காதல் கணவன் 66

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வளர்மதி ஒரு சைஸாக ஆரவை நோட்டம் விட்டாள்.

"தப்பா சொல்லிட்டேன் ஆன்டி.." என்று பற்களை காட்டியவன் "அதாவது நான் தேனை பிரெண்டாக்கிட்டேன். உங்களையும் பிரெண்டா மாத்தி காட்டுறதா அவளுக்கு சவால் விட்டிருக்கேன்.." என்றான். 'அப்பா.. நம்ம உளறல் ஒரு முடிவுக்கு வந்துடுச்சி..' என்று நிம்மதி கொண்டான்.

"பிரெண்ட்டா.?" அவனின் முகத்தில் முத்து இருக்கிறதா வைரம் இருக்கிறதா என்று ஆராய்வது போல அவனை பார்த்து முடித்த வளர்மதி "எனக்கு உன் வயசுல எந்த பையனும் பிரெண்டா வேணாம்.." என்றாள்.

"ஆன்டி.. இப்படி சொல்லாதிங்க. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க‌. நான் உங்க மனசை கொள்ளையடிப்பேன். உங்களுக்கு கண்டிப்பா என்னை பிடிக்கும். சொக்க தங்கம் நான். நெருப்புல போட்டாலும் கருக்காத தங்கம். தண்ணியில ஊற போட்டாலும் சாயம் போகாத தங்கம்.." என்றவன் அளந்துக் கொண்டே செல்ல "போதும்.." என்று கை காட்டி நிறுத்தினாள் வளர்மதி.

"யாரும் தன்னை தானே மெச்சிக்க கூடாது. உன் பெருமையை நாங்கதான் சொல்லணும்.. நீ தங்கமா தகரமான்னு செக் பண்ணலாம். வா வந்து இரண்டு கிலோ வெங்காயம் பொறுக்கி கொடு.." என்றாள்.

ஆரவ் கண்கள் மின்ன காய்கார பாட்டியின் கடையை நெருங்கினான்.

"நாம செலக்ட் பண்ற வெங்காயத்துல மாமியார் என்னை மருமகனேன்னு சொல்லிடணும்.." சந்தோசத்தில் முனகியபடி வெங்காயங்களை பொறுக்கி கூடையில் நிரப்பினான்.

"தம்பி நில்லு.." வளர்மதியின் அழைப்பில் நின்றான். "நாலு வெங்காயமே இரண்டு கிலோ வந்துடுமா ஆன்டி.?" எனக் கேட்டவனை முறைத்தபடி அவன் எடுத்து வைத்திருந்த அந்த நாலு வெங்காயத்தையும் கையில் எடுத்தாள்.

இரண்டு அழுகி போயிருந்தது. இவள் தொட்டதுமே சருகு பறந்து அழுகி போன பகுதிகள் தெரிந்தன. ஒன்றில் வெங்காயமே இல்லை. வெறும் இலைகள் மட்டும்தான் இருந்தது. அவள் வெங்காயத்தை பற்றி சொல்லாமலேயே அவனுக்கு விளக்கினாள்.

"இது ஒன்னு நல்லாருக்கே.!" என்றவனை கண்டு மென்மையாக புன்னகைத்தவள் "எனக்கு நிறைய வேலை இருக்கு தம்பி. உனக்கு என் பொண்ணுதானே பிரெண்ட்.? அவளோடு பேசு பழகு. நான் தடை சொல்லல. மனுசங்கன்னா நாலு பிரெண்ட்ஸ் இருக்கதான் செய்வாங்க. ஆனா என்னை நீ இம்சை பண்ணாதே. உன்னால எனக்கு பத்து நிமிசம் வேஸ்ட்.." என்றாள்.

ஆரவ்விற்கு தோற்றுப் போனது போல இருந்தது. "ஆனா ஆன்டி நான் உங்களோடு பேசி பழக ஆசைப்படுறேன்.." என்றவன் தயங்கினான். "நான் உங்க பொண்ணை லவ் பண்றேன் ஆன்டி. கொஞ்ச வருசம் கழிச்சி அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். நீங்க என்னை ஏத்துக்கணும். அதுக்காக நான் எது வேணாலும் செய்வேன்.." என்று உண்மையை சொன்னான்.

வளர்மதி கொஞ்சம் அதிர்ச்சியாகவும் நிறைய வியப்பாகவும் அவனைப் பார்த்தாள். நேர் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். சின்ன பையன். அவளின் மகள் வயதை ஒத்தவன். அம்ருதாவிடம் இருக்கும் திமிர் இவனின் கண்களில் தெரியவில்லை. இளமையின் மகிழ்ச்சியை கொண்டாட பிறந்தது போல இருந்தான்.

அவனின் கையிலிருந்த கட்டைப்பையை வாங்கிக் கொண்டாள்.

"நீ அவளை லவ் பண்றியா.?"

"ரொம்ப ஆன்டி.."

"அவளும் உன்னை லவ் பண்றாளா.?"

"ம். ஆனா என் அளவுக்கு இல்ல.."

சிரித்தாள் வளர்மதி.

"ஆல் த பெஸ்ட்.." என்றவள் அடுத்த கடையை நோக்கி நடந்தாள்.

திகைத்து நின்றிருந்தவன் அத்தையை தேடினான். தூரத்திலிருந்த காய்கறி கடை ஒன்றில் நல்ல வெங்காயங்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

ஓடினான் அவளிடம்.

"ஆன்டி.. உங்களுக்கு ஓகேவா.? என் லவ் ஓகேவா.?" அவளை திருப்பி நிறுத்தி கத்தாத குறையாக கேட்டான். மார்கெட்டிலிருந்த ஒரு சிலர் இவனின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தனர்.

"ம். இதுல தடை சொல்ல என்ன இருக்கு.?" இயல்பாக கேட்டாள்.

ஆச்சரியத்தில் தலை கால் புரியவில்லை அவனுக்கு. என்ன செய்வதென்று புரியாமல் அத்தையையே கட்டிக் கொண்டான். வளர்மதி மறுபடியும் சிரித்தாள்.

"நீங்க என்னை வேணாம்ன்னு சொல்லிடுவிங்களோன்னு நினைச்சேன்.." என்றவனை விலக்கி நிறுத்தினாள்.

"நான் ஒன்னும் பைத்தியம் கிடையாது, எல்லோரையும் வெறுக்க. எனக்கு உன்னை வெறுக்க எந்த ரீசனும் இல்ல. நீ நல்ல பையனா இருக்க. எனக்கு உன் அக்காவை சுத்தமா பிடிக்காது. அவ எப்படியும் எங்க வீட்டுக்கு வர போறது இல்ல. என் பொண்ணு உன்னை லவ் பண்றா. நீயும் அவளை லவ் பண்ற. உங்களை பிரிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு.? ஆனா ஒரே ஒரு கன்டிஷன் இருக்கு. என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கும்போது உன் அக்காவால என் பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு நம்பிக்கை தந்துட்டுதான் கட்டி போகணும்.."

"ஸ்வீட் ஆன்டி.." மீண்டும் அவளை அணைத்தான். அவளுக்கு வெட்கமாக வந்தது அவனின் செய்கைகளை கண்டு.

"என் அக்காவுக்காக என்னை வெறுத்துடுவிங்களோன்னு நினைச்சிட்டேன்.. ஆனா நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கிங்க.." அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்து விட்டு விலகி கொண்டான்.

வளர்மதி வெங்காயத்தை பொறுக்க ஆரம்பித்தாள். அவள் தேர்ந்தெடுப்பது போலவே இவனும் வெங்காயங்களை தேடி எடுத்தான்.

"தம்பி.."

"ஆரவ் ஆன்டி. நீங்க ஆரவ்ன்னு கூப்பிடுங்க."

"ஆரவ் தம்பி.. நான் எந்த காதலுக்கும் எதிரி கிடையாது. கனிமொழியை கண்டுட்டு தேனு பயந்துட்டான்னு நினைக்கிறேன். அவங்களுக்குள்ள லவ் இல்ல தம்பி. சக்தியை பத்தி எனக்கு தெரியும். அவனுக்கு பொய் சொல்ல வராது. அவன் மேல ஆயிரம் கோபம் இருந்தாலும் அவன் எவ்வளவு நல்லவன்னு எனக்கு தெரியும். கடமைக்காக கல்யாண வாழ்க்கை வாழ கூடாது. அவன் எப்பவும் மாற மாட்டான். ஒருநாள் இல்ல ஒருநாள் அவ டைவர்ஸ் வாங்கிட்டு வந்து நிற்பா.. அவ வாழ்க்கைதான் நாசமா போச்சி. இவளாவது சந்தோசமா இருக்கணும்.. உன் அக்காவுக்காக உன்னை வெறுக்க மாட்டேன். மனுசன் ஒவ்வொருத்தரும் ஒரு ரகம். அதுல இன்னொருத்தரோட சாயல் அடிக்காது.." என்றாள்.

ஆரவ்க்கு மீண்டும் அவளை அணைக்க வேண்டும் போல இருந்தது.

"நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கிங்க ஆன்டி.."

இல்லையென தலையசைத்தபடி வெங்காயத்தை காய்காரனிடம் தந்தாள். எடை சரியாக இரண்டு கிலோ இருந்தது. வாங்கி கட்டைப்பையில் கொட்டிக் கொண்டாள். பணத்தை தந்துவிட்டு நகர்ந்தாள்.

ஆரவ் அவளோடு சேர்ந்து ஓடினான்.

"யாரும் நல்லவங்க கிடையாது. அவரவர் பார்வையை பொறுத்தது அது. சக்தியை பொறுத்தவரை நான் ராட்சசி. உனக்கு நல்லவ. ஆனா என் எண்ணம் எப்பவும் ஒன்னேதான். நீ நல்லவன்னு சொல்றதாலோ, அவன் ராட்சசின்னு சொல்றதாலோ நான் நாலடி குறைய போறது இல்ல.." என்றவள் பழக்கடையின் முன்னால் வந்து நின்றாள்.

"சப்போட்டா இரண்டு கிலோ, கொய்யா ஒரு கிலோ கொடுங்க.." என்றவள் அரிந்து வைத்திருந்த மாதுளையின் துண்டு ஒன்றை எடுத்து ஆரவிடம் நீட்டினாள்.

"தேங்க்ஸ்.." என்றபடி வாங்கிக் கொண்டான்.

பழங்களும் கட்டைப் பையில் நிரம்பியது. கைகள் வலித்தது.

"எப்பவும் அர்ச்சனா என்னோடு வருவா.. ஆளுக்கொரு பையை தூக்கிப்போம். இந்த இரண்டு வாரமா அவ என்கிட்ட சரியா பேசுறது கூட இல்ல. எல்லாம் என் புள்ளையால வந்ததுதான்.." என்றவளின் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டான்.

"நீங்க ஒவ்வொரு முறை மார்கெட் வரும்போதும் என்னால ஹெல்ப்க்கு வர முடியாது ஆன்டி. ஆனா இன்னைக்கு நான் தூக்கிக்கிறேன்.." என்றவன் ஆட்டோ ஸ்டேன்டை நோக்கி நடந்தான்.

ஆரவ்வை தலை முதல் கால் வரை அளந்தபடியே பின்னால் நடந்தாள் வளர்மதி. தேன்மொழியையும் இவனையும் சேர்த்து நிற்க வைத்தால் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்கும் என்று தோன்றியது.

அம்ருதாவை நினைத்தாலே வேம்பாக கசந்த அதே மனது இவனை நினைக்கையில் வேப்பம்பூ தேனாக இனித்தது.

ஆட்டோவில் அவளை அமர வைத்து "பாய் ஆன்டி.." என்று கையசைத்தான்.

"ஆன்டியை கரெக்ட் பண்ணியாச்சி.." வெட்கத்தோடு முகத்தை மூடி திறந்தவன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.

***

"உன் மனதின் பாரம் குறைக்க ஓடி வந்து என்னை அணைக்கிறாய்.!
என் வாசத்தை சுவாசம் மூலம் இதயத்தில் நிறைத்து சிறகின் மென்மைக்கு உன்னை மாற்றிக் கொள்ள நினைக்கிறாய்!

அணைத்த நீ என் மேலிருந்து வீசும் உன் வாசம் கண்டு திகைத்து குழம்புகிறாய்!
என் மனதோடு உன் சிந்தையையும்
என் மேனியோடு உன் வாசத்தையும்
பல நாட்கள் முன்பே நிரப்பி விட்டிருந்தாய் நீ!
சந்தேகத்தோடு உன் சட்டை காலரை நுகர்கிறாய்!
நான் சூட்டியிருந்த பூவின் வாசத்தோடும்
நான் சுவைத்திருந்த சப்போட்டாவின் மணத்தோடும் சேர்ந்து காலரில் வீசிக் கொண்டிருக்கிறது எனது வாசம்!

அசடு போல சிரித்து விலகி போகிறாய்!
உன்னில் என்னை சிறை வைத்திருப்பவன் நீயென்ற விசயம் புரிந்து மலர்ந்த நகையோடு நகர்ந்துப் போகிறாய்.!" வாட்சப்பில் அவளுடனான உரையாடலில் நட்சத்திர குறி சேர்த்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த கவிதை ஒவ்வொரு முறை அவன் வாசிக்கும்போதும் அதே வேதனையையும் வலியையும்தான் தந்தது.

உண்மையை அப்படியே எழுதி அனுப்பியிருந்தாள். தேதியை பார்த்தான். கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்வதற்கு ஒரு வாரம் முன்பு அனுப்பியிருந்தது.

புரியவேயில்லை. இரண்டரை வாரத்தில் மொத்தமாக மாறி போவாளா? தலையை பிய்த்துக் கொண்டான் வெற்றி. அவளோடு எப்போதும் அமர்ந்திருக்கும் அதே காப்பி ஷாப்பில் அதே இருக்கையில் அமர்ந்திருந்தான்.

"வெற்றி.."

நிமிர்ந்துப் பார்த்தான்.

பாலாஜி அவனின் முன்னால் வந்து அமர்ந்தான். "அம்ருதாவுக்கு ஏதோ பிரச்சனை.." என்றான்.

'நீ மட்டும்தான் பாக்கி.!' என நினைத்தவன் எதிரில் இருந்தவன் பேசட்டும் என்று காத்திருந்தான்.

"வாரா கடன் கேஸ்ல சிக்கியவனை பிடிக்க போன பிறகுதான் ஏதோ நடந்திருக்குன்னு அவளோட தம்பி சொல்றான். ரொம்ப மாதிரியா இருக்கா. ஆளே வேற மாதிரி, ஒரு ஏலியன் மாதிரி இருக்கா.. போன் உடைஞ்சி இருக்கு. அவ கால்ல ஆணி ஏறியிருக்கு. அத்தோடு வேற ஏதோவும் நடந்திருக்கு.."

வெற்றியால் இதற்கு மேலும் முடியும் என்று தோன்றவில்லை.

"ஆமா நடந்தது. நான் அவளை ரேப் பண்ணிட்டேன்." என்றவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்த பாலாஜி அவன் சொல்வதில் எந்த பொய்யும் இருப்பதாக தெரியாமல் போகவும் ஆத்திரத்தோடு எழுந்து நின்றான். வெற்றி கையூன்றி அமர்ந்திருந்த மேஜையை அவன் மீதே உதைத்து தள்ளினான்.

நாற்காலி எங்கோ போய் விழுந்தது. மேஜையின் அடியில் கிடந்த வெற்றி எழும் முன்பே அவனின் தோளில் மிதித்தான் பாலாஜி. ஷாப்பில் இருந்த சிலர் ஓடி வந்தனர் இவர்களிடம்.

"யாரும் பக்கத்துல வராதிங்க.." விரலை நீட்டி எச்சரித்தான் பாலாஜி.

"டேய் நீ உடைச்சது என் ஷாப்போட சேர் டேபிள்.." என்றபடி வந்தான் கடைக்காரன்.

"அதுக்கான பில்லை இந்த நாய் பே பண்ணும்.. இப்ப கொஞ்சம் விலகிப் போங்க.." என்றவன் சுற்றி இருந்தவர்களை பார்த்தான். "யாரும்‌ போலிஸ்க்கு போன் பண்ணாதிங்க. வேணும்ன்னா ஆம்புலன்ஸ்க்கு கூப்பிடுங்க.."

"விடுடா என்னை.." முனகிய வெற்றியின் அருகே குனிந்து முகத்தில் இரண்டு குத்துகளை விட்டான் பாலாஜி.

"ஏன்டா உனக்கு இவ்வளவு கோபம். அவ எனக்கு வேதனையை தந்தா. பதிலுக்கு நானும் அதையே அவளுக்கு திருப்பி தந்தேன்.." என்றவனின் வாயில் ஒரு குத்து விட்டான். ரத்தம் துளிர்த்து வெளி வந்தது அவனின் வாயிலிருந்து.

"அவ உனக்கு எந்த பாவமும் பண்ணல. அவளுக்கு உன்னை பிடிக்கல. அதனால பிரேக் அப் பண்ணிட்டு போனா. உனக்கு அவளை பிடிக்கலன்னாலும் நீயும் அதையேதான் செஞ்சிருப்ப.."

வெற்றி நகைத்தான். சிரித்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

"அதெப்படிடா‌ அவளுக்கு என்னை பிடிக்காம போகும்.? என்னை எவ்வளவு லவ் பண்ணா தெரியுமா?" என்றவனின் சட்டையை பிடித்த பாலாஜி "அவ அவ்வளவு லவ் பண்ணியும் பிரிஞ்சி போனான்னா அதுக்கு காரணம் நீதான்‌. எதுக்கெடுத்தாலும் அவளை அடிச்சா, அவ என்ன பஞ்சிங் பேக்கா நீ தர அடியையெல்லாம் வாங்கிக்க.?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.

மேலும் அழுதான் வெற்றி.

"நான் அடிச்சதுக்கு சாரின்னு சொன்னேன் இல்ல.? அப்புறமும் ஏன்டா அவ அவ்வளவு பொய் சொல்றா.? என்னை‌ பிடிக்கலன்னு சொல்றா.? நான் அவளோட ஹீரோ இல்லையா.? அவளோட வாழ்க்கை நான்தானே.? என்னை ஒதுக்கி தள்ளிட்டா.. என்னை அனாதையா விட்டுட்டா.."

பாலாஜி கண்களை மூடியபடி தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்.

"குடிச்சிருக்கியா.?" என்றபடி அவனை மேஜையின் அடியிலிருந்து வெளியே இழுத்தான். எந்த வாசமும் வரவில்லை.

"ஏன் உளறுற.?"

"உண்மையை சொல்றேன்டா. அவளோட வலியை மட்டும் அவ்வளவு டீப்பா பார்க்கறியே, என் வலி ஏன்டா உனக்கு தெரியல?"

பாலாஜி தன் கைப்பிடியிலிருந்தவனை தூர தள்ளினான். "உன் கோபத்துக்கான தண்டனையை நீ அனுபவிக்கற. சம்பந்தமே இல்லாம அவளை காயப்படுத்திட்ட. நீ உண்மையிலேயே சைக்கோதான்.." வெறுப்போடு சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலகி போனான்.

"விட்டு போகாதடா. உனக்கு நான் எத்தனை நாள் ஹெல்ப் பண்ணியிருக்கேன்.? குற்ற உணர்வுல இருக்கேன். நாலு அடி கூட சேர்த்து தராம போற.." வெற்றி சொன்னது கேட்டு திரும்பியவன் "உனக்கு அவ்வளவு குற்ற உணர்வா இருந்தா பதினைஞ்சி கிலோமீட்டருக்கு ரேஸ் ஓடு. என்னை விடு. நீ பண்ண அதே தப்பை‌ நானும் செய்ய மாட்டேன்.." என்றுவிட்டு போனான்.

வெற்றி முகத்தை மூடியபடி அதே இடத்தில் நின்றான்.

சற்று நேரத்தில் அங்கே ஓடி வந்தான் முத்துராம். வெற்றி இங்கே இருக்கிறான் என்று பாலாஜிதான் அழைத்து சொல்லியிருந்தான்.

"வெற்றி.." அவனின் வீங்கியிருந்த முகத்தை கண்டு மனம் வருந்தியவன் பணத்தை காப்பி ஷாப் ஓனரிடம் தந்து விட்டு இவனை அழைத்துக் கொண்டு நடந்தான்.

***

பாலாஜி கோபத்தோடு தன் தாத்தாவை தேடி வந்தான். வீட்டிலிருந்த அனைவரும் சேர்ந்து அமர்ந்திருந்தனர்.

"வெற்றிக்கும் பாரதிக்கும் கல்யாண நாளுக்கு தேதி குறிச்சாச்சி பாலா.." என்று முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்க சொன்னாள் கீர்த்தனா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN