காதல் கணவன் 75

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆரவ் இரவு உணவு உண்ணுவதற்காக வந்து அமர்ந்தான்.

மேகலா மகனுக்கும் கணவனுக்கும் உணவை பரிமாறினாள்.

"அம்ருதா இன்னைக்கும் நைட் சாப்பாடு சாப்பிட வரலையா.?" கவலையாக கேட்டார் ராமன்.

"பசிக்கலன்னு சொல்லிட்டா.."

நான்கு சப்பாத்தியை எடுத்து தன் தட்டில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள் மேகலா.

"பாப்பா ஏன் இப்படியே இருக்கா.?" தனது வழக்கமான அதே கேள்வியை கேட்டார் ராமன்.

"உடம்பு சரயில்லன்னு நினைக்கிறேன். ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய் வந்தா நல்லாருக்கும்.." சப்பாத்தியை வாயில் போட்டுக் கொண்டு சொன்னாள் அம்மா.

"ஹாஸ்பிட்டல் எதுக்கு.? நல்லாதான் இருக்கா. கொஞ்ச நாள்ல சரியாகிடுவா.." ஆரவ் நம்பிக்கையாக சொன்னான்.

"இல்லடா.." என்றவள் கணவனின் புறம் பார்த்தாள்.

"பாப்பாவுக்கு உடம்புல ஏதோ கோளாறுங்க. பீரியட்ஸ் கூட லேட். வாங்கி வச்ச பேட்ஸ் அப்படியே இருக்கு. நேத்து காலையில் தூங்கி எழுந்ததும் வாமிட் வேற.. சாப்பிடவும் மாட்டேங்கிறா.. ஏதாவது பெரிய வியாதியோ என்னவோன்னு பயமா இருக்கு எனக்கு.." என்றாள் கவலையாக.

சப்பாத்தியை எடுத்த ஆரவ்வின் கரம் அப்படியே நின்றது. மறைந்திருக்கும் ஒற்றை புள்ளி அம்மாவிற்கு தெரியாது. அதனால் அவளால் கணக்கிடவும் முடியாது. ஆனால் அவனால் கூட்டி கழிக்க முடிந்தது. சிக்கலை புரிந்துக் கொண்டவன் அதை பெற்றோரிடம் சொல்வதா வேண்டாமா என்று தயங்கினான்.

நாளை அக்காவை மருத்துவமனை அழைத்துச் சென்று முதலில் உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தான். அதன் பிறகுதான் வெற்றியின் திருமணம் பற்றிய நினைவு வந்தது. உணவை தள்ளி வைத்து விட்டு எழுந்தவன் அக்காவை தேடி ஓடினான்.

"டேய் சாப்பாடு.." அம்மா கத்தினாள்.

"போதும்மா.." அக்காவின் அறை கதவை திறந்தான். வழக்கம்போல இருளில் படுத்திருந்தாள். விளக்கின் ஸ்விட்சை அழுத்தினான்.

"அம்ருதா.." கண்களை மூடி படுத்திருந்தவளின் தோள்களை உலுக்கினான். பாலாஜியின் பிடிவாதத்தால் சில முறை வெளியே சென்று வந்தாளே தவிர வேறு எதற்கும் வெளி வரவில்லை அவள்‌.

"ஏன்டா.?" அரை கண்களை மட்டும் திறந்துக் கேட்டாள்.

"உனக்கு ஏதாவது பிரச்சனையா.?"

முழுதாக விழிகளை விரித்தாள்.

"ம்ம்.." என்றாள் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி.

அவள் முன்னால் அமர்ந்து அவளின் கையை பற்றியவன் "என்ன பிரச்சனை.?" எனக் கேட்டான் பயத்தோடு.

தன் நெஞ்சின் மீது கையை வைத்தவள் "இந்த ஹார்ட்தான் பிரச்சனை ஆரவ். இந்த இதயத்துக்குள்ள இருக்கும் நினைவுகள்தான் பிரச்சனை.. மெமரி லாஸ் ஆகற மாதிரி ஏதாவது ட்ரீட்மெண்ட் இருந்தா எனக்கு அந்த ட்ரீட்மெண்ட் வேணும். என்னால முடியல. அவன் ரொம்ப கெட்டவன். அவனை லவ் பண்றது எனக்கு நானே செஞ்சிக்கிற துரோகம். என்னை எப்படியாவது காப்பாத்தி விடு.." என்றுக் கெஞ்சினாள்.

'எருமை எருமை.. நான் என்ன டென்சன்ல இருக்கேன்.? இவ என்ன இராமாயணம் பாடிட்டு இருக்கா.?' கடுப்பானவன் "உனக்கு பீரியட்ஸ் டிலேன்னு அம்மா சொன்னாங்க. உண்மையா.?" என்று நேராக விசயத்திற்கு வந்தான்.

அம்ருதா முகத்தை கோணினாள்.

"ஆம்பள பையன் உனக்கு எதுக்கு இந்த கேள்வி.?"

கையை ஓங்கியவன் அவளின் முறைப்பை கண்டு விட்டு கையை கீழிறக்கினான்.

"ஒவ்வொரு மாசமும் நாலாவது நாள்ல 'ஐயோ தம்பி பேட்ஸ் தீர்ந்துடுச்சிடா. எக்ஸ்ட்ராவா வாங்கி வைக்க மறந்துட்டேன். வயிறு வலிக்குது. என்னால நடக்க முடியல. ப்ளீஸ் நீயே பேட்ஸ் மட்டும் வாங்கிட்டு வந்து கொடுடா'ன்னு வெட்கமே இல்லாம என்கிட்ட கெஞ்சும்போது தெரியாதா நான் ஆம்பள பையன்னு.? நானும் ஒரு பொம்பள புள்ளையைதான் கல்யாணம் பண்ண போறேன்‌. நீ மேட்டரை சொல்லு.." என்றான்.

அம்ருதா தலையணையில் விழுந்தாள்.

"மாசா மாசம் ஒன்னு டூ ஏழாம் தேதிதான் என் டேட் டைம்.." என்றவள் போர்வையை இழுத்து முகத்தோடு போர்த்த முயன்றாள்.

"இன்னைக்கு தேதி பதினேழு.."

"ஓ.." என்றவள் எதிலும் கவனம் இல்லாதவளாக கவிழ்ந்துப் படுத்தாள்.

"நீ பிரகனென்டா.?"

தலையை திருப்பிப் பார்த்தாள். யோசனையால் முகம் சுருங்கியது.

"தெரியல.." என்றவள் மீண்டும் விழுந்தாள்.

ஆரவ் எழுந்து நின்றான். அவசரமாக வெளியே ஓடினான். வீட்டின் கதவை சாத்திவிட்டு சாலையில் இறங்கி நடந்தான். வீட்டருகே இருந்த மரத்திருக்கும் தங்கள் வீட்டின் காம்பவுண்டிற்கும் இடையிலிருந்த பாதையில் நடந்தவனை ஈர்த்தது ஸ்கூட்டி ஒன்றின் ஹாரன் சத்தம். மரத்தின் நிழல் இருளில் நின்றபடி திரும்பிப் பார்த்தான்.

ஸ்கூட்டி ஒன்று எதிர்திசையிலிருந்து வந்தது. தேன்மொழி தேவதை போலிருந்தாள் தாவணியில். பாவாடையும் ரவிக்கையும் இருளிலும் மின்னின. இவனின் வீட்டை கடக்கையில் வேண்டுமென்றே பலமுறை ஹாரனை அடித்தாள். சாலையின் முடிவிற்கு சென்றவள் வளைந்துப் போகாமல் மீண்டும் ஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு வந்தாள். ஆரவ் இன்னமும் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.

இவள் ஏன் பின்னால் ஒருவனை உட்கார வைத்துக் கொண்டு தனது தெருவை சுற்றிக் காட்டுகிறாள் என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு.

சற்று தள்ளி சென்று ஸ்கூட்டியை யூடர்ன் எடுத்து வந்தவள் அவனின் வீட்டின் முன் நின்று மீண்டும் ஹாரனை அடித்தாள்.

"எதுக்கு சிஸ்டர் இத்தனை ஹாரன்.?" அவளின் பின்னால் அமர்ந்திருந்த நரேஷ் கேட்டான்.

"இதுதான் என் ஆள் வீடு ப்ரோ. சண்டை போட்டுட்டான். அவன் இன்னும் ஒரு சாரி கூட கேட்கல. அதனாலதான் அவனை வெறுப்பேத்தலாம்ன்னு. அதோ அந்தப் மஞ்சள் கலர் கர்ட்டன் இருக்கறதுதான் அவன் ரூம்‌. ஹாரன் சத்தத்துல அவன் கர்ட்டனை விலக்கற நேரத்துல நாம ஸ்லோ மோஷன்ல இங்கிருந்து போயிடலாம்.." என்றவள் மீண்டும் ஹாரனை அடித்தாள்.

ஆரவ் தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரோடு சாய்ந்து நின்றான். கைகளை கட்டியபடி அவளை வெறித்தான்.

"இப்படி பண்றதால என்னவாகும்.?" நரேஷ்க்கு உண்மையிலேயே இவளின் திட்டம் என்னவென்று புரியவில்லை.

"உங்களையும் என்னையும் பார்த்துட்டு பொறாமை படட்டும். நீங்க யாருன்னு அவனுக்கு தெரியாது.‌ கல்யாணத்துக்கு வந்த என் முறை பையன்னு நினைச்சி வேகட்டும். என்கிட்ட கூட பேசாம என்னை ஒதுக்கி வைக்கிறானே, அதுக்கு அனுபவிக்கட்டும்.." என்றவள் மீண்டும் ஹாரனை ஐந்தாறு முறை அடித்தாள்.

அவளின் எண்ணம் சிறுபிள்ளைதனம் போலிருந்தது ஆரவுக்கு.

"போதும் சிஸ்டர். மெடிக்கலுக்கு போலாமா.? ஏற்கனவே தலைவலி. உங்க ஹாரனால் ரொம்ப வலிக்குது.." நரேஷ் கெஞ்சாத குறையாக சொன்னான்.

"சாரி ப்ரோ.." என்றவள் தன்னையே திட்டிக் கொண்டு அடுத்த தெருவிலிருந்த மெடிக்கலை நோக்கி ஸ்கூட்டியை விரட்டினாள்.

ஆரவ் இருளிலிருந்து வெளியே வந்தான்.

"நான் பொறாமை படணுமா.?" எனக் கேட்டு சிரித்தவன் போனை கையில் எடுத்தான்.

"அண்ணா நான் இன்னும் கொஞ்ச நேரத்துல மெடிக்கலுக்கு வந்து காண்டம் வேணும்ன்னு கேட்பேன். நேத்தும் நான் வாங்கிட்டு போன மாதிரி ஒரு டயலாக்கை அடிச்சி விடுங்க. சின்ன ஹெல்ப்தான்.." என்று மெடிக்கல்கார அண்ணனுக்கு மெஸேஜை தட்டி விட்டவன் குறுக்கு பாதையில் புகுந்து மெடிக்கலுக்கு சென்றான்.

நேரம் சரியாகவே அமைந்தது. மெடிக்கல்காரனும் இவன் கேட்டதும்‌ பதில் கேள்வி கேட்டான். ஓரக்கண்ணால் தேன்மொழியை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆரவ்.

இவன் காண்டம் வேண்டுமென்று கேட்கவும் அவளின் கண்களிலிருந்து கண்ணீர் சர்ரென்று இறங்கி விட்டிருந்தது. அவனுக்கே கஷ்டமாகதான் இருந்தது. ஆனால் அவளின் புத்திக்கு இந்த தண்டனை சரிதான் என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான்.

தேன்மொழியும் நரேஷூம் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆரவ் பிரகனென்சி டெஸ்ட் கிட்டோடு வீட்டிற்கு வந்தான்.

அரை உறக்கத்தில் இருந்த அம்ருதாவை எழுப்பினான்.

"மறுபடியும் என்னடா.?"

"இந்தா டெஸ்ட் கிட். செக் பண்ணி சொல்லு.." என்று பிளாஸ்டிக் கவரில் இருந்ததை பிரித்து நீட்டினான்.

குழப்பத்தோடு வாங்கியவள் "எதுக்கு இப்ப இது.?" எனக் கேட்டாள்.

"சொன்னதை செய்.. எழுந்து போ.." அவளின் கையை பிடித்து இழுத்து எழுப்பி நிற்க வைத்தவன்,‌ கழிவறை நோக்கி அவளை தள்ளினான்.

அம்ருதா ஜோம்பியை போல நடந்துப் போனாள்.

ஆரவ் நகத்தை கடித்தபடி கட்டிலில் அமர்ந்தான். 'அப்படி ஏதும் இருக்குமோ.? வெற்றிக்கு நாளைக்கு கல்யாணம்ன்னு கூட இவகிட்ட இன்னும் சொல்லல. பிரகனென்டா இருந்தா வெற்றியோட கல்யாணத்தை நிறுத்திடுவாளோ.?' குழப்பமாக இருந்தது அவனுக்கு.

அம்ருதா சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.

"அக்கா.."

"உள்ளே வச்சிருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சி பார்க்கணும்.." என்றவள் மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள். அப்படியே சாய்ந்தாள்.

"அக்கா.."

"தூர போடா.. தூங்க விடுடா.." என்றவளுக்கு மூளை முழுதாக வேலையே செய்யவில்லை.

இவளை எழுப்பி பார்த்து சலித்தவன் அவனே சென்று டெஸ்ட் கிட்டை எடுத்துப் பார்த்தான். அதன் கவரின் மேலிருந்த படத்தோடு ஒப்பிட்டுப்‌ பார்த்தான். டிக் அடித்திருந்த இடத்தில் காட்டியது போலவே இரு கோடுகள். கர்ப்பம்தான். உதட்டை கடித்தான். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

அக்கா என்ன முடிவெடுப்பாளோ என்ற சந்தேகத்தோடு அவளின் அறைக்குள் நுழைந்தான்.

"அக்கா.."

"மறுபடியும் என்னடா.?" போர்வையை‌ அணைத்தபடி எழுந்து அமர்ந்துக் கேட்டாள்.

"நீ பிரகனென்ட்.." என்றான்.

கண்கள் நொடி நேரம் மின்னியது. அவனின் கையிலிருந்த கிட்டை பிடுங்கினாள். சிறு புன்னகை இதழில் கடை கோடியில் உதித்து மறைந்தது.

"என்ன பண்ண போற.?" எனக் கேட்ட தம்பியை நிமிர்ந்துப் பார்த்தவள் "என்ன பண்ணணும்.?" எனக் கேட்டாள் புரியாதவளாக.

"வெற்றியை போலிஸ்ல பிடிச்சி கொடுத்துட்டு குழந்தையை அபார்ட் பண்ண போறியா.?"

அதிர்ந்தவள் "அவனை விட்டுட்டு நான் தூரமா போக போறேன்.." என்றாள்.

"அவனுக்கு நாளைக்கு காலையில் கல்யாணம்.."

"ஓ.." என்றவளின் கண்களில் மின்னி மறைந்தது சோகமா, கோபமா என்று அவனால் கண்டறியவே முடியவில்லை.

"அவன் கல்யாணத்தை நிறுத்திட்டு நீயே கல்யாணம் பண்ணிக்க போறியா.?" அவனின் கேள்வியில் முகத்தில் இருந்த மொத்த ரத்தமும் வடிந்து விட்டது அவளுக்கு.

இடம் வலமாக தலையசைத்தாள் பயத்தோடு.

"அவன் எனக்கு வேண்டாம்.." தெளிவாக சொன்னாள். சொல்லிவிட்டு தலையணையில் சாய்ந்தாள்.

"ஓகே.. அப்படின்னா நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். அபார்ஷன் பண்ணிட்டு வந்துடலாம்.. இது யாருக்கும் தெரிய வேணாம்.."

அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தவள் "நான் ஹாஸ்பிட்டல் வரல.‌ நீ லூசு மாதிரி உளறாம போய் தூங்கு.." என்றாள்.

***

சொந்தங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது அந்த ஹாலில். ஒரு மூலையில்‌ பாயை விரித்து வைத்திருந்தாள் தாயம்மா. சக்தியையும் கனிமொழியையும் அழைத்து அமர வைத்தாள்.

"இந்த பையன் உன்னை நல்லா பார்த்துக்கறானா கனி.?" பாட்டி பேத்தியிடம் விசாரித்தாள்.

சக்திக்கு அங்கிருந்து எழுந்து போக தோன்றியது. ஆனால் அப்படி சென்றால் பாட்டியை அவமதித்தது போலாகி விடும். வெகுநாட்களுக்கு பிறகு பாட்டியின் அருகே இருக்கிறோம். அவளின் மனதை கஷ்டபடுத்த வேண்டாம் என்று நினைத்தான்.

"நல்லாதான் பார்த்துக்கறார் பாட்டி.."

"நீ அவனை நல்லா பார்த்துக்கறியா.? இல்ல வீட்டுல பிடிவாதம் பிடிக்கற மாதிரியே அவனை தொந்தரவு பண்ணிட்டு இருக்கியா.?" மிரட்டலாக கேட்டாள்.

"நா.. நான் எந்த பிடிவாதமும் பிடிக்கிறது இல்ல.."

'காரை உடைக்கிறது, மூக்கை உடைக்கிறது, பாத்திரத்தை உடைக்கிறதெல்லாம் பிடிவாதம் லிஸ்ட்ல வருவது இல்ல போல..' சக்தி மனதுக்குள் பொரிந்துக் கொண்டிருந்த நேரத்தில் பாயின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தாள் பெரிய பாட்டியும், தாயம்மாவின் நாத்தனார் ஒருத்தியும்.

'ஒத்தை ஏழரையையே சமாளிக்க முடியாது. இதுல இரட்டை ஏழரை வேறயா.?' தாயம்மா புலம்பிய நேரத்தில் "எத்தனை மாசம்டா கண்ணு.?" என்று கனிமொழியின் கையை பிடித்துக் கேட்டாள் நாத்தனார் பாட்டி.

'அது எத்தனை வருசத்துக்கு அங்கிட்டோ.? என் பேரனோட கண்ணோட்டமும் சேணம் பூட்டிய குதிரையோட கண்ணோட்டமும் ஒன்னுதான். இவன் மனசு மாறி என் பேத்தியை பொண்ணா பார்க்க ஆரம்பிச்சி, அப்புறம் அவன் காதலிச்சி, இரண்டு பேரும் கூடி குழந்தை பெத்துக்கறதுக்குள்ள.. 'வா வா தாயம்மா, உன் கடைசி படுக்கை தயார்'ன்னு மேலோக்கத்துல இருந்தே அழைப்பு வந்தாலும் வந்துடும்..' என்று தாயம்மா மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் "இன்னும் எதுவும் இல்ல பாட்டி. காலேஜ் போயிட்டு இருக்கேன்.." என்று பக்குவமான குரலில் சொன்னாள் கனிமொழி.

"அதை விடு.. கட்டினா என் சக்தி மாமனைதான் கட்டுவேன். இல்லன்னா வாழவே மாட்டேன்னு சொன்னியாமே, உண்மையா.? என் பேரன் கூட நல்லாதான்டி ஆத்தா இருந்தான். அவன்கிட்ட என்ன குறையை கண்டுட்டு இவனேதான் வேணும்ன்னு கல்யாணத்தை பண்ண.?" என்றுக் கேட்டாள் பெரிய பாட்டி.

அவளின் பேரனுக்கும் கனிமொழிக்கும் அவள் முடிச்சி போட்டு பார்த்திருக்கிறாள் என்ற விசயமே இப்போதுதான் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.

கனிமொழி பதில் சொல்ல தெரியாமல் நொடி நேரம் விழித்தாள். பிறகு "ஆயிரம் மாமனுங்க இருந்தாலும் அது என் சக்தி மாமனை போல வருமா.?" என்றாள் சிறு குரலில்.

தலை குனிந்து அமர்ந்திருந்தவளை உதட்டை சுழித்தவாறு பார்த்தான் சக்தி. அவள் சொன்னது கொஞ்சம் இதமாகதான் இருந்தது. ஆனால் அதற்காக காதல் வந்து விடுமா என்று‌ தன்னிடமே கேட்டுக் கொண்டான்.

பெரிய பாட்டி கழுத்தை நொடித்தாள்.

"உங்களுக்கு தூக்கம் வந்தா போய் தூங்குங்க.." என்றாள் தாயம்மா.

கனிமொழி சக்தியை பார்த்தாள். அவனோ தன் அம்மாவின் கால்கள் நடக்கும் திசையை பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருந்தான்.

அவனை தாண்டிக் கொண்டு கூட பலமுறை நடந்தாள்‌ அர்ச்சனா. ஆனால் மறந்தும் மகன் புறம் திரும்பவில்லை.

அம்மா அறை ஒன்றிற்குள் நுழைவதை கண்டவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து ஓடினான்.

யாருமற்ற அறை அது. வாழைப்பழங்கள், தேங்காய்கள், இன்னும் சில பொருட்களால் நிரம்பி கிடந்தது.

பாக்கு பொட்டலத்தை தேடிக் கொண்டிருந்த அர்ச்சனா "அம்மா.." என்றவனின் குரலை கேட்டும் திரும்பாமல் தனது வேலையில் கவனமாக இருந்தாள்.

"அம்மா.. என்னோடு பேச மாட்டிங்களா.? எத்தனை நாளைக்கு இந்த பிடிவாதம் இப்படியே இருக்கும்.?" உள்ளே நடந்தபடி கேட்டான்.

அர்ச்சனா நிஜாம் பாக்கு பொட்டலம் ஒன்றை எடுத்துக் கொண்டு நடந்தாள்.‌ குறுக்கே மறித்தார் போல நின்றான்.

"நீங்க என்கிட்ட பேசாம உங்களை இங்கிருந்து விட மாட்டேன்.."

நிமிர்ந்தவள் மகனை முறைத்தாள்.

"கல்யாணம் பண்ணது ஒரு தப்பா.?" எனக் கேட்டான்.

"இல்ல.. குழந்தை. அதுதான் மேட்டர். உங்களால ஒரு குழந்தையை பெத்து தர முடியுமா.?" எனக் கேட்டாள் புருவத்தை உயர்த்தி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN