காதல் கணவன் 78

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அம்ருதா பயத்தோடு கையை பின்னுக்கு இழுத்தாள். ஆனால் அவனின் வலிமையை தாண்டி விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

"எ.. என்னை விடு.."

"மாட்டேன்.."

"ப்ளீஸ் என்னை விடு.. நான் இங்கிருந்து போயிடுறேன். இந்த ஊரை விட்டு.. நாட்டை விட்டு கூட போயிடுறேன்.. ப்ளீஸ் என்னை விட்டுடு.. இவங்க தெரியாம கூட்டி வந்துட்டாங்க..‌ எனக்கு உன்னை பிடிக்கல. விட்டுடு.." கெஞ்சியவளின் கண்களில் இருந்த பயத்தை கண்டவன் "நீ சொல்ற எதையும் கேட்க மாட்டேன் அம்மு.. என் குழந்தையையே யாரோ ஒருத்தரோட குழந்தைன்னு சொன்ன இனி எப்பவும் நான் நம்பவே மாட்டேன்‌. இந்த குழந்தையை வளர்த்து பிறகு எனக்கு எதிரா பகடை காயா மாத்துறதுதானே உன் திட்டம்.? அதுக்கு நான் உன்னை விட மாட்டேன்..‌ வா இப்பவே ஹாஸ்பிட்டல் போலாம்.." என்றான்.

பயமும் பதற்றமும் அவளின் விழிகளில் அதிகமானது. அவளின் கரங்கள் நடுங்கியது பிடித்திருந்த அவனுக்கும் புரிந்தது.

அவளின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் விழிகளே தேவைப்படும் பதிலை சொல்லி விட்டது.

"ப்ளீஸ்.. இது உன் குழந்தை இல்ல. என் குழந்தை மட்டும்தான். உன்னை எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நான். உன்னை பிடிக்கல எனக்கு. நான் எதுக்கு உன்னை டிஸ்டர்ப் செய்யணும்.?" என்றவளின் கரத்தை விட்டு விட்டான்.

அவளின் முகத்தில் கொஞ்சமாக நிம்மதி பரவி கொண்டிருந்த வேளையில் "ஆரவ் கொஞ்சம் தனியா வா.. பேசணும்.." என்றான்.

"என் பையன்கிட்ட நீ ஏன்டா பேசணும்.?" என்று துள்ளினார் ராமன்.

பற்களை கடித்தான் வெற்றி. "உங்களுக்கு என்ன சார் இப்ப பிரச்சனை.? ரேப் கேஸ்ல என்னை பிடிச்சி தரணுமா.? கொடுங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அடியாட்களை ஏவி என்னை கொல்ல போறிங்களா, அப்பவும் எனக்கு பிரச்சனை இல்ல. உங்க பொண்ணோட வெறுப்பை சம்பாதிச்ச செகண்டே பாதி செத்தாச்சி. இனி இந்த வாழ்க்கை எப்படி நாசமா போனாதான் என்ன.?" என்றவன் ஆரவிடம் கண் சைகை காட்டி விட்டு வெளியே நடந்தான்.

கதவை திறந்தவன் "நாங்க திரும்பி வரும்‌வரை அவளை எங்கேயும் அனுப்பிடாதிங்க. லாஸ்ட் ஹெல்ப்.." என்று விட்டு கதவு திறந்து சென்றான்.

மண்டபத்தில் நடமாடிக் கொண்டிருந்த சொந்தக்காரர்களை கண்டவன் தலையை கோதியபடி அருகே இருந்த சுவரில் சாய்ந்தான்.

"இதை ஏன் முன்னாடியே சொல்லல.?" என்றுக் கேட்டான் ஆரவிடம்.

"இன்னைக்கு நைட் எதேச்சையாதான் எனக்கே தெரிஞ்சது.." என்றவன் நடந்ததை விவரமாக விலக்கி சொன்னான்.

"இங்கே‌ வருவது அவளுக்கு தெரியாது. அப்பாவும் அம்மாவும்தான் வலுக்கட்டாயமா கூட்டி வந்தாங்க. மறுபடியும் லவ். மறுபடியும் பிரேக்அப்ன்னு நினைச்சிட்டாங்க அவங்க.." என்றவன் தயங்கி‌விட்டு "அவ தூரமா கண் காணாத இடத்துக்கு போறேன்னு சொன்னா. அபார்ஷன் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா. அதனாலதான் நான் என் பேரண்ட்ஸ்கிட்ட விசயத்தை சொன்னேன். உங்களை பழி வாங்கணும்னனு எனக்கு ஆசை உண்டு. ஆனா இப்படி லாஸ்ட் செகண்ட்ல கொண்டு வந்து நிறுத்தி வாங்க நினைக்கல.." என்றான்.

வெற்றி அவனின் கையை பிடித்தான்.

"அவ ஏன் அந்த குழந்தையை கலைச்சா, ஏன் இந்த குழந்தையை கலைக்க மறுக்கறான்னு எனக்கு சுத்தமா புரியல.. எங்கேயோ எதோ ஒரு முடிச்சி. என்னால கண்டுபிடிக்க முடியல. கண்டிப்பா ஒருநாள் அவளே வாயை திறப்பான்னு நம்பறேன். ஆனா நான் எந்த முடிவு எடுத்தாலும் சரி.. தயவுசெஞ்சி நீ தேன்மொழியை பழி வாங்கிடாத.. அப்படி நீ பழி வாங்கும் எண்ணம் வச்சிருந்தா இப்பவே சொல்லிடு, என் முடிவை விட்டுட்டு நீ என்ன சொல்றியோ அதையே செய்றேன். இந்த கண்டத்தை விட்டு நீ விரட்டியடிச்சாலும் போக எனக்கு சம்மதம். எங்களோட அப்நார்மல் லவ்வுக்கு உங்க காதல் பலியாக வேணாம்.."

வெற்றியின் முகத்தை பார்த்தபடி மறுப்பாக தலையசைத்தான்.

"இல்ல.. நான் என் ஹனியை சமாளிச்சிப்பேன். நீங்க எங்களுக்காக எந்த முடிவையும் மாத்திக்க வேணாம். நேத்து வரை உங்க மேல கோபம்தான். ஆனா என் அக்கா குழந்தையை கலைக்க மாட்டேன்னு சொன்னதும் ரொம்ப கன்ப்யூஷன். எதுவா இருந்தாலும் தொலைச்ச இடத்துலதான் தேடணும். அவ எதையோ உங்ககிட்டயும், நீங்க எதையோ அவக்கிட்டயும் தொலைச்சி இருக்கிங்க. என்னவோ செய்ங்க. ஆனா ப்ளீஸ்.. என் அக்காவை கை நீட்டி அடிக்காதிங்க.‌ அவ மேல தப்பே‌ இருந்தாலும் கூட நீங்க அவளை அடிக்கும்போது எனக்கு உங்க மேல கொலை வெறிதான் வருது. இன்னொரு முறை அவளை வலுக்கட்டாயப்படுத்தாதிங்க. என்னை விட பெரியவளாவே இருந்தாலும் அவளும் சின்ன பொண்ணுதான்.. நீங்க சாதாரணமாவே கடுமையாதான் நடந்துக்கிறிங்க. வலுக்கட்டாயப்படுத்தும்போது கேட்கவே வேணாம். பத்து நாளா பெட்டை விட்டு எழாம இருந்தா. அந்த கஷ்டமெல்லாம் உங்களுக்கு புரியாது. அத்தனையையும் தாண்டி உங்ககிட்ட நான் இன்னைக்கு இசைஞ்சி போறேன்னா அதுக்கு என் அக்கா மட்டும்தான் காரணம். கண்டிப்பா உங்க தங்கச்சிக்காக இல்ல.."

வெற்றி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்.

"நான் பாரதிக்கிட்ட பேசணும்.." என்றவன் முன்னால் நடக்க "நீங்க என்ன முடிவெடுத்து இருக்கிங்க.?" என்றுக் கேட்டான்.

திரும்பியவன் "தெரியல.." என்றான்.

"அந்த குழந்தையை கலைக்க போறிங்களா.?" என்றவனின் கேள்வியில் அதிர்ந்தவன் அவசரமாக மறுத்து தலையசைத்தான்.

"அவ மேல இருந்த கோபத்தால, அவளுக்காகதான் முதல் முறை அப்படி சொன்னேன். ஆனா கடைசியா கேட்டது அவளோட முடிவை தெரிஞ்சிக்கதான்.." என்றவன் பாரதியின் அறைக்கு நடந்தான்.

பாரதி அழகாக கண்ணாடியில் தெரிந்தாள். புது பட்டும், தங்க நகைகளும் அம்சமாக அவளுக்கு பொருந்தி இருந்தன.

அவளின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது. நரேஷின் தாயாரும் கூட தயாராகி அங்கேதான் அமர்ந்திருந்தாள்.

"பாரதி.." வெற்றியின் குரலில் அனைவரும்‌ திரும்பினர்.

பின்னலில் சூட்ட வேண்டிய நகைகளை வைத்துக் கொண்டு நின்றாள் அலங்கரிக்கும் பெண்.

"வாவ்.. மாப்பிள்ளை அழகா இருக்கிங்க.." என்றான் பாரதியின் அண்ணன்.

இதழ் எட்டாத புன்னகையை பதிலாக தந்தவன் "கொஞ்சம் பேசணும் பாரதி. வெளியே வாயேன்.." என்று அழைத்தான்.

பாரதி குழப்பத்தோடு எழுந்து வெளியே சென்றாள்‌. குடும்பத்தார் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

மணமகள் அறையின் வெளியே வந்ததும் "உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.." என்றான்.

"சொல்லுங்க.. ஹனிமூன்க்கு புக் பண்ணியிருக்கிங்களா? ஒரு வாரமா பத்து நாளா.?" தரையை பார்த்தபடி வெட்க குரலில் கேட்டாள். அவளின் கேள்வியில் எச்சில் விழுங்கினான்.

மரணத்தை போலவே வலியை தந்தது இந்த சூழ்நிலையில் நிற்பதும்.

"பாரதி.." தயங்கியவன் "அம்ருதா பிரகனென்ட்.." என்றான்.

அதிர்ச்சியோடு நிமிர்ந்தவளின் விழிகளில் உடனே கண்ணீர் திரண்டு நின்றது.

"வெ..ற்றி" என்றவளுக்கு பேச்சே எழவில்லை.

"அவளுக்கு குழந்தையை கலைக்கறதுல விருப்பம் இல்லன்னு சொல்றா. என்னை கல்யாணம் செஞ்சிக்கிறதிலேயும் விருப்பம் இல்லன்னு சொல்றா.. ஆனா என்னால.." என்றவன் பேச்சு வராமல் தடுமாறி நின்றான்.

"உங்களால அவளை கை விட முடியலையாக்கும்.?" என்றாள் கோபமாக.

அவளின் கண்களை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை.

"நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்னு இன்னைக்குதான் புரிஞ்சது பாரதி. அவ என்னை தேடி வந்திருக்கான்னு தெரிஞ்சதும் ஏதாவது ஒரு விதத்துல எப்படியாவது மேஜிக் மாதிரி அவ என் பொண்டாட்டியா ஆகிட கூடாதுன்னுதான் தோணுச்சி. உன்கிட்ட பொய் சொல்ல பிடிக்கல பாரதி. இப்ப கூட அவளை கல்யாணம் செஞ்சிக்க ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கேன்னு அவ்வளவு ஹேப்பியா மனசு உணருது. ஆனா நான் கண்டிப்பா உன் மனசை உடைக்க மாட்டேன். நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். இங்கே முடிவெடுக்கும் உரிமை உனக்கு மட்டும்தான் இருக்கு. மனசு முழுக்க நீதான்னு பொய் சொல்வதை விட உண்மையை சொல்லி உன் முடிவை கேட்டுக்கலாம்ன்னுதான் வந்தேன்.."

பாரதி தன் கண்ணீரை துடைத்தாள்.

"உங்களுக்கு அவ மேல லவ் இருப்பதை நான் எப்பவும் மறுக்கல. ஆனா அவ உங்களுக்கு செட் ஆக மாட்டா. அவ பிரகனென்ட்ங்கற விசயம் உங்க மனசை குழப்பி விட்டுடுச்சி. அதை நான் பார்த்துக்கறேன்.. எங்கே அவ.?" என்றாள் நேர்கொண்ட பார்வையோடு.

வெற்றி முன்னால் நடந்தான். பாரதி அவனை தொடர்ந்து நடந்தாள். விசயத்தை ஒட்டு கேட்டு விட்ட வண்டு தன் முதலாளியை தேடி ஓடினான்.

சாத்தியிருந்த கதவின் வெளியே காவலுக்கு நின்றிருந்தான் ஆரவ். வெற்றி வருவது கண்டு கதவை திறந்தான்.

அம்ருதா நடுவில் நின்றிருந்தாள். சுற்றியிருந்து ஒருவரும் அவளிடம் பேசவில்லை. ஆனால் ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது.

வெற்றியை தாண்டிக் கொண்டு முன்னால் வந்த பாரதி அம்ருதாவின் அருகில் வந்து நின்றாள்.

தனது கையிலிருந்த வளையல்கள் இரண்டை கழட்டியவள் சோர்ந்து நின்றிருந்த அம்ருதாவின் உள்ளங்கையில் வைத்தாள்.

"ப்ளீஸ் இந்த குழந்தையை கலைக்க இதை யூஸ் பண்ணிக்கங்க.." என்றாள்.

அம்ருதா திகைப்போடு நிமிர்ந்து பார்த்தாள். வளையல்களை கை நழுவ விட்டு விட்டது அவளின் கரம். அவசரமாக பாதி குனிந்தவள் பிறகு மெதுவாகவே குனிந்து வளையல்களை கையில் எடுத்தாள். பாரதியிடம் நீட்டினாள்.

"இல்ல வேணாம்.. என்னால உங்க லைப்ல எந்த பிரச்சனையும் வராது. இது அவன் குழந்தை இல்ல. என் குழந்தை மட்டும்தான்.." என்றவள் வெற்றியின் காலிலிருந்து பார்வையை மேல் செலுத்தினாள். கழுத்தை தாண்டி இறுகிய உதடுகளை தாண்டி மேல் நகர்ந்தவள் அவனின் கண்களை காணாமல் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

"உங்ககிட்ட அவன் கோபப்பட்டதே இல்லன்னு கேள்விப்பட்டேன். உங்.. அவனுக்கு ஏத்த ஜோடி நீங்கதான். அன்னைக்கு நான் போன்ல சொன்னதை மனசுல வச்சிக்காதிங்க.. ஹேவ் எ ஹேப்பி மேரிட் லைஃப்.." என்றவள் குழம்பியிருந்த பாரதியின் கையை பிடித்து வளையலை அணிவித்து விட்டாள்.

ராமனுக்கும் மேகலாவுக்கும் தங்களின் மகளை சுத்தமாக புரிந்துக் கொள்ள முடியவில்லை.

"இல்ல.. எனக்கு பயமா இருக்கு. இந்த குழந்தையால என் எதிர்கால லைஃப் பாதிக்கப்படலாம். ப்ளீஸ் கலைச்சிடுங்க. உங்க டிராமாவை அவர் வேணா நம்பலாம். ஆனா நான் நம்ப மாட்டேன்.."

மேகலா மகளின் அருகில் வந்தாள்.

"என் பொண்ணுதான் வெற்றியோட பொண்டாட்டி. இல்லன்னா வெற்றி ரேப் கேஸ்ல ஜெயிலுக்கு வேணா போகலாமே தவிர உங்களுக்கு மணவாளன் ஆக முடியாது.." என்றாள்.

"எங்க அண்ணனை கட்டம் கட்டிட்டாங்க.." கனிமொழி பரிதாபமாக சொன்னாள். அவளின் முகத்தில் கூட ரத்த ஓட்டம் குறைந்திருந்தது இப்போது.

"ஜாக்கெட் டைட்ன்னா கழட்டி எறிஞ்சிட்டு பழைய டிரெஸ்ஸை போட்டுக்கோ.." என்றான் அவளருகில் நின்றிருந்த சக்தி.

"என்ன புது பாசமா இருக்கு.?" முனகியவளை முறைத்தவன் "உன் மேல எப்ப நான் பாசமா இல்லாம இருந்தேன்.?" என்று கடுப்பாக கேட்டான்.

"போதும். இங்கே வந்தும் உங்க முகத்தை காட்ட வேணாம். இப்ப டிரெஸ் மாத்துற சூழலா இருக்கு.? அப்புறம் பார்த்துக்கலாம்.." என்றவள் அங்கே நடப்பதை காண்பதில் சுவாரசியமானாள்.

மேகலாவின் பதிலில் பாரதி திணறி போனாள்.

"அம்மா நீங்க சும்மா இருங்க.. அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்காதிங்க.." அம்மாவை அதட்டிய அம்ருதா "நீங்க போய் உங்க கல்யாண வேலைகளை பாருங்க.. நாங்க கிளம்பறோம்.." என்றுவிட்டு வாயிலை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

"ஆரவ் போலிஸ்க்கு போன் பண்ணு.." என்ற அம்மாவை திரும்பிப் பார்த்து முறைத்த அம்ருதா "இந்த பொண்ணை ப்ளாக்மெயில் பண்ணாதிங்க. எனக்கு அவனை பிடிக்கல. அவங்களாவது சந்தோசமா வாழட்டும்.." என்றாள் எரிச்சலாக.

கையை ஓங்கிய மேகலா‌ நொடி நேரம் தயங்கினாள். பிறகு மகளின் கன்னத்தில் பட்டென்று ஒரு அறையை விட்டு விட்டாள்.

"ஒன்னு குழந்தையை கலை. இல்லன்னா வெற்றியை கட்டிக்க.. வெற்றி உன்னை கட்டிக்கணும். இல்லன்னா ஜெயிலுக்கு போகணும்.. உனக்கு இரண்டு ஆப்சன். வெற்றிக்கு இரண்டு ஆப்சன் தந்திருக்கேன். வயித்துல புள்ளையோடு புருசன் இல்லாம உன்னை எப்படி நான் வீட்டுல வச்சிக்க முடியும்.? சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.? அந்த குழந்தை நாளைக்கு வளர்ந்து அப்பா எங்கேன்னு கேட்கும்போது நாங்க‌ என்ன பதில் சொல்ல முடியும்.? நாளைக்கு நாங்க இல்லாத காலத்துக்கு உன்னையும் உன் குழந்தையையும் யார் பார்த்துப்பா.? உன் தம்பி துணையா இருந்தாலும், உன் தம்பிக்கு துணையா‌ வர போறவ உனக்கு கடைசி வரை சப்போர்டா இருக்க மாட்டா.. அவ புருசனையும் சப்போர்ட் பண்ண விட மாட்டா.." என்றவளின் பார்வை கொதிப்போடு தேன்மொழியிடம் சென்று மீண்டது.

"நான் வாழ்ந்துப்பேன்ம்மா. என் மேல நம்பிக்கை இல்லையா.?"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம். ஒன்னு அவனை கட்டிக்க. இல்லன்னா கருவை அழி. அப்படியும் இல்லன்னா செத்து போ. நாளைக்கு நீ வதைப்படுவதை பார்ப்பதை விட இப்பவே தலை முழுகிட்டு போயிடுறேன்.."

அம்ருதாவின் விழிகளில் கண்ணீர் கோர்த்தது. இவ்வளவு நேரமும் கலங்காத கண்கள் இப்போது கலங்கியது கண்டதும் பார்வையை மாற்றிக் கொண்டான் வெற்றி.

உதட்டை கடித்தபடி வயிற்றின் மீது உள்ளங்கையை பதித்தவள் கலங்கிய கண்களை மூடினாள். "உனக்கு நான் துணையா வரேன்.." என்று முணுமுணுத்தாள். ஒருவருக்கும் அவள் சொன்னது கேட்கவில்லை.

"நீங்க உங்க குழந்தைக்கு துணையா போக வேண்டாம்.." என்ற திடீர் குரலில் கண்களை திறந்தாள்.

அறை வாசலில் நின்றிருந்தான் நரேஷ்.

அவன் சொன்னது கேட்டு வெற்றிக்கு முகம் நிறமிழந்தது.‌ நரேஷ் அவளின் உதட்டசைவை வைத்து இதை சொல்லி இருக்கிறான் என்பது புரிந்தது. அம்ருதாவை வெறித்தவனுக்கு அவளின் கழுத்தை நெரிக்க தோன்றியது.

"உங்களுக்கு இவ தடையா இருக்க மாட்டா.." என்றவன் அருகே வந்து பாரதியின் கையை பிடித்தான்.

கோபத்தோடு அவனை பார்த்த பாரதி "சான்ஸ்க்காக காத்திருந்தியா.?" என்றாள் ஏளனமாக.

"இல்லன்னு சொன்னா நம்ப போறியா.? உன்னை காதலிக்க என்னை மாதிரி யாராலும் முடியாது. வெற்றிக்கு அந்த பொண்ணு மேல இருக்கும் காதல் இப்பவும் தீரல. தெரிஞ்சே சேத்துல இறங்காத.." என்றான் கடுப்போடு.

"ஆனா நான் அவரை லவ் பண்றேன். ஒருத்தியோட மனசுல நினைச்ச காதலை யாராலும் மாத்த முடியாது.." என்றவளை பார்த்து நக்கலாக நகைத்தவன் "அப்ப அவர் மனசுல இருக்கும் காதலை உன்னால மாத்திட முடியுமா.?" எனக் கேட்டான்.

"முடியும்.." வீராப்பாக சொன்னவளின் கையை இறுக்கியவன் "உன்னால முடியும்போது என்னால அது முடியாம போகுமா.? நீ இந்த நரேஷோட பொண்டாட்டின்னு காலமே விதிச்சிடுச்சி. மூனு வருசம் லேட் பண்ணேன்னு இத்தனை நாள் தண்டனை தந்த. அதுவே போதும். இதுக்கு மேல தண்டனை தருவதா இருந்தா கல்யாணம் பண்ணிட்டு கொடு.." என்றான். அவள் முறைப்பதை பொருட்படுத்தாதவன் அங்கிருந்தவர்கள் புறம் திரும்பினான்.

"இந்த பொண்ணை நான் மூன்றரை வருசமா லவ் பண்றேன். இது கடவுள் எனக்கு தந்த சந்தர்ப்பமா நினைக்கிறேன். இவளை மருமகளாக்கிக்க யாரும் நினைக்காதிங்க.." என்றான்.

"அவளை வெற்றி ரொம்ப லவ் பண்றான். விட்டுடுங்க. அவங்க கல்யாணம் பண்ணிக்கிறதுதான் முறை.." என்ற அம்ருதாவின் பேச்சு அவனை கவர்ந்திழுத்து விட்டது.

"அவங்கன்னு சொல்லாதிங்க சிஸ்டர். இது இவளோட ஒருதலைக் காதல்.."

மறுப்பாக தலையசைத்தாள் அம்ருதா.

"அவகிட்ட அவன் கோபப்பட்டதே இல்ல.. அவங்கதான்.." இவள் மீதியை சொல்லும் முன் "மரக்கட்டை கூட கோபமெனும் உணர்வை தராது சிஸ்டர். வெற்றியை பொறுத்தவரை இவளும் மரக்கட்டையும் ஒன்னுதான். காதலும் கோபமும் இன்னும் பல உணர்வுகளும் நமக்கானவங்ககிட்டதான் வரும்.." என்றான் நரேஷ்.

"நான்.." பாரதி பேச தொடங்கியதும் "ஸ்ஸ்‌.." என்று உதட்டின் மீது விரல் வைத்து அவளை தடுத்தவன் அம்ருதாவின் புறம் பார்த்தான்.

"உங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் சிஸ்டர்.. ஆனா கொஞ்ச நாள் கழிச்சி எல்லாமே மறந்துடும். அவருக்கு இவகிட்ட கோபம் வரலங்கற விசயம் உங்களுக்கு வெறும் ஆதங்கத்தை மட்டும் தரல. அதுக்கும் மேலான ஒரு விரக்தியை‌ தருது. கண்டிப்பா வெற்றி ஒருநாள் உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாறுவாரு. மனசை தளர விடாதிங்க. உங்க காதலுக்குன்னு ஒரு சக்தி இருக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும்.." நரேஷ் சொன்னது கேட்டு அவளுக்கு கூடுதல் விரக்தியுடனான நகைப்புதான் வந்தது.

பாரதியை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான் நரேஷ்.

"என்னை விடு.." என்றவளிடம் "நான் உன் அம்மா அப்பாகிட்ட நம்மை பத்தி சொல்லிட்டேன்.." என்றான். சட்டென்று பேச்சு நின்றுப் போனது அவளுக்கு.

"ஆபரேஷனை பத்தியா.?" பயத்தோடு கேட்டவளை புது நினைப்போடு பார்த்தவன் "ஆனா நீ எதுக்கும் பயப்படாத.." என்று கண்ணடித்தான்.

"என்ன பாரதி இது.?" என்று அவள் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் கேட்டாள் அம்மா. அவளின் குடும்பம் மொத்தமும் அவளை கோபமாக பார்த்துக் கொண்டு நின்றது.

மிரள விழித்தவளின் தோளோடு அணைத்த நரேஷ் "நான் வெறும் மெக்கானிக்ன்னு இவ என் காதலை ஏத்துக்கல அங்கிள்.. ஆனா நானும் பிசினஸ் மேன்தான்.. இவளுக்காகதான் நான் அந்த மெக்கானிக் ஷெட்டையே ஓபன் பண்ணேன். மூனு வருசம் சைட் அடிச்சும் உங்க பொண்ணுக்கு நான் கண்ணுல தெரியல. ஆனா பேங்க்ல வேலை செய்றவன்னு அவன் மேல உடனே காதல் பத்திக்கிச்சி.." என்றான்.

பாரதி கோபத்தோடு நிமிர்ந்துப் பார்த்தாள். "நான் காசுக்காக உன்னை ரிஜெக்ட் பண்ணேனா.? பத்து பைசா கூட வாங்காம நீ யார் என்னன்னு கூட தெரியாம நான் உனக்கு கிட்னி தந்தேன்.."

"என்ன கிட்னி.?" பாரதி தன் தாயாரின் கேள்வியில் அதிர்ந்தாள்.

"நீ சொல்லலையா.?" என்றாள் தன்னை அணைத்திருந்தவனை பார்த்து.

"ம்ஹூம்.. நீதான் இப்ப ஓட்டை வாயை வச்சி உளறின.. நீ என்னை ரொம்ப காதலிச்ச. ஆனா நான் மெக்கானிக்ன்னு நீ அந்த காதலை சொல்லலன்னு சொன்னேன்.. அப்படியே மறக்காம வெற்றியோட குழந்தை அவரோட முன்னாள் இந்நாள் காதலி வயித்துல வளருதுன்னும் சொல்லிட்டேன். எந்த பேரண்ட்ஸ் அவனுக்கு உன்னை கட்டி வைப்பாங்க.?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

நரேஷின் ஆயுதம் எதுவென்று இப்போது புரிந்துப் போனது இவளுக்கு. இன்னொருத்திக்கு குழந்தை தந்தவனை இவள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் பெற்றோர் நிச்சயம் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று புரிந்துப் போனது.

கூடற்ற பறவை போல நின்றிருந்தவளின் கையை பற்றியவன் "நானும் இவளும் கல்யாணம் செஞ்சிக்க நீங்க அனுமதி தரணும் அங்கிள்.." என்றான்.

அருகே நின்றிருந்த ரத்னாம்பிகை அவள் கிட்னி தந்தது முதல் இவனின் மூன்று வருட காதல் வரை அனைத்தையும் விவரித்துச் சொன்னாள்.

பெற்றோர் பாரதியை கோபமாக பார்த்தனர்.

"ஒரு விசயம் எங்ககிட்ட சொன்னியா.?"

பரிதவிப்போடு கலங்கி நின்றிருந்தாள். நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் நரேஷ்.

"முகூர்த்தம் முடியும் முன்னாடி கல்யாணத்தை பண்ணிடலாமே.." என்றாள் ரத்னாம்பிகை மகனின் முகத்தை பார்த்தவாறு.

யோசித்தார் அப்பா. சொந்தங்கள் நிரம்பி இருந்தது. திருமணம் நின்றுப் போவது மகளுக்கு கெட்ட பேரை ஏற்படுத்தி தரும். அதை விட முக்கியமாக இவ்வளவு நேரமும் ரத்னாம்பிகை சொன்னதை வைத்து பார்த்தபோது மகளுக்கு இவனையே திருமணம் செய்து வைப்பது சரிதான் என்று தோன்றியது.

"மேடைக்கு போகலாம்.."

"அப்பா.." தயக்கமாக இழுத்த மகளை திரும்பிப் பார்த்து முறைத்தவர் "இன்னொரு பெண்ணோடு கூடி குழந்தை பெத்துக்க முயற்சி பண்ணவனுக்கு உன்னை கட்டி வைக்க மாட்டேன்.. உனக்கு ஒரு கிட்னி இல்லன்னு தெரிஞ்சா எந்த மாப்பிள்ளையும் கேள்வி கேட்பான். நீ இவரை கட்டிக்கறது எல்லா வகையிலும் பொருத்தம். உனக்காக மூனு வருசம் சொந்த ஊரை விட்டு வந்து கஷ்டப்படுறாரு. எனக்கு அவரை பிடிச்சிருக்கு. நீ பார்த்த மாப்பிள்ளைக்கு தரம் இல்ல. இது நான் பார்த்த மாப்பிள்ளை. மரியாதையா வந்து கல்யாணம் பண்ணிக்க.." என்றவர் முன்னால் நடந்தார்.

மணமேடையில் அதே சொந்தங்கள் முன்னிலையில் மண மக்களாக அமர்ந்தனர் பாரதியும் நரேஷும்.

"எங்களோட குடும்ப பிரச்சனை காரணமா அந்த மாப்பிள்ளையோடு எங்க பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியல. இவர் எங்களோட தூரத்து சொந்தம். இவங்க வீட்டுல இருந்து என் பொண்ணை ரொம்ப நாளா பொண்ணு கேட்டுட்டு இருந்தாங்க. நாங்கதான் தர முடியலன்னு சொல்லிட்டு இருந்தோம். ஆனா இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டோடு பிரச்சனை. எங்க பொண்ணு கல்யாணத்தை நிறுத்தி கூட்டிப் போறதை விட இவரோடு கல்யாணம் பண்ணி வைக்கிறதே சரின்னு தோணுது. அதனாலதான் இந்த மாப்பிள்ளை மாற்று.." என்று சொந்தங்களிடம் சிறு விளக்கம் தந்தார் பாரதியின் தந்தை.

"எனக்கு அவரைதான் பிடிச்சிருக்கு. உன் மேல எனக்கு எவ்வளவு கோபம்ன்னு உனக்கு தெரியாது." என்ற பாரதியை சிரிப்போடு பார்த்த நரேஷ் "நல்லதுதான். இந்த கல்யாணத்தோடு நம்ம ஸ்டோரி லைன் முடிஞ்சிடுமோன்னு நினைச்சேன் நான். இதுக்கப்புறமும் பைட்டிங் டேட்டிங் லவ்விங் ரொமான்ஸ்ன்னு எல்லாத்துக்கும் நீ ஏற்பாடு செஞ்சது எனக்கு பிடிச்சிருக்கு.." என்றவன் தாலியை அவளின் கழுத்தில் கட்டினான். (பயபுள்ளை ரைட்டருக்கே ரூட்டு போட்டு தருது)

***

அம்ருதாவை அதே பார்வை பார்த்து நின்றான் வெற்றி.

"இப்ப என்ன நடக்கும்.? அண்ணனுக்கும் இந்த பேய்க்கும் கல்யாணமா.?" தேன்மொழி சிறு குரலில் தன் தாயிடம் கேட்டாள். மேகலாவும் வளர்மதியும் அவளை ஒரே பார்வையில் முறைத்தனர்.

"என் பேரனை போலிஸ்ல பிடிச்சி தர உனக்கு முழு உரிமையும் இருக்கு. தயவுசெஞ்சி அதையே பண்ணு. உன்னை எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டி போறதுல எங்களுக்கு துளியும் விருப்பம் இல்ல.." என்றார் தாத்தா வெளிப்படையாக.

"தாத்தா‌‌.." வெற்றி தடுக்க முயன்றான்.

"தப்பை நீ மறுபடியும் செஞ்சிட்டேன்னு நாங்க மறுபடியும் இவகிட்ட கெஞ்ச முடியாது. தெரிஞ்சே உன் லைப்பை நரகத்துல தள்ளி விட முடியாது.." என்ற தாத்தாவிடம் "இல்லப்பா அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான்.‌ எனக்கு தெரியும்.. இவன் மேல உயிரா இருந்தா. சண்டை போட்டுட்டு லூசு மாதிரி பண்ணிட்டு இருக்காங்க இரண்டு பேரும்.." என்றார் தியாகராஜன்.

வெற்றி தன் தந்தையை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

"இல்ல மாமா.. எனக்கு இவனை நிஜமாவே பிடிக்கல.. இவன் பக்கத்துல வாழுறதுக்கு பதிலா நான் செத்து கூட போவேன்.." என்றாள் அம்ருதா திடமாக.

நகைத்தபடியே அவளருகே வந்தான் வெற்றி.

"செத்து கூட போவியா.? ஆனா இனி உன் லைப்ல உனக்கு பிடிக்காதது மட்டும்தான் நடக்கும்.. என் பக்கத்துல இல்ல.. என்னோடு சேர்ந்து வாழ போற நீ.." என்றான் மிரட்டும் குரலில்.

அம்ருதா திகைத்து நின்ற வேளையில் நான் பிரேக்கை போடுறேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. 10 நிமிச யூடி. இன்னைக்காவது கமெண்ட்‌ஸ் கொஞ்சம் சேர்ந்து வருமா.?
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN