காதல் கணவன் 71

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கன்னத்தை பிடித்துக் கொண்டு நிமிர்ந்த கனிமொழி "நீங்க ஏன் அவளை கார்ல ஏத்துனிங்க.?" எனக் கேட்டாள்.

"யாரை.?" சக்தி அதட்டலோடு கேட்டான். அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு அவளின் தலையை உடைக்க வேண்டும் போலிருந்தது. எவ்வளவு திமிர் இவளுக்கு என்று கடுப்பாக இருந்தது.

"சுப்ரியாவை ஏன் இந்த கார்ல ஏத்துனிங்க.?" அவனின் சட்டையை பிடித்து கேட்டாள்.

அவளின் முகத்தில் இருந்த கோபம் அவனுக்கும் கோபத்தைதான் தந்தது. அவள் சட்டையை பிடித்திருந்தது வேறு அவனின் கோபத்தை இன்னும் அதிகமாக்குவது போல இருந்தது.

அவனை இதுவரை யாரும் இந்த அளவிற்கு சட்டையை பிடித்து கேள்வி கேட்டதே கிடையாது. அவளுக்கு அடிமையை போல தன்னை நினைத்துக் கொண்டாள் போல என்று நினைத்து ஆத்திரம் கொண்டான்.

அவளின் கையை பிடித்து சட்டையிலிருந்து‌ விலக்கியவன் அவளையும் சேர்த்து பின்னால் தள்ளினான்.

"உனக்கு என்னடி பிரச்சனை.?" அவனின் கத்தலில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒருவர் வாசலை தாண்டி உள்ளே வந்தார்.

"என்னாச்சி பாப்பா.?" என்று கனிமொழியிடம் கேட்டனர். அவர்களின் பார்வைக்கு அவள்தான் இளிச்சவாய் போல தோன்றியிருக்கும் என்று அவனாலுமே யூகிக்க முடிந்தது. ஊர் பார்க்க இப்படி சீன் போடுகிறாளே என்று வெந்தது மனது.

"சும்மாதான் அண்ணா.. நீங்க போங்க.." என்றவள் சக்தியை முறைத்து விட்டு வீட்டுக்குள் போனாள்.

வழிப்போக்கர் சக்தியை ஏதோ போல பார்த்துவிட்டு போனார்.

"ம்ப்ச்.." காரை கண்டு அவனுக்கு வருத்தமாக இருந்தது. இதுவரை ஒரு கீறல் கூட விழ விட்டதில்லை. இத்தனை நாளும் அவ்வளவு பத்திரமாக பார்த்து வந்திருக்கிறான்.

பாத்திரம் ஒன்று விழும் சத்தம் கேட்டு அவசரமாக ஓடி வீட்டுக்குள் புகுந்தான்.

சமையலறையில் நின்றிருந்தாள் கனிமொழி. பாத்திரம் ஒன்று அவள் காலடியில் கிடந்தது. இன்னொரு பாத்திரம் அவளின் கையில் இருந்தது.

"பாப்பா லாஸ்ட் வார்னிங். பாத்திரத்தை தூக்கி வீசுறதெல்லாம் எனக்கு சுத்தமா செட் ஆகாது. நான் ஏற்கனவே கோபத்துல இருக்கேன். நீ இன்னும் அதிகமா ஆடாத. அப்புறம் நான் திருப்பி ஆட ஆரம்பிச்சா உன்னால தாங்கவே முடியாது. இந்த மாதிரி விசயத்துலயெல்லாம் நான் நல்லவன் கிடையாது.. ஒரு வாரத்துக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகணும்ன்னு முடிவு பண்ணியிருந்தா மட்டும் அந்த பாத்திரத்தை உடை.." என்றான் மிரட்டலாக.

அவனின் கண்கள் உருளுவது கண்டும், அவனின் வார்த்தையிலிருந்த மிரட்டல் கண்டும் அவளில் முதுகு தண்டில் பய உணர்வு ஒன்று ஓடியது. கால்களில் நடுக்கம் உருவாகி‌விட்டது.

பாத்திரத்தோடு தரையில் அமர்ந்தாள். முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழுதாள்.

"போச்சுடா.. இந்த அளவுக்கு என்னை இம்சை பண்ண இவளால மட்டும்தான் முடியும். இவளை பத்தி சரியா தெரியாம இந்த ஆத்துல இறங்கிட்டேன்.." முணுமுணுத்தவன் வாசலை பார்த்தான். கொட்டிக் கிடந்த கண்ணாடி சில்லுகளை பார்க்கும்போது துளி கூட பரிதாபம் வர மறுத்தது.

"நீங்க அவளோடு பேசாம இருங்க.."

அவள் புறம் திரும்பி முறைத்தான்.

"நான் உனக்கு அடிமை கிடையாது கனி. எந்த பொண்ணோடையும் பேச கூடாதுன்னு கன்டிஷன் போட உனக்கு எந்த உரிமையும் கிடையாது. என் பிரெண்ட் விஜிதாவோடு பேச கூடாதுன்னு சொல்ற. இன்னைக்கு ஸ்டூடன்ட் கூடவும் பேச கூடாதுன்னு சொல்ற. நீ பண்றது என்ன தெரியுமா.? கன்ட்ரோலையும் தாண்டிடுச்சி உன் செய்கை இப்ப. உன்னை இந்த அளவுக்கு வெறுப்பேன்னு நான் நினைச்சதே இல்ல.. ச்சை.." வீட்டை விட்டு வெளியே போனான்.

கனிமொழி அதே இடத்தில் அமர்ந்து வெகுநேரம் அழுதாள்.

***

"உடலாக நீ இருந்தால் உயிராக நான் இருப்பேன்.."

"கவிதை அருமை.." கடுப்பை மறைத்தபடி கைகளை தட்டினாள் கீர்த்தனா.

கட்டிலில் இருவரும் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர். நோட் ஒன்றை மடியில் வைத்திருந்தான் பாலாஜி. அதில் எழுத எழுத கவிதையை சொல்லிக் கொண்டிருந்தான்.

"இப்ப பாரு.. நைன்டீஸ் கிட்டா நீ இருந்தால் ஐஸ்க்ரீம் டப்பாவோட மூடியா நான் இருப்பேன்.."

"ஸ்ஸ்.." கண்களை மூடி பற்களை கடித்தவள் ஆத்திரம் தணித்து விழிகள் திறந்தாள்.

"த்தூ.. இது கவிதையா.?"

"சரி அதை விடு. பேங்காக நீ இருந்தால் பணமாக நான் இருப்பேன்.."

'விட மாட்டான் போலயே..' என நினைத்து கவலைப்பட்டவள் "இப்ப நானே சொல்றேன் கேளு. சலானாக நான் இருந்தால் எழுத படிக்க தெரியாதவனாக நீ இருப்பாய். ஏ.டி.எம்மாக நான் இருந்தால் ஜீரோ பேலன்ஸ் டெபிட் கார்டா நீ இருப்ப.." என்றாள்.

அதிர்ந்தவன் "என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட.?" என்றான் முகம் வாடியபடி.

"பின்ன என்னடா.? பொண்டாட்டி குத்துக்கல்லு மாதிரி இருக்கேன். நீ பாட்டுக்கு கவிதையை சொல்லிட்டு இருக்க. எனக்கு கவிதையை செயல்ல சொல்றவன்தான் புருசனா வேணும்.." என்றவள் எழுந்து நின்றாள். அங்கிருந்து செல்ல முயன்றாள்.

"நோ சான்ஸ்.." அவளை இழுத்து நிறுத்தினான்.

"இந்த சேலையை கொஞ்சம் கீழே இறக்கு.." என்றான் இடுப்போரம் சுற்றியிருந்த புடவையை சுட்டி காட்டி.

ஜன்னலை பார்த்தாள். இன்னமும் வெளிச்சம் கொஞ்சமாக இருந்தது.

"இந்த நேரத்துக்கா.?"

"எப்பவும் அதே யோசனையில் இருக்காத. இங்கே ஒரு கவிதையை எழுதணும்ன்னு ரொம்ப நாளா ஆசை.." என்று அவளின் இடுப்பு பகுதியில் விரலை குத்திச் சொன்னான்.

"இங்கேயா.?" குழப்பத்தோடு புடவையை சற்று கீழிறக்கினாள். ஓடிச் சென்று பேனாவை எடுத்து வந்தான். இடது பக்க இடுப்பின் கீழே இருந்த எலும்பின் மீது எதையோ அழுத்தமாக எழுதினான்.

"ஐயோ கூசுது.." நெளிந்தவளை நகர விடாமல் கால்களால்‌ பூட்டிட்டான்.

முழுதாக எழுதி விட்டுதான் விட்டான். கூச்சத்தால் அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது.

"அப்படி என்ன கவிதைதான் எழுதி இருக்க.?" குழப்பத்தோடு இடுப்பைப் பார்த்தாள். பாலாஜி என்று எழுதியிருந்தான்.

நிமிர்ந்து முறைத்தாள்.

"இதை விட அழகான கவிதையை எங்கே போய் தேடுவ.?" என்றான் புருவம் உயர்த்தி.

"கொல்றான்.." முனகியவள் அவன் கையிலிருந்த பேனாவை பிடுங்கினாள்.

"இப்ப என் பேரை எழுதுறேன்.." என்றவள் அவனின் சட்டையை பிடித்து இழுத்தாள் மொத்த பட்டன்களும் கழன்றுக் கொண்டது. அவனை பின்னால் சாய்த்தாள். அவனின் இதயத்துக்கு மேலே கீர்த்தனா என்று எழுதினாள்.

பற்களை கடித்தபடி படுத்துக் கொண்டிருந்தான்.

"கூசுதுன்னு நான் சொன்னேன். நீ கேட்டியா.?" என்று நாக்கை நீட்டி பழித்தவள் அவனின் வயிற்றில் பேனா முனையை வைத்தாள்.

"ஐயோ வேணாம் கீர்த்து. சத்தியமா முடியாது. நான் வேணா சாரி கேட்கறேன். விட்டுடுடி.."

அவள் எங்கே விட்டாள்‌.? அவனின் வயிறு, இடுப்பு, முதுகு, தோள்பட்டை, பாதம் என்று அவள் எழுத நினைத்த அத்தனை இடத்திலும் எழுதி விட்டுதான் அவனை விட்டாள்.

நொந்து நூலாகி எழுந்து நின்றான் பாலாஜி.

"செமையா இருந்தது இல்ல.? ஒன்னு செய்யலாம். வர ஞாயித்து கிழமை பேர் எழுதி விளையாடுற விளையாட்டு விளையாடலாம்.. உன் உடம்புல இன்ச் பை இன்சா என் பேரால எழுதி நிரப்பிடுறேன்.." கண்களை நிறைத்த கர்வத்தோடுச் சொன்னாள்.

அவளை நகைப்போடுப் பார்த்தவன் "விளையாட்டுக்கு‌ நான் ரெடி. பார்க்கலாம் உன்னையும்.." என்றான்.

'என்ன நக்கல் ஜாஸ்தியா இருக்கு!? அவனை விட நாம எப்பவும் லீட்ல இருக்கணும்‌..' தன்னிடமே சொல்லிக் கொண்ட கீர்த்தனா "சரி.." என்றாள்.

***

இரவு வந்து விட்டது. கனிமொழி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தாள். அழுது சிவந்த கண்கள் இரண்டும் எரிந்தன. விளக்கை ஒளிர விட்டாள்.

கடிகாரம் பார்த்தாள். மணி இரவு எட்டை தாண்டி விட்டிருந்தது.

தயக்கத்தோடு வெளியே வந்தாள். வாசலைப் பார்த்தாள். கார் அதே போல இருந்தது. கேட் திறந்திருந்தது. சுற்றிலும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. எங்கு பார்த்தாலும் இருட்டு. பேய் வந்து விடுமோ என்று பயமாக இருந்தது.

பயத்தோடு வாசற்படியின் மீது அமர்ந்தாள். தன்னை தானே கட்டிக் கொண்டாள். வைத்த கண் வாங்காமல் சாலையை பார்த்தாள்.

கொஞ்சம் அதிகமாகவே கோபம் கொண்டு விட்டோமோ என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

சுப்ரியாவை பற்றி நினைக்கையில் ஏதோ பயம் நெஞ்சில் உருவாகியது. தன் கண்ணீரில் இன்பம் காணும் அவள் இவனையும் தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்று பயந்தாள். வெகுநேரம் தயங்கியவள் பிறகு எழுந்துச் சென்று காரை சுற்றி இருந்த கண்ணாடிகளை சுத்தம் செய்தாள்.

"சாரி.. நான் வேணும்ன்னு உன்னை உடைக்கல. சுப்ரியா ரொம்ப கெட்டவ. அவளுக்கு நீ இடம் தரலாமா?" எனக் கேட்டு காரின் மீது சின்னதாக கொட்டு வைத்தாள்.

இரவு மணி பதினொன்று தாண்டி விட்டது. அவளின் கணவன் இன்னும் வந்திருக்கவில்லை.

"எங்கேயாவது ஓடி போயிட்டாரா.? ஒருவேளை சூஸைட் பண்ணிட்டாரோ.? உங்க காரை ரெடி பண்ணி தந்துடுறேன் மாமா. பத்திரமா திரும்பி வந்துடுங்க.." என்று காற்றோடு புலம்பினாள்.

மணி பன்னிரெண்டை நெருங்கியது. கொட்ட கொட்ட விழித்திருந்தவள் கேட் திறக்கப்படும் சத்தத்தில் நிமிர்ந்தாள். சக்தி உள்ளே வந்தான்.

எழுந்தவள் ஓடி சென்று அவனை கட்டிக் கொண்டாள்.

"சாரி மாமா. இனி உங்க பேச்சை கேட்கறேன். தனியா விட்டுட்டு போகாதிங்க.." என்றாள் அவனின் முகம் பார்த்து.

எதுவும் பேசாமல் அவளை விலக்கி நிறுத்தியவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அடுப்படி அப்படியே இருந்தது. ஓரக்கண்ணால் கவனித்தவன் தான் வழக்கமாக உறங்கும் இடத்தில் படுக்கையை விரித்து கவிழ்ந்து படுத்து கண்களை மூடினான்.

"மாமா சாரி.." கதவை தாழிட்டு விட்டு வந்து அவனின் காலடியில் அமர்ந்துக் கொண்டு கெஞ்சினாள் கனிமொழி.

"காரை உடைச்சது தப்புதான் சாரி. எனக்கு அந்த பொண்ணை சுத்தமா பிடிக்காது மாமா. அவ ரொம்ப கெட்டவ. அவளை உங்களோடு பார்த்ததும் எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சி.. அவ கெட்டவ மாமா.."

செவிடன் போல படுத்திருந்தான்.

அழ தோன்றியது. அழுதால் மறுபடியும் வெளியே ஓடி விடுவானோ என பயந்து உள்ளுக்குள் கரைந்தாள்.

"மாமா.." அவனின் காலை சுரண்டினாள். காலை இழுத்துக் கொண்டான். அன்று இரவு முழுக்க அவன் இறங்கவே இல்லை.

காலையில் கண் விழித்த சக்தி தன் காலடியில் படுத்திருந்த கனிமொழியை கண்டுவிட்டு பற்களை கடித்தான்‌. "செல்லம் கொடுத்தே கெடுத்துட்டாங்க. முதல் தப்பு என் மேலதான். இவளுக்கு அதிகமா செல்லம் தந்ததே நான்தான். அதுதான் இப்ப என்னையே பழி வாங்குது.." மெல்லிய குரலில் திட்டிவிட்டு எழுந்து போனான்.

அவன் குளித்து விட்டு வந்தபோது அவள் சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

அவன் கல்லூரிக்கு கிளம்பினான். அவள் வரவில்லை.

சுப்ரியா இவனிடம் கார் இல்லாதது கண்டு குழம்பினாள். தான் லிப்ட் கேட்டததால்தான் அவன் இன்று காரை எடுத்து வரவில்லையோ என்று நினைத்தாள்.

வகுப்பில் கனிமொழி இல்லாமல் போகவும் குறை போலவே இருந்தது சக்திக்கு.

மாலையில் வீடு திரும்பினான். கார் அங்கே இல்லை. வீட்டுக்குள் நுழைந்தான்‌. கனிமொழி நூடுல்ஸை உண்டுக் கொண்டிருந்தாள்‌.

"கார் எங்கே.?"

"மெ.. மெக்கானிக் வந்து எடுத்துட்டு போயிருக்காங்க.."

"நீ வர வச்சியா.?"

பயத்தோடு ஆமென்று தலையசைத்தான்.

"பண்றதை பண்ணிட்டு அப்பாவி மாதிரி மூஞ்சியை வச்சிருக்கா.." கடுப்பானான்‌.

அவன் திட்டுவதை கேட்ட பிறகு நூடுல்ஸ் கூட இறங்க மறுத்தது அவளுக்கு.

"ஏன் காலேஜ் வரல.?" சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு கேட்டான்.

கல்லூரிக்கும் வீட்டிற்கும் இடையில் தூரம் குறைவுதான். ஆனாலும் வழக்கத்துக்கு மாறாக இன்று நடந்து வந்திருந்தான். அதனால் வியர்வையும் புதிதாக இருந்தது. லுங்கியை கட்டிக் கொண்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்தான்.

நூடுல்ஸ் இருந்த பாத்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அவள்.

"நான் கேட்டது காதுல விழலையா.? ஏன்டி காலேஜ் வரல.?"

பாத்திரத்தை கவிழ்த்து வைக்க முயன்றவள் அவனின் அதட்டலில் பயந்து பாத்திரத்தை கை விட்டு விட்டாள்.

கீழே உருண்டதை அவசரமாக கையில் எடுத்தாள்.

"சாரி. தெரியாம விழுந்துடுச்சி.‌" அவசரமாக சொன்னாள்.

கையை கட்டியவன் அடிக் கண்களால் அவளை வெறித்தான்.

மிடறு விழுங்கியவள் "தலைவலியா இருந்தது மாமா. அதனாலதான் காலேஜ் வரல. சாரி.." என்றாள்.

"நீயா அழுது நீயா தலைவலியை வர வச்சிக்கிட்ட.. தப்பு முழுக்க உன் மேலதான் தெரியுமா.? ஆனா அதை கூட உன்னால புரிஞ்சிக்க முடியல. நீ இன்னும் நிறைய வளரணும் கனி. அதுவரை எனக்குதான் கஷ்டம்.."

கனிமொழி தலையை குனிந்தே நின்றாள்.

"நூடுல்ஸ் வாங்க காசு ஏது.?"

"உங்க பர்ஸ்ல இருந்து எடுத்தேன்.." என்றவள் நினைவு வந்தவளாக மீதியை கொண்டு வந்து நீட்டினாள்.

"கேட்காம எடுத்தா அது திருட்டு.."

முகம் கறுத்துப் போனது அவளுக்கு.

"சாரி.. ரொம்ப பசிச்சது. அதனாலதான் எடுத்தேன்.."

அவளை அதே போல வெறித்துவிட்டு நகர்ந்துப் போனான்.

மறுநாள் காலையில் அவளின் கையை பற்றி ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை வைத்தான்.

"கணக்கு கேட்பேன். ஒத்தை ரூபாய்க்கும் கணக்கு சொல்லணும்.." என்று சொன்னான்.

அவன் தன்னோடு பேசுவதே போதுமென்று இருந்தது அவளுக்கு. ஆனால் அவளுக்கு சனியாய் அவனே இருக்க முடிவு செய்தது போல வகுப்பறையில் சுப்ரியா கேட்கும் ஒரு கேள்விக்கும் பத்து நிமிடங்களை செலவு செய்து பதில் சொன்னான்.

சுப்ரியாவோடு பேசுவதே கனிமொழிக்கு புகைச்சலை தந்தது. ஆனால் அவனோ சுப்ரியாவிடம் பேசும் தொனியை கூட மாற்றி விட்டிருந்தான். குழைந்து குழைந்து பேசினான். அவ்வப்போது கனிமொழியை பார்த்தான். அவள் அழுவதா முறைப்பதா என்று தெரியாமல் இரண்டு கெட்டான் நிலையில் உடைந்துக் கொண்டிருந்தாள்.

'உனக்கு புத்தி வரும் வரைக்கும் நான் சும்மா இருக்க போறது இல்ல..' மனதுக்குள் சொன்னவன் ‌வகுப்பின் மாணவர்கள் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் "சுப்ரியா கொஞ்சம் நில்லு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான். அவனை தாண்டி சென்று விட்ட கனிமொழி அவன் சொன்னது கேட்டு அதிர்ச்சியோடு திரும்பினாள்.

"பாடத்துல சந்தேகம்ன்னு சொன்னியே, சன்டே மார்னிங் என் வீட்டுக்கு வாயேன். நோட்ஸ் தரேன்.." என்றான் கனிமொழியை பார்த்தபடியே.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN