காதல் கணவன் 103

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேன்மொழி ஆச்சரியத்தோடு அவனைப்‌ பார்த்தாள்.

"சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்.. சீக்கிரம் வந்துட்டதுக்கும் தேங்க்ஸ்.." என்றான் ஆரவ்.

கண்ணீரோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

"நீ கோச்சிப்பியோன்னு நினைச்சேன். என்னை வேணாம்ன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்.." என்றாள்.

அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"நான் அரை பைத்தியமா இருக்கேன்னா அதை என்னால மாத்திக்க முடியாது. நீயும் என்னை போலதான். நீயும் நானும் ஒன்னுதான்.." என்றான் புன்னகையோடு.

"தேங்க் யூ.." என்றாள்.

***

கனிமொழி கல்லூரியை மாற்றிக் கொண்டு விட்டாள்.

"நம்ம வீட்டுக்கு வந்துடு.." என்றான் சக்தி அவளிடம்.

"நம்ம வீடா.?" நக்கலாக கேட்டவள் "என்னை லவ் பண்றேன்னு சொல்லுங்க. ஐ லவ் யூன்னு பேப்பர்ல நூத்தியெட்டு முறை எழுதி கொடுங்க. பத்து கிஸ் கொடுங்க. அப்பதான் நம்புவேன்.." என்றாள்.

அவளை மேலும் கீழுமாக பார்த்தவன் "அந்த அளவுக்கெல்லாம் நீ வொர்த் இல்ல.. மரியாதையா வந்து சேரு.." என்றான்.

கனிமொழி அவனை முறைத்தாள். "அப்படின்னா ஒர்த்தா இருக்கும் ஒருத்தரையே போய் பிடிச்சிக்கோங்க.." முகத்தை திருப்பிக் கொண்டுச் சொன்னாள்.

"உனக்கு நிறைய விசயம் புரியல பாப்பா. நான் சொல்லி தரணும். நீ அங்கே இருந்தா நல்லாருக்கும்.."

நெஞ்சின் மீது கையை வைத்தபடி அவனைப்‌ பார்த்தாள்.

"அடப்பாவி. நான் கூட லவ்வுலதான் கூப்பிடுறான்னு‌ நினைச்சேன்.." முனகியவள் "வந்து தொலையறேன்.." என்றாள் சிறு எரிச்சலோடு.

இருவரும் அதே வீட்டிற்கு திரும்ப குடிப் போயினர். அர்ச்சனாவுக்குதான் தன் மகனை கண்டு ஆச்சரியமாக இருந்தது. அவன் வீட்டை விட்டுச் செல்லும் முன் அவனை தனியே அழைத்துச் சென்றாள். "என்னவோ தங்கச்சி மாதிரி அம்மா மாதிரின்னு சொன்ன.. ஆனா இப்ப பத்தாம் மாசத்துல அப்பனாக போற மாதிரி இந்த துள்ளு துள்ளுற.." என்றுக் கேட்டாள் குழப்பத்தோடு.

அம்மாவின் தோளை பற்றினான். அவளை நிதானமாக பார்த்தான்.

"எங்க காலேஜ்ல ஒரு ரூல் உண்டு. எந்த ஸ்டூடன்ஸையும் தப்பான கண்ணோடத்துல பார்க்கவே கூடாது. மத்த யாரும் பாலோ பண்ணாங்களோ இல்லையோ.. நான் கரெக்டா பாலோ பண்ணேன். நான் ஒரு வாழும் முனிவர்ம்மா. ஸ்டூடன்ட்ஸ் எல்லோரையும் குழந்தையா தங்கையா பார்ப்பேன். இவ வேற லவ்வை சொல்லும்போது அந்த ஸ்டூடன்ஸை விடவும் குட்டியா இருந்தாளா? அதனால லவ்வரா பார்க்கவே முடியல. எந்த பீலிங்கும் வரவே இல்ல.. குட்டி பாப்பா கடைசி பாப்பான்னு நானும் சேர்ந்து அவளை வளர்த்திட்டேனா.? சுத்தமா எந்த சேனலும் வொர்க் அவுட் ஆகவே இல்ல.." விலாவரியாக விவரித்துக் கொண்டிருந்த மகனை கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"அப்புறம்தான் யோசிச்சி பார்த்தேன். கொஞ்சமா டிரை பண்ணி பார்க்கலாமேன்னு தோணுச்சி. லைட்டா லவ்வும் வந்ததா அப்படியே பிக்கப் பண்ணிக்கிட்டேன்.." என்றான் மலை ஒன்றை புரட்டி தள்ளியவனை போல.

"ஓ.." என்ற அர்ச்சனாவுக்கு வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"என்னடா இவன் அவ்வளவு யோக்கியன் மாதிரி பேசினான். இன்னைக்கு விழுந்துட்டானேன்னு நினைக்காதிங்க. அப்ப நான் சின்ன பையன். இப்ப வளர்ந்துட்டேன்.." என்றான் அவன் என்னவோ பதினைந்து வருடங்களுக்கு முன்பு சொன்னது போல.

இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்று நினைத்தாள் அர்ச்சனா.

"என்னவோ நல்லா இருந்தா சரி. அவ வாழ்க்கையும் கெடாம உன் வாழ்க்கையும் கெடாம வாழ்ந்தா சரி.." என்றாள்.

"அதெல்லாம் வாழ்ந்துப்போம்.. சொன்ன சொல் மாற மாட்டேன். மனசை அதே மாதிரிதான் வச்சிருப்பேன்னு என்னை நானே ஏமாத்திக்கற ஆள் நான் கிடையாது. என் மனசு மாறுச்சின்னா என் மனசுக்கேத்த மாதிரி நானும் மாறிப்பேன். ஏனா எனக்கு இருப்பது ஒரே ஒரு மனசு." என்றான் கூலாக.

***

தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழ வேண்டும். அப்போதுதான் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பாள் கனிமொழி.

"எழு பாப்பா.." என்று அடித்து எழுப்பி விடுவான்.

"ஏன்டா மாங்கா மடையா.?" என்று திட்டுபவளின் காதை திருகி இழுத்துச் சென்று ரெஸ்ட் ரூமில் தள்ளி கதவை சாத்துவான்.

அவள் வந்து சேர்ந்ததும் பனியென்றும் பாராமல் வீட்டை சுற்றி பத்து சுற்று ஓட சொல்வான்.

"கொல்றானே.." சலித்துக் கொள்வாள்.

வியர்க்க விறுவிறுக்க வந்து அமர்பவளிடம் கல்லூரி புத்தகத்தை தருவான்.

"காலங்காத்தால படிச்சாதான் மண்டையில ஏறும்.." என்பான். அவளுக்கு பாவம் பார்த்து அவனும் படிப்பான்.

"எங்க அம்மா என் காலை கூட எடுக்க மாட்டேங்கிறா.? எங்க இருக்காங்களோ தெரியல. என்னாலதான் சண்டை.." புலம்புவாள் கனிமொழி.

"அவங்களை கூட்டி வருவது உங்க அப்பாவோட வேலை. அதை அவர் பார்த்துப்பாரு.." என்பவன் "உன்கிட்ட யாராவது சில்மிஷம் பண்ணா நீ முதல்ல எதிர்ல உள்ள ஆளை பார்க்கணும். அப்புறம் சூழ்நிலையை பார்க்கணும். நல்ல கூட்டமான இடம்ன்னு வை. அங்கேயே வச்சி அவனை தோலை உரிச்சி காய் போட்டுடலாம். ஆனா தனியிடமா இருந்தா அவன் நம்ம சத்துக்கு தாங்குவானான்னு யோசிச்சிட்டு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிடணும். தூரமா வந்த பிறகு உனக்கு வேண்டிய ஆளை கூட்டிப் போய் அவனை பொளந்துடணும்.." என்பான்.

"ஓ.."

"அப்புறம் முக்கியமா உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் அதை வீட்டுல சொல்லணும். உங்க அம்மா யார்க்கிட்டேயும் சொல்ல கூடாதுன்னு சொன்னாலும் அதை சொல்லிடணும். வெட்கம் மானம்ன்னு அதையெல்லாம் பூசி மெழுக பார்க்கும் இந்த சமுதாயம். துப்பட்டா திருடிட்டு ஓடுறவனை பத்தி அவதூறு சொல்லணும்ன்னா வெறும் டாப்போடுதான் சொல்லியாகணும். வெறும் டாப்போடு நின்னு துப்பட்டா திருடிட்டு போறான்னு சொன்னா இந்த உலகம் நம்மை அசிங்கமா பார்க்கும்ன்னு நினைக்கவே கூடாது.." என்று விளக்குவான்.

அவள் அனைத்திற்கும் தலையை மட்டும் ஆட்டி வைப்பாள்.

***

வளர்மதி தான் வளர்ந்த அதே அனாதை ஆசிரமத்தில் போய் தங்கியிருந்தாள். அங்கிருந்த குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். கணவன் பேசியதை நினைத்து அவ்வப்போது அழுவாள். ஆனால் அவளை ஒருவர் கூட வந்துப் பார்க்கவில்லை. யாரும் இவளை சென்று பார்க்க கூடாது என்று இவளின் கணவன் தடை விதித்து வைத்துள்ளது இவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

***

பாரதி வீட்டின் வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது நரேஷை அவள் பார்த்து. இவளும் போன் செய்யவில்லை. அவனும் அழைக்கவில்லை. வீட்டிற்கே அவன் வரவில்லை. இவளின் மனதில் உள்ளதை இவள் அறிய வேண்டிதான் விலகி போனான்.

அவன் சென்றதில் முதல் நாள் இரவே அவன் இறங்கும் இடம் அனாதையாக கிடப்பது கண்டு ஒரு மாதிரி வருந்தினாள்.

"இவன் ஏன் இன்னும் வரல.?" என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

இரண்டாம் நாளும் அவன் வரவில்லை. மூன்றாம் நாளில் இரவில் மாமியாரிடம் அவனை பற்றி விசாரித்தாள்.

"எங்கேயாவது வெளியூர் போயிருக்காரா.?" என்றுக் கேட்டாள்.

ரத்னாம்பிகை மருமகளை குறுகுறுவென்று பார்த்தாள். "தெரியலம்மா. அவன் வெளியூர் போனானோ இல்ல ஆபிஸ் கெஸ்ட்அவுஸ்ல தங்கினானோ.. நான் கேட்டுக்கறது இல்ல. அவனவனுக்கு ஆள் இருக்கு. நான் ஏன் கேட்கணும்.?" என்றாள் விட்டேறியாக.

'மகனுக்கேத்த அம்மா..' என நினைத்தவள் ஒரு வாரம் முடிந்த பிறகு கொஞ்சம் பயந்துதான் போனாள்.

"ஏன் இங்கே வரல.? ஒருவேளை எவளையாவது பிக்கப் பண்ணிட்டானா.?" நினைக்கும்போதே கதி கலங்கியது.

"ச்சீ.. ச்சீ.. அவனுக்கேது அந்த அளவுக்கு திறமை.? என்னை லவ் பண்றதையே மூனு வருசத்துக்கு சொல்லாம பயந்தோடிட்டு இருந்த பயந்தாங்கொள்ளிதானே.? அவனுக்கு அந்த திறமை இருந்திருந்தா என் பொழப்பு ஏன் இப்படி இருக்கு.?" என்று மொத்தமாக புலம்பினாள்.

இரண்டாவது வாரத்தில் அடிக்கடி போனை எடுத்துப் பார்த்தாள். அவனின் வாட்சப் ஸ்டேட்டஸை உடனுக்குடன் பார்ப்பாள். ஏதாவது தத்துவ பாடலை வைத்திருப்பான். இவளுக்குதான் கடுப்பு கூடும்.

ஒரு செய்தி அனுப்பி பார்க்கலாமா என்று தோன்றும். ஆனால் அனுப்ப மாட்டாள். கால் செய்யும் இடத்திற்கு சென்று பச்சை பட்டனை தொட்டும் தொடாமல் வெளியே வருவாள்.

பேங்கில் இருந்தாலும் அவன் நினைவுதான் இருக்கும். "எங்கே சாப்பிட்டு தொலைஞ்சானோ.?" என்று காரணமே இல்லாமல் திட்டுவாள்.

"இந்த நேரத்துக்கு தூங்கி இருப்பானா.?" என்று நள்ளிரவு வரை விழித்திருந்து இருளைப்‌ பார்த்துக் கேட்பாள்.

அதோ இதோ என்று ஒரு மாதமே ஓடி விட்டது. இன்றாவது வீட்டிற்கு வருவானா என்று வாசலை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

"உள்ளுணர்வு அவனுக்கு வேலை செய்யாதா.? என் மனசுல ஓடுறது அவனுக்கு போய் சேராதா.? அப்புறம் என்ன லவ் அவனோடது.? நாலு வருசமா லவ் பண்றான். ஆனா என் மனசு கேட்கும்போது வர மாட்டேங்கிறான்.." என்று மனதுக்குள் புலம்பினாள்.

பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து நின்றாள்.

உள்ளே போனாள். சமைத்துக் கொண்டிருந்தாள் ரத்னாம்பிகை.

"அம்மா.." இவளின் திடீர் அழைப்பில் துள்ளி விழுந்தாள் பெரியவள்.

"என்ன ரதி?" என்றாள் கனிவோடு.

"நரேஷ் எங்கே இருக்காரு.?"

"எதுக்கு.."

"நான் அவரை பார்க்கணும்‌‌.‌ அவர் இருக்கற அட்ரஸை சொல்லுங்க.." என்றாள்.

"உன்கிட்ட போன் இருக்கே.. நீயே போன் போட்டு கேளேன்.."

"இல்ல. நீங்க சொல்லுங்க.." என்றாள் பிடிவாதமாக.

ரத்னாம்பிகை முகவரியை சொன்னாள்.

"தேங்க்ஸ்.." என்றவள் வெளியே செல்ல, "நைட்க்கு வருவிங்களா.?" எனக் கேட்டாள்.

திரும்பினாள் சந்தேகத்தோடு.

"ஏன்.?"

"இல்ல அப்படியே ஹனிமூன் போவிங்களோன்னு.." இழுத்தாள் மாமியார்.

வெட்கமும் கோபமும் வந்தது. பதில் சொல்லாமல் வெளியே சென்றாள்.

ரத்னாம்பிகை சொன்ன முகவரிக்கு வந்து சேர்ந்தாள். கேட் திறந்து இருந்தது. வாசலில் இரண்டு கார்கள் இருந்தது. ஒன்று நரேஷூடையது. மற்றொன்று யாருடையது என்று தெரியவில்லை.

பாதியாக திறந்திருந்த கதவை திறந்து உள்ளே போனாள்.

"மெதுவா.." என்ற நரேஷின் குரல் கேட்டது.

"நீ என்ன குழந்தையா.?" என்று பெண் குரலின் சிரிப்பு சத்தம் கேட்டது.

பாரதிக்கு கலக்கமாக இருந்தது. இந்த பெண்ணோடுதான் இத்தனை நாளும் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறானா என்ற கேள்வி இயல்பாக எழுந்தது.

"ஷார்ட்ஸை போட்டுக்க நரேஷ்.." என்றாள் அந்த பெண்.

பாரதி தயக்கத்தோடு அந்த அறையை எட்டிப் பார்த்தாள். கதவு முக்கால்வாசி சாத்தியிருந்தது. திறந்திருந்த கொஞ்சம் இடத்தில் அவன் கால்சாராயை மேலே உயர்த்துவது தெரிந்தது. பெண் ஒருத்தியின் கொலுசணிந்த கால் தெரிந்தது.

"மறுபடியும் எப்ப வருவ.?" என்றுக் கேட்டான் அவன்.

"இரண்டு நாள்ல.." என்று நகைத்தாள் அவள்.

பாரதிக்கு எப்படியோ இருந்தது. இங்கே நிற்க மனமே வரவில்லை. திரும்பி‌ நடந்தாள். பாதையே தெரியவில்லை. மங்கலாக இருந்தது அனைத்தும். கண்களை துடைத்தாள். ஏன் இவ்வளவு கண்ணீர் என்று தன்னையே கேட்டுக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே நடந்தாள்.

"நான் எவ்வளவு நம்பினேன் அவனை.?" அழுதாள். பேருந்தில் இருந்தவர்கள் அவளை விசித்திரமாக பார்த்தனர்.

"நான் அவனுக்கு இணங்கலன்னு வேற ஆளை பார்த்துட்டான்.." என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மூக்கை உறிஞ்சினாள்.

"மோசக்காரன். என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான்.." அழுதுக் கொண்டே இருந்தாள்.

"ஆர் யூ ஓகே சிஸ்டர்.?" அருகில் இருந்த இளைஞன் ஒருவன் இவளை பார்த்துக் கேட்டான்.

நிமிர்ந்தவள் "ஐம் ஓகே." என்றுவிட்டு தலை குனிந்துக் கொண்டாள்.

"ஏன் நரேஷ் இப்படி செஞ்ச.? இப்படி வேற பக்கம் கிராஸ் பண்ணும் முன்னாடி நீ என்கிட்ட பேசியிருக்கணும்தானே? உன்னோட மனசுல நான் இருந்திருந்தா இப்படி ஒரு தப்பை பண்ணியிருப்பியா.?" என்றுக் கேட்டாள் காற்றோடு.

மருமகள் போன வேகத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தது கண்டு வியந்தாள் ரத்னாம்பிகை.

"என்ன ஆச்சிடா.?" எனக் கேட்டாள் மருமகளின் வீங்கிய முகத்தை கண்டுவிட்டு.

"ஒன்னும் இல்ல.." அழுதபடி சொல்லிவிட்டு சென்று அறைக்குள் புகுந்தாள். கதவை பூட்டிக் கொண்டாள்.

"என்னாச்சி இவளுக்கு.? போன வேகத்துல சண்டை போட்டுட்டு வந்துட்டாளா.?" குழப்பத்தோடு சென்று கதவை தட்டினாள். உள்ளிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை.

"ரதி.. ரதி‌.." ஏழெட்டு முறை கதவை தட்டியவள் அதன் பிறகு பயந்து விட்டாள். என்ன காரணமென்று தெரியாமல் இவள் என்ன செய்கிறாள் என்று எதை யூகிப்பாள்?

ஓடிச் சென்று போனை எடுத்தாள். அவசரமாக மகனுக்கு அழைத்தாள்.

"அம்மா.."

"என்னடா சண்டை வந்தது.? எதுக்கு அவ அப்படி அழுதுட்டு வந்தா.? கதவை வேற திறக்க மாட்டேங்கிறா.. பயமா இருக்கு எனக்கு." என்று படபடவென்று விசயத்தைச் சொன்னாள் இவள்.

"என்ன சண்டை.? எனக்கு ஒன்னும் புரியல. யார் அழறாங்க.?" அவன் குழப்பத்தோடு கேட்டதில் அவனை விட அதிகமாக குழம்பிப் போனான் நரேஷ்.

"உன்னை பார்க்க வரேன்னுதான் கிளம்பி வந்தா ரதி. ஆனா அழுதுட்டே திரும்பி வந்தா. ரூம்குள்ள போனா. கதவை பூட்டிக்கிட்டா.." இவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சென்று காரில் ஏறி அமர்ந்தான் நரேஷ்.

"டிரைவர் காரை எடுங்க.." என்றான்.

"நான் வரேன்ம்மா.. அவ சும்மா ஏதாவது செல்போன்ல பாட்டு கேட்டுட்டு இருப்பா.." என்று சமாதானம் சொன்னான்.

"டேய் நான் கதவை உடைக்காத குறையா தட்டிட்டு இருக்கேன்.."

"கொஞ்சம் வேகமா போங்க.." என்று கார் டிரைவரிடம் சொன்னவன் "வாட்ச்மேனை கூப்பிட்டு கதவை உடைச்சி பாருங்க.." என்றான்.

"அவரை காணல. நானும் ரொம்ப நேரமா தேடுறேன். எங்கேயாவது ஏதாவது வாங்க போயிட்டாரோ என்னவோ.? நான் தனியா இருக்கேன். எனக்கு பயமா இருக்கு.. நானும் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன். ஒரு பதில் கூட வரல.."

"நான் சீக்கிரம் வரேன் இருங்க.." என்றவன் தொடர்பை துண்டித்தான். பாரதிக்கு அழைத்தான்.

அவன் விடுத்த அழைப்பெல்லாம் அப்படியே ரிங்காகி கட்டானது.

அவனுக்கே இப்போது அடிவயிறு கலங்கியது.

அவன் வீட்டிற்கு வந்த நேரத்தில் வாட்ச்மேன் கதவை கடைசி உடை உடைத்துக் கொண்டிருந்தார்.

உள்ளே ஓடினான். கதவு திறந்தது.

"பாரதி.." அதிர்ந்தான் அவள் இருந்த நிலை கண்டு.

"நரேஷ்.." ரத்னாம்பிகை வாயை பொத்தினாள் மகனின் நிலை கண்டு. மருமகளை கண்டதும் ஹார்ட் அட்டாக் ஒன்றேதான் வரவில்லை.

"அவளை கார்ல ஏத்துங்க.." என்றான் அவசரமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN