அத்தியாயம் 100

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யஷ்வந்த் மச்சானின் தோளில் அடித்தான்.

"உன்னால அவ அழறா.."

சூர்யாவுக்கும்தான் வலித்தது.

"இப்ப விட்டுட்டா அப்புறம் காலத்துக்கும் நான் அழ வேண்டி இருக்கும்.." அவளின் முகத்தைப் பாராமல் சொன்னான்.

செல்லா உதட்டை அழுந்த கடித்து கண்ணீரை விழுங்கினாள். தாரணியை பார்த்தாள்.

"சாரிங்க.. நீங்க எனக்கு செஞ்ச துரோகம் எனக்கு ஞாபகத்துல இல்ல. உங்க பக்கம் நியாயம் இருக்குன்னுதான் எனக்கும் தோணுது. உங்க ஹஸ்பண்டுக்கும் எனக்கும் இடையில் ஏதாவது அஃபேர் இருந்ததான்னு தெரியல.. அப்படி ஏதாவது இருந்தா மன்னிச்சிடுங்க.." என்றாள் கையை கூப்பி.

யஷ்வந்தும் சூர்யாவும் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தனர்.

"என்ன உளறுற நீ.?" யஷ்வந்த் கடிந்துக் கொண்டான்.

அவள் திரும்பவில்லை.

"நான் எப்பவும் எனக்காக எந்த கொலையும் செய்யல தாரணி.. நீங்க எனக்கு செஞ்சது துரோகமாவும் எனக்கு தோணல.. அன்னைக்கு ஒன்பது வயசு விவரம் தெரியாத பொண்ணுக்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்னு கேள்விப்பட்டுதான் அவனை கொல்ல சொன்னேன். அது எனக்கு தப்பா தோணல. நான் மனோகரை கொல்ல காரணம் அவர் என்னை கொல்ல டிரை பண்ணாருங்கற காரணத்துக்காக இல்ல.. என் சூர்யாவை அழ வச்சிட்டாரேன்னுதான்..நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன்.. நீங்களாவது என்னை நம்புங்க.." என்றவள் அங்கிருந்து எழுந்தாள். ஓடாத குறையாக உள்ளே போனாள்.

அவளின் முதுகை வெறித்துக் கொண்டிருந்த சூர்யா "எக்ஸ்க்யூஸ்மீ.." என்றுவிட்டு எழுந்து ஓடினான்.

செல்லா பொம்மைகள் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள். அறையின் நடுவே நின்றபடி முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள். எதற்காகவும் வராத கண்ணீர் இவனின் வெறுப்பை கண்டு வந்துக் கொண்டிருந்தது.

"செல்லா.." அறைக்குள் நுழைந்து அவளின் தோளை தொட்டான் சூர்யா.

முகத்தை துடைத்துக் கொண்டு திரும்பினாள்.

"ஏன் அழற.?"

சுவரை பார்த்தவள் "நான் அழல.." என்றாள்.

அவளின் தாடையை பற்றி தன் புறம் திரும்பியவன் "எனக்கு யாராவது கஷ்டம் தந்தா அவங்களை கொல்லுவியா நீ.?" எனக் கேட்டான்.

"ஆமா.." என்றவளை கோபத்தோடு பார்த்தவன் "கொலை செய்றது உன் தொழில் கிடையாது.." என்றான்.

"அப்படின்னு நானும் சொல்லலியே.! எனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தரை யாரெல்லாம் கஷ்டப்படுத்துறாங்களோ அவங்களை கொல்லுவேன்.. இதை என்னால மாத்திக்க முடியாது."

அவளை விட்டுவிட்டான் சூர்யா. நெற்றியை பிடித்தான்.

"இது தப்பு.."

அவள் அவனின் முகம் பார்க்கவில்லை.

"இந்த பிடிவாதம் இருக்கும்வரை எனக்கு கஷ்டம்தான்.. இதுக்கு பதிலா எப்பவும் வெட்கப்பட்டுக்கிட்டே இருக்கும் அந்த பழைய செல்லாவே பரவால்ல.." முணுமுணுத்தான்.

"நீங்க என்னை இப்படியேதான் வெறுத்துட்டு இருக்க போறிங்களா.?" அவள் தனது விழி துடைத்த பின்னும் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணீர் அவனின் உள்ளத்து உறுதியை உடைத்தது.

அவளை அணைத்துக் கொண்டான். குழந்தைக்காக என்று சொல்ல முடியாது. அவளின் கண்ணீரை பார்க்கும் சக்தி இல்லை. அதற்காக இறங்கிப் போனான்.

"உனக்கு பிடிச்ச யாருக்கும் இனிமேல் கஷ்டம் வராது.." என்றான் அவளின் முதுகை வருடியபடி.

"உங்களுக்கு என் மேல இருந்த கோபம் போயிடுச்சா.?" என்றவளின் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன் "இல்ல.. ஆனா இனி உன்னை எந்த தப்பும் செய்ய விட மாட்டேன் நான்.." என்றான்.

'மூனு நாளா இது.? காட்.. மூனு ஜென்மத்தையே கடந்து வந்திருக்கலாம் இதுக்கு பதிலா..' அவளின் முகம் முழுக்க முத்தங்களை தந்தான்.

"என்னை வெறுக்காதிங்க. என்னால தாங்க முடியல.."

"நான் வெறுக்கும்படி நீயும் நடந்துக்காத.. சீரியல் கில்லர் மாதிரி யோசனை செய்வதை விட்டுட்டு உன் மனசை உறுத்தும் எந்த பிரச்சனைன்னாலும் நேருக்கு நேரா என்கிட்ட சொல்லு. நான் உனக்கு பெஸ்ட் சொல்யூஷன் சொல்றேன்‌.." என்றான்.

சரியென்று தலையசைத்தாள். அவளின் வயிற்றை வருடினான். அவளின் தாடையில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்தான்.

"அந்த பொண்ணை பயமுறுத்தாத.. அவளுக்கு தீங்கு செய்ய நினைக்காத.. உன்னால அவளுக்கு ஏதாவது ஆச்சின்னா.." என்று நிறுத்தியவன் அவளின் முகம் பார்த்தான்.

"உன்னை விலக்கி வைக்க மாட்டேன். பயப்படாத.." என்றவன் அவள் நிம்மதியடையும் முன்பே "நீ என்னை உயிரோடு பார்க்கவே முடியாது.." என்றான்.

கன்னங்களில் சட்டென்று இறங்கி விட்ட கண்ணீரோடு அவனை வெறித்தாள்.

"நான் சொன்னதை நல்லா மனசுல வச்சிக்க.." என்றுவிட்டு நகர்ந்தான்.

***

குண்டு குண்டாக இருந்த மல்லிகைகளை பறித்து பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டிருந்தாள் சங்கவி. ஆதீரன் அவளுக்காக வாங்கி வந்து வைத்த செடிகள் அனைத்தும் பூக்களை மலர செய்துக் கொண்டிருந்தன இப்போது.

பூக்களை அவ்வப்போது நுகர்ந்துக் கொண்டே பறித்துக் கொண்டிருந்தாள்.

"பேபி.." பின்னாலிருந்து குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள்.

ஆதீரன் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

"இன்னும் கொஞ்சம் பூ இருக்கு.. பறிச்சிட்டு வரேன்.." என்றவளின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கினான். நிறைய பூக்கள் இருந்தன.

அவள் பூப்பறிப்பதில் ஆர்வமாக இருந்தாள். இவன் அவளையும் பூக்களையும் மாறி மாறி பார்த்துவிட்டு பாத்திரத்தில் இருந்த பூக்களை அப்படியே வானம் நோக்கி வீசினான்.

செடியின் நடுவில் எட்டாத இடத்தில் இருந்த பூக்களை சிரமப்பட்டு பறித்துக் கொண்டிருந்த சங்கவி தன் மீது கொட்டிய பூ மழையை கண்டு அதிர்ந்து திரும்பினாள்.

தரையில் அவளை சுற்றி பூக்களாகவே இருந்தன. மூக்கு சிவக்க நிமிர்ந்தாள். ஆதீரன் பற்களை காட்டியபடி நின்றிருந்தான்.

'புல்டோசர் பல்லா..' கருவியவள் அருகே சென்று அவனின் தலையில் ஓங்கி கொட்டினாள்.

"அம்மா.." தலையை தேய்த்தவன் "ஏன்டி.?" என்றான் எரிச்சலாக.

"நான் கஷ்டப்பட்டு பூவை பறிச்சி வச்சிருந்தா நீங்க லூசு மாதிரி கொட்டிட்டிங்க.."

"விளையாடினா கூட தப்பா.?" என்றவனின் தலையில் மேலும் ஒரு கொட்டு வைத்தாள். "நீங்க விளையாடணும்ன்னா நீங்களே பூக்களை பறிச்சி வச்சி விளையாடணும். நான் பறிச்சதை வச்சி விளையாட கூடாது.." என்றவளுக்கு மனம் ஆறவேயில்லை.

"உனக்கு நான் பத்து முழம் பூ வாங்கி தரேன்.."

"இல்ல எனக்கு இதே பூக்கள் மண்ணுல விழும் முன்னாடி இருந்த மாதிரியே வேணும்.." என்றாள் கையை கட்டியபடி.

"சில்லறைதனமா இருக்கு.." என்றவனை அடிக்கடி கொட்டவும் முடியவில்லை அவளால். அதற்காக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு அமைதியாகவும் இருக்க முடியவில்லை.

எட்டி நின்று அவனின் தலைமுடியை பற்றினாள்.

"ராட்சசி என்னடி பண்ற.?" எனக் கேட்டவனின் தலையிலிருந்த முடிகளை அவள் ஆய்ந்து விட இருந்த நேரத்தில் அவனின் போன் ஒலித்து அவனை காப்பாற்றி விட்டது.

"ஹலோ தாரணி.." என்றான் அவளை விட்டு விலகி நின்று.

"அண்ணா நல்லா இருக்கிங்களா.?" என்று விசாரித்தாள் அவனின் தங்கை.

பொது நல விசாரிப்புகள் முடிந்த பிறகு "அண்ணிக்கிட்ட கொடுங்க அண்ணா.. பேசணும் போல இருக்கு.." என்றாள்.

புன்னகைத்தபடியே போனை மனைவியிடம் நீட்டினான். "என் தங்கச்சி.." என்றான்.

தயக்கத்தோடு போனை வாங்கினாள்.

"அண்ணி.." தாரணி வாய் திறந்த வேளையில் அவளிடமிருந்து போனை பிடுங்கினான் யஷ்வந்த்.

"ஹாய் குட்டி ஏஞ்சல்.." என்றான் தூரமாக வந்து நின்று. தாரணி கணவனின் முதுகை வெறித்தாள். அண்ணனுக்கு போன் செய்து அண்ணியோடு பேசு என்று சொன்னவன் பேச ஆரம்பித்ததும் போனை பிடுங்கிக் கொண்ட மாயம் புரியவில்லை.

அவனின் குட்டி ஏஞ்சல் அழைப்பில் விக்கித்து நின்றாள் சங்கவி. என்ன பதில் தருவாள் கணவன் முன்னால் நின்றுக் கொண்டு.

"உன் ஹிட்லர் பக்கத்துல இருந்தா பயப்படாத.. தாரணிக்கிட்ட பேசுற மாதிரியே பேசு.." என்று ஐடியா தந்தான்.

"ம்.. சரிங்க.." என்றாள் யோசித்தபடியே.

ஆனால் யஷ்வந்த் ஆரம்பிக்கும் முன்பே அந்த போனை சூர்யா பிடுங்கிக் கொண்டான். "நான்தானே கால் பண்ணி தர சொன்னேன்.? என் ஸ்வீட் பியர்கிட்ட நீ ஏன் பேசுற.?" என்றபடி போனை காதில் வைத்தான்.

"பப்பும்மா.." என்றான்.

'அவ்வ்.. என் சூர்யா மாமா..' முகம் மொத்தமும் புன்னகையின் வசம் சென்றது அவளுக்கு. ஆனால் வாய் திறக்க முடியாதபடி ஹிட்லர் அல்லவா அருகில் நின்றிருந்தான். நல்லவேளையாக செடியிலிருந்த ஒன்றிரண்டு மல்லிகைகளை பொறுக்குவதில் கவனமாக இருந்தான் அவன். இல்லையேல் இவளின் முக மாற்றத்திற்கே பெரிய சண்டை வந்திருக்கும்.

"நல்லா இருக்கிங்களா.?" என்றாள் குதூகலத்தை மறைத்துக் கொண்டு.

"பைன்.. நீ எப்படி இருக்க.? உன் போன் ஏன் ரீச் ஆகல.?"

"போன் உடைஞ்சி போச்சி.." கிசுகிசுப்பாக சொன்னாள்.

"ஹவ்.?" என்றவனிடம் எப்படி அந்த கூத்தை சொல்வாள் இவள்!?

மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாள். எதிரில் இருந்தவன் என்ன புரிந்துக் கொண்டானோ தெரியவில்லை.

"உன் வீட்டுக்காரர் சந்தேகப்படுறாரா.?"

"ம்ம்.."

"சோ சேட்.. பட் ஐ மிஸ் யூ.."

"நானும்.."

"நான் இன்டியா வரேன் கவி.."

"வாவ்.. எப்ப.?" என்றவளுக்கு உள்ளம் துள்ளியது.

"தாரணியோட வளைகாப்புக்கு.."

"அவளும் வருவாளா.?" சிறுகுரலில் கேட்டாள்.

"ம்கூம். சான்ஸ் இல்ல.. நான் நேர்ல வரும்போது நிறைய பேசலாம்.."

"ம்ம்.." என்றவளுக்கு இப்போதே அவனை பார்க்க வேண்டும் என்று இருந்தது.

"அவ எப்படி இருக்கா.? சாப்பிட்டாளா.? இப்ப என்ன பண்றா.?"

"சாப்பிட்டா.. நல்லாருக்கா.. என் அம்மாவோடு சேர்ந்து பேபி கேர் பத்தி ஏதோ நியூஸ் பார்த்துட்டு இருக்கா.."

"ஐ ரியலி மிஸ் ஹேர்.." என்றவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

"சீக்கிரம் பார்க்கலாம் கவி.. அழாத.. நீ அழுதா எனக்கும் கஷ்டமா இருக்கு.." அவன் சொன்னது கேட்டு அழுகையை மறந்தாள்.

"பீ சேப்.." என்றவன் தொடர்பை துண்டித்தான்.

சங்கவியின் பூரிப்பு சேர்ந்த முகத்தை பார்த்தபடி அவளை நெருங்கினான் ஆதீரன்.

"பேசி முடிச்சிட்டியா.?" என்றவனிடம் "ம்ம்.." என்று தலையசைத்தபடி போனை நீட்டினாள்.

"என்ன விசயம் பேசுனிங்க.?"

"நல்லா இருக்கிங்களா.? உங்க ஊர்ல மாரி மழை பொழிஞ்சதா.? மண்ணுல விளைச்சல் நல்லா இருக்கா.? வானத்துல சூரியன் நல்லா இருக்கான்னு பேசினோம் மாமா.." என்றவளின் நக்கலை கண்டு புருவம் தூக்கினான்.

'வாயை கொடுத்து வம்புல மாட்டுறியே சங்கவி..' தலையை சிலுப்பி கொண்டாள்.

அவளை ஏற்ற இறக்கமாக பார்த்தவன் ஒற்றை கையால் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மறுகையால் அவளின் வயிற்றோடு அணைத்து தூக்கினான். அவனின் இடுப்பில் ஊஞ்சலாடாத குறை அவளுக்கு.

"ஐயோ விழுந்துடுவேன்.." கத்தியவளை கீழே விடாமல் தூக்கிக் கொண்டு உள்ளே போனான்.

"அத்தை பார்ப்பாங்க.." அவளின் எந்த சொல்லும் அவனின் காதில் ஏறவில்லை.

வீட்டிற்குள் வந்த பிறகு அவளை நிறுத்தினான். தலை சுற்றி சாய போனவளை நேராக நிற்க வைத்தான்.

"இதுக்கே இப்படியா.?" என்றவனை கடித்து குதற சொன்னது அவளின் மனம்.

மறுநாள் அலுவலகம் செல்லும் வழியில் நிறுத்தி நூல்கண்டையும் ஸ்வெட்டர் பின்னும் ஊசியையும் வாங்கிக் கொண்டாள்.

"இது எதுக்கு.?" என்றவனிடம் "உங்க தங்கச்சிக்கு பிரசென்ட் பண்ண.." என்றாள்.

"உனக்கு ஸ்வெட்டர் பின்ன தெரியுமா.?" சந்தேகமாக கேட்டான்.

"கத்துக்க வேண்டியதுதான்.." என்றவள் அன்று பகல் முழுக்க கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்துக் கொண்டு யூடியூப்பில் ஸ்வெட்டர் பின்னுவது எப்படி என்ற வகுப்பை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதீரனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் கண்களில் இருந்த ஆர்வமும், அவளின் சொதப்பலும் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

"ரொம்ப சைட் அடிக்காதிங்க.." என்றாள் அவனை பார்க்காமலேயே.

"என் பொண்டாட்டியை நான் ரொம்பதான் சைட் அடிப்பேன்.."

சங்கவி சிரிப்போடு தலையசைத்தாள்.

***

இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள் யஷ்வந்தும் தாரணியும். அவன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றது கார்.

ஹோட்டல் வாசலில் இறங்கியவன் மனைவிக்காக காத்திருந்தான்.

"நான் இப்படியே எங்க வீட்டுக்கு போயிடுறேன் யஷூ.. இன்னும் டைம் இருக்கு.." காரை விட்டு இறங்காமல் சொன்னாள்

"பரவால்ல வா.. நாளைக்கு அனுப்பி வைக்கிறேன்.." என்றவன் அவளோடு சேர்ந்து அறைக்கு சென்றான்.

அங்கே அவனே அவளின் உடையை மாற்றி விட்டான். அவளுக்கு உணவை ஊட்டி விட்டான். மாத்திரை மருந்து தந்தான்.

உணவு முடித்துவிட்டு அமர்ந்திருந்தவளை தூக்கிக் கொண்டு படுக்கையை நோக்கி நடந்தான்.

"எனக்கு கையில்தான் கட்டு. என்னால நடக்க முடியும்.." என்றாள்.

அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவள் முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவளின் மணிக்கட்டுகள் இரண்டையும் சேர்த்து பிடித்தான்‌. அவளின் கட்டு போட்ட கைகளை தன் கண்களின் மீது வைத்தான்.

"ய.. யஷூ.."

"சாரி தாரு.." என்றவன் நிமிர்ந்துப் பார்த்தான்.

அவனின் விழிகளில் தெரிந்த வலி கண்டு பதறியவள் அவசரமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

"என்ன ஆச்சி யஷூ.?" பயத்தோடு கேட்டாள்.

"உனக்கு என்னம்மா பிரச்சனை.?" என்றான்.

திகைத்தவள் தலை குனிந்தாள். அவனின் தலையை தன் மடி மீது சாய்த்தாள். அவன் தலை மீது தனது தலையை சாய்த்தாள்.

"உங்க அப்பா என்னை குத்த வரும்போது என்ன நினைச்சேன் தெரியுமா.?"

"என்ன நினைச்ச.?"

"செத்துப் போறதுன்னு முடிவாகிடுச்சி. சாகும்போது என் யஷூ மடியில சாக கூட கொடுத்து வைக்கலையேன்னு தோணுச்சி.."

"தாரு.." அதிர்ந்தவன் அவளிடமிருந்து விலகினான்.

நீர் நிறைந்த விழிகளோடு இருந்தவளின் கன்னங்களை ஏந்தினான்.

"ஏன் தாரு.?" என்றவனுக்கு அந்த கேள்வியாக அநியாயம் போல தோன்றியது.

"மறுபடியும் மறுபடியும் கேட்கறதுக்கு எனக்கே வெட்கமாதான் இருக்கு யஷூ.. ஆனா என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியல.. இந்த மாதிரி டைம்ல எமோஷனலா வீக் ஆகிடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனா இந்த அளவுக்கு வீக் ஆவேன்னு நானே எதிர்பார்க்கல‌.." என்றாள் உடைந்த குரலில்.

மௌனமாய் இருந்தவனின் விழிகளை பார்த்தவள் "குழந்தை பிறக்கும் வரைக்கும் மட்டுமாவது நான் உங்களோடு இருக்கட்டா, ப்ளீஸ்? அப்புறம் இந்த ஹார்மோன்ஸ் பிரச்சனை தீர்ந்துடும்.." என்றாள்.

அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.

"சாரி.." என்றான்.

அவளுக்கு தன் வாழ்க்கையை இற்றுப் போனது போலாகி விட்டது. 'ஒரு பிரயோஜனமும் இல்ல. இவருக்கு என்னை பிடிக்கல..'

"இனி உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன்.. இத்தனை நாளா உன்னை புரிஞ்சிக்காம போனதுக்கு சாரி.." என்றவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

அவளின் நெற்றியில் சிறு முத்தம் தந்தவன் "நிஜமா. நம்பு.. உன்னை இனி விட்டு நகரவே மாட்டேன்.." என்றான்.

***

நாட்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. தாரணியின் வளைகாப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த சங்கவி தான் பின்னி வைத்திருந்த குட்டி குட்டி ஸ்வெட்டர்கள் அனைத்தையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டாள். சூர்யாவை பார்க்க போகிறோம் என்ற துள்ளல் அவளிடம் வெளிப்படையாகவே தெரிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. நூறாவது அத்தியாயம் நட்புக்களே.. இதுவரை இக்கதையோடு துணை வந்த, இனி துணை வரவிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN