காதல் கணவன் 70

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றி தடுமாறி பின்னால் தள்ளி நின்றான். மூக்கு பயங்கரமாக வலித்தது.

"ஆரவ், நீ என்ன பண்ற.?" தேன்மொழி ஓடி வந்து அவனை தூர தள்ளினாள். ஆரவ்வின் கோபம் அவளுக்கு புதிதாக இருந்தது.

"மரியாதையா நீ தூர போ.." என்றவன் அவளை தள்ளி விட்டுவிட்டு வெற்றியின் முகத்தில் மீண்டும் குத்தினான். அவன் ஏன் கோபப்படுகிறான் என்பதை வெற்றியால் யூகிக்க முடிந்தது.

"உங்களை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா.? என் அக்காகிட்ட தப்பா நடந்துக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு.? அவதான் உங்களை பிடிக்கலன்னு அத்தனை முறையும் தெளிவா சொல்லிட்டா இல்ல.? அவ உங்களை கஷ்டபடுத்துற மாதிரி பேசியிருந்தா நாலு அறை கூட தந்திருக்கலாமே. ஏன் அப்படி பண்ணிங்க?" ஆத்திரத்தோடு கேட்டான் ஆரவ். அதனால் இந்த விசயத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அண்ணனுக்கும் அவனுக்கும் இடையில் வந்து நின்றாள் தேன்மொழி. ஆரவ்வை கண்ட பார்வையில் வழக்கத்திற்கு மாறான இளக்காரம் கலந்திருந்தது.

அண்ணனை திரும்பிப் பார்த்து முறைத்தவள் "உனக்கு சூடு சொரணையே இல்லையா அண்ணா.? எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டியா.?" எனக் கேட்டாள்.

வெற்றி தலை குனிந்து நின்றான். அனைத்திலும் எகிறி எகிறி குதிப்பவன். ஏனோ இப்போது நேராக பதில் சொல்ல கூட தயங்கினான். அவனின் உள்ளமே அவனுக்கு எதிராகி விட்டிருந்தது.

ஆரவின் திசைக்கு திரும்பினாள்.

"என் அண்ணனை அடிக்க உனக்குதான் எந்த உரிமையும் கிடையாது ஆரவ். அவங்க இரண்டு பேருக்குள்ள இதுவரை எதுவுமே நடக்காதது போல வந்து சீன் போடுற. உங்க அக்கா அவ்வளவு யோக்கியம் ஒன்னும் கிடையாது. கல்யாணம் கூட பண்ணிக்காம கர்ப்பமானவதானே.! அன்னைக்கு நடந்தது போல இன்னைக்கு ஒரு தப்பு. என் அண்ணனை அடிக்கறதுக்கு பதிலா போய் உன் அக்காவை அடி. அவ இடம் கொடுக்காம எந்த தப்பும் நடந்திருக்காது. அடுத்த பொண்ணோடு நிச்சயம் நடந்த ஒருத்தனோடு தப்பு பண்ண சொல்லுதா அவளுக்கு.?"

தேன்மொழியை அனல் விழிகளாக பார்த்தவன் "உன் அண்ணன் என் அக்காவை ரேப் பண்ணி இருக்கான்.." என்றான்.

"அதனால என்ன.? ஏற்கனவே எல்லாம்‌ நடந்துதானே இருக்க.? இதனால உன் அக்கா ஒன்னும் நாலு அடி குறைஞ்சிட போறது இல்லையே.!" மனதில் பட்டதை மறைக்காமல் கேட்டாள்.

அவளை நோக்கி கையை விசிறினான் ஆரவ். ஆனால் கன்னத்தை தொடாமல் கையை இறக்கினான். பற்களை அரைத்தான். கோபம் உடம்பு முழுக்க இருந்தது. ஆனாலும் அவளிடம் காட்டாமல் இருந்தான்.

ஆரவ்வை கண்டு வெற்றிக்கு ஆச்சரியமாக இருந்தது. இது போல தன்னால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

"பெண்ணா பிறந்த உனக்கே இவ்வளவுதான் அறிவு. அப்புறம் அவர்கிட்ட நான் என்னத்தை எதிர்பார்க்கிறது.?" கசப்பாக கேட்ட ஆரவ் "விருப்பம் இல்லாத ஒருத்தியை தொடுறது கோழைத்தனம். அதை விட வலுக்கட்டாயப்படுத்துறது மோசமான செயல். உன் அண்ணனை ரொம்ப ரொம்ப மதிச்சேன். எல்லாமே உடைஞ்சிடுச்சி இப்ப.. நீ அதை விட முட்டாள்.. என் அக்கா உன் அண்ணனை திட்டியது தப்பே இல்லன்னு இன்னைக்கு புரியுது.. இனி எப்பவும் என்னை தேடி வந்துடாத நீ. உன்னைப் பத்தி இன்னைக்கு நல்லா புரிஞ்சிக்கிட்டேன்." என்றவன் அவளை முறைத்து விட்டு அங்கிருந்து போனான்.

அவன் சொல்லிப் போனது அவளுக்கு பெரியதாக தெரியவில்லை.

கோபத்தோடு அண்ணனிடம் வந்தாள். அவனின் மூக்கிலிருந்து லேசாக ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. தனது துப்பாட்டாவை எடுத்து அவனது மூக்கை அழுத்தினாள். அண்ணனின் காயத்தை கண்டு லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது. வியர்த்து வழிந்த அவளின் முகத்தைப் பார்த்தவன் எதையோ சொல்ல முயன்றான். ஆனால் அதற்குள் அவர்களிடம் திரும்பி வந்தான் ஆரவ்.

"லாஸ்ட் வார்னிங். நீங்க இனி என் அக்காவோட திசை பக்கம் கூட வந்துடாதிங்க. மீறி வந்தா கொன்னுடுவேன் நான்.." என்று மிரட்டி விட்டு போனான்.

"அவன் அக்கா என்னவோ யோக்கியம்ங்கற மாதிரியே பேசுறான்.. என் அண்ணன்கிட்ட வழியும்போது அவளுக்கு நல்லா இருந்ததா.? எங்க அண்ணனை கழட்டி விட்டுட்டதும் இன்னொருத்தனோடு திரிஞ்சிட்டு இருந்தவதானே.? எத்தனை பேர்கிட்ட லவ்ன்னு சொல்லி தப்பு பண்ணாளோ.? யாரோட விரலும் மேலே பட‌ விடாத பத்தினிக்கு தம்பி மாதிரி வந்து அடிக்கிறான்.." என்று திட்டினாள் தேன்மொழி. அவளுக்கு ஏனோ ஆத்திரம் அடங்க மறுத்தது. தன் அண்ணன் முன் ஒப்பிடும்போது அம்ருதாவுக்கு துளியும் கூட மதிப்பு‌ தர தோன்றவில்லை அவளுக்கு.

"அவளை தப்பா பேசாத.." மூக்கை அசக்கியபடி சொன்னான் வெற்றி.

"உனக்கும் சொரணையே இல்ல.. ஊர்ல உனக்கு வேற பொண்ணா கிடைக்கல. அதுதான் பாரதி இருக்காங்க இல்ல. அப்புறம் ஏன் இவகிட்ட போற.? விபச்சாரிக்கும் அவளுக்கும் நடுவுல எந்த வித்தியாசமும் இல்ல.."

"தேனு.." அதட்டினான்.

தேன்மொழி அவனை முறைத்தாள். "ஏன் என்னை அதட்டற.? அவளை போல ஒருத்திக்கிட்ட போறதுக்கு பதிலா நீ அந்த மாதிரி இடத்துக்கு கூட போயிட்டு‌ வரலாம். இரண்டுமே ஒன்னுதான்.‌"

"உனக்கு எதுவும் தெரியாது பாப்பா. அவ தப்பானவ கிடையாது.." கடின குரலில் சொன்னான்.

"அந்த பத்தினி உன்கிட்ட வந்து இதை சொன்னாளா.?" மூக்கு சிவக்க கேட்டாள்.

"ம்ப்ச்.." அவளின் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்தான்.

"இந்த இதயம் சொல்லும்.."

"த்தூ.." கையை பின்னுக்கு இழுத்தாள்.

"இதுக்கு பேர் எச்சத்தனம் அண்ணா‌."

தங்கையின் வாயிலிருந்து இப்படி கூட வார்த்தைகள் வருமென்று இன்றேதான் அறிந்தான் இவன்.

சிரித்தான்.

"இன்னொரு முறை இப்படி பண்ணாத.. பாரதி அண்ணி உன்னை ரொம்ப லவ் பண்றாங்க. அவங்களை ஏமாத்தாத.." என்றவள் அவனின் சிரிப்பு மாறாமல் இருப்பது கண்டு "உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல. ரோசம் கெட்டவனே.!" என்று திட்டிவிட்டு போனாள்.

வெற்றி அதே ஆற்றங்கரையில் அமர்ந்தான். இதயத்தின் வலியை தாங்க முடியாமல் மனதுக்குள் விம்மினான்.

அவளை மறந்து விட வேண்டும் என நினைத்து ஆற்றில் குதித்தான். வெகு நேரம் குளித்து விட்டு வந்தான். அவளையே தலை முழுகியதாக எண்ணிக் கொண்டான்.

***

இரவில் உணவை சமைத்து விட்டு இரண்டு தட்டுகளில் பரிமாறினான் சக்தி. கனிமொழி வீட்டிற்கு வந்ததிலிருந்தே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டேதான் இருந்தாள்.

"சாப்பிட வா.." தட்டுகளை கொண்டு வந்து வைத்தான். சாப்பிட ஆரம்பித்தான்.

"எனக்கு வேணாம்.."

"அதை முன்னாடியே சொல்றதுக்கு உனக்கு என்ன.? உன் கண் முன்னாடிதானே சமைச்சேன்.?" திட்டினான்.

கனிமொழிக்கு அழுகை பொங்கியது.

அவன் அதற்கு மேல் கண்டுக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"தப்பு செஞ்சிட்டு ஒரு சாரி கேட்டிங்களா நீங்க.?"

உப்பென்று காற்றை ஊதியபடி நிமிர்ந்தவன் "நீ என்ன லூசா? நான் என்ன தப்பு செஞ்சேன், சாரி கேட்க.?" எனக் கேட்டான்.

"இன்னொருத்திக்கு கவிதை அனுப்புறது தப்புதான். இன்னொரு முறை நீங்க அப்படி செஞ்சா அப்புறம் நான் போய் போலிஸ்ல புருசன் கொடுமைன்னு கம்ப்ளைண்ட் தருவேன்.."

'குட்டி சாத்தான்..' கடுப்போடு நிமிர்ந்தான்.

"இந்த அளவுக்கு அடமென்டா இருக்காத கனி. நான் என்ன செய்யணும்ன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல.."

கனிமொழி எழுந்து நின்றாள். அவனை தாண்டி சென்றாள். கதவை திறக்க முற்பட்டாள்.

"என்ன பண்ற.?"

"வீட்டுக்கு போறேன். உரிமை இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை.?" தாழ்பாளை திறந்தாள்.

"இந்த நேரத்துக்கா.?" இருளை வெறித்து விட்டு கேட்டவன் "வீட்டுக்கு போனா அம்மாவும் அத்தையும் உன்னை தொடப்பக்கட்டையால வெளுப்பாங்க.." என்று நினைவுப் படுத்தினான்.

"நான் போய் அடியே வாங்கிக்கிறேன். நீங்க எனக்கு தர கஷ்டத்தை விட அது பெரிய கஷ்டம் இல்ல.." வெளியே போனாள். அவனின் கண்களிலிருந்தும் மறைந்துப் போனாள்.

சிரமப்பட்டு சில நொடிகளை கடந்த சக்தி எழுந்து ஓடினான்.

அவர்களின் வீட்டை இணைத்த சாலையின் அடுத்த வளைவில் திரும்பிக் கொண்டிருந்தாள்.

கண்ணீரை துடைத்தாள் கனிமொழி. நடந்தே செல்வது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் சக்தியோடு இருப்பது பிடிக்கவில்லை.

"பாப்பா.." அவள் முன்னால் வந்து நின்றான்.

"அங்கே வேணாம். நம்ம வீட்டுக்கு போகலாம் வா.." கையை பிடித்தான்.

"நீங்க அவளுக்கு மெஸேஜ் அனுப்ப மாட்டேன்னு சொல்லுங்க.."

"சரி.." கண்களை மூடி சொன்னான். இறங்கி போவது போலிருந்தது. இவளிடம் ஏன் எப்போதும் இறங்கிப் போகிறோம் என்று எரிச்சலானான்.

"அவளோடு எப்பவும் பேச கூடாது.." அவன் சொன்னதும் பற்களை அரைத்தவன் "அவ என் பிரெண்ட். காலேஜ்மெட்.. கூட வேலை செய்றவ. அவளோடு எப்படி என்னால பேசாம இருக்க முடியும்.?" எனக் கேட்டான்.

கனிமொழிக்கு நெஞ்சம் விம்மியது.

"அவளோடு உங்களுக்கு இவ்வளவு கனெக்சனா.?" அழு குரலில் கேட்டவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீடு நோக்கி போனான்.

"அவளோடு கொஞ்சி பேசாம இருங்கிங்களா.?" கெஞ்சலாக கேட்டாள்.

"ம்ம்.."

உணவை உண்டு விட்டு உறங்க போனாள்.

"மாமா எனக்கு தனியா தூங்க பயமா இருக்கு. உங்க பக்கத்துல தூங்கட்டா.?" தலையணையை நெஞ்சோடு அணைத்தபடி அவன் காலடியில் வந்து நின்றுக் கேட்டாள்.

எழுந்து அமர்ந்தான். மூக்கின் மீது கோபம் வந்தது.

"வீட்ல இருந்த வரை தனியாதானே தூங்கின.?"

"இங்கே பயமா இருக்கு மாமா. அந்த ஜன்னல் வழியா பார்த்தாலே பயமா இருக்கு. என் ரூம்ல இருக்கும் ஜன்னலை நான் எப்பவும் திறக்கவே மாட்டேன். இங்கே இந்த ஜன்னல் அடிக்கடி அதுவா ஓபன் ஆகிடுது. பேய் வருமோன்னு பயமா இருக்கு மாமா.." என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் அருகிலேயே தலையணையை எறிந்தாள். அவன் முறைப்பதை கவனிக்காதவள் போல படுத்துக் கொண்டாள்.

"பாப்பா.."

"போ மாமா. நான் தூங்கறேன்.."

தலையெழுத்து என நினைத்து தள்ளி படுத்தான். நல்லவேளையாக அதற்காவது சுதந்திரம் தந்தாளே என்று இருந்தது.

'எப்படிதான் இவளுக்கு என் மேல லவ் வந்ததோ.?' தன்னிடமே கேள்வி கேட்டு புலம்பினான்.

***

கனிமொழி கல்லூரிக்குள் நுழைந்த நொடியே அவளை தேடி ஓடி வந்தான் வசந்த்குமார்.

"காலங்காத்தால இவன் முகத்துலயா விழிக்கணும்.?" சலித்துக் கொண்டாள்.

"கனி நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க. பார்லர் போய்ட்டு வந்தியா.?" என விசாரித்தவன் தன்னிடமிருந்த மில்கி பாரை அவளிடம் நீட்டினான்.

"நான் பார்லர் போகல. எனக்கு இந்த சாக்லேட் வேணாம்‌.." வகுப்பறை நோக்கி நடந்தாள்.

"என் மேல இன்னமும் கோபமா கனி.? சாரி. நான் செஞ்சது தப்புதான்.."

"எனக்கு வேலை இருக்கு வசந்த். நீ போய் உன் வேலையை பாரு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத.."

"பிரெண்டுன்னு சொன்ன.?" அவளை மறித்து நின்றுக் கேட்டான்.

பெருமூச்சு விட்டவள் தலையை பிடித்தாள்.

"பிரெண்டுன்னா எப்பவும் ஒட்டிக்கிட்டே திரிய முடியாது இல்லையா.?"

"ஓகே. மதியம் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.." என்றவன் அவளின் பதிலை எதிர் பார்க்காமல் ஓடினான்.

"இதென்ன இம்சை.?" என்று கடுப்பானாள் அவள்.

மொட்டை மாடியிலிருந்த தண்ணீர் தொட்டியின் கீழே அமர்ந்திருந்தாள் சுப்ரியா. அவளின் மடியில் படுத்திருந்தான் வசந்த்குமார்.

"என்ன சொல்றா அவ.?" அவனின் தலையை வருடி விட்டபடி கேட்டாள்.

"ரொம்ப சீன் போடுறா.. அவளை கவுக்க ரொம்ப நாள் ஆகும் போல.." சலிப்போடு சொன்னான்.

"நான் சொல்ற மாதிரி நீ அவளை செய். நான் உனக்கான பரிசை தரேன்‌.." அவனுக்கு உதட்டில் ஒரு முத்தத்தை தந்து விட்டு சொன்னாள்.

வசந்த்குமாரின் முகத்தில் நூறு வாட்ஸ் பல்ப் எரிந்தது.

"ஓகே டார்லிங்.." என்றவன் மறுநாள் கல்லூரிக்கு வந்ததும் கனிமொழியின் முன்னால் வந்து நின்று கடிதம் ஒன்றை நீட்டினான்.

கனிமொழி கடிதத்தை வாங்காமல் அவனைப் பார்த்தாள்.

"என்ன இது.?"

"சும்மா ஒரு கவிதை டிரை பண்ணேன். உன்னை நினைச்சி எழுதினேன்‌.."

"எனக்கு வேணாம்.." கனிமொழி சட்டென்று மறுத்து விட்டாள்.

"படிச்சி பாரேன்.."

"வேணாம்.." சத்தமாக சொன்னாள்.

"என்னாச்சி கனி.?" வகுப்பில் இருந்த மற்றொரு மாணவன் கேட்டான்.

"ஒன்னுமில்ல.." என்றவளை முறைத்தவாறு வந்து தனது இருக்கையில் அமர்ந்தான் வசந்த்குமார்.

"மாட்டாமலா போயிடுவ.?" கருவினான் தனக்குள்.

சக்தி தனது காரில் ஏறினான்.

"சார்.." அவனின் கார் கதவை தட்டினாள் சுப்ரியா.

எரிச்சலோடு ஜன்னலை கீழிறக்கினான்.

"சார் எங்க அப்பா இன்னைக்கு இங்கே வர முடியல. என்னை பஸ் ஸ்டாப்ல கொஞ்சம் ஸ்டாப் பண்ணிடுறிங்களா, ப்ளீஸ்.?" கெஞ்சலாக கேட்டாள்.

"பஸ் ஸ்டாப் இங்கேதானே இருக்கு.?" வாசலை கை காட்டினான்.

"இல்ல சார். எங்க ஏரியாவுக்கு போற பஸ் அடுத்த ஸ்டாப்போடு திரும்பிடும். சிரமம் பார்க்காம என்னை கொஞ்சம் டிராப் பண்ணிடுங்க சார். ப்ளீஸ்.." என்றவள் அவன் பதில் சொல்லும் முன்பே காரில் ஏறி விட்டாள்.

வேறு வழி இருப்பதாக தெரியவில்லை அவனுக்கும். தலையசைத்த வண்ணம் காரை எடுத்தான்.

வீட்டிற்கு வந்த சக்தி வாசலில் அமர்ந்திருந்த கனிமொழியை கண்டதும் குழம்பிப் போனான்.

"என்னாச்சி உனக்கு.?" அவளின் நெற்றியை தொட போனான். அவனின் கையை தூர தள்ளி விட்டாள். கோபத்தோடு எழுந்து நின்றவள் காரின் அருகே சென்றாள். தரையில் கிடந்த இரும்பு பைப் ஒன்றை எடுத்து காரின் மீது அடித்தாள். ஜன்னல் கண்ணாடி சிதறி விழுந்தது.

"பாப்பா.." கத்தினான் அவன்.

பற்களை கடித்துக் கொண்டிருந்தவள் காரின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்து தள்ளினாள்.

மறு பக்கத்திற்கு அவள் சென்ற நேரத்தில் சக்தி அவளை நெருங்கி விட்டான். அவளின் கையிலிருந்த கம்பியை பிடுங்கியவன் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN