வண்ணத்துப்பூச்சி 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தைட்ட பேசிட்டு வெளியே வந்த கயல், எங்கே போகுறதுன்னு தெரியாமல் குழம்பிய நிலையில் இருந்தாள் … இந்த நிலையில் அவளால் தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

'வீட்டுக்கும் போக முடியாது, போனால் அப்பத்தா என் முகத்தை வைத்து ஏதும் பிரச்சினைனு கண்டுபிடித்து விடும், பாவம் அதுவும் கஷ்டப்படும் வேண்டாம்…என யோசித்தவள்,
பேசாம ஆத்தங்கரை பிள்ளையாரை பார்த்துட்டு லேட்டா வீட்டுக்கு போக வேண்டியதுதான், என முடிவு செய்து நடக்க ஆரம்பித்து விட்டாள்…

கயலை பார்க்க கிளம்பிய செந்தில், வழி முழுவதும் அவள் நினைவுகளுடனே வந்தான்.
'இப்ப எங்க போகிருப்பா, அம்மா சொல்லுற மாதிரி அவ வீட்டுக்கும் போய் இருக்கமாட்டா, இப்ப இருக்கும் மனநிலையில் வழக்கமாக அவ போற இடத்துக்கு போகமாட்டா,வேற எங்க இருப்பா?

ம்ம்… ஆத்தங்கரை, கண்டிப்பா அங்கதான் இருப்பா… என யோசித்தவன், தன் வண்டியை ஆற்றங்கரை செல்லும் வழியில் செலுத்தினான்…

ஆற்றங்கரையின் ஓரத்தில் போகும் வண்டியின் வேகத்தில் வீசும் குளிர்ந்த காற்றின் இனிமையில், அவளுடன் அவன் கழித்த இன்பமான, நினைத்தாலே தித்திக்கும் நினைவுகளின் பின்னே அவன் நியாபகங்கள் சென்றது….. அதே போல் ஆற்றங்கரையில் அமர்ந்து இருந்த கயலின் நியாபகமும், தன் மனம் நிறைந்தவனின் நினைவுகளின் பின்னே சென்றது…..

செந்திலுக்கு அப்பொழுது ஆறு வயது இருக்கும். பாட்டினா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். தன் வீட்டில் இருக்குறத விட அதிகம் மாமா வீட்டில் தான் இருப்பான்.

பாட்டி சொல்லுகின்ற வித விதமான கதைகளை அவர் மடியில் படுத்து கொண்டு கேட்பான். தனம் அப்பொழுது நிறைமாத கர்ப்பிணி. தினமும் அவர் வயிற்றில் மேல் கை வைத்து உள்ளே இருக்கும் குழந்தையுடன் உரையாடுவான். இவன் கை வைத்தால் மட்டும் உடனே குழந்தையும் வயிற்றில் அசைய ஆரம்பித்து விடும்.

அப்போது அவனும் ரொம்ப ஆர்வத்தோட தொட்டு தொட்டு பார்த்து சந்தோசத்துடன் குதிப்பான். அதைப்பார்த்து பாட்டியும்,

"டேய் செந்திலு நீ கைய வைக்கவும் இந்த குட்டிய பாறேன் வயித்துக்குள்ள என்ன குதி குதிக்குதுனு. உன் பொண்டாட்டிக்கு உன்ன ரொம்ப பிடிச்சிட்டுடா, நீ கைய வச்சா மட்டும்தான் இந்த குதி குதிக்குறா. உன்ன நல்லா தெரிஞ்ச்சி வச்சிருக்கா டா இப்பவே… என தன் பேரனை செல்லம் கொஞ்சுவார்…

அவனுக்கு என்ன புரிந்ததோ அழகாய் வெட்கப்பட்டு சிரிப்பான்.

"ஐயோ வெட்கத்த பாருங்களேன் அத்த என் தங்கத்துக்கு என கிண்டல் அடிப்பார் தனம்.
தனத்துக்கு அம்மா, அப்பா கிடையாது, ஒரு அண்ணன், அண்ணியும் தான். அவர்களுக்கு செந்தில் வயதில் ஒரு பையன் இருக்கான். அவன் பெயர் வருண். சரியான சேட்டகாரன். பிரசவத்துக்கு பொறந்த வீட்டுக்கு அண்ணனும் அண்ணியும் வந்து கூப்பிட்டும் தன் கணவன், மாமியாரை விட்டுட்டு வரவில்லை என்று சொல்லிவிட்டார் தனம்.


அதுமட்டுமில்லாமல் அண்ணிக்கும் குழந்தை பிறந்த பிறகு, அப்ப அப்ப உடம்பு படுத்தும், அதனால் அவங்களுக்கும் சிரமம் என்று வரலைனு சொல்லிவிட்டார்…
அண்ணன் அண்ணிக்கு வருத்தம் இருந்தாலும், அவளின் சந்தோசத்துக்காக அங்கேயே விட்டுட்டு, அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றார்கள்…


அதுமட்டுமின்றி பக்கத்து ஊருதான் அவர்களுக்கும், அதனால் தைரியமாய் இருந்தனர்…
செந்திலுக்கு பள்ளி விடுமுறை அளிக்கவும், அதை சாக்கிட்டு, துர்காவும் தன் அம்மா வீட்டிற்க்கு வந்துவிட்டார், தனத்தை பார்த்து கொள்வதற்காக... அதனால் செந்திலுக்கும் நல்லா பொழுது போனது.


ஒரு அதிகாலை வேளையில் திடீரென்று தனலெட்சுமிக்கு வலி எடுக்கவும், மருத்துவனையில் கொண்டு சேர்த்தார்கள்….


சேர்த்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் வீல் என்ற சத்தத்துடன், செந்திலின் கண்ணழகி இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்து விட்டாள்.


மகாலெட்சுமியே மகளாய் பிறந்துவிட்டாள் என்று அனைவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை…


நர்ஸ் குழந்தையை தூக்கி வந்து கொடுக்கவும் சத்யமூர்த்தி ஆசையுடன் வாங்கி தன் நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்…


எத்தனை வருட தவம் இந்த குழந்தை, கல்யாணம் ஆகி ஐந்து வருடம் குழந்தை இல்லாம எத்தனை கோயில், குளம் ஏறி, இறங்கி தவம் இருந்து பெற்ற தன் மகளை பார்த்து, பார்த்து பூரிப்பில் கண்கள் கலங்கிவிட்டார்.


அன்பழகிக்கும் கூட கண்கள் கலங்கியது. தன் மகனும் மருமகளும் குழந்தை இல்லாமல் தவித்த தவிப்பை கூட இருந்து பார்த்தவராகிட்டே… துர்க்காவும் கலங்கிய தன் கண்களை துடைத்து,


"என்ன அண்ணா என் மருமகள நீங்க மட்டும் வச்சி கொஞ்சிரிங்க என்கிட்டயும் கொடுங்க, என பேச்சி கொடுத்து, நிலைமையை சகஜமாக்கினார்...
அவரும் சிரித்து கொண்டே…


" இந்தா பிடி உன் மருமகளை என கொடுத்தார்… ரோஜா குவியலாய் தன் கையில் இருக்கும் மருமகளை பார்த்து உள்ளம் பூரித்து உச்சியில் முத்தமுட்டு கொஞ்சினார். தன் அம்மாவின் கையில் உள்ள குழந்தையை பார்த்த செந்தில்,


" அம்மா என்கிட்ட கொடுமா பாப்பாவ நா வச்சிருக்கேன் என கேட்டான்.


"டேய் பாப்பா குட்டியா இருக்கு டா, உன்னால தூக்கமுடியாது இப்படியே பாரு என்று குழந்தையை அவனிடம் காட்டினார்…


"அம்மா அம்மா ப்ளீஸ் மா பாப்பாவ குடுமா ,என அழுக ஆரம்பித்து விட்டான் செந்தில்.


"ஏம்மா துர்க்கா பாவம் மாப்ள அழுவுறான்.. அவன்கிட்ட கொடு ஒரு நிமிசம், என்று சத்தியமூர்த்தி மருமகனுக்கு சப்போட் பண்ணினார்…


"சரி இங்க வந்து உக்காரு செந்தில், பாப்பாவ உன் மடியில வைக்கிறேன் பத்திரமா பிடிச்சிக்கனும் சரியா . இப்ப நர்ஸ் வந்து பாப்பாவ வாங்கி கிட்டு போயிடுவாங்க. அதனால சீக்கிரம் கொஞ்சிடு உன் பொண்டாட்டிய, என சிரித்து கிண்டல் செய்தார் தன் மகனை…


அவனும் வெக்கபட்டு சிரித்து அமர்ந்து கொண்டு, தன் மடியில் தாய் கிடத்திய குட்டி தேவதையை ரசித்தான். அந்த குட்டி தேவதையும் இவன் மடிவந்த பிறகு தன் செப்பு வாய் திறந்து அழகாய் அவனை பார்த்து சிரித்து மலர்ந்த அந்த அழகிய பூசெண்டு தன் பிஞ்சு விரல்களால் அவனின் கை விரலை பிடித்து கொண்டது. அதை பார்த்த அனைவருக்கும் மனது நிறைவாய் உணர்ந்தார்கள்….
அன்பரசி பாட்டி உடனே… "பார்ரா…! இந்த குட்டியை, உன்ன நல்லா அடையாளம் தெரிஞ்சி வச்சிருக்கு, உன்கிட்ட வரவும் சிரிப்ப பாரேன்.


பாட்டி இப்படி சொல்லவும் அவனுக்கு பெருமை தாங்கல, தன் மடியில் இருக்கும் தேவதையின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டான்… அதை பார்த்து அனைவரும் சிரித்தனர்…
நர்ஸ் வந்து குழந்தையை கேட்கவும் மனமே இல்லாமல் கொடுத்தான்…


தனத்தின் அண்ணனும், அண்ணியும் வந்து குழந்தையை பார்த்து விட்டு சென்றார்கள்…
இரண்டு நாளில் தனம் ஆஸ்பத்திரியில் இருந்து டிச்சார்ச் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார். செந்திலின் பொழுதுகள் குழந்தையோடு கழிந்தது…


தனத்தின் அண்ணியும் தன் மகன் வருணுடன் வந்து தனத்தின் வீட்டில் ஒருவாரம் தங்கிருந்தார்கள், அப்போது வருணைகூட கயலின் பக்கம் அனுமதிக்கமாட்டான் செந்தில், மற்றபடி வருணுடன் சேர்ந்து விளையாடுவான்.


"அண்ணா குழந்தைக்கு என்ன பேர் வைக்கலானு இருக்கிங்க?...


"அது கயல்விழியாள் னு வைக்கலாம் என யோசிக்கிறேன் மா.


"நல்ல பேருண்ணா. பாப்பாவுக்கு பொருத்தமா இருக்கும். அவ கண்ண பாருங்களேன் அவ்வளவு அழகு.


" நல்லாருக்கு மூர்த்தி பேரு என அன்பரசியும் சொன்னார்…
ஒரு நல்ல நாளில் குழந்தைக்கு கயல்விழியாள்னு பேர் வைத்து கொண்டாடி விட்டு துர்கா தன் வீட்டிற்கு செந்திலோடு கிளம்பினார்…


செந்தில் கயலை விட்டு வரமாட்டேன் என அழுது புரண்டு அடம் பிடித்து கொண்டிருந்தான்..
துர்கா அவனை அடித்தும் பார்த்து விட்டார். அவன் பிடிவாதம் சற்றும் குறையவில்லை….
அன்பரசி பாட்டி அவன் பிடிவாதத்தை பார்த்து,


"ராசா இங்க பாரு நீ இப்படி அழுதா நல்லாவே இல்ல, நீ என் சிங்க குட்டிதான, நீ இப்ப அம்மா கூட உன் வீட்டுக்கு போயிட்டு, ஒழுங்கா பள்ளி கூடத்துக்கு போவியாம், உனக்கு லீவ் விடுறப்ப கயலோட வந்து இருக்கலாம் சரியா…


வார வாரம் சனி ஞாயிறு இங்க வந்துரு, அம்மா கிட்ட நா சொல்லுறேன் உன்ன விட சொல்லி, இப்ப நீ சேரபோற புது பள்ளி கூடத்துல உன் கூட விளையாட நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க"


"அப்புறம் உங்க அப்பா நீ ஸ்கூல் போக புது சைக்கிள் எல்லாம் வாங்கி வச்சிருக்குறதா உங்க அம்மா சொன்னா, அதலாம் உனக்கு வேணாமா?


இப்ப நீ மட்டும் அம்மா கூட போகலைனா உங்க அப்பா மறுபடியும் இங்க உன்ன அனுப்ப மாட்டார் சொல்லிட்டேன். அப்புறம் கயல நீ பாக்கமுடியாது. அதுக்கு மேல உன் இஷ்டம் என சொல்லவும்,...


பெரிய மனுசர் தோரனையில் கை விரலை கண்ணத்தில் வைத்து யோசித்து, சரி பாட்டி நா இப்ப அம்மா கூட போறேன்,


ஆனா வாரவாரம் என்ன இங்க அழச்சிட்டு வருவேனு அம்மா வாயால சொல்ல சொல்லுங்க. அப்பதான் நா போவேன்" என சட்டமாய் அமர்ந்து கொண்டான்.


"டேய் மகனே உனக்கு இந்த வயசிலேயே இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாதுடா, பெத்த அம்மாவையே இப்படி ப்ளாக்மெயில் பண்ணுறியே டா...என புலம்பி சரி டா நா உன்ன அழச்சிட்டு வரேன்....


இப்ப நீ கிளம்புறியா… உன் அப்பாரு நேத்தே வர சொன்னாரு, ஆனா...நாம இன்னும் இங்க இருந்து கிளம்பாம இருக்கோம்… இதுக்கே என்ன குதி குதிக்க போறாருனு தெரியல, இதுல நீ வேற என் தொண்டை தண்ணி கிழிய கத்த வைக்குற...என தன் மகனிடம் புலம்பினார் துர்கா….


"சரிமா நீங்க இவ்வளவு கெஞ்சிறதால வரேன்...ஆனா நீங்க சொன்னபடி வார வாரம் என்ன அழச்சிட்டு வரல,அப்புறம் யார் சொன்னாலும் நா கேட்கமாட்டேன், இங்கேயே வந்து இருந்துருவேன்….என கெத்தாக சொல்லிவிட்டு, தன் உடமைகளை எடுக்க சென்றுவிட்டான்….


' ஆத்தாடி ஆத்தா, எனக்கு வாச்சதுதான் என்ன ஆட்டிபடைக்குதுனா, நா பெத்ததும் அதுக்கு மேல இருக்கே என கண்ணத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்…..
தன் பையுடன் வந்த செந்தில், "என்ன மா உட்கார்ந்துட்ட, கிளம்பலயா….? என கேட்டு கொண்டே, தன் பாட்டியிடம் சென்று,


"பாட்டி நா இப்ப கிளம்புறேன்… பாப்புகுட்டிய பத்திரமா பாத்துக்குங்க…. உங்கள நம்பிதான் நா இப்ப கிளம்புறேன் பாட்டி…..


"அத்தயும்,மாமாவும் பாப்புவா சரியா கவனிக்குறதே இல்ல, எப்ப பாரு பாப்புவ தனியாக கூடத்துல தொட்டிலில் போட்டுட்டு, ரூமுக்குள்ள போய், குசு குசுனு பேசிகிட்டே இருக்காங்க…. என செந்தில் சொல்லவும்,....


'தனம் வெக்கபட்டு கொண்டு அடுப்படி பக்கம் ஓடிவிட்டார்.. சத்திய மூர்த்தியும் வெக்கபட்டு கொண்டே அசடு வழிய நின்றார்… அதை பார்த்த அன்பு பாட்டி தலையில் அடித்து கொண்டார்...


"நா இருக்க போய் பாப்புவ பக்கத்தில இருந்து பாத்துக்கிட்டேன்.. நானும் இல்லனா,பாப்பு தனியா இருப்பா, அதனால நீங்கதான் பாப்புவ பக்கத்துல இருந்து பாத்துக்கனும் சரியா, என கேட்கவும்,...."சரிடா பெரிய மனுசா, உன் பாப்புவ நா பத்திரமா பாத்துக்குறேன்...நீ கவலபடாம போயிட்டு வா….என சொல்லி வழி அனுப்பி வைத்தார்….
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN