துறையில் இன்ட்ரஸ்ட் இருந்தது. இல்லன்னு சொல்லல. ஆனா லைப் வேற மாதிரி சொல்லி தந்துடுச்சி. எனக்கு பல விசயங்கள் வராதுன்னு லேட்டாதான் புரிஞ்சிக்கிட்டேன்.. கிரைம் பாரன்சிக்ல சேர்ந்தாலும் தண்டம். உருப்படவே மாட்டேன்.. அதனாலதான் உங்க காலேஜ்ல சேர்ந்தேன். உங்களுக்கு ஈக்வெல் ஆக முடியலன்னாலும் ஒரு டிகிரியாவது முடிச்சி வைக்கலாமேன்னு நினைச்சேன். வேற காலேஜ் போக முடியாது மாமா. எனக்கு படிப்புலயே இன்ட்ரஸ்ட் இல்ல.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"பாப்பா உனக்கு என்னடி ஆச்சி.?"

"எதுவும் ஆக வேணாம்ன்னு நினைக்கிறேன் மாமா.. விட்டுடுங்க. இனி எதுவும் மாறாது. உங்க காலேஜ்ல நான் படிக்கறதோ, நான் உங்களை லவ் பண்றதோ உங்களுக்கு பிடிக்கலன்னா பரவால்ல. விடுங்க. எனக்கும் அவரவர் உரிமை பத்தி இப்பதான் புரியுது. இந்த வீட்டை விட்டு போனாலே போதும் இப்போதைக்கு.." என்றவளின் கலங்கியிருந்த விழிகளை கண்டு பெருமூச்சு விட்டான்.

சுத்தமாக தெரியவில்லை. அவன் முன் வளர்ந்த கனிமொழியை போலவே தெரியவில்லை. புதிதாக தெரிந்தாள். பெரிய பேச்சு பேசுவது போலிருந்தது. மனதளவில் அவளே பெரியவளாகி விட்டது போலிருந்தது.

"பாப்பா நீ ஏதோ மனசு கஷ்டத்துல பேசுற. மாமா உன் நல்லதுக்குதான் சொல்றேன்.."

அவன் சொன்னதில் கடுப்பாகி அருகே இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள்.

"எனக்கு ஒரு நல்லதும் நடக்க வேணாம். அதுதான் யாரோ ஒருத்தருக்கு கட்டி வைக்க சொல்லிட்டிங்களே.. இனி என்ன நல்லது நடக்கணும்.? இனி நல்லது எதுவும் எனக்கு கிடையாது. விட்டுடுங்க. அட்லீஸ்ட் ஒரு வசதியான பையனையாவது கட்டிக்கிறேன். மனசால மகாராணி வாழ்க்கை முடியலன்னாலும் ஒரு மகாராணி சூழ்நிலையிலாவது வாழ்ந்துக்கிறேன்.." என்றாள் அழுகையோடு.

"பாப்பா.." மிரட்டினான்‌ அவளின் அழுகையையும் எண்ணப் போக்கையும் கண்டுவிட்டு.

"ஐயோ.." தலையை பிடித்தாள். "தயவுசெஞ்சி வெளியே போங்க மாமா.. போதும் நீங்க தரும் அட்வைஸ். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்ககிட்ட கெட்ட பேர் வாங்க எனக்கு மட்டும் ஆசையா.? உங்களோடு இருந்த நல்ல உறவை அழிச்சிக்க ஆசையா.? லவ் பண்ணி தொலைஞ்சிட்டேன்.." கடைசி வார்த்தையை மென்று துப்பினாள்.

"நீ சொல்ற எல்லாமே மூளைக்கு புரியுது மாமா. ஆனா ஆசைக்கு புரியல. என்னால புரிய வைக்கவும் முடியல.."

தரையில் கிடந்த தலையணையை எடுத்தான். அவளை அடித்து சலித்து விட்டது. அறிவுரை சொல்லியும் சலித்து விட்டது. இந்த திருமணமாவது அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தருமென்று நினைத்தான். ஆனால் அத்தையின் மாப்பிள்ளை தேடும் லட்சணம் கண்ட பிறகு இந்த வழியும் அடைப்பட்டு விட்டது போல தோன்றியது.

அவனுக்கே தலை வெடிப்பது போலதான் இருந்தது. சத்தத்தை அடக்கியபடி அழுதுக் கொண்டிருந்தாள். தலை முதல் கால் வரை அவளை அளந்தான். ஒரு பெண்ணாக பார்க்கவே முடியவில்லை. குழந்தையாகதான் தெரிந்தாள்.

தலையணையை இருக்கும் இடத்தில் வைத்தான். முகத்தை துடைத்தபடி திரும்பியவன் அருகில் இருந்தவளின் தாடையை பிடித்து நிமிர்த்தினான். அவனின் கையை தட்டி விட்டவள் தள்ளி நின்றாள்.

"உன் வயசுக்கு ஏத்த ஒருத்தனை கட்டிக்க பாப்பா.." கடைசி முறை என்று நினைத்துச் சொன்னான்.

"நான் கேட்ட பாசம் கிடைக்கல. அட்லீஸ்ட் பணமாவது இருக்கட்டுமே மாமா. உங்களை நினைச்சி வேற ஒருத்தனோடு வாழ்வதே கொடுமைதான்‌. இதுல பத்தொன்பது இருபதுல இருப்பவனை கட்டிக்கிட்டு அவனோட பேரண்ட்ஸ் காசுல வாழணுமா.?"

"பெரிய வார்த்தைகளா பேசுறா.." புலம்பியபடி வெளியே போனான்.

வளர்மதியிடம் வந்தவன் அவள் பதிந்து வைத்திருந்த மேட்ரிமோனியல் தளத்தின் விவரம் கேட்டு‌ தனது போனில் தேடினான். வேலையில் இருக்கும் அனைவருக்கும் வயது அதிகமாகதான் இருந்தது. வயது குறைவாக இருந்து பணியும் சொத்தையும் குறிப்பிட்டு இருந்தவர்களை பார்க்கும்போதே அது பொய் என்று தெரிந்தது. அதையும் மீறி ஒன்றிரண்டு மாப்பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பெண்ணாக கனிமொழி இருக்கவில்லை. அவனுக்கே கூட பலரையும் பிடிக்கவில்லை. இன்று வந்து போனவன் தேடி சலித்த மாப்பிள்ளை என்பதே இப்போதுதான் புரிந்தது.

தலையே வலித்தது.

"அம்மா டீ தரிங்களா.?" என கேட்டுவிட்டு தனது அறைக்கு போனான். கனிமொழியின் அறையை தாண்டுகையில் அவள் கவிழ்ந்து படுத்திருப்பது கண்களில் பட்டது. அழுகிறாள் என்பதை யூகிக்க முடிந்தது.

சோர்வாக வந்து‌ தனது அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவளுக்கு ஏன் தன் மீது இப்படியொரு காதல்? திருப்பி திருப்பி அதையே கேட்டான். பதில் கிடைக்கவில்லை. அவள் மீது ஏன் தனக்கு அந்த காதல் வரவில்லை.? என்று இதையும் தன்னிடமே கேட்டுப்‌ பார்த்தான். அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

அம்மா தேனீர் கோப்பையை தந்தாள்.

"வரதட்சணை எதிர்பார்க்கறியா சக்தி.? என் அண்ணா நல்லாவே மகளுக்கு சீர் பண்ணுவான். உன்னோட எதிர்பார்ப்பை சொன்னா வெற்றியும் பாலாஜியும் கூட செய்வாங்க.." மன வருத்ததோடு சொன்னாள் அர்ச்சனா.

"என்னை பார்த்தா உங்களுக்கு டவுரி எதிர்பார்க்கற மாதிரியா இருக்கு.? ஏன்ம்மா இப்படி.?" டீயை குடித்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது.

"பின்ன ஏன்டா அவளை வேண்டாங்கற.? அவ அழகாதானே இருக்கா.? உனக்கு பொருத்தமாவும் இருக்கா. நீ சரின்னு சொன்னா அவளை பத்து பன்னென்டு‌ வருசத்துக்கு வீட்டுல வச்சிருப்பாரு எங்க அண்ணா. அவகிட்ட என்னதான் குறை.? சொல்லு. நான் தெரிஞ்சிக்கிறேன். நீ மொத்தமா பிடிக்கலன்னு சொன்னதும் எனக்கும் சேர்த்து ராத்திரியில் தூக்கம் வர மாட்டேங்குது.."

சக்தி நெற்றியை தேய்த்தான்.

"மேரேஜ்‌ பண்ணணும்ன்னா அவ மேல கொஞ்சமாவது ஆசை இருக்கணும் அம்மா. அவ மேல துளி ஆசை இல்ல. அவளை எந்த மாதிரியுமே நினைக்க முடியல. நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியுதா.? என்னை மேரேஜ் பண்ணாலும் அவ லைஃப் நாசம்தான்.‌." என்றவன் "உங்களை பார்க்கும்போது எனக்கு மனசுல தப்பா தோணுமா?" எனக் கேட்டான்.

"பைத்தியமாடா நீ.?"

"அதே போலதான் அவளை பார்க்கும் போதும் தப்பா தோணவே மாட்டேங்குது.."

"என்னடா பேசுற நீ.?" அர்ச்சனாவுக்கு கடுப்பாக வந்தது.

"உண்மை அம்மா. தப்பா தோணினாதான் கல்யாண வாழ்க்கையையே ஆரம்பிக்க முடியும். இத்தனை நாளா நான் டிரை பண்ணலன்னு நினைக்கிறிங்களா.? அவ என்கிட்ட லவ்வை சொல்லி நாலு மாசம் ஆகுது. எனக்காக இல்லன்னாலும் அவளோட கண்ணீரை பார்க்க பிடிக்காம நானும் டிரை பண்ணேன். எந்த பக்கமிருந்து பார்த்தாலும் இரண்டு பர்சண்ட் லவ் கூட தோண மாட்டேங்குது.‌ ஒரு பர்சண்ட் லஸ்ட் கூட தோண மாட்டேங்குது. அவளை அழ வைக்க எனக்கு மட்டும் விருப்பமா.? அவளை ரொம்ப பிடிக்கும் அம்மா. அவ அழுதா எனக்கும் தாங்காது. ஆனா எந்த உணர்வுமே தோணலையே. என்ன செய்யட்டும்.? அவளை நான் கல்யாணம் செஞ்சாலும் அது இரண்டு மூனு வருசத்துல விவாகரத்துலதான் முடியும். தெரிஞ்சே அவ வாழ்க்கையை நாசம் பண்ண சொல்றிங்களா.?"

அவனின் கேள்விக்கு அம்மாவிடம் பதிலே இல்லை. அவனின் விளக்கங்கள் அத்தனையும் அவளால் ஏற்றுக் கொள்ளும்படிதான் இருந்தது. மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து போய் விட்டாள்.

சக்தி எழுந்து சென்று கட்டிலில் விழுந்தான். அவளை அரைகுறையாக பார்த்த காட்சியையும், உடைகள் ஏதுமின்றி பார்த்த காட்சியையும் நினைத்துப் பார்த்தான். ஒன்றுமே தோணவில்லை. அவளின் பத்து வயதில் அவளை பார்க்கையில் என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வுதான் இப்போதும் இருந்தது. தன் வாழ்க்கைக்கு துரோகம் செய்ய கூட தயங்கவில்லை அவன். அவளின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டி விட்டு விட கூடாது என்று நினைத்தான்.

மதிய உணவை அனைவரோடும் சேர்ந்து அமர்ந்து உண்டான். வீடே மயான அமைதியில் இருந்தது. கனிமொழி சாப்பிட வரவில்லை. யாரும் அவளை அழைக்கவும் இல்லை. சக்திக்கு சாதம் இறங்க மறுத்தது.

"குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைப்பான்னு தெரிஞ்சிருந்தா அப்பவே கொன்னிருப்பேன் அவளை.." வளர்மதியின் முனகலில் அதிர்ந்து விட்டான் சக்தி.

"சித்தி ப்ளீஸ்.. இப்படி திட்டாதிங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." பாலாஜி கெஞ்சினான். இந்த ஒரு‌ வாரத்தில் நிறைய முறை கெஞ்சி விட்டிருந்தான்.

"எனக்கும்தான் கஷ்டமா இருக்கு பாலா. அவளை எப்படி வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன் தெரியுமா.? சூடு வச்சும் வேற காலேஜ் போக மாட்டேன்னு சொல்றவளை வேற என்னதான் செய்றது.?"

தான் உண்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி தரையில் அடித்தான் சக்தி.

"வாட்.? சூடு‌ வச்சிங்களா.? யாரை கேட்டு அவளுக்கு சூடு வச்சிங்க.? இங்கே பிடிக்கலன்னு நான்தானே சொன்னேன், அவளை ஏன் டார்ச்சர் பண்றிங்க.?" எனக் கேட்டான் கத்தலாக.

தாத்தா உணவில் கையை கழுவிக் கொண்டு எழுந்து போய் விட்டார்.

"நீங்க எதுவும் கேட்க மாட்டிங்களா தாத்தா.?" பேரனின் கேள்வியில் நின்றவர் "எதையும் எங்களால கேட்க முடியல‌ சக்தி. 'நான் அனாதைன்னுதானே எல்லோரும் என்னை கேள்வி கேட்கிறிங்க.? என் பொண்ணை அடிக்க, மிரட்ட எனக்கு உரிமை இல்லையா.?'ன்னு கேட்கறா அவ. உன் மாமனும் போராடி பார்த்துட்டுதான் அவ வழிக்கு போயிருக்கான். அவளுக்கு கல்யாணம் முடியும் வரை தயவுசெஞ்சி நீ வீட்டுக்கு‌ வராதே. என்னால எந்த வார்த்தையையும் காதால கேட்க முடியல.." என்றார் வருத்தத்தை மறைத்த குரலில்.

"அப்படின்னா எனக்கு இங்கே பேச கூட எந்த உரிமையும் இல்ல. அப்படிதானே.?" வளர்மதியின் கேள்வியில் அவளின் கணவனும், கதிரேசனும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மீதி இருந்தவர்களும் உணவை உண்ண முடியாமல் ஆகாத வீட்டு விருந்தாளியை போல அமர்ந்திருந்தனர்.

"இதுக்காகதானே இவர் என்னை தேடி தேடி கட்டிக்கிட்டு வந்தது. அனாதை இவ. நாம என்ன பண்ணாலும் கேட்க‌ மாட்டா. பெத்த பிள்ளை எப்படி போனாலும் கண்டிக்க மாட்டா.. ஊமை மாதிரியே இருந்துட்டு போயிடுவா.." வசை பாடுவது போலவே பேச ஆரம்பித்தாள் வளர்மதி.

"ப்ளீஸ் ஸ்டாப் இட் அத்தை. தயவு செஞ்சி இப்படி பேசாதிங்க. நானே கூட கனியை கட்டிக்கிறேன்.." அவனுக்கு இதை தவிர வேறு வழியே தெரியவில்லை. இவனுக்காக அவளுக்கு ஏன் சூடு போட வேண்டும் என்று கேள்வி எழுந்தது. வளர்மதி பேசியே கனிமொழியை கொன்று விடுவாள் என்பது இந்த நேரத்தில் தெளிவாக புரிந்து போனது. அவள் வாழ்க்கையை, அவளை காப்பாற்றுவதற்காகவாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

பாலாஜி நம்பிக்கையே இல்லாமல் சக்தியை பார்த்தான். இத்தனை நாட்களாக தாங்கள் கெஞ்சிய போதும் வராத வார்த்தை இன்று வந்த மாயம் அவனுக்கு புரியவில்லை.

வளர்மதி தரையில் கிடந்த தட்டை கையில் எடுத்தாள்.

"என் பொண்ணை உனக்கு கட்டி வைப்பேன்னு நினைக்கிறியா.? நாத்தனார் மகனா உன் மேல பாசம் வச்சிருக்கேன். அது எப்பவும் அப்படியேதான் இருக்கும். ஆனா என் பொண்ணை தர மாட்டேன். அவளுக்கு விஷம் வச்சி கொன்னாலும் கூட உனக்கு கட்டி வைக்க மாட்டேன். என் ரோசம் பத்தி உங்க யாருக்குமே தெரியல. என் பொண்ணை பிடிக்கலன்னு சொல்லிட்ட நீ. அத்தோடு இருந்துக்க. நீ பிச்சை போட்டு என் பொண்ணு வாழ தேவையில்ல. ராஜா மாதிரி ஆயிரம் மாப்பிள்ளைகளை வரிசையில் கொண்டு வந்து நிறுத்துவேன் நான்.." என்று சவால் விட்டவள் சமையலறைக்கு சென்று விட்டாள்.

அர்ச்சனா எழுந்து வந்து மகனின் தோளில் கை பதித்தாள்.

"நீ உன் மனசை கொன்னுக்க வேணாம் சக்தி. அது அவ பொண்ணு. அவளுக்கு இல்லாத அக்கறை உனக்கு தேவையில்ல. உன் மனசுக்கு ஏத்த மாதிரி ஒருத்தி இருப்பா. நானும் கூட கண்டிப்பா அந்த பொண்ணைதான் மருமகளா ஏத்துப்பேன். தியாகம் பண்றதா நினைச்சி நீ இவளை மேரேஜ் பண்ணா அப்புறம் நீ உன் அம்மாவை மறந்துட வேண்டி இருக்கும். நல்லா ஞாபகம் வச்சிக்க.." என்றுவிட்டு அங்கிருந்து போனாள்.

"பாட்டி நீங்களாவது அத்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்ல கூடாதா.?" அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்த தாயம்மாவிடம் கெஞ்சலாக கேட்டான் சக்தி.

"நான் ஏதாவது கேட்டா மாமியார் கொடுமைன்னு சொல்றா.. அவ எங்களோட பேச்சை கேட்கல. அவ பேச்சை கேட்பதை தவிர வேற வழி இல்ல எங்களுக்கும். புருசன் சொல்றதையே கேட்காதவ நாம சொல்வதை கேட்பாளா.?" எனக் கேட்டபடியே தட்டை நகர்த்தி வைத்தாள்.

பேரனை பார்த்தவள் "வேண்டாம்டா. உன் அம்மா எல்லாமும் சொன்னா. அவளை கல்யாணம் பண்ணிக்க வேணாம். எந்தவொரு சூழ்நிலையிலும் கல்யாணம் பண்ணிக்காத. பெண் பாவம் பொல்லாதது. அந்த பாவத்தை நீ அவளுக்கு செஞ்சிடாதே.! அவளுக்குன்னு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். நீ எதையும் மனசுல போட்டு குழம்பிக்காம கிளம்பிப் போ.." என்றாள்.

பாட்டியின் பேச்சில் இருந்த விசயங்கள் புரியாமல் குழப்பத்தோடு மச்சானை பார்த்தான் பாலாஜி.

"என்ன பிரச்சனை சக்தி.? நீ வேற யாரையாவது லவ் பண்றியா.?"

"ஆமா.."

"யா..யாரை.?" கீர்த்தனா தயக்கத்தோடு கேட்டாள்.

"கனிமொழியை.." என்றவன் வாசலை நோக்கி நடந்தான். அவளுக்காக பொய்யை சொன்னான். 'வெற்றியும் பாலாஜியும் சொன்னதுதான் சரி. அவளுக்காக ஒரு பொய்யை நான் சொல்லி இருக்கலாம். இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்..' காரின் கதவை திறந்து உட்கார்ந்தான்.

நிமிர்ந்து பார்த்தான். கனிமொழி ஜன்னல் அருகே நின்றபடி இவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அழுத கண்கள் அவனுக்கு வலியை தந்தன.

***

"நிஜமா நமக்கு மேரேஜ் ஆகிடுச்சா.?" என்ற கனிமொழிக்காக காரின் கதவை திறந்து விட்ட சக்தி "ம். ஆமா.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN