காதல் கணவன் 101

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வளர்மதி சொன்னது கேட்டு கனிமொழியின் கையை இறுக்கினான் சக்தி. அவளை திட்டியது தன்னை திட்டியது போலவே இருந்தது அவனுக்கு.

"இவளை பெத்திங்களா? இல்ல குப்பை தொட்டியிலிருந்து எடுத்து வந்திங்களா.?" என்றுக் கேட்டான் கோபத்தோடு.

வளர்மதி அவனை முறைத்தாள்.

"இப்படியொரு அவமானமா வந்து நிற்பான்னு தெரிஞ்சிருந்தா அப்பவே குப்பைத்தொட்டியில போட்டிருப்பேன்.." என்றாள் ஆத்திரத்தோடு.

கனிமொழியின் தந்தை கையை உயர்த்திவிட்டு கீழிறக்கிக் கொண்டார்.

"நீங்க அமைதியா இருங்கப்பா.." தேன்மொழி தந்தையை சமாதானம் செய்ய முயன்றாள்.

"பெத்த தாய் மாதிரியா பேசுற.? ஒரு பொண்ணை உன்னால ஒழுங்கா வளர்க்க தெரிஞ்சிருக்கா.? எல்லா தப்பும் உன் மேல.. ஆனா என் புள்ளையை கரிச்சிக் கொட்டுற.! ஈவ்டீசிங்ன்னு புள்ளை வந்து சொன்னா போய் ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் தரணும். அவங்க கண்டுக்கலன்னா போலிஸ்க்கு போகணும். இப்படி நடு ஆத்துல விடுற மாதிரி விட கூடாது.." என்றார்.

வளர்மதி மகளை முறைத்தாள். "அந்த புள்ளைங்க ஈவ்டீசிங் பண்ணதால இவ தற்கொலை பண்ணி செத்தா போயிட்டா.?" என்றாள்.

வீட்டிலிருந்த அனைவரும் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. எவ்வளவு மோசமான கேள்வி என்று கலங்கினர்.

"அவங்க ஆண் மரம்ன்னு சொல்றாங்கம்மான்னு வந்து சொன்னா. அதை கண்டுக்காம விடுடின்னு சொன்னேன். இதுல என்ன ஆச்சி‌ இப்ப.? இவளை ஆண்மரம்ன்னு சொல்றதால இவ ஆண்மரமா மாறிடுவாளா.? அவங்க சிம்மீஸ் சைஸ் மாறலன்னு சொல்லி கேலி பண்ணதால அது மாறாமலே போயிடுச்சா? வாழ்க்கைன்னா ஆயிரம் நாய் குரைக்கதான் செய்யும். அதுக்காக உட்கார்ந்து அழவா முடியும்.? அவ்வளவு பெரிய பையனை மிரட்டி கல்யாணம் பண்ணிக்க தெரிஞ்சவளுக்கு கிண்டல் பண்ற நாலு பேரை விரட்ட தெரியாதா.? அதையெல்லாம் ஒரு மேட்டர்ன்னு குடும்பமே கூடி நின்னு கொலை குற்றவாளியை விசாரிக்கற மாதிரி விசாரிக்கிறிங்க.." என்றாள் எரிச்சலாக.

"உன்னை மாதிரி ஒரு அனாதையை கல்யாணம் பண்ணியது என் தப்புதான்டி. குடும்பமா இருப்பவளை கட்டியிருந்தா இன்னொருத்தங்க வலின்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். அனாதை உனக்கென்ன தெரியும்.?" வளர்மதியின் பலவீனத்தை தொட்டு பேசினார் கனிமொழியின் தந்தை.

அதுவரையிலும் சாதாரணமாகதான் நின்றிருந்தாள் வளர்மதி. பார்வையில் கூட எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சட்டென்று கண்ணீர் மட்டும் இறங்கி விட்டது. தாடையை தாண்டி வழிந்த கண்ணீரை அவசரமாக துடைத்தாள். தலை குனிந்து இருந்தவளை கண்டுவிட்டு அனைவரும் அவரைதான் முறைத்தார்கள்.

"ஒரு பிரச்சனையை தீர்க்க சொன்னா நீ ஏன்டா புதுசா ஒன்னை உருவாக்கற.?" தாத்தா திட்டினார்.

கனிமொழிக்குதான் தர்ம சங்கடமாக இருந்தது.

"எல்லாம் உங்களாலதான். நீங்க சுப்ரியாகிட்ட நெருங்கி பழகாம இருந்திருந்தா அவ உங்களை டச் பண்ணியிருக்க மாட்டா. இப்படியொரு பிரச்சனையும் இன்னைக்கு வந்திருக்காது.." என்றாள் கிசுகிசுப்பாக.

சக்தி முறைத்தான். "ஸ்கூல்ல அவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு. மாமா மாமான்னு *** மாதிரி சுத்தி வருவ. ஆனா முக்கியமான விசயத்தை சொல்லாம மறைச்சிட்டு வெங்காயம் மாதிரி பேசுறியா இப்ப.?" என்றான் உறுமலாக.

"த்தூ.. இந்த மாமன் வாயில சாக்கடை கூட தோத்துடும். வாயை திறந்தாவே ம*று மண்ணாங்கட்டின்னேதான் பேசுறாரு. இந்த ஆளை ரோல் மாடலா வச்சிக்கிட்டு ஸ்டூடன்ஸ் வேற சுத்தறாங்க.." மெல்லிய குரலில் திட்டித் தீர்த்தாள்.

வளர்மதி தன் காலடியில் கிடந்த கட்டைப்பையை பிரித்தாள். பர்ஸ் இருந்தது. பணத்தை எடுத்தவள் அர்ச்சனாவிடம் நீட்டினாள்.

"அண்ணன் ஏதோ.."

"இதை பிடிங்க.." காசை திணித்தாள்.

"அனாவசியமா வார்த்தையை விட்டிருக்க.. அவகிட்ட மன்னிப்பு கேளுடா.." என்றார் தாத்தா.

அவர் மனைவியின் புறம் திரும்ப கூட இல்லை. சின்ன மகளின் முகம் பார்த்தவர் "இனி உனக்கு அம்மான்னு ஒருத்தி கிடையாது. எதையும் அவகிட்ட சொல்லாத. எதுவும் அவகிட்ட கேட்காத.. எதுவா இருந்தாலும் இனி என்கிட்டயே சொல்லு.." என்றார். அவரின் கண்களில் இருந்த கோப சிவப்பை கண்டவள் பயத்தோடு சரியென்று தலையசைத்தாள்.

வளர்மதி தன் கழுத்திலிருந்த தாலியை ரவிக்கையின் உள்ளேயிருந்து வெளியே எடுத்தாள்.

"என்ன பண்றிங்கம்மா.?" தேன்மொழி அவசரமாக சென்று அம்மாவின் கையை பிடித்தாள்.

"நான் இங்கிருந்து போறேன் தேனு. உனக்கும் இனி நான் அம்மா கிடையாது. அவர்கிட்டயே எல்லாத்தையும் சொல்லிக்க.." என்றவள் மகளின் கையை விலக்கி தள்ளினாள்.

"போனா போறா.. விடு தேனு.. இவ இருந்து மட்டும் என்ன பிரயோஜனம்.?" என்றவர் மனைவியின் புறம் திரும்ப கூட இல்லை.

"நீ பண்ண காரியத்தால கனிக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா வளரு.? அவன் கோபத்துல ஏதோ பேசுறான். நீ பெருசா எடுத்துக்காம விடு.." என்று கெஞ்சினாள் பாட்டி.

"அப்படி என்ன பிரச்சனை.? படிக்கற வயசுல ஆம்பளை பையனை வளைச்சி போட தெரிஞ்சவளுக்கு பெருசா எந்த பிரச்சனை வந்துட போகுது.?" என்றாள் இளக்காரமாக. பின்னந்தலையிலிருந்த முடிகளோடு மாட்டிக் கொண்ட தாலி கொடியை பிரித்துக் கொண்டிருந்தாள்.

சக்திக்கே கோபம் வந்து விட்டது. மனைவியை விட்டுவிட்டு முன்னால் வந்து நின்றான்.

"அவ மேல எந்த தப்புமே இல்ல‌. நீங்க அவளை சரியான பாதியில் நடத்தல. ஸ்கூல்ல அவளுக்கு பிரஷர். அவளோட மனசை சிதைச்சி வச்சிருக்காங்க அவங்க. அவ செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் நீங்க மட்டும்தான். உங்களால சமாளிக்க முடியலன்னாலும், தீர்வு காண முடியலன்னாலும் அட்லீஸ்ட் வீட்டுல இருப்பவங்ககிட்டயாவது சொல்ல விட்டிருக்கணும். அதை விட்டுட்டு இதை நீ யார்க்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு மிரட்டி அனுப்ப கூடாது.." என்றான்‌.

நகைப்போடு அவனைப் பார்த்தாள். "இதென்ன முந்தானை வாசத்தோட மாயமா.? கொஞ்சம் முன்னாடி வரை அப்படி வெறுத்துட்டு இருந்த அவளை.?" நக்கலாக கேட்டாள்.

சக்திக்கு அவமானத்தால் முகம் சிவந்தது. அவள் கேட்ட கேள்வியின் வீரியம் அந்த அளவிற்கானது.

கனிமொழி மனைவியாக இருந்தாலும் சரி. வெறும் மாமன் மகளாக இருந்தாலும் சரி. அவள் மீதான அவனின் பாசம் எப்போதும் ஒன்றேதான். அதை எப்படி சொல்லி புரிய வைப்பான்.?

"தப்பு தப்பா மட்டும்தான் பேச தெரியுமா போல.. என் பொண்ணை பைப்பால அடிச்சிருக்காங்கடி. எல்லாம் உன்னாலதான். நீ வளர்த்து விட்ட காரியம் அவளுக்கு நாலு நாள் காய்ச்சல்ல படுக்கற அளவுக்கு போயிருக்கு.." அவள் புரிந்துக் கொள்வாள் என்று நினைத்துச் சொன்னார் அப்பா.

அவள் அதற்கும் நக்கல் நகையைதான் தந்தாள்‌.

"பைப்பை பிடிச்சி அவங்களை திருப்பி அடிச்சிருக்கலாமே.!" என்றவள் தாலியை கழட்டி விட்டாள்.

"ஐயோ.. ஏன்ம்மா நீயும் இப்படி பண்ற.?" பாட்டி புலம்பினாள்.

கணவனின் கையை பிடித்தாள் வளர்மதி. தாலியை அவரின் கையில் வைத்தாள். அவரின் கண்களை பார்க்கவேயில்லை அவள்.

அவர் அவளின் கையை பிடித்த முதல் நாளில் அவள் விதித்த கட்டுப்பாடுகள் இரண்டே இரண்டுதான். தன்னை எந்த வேலைக்கும் அனுப்ப கூடாது, வீட்டையும், குழந்தைகளையும், வீட்டு பெரியவர்களையும் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க‌ வேண்டும் அவள். இன்னொரு கட்டுப்பாடு அவளை எப்போதும் அனாதை என்று சொல்ல கூடாது என்பதுதான்.

"நீங்க தந்த வாழ்க்கைக்கு நன்றி.." என்றவள் திரும்பினாள். அவளின் கையை பிடித்தார் அவர்.

"அனாதைன்னு நான் சொன்னதால நீ அனாதை ஆகிட்டியா.?" என்றவரை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

"எல்லாருக்கும் பலவீனம் உண்டு மதி. பலவீனமா இருக்கற ஒருத்தரை பலமா மாத்துறது அவ்வளவு சுலபமில்ல. உடைஞ்சி கிடக்கற ஒன்னை அவ்வளவு சீக்கிரம் ஒட்ட வச்சிட முடியாது. உன்னால எப்படி அனாதைங்கற வார்த்தையை தாங்கிக்க முடியாதோ அதே போலதான் அவளுக்கும்.." என்றார்.

"நீங்க தர புத்திமதிக்கு நன்றி.." என்றவள் கையை உதறிக் கொண்டு வெளியே நடந்தாள்.

"வளர்.." அர்ச்சனா தடுக்க முயன்றாள்.

"விடு அர்ச்சனா. போனா போறா.. இன்னொரு மனுசங்க மனசை இவ புரிஞ்சிக்க மாட்டாளாம். நாம மட்டும் இவளை புரிஞ்சிக்கணுமாம்.." என்ற கனியின் தந்தை மனைவி வாசலை தாண்டுவதை பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்றார்.

"டேய் போய் அவளை கூட்டி வாடா.." என்றாள் பாட்டி.

"திமிருல போறா.. நாலு நாளு அனுபவிச்சி பார்க்கட்டும்மா. அப்புறம் தானா திரும்பி வருவா.." என்றவர் "நான் போகாம வேற யாரும் அவளை இங்கே கூட்டி வர கூடாது. பொண்டாட்டின்னு கூட்டி வந்தேன். இது அவ குடும்பம்ன்னு சொன்னேன். என் மேல இருக்கற கோபத்துல தாலியை கழட்டினா. ஆனா சம்பந்தமே இல்லாம இந்த வீட்டை விட்டு போறா. இதுதான் அவ லட்சணம். அவளா திருந்தாம நீங்க யாரும் போய் அவளை கூப்பிடாதிங்க.." என்றுவிட்டு போனார்.

கனிமொழிக்குதான் கவலையாக இருந்தது. ஆனாலும் வீட்டில் இருந்த அனைவரும் அவளுக்கு நிறைய ஆதரவு வார்த்தைகளை சொன்னார்கள். அவளுக்கு பக்க பலமாக இருப்பதாக சொன்னார்கள். இனி எது நடந்தாலும் வீட்டில் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

"கொஞ்சமும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறா.. என்ன அம்மாவோ.?" என்று புலம்பினாள் பாட்டி.

"சைக்கோ மாதிரி நடந்துக்கறாங்க அவங்க. காலேஜ் போக மாட்டேன்னு சொன்னதுக்கு இவ காலுல சூடு வச்சிருக்காங்க.." என்று எரிச்சலாக மொழிந்தான் சக்தி.

அனைவரும் அதிர்ச்சியோடு கனிமொழியை பார்த்தனர்.

"இது எப்ப.?" என்றாள் அர்ச்சனா அதிர்ச்சியோடு.

"என்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடிச்சாளே அப்பதான்.." என்று நொடித்தான் இவன்.

கனிமொழி உதட்டை கடித்தாள்.

"அம்மாவே வில்லியா இருந்திருக்காங்க.." தேன்மொழிக்கு வருத்தமாக இருந்தது.

***

இன்ஸ்பெக்டர் ஷாலினி சுப்ரியாவையும் வசந்த்குமாரையும் தன்னால் முடிந்த அளவுக்கு புத்தி சொல்லி மிரட்டியும் அனுப்பினாள்.

இருவரும் மறுபடியும் கனிமொழியின் திசைக்கு திரும்ப மாட்டார்கள் என்று நம்பினாள். ஆனால் அவர்களின் மூளை வேறு திட்டம் போட்டிருந்தது.

***

மாதுளையை உரித்து தந்தான் வெற்றி. தலை குனிந்த வண்ணமே அமர்ந்திருந்த அம்ருதா தட்டில் விழுந்த மாதுளை முத்துக்களை எடுத்து உண்டாள்.

"இன்னைக்கு என்ன ஆச்சி தெரியுமா.?" எனக் கேட்டவன் அவள் பதிலே சொல்லாத போதும் கனிமொழியை பற்றிய விசயத்தை விவரித்துச் சொன்னான். குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டாள் அவளும்.

"ஆச்சரியமா இருக்கு. நீ அவங்களை உயிரோடு விட்டுட்ட.." என்றாள்.

அவள் பேசியதே சந்தோசமாக இருந்தது அவனுக்கு.

"பொம்பள புள்ளை மேல கை வைக்க கூடாது இல்லையா. அதான்.?" என்றவனை கேலியாக பார்த்தாள்.

"சரி லாஜிக் தவறுது. அப்பா ஆக போறேன்னு மெச்சூர் வந்திருக்கலாம்.." என்றான் அடுத்த பதிலாக.

அதற்கும் சிரித்தாள். "நீ என் மேல சூடான காப்பியை கொட்டும்போது உன்னை பொறுத்தவரை நான் பிரகனென்ட்தான். பிரகனென்ட் லேடி மேல சுட சுட காப்பியை கொட்டுற நீ மெச்சூர் பத்தி பேசுற.!?" என்றுக் கேட்டாள் தலையை பின்னால் சாய்த்து சிரித்தபடி.

தலை குனிந்தவன் மூச்சை சீராக விட முயன்றான். பிறகு நிமிர்ந்தான்.

"சாரி அம்மு. நான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றேனே. நம்மவதானேன்னு கொஞ்சம் ஓவராவே போயிட்டேன். உன்னை யாருக்கும் விட்டு தர மனசு வரல எனக்கு. என் கைக்குள்ள வச்சிக்கணும்.."

அம்ருதா அவன் சொன்னது காதில் ஏறாதது போல இருந்தாள்.

"மன்னிக்க மாட்டியா.? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற.? அந்த பார்க்ல நான் உன்னை வாட்டர் பவுண்டன் மேல தள்ளி விட்டதாலதான் உனக்கு அபார்ஷன் ஆச்சின்னு அன்னைக்கே நீ சொல்லியிருந்தா நான் உன் கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்டிருப்பேனே.?" என்றான்.

அதிர்ந்தவள்‌ அவனின் முகத்தை பயத்தோடுப் பார்த்தாள்.

"உ.. உனக்கு எப்படி தெரியும்.? என்ன தெரியும்.?" வியர்த்த முகத்தோடு கேட்டாள். முதுகில் நடுக்கம் ஒன்று ஓடியது. அத்தோடு பின்னங்கழுத்தில் உருவான வியர்வையும் வழிந்தோடியது. சினேகாவுக்கும் மருத்துவமனையில் அவளை சோதித்த மருத்துவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாத விசயம் அது. எப்படி இவன் அறிந்திருப்பான் என்று புரியவில்லை. ஒருவேளை சினேகா அனைத்தையும் சொல்லியிருப்பாளோ என்று பயமாக இருந்தது. அழைத்துச் சென்று குழந்தையை அழித்து விடுவானோ என்று உள்ளம் நடுங்கியது. தலை சுற்றியது லேசாக. அடி வயிறும் நெஞ்சும் வலிப்பது போலவே இருந்தது. 'ப்ளீஸ் ஆண்டவா..' மனதோடு கெஞ்சினாள்.

"அந்த வீடியோவை பார்த்தேன் அம்மு. நீ போய் விழுந்த. உன் வயித்துல அடிப்பட்டிருக்கு. நீ பிரகனென்ட்ன்னு முதல்லயே சொல்லி இருந்தா நான் கொஞ்சமாவது எச்சரிக்கையா இருந்திருப்பேன்.." என்றான்.

'இதுதானா.?' நிம்மதியடைந்தவள் "நான் என்ன சொன்னாலும் நீ அப்படியேதான் இருந்திருப்ப வெற்றி. பிரகனென்ட்ன்னு தெரிஞ்சும் வேணும்ன்னே காப்பியை ஊத்தியவன் தெரியாமலும் கூட என்ன வேணாலும் செய்வ. பழசை விடு. என்னை‌ விட்டு தள்ளிப் போ.." என்றாள்.

அவளின் கையை பற்றினான்.

"சாரி கேட்கறேனே.." என்றான் முகத்தை பரிதாபமாக வைத்தபடி.

"உன்னை மன்னிக்கணுமா நான்.?" புருவம் உயர்த்திக் கேட்டாள்.

ஆமென்று தலையசைத்தான்.

அம்ருதா யோசித்தாள்.

இரண்டு விரல்களை நீட்டினாள்.

"இரண்டுல ஒன்னை தொடு.." என்றாள்.

தயங்கினான். "ஏன்.?"

"சும்மாதான்.."

சுட்டு விரலை தொட சென்றவன் பிறகு நடுவிரலை தொட்டான்.

"என்ன முடிவு.?" என்றான் எதிர்பார்ப்போடு.

"உன் இஷ்டப்படின்னு வந்திருக்கு.." என்று சொன்னதும் பாய்ந்து அணைத்துக் கொண்டான்.

"தேங்க்ஸ் அம்மு.." என்றான் கன்னங்களில் முத்தங்களை பொழிந்தபடி.

"வேணாம் வெற்றி. பிசிகல் டச் வேணாம் நமக்குள்ள, இந்த குழந்தை பிறக்கும் வரைக்குமாவது.." என்றாள் கெஞ்சலாக.

கொஞ்சமாக மனம் வாடினான். ஆனாலும் அவளை விட்டு விலகினான். "ஓகே.." என்றான்.

மெலிதாக புன்னகைத்தாள். வலியை திருப்பி‌ தருவதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அவன்தான் கேட்டான்.

***

வளர்மதி அன்று இரவு வீட்டிற்கு வரவேயில்லை.

***

மறுநாள் காலையில் கல்லூரிக்கு வந்த சக்தியையும் கனிமொழியையும் அழைத்தார் கல்லூரியின் முதல்வர்.

"இங்கே வேலை செய்யும் லெக்சரர் நம்ம காலேஜ் ஸ்டூடன்டை மேரேஜ் பண்ணிக்க கூடாதுன்னு இந்த காலேஜ்ல விதி. ஆனா நீங்க ரொம்ப இர்ரெஸ்பான்சிபிளா இருந்திருக்கிங்க சக்தி. உங்களோட ராஜினாமா லெட்டரை நீங்களே எழுதி தந்துட்டா நல்லது.." என்றார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN