காதல் கணவன் 73

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி அதன் பிறகே கடிதத்தில் இருந்த கையெழுத்தை கவனித்தான். இவளுடையது அல்ல.

நிமிர்ந்தவன் "சா.." வாய் திறக்க முயன்ற நேரத்தில் "வேணாம் மாமா.." என்று தலையசைத்தாள் அவள்‌.

"என் புருசனுக்கு ஒருத்தி காதல் கடிதம் தந்தா. வெட்கம் கெட்டு நானும் வாங்கிட்டு வந்திருக்கேன். இந்த லெட்டரை வாங்கி வந்தபோதே சொரணை இல்ல. இந்த அடிக்கு சொரணை வந்துட போகுதா என்ன.?" எனக் கேட்டாள் விரக்தியான குரலில்.

"டிராமாவை ஆரம்பிக்கிறா.." எரிச்சலாக முனகினான்.

அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டாள். அலட்சியமாக நின்றிருந்தவன் வயிற்றை பிடித்தபடி அவளை ஆச்சரியமாக பார்த்தான். 'இப்போதுதானே சோகமாக இருந்தாள். அதற்குள் ஏன் கோபம்?' என்று அவனுக்கு புரியவில்லை.

"தப்பு முழுக்க உங்க மேல. ஆனா என்னை குத்தம் சொல்றிங்க. நீங்க அவளை வீட்டுக்கு கூட்டி வராம இருந்திருந்தா அவ ஏன் இப்படி லெட்டர் தர போறா.? கிளாஸ்ல அவகிட்ட எப்பவும் வழிஞ்சி வழிஞ்சி பேசவும்தான் அவ இந்த அளவுக்கு வந்திருக்கா.. ஸ்டூடன்கிட்ட டீச்சர்ஸ் நெருங்கி பழக கூடாதுன்னுதானே காலேஜ் ரூல்.? நீங்க எதுக்கு அவளோடு அவ்வளவு நெருங்கி பழகுறிங்க.? கட்டின பொண்டாட்டிக்கிட்ட நாலு வார்த்தை பேச துப்பில்ல உங்களுக்கு. ஆனா எவளோ ஒருத்திக்காக விடிய விடிய உட்கார்ந்து நோட்ஸ் எழுதி தரிங்க. எனக்கு வர கோபத்துக்கு உங்களுக்கு விஷம் வைக்கலாம்ன்னு தோணுது.." கைகள் இரண்டையும் இறுக்கிபடி கத்தினாள்‌.

"போதும். டென்ஷனை குறை. நான் மட்டும் வேணும்ன்னா அவகிட்ட நெருங்கறேன். அவளுக்கும் உனக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு நீ சொல்லல. அதனாலதான் நான் அவகிட்ட கேட்டு தெரிஞ்சிக்க முடிவு பண்ணிட்டேன்.."

இவனோடு பேசுவதற்கு பதிலாக சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

"உன் அண்ணன்கிட்ட உன் பிரச்சனையை சொல்லி இருக்க. ஆனா நான் அப்ப அத்தனை முறை கேட்டேன். என்கிட்ட சொல்லல. உன் உடம்புல அன்னைக்கு அவ்வளவு தடிப்பு இருந்ததே அதுக்கு இவதான் காரணமா.?" அவன் கேட்ட கேள்வியில் முகம் வெளுத்து விட்டது அவளுக்கு.

"அவளும் நீ படிச்ச அதே ஸ்கூல்லதான் படிச்சிருக்கா. நீ அவளை பார்த்து பயப்படுற. சோ அவதான் உன்கிட்ட ஏதோ வம்பு பண்ணியிருக்கணும். என்னால யூகிக்க முடியுது.."

மயங்காத குறை அவளுக்கு. 'உன் யூகிப்புல தீயை வைக்க. ஏன் மாமா என்னை இப்படி கொடுமை பண்ற.? நானே இப்பதான் பிரச்சனையெல்லாம் ஓஞ்சி கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். உனக்கு அது பொறுக்கலையா.?' புலம்பினாள்.

"ஏன்டி எதுவும் சொல்ல மாட்டேங்கிற.?" அவனின் கேள்வியில் நிமிர்ந்தவள் "நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. சம்பந்தம் இல்லாம யோசிச்சி உங்க வேலைக்கு நீங்களே உலை வச்சிக்காதிங்க. அந்த பொண்ணோடு நெருங்காதிங்க. அப்புறம் நான் உங்களை காலேஜ்ல போட்டு தந்துடுவேன்.." மிரட்டிவிட்டு நகர்ந்தாள்‌.

"கனி‌.." கத்தி நிறுத்தினான்.

"என்ன மாமா.?" திரும்பி பார்த்துக் கேட்டாள்.

"நீ உண்மையை சொல்ல போறியா இல்லையா.? இல்லன்னா நான் கோவமாகிடுவேன். அப்புறம் உன்கிட்ட பேசவே மாட்டேன்.." எச்சரித்தான்.

இடுப்பில் கையை ஊன்றி நின்றவள் அவனின் முகத்தை குறுகுறுவென்று பார்த்தாள்.

"ஒரு கிஸ் கொடுங்க. நான் எல்லா உண்மையையும் சொல்றேன்‌‌." என்றாள் கண் சிமிட்டி. அவள் சொன்னது முகம் சுளித்தான். அவனின் முக சுளிப்பு கண்டு அவளுக்கே எரிச்சல் வந்தது.

"போதும் சாமி. அந்த முகரையை அதுக்கு மேல கேவலமா மாத்தாதிங்க. பார்க்க முடியல.." எரிந்து விழுந்து விட்டு போனாள்.

***

திருமண அழைப்பிதழை பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. பாரதியின் தேர்வு இது. அருமையாகதான் இருந்தது‌.

வங்கியில் பணி புரியும் அனைவரையும் அழைத்து விட்டான். நண்பர்கள், தெரிந்தவர்கள், தூரத்து உறவினர்கள் வரை அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கியாயிற்று. முன்பு நடந்த திருமணம் அவனை பொறுத்தவரை திருமணம் கிடையாது. ஆனாலும் பெரிய பாட்டி அதை அபசகுணம் என நினைத்து சொல்லி தாயம்மாவிடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தாள்.

மாலையில் சக்தியின் வீட்டிற்கு தந்தையோடு சென்றான் வெற்றி.

கதவை திறந்து வைத்துக் கொண்டு சக்தியும் கனிமொழியும் ஆளுக்கொரு புறம் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வந்த சத்தம் கேட்டு கனிமொழிதான் முதலில் திரும்பிப் பார்த்தாள். ஓடி வந்தாள்.

"வாங்கப்பா.. வா அண்ணா.." மகிழ்ச்சியோடு அழைத்தாள்.

சக்தி எழுந்து வந்தான். நாற்காலியை எடுத்து போட்டான்.

அப்பா வெற்றியிடம் கண்களை காட்டினார். கட்டைப்பையிலிருந்து உடைகளையும் பத்திரிக்கையையும், மஞ்சள், குங்குமத்தையும் வெற்றிலை பாக்கையும் எடுத்தான். அனைத்தையும் அழகாக அடுக்கினான்.

கனிமொழி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க.." பெரியப்பா சொன்னார்.

"இந்த முறையெல்லாம் எதுக்கு மாமா.?" சக்தி கூச்சத்தோடு கேட்டான்.

"என்ன இருந்தாலும் நீங்க எங்க வீட்டு மூத்த மருமகன். உங்களுக்கான எல்லா மரியாதையையும் நாங்க தந்துதானே ஆகணும்.?" எனக் கேட்டவர் "பாப்பா இப்படி மாமா பக்கத்துல வந்து நில்லு.." என்று மகளை அழைத்தார்.

குதூகலத்தோடு வந்து நின்றாள் கனிமொழி.

இருவரிடமும் பத்திரிக்கையையும் மற்றவற்றையும் நீட்டினார்.

"சேர்ந்து வாங்கிக்கோங்க.."

அவர் சொன்னது போலவே பெற்றுக் கொண்டனர்.

"உனக்கு பிடிச்ச கலர்லதான் கோட் எடுத்திருக்கேன்‌. பிடிக்கலன்னா சொல்லு, கடையில் தந்து மாத்திக்கலாம்.." வெற்றி சக்தியிடம் சொன்னான்.

கனிமொழி அழைப்பிதழை பிரித்தாள். வெற்றியின் நெஞ்சில் சாய்ந்து நின்றிருந்தாள் பாரதி. உள்ளே அனைவரின் பெயரும் சரியாக அமைந்திருந்தது. சக்தி கனிமொழி என்றும் இருந்தது. இதற்கு அம்மாவும் அத்தையும் எப்படி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தனர் என்று ஆச்சரியம் கொண்டாள் கனிமொழி.

"மண்டபத்துல கல்யாணம். உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. இரண்டு பேரும் கண்டிப்பா வரணும். மத்தவங்களை மனசுல நினைச்சிக்கிட்டு வராம இருந்துடாதிங்க. உங்களுக்கு அங்கே எந்த பிரச்சனையும் இருக்காது. அதுக்கு நான் கேரண்டி.." என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.

கனிமொழி புடவையை பிரித்தாள். சிகப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது.

"இது எனக்கு நல்லாருக்கா மாமா.?" தன் தோள் மீது புடவையை சாய்த்து வைத்துக் கேட்டாள்.

"ம்ம்.." என்றவன் அவளை சரியாக பார்க்க கூட இல்லை.

***

மறுநாள் கல்லூரிக்கு சென்ற சக்தி சுப்ரியாவை தனியாக அழைத்துச் சென்றான்.

கடிதத்தை அவளிடம் காட்டியவன் "என்ன இது.?" எனக் கேட்டான்.

"லவ் லெட்டர் சார். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.."

கடிதத்தை கிழித்தான். "சாரி எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. நீ வேற யாரையாவது பாரு.."

முகம் கறுத்தவள் "என்கிட்ட என்ன குறை.?" எனக் கேட்டாள்.

பெருமூச்சு விட்டவன் "எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சி.." என்றான்.

அதிர்ச்சியில் விழிகள் தெறித்தது அவளுக்கு.

"வாட்.? ஆனா.." குழம்பினாள்.

"உன் லெட்டரால எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல பயங்கர பிரச்சனை. அவளை சமாதானம் செய்ய எனக்கு இன்னும் நாலு வாரம் ஆகும். இனிமே டீச்சர்ஸ்க்கு லெட்டர் தராம இரு.." என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

அன்று மாலையே கனிமொழியை ஓரம் கட்டினாள் சுப்ரியா.

"சக்தி சாருக்கு மேரேஜ் ஆகிடுச்சின்னு நீ ஏன் சொல்லல.?" கோபமாக கேட்டாள்.

"நீ அதை கேட்கவே இல்லையே.."

"போடி டுபுக்கு.." இதயம் உடைந்து விட்டது அவளுக்கு.

"இங்கே பாரு. அவரோட பொண்டாட்டி பத்தியெல்லாம் எனக்கு கொஞ்சமும் கவலை கிடையாது. இந்த காலேஜை நான் முடிச்சிட்டு போற வரைக்கும் என் கிரஷ் அவர்தான். லவ்வரும் அவர்தான். அதை யாராலும் மாத்த முடியாது.‌" என்றவள் மற்றொரு கடிதத்தை எடுத்து நீட்டினாள்.

"இதை அவரோட பொண்டாட்டிக்கு தெரியாம கொடு. முன்ன மாதிரியே உன் அண்ணிக்கிட்ட போட்டு தந்துடாத.. மறுபடியும் அவர் கடுப்பானார்ன்னா நான் கடுப்பாகிடுவேன்.." எச்சரித்துவிட்டு போனாள்.

"இம்சை.. சனியன். இவ்வளவு பெரிய காலேஜ்ல இவளுக்கு என் புருசனேதான் கிடைச்சானா.? வர கடுப்புக்கு இவளை புரட்டி எடுக்க தோணுது. ஆனா நான்தான் அவர் பொண்டாட்டின்னு தெரிஞ்சி காலேஜ்ல இருந்து அவரை வெளியே அனுப்பிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சி அமைதியா இருக்க வேண்டி இருக்கு.." மெல்லிய குரலில் முனகியவள் கடிதத்தை வாங்கி பேக்கில் வைத்துக் கொண்டாள்.

மாலையில் வீடு வந்ததும் அவன் முன் வந்து நின்று கடிதத்தை நீட்டினாள்.

"மறுபடியும் என்ன.?"

"உங்க ஆசை நாயகி கொடுத்து விட்டிருக்கா.." அவளின் அந்த கோபம் அவனுக்கு சிரிப்பை தந்தது.

அவளின் மூக்கின் நுனியில் கையை வைத்து அழுத்தி மேலே தூக்கி விளையாடினான். அவனின் கையை தட்டி விட்டாள்.

"உனக்கு பொசசிவ்னெஸ்ஸாலாம் இருக்கும்ன்னு நான் நினைச்சதே இல்ல.."

"காதல் இருக்கும் இடத்துல எல்லாமேதான் இருக்கும். தயவுசெஞ்சி இனியாவது சுப்ரியாவை இக்னோர் பண்ண பாருங்க. அவ பேச வந்தா கூட பிசியா இருக்கற மாதிரி நடந்துக்கங்க.." அறிவுரை சொன்னாள்.

சக்தி கண்களை உருட்டினான்.

"சொல்றதை கேளுங்க. இல்லன்னா உங்களுக்குதான் கஷ்டம்.." என்றுவிட்டு தனது வேலையை பார்க்க போனாள்.

கடிதத்தை யோசனையோடு பிரித்தான்.

"உங்க மனைவிக்கு தெரியாம நம்ம லவ்வை தொடருறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன் சார். என்னை போல ஒரு பெண்ணை இழக்க நீங்களும் விரும்ப மாட்டிங்கன்னு நினைக்கிறேன். மூனு வருச அக்ரிமென்ட் போட்டுக்கலாம் சார்.‌ லீவ் நாட்கள்ல மீட் பண்ணிக்கலாம். காலேஜ்ல உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்க தாராளமா என்னை தொந்தரவு செய்யலாம்.."

கடிதத்தை கசக்கினான். 'ச்சே.. ஆம்பளனாவே அலைஞ்சான் கேஸ்ங்கன்னு இவங்களே முடிவு பண்ணிடுறாங்களா.? அவ அப்படிதான் அவளா லவ் பண்ணிட்டு என்னவோ நான் ரேப் பண்ணிட்டு ஏமாத்தி விட்டுட்ட மாதிரி சீனை போட்டா. இப்ப இவ என்னவோ நான் இன்னர்வேரையும் சேர்த்து அவுத்து போட்டுட்டு எவ கிடைப்பான்னு அலையற மாதிரியே நினைச்சி பேசிட்டு இருக்கா. சுதந்திர நாட்டுல ஒரு ஆம்பளையோட கற்புக்கு பாதுகாப்பு இல்லையே.!' தனக்குள்ளேயே வெந்து தனக்குள்ளேயே தணிந்தான்.

கனிமொழி சொன்னது போலவே சுப்ரியாவை கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டான். ஆனாலும் அவள் விடவில்லை. "சார் லெட்டருக்கு என்ன பதில்.?" எனக் கேட்டாள் அடுத்தநாள் மாலையில்.

போனை கையில் எடுத்தவன் "சாரி எனக்கு இதுல கொஞ்சமும் இன்ட்ரஸ்ட் இல்ல.‌." என்றான். போனில் சில எண்களை அழுத்தி காதில் வைத்தான். "எஸ் டார்லிங். நான் கிளம்பிட்டேன். ரெடியா இரு. பிக்கப் பண்ணிக்கிறேன்.." என்றுச் சொல்லிவிட்டு அங்கிருந்துப் போனான்.

சுப்ரியா மறுபடியும் உடைந்தாள்.

***

திருமண மண்டபம் களை கட்டியிருந்தது. வாழை மரங்கள் வாசலில் வரவேற்றன. மாவிலை தோரணங்களும், பன்னீர் ரோஜாக்களின் வாசமும், இளம் பெண்களின் மென் சிரிப்பும், வயது வந்த ஆண்களின் ரகசிய ரசிப்புமாக இருந்தது மண்டபம்.

வெற்றியின் சொந்தத்தை விட பாரதியின் வீட்டு சொந்தம் அதிகளவில் இருந்தது.

"பெரிய குடும்பத்து பொண்ணாதான் எடுத்திருக்கிங்க. சக்திக்கும் பாலாஜிக்கும் உங்க குடும்பத்துக்குள்ளேயே பொண்ணை கட்டி வச்சி ஒரு சொந்தமும் வெளியே இருந்து வராத மாதிரி பண்ணிட்டிங்க. வெற்றிக்கு பண்ற மாதிரியே தேனுக்கும் ஜன கட்டு அதிகமா இருக்கற வீட்டுல மாப்பிள்ளை எடுங்க.." என்றாள் தாயம்மாவின் அக்கா.

அருகில் நின்றிருந்த தேன்மொழி தனது தாவணியின் நுனியை சுட்டு விரலில் சுற்றினாள். ஆரவ்வோடு அவள் பேசி சரியாக நான்கு வாரங்கள் ஆகி விட்டது. அவனும் முறைத்தான். இவளும் முறைத்தாள். எப்போதும் பூவனமாக தெரியும் கல்லூரி இந்த சண்டையால் பாலைவனமாக தென்பட்டது. முன்பு கூட அவனின் அக்காவை அவன் முன்பே பலமுறை திட்டி உள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு ஆமென்று தலையசைத்துக் கொண்டிருந்தவன் இப்போது கோபப்பட்ட காரணம் புரிந்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மறுநாள் காலையில் திருமணம். அன்றைய மாலை பொழுதை ரசித்தபடி மணப்பெண்ணுக்கான அறையின் ஜன்னலருகே நின்றிருந்தாள் பாரதி.

நாளை இவ்வேளையில் வெற்றியின் மனைவி. உரிமைப்பட்டவள். நினைத்து நினைத்து தனக்குள் சிலிர்த்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணி.." தேன்மொழியின் குரலில் திரும்பினாள்.

"உங்க கெஸ்ட் வந்திருக்காங்க.." என்றவள் விலக, நரேஷின் அம்மா‌ அறை வாசலில் நின்றுக் கொண்டிருந்தாள்.

"வாங்க ஆன்டி.." ஓடி சென்று அவளை அழைத்தாள்.

மகளின் இரவு அலங்காரத்திற்காக நகையையும் உடையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த பாரதியின் அம்மா நிமிர்ந்தாள்.

"அம்மா இது ரத்னாம்மா.. கல்கத்தாவுல எனக்கு பிரெண்ட்.." என்றாள்.

பாரதியின் தாயார் வணக்கம் வைத்தாள். "வாங்கம்மா.."

"உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் எனக்கு.." என்ற ரத்னாம்பிகை "நரே.." என்று அழைத்தாள்.

விருப்பம் இல்லாமல் உயிர் வாழ்வது போன்ற ஒரு முகத்தோடு உள்ளே வந்தான் அவன்.

"இது நரேஷ். என் மகன்‌‌.."

"வாவ்.." பாரதியின் அண்ணியின் சகோதரி தன்னை சுற்றி அத்தனை பேர் இருப்பதையும் மறந்து ஆச்சரியப்பட்டாள். மெரூன் கலர் சட்டை அணிந்திருந்தான் அவன். எந்த அலங்காரமும் இல்லை. ஆனால் அவனின் முகத்திலிருந்த களையே அந்த பெண்ணை வீழ்த்தி விட்டது.

"வாங்க தம்பி.." பாரதியின் அம்மா அவனுக்கும் வணக்கம் வைத்தாள்.

"வணக்கம் ஆன்டி.." என்றவன் பாரதியை தவிர மற்ற அனைத்து இடத்திலும் பார்த்தான்.

பாரதியும் அவனை நேர்கொண்டு பார்க்கவில்லை.

அன்று இரவு திருமண மண்டப ஹாலில் இருந்த பெரிய திரையின் முன் நின்று கச்சேரி பாடிக் கொண்டிருந்தனர் இசை குழுவினர்.

"அதே சினிமா பாட்டை பாடுறாங்க‌. ஒரு நியூ சாங் பாடலாமே.." பாடல் குழுவை பார்த்து கேட்டார் சொந்தக்காரர்களில் ஒருவர்.

"சொந்த பாட்டு பாடணும்ன்னு பொண்ணு மாப்பிள்ளை வீட்டுலயிருந்துதான் யாராவது பாடணும்.." பியானோவை வாசித்துக் கொண்டிருந்த ஒருவன் குற்றம் சாட்டினான்.

முன் வரிசையில் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி மொபைலை நோண்டிக் கொண்டிருந்த நரேஷ் எழுந்தான். மேடையில் ஏறி மைக்கை வாங்கினான்.

"நான் பாடுறேன்.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN