காதல் கணவன் 60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி நன்றாக யோசித்த பிறகுதான் இந்த முடிவிற்கு வந்தான்.

கனிமொழியின் மீது காதல் வேண்டுமானால் இருக்காமல் போகலாம். ஆனால் மலையளவு அன்பு இருந்தது. அவளின் சிறுதுளி கண்ணீருக்கும் குண்டு வெடியில் சிக்கிய பாறாங்கல்லாய் சிதறுண்டு போகும் ஒருவனாக இருந்தான்.

அத்தை அவளுக்கு சூடு வைத்ததுதான் மிகப் பெரிய தவறு‌. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளின் வாழ்க்கை நாசமாவதற்கு பதில்‌ தனது வாழ்வே நாசமாக்கட்டும் என்று நினைத்தான்.

வீட்டில் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவசரப்பட்டு அம்மாவிடம் உண்மையை சொல்லி விட்டோம் என்று புரிந்து இப்போது வருத்தப்பட்டான்.

வெற்றியையும் பாலாஜியையும் அழைத்து தான் எடுத்திருக்கும் முடிவை சொன்னான்.

"இதைதானே நான் அப்பவே சொன்னேன்.?" என்று சுடு எண்ணெயில் விழுந்த கடுகாக பொரிந்தான் வெற்றி.

"ஓகேடா. எனக்கு அறிவு இல்ல‌. இப்பதான் வந்திருக்கு போதுமா.?" என்று இவன் கேட்கவும் வெற்றியும் அடங்கி விட்டான்.

"வீட்டுல பேசலாம்.." பாலாஜி சொன்னது கேட்டு மற்ற இருவரும் மறுப்பாக தலையசைத்தனர்.

"வளர்மதி சித்தி கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்டாங்க.." என்றான் வெற்றி.

"ஆமா.." என்ற சக்தி 'என் அம்மாவும் ஒத்துக்க மாட்டாங்க..' என்று மனதோடு முனகினான்.

"பர்ஸ்டலயே வந்து நீ பேசியிருக்கணும். அவ காலேஜ் முடிச்சதும் கட்டிக்கிறேன்னு சொல்லி இருக்கணும். அட்லீஸ்ட் அந்த டைம்ல அவளுக்கு ஒரு சேப்டியாவது இருந்திருக்கும். இப்ப மேரேஜ் பண்ற ஸ்டேஜ் வந்த பிறகு புத்தி வந்திருக்கு.." என்று திட்டிய வெற்றியேதான் கடைசியில் கனிமொழியை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.

வெள்ளை சுடிதாரில் பொட்டு கூட இல்லாமல் அழைத்து போனான். நடுவழியில்‌ கண்ணாடியில் அவள் முகம் பார்த்து விட்டு கடையில் நிறுத்தி பூ பொட்டு‌ வாங்கி வந்தான்.

"என்னண்ணா விசேசம்.? எங்கே போறோம் இப்ப.?" எனக் கேட்டவளிடம் "போன பிறகு தெரிஞ்சிக்க.‌" என்றவன் பைக்கை கொண்டு வந்து ரெஜிஸ்டர் ஆபிசின் முன்னால் நிறுத்தினான்.

கனிமொழிக்கு ஒன்றும் புரியவில்லை. வாசலில் நின்றிருந்த சக்தியையும் பாலாஜியையும் கண்டதும் சட்டென்று கண்கள் துளிர்த்து விட்டது.

"நான் வரல.." என்று அங்கிருந்து ஓட முயன்றாள். வெற்றி அவளின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கூட்டி போனான்.

சக்தியின் முன்னால் வந்து நின்றவள் "ஏன் மாமா இப்படி டார்ச்சர் பண்றிங்க.? நான் பணக்கார மாப்பிள்ளை கேட்கறேன்னு இப்ப நீங்களே ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கறிங்களா.?" எனக் கேட்டாள் அழுகையோடு.

அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன் "உனக்கும் எனக்கும் மேரேஜ் நடக்க போகுது.." என்றான்.

நம்பிக்கையே இல்லை அவளுக்கு.

"எதுக்காக ஏமாத்த பார்க்கிறிங்க.?" எனக் கேட்டவளின் கையை பற்றியவன் உள்ளே இழுத்துக் கொண்டு நடந்தான்.

பதிவாளரின் அறைக்குள் நுழையும் முன் பாலாஜி கட்டைப் பையிலிருந்த மாலைகளை எடுத்து தந்தான்.‌ கனிமொழிக்கு உண்மையாகவே நம்ப முடியவில்லை.

சக்தி அவளின் கழுத்தில் மாலையை அணிவித்தான்.

"மாலையை போடு கனி.." என்றான் பாலாஜி.

மாலையையும் எதிரில் இருந்தவனையும் பார்த்தவள் மாலையோடு சேர்த்து முகத்தையும் மூடிக் கொண்டாள். விம்மி அழுதாள்.

"பாப்பா.." கண்டித்தான் சக்தி.

"நம்பவே முடியல மாமா.." அழுதபடியே சொன்னவளை அணைத்துக் கொண்டான் பாலாஜி.

"இது அவன்தான். உனக்கும் அவனுக்கும் மேரேஜ் நடக்க போகுது. சாட்சி கையெழுத்து போடதான் நாங்க வந்திருக்கோம்.. எங்களை நம்பு.."

ஐந்து நிமிடத்திற்கு மேலாக அழுது தீர்த்து விட்டுதான் நிமிர்ந்தாள் கனிமொழி.

"தாத்தா பாட்டி அம்மா அப்பா யாருமே இல்லையே.!"

"அவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. நீ அமைதியா மாலையை போடு.."

கண்ணில் நீர் வழிய சக்திக்கு மாலையை சூட்டினாள். இப்படி ஒரு நாள் வருமென்று கனவில் கூட நினைக்கவில்லை.

வெற்றி தனது பாக்கெட்டிலிருந்து சிறிய நகை பெட்டியை எடுத்தான். இளஞ்சிவப்பு காகிதத்தின் இடையில் இருந்தது தாலி சங்கிலி.

சக்தியை பொறுத்தவரை இரண்டு கையெழுத்து மட்டுமே போதும்தான். ஆனால் வீட்டில் இருப்போருக்கு அந்த கையெழுத்து போதாதே.!

தாலி சங்கிலியை கையில் வாங்கினான் சக்தி.

"நிஜமாவா மாமா.?" உதட்டை கடித்து அழுகையை அடக்கியும் கூட மலையை குடைந்து ஊற்றும் அருவியை போலதான் கண்ணீர் கொட்டியது.

அவளின் கழுத்தில் சங்கிலியை அணிவித்தான். பாலாஜியும் வெற்றியும் உதிரி பூக்களை இருவரின் தலையிலும் தூவினர்.

அவன் தாலி அணிவிக்க ஆரம்பித்ததும் தலை குனிந்துக் கொண்டாள். அனைத்து கடவுள்களுக்கும் மனதுக்குள் நன்றி சொன்னாள்.

அவளின் கையை பற்றினான் சக்தி. அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

திருமணத்தை பதிவு செய்தனர்.

நால்வரும் அங்கிருந்து வெளியேறினர்.

"நமக்கு நிஜமா கல்யாணம் ஆகிடுச்சா.?" தேய்ந்த டேப்ரிக்கார்டர் போல கேட்டுக் கொண்டிருந்தவளிடம் "ம்ம்.." என்ற சக்தி அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான். பாலாஜியும் காரில் ஏறினான்.

வெற்றி அவர்களுக்கும் முன்னால் புறப்பட்டு போனான்.

"கோவில்ல இந்த கல்யாணத்தை பண்ணியிருக்கலாமே.!" சிறிது நேரம் கழித்துக் கேட்டாள் கனிமொழி.

அவனை பொறுத்தவரை இது திருமணம் கிடையாது. அப்படியிருக்கையில் இடம் எங்கே இருந்தால் என்ன என்றுதான் தோன்றியது.

"வளர்மதி சித்தி ஒரு மாதத்துக்கு அழுவாங்கன்னு நினைக்கிறேன்.." வருத்தப்பட்டான் பாலாஜி.

வீட்டுக்குள் நுழைந்தான் வெற்றி.

"கனி எங்கே.?" வளர்மதி வாசலை பார்த்தபடி கேட்டாள்.

"சக்தியோடு வரா.." என்றவனை முறைத்தவள் "அவனோடு எதுக்கு விட்டுட்டு வந்த.?" என்று கத்த ஆரம்பித்தாள்.

அவளின் கேள்வியில் மற்ற அனைவரும் வந்து விட்டனர்.

"சக்திக்கும் கனிக்கும் மேரேஜ் முடிஞ்சிடுச்சி.." அவன் சொன்னது கேட்டு அனைவருமே அதிர்ந்தனர். சிலருக்கு நம்பிக்கை இல்லை.

"என்ன சொல்ற.?" அருகில் வந்து அவனின் சட்டையை பிடித்தாள் வளர்மதி.

"அவனை விடு.." கனிமொழியின் அப்பா இடையில் வந்து மனைவியை தூர இழுத்து வந்தார்.

"பொய் சொல்றதானே.?" அர்ச்சனா செத்து போன முகமாக கேட்டாள்.

தலை குனிந்தான் வெற்றி. அவனின் மௌனமே விசயத்தை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.

"ஏன்டா இப்படி பிரச்சனை மட்டுமே பண்றிங்க.?" எனக் கேட்டு திட்டினார் தாத்தா.

அவன் பதில் சொல்லும் முன் கார் வரும் சத்தம் கேட்டது.

வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் சக்தி. இறங்கிய நொடியில் அவனின் கன்னத்தில் பளீரென விழுந்தது அறை. ருத்ரகாளியாக நின்றிருந்தாள் வளர்மதி.

"அம்மா.." அந்த பக்கத்து கதவை திறந்துக் கொண்டு ஓடி வந்தாள் கனிமொழி. வளர்மதி அவளை நோக்கி செல்வதை கண்டு அத்தைக்கும் முன்னால் ஓடினான் சக்தி.

கனிமொழியை குறி வைத்து அறைந்தாள் வளர்மதி. அறை இவனின் முதுகில் விழுந்தது.

"அவளை விடுடா.." ஆத்திரம் தீராமல் அவனை அடித்தாள். ஆனால் அவன் துளியும் நகரவில்லை. வளர்மதியின் கரம் கடைசி வரையிலுமே கனிமொழியின் மீது விழ விடவில்லை அவன்.

"அவளை கொல்லணும் நான். தள்ளி போடா.." என்றவள் மகளை எட்டி‌ பிடித்து விட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

கனிமொழி பயத்தில் அழுதாள். அணைத்துக் கொண்டிருந்தவன் அவளை தன் கை வளைவை விட்டு நகர கூட அனுமதிக்கவில்லை.

வெற்றியும் பாலாஜியும் சித்தியை நெருங்கவில்லை. இப்போது இடையில் புகுந்தால் அது பெரிய பிரச்சனைக்கு வழி வகுக்கும் என்று அவர்களுக்கே தெரியும். சித்தியின் கோபம் இப்படியாவது தீரட்டும் என்றும், தங்களின் பேச்சை முதலிலேயே கேட்காமல் போன சக்திக்கு இந்த அடிகள் தேவைதான் என்றும் தோன்றியது இருவருக்கும்.

கனிமொழியின் தந்தையேதான் கடைசியில் மனைவியை விலக்கி கூட்டி வந்தார். அது அவருக்கு சிரமமாக இருந்தது. ஆனாலும் மனைவியின் கையால் மகள் சாவதை பார்க்க விரும்பவில்லை அவர்.

"அமைதியா வா மதி.." அவளை அடக்க பார்த்தார்.

அவரின் பிடியிலிருந்து விலகியவள் "நான் சொல்ல சொல்ல கேட்காம அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்ல.. நீ நல்லா அனுபவிப்படி. அவன் பிச்சை போடுற மாதிரி உனக்கு இந்த தாலியை கட்டியிருக்கான். உனக்கு புரியும்போது தெரியும் நான் ஏன் சொன்னன்னு.!" என்று அழுதாள்.

சக்திக்கு இதயம் பாரமாக இருந்தது.

"என் பொண்ணு வாழ்க்கையையே நாசம் பண்ணிட்ட இல்ல.. நீ நாசமாதான் போவடா.." என்றவள் தரையில் கிடந்த மண்ணை எடுத்து இருவர் மீதும் தூற்றினாள்.

மண் முழுக்க சக்தியின் முதுகில் படர்ந்தது.

கனிமொழியின் தந்தை மனைவியின் கன்னத்தில் ஒரு அறையை விட்டார்.

"என்னடி பண்ற நீ.? அது நம்ம புள்ளை." என்றார் கர்ஜனையாக.

"அவ என் புள்ளை இல்ல. நான் சொல்ல சொல்ல கேட்காம போயிட்டா. இன்னையோடு அவ யாரோ நான் யாரோ.." என்று கத்திவிட்டு உள்ளே ஓடினாள். மனைவியின் மீது கொலைவெறி இருந்தது அவருக்கு. ஆனால் இந்த நேரத்தில் அவளை தனியாக விட்டால் ரோசத்தில் ஏதாவது செய்துக் கொள்வாளோ என்று பயந்து மனைவியை பின்தொடர்ந்தது ஓடினார்.

கனிமொழியின் உடம்பு மொத்தமும் நடுங்கிக் கொண்டிருந்தது.

"பயப்படாத பாப்பா.." என்றான் சக்தி.

வளர்மதி வீட்டுக்குள் சென்ற சில நொடிகளுக்கு பிறகு திரும்பினான். பாட்டியும் தாத்தாவும் ஒருபுறம், அம்மாவும் அப்பாவும் ஒருபுறம் நின்று இவனை வெறித்துக் கொண்டிருந்தனர். அம்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

தலையில் இருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டவன் கனிமொழியின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அம்மாவின் அருகே சென்றான். காலில் விழ முயன்றான். சட்டென்று பின்னால் நகர்ந்துக் கொண்டாள் அர்ச்சனா.

மாலை மாலையாக வந்த கண்ணீரோடு மகனை பார்த்தவள் "நான் சொன்னதை நீ கொஞ்சமும் கேட்கல. இவளுக்காக உன் வாழ்க்கையை அழிச்சிக்க முடிவு பண்ணிட்ட. அவங்க அம்மா உன் மேல மண்ணை வாரி போட்ட மாதிரியேதான் எனக்கும் இவ மேல மண்ணை வாரி தூத்தணும்ன்னு வெறியா இருக்கு.." என்றாள்.

சக்தி அதிர்ச்சியோடு அம்மாவை பார்த்தான்.

"இவ மேல ஏன்ம்மா கோபம்.? சின்ன பொண்ணும்மா.."

"எனக்கு என் மகன் வாழ்க்கையை விட வேற எதுவும் முக்கியம் கிடையாது.. கடைசி வரை உன்னை மன்னிக்க மாட்டேன் நான்.." என்றவள் தன் புது மருமகளை முறைத்து விட்டு வீட்டுக்குள் போனாள்.

கதிரேசன் மகனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போனார்.

"அப்பா.." அழைத்து நிறுத்தினான்.

"உன் தங்கச்சியும் என் பேச்சை கேட்கல. நீயும் இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் முன்னாடி என்கிட்ட கேட்கல. என்னை மனுசனா கூட மதிக்கல நீ.." என்று விட்டு போனார்.

தாத்தா பாட்டியின் முன்னால் வந்து நின்றான். மன பாரத்தோடு வாழ்த்தினர்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து விழுந்தது பைகள் இரண்டு.

"நான் இருக்கும் வீட்டுக்குள்ள அவ வர கூடாது.." என்று சீறி விட்டு போனாள் வளர்மதி.

வெற்றி பைகளை கையில் எடுத்தான். சக்தி அவற்றை வாங்கி காரில் வைத்தான்.

மச்சான்கள் இருவரிடமும் "தேங்க்ஸ்.." என்றான்.

கனிமொழியை அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றான்.

"ஏன் மாமா அத்தையும் அம்மாவும் இவ்வளவு திட்டுறாங்க.?" புரியாமல் கேட்டாள் கனிமொழி. அவளின் அழுகை இப்போதுதான் நின்றிருந்தது.

"அவங்க ஏதோ கோபத்துல கத்திட்டாங்க. சீக்கிரம் சரியாகிடுவாங்க.‌ நீ எதையும் நினைக்காத.."

சரியென்று தலையசைத்தாள். தாலியை கையில் எடுத்துப் பார்த்தாள். கண்ணில் ஒற்றிக் கொண்டாள். சக்தியின் வலது கரம் ஸ்டியரிங்கை இறுக்கியது.

வீட்டின் கதவை திறந்தான். அவளுக்கு தண்ணீரை கொண்டு வந்து தந்தான்.

"மண் இருக்கு மாமா.." அவனின் பின்னங்கழுத்தில் இருந்த மண்ணையும் தலையிலிருந்த மண்ணையும் துடைத்து விட்டாள்.

"குளிச்சிட்டு வந்துடுறிங்களா?"

திருமணம் முடிந்ததும் குளிப்பது சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. அர்த்தமில்லா திருமணம். ஆனாலும்‌ மதித்தான்.

"சாரி மாமா.. என்னாலதான் அம்மா உங்களை அடிச்சிட்டாங்க.." என்றவள் பையை பிரித்தாள். உடைகளோடு சேர்த்து அவளின் பாட புத்தகங்களும் கீழே விழுந்தன.

"என்னை வேற காலேஜ் அனுப்பாதிங்க மாமா. ப்ளீஸ். நான் உங்களை இங்கே எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்.." கெஞ்சினாள்.

"சரி.."

அவன் சட்டென்று சரியென்று சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை தந்தது.

"உன் அம்மா எங்கே சூடு வச்சாங்க.?" இருவரின் மாலைகளையும் மேஜையின் மீது வைத்து விட்டு வந்து கேட்டான்.

"கா.. கால்ல மாமா.."

தரையில் மண்டியிட்டவன் அவளின் கால்களை தூக்கினான்.

"இந்த கால்.." இடது காலில் இருந்த‌ பேண்டை மேலே உயர்த்தினான். காயம் பெரியதாகவே இருந்தது. சூடு வைக்கப்பட்டு இரண்டு நாட்கள்தான் ஆகியிருக்க கூடும்.

"சாரி பாப்பா. என்னாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டம்.." என்றவனுக்கு குரல் அடைத்துக் கொண்டது.

"பரவால்ல மாமா. இது சரியாகிடும்.." அவனுக்கு சரியாகவில்லை.

அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று வந்தான்.

இரவு உணவை கடையிலேயே கட்டி வந்திருந்தான்.

உண்டு முடித்ததும் இருந்த ஒற்றை கட்டிலை அவளுக்கு தந்தான்.

"நீ தூங்கு பாப்பா.." என்றவன் தலையணை போர்வையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

"இங்கேயே தூங்குங்க மாமா. உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நான்.."

"இல்ல வேணாம்.." என்றவன் ஹாலின் ஓரத்தில் தரையில் போர்வையை விரித்து உருண்டான்.

வீட்டில் தாத்தா பாட்டி அர்ச்சனா ஜோடி, வளர்மதி ஜோடி என்று யாருமே உண்ணவில்லை.

சின்னவர்கள் மட்டும் கடமைக்கென்று உண்டனர்.

"என்கிட்ட கூட சொல்லாம போயிட்ட.." என்று‌ கணவனை திட்டினாள் கீர்த்தனா.

"நீ ஒருத்திதான் குறையா.? அமைதியா இருடி.."

அவனின் காலில் மிதித்து வைத்தாள். "அப்புறம் பல் இளிச்சிட்டு வருவ இல்ல. அப்ப இருக்கு உனக்கு.!" என்றாள்.

"பாவம் சக்தியும் கனியும்.." வருத்தமாக சொன்னாள் தேன்மொழி.

தங்கை நல் வாழ்க்கை வாழ வேண்டும் என்று‌ ஆசையாக இருந்தது‌ பாலாஜிக்கு.

***

அம்ருதா தன்னை கட்டியிருந்த கயிற்றை எரிச்சலோடு பார்த்தாள்.

"மரியாதையா என்னை அவிழ்த்து விடுடா.." என்று கத்தினாள் எதிரில் இருப்பவனை பார்த்து.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. எபிசோடை மனம் திறந்து பாராட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..😜
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN