காதல் கணவன் 67

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாத்தா காலண்டரை பாலாஜியின் புறம் திருப்பிக் காட்டினார்.

"இன்னையிலிருந்து சரியா முப்பத்திரெண்டாம் நாள் கல்யாணம்.." என்றார்.

பாலாஜிக்கு‌ தடுமாறியது மனது.

போனை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"பாலா எங்கே கிளம்பிட்ட.?" கீர்த்தனா அழைத்து நிறுத்திக் கேட்டாள்.

திரும்பிப் பார்த்தான். 'இவளுக்கு பதில் சொல்லாம போனா அதுக்கு இவ வேற தனியா ஆடுவாளே.!'

சுற்றியிருந்தவர்கள் யாரும் இவனை கண்டுக் கொள்ளவில்லை. "சும்மாதான் கீர்த்து. ஒரு போன் பேசணும்.. பேசிட்டு வந்துடுறேன்.." என்றவன் வெளியே வந்தான்.

பாரதிக்கு அழைத்தான். அவளாக வாரம் ஒருமுறை அழைத்து இவனின் நலம் விசாரிப்பாள். வெற்றியின் காதலி என்ற முறையில் இவனும் பதில் தருவான்.

இன்று இவன் அழைத்ததும் உடனே எடுத்தாள்.

"ஹலோ பாலாஜி.. ஹவ் ஆர் யூ.?" என்றவளிடம் தன் நலம் சொன்னவன் அவள் நலம் விசாரித்து அறிந்தான்.

"பாரதி உங்ககிட்ட நான் ரொம்ப முக்கியமான விசயம் பேசணும்.."

"சொல்லுங்க.."

"என் அண்ணன் வெற்றி அவனோட எக்ஸ் லவ்வரை ரேப் பண்ணிட்டான்.."

எதிரில் இருந்தவள் எதுவும் பேசவில்லை.

"அவன் உங்களுக்கு சீட் பண்ணிட்டு இருக்கான். அவன் உங்களுக்கு தகுதி இல்லாதவன்.. அவனை.." இவன் மேலே சொல்லும் முன் "என்கிட்ட எல்லாத்தையும் அவர் சொல்லிட்டாரு.." என்றாள் அவள்.

"வாட்.?" அதிர்ந்தவனின் அதிர்ச்சியை கண்டுக் கொள்ளாமல் "அவர் செஞ்சது தப்புதான். ஆனா அவர் எனக்கு சீட் பண்ணதா நான் நினைக்கல. அவதான் வேணும்ன்னே இவரை இப்படி மாத்தி விட்டிருப்பா. வெற்றியை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர் ஒரு ஜெம். அவரை மாதிரி கண்ணியமானவரை எங்கேயுமே பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒருத்தர் இவ்வளவு பெரிய தப்பு பண்றார்ன்னா அதுக்கு காரணம் எதிராளியா மட்டும்தான் இருக்க முடியும்.." என்றாள்.

இவள் மீதான புது வெறுப்பு சட்டென்று பாலாஜியின் மனதில் வந்து விட்டது. அம்ருதாவை அமைதியானவள், நல்லவள் என்று ஒத்துக் கொள்ளவில்லை அவன். ஆனால் அதற்காக இவளின் பேச்சு சரியானது என்று தோன்றவில்லை.

"அவளோடு அவர் பேசிட்டாரு. ஆனா அவதான் இவரை ஏத்துக்கல.. அவ இவரை ஏத்துக்க கூடாதுன்னு நான் வேண்டாத தெய்வமே இல்ல. அவங்களுக்குள்ள ஒத்து வராது. வெற்றிக்கு நான்தான் பொறுத்தமானவ.. நீங்க நடுவுல புகுந்து எந்த வம்பும் பண்ணி வச்சிடாதிங்க. அவரை பிடிச்சிருக்கு எனக்கு. அதுவும் ரொம்ப ரொம்ப.."

இதற்கு மேலும் அவளோடு பேசுவது புத்திசாலித்தனமாக தோன்றவில்லை அவனுக்கு.

போனை துண்டித்துக் கொண்டவன் வீட்டை பார்த்தான். இவளுக்கே விளக்க முடியாதபோது அவர்களுக்கு எப்படி விளக்க முடியும் என்று நினைத்தான்.

அம்ருதாவின் முகத்தை நினைத்துப் பார்த்தான். கடைசி முறையாக அவளை பார்த்த காட்சி கண்களில் வலியாக வந்து நின்றது.

அவள் கொஞ்சம் வாயாடி. நிறைய துடுக்குதனம் செய்வாள். அவள் குறும்பை கண்டு இவனுக்கே கூட சில நேரத்தில் எரிச்சல் வரும். மனதில் ஒன்றை கூட மறைக்க மாட்டாள். படபடவென்று பேசி விடுவாள். கல்லூரியில் சாதாரணமாக ஆரம்பித்த நட்பு. கல்லூரி முடிந்த நேரத்தில் நட்பு நெருங்கி விட்டது. வங்கியில் தொடர்ந்த அதே நட்பு அவள் தன் அண்ணனைதான் காதலிக்கிறாள் என்ற விசயம் புரிந்ததும் கொஞ்சம் உரிமையுள்ளதாக மாறி விட்டது.

அன்றே சொல்லி இருக்கலாம் தான்தான் அவனின் தம்பி என்று. ஆனால் அன்றைய நாட்களில் தனது வாழ்க்கையையே வெறுத்து வாழ்ந்தான் பாலாஜி. அதுவும் இல்லாமல் தான்தான் அவனின் தம்பி என்று சொல்லி விட்டால் அதற்கும் அவன் கோபப்படுவானோ என்று தயக்கம் வேறு. நட்பே ரசிக்கும்படி இருந்ததால் அதை தாண்டிய உரிமையை இவனுமே கூட கேட்கவில்லை.

அம்ருதாவுக்கு அழைத்தான். அவள் எடுக்கவேயில்லை.

"பாலா‌‌.." கீர்த்தனா அதற்குள் வந்து விட்டான்.

திரும்பியவனின் முன்னால் வந்து நின்றவள் "உனக்கு என்ன ஆச்சி.? ஏன் ஒரு மாதிரி இருக்க.?" எனக் கேட்டாள்.

நெற்றியை தேய்த்தவன் "அம்ருதா ஒரு வாரமா பேங்க் வரல. இரண்டு மாசத்துக்கு லீவ் எழுதி தந்திருக்கா.." என்றான்.

சம்பந்தமே இல்லாமல் அவளை ஏன் இந்த நேரத்தில் இவன் நினைக்கிறான் என நினைத்தவள் "ஸோ.?" என்றாள்.

"ஸோ இல்ல. வொய்ன்னு கேளு.."

"ஓ.. ஓகே.. வொய்.?"

"உன் நண்பன் என் தோழியை ரேப் பண்ணியிருக்கான்.."

அதிர்ந்தவள் "வெ..வெற்றியா.?" என்றுக் கேட்டாள்.

ஆமென்று தலையசைத்தான்.

வாயை பொத்தியபடி வீட்டை திரும்பிப் பார்த்தாள். வீட்டுக்குள் இருந்த அனைவரும் திருமண நிகழ்விற்கான வேலைகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

"இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? இப்பதான் அவன் பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சேன். அதுக்குள்ள புதுசா ஒன்னை இழுத்துட்டு வந்துட்டான். அம்ருதா வேற சும்மாவே ஆடுவா. இப்ப கேட்கவா வேணும்.." அவளுக்கு எல்லாமே கவலையாக இருந்தது.

பாலாஜி மனைவியை முறைத்தான்.

"அவ ஆடல.. வீட்டோடு முடங்கிட்டா. இந்த விசயம் பாரதிக்கும் தெரிஞ்சிருக்கு. அவளுக்கு வெற்றியை பார்த்தா உத்தம புருசன் மாதிரி இருக்கும் போல. அவனை தாங்கு தாங்குன்னு தாங்கறா.. அம்ருதா மேல பழியை போட்டுட்டு இவனை குழந்தை மாதிரி நினைக்கிறா.. எனக்கு கடுப்பாகுது கீர்த்து. நான் யாரையாவது இப்படி ரேப் பண்ணா நீ என்னை மேரேஜ் பண்ணியிருப்பியா, எவ்வளவு லவ் வேணாலும் இருக்கட்டும். ஆனா ஒருத்தியோட சம்மதம் இல்லாம அவளை தொடுறவன் கண்டிப்பா நல்லவனே கிடையாது.." என்று திட்டினான்.

கீர்த்தனா சற்று நேரம் யோசித்தாள்.

"நான் உன்னை கொன்னிருப்பேன், என்னை தவிர வேற யாரையாவது தொட்டிருந்தா.."

பாலாஜி அவளின் கன்னங்களை அள்ளினான். "ஆனா எப்படி பாரதி ஒத்துக்கறா.. எனக்கு புரியல.."

"எனக்குமே புரியல பாலா. எவ்வளவு லூசுதனமான காதலா இருந்தாலுமே இப்படி அவனோட தப்பை மறந்து ஏத்துக்க சொல்லுமா? ஒருவேளை இவ ராஜா காலத்து ராணியா இருப்பான்னு நினைக்கிறேன். அந்த காலத்து ராணிங்கதான் தன் புருசன் எந்த நாட்டு மேல படையெடுத்துப் போய் பொண்ணுங்களை சிறை பிடிச்சிட்டு வந்து ரேப் பண்ணாலும் தன் வேலையை மட்டும் பார்த்துட்டு சிவனேன்னு இருப்பாங்க.. எனக்கு பாரதியை சுத்தமா பிடிக்கல. ஆளையும் அவ பேரையும் பாரு. ச்சை.. பேரையே கேவலப்படுத்துறா அவ.." என்று முகம் சுளித்து விட்டு வீட்டின் பக்கம் திரும்பி நடந்தாள்.

"வீட்டுல சொல்ல போறியா.?" அவளோடு இணைந்து வந்து கேட்டான் பாலாஜி.

"நான் ஏன் சொல்லணும்.? கருமம். அவளுக்கு அந்த நாயை பிடிச்சிருக்குன்னா என்னவோ பண்ணி தொலையட்டும். ஆனா பாவம் அம்ருதா. அவ பேசியது தப்புதான். அதுக்கு இவன் அவ வாயை கூட உடைச்சி விட்டிருக்கலாம். நான் தப்பே சொல்ல மாட்டேன். இப்படி பண்ணி வச்சிருக்கு பரதேசி புண்ணாக்கு.." எவ்வளவு திட்டியும் கோபம் குறைய மறுத்தது அவளுக்கு.

"அவ உண்மையிலேயே பாவம்தான். இவன் போய் மறுபடியும் கேட்டிருப்பான் போல. அவ கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளாம்.."

"ரேப் பண்ணிட்டா கட்டிக்கணுமா.? லவ் பண்ணும்போதே வேண்டாம்ன்னு சொன்னவ. இதுக்கு ஒத்துப்பாளா.? எவளுமே ஒத்துக்க மாட்டா. பாரதி மட்டும்தான் கூறு கெட்ட குக்கரா இருக்கா.." கைகள் இரண்டையும் இறுக்கினாள்.

"நீ டென்சன் ஆகாதே.." அவளின் தோளை அணைத்து சமாதானம் செய்தான்.

***

சக்தியின் அருகே அமர்ந்திருந்தாள் கனிமொழி. அவன் சொல்லி தரும் பாடத்தை கவனத்தோடு கேட்டுக் கொண்டாள். அவள் விடுப்பு எடுத்துக் கொண்ட நாளில் நடத்திய அத்தனை பாடங்களையும் இவனிடமே கேட்டு அறிந்துக் கொண்டாள்.

அவ்வப்போது அவனின் முகம் பார்த்தாள். அவன் அறிந்திருந்தும் அமைதியாக இருந்தான். அவளை விட்டு பிடிப்பது சரியென்று தோன்றியது.

பாடம் முடியும் தருணம். மின்சாரம் அணைந்து போனது.

"மாமா.." பயத்தில் அழைத்தவளின் கையை பற்றினான்.

மறுகையால் தன் போனிலிருந்த டார்ச்சை இயக்கினான்.

அதே வெளிச்சத்தில் புத்தகத்தை பத்திரப்படுத்தி‌ வைத்தாள்.

வீட்டின் கதவை திறந்துப் பார்த்தான். வெளியே அனைத்தும் இருளாக இருந்தது.

"கொசு கடிக்குது.." அவள் கையை தேய்ப்பதை கண்டு கதவை சாத்தினான். கொசுவர்த்தியை ஏற்றி வைத்தவன் சமையலறையை பார்த்தான்.

தேங்காய் சட்னி அரைத்து தோசை சுட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான். மின்சாரம் மீண்டும் எப்போது வருமோ என்ற யோசனையோடு அடுப்பை பற்ற வைத்து தோசையை சுட ஆரம்பித்தான்.

"தக்காளி கட் பண்ணட்டுமா மாமா?" சிறிது நேரம் கழித்துக் கேட்டாள்.

"ம்ம்.." என்றவன் அவள் அரிந்து தந்த வெங்காயம் தக்காளியை வைத்து சமைத்து முடித்தான். போனின் வெளிச்சத்திலேயே இருவரும் உண்டு முடித்தனர்.

"வேக்காடா இருக்கு. எப்படிதான் தூங்குறதோ.?" சிணுங்கினாள்.

"மொட்டை மாடிக்கு போலாம்.." என்று அவன் சொன்னதும் அவனுக்கும் முன்னால் எழுந்தோடி தலையணையையும் போர்வைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

வெளியே வந்ததும் இருளை கண்டு தயங்கி நின்றாள். தனக்குள் நகைத்தபடி கொசுவர்த்தி சுருளையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டவன், அனைத்து ஸ்விட்ச்களையும் அணைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு படியை நோக்கி நடந்தான்.

மாடியின் நடு மத்தியில் போர்வையை விரித்தான்‌. இரண்டு தலையணைகளையும் சற்று இடைவெளி விட்டு வைத்தான்.

சுற்றிலும் இருந்த இருளை கவனித்துக் கொண்டிருந்த கனிமொழி "மாமா நைட் இங்கே பேய் வருமா.?" எனக் கேட்டாள்.

எதுவும் சொல்லாமல் போன் லைட்டை அணைத்து வைத்தான்.

"ஐய்யோ பேய்.." பயந்தோடி வந்தவள் அவனின் கால் தடுக்கி அவன் மீதே விழுந்தாள்.

"அம்மா.. மூக்கை உடைச்சிட்டா.." போனை தேடினான். அது வேறு சமய சந்தர்ப்பத்திற்கு கிடைக்காமல் எங்கோ ஓடி போய் விட்டிருந்தது.

"சாரி மாமா.." அவனின் மூக்கின் மீது தேய்த்து விட்டாள்.

அவளை தள்ளி விட முயன்றான். அவளே அதற்கும் முன் எழ எத்தனித்தாள். அவனின் இடுப்பில் சிறு பகுதியில் முட்டியை ஊன்றி எழுந்தாள்.

"கொன்னுடுவா போல.." அவள் எழுந்ததும் அவசரமாக எழுந்து இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டான்.

போனை தேடி எடுத்து லைட்டை ஒளிர விட்டான். கனிமொழி ஒருமுறை விழுந்து எழுந்ததிலேயே போர்வையை பாதி கலைத்து விட்டிருந்தாள்.

"வெளியே போடி.." அவளை விரட்டி‌‌ விட்டு போர்வையை சரி செய்தான்.

"இந்த போர்வை இதே மாதிரி இருக்கணுமா மாமா.?" சந்தேகத்தோடு கேட்டபடி மெதுவாக அமர்ந்தாள்.

"ஆமா. இல்லன்னா நீதான் வெறும் தரையில் உருள வேண்டி இருக்கும்.." என்றவன் மறுபக்கம் திரும்பி படுத்தான்.

"இந்த பக்கம் திரும்புங்க.." தலையணையில் விழுந்தபடியே சொன்னாள்.

"ஏன்டி.?"

"பேய் வந்து என்னை பிடிச்சிட்டு போயிடும்.."

"கொடுமை உன்னோடு.." அவள் புறமே திரும்பினான்.

அவனது போனை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

"போனை வை. தூங்கு.."

"கொஞ்ச நேரம் மாமா.." என்றவள் அவன் முறைத்ததையும் கவனிக்காமல் வானவெளியில் இருந்த ஒரு நட்சத்திரத்தை பற்றிய விசயத்தை கேட்க ஆரம்பித்தாள்.

அந்த வீடியோ முடிந்த பிறகு சக்தியை பார்த்தாள். கண்களை மூடியிருந்தான். கைகளை கட்டியபடி உறங்கிக் கொண்டிருந்தவனை லூசோ என்ற எண்ணத்தோடு பார்த்தவள் அவனது போனை தோண்டியெடுத்து ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தாள்.

கவிழ்ந்து படுத்தாள். சமூக வலைதளங்களுக்கு சென்றாள். அவ்வளவாக பயன்படுத்தாமல் இருந்தான். சுப்ரியாவின் நட்பு அழைப்பு முகநூலில் இருந்தது. கடுப்போடு அவளை ப்ளாக் செய்தாள்.

வீடியோ காலில் பேச வெறும் ஐநூறுதான் என்று ஒன்றிரண்டு சேதிகள் வந்திருந்தது. கண்களை கட்டியது அவளுக்கு. என்ன மாதிரியான வீடியோ கால் என்று சொல்லாமலேயே புரிந்தது. அது போல வந்திருந்த மெஸேஜ்களை ரிப்போர்ட் அடித்து விட்டாள்.

'ச்சே.. ஒரு மனுசனை பத்திரமா பாதுகாத்து வைக்க முடியாது போல இந்த உலகத்துல..'

கீச்சகத்தில் ஒரு சில பெண்கள் ஹாய் என்று செய்தி அனுப்பி வைத்திருந்தனர்.

'நோ.. யாரும் என் மாமாவுக்கு ஹாய் அனுப்ப கூடாது..' என்று அனைத்தையும் ப்ளாக் செய்தாள்.

இருக்கும் மற்ற அனைத்து செயலிகளையும் திறந்து பார்த்தாள். அவ்வளவாக யோக்கியவான் என்று சொல்ல முடியவில்லை. இன்ஸ்டாவில் பிரபல மாடல்கள் சிலருக்கு பாலோ தந்து வைத்திருந்தான். கனிமொழிக்கு அடிவயிறு அனலாக காந்தியது. அவர்களையெல்லாம் அன் பாலோ செய்தாள்.

"என் அண்ணனுங்கிட்ட சொல்லி இவரை கொட்டி வைக்க சொல்லணும். அரையும் குறையுமா இருக்கற பொண்ணுங்களோடு இவருக்கு எதுக்கு பிரெண்ட்ஷிப்.?" முனகியபடியே வாட்சப்பை திறந்தாள்.

விஜிதாவிடமிருந்து சில செய்திகள் வந்திருந்தது. தயக்கத்தோடு கொஞ்சம் முன் சென்று படிக்க ஆரம்பித்தாள்.

'கலீல் ஜிப்ரானின் காதல் கவிதைகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு உன் ஞாபகம்தான் வருது சக்தி..' என்று இரண்டு வாரங்கள் முன்பு ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தாள்.

'எனக்கும் ஷேக்ஸ்பியர் படிக்கும் போது உன் ஞாபகம் கண்டிப்பா வந்துடுது விஜி..' என்று செய்தியோடு சேர்த்து இரண்டு சிவப்பு இதய எமோஜிகளையும் அனுப்பி இருந்தான்.

கண்கள் கலங்கியது கனிமொழிக்கு. கீழிறங்கினாள். இரண்டு பேரும் மாறி மாறி காதல் கவிதைகளை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

'the course of true love never did run smooth.. இதை உனக்காக நான் பிரசண்ட் பண்ணணும்ன்னு நினைச்சேன் ஒரு டைம்ல..' என்று இவன் அனுப்பியிருந்தான்.

'நோ பிராப்ளம். நீ இப்ப அனுப்பியதா நான் நினைச்சிக்கிறேன்..' என்று அவள் பதில் தந்திருந்தாள். அதற்கு இவன் இரு நாய்க்குட்டிகள் அணைத்துக் கொள்ளும் ஸ்டிக்கர் ஒன்றை அனுப்பியிருந்தான்.

கனிமொழியின் ஒற்றை துளி கண்ணீர் போனின் திரை மீது விழுந்தது.

'If you love somebody, let them go, for if they return, they were always yours. If they don't, they never were..' போன வாரத்தில் இதை அனுப்பியிருந்திருந்தாள் அவள்.

'லவ் பண்ணா அவங்களை விலக விட கூடாது..‌' என்று கண்ணடிக்கும் ஸ்மைலியோடு பதில் தந்திருந்தான் அவன்.

வீழும் கண்ணீரோடு திரையை கீழே தள்ளினாள். அவளின் கையிலிருந்த போன் பிடுங்கப்பட்டது. திரும்பினாள். சக்தி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

the course of true love never did run smooth ( ஷேக்ஸ்பியர்)- உண்மை காதலின் பாதை எப்போதும் சுமூகமாக செல்லாது.

If you love somebody, let them go, for if they return, they were always yours. If they don't, they never were (கலீல் ஜிப்ரான்)- நீங்க யாரையாவது லவ் பண்ணா அவங்களை போக விட்டுடுங்க. அவங்க திரும்பி வந்தா அவங்க எப்போதும் உங்களோடு இருப்பாங்க. அவங்க வரலன்னா அவங்க உங்களுக்காக இருக்க மாட்டாங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN