காதல் கணவன் 97

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி போனை வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான். முகத்தை தேய்த்தான்.

"எப்படி பாப்பா இப்படி.? அவ என்னை பழி வாங்க நினைக்கிறான்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா நீ எல்லாமே உண்மைன்னு சொல்ற.. நீ தப்பு பண்ணிடன்னு உன்னோட வீக்னெஸ்ஸை வச்சி இவ பழி வாங்க பார்க்கறா போல.. லவ்வுன்னு சொன்னியே.. என் மேல மட்டும்தான் லஸ்டுன்னு சொன்ன.. ச்சே.. என்கிட்ட எதுக்கு பொய் சொன்ன.?" வேதனையோடு கேட்டான்.

கனிமொழியின் முகத்தை ஜூம் செய்து பார்த்தான். அவள் பொய் என்று சொல்லி இருந்தால் இந்த புகைப்படம் எந்த செயலியின் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை விசாரித்திருப்பான். அக்குவேர் ஆணிவேராக அனைத்தையும் மேய்ந்து, அத்தோடு சுப்ரியாவையும் வசந்த்குமாரையும் கூட சேர்த்து மேய்ந்திருப்பான்.

நடு இரவு வரை புரண்டுக் கொண்டிருந்தான். கனிமொழியை அனைத்து வார்த்தைகளாலும் திட்டி‌ விட்டான்.

'அவளை கொல்லணும்..' பற்களை அரைத்தான்.

***

அரை உறக்கத்தில் விழிகளை மூடி படுத்திருந்தாள் அம்ருதா. பால்கனியின் கதவு படீரென்று திறந்தது. திடுக்கிட்டு எழுந்து பார்த்தாள்.

வெற்றி வேகமாக உள்ளே வந்தான். இவளை கண்டதும் "எழுப்பிட்டேனா.. சாரி.." என்றான்.

சட்டையை எடுத்து பனியனின் மீது அணிந்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

'எங்கே செல்கிறாய்.?' என்று கேட்க தோன்றியது அவளுக்கு.

"நாம என்ன அவன் பொண்டாட்டியா அவன் சொல்லிட்டு போக.? குழந்தைக்காக வீட்டுல வச்சிருக்கான். அப்புறம் பழையபடி அடிச்சி சாகடிச்சி புதைச்சிட்டு போக போறான்.." முணுமுணுத்தாள். அதே வேளையில் கதவு திறந்தது. வெற்றி தலையை மட்டும் உள்ளே நீட்டினான்.

"கொஞ்சம் அவசர வேலை. வெளியே போறேன். நீ தூங்கு.." என்றுவிட்டு கதவை ஓசையில்லாமல் சாத்திவிட்டுப் போனான்.

'உரிமை தரானா.? எனக்கா.?' குழப்பத்தோடு படுத்து கண்களை மூடினாள். ஆனால் அதன் பிறகு உறக்கம்தான் வர மறுத்தது.

***

வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தான் வெற்றி.‌ பாலாஜி அவனது பைக்கின் கிக்கரை உதைத்துக் கொண்டிருந்தான்.

"இவனுமா.?" அருகே ஓடினான் வெற்றி.

இவனை கண்டதும் அவனும் பைக்கை அப்படியே நிறுத்தினான்.

"உன்னையும் வர சொன்னானா.?"

"ஆமா.." என்றுவிட்டு பைக்கில் ஏறினான் வெற்றி. பைக் விர்ரென்று பறந்தது.

மேம்பாலத்தின் அடியில் கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்தது ஆறு. ஆற்று மணலில் அமர்ந்திருந்தான் சக்தி. இவர்கள் இருவரும் பைக்கை நிறுத்திவிட்டு இவனிடம் வந்தார்கள்.

"எதுக்குடா இந்த டைம்க்கு வர சொன்ன.?" பாலாஜியும் வெற்றியும் ஒரே குரலில் கேட்டபடி இவனை நெருங்கினார். சக்தியின் அருகில் காலியான மது பாட்டில்கள் உருண்டுக் கொண்டு இருந்தன.

"மறுபடியும் சரக்கா.?" என்றபடி அருகே வந்து அமர்ந்தான் பாலாஜி.

அவனுக்கும் ஒரு பாட்டிலை எடுத்து தந்தான் சக்தி.

வெற்றி அந்த பாட்டிலை பிடுங்கிக் கொண்டான்.

"டீ டோட்டலருக்கு நீங்க பண்ற துரோகத்துக்கு உங்களுக்கு வயித்தாலதான் போகும்டா.." என்றான் பாலாஜி ஆத்திரத்தோடு.

"அட நம்ம பால்வாடி புள்ளையா.?" நாக்கு குளறியபடி கேட்ட சக்தி குளிர்பான பாட்டிலை நீட்டினான்.

"என்னடா மப்பு ஏறிப் போய் உட்கார்ந்திருக்க.." பாலாஜிக்கு கலக்கமாக இருந்தது. அண்ணனை திரும்பிப் பார்த்தான். அவனோ சக்தி தந்திருந்த மதுபானத்தை வயிற்றுக்குள் கொட்டிவிட்டு அமர்ந்திருந்தான்.

"என்ன பிரச்சனை.?" பெரியதாக ஏப்பம் விட்டுவிட்டுக் கேட்டான் வெற்றி.

சக்தி எதுவும் பேசாமல் தனது போனை நீட்டினான்.

பாலாஜி அண்ணனின் அருகே சேர்ந்து அமர்ந்து கைபேசியைப் பார்த்தான். அண்ணனின் மூச்சுக் காற்றிலிருந்து கலந்து வரும் வாசம் அவனின் அடி வயிற்றில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கனிமொழியும் வசந்த்குமாரும் கட்டிலில் அரை குறையாக கிடக்கும் காட்சியை கண்டுவிட்டு இருவரும் ஒரு சேர நிமிர்ந்தனர். இருவருக்குமே சப்பென்று இருந்தது.

"மார்பிங் போட்டோவுக்கா இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்க.?" எரிச்சலாக கேட்டான் வெற்றி. உண்மையிலேயே ஏதோ பெரிய பிரச்சனை என்று நினைத்து நடு இரவு என்றும் பாராமல் ஓடி வந்திருந்தான்.

"அதானே.?" என்றான் பாலாஜியும்.

இன்னொரு மதுபானத்தை எடுத்து முழுதாக அருந்திவிட்டு நிமிர்ந்தான் சக்தி. "இது மார்பிங் கிடையாது. இது உண்மைன்னு கனியே சொன்னா. அந்த *** அவ வாயாலயே.." மேலும் சொல்லும் முன் கன்னத்தை கட்டி ஒரு அறையை விட்டிருந்தான் பாலாஜி. அவன் அறைந்த அடுத்த நொடி வெற்றியும் அறைந்திருந்தான்.

"எங்க தங்கச்சியை எங்க முன்னாடியே கெட்ட வார்த்தையில் திட்டுறியா நீ.!?" என்றபடி எழுந்தான் பாலாஜி.

அவனின் கையை பிடித்து அமர வைத்தான் வெற்றி. "குடிச்சிட்டு உளறுறான்.." என்றான் தம்பியிடம்.

சக்தி பேய் போல சிரித்தான்.

"நான் குடிக்கல. அவதான் குடிக்க வச்சா. நான் உளறல. அவதான் உளற வைக்கிறா.." என்றவன் கடைசி வார்த்தையை மட்டும் கத்தலாக சொன்னான்.

நெற்றியில் அறைந்துக் கொண்டான் பாலாஜி. "கத்தி கத்தி ஊரை கூப்பிட்டுடுவான் போல.." என்றான் எரிச்சலாக.

"இது மார்பிங் இல்ல பாலா.." என்றான் சட்டென்று தெளிந்தவனை போல.

"இது ஒரிஜினல். அவளே சொன்னா. எனக்கு அவ மேல ஆத்திரம். இந்த போட்டோவை வச்சிருப்பவங்க இதை நெட்ல அப்லோட் பண்ண போறேன்னு சொல்றாங்க. ஏற்கனவே அதை பண்ணவும் செஞ்சிட்டாங்க. அவ உண்மைன்னு சொன்ன பிறகு என்னால எதுவும் செய்ய முடியல. எனக்கு அவளை கொல்லணும் போல இருக்கு. நீங்கதான் அவளுக்கு பேமிலி. நீங்களே இதை பார்த்துக்கங்க. இது அவளுக்காக இல்ல. குடும்பத்துக்காக மட்டும்தான். குடும்ப மானம் போக வேணாம். இவ கண்டபடி மேய்றதுக்கு நம்ம குடும்ப மானம் போக வேணாம்.." என்றான் உடைந்த மனதோடு.

வெற்றியும் பாலாஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"நிஜமா பீல் பண்றான் போல.." என்றான் வெற்றி சோகமாக.

"ஆனா கனி இப்படி செய்ய மாட்டா.." போனை பிடுங்கியவன் புகைப்படத்தை தெளிவாக பார்த்தான்.

வசந்த்குமார் முகம் அரைகுறையாக தெரிந்தது. அவனை யாரென்று தெரியவில்லை இவனுக்கு.

"இந்த பையன் யார்ன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்.."

"அவளோட கிளாஸ்தான்.." சக்தி முகத்தைத் திருப்பிக் கொண்டுச் சொன்னான்.

வெற்றி போனை பிடுங்கிப் பார்த்தான்.

"நாளைக்கு காலேஜ் வர வழியிலேயே அவனை போட்டுட்டலாம்.." என்றான் கர்ஜனையாக.

பாலாஜி ஆமோதித்து தலையசைத்தான்.

"அது உண்மைன்னு அவ சொல்றா. லவ் ஏதும் பண்றாளோ என்னவோ.. அவனோடு சேர்த்து வச்சி தொலைங்க.." என்றவன் எழுந்து நின்றான். எழுந்த அடுத்த நொடியில் பின்னால் சாய்ந்தான்.

விழுந்தவனை தாங்கி பிடித்தான் வெற்றி.

"அன்னைக்கு அவ்வளவு குடிச்சும் மப்பு ஏறல. ஆனா இன்னைக்கு ஏன்டா மப்பு ஏறியிருக்கு.?" புரியாமல் கேட்டான்.

"வலிடா. நெஞ்சு முழுக்க வலி. அதெல்லாம் உங்களுக்கு புரியாது போங்கடா.." என்றவனின் குரலும் இப்போது உடைந்திருந்தது. விட்டால் அழுது விடுவானோ என்றிருந்தது. மச்சான்கள் இருவருக்கும்தான் இவனின் நிலை புரியவில்லை.

காரை அங்கேயே பூட்டி விட்டு பாலாஜி பைக்கில் ஏறினான். சக்தியை இடையில் அமர வைக்க முயன்றான் வெற்றி. ஆனால் பிடிமானம் சற்று தளர்ந்து இருந்ததில் கீழே விழுந்தான் சக்தி. உடை முழுக்க மண்ணானது. முகத்தின் ஓரங்களில் மண் ஒட்டிக் கொண்டிருந்தது.

"இம்சை பண்றான்.." அவனை அரைகுறையாக துடைத்து வண்டியில் ஏற்றிவிட்டு பின்னால் அமர்ந்தான் வெற்றி.

வீடு நோக்கி சென்றவர்களை நடுவில் மறித்தனர் இரவு நேர ரோந்தில் இருந்த காவலர்கள்.

"டிரிப்ள்ஸ்.. குடிச்சிட்டு இந்த நடுராத்திரியில் எங்கே போறிங்க.? டிரங்க் அன்ட் டிரைவ்க்கு கேஸை எழுதுறேன்.." என்று நோட்டை எடுத்தார் காவலர் ஒருவர்.

"ஐயோ சார் அவங்கதான் குடிச்சிருக்காங்க. நான் சுத்தமான தண்ணீர் போல நல்ல பையன். வாயை‌ வேணா ஊதுறேன்.." என்று காற்றை ஊதினான்.

"போதும் போதும். மூடு இந்த கொப்பரையை.." என்றவர் "டிரிப்ள்ஸ், ஹெல்மெட் போடாம சுத்துறதுக்கு பைனை எடுங்க.." என்றார்.

பாலாஜியேதான் பணத்தைக் கட்டினான்.

சக்தியை வீட்டு வாசலில் இறங்கினார்கள்.

"இங்கே ஏன் வந்தோம்?"

"காலையில உன் வீட்டுக்கு போயிக்க. இன்னைக்கு இங்கேயே தூங்கு.."

"நான் இங்கே இருக்க மாட்டேன். அவ இருக்கற இடத்துல நான் இருக்க மாட்டேன்.." என்றான் சக்தி பிடிவாதமாக.

ஆனால் அவனின் பேச்சை கேட்காமல் உள்ளே இழுத்துக் கொண்டு போனான் வெற்றி.

"என்னை விடுங்கடா. நான் என் வீட்டுக்கே போறேன்.." என்றான் கத்தலாக. அவர்களின் பிடியிலிருந்து விலகி போக முயன்றான்.

"ச்சீ வாயை மூடு.." பாலாஜி அதட்டினான். ஆனால் கோபத்தில் இருந்த சக்திக்கு எதுவும் ஏறவில்லை. மூளையிலிருந்த நட்டு ஒன்று நன்றாகவே தளர்ந்து விட்டிருந்தது.

"நான் போறேன். விடுங்க.." என்றவன் அங்கிருந்து மேஜையை உதைத்தான். மேஜையின் மேலிருந்த எவர்சில்வர் டம்ளரும் சொம்பும் கீழே உருண்டது. வீட்டிலிருந்து ஒவ்வொருவர் அறையிலும் விளக்கு எரிய ஆரம்பித்தது.

கீர்த்தனா மாடியிலிருந்து எட்டி பார்த்தாள். "சக்தி.." அதிர்ந்தவள் கீழே ஓடி வந்தாள். ஆனால் அவளின் அதிர்ச்சியில் அவளுக்கும் முன்னால் பாய்ந்து வந்தாள் கனிமொழி.

அர்ச்சனா மகனை கண்டதும் வேகமாக வந்தாள். ஆனால் அதற்கு முன்னால் வந்து விட்ட கனிமொழி "ஐயோ மாமா.. என்னாச்சி உங்களுக்கு.?" எனக் கேட்டாள். அவனின் உடையிலிருந்த மீதி மண்ணை துடைக்க முயன்றாள்.

"கையை எடுடி.." தள்ளி விட்டான் அவளை.

"ஏமாத்திட்ட நீ.." என்றான்.

பாலாஜி அவசரமாக அவனின் வாயை பொத்தினான். ஆனால் போதையில் இருந்தவன் இவனுக்கு கட்டுப்பட மறுத்தான்.

"என்னடா ஆச்சி.?" விசாரித்தாள் வளர்மதி.

"குடிச்சிருக்கான் சித்தி.." தனது வாயை மறைத்துக் கொண்டு சொன்னான் வெற்றி.

"ஐயோ என் புள்ளையா.?" அர்ச்சனா அதிர்ந்தாள்.

"ஏன் மாமா இப்படி பண்றிங்க.?" ஆதங்கமாக கேட்டாள் கனிமொழி.

"நீ பண்ணதை விடவுமா.? உங்க மேல மட்டும்தான் எனக்கு காதல் மாமான்னு சொன்னியே.. பைத்தியம் போல நம்பினேன்டி.." என்று இடது நெஞ்சில் அறைந்துக் கொண்டான்.

கனிமொழிக்கு கண்கள் கலங்கியது. என்னவாயிற்று என்று ஒன்றுமே புரியவில்லை.

"நான் என்ன செஞ்சேன்.?" அழுகை குரலில் கேட்டாள்.

"நீதான் எல்லாமும் செஞ்ச.." உளறுபவனை நிறுத்த யாராலும் முடியவில்லை.

"லவ்வு லவ்வுன்னு சொல்லி என்னை ஏமாத்திட்ட.. துரோகி துரோகி துரோகி துரோகி.." விடாமல் சொல்லிக் கொண்டிருந்தவனின் பின்னந்தலையில் தட்டினான் பாலாஜி.

"வாயை மூடுடா உளறு வாயா.."

சக்தி அவன் புறம் திரும்பினான்.

"யாரு.? நான் உளறு வாயா.? நம்ப வச்சி கழுத்தறுத்த அவளை ஒருத்தரும் கேள்வி கேட்கல. ஆனா என்னை கேட்கற. உன் தங்கச்சி எனக்கு சீட்டிங் பண்றாடா. அதுக்கு நீயும் உங்க அண்ணனும் மாமா வேலை பார்க்கறிங்களா.?"

பளீரென்று ஒரு அறையை விட்டார் அருகே வந்த சக்தியின் அப்பா.

கன்னத்தில் உருண்டுக் கொண்டிருந்த கண்ணீரோடு நின்றுக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

"இவனை கூட்டிப் போய் ரூம்ல படுக்க வை.." என்றார் அவர் மனைவியிடம்.

கனிமொழி திகைப்போடு நின்றிருந்தாள். அவளின் தோளை தொட்டான் பாலாஜி. திரும்பினாள்.

"கண்ணைத் துடை.." என்றான்.

அவசரமாக துடைத்தாள்.

"நான் எதுவும் செய்யலண்ணா.." என்றவளை இழுத்துக் கொண்டு மேலே நடந்தான் பாலாஜி.

"என்ன நடக்குது இங்கே.?" கனிமொழியின் தந்தை அதட்டிக் கேட்டார்.

"ஒன்னும் இல்ல சித்தப்பா. அவன் குடிச்சிட்டு ஏதோ உளறுறான்.." என்ற வெற்றி அவர் மேலே கேள்வி கேட்கும் முன்பு தங்கையை இழுத்துக் கொண்டு மேலே போய் விட்டான்.

கனிமொழியை அவளின் அறைக்குள் தள்ளினார்கள் அண்ணன்கள் இருவரும். பாலாஜி கதவை தாழிட்டு விட்டு வந்தான்.

சக்தியின் போனிலிருந்த புகைப்படத்தை இவளிடம் காட்டினான் வெற்றி.

"இது என்ன.?" என்றான் மிரட்டலாக.

புகைப்படத்தை கண்டவள் அதிர்ந்தாள்.

"அண்ணா இது நான்.." இடம் வலமாக தலையசைத்தாள்.

"சத்தியமா பொய். இது நான் இல்ல.." பயத்தில் நடுக்கமே வந்து விட்டது அவளுக்கு.

"அப்புறம் ஏன் நீ இதை உண்மைன்னு சக்திகிட்ட சொன்ன.?" பாலா மறுபக்கம் நின்றுக் கேட்டான்.

குழம்பியவளுக்கு அதன் பிறகே விசயம் புரிந்தது.

"இது இல்ல. வசந்த் கிஸ் பண்ண போட்டோதான் உண்மைன்னு.." பளீரென்று விழுந்தது ஒரு அறை. கையை ஓங்கி இருந்த பாலாஜி வெற்றி அறைந்ததை கண்டுவிட்டு தனது கையை கீழே இறக்கினான்.

"சக்தியை லவ் பண்ற. அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட. பிடிக்கலன்னா டைவர்ஸ் பண்ணிட்டு எப்படி வேணாலும் இருக்க வேண்டியதுதானே.? எதுக்கு அவனுக்கு சீட் பண்ற.?" உறுமினான்.

"இல்ல அண்ணா. அவன்தான் வலுக்கட்டாயமா கிஸ் பண்ணான். லைக் அ ஆக்ஸிடென்ட். அதுவும் கன்னத்துல. மத்தபடி இது பொய்.." கனிமொழி கன்னத்தை பிடித்தபடி சொன்னாள்.

"அவன் எப்ப கிஸ் பண்ணான்.?"

"முந்தாநாள் சாயங்காலம்.."

அவளின் தலையில் கொட்டினான் வெற்றி.

"அவன் வலுக்கட்டாயமா கிஸ் பண்ணி இருந்தா நீ எங்ககிட்ட வந்து சொல்ல வேண்டியதுதானே.? எதுக்கு ஊமை போல இருந்து பிரச்சனையை உண்டாக்குற? பிரச்சனையில் மாட்டுற.?" எனக் கேட்டான் கோபத்தோடு.

"அ.. அது இல்லண்ணா.." கண்ணீர் பொடபொடவென்று கொட்டியது.

"மாமாவை சீண்டி விடலாம்ன்னுதான்.." மறுபடியும் ஓங்கியவன் அவளின் முகம் கண்டுவிட்டு அமைதியானான்.

"உனக்கு விளையாட்டா போச்சா.?"

"அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவேயில்ல அண்ணா.." கண்ணீர்தான் வந்தது. சக்தி இந்த புகைப்படங்களால்தான் இவ்வளவு பேசினான் என்றும் இப்போதுதான் புரிந்தது.

"சரி விடு.. காலையில் அந்த பையனை பிடிச்சி மிரட்டி அனுப்பலாம்.." என்ற பாலாஜி "நீ போய் தூங்கு.." என்றான் தங்கையிடம்.

வெற்றி கையை இறுக்கியபடி வெளியே நடந்தான்.

"தனியா போகாத பாலா. நானும் வரேன் அந்த பையனை பார்க்க.." என்றுச் சொல்லி விட்டு தனது அறைக்குப் போனான்.

பாலாஜியும் சென்று விட்டான்.

கனிமொழிக்குதான் உறக்கம் வரவில்லை.

சக்தியின் அறைக்குச் சென்றாள். அர்ச்சனா அப்போதுதான் அவனின் அறை கதவை வெளியே சாத்தினாள். வந்து நின்ற மருமகளை முறைத்தாள். ஆனாலும் கிளம்பி போய் விட்டாள்.

கனிமொழி கலக்கத்தோடு அறைக்குள் நுழைந்தாள்.

படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தான் சக்தி. இவள் உள்ளே வந்தது கண்டதும் கலகலவென நகைத்தான்.

"வந்துட்டா ஏமாத்துக்காரி.." என்று தன் உளறலை ஆரம்பித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN