காதல் கணவன் 108

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முன்னிரவு.

காணாமல் போன பிள்ளைகளை போலிசார் பிடித்து வைத்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டு காவல் நிலையத்திற்கு ஓடினார்கள் சுப்ரியாவையும் அவளது தோழமைகளையும் பெற்றவர்கள்.

காவல் நிலையத்திற்குள் புகுந்தவர்கள் பிள்ளைகள் இரத்தம் வழிய இருப்பதை கண்டு விட்டு அதிர்ந்தனர்.

"யார் இவங்களை இப்படி அடிச்சது.?" என்று அதிர்ந்த சுப்ரியாவின் தந்தை முன்னால் வந்தார்.

இன்ஸ்பெக்டர் ஷாலினி புகாரை எழுதிக் கொண்டிருந்தாள்.

"மேடம். நீங்க இவங்க மேல கை வச்சது ரொம்ப தப்பு. இதுக்காக நாங்க உங்க மேல கேஸ் தர முடியும். அதை மறந்துடாதிங்க.. கண்டிப்பா இதுக்காக நாங்க ஹியூமன் ரைட்ஸ் கமிஷன்ல புகார் தருவோம்.." என்று பேசிக் கொண்டே சென்றார்.

ஷாலினி எழுந்து நின்றாள்.

"மன்னிக்கணும். இது நாங்க உண்டாக்கிய காயம் இல்ல. இவங்க அந்த பொண்ணை கொல்ல டிரை பண்ணி இருக்காங்க. அந்த பொண்ணு தன்னுயிரை காப்பாத்திக்க இவங்களை எதிர்த்து இருக்கா. அதனால இவங்க காயத்துக்கு யார் மேலயும் கேஸ் தர முடியாது. அந்த பொண்ணு செத்துட்டாலும் சரி. உயிரோடே இருந்தாலும் சரி. உங்க புள்ளைங்களுக்கு ஜெயில் தண்டனை உறுதி. அதை முதல்ல பாருங்க.." என்றாள் அலட்சிய குரலில்.

அவளுக்குள் அவ்வளவு ஆத்திரம் இருந்தது. தான் அன்றே மிரட்டி அனுப்பியும் இப்படி செய்துள்ளார்கள் என்றால் இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்று அவளுக்கே புரிந்து போய் விட்டது. இப்படி ஒரு பிள்ளைகளை வளர்த்தியதற்காக அந்த பெற்றோர் மீதுதான் கோபம் அதிகமானது.

"இவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்ன்னு கூட உங்களுக்கு தோணல.." அடுத்த பழியை சுமத்தினாள் மேனகாவின் அம்மா.

அந்த கூட்டத்திலேயே தவறை தவறென்று உணர்ந்தவன் கவின் மட்டும்தான். தங்கையை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சூழல் வந்தால் அங்கே அவளுக்கு லாடம் கட்டி விட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். அவன் இயல்பிலேயே இளகிய மனது கொண்டவன். தனது தங்கை இந்த அளவிற்கு ஒரு கொடுங்கோல்காரியாக இருப்பது அவனுக்கு அவ்வளவு ஆத்திரத்தையும், தோல்வியையும் தந்தது.

"புகார் எழுதிட்டு இருக்கோம் மேடம். முடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிப் போவோம். இப்ப இவங்க இருப்பது எங்க கஸ்டடி. ஏதாவது நடந்தா நாங்கதான் பதில் சொல்லணும்.. அது என்னது அந்த ஹியூமன் ரைட்ஸ் கமிஷனுக்கு நாங்கதான் பதில் சொல்லணும். அதனால எங்க வெசனத்தை நாங்க பிடிச்சிக்கிறோம். நீங்க கிளம்புங்க.. வக்கீலோடு வாங்க. இல்லன்னா கோர்ட்டுக்கு வாங்க.." என்றாள் ஷாலினி.

பெற்றவர்கள் பிள்ளைகளை பார்த்துவிட்டு தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.

"சுப்ரியா நீ ரொம்ப திமிராகிட்ட. இனி உனக்கு பாக்கெட் மணியே கிடையாது.." என்று திட்டி(!?)விட்டு போனார் அவளின் தந்தை. அம்மாவும் அவளை முறைத்துவிட்டு தன் கணவனின் பின்னால் ஓடினாள்.

பெற்றவர்கள் நகர்ந்த பிறகு தான் எழுதிக் கொண்டிருந்த புகாரை முடித்தாள் ஷாலினி.

"ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்றாள்.

***

அம்ருதா படுக்கையில் அமர்ந்திருந்தாள். தூக்கமே வரவில்லை. அவளை நல்லவேளையாக வெளியே அழைக்கவில்லை வெற்றி.

கனிமொழிக்கு நிகழ்ந்த பிரச்சனை இவளுக்கும் வருத்தத்தை தந்தது. எவ்வளவு கொடூரம் இது என்று தோன்றியது. ஒரு விதத்தில் கனிமொழியை கண்டு அவளுக்கு பொறாமையாக இருந்தது என்றே சொல்லலாம். அவளுக்காவது வெளியிடத்திலிருந்து எதிர்ப்பு. ஆனால் தனக்கு.? யோசித்தவளுக்கு தொண்டை அப்படியே அடைத்துக் கொண்டது.

அடிவயிற்றில் சுளீரென்றது. உள்ளாடையில் சூடாக இறங்கியது திரவம்.

கழிவறைக்கு எழுந்து போனாள். பத்து நிமிடத்திற்கு பிறகு திரும்பி வந்தவள் அதே போல கட்டிலில் அமர்ந்தாள்.

அவனை வெறுத்தது உள்ளம். அதே சமயம் நேசித்தது. அவனின் அணைப்பில் தூக்கம் நன்றாக வந்தது. அவளை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் இத்தனை நாட்களும். அந்த விசயத்தையே இன்றுதான் அறிந்தாள்.

காதலை நிறைய வெறுத்தாள். அவனையும் வெறுத்தாள். உள்ளங்கைகளில் வெண்மை கூடிக் கொண்டிருந்தது. இரத்த அளவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாள்.

இந்த போரின் கடைசி வரை வர வேண்டும் இந்த இரத்தத்தின் கடைசி துளிகள் என்று விரும்பினாள்.

அவனின் தலையணையை அணைத்துக் கொண்டாள். "ஸ்வீட் பாய்சன் நீ.." என்று முணுமுணுத்தாள். சத்தமின்றி நகைத்தாள். வயிற்றை தொட்டுப் பார்த்தாள். மேடாக இருந்தது.

"பாப்பா.. தம்பி.. யாரோ நீ.? நாம நல்ல ஷாக் கொடுக்க போறோம் உங்க அப்பாவுக்கு. அவங்க அம்மா இறந்துட்டாங்கன்னு கோபம் வந்தது அவனுக்கு. நான் இறந்த பிறகு என்ன செய்வான்.? ம்ப்ச்.. நான்தான் பார்க்க முடியாது. நீங்க பாருங்க பாப்பா. அம்மாவுக்கு உங்க மேல பாசமில்லன்னு நினைக்காதிங்க. உங்களை விட்டுட்டு போக போறேன்னு என் மேல கோபப்படாதிங்க. நமக்கு விதி இல்லம்மா.. ஆனா உங்க அப்பா உங்களை ரொம்ப ஸ்வீட்டா பார்த்துப்பாரு. நான் அதை மட்டும் ப்ராமிஸ் பண்ணி தரேன்.!" என்று வயிற்றிலிருந்த குழந்தையோடு பேசினாள்.

தலையணையை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டாள். "லவ் யூ வெற்றி. அதுவும் ரொம்ப.!" முனகியபடி கண்களை மூடினாள். 'என்னை பார்த்து எனக்கே இரிடேட்டிங்கா இருக்கு.!'

***

காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது அந்த காவலர் வாகனம்.

பாதி தூரம் சென்றிருந்தது வாகனம். "பாத்ரூம் போகணும்.." என்றாள் சுப்ரியா.

"அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் வந்துடும்.." என்றார் காவலர் ஒருவர். ஷாலினியின் கார் அந்த வாகனத்தின் முன்னால் சென்றுக் கொண்டிருந்தது.

"இல்ல ரொம்ப அர்ஜென்ட். எனக்கு இப்பவே போகணும்.." என்ற சுப்ரியா அங்கேயே தான் அணிந்திருந்த கால்சட்டையை கழட்ட ஆரம்பித்தாள். ஒரு அறையை தந்தாள் பெண் காவலர் ஒருவர்.

"சின்ன சின்ன பிள்ளைகளை கூட ரேப் பண்ணி சாகடிக்கறாங்கன்னு தாங்கள் இருக்கற ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவ்வளவு பத்திரமா இருக்க பார்க்கறாங்க எல்லா பொண்ணுங்களும்.. நீ என்னடான்னா ஆம்பளைங்க முன்னாடி இவ்வளவு அசால்டா டிரெஸ்ஸை கழட்டுற.?" என்று திட்டினாள்.

"சாரி.." என்றாள் சுப்ரியா விஷமமாக நகைத்தபடி. அவளின் எதிரில் அமர்ந்திருந்த காவலர் தன் கால்களை மேலே தூக்கினார். கால்சட்டையோடு சிறுநீர் கழித்திருந்தாள் அவள்.

முகம் சுளித்தனர் அனைவரும்.

"ச்சீ.. ரொம்ப நாறுது.." மூக்கின் முன் கையை ஆட்டினான் குற்றுயிராக இருந்த வசந்த்குமார்.

"ரொம்ப நேரமா போகல இல்ல. அதான்.." என்ற சுப்ரியா வயிற்றை தடவினாள்.

"பாத்ரூம் போகணும்.." என்றாள் எதிரில் இருந்த ஆண் காவலரிடம்.

காவலர்களுக்கு விசித்திரமாக இருந்தது இவளைப் பார்த்து. பொதுவாக இவளை போன்ற இளம் பெண்கள் காவலர்கள் என்றாலே வன்மையான குணம் கொண்டவர்கள் என்று நினைத்து காவலர்களை கண்டாலே கப்சிப்பென்று இருப்பார்கள். மூச்சு விடவும் பயப்படுபவர்கள் அதிகம். ஆனால் இவர்கள் செய்வது அவர்களால் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. குற்றவாளிகளுக்கு உண்டான எந்த பயமும் அவர்களின் முகத்தில் காண முடியவில்லை.

"எனக்கு வாமிட் வருது.." என்றாள் மேனகா வாயை பொத்தியபடி.

பெண் காவலர் எழுந்து நின்றார். தனது லத்தியால் சுப்ரியாவின் தோளில் ஒரு அடியை விட்டார். கல்லை போல அமர்ந்திருந்தாள்.

கடிகாரத்தைப் பார்த்தார்.

"இன்னும் பத்து நிமிசத்துல ஹாஸ்பிட்டல் வந்துடும்.. அதுவரை எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு உட்காரணும்.. இல்லன்னா இங்கேயே கொன்னுட்டு வண்டி ஆக்ஸிடென்ட்ல நீங்க செத்துட்டிங்கன்னு கேஸை எழுதிடுவோம்.." என்று எச்சரித்தார்.

நண்பர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் என்னவோ பேசினார்கள். ரத்னா கண்ணடித்தாள்.

மருத்துவமனையின் முன்னால் வந்து நின்றது காவலர் வாகனம்.

நால்வரையும் கீழே இறக்கினார்கள். அரசாங்க மருத்துவமனையின் பெயரை கண்டதுமே முகத்தை சுளித்தனர் நால்வரும்.

நால்வரையும் அவசர சிகிச்சை பிரிவில் கொண்டுச் சென்று சேர்த்தினார்கள்.

"சீக்கிரம் ட்ரீட்மெண்ட் பார்த்து அனுப்பி விடுங்க.." என்றாள் ஷாலினி.

"நான் இன்னும் பாத்ரூம் போகல. பேன்ட் கசகசக்குது.. டூ பாத்ரூம் வேற அர்ஜென்ட்.." என்றாள் சுப்ரியா வயிற்றைப் பிடித்தபடி. இவ்வளவு நேரமும் வந்த துர்நாற்றம் இவள் மீதிருந்துதான் வந்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட மருத்துவர்களும் மற்றவர்களும் முகத்தை சுளித்தனர்.

"நீ முதல்ல பாத்ரூம் போய்ட்டு வாம்மா.." என்றார் மருத்துவர் ஒருவர்.

பெண் காவலர் ஒருவர் துணைக்கு சென்றார்.

"நீங்க வேணாம். அவர் வரட்டும்.." என்றாள் ஷாலினியை கை காட்டி.

"அடிங்.. எங்க மேடம் உனக்கு பாத்ரூமுக்கு காவலா வருவாங்களா.? போ முன்னாடி.." என்று தலையில் தட்டினார் காவலர்.

"அவங்க வரலன்னா‌ நான் இங்கேயே பாத்ரூம் போவேன்.." என்று கால்சட்டையை கழட்டினாள்.

"ச்சை.." சுற்றி இருந்த அனைவருமே அருவெறுப்பின் உச்சிக்கு சென்றனர்.

சுப்ரியாவை அடிக்க கிளம்பினார் பெண் காவலர் ஒருவர். அவரின் கையை பிடித்து நிறுத்தினாள் ஷாலினி. அவரின் காதில் எதையோ சொன்னாள். சரியென்று தலையசைத்தார் அவர்.

"வா.. போகலாம்.." சுப்ரியாவை அழைத்துக் கொண்டு நடந்தாள் ஷாலினி. காவலர் ஒருவர் வெளியே ஓடினார்.

கழிவறைக்குள் சுப்ரியா சென்ற பத்து நிமிடத்திற்கு பிறகு துப்பாக்கி குண்டு பாயும் சத்தம் ஒன்று கேட்டது. காவலர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு உள்ளே ஓடினர். ஒருவர் மட்டும் பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்தார். அந்த நண்பர்களுக்கு காவலாக நின்றிருந்தார். நாற்காலியில் அமர்ந்திருந்த மூவரும் தங்களுக்குள் நகைத்துக் கொண்டிருந்தனர்.

முழுதாக ஒரு நிமிடம் கடந்தது. நண்பர்களின் அருகே நின்றிருந்த காவலர் தரையில் விழுந்தார். துப்பாக்கி குண்டு பாய்ந்த சத்தமும் அவரின் உடம்பிலிருந்து ஓடி வந்த இரத்தமும் மற்ற மூன்று நண்பர்களுக்கும் நம்பிக்கையை தந்தது.

மருத்துவர்களும் மற்றவர்களும் அவசரமாக தங்களின் கையை உயர்த்தினர்.

சுப்ரியா துப்பாக்கியோடு முன்னால் வந்தாள்.

"கமான் கைய்ஸ்.." என்றவள் முன்னே நடக்க, நண்பர் கூட்டம் அவளை தொடர்ந்து நடந்தது.

அடுத்த அரை நிமிடங்களுக்கு பிறகு ஷாலினியை கை தாங்கலாக அழைத்து வந்தனர் காவலர்கள். தரையில் கிடந்த காவலரை எழுப்பினர். அரை மயக்கத்தில் இருந்தார். அவர்கள் இருவருக்கும் சிகிச்சை ஆரம்பமானது.

"பிரெஸ்ஸை வர சொல்லுங்க.. எஸ்.பிக்கு சொல்லுங்க.." என்று துரிதப்படுத்தினாள் ஷாலினி.

அவள் கழிவறைக்கு செல்லும் முன் அவளிடம் ரகசிய சேதியை வாங்கிக் கொண்ட காவலர் அவளிடம் வந்தார். கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். ஷாலினி தன் இரகசிய சிரிப்பை தனக்குள் வைத்துக் கொண்டாள்.

"அவங்க பேரண்ட்ஸ்க்கும் சொல்லிடுங்க.." என்றாள்.

முதலில் கவினுக்கு அழைத்து சொன்னார்கள். அவன்தான் இருப்பதிலேயே கொஞ்சமாவது மெச்சூரிட்டியோடு இருப்பது போலிருந்தது அவர்களுக்கு.

***

செய்தியை கேட்டதும் போனை தவற விட்ட கவின் "அவங்க போலிஸ் கஸ்டடியிலிருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க.." என்றான்.

"எல்லாம் அந்த போலிஸ்தான் பண்றாங்க. அவங்க பொய் சொல்றாங்க.." என்றாள் வசந்த்குமாரின் அம்மா. வீட்டிற்கு ஒரே மகன். அவனை இழந்தால் பிறகு வாழ்க்கையையே இழந்தது போலாகிவிடும் அவளுக்கு.

"போலிஸ்காரங்க இரண்டு பேரை சுட்டுட்டு போயிருக்காங்க இவங்க.." என்றான் கவின் கட்டை குரலில். அவனுக்கு புரிந்தது விசயத்தின் தீவிரம்.

"எல்லாம் டிராமா பண்றாங்க. நான் சும்மா விட மாட்டேன். கண்டிப்பா அத்தனை போலிஸையும் ஜெயிலுக்கு அனுப்புவேன்.!" சுப்ரியாவின் தந்தை சொல்லிக் கொண்டிருந்த வேளையில் "பிரேக்கிங் நியூஸ்.." என்று ஒலித்தது தேன்மொழியின் கையிலிருந்த போனின் திரை.

"கல்லூரி மாணவர்கள் நால்வர் தங்களின் சக மாணவியை கொல்ல முயன்ற வழக்கில் புது திருப்பம். விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் குற்றவாளிகளின் நலன் கருதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தபோது அங்கே அந்த குற்றவாளிகள் இன்ஸ்பெக்டரையும், துணை காவலர் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றுள்ளனர்.." என்ற செய்தி வாசிப்பாளர் "குற்றவாளிகள் தப்பியோடிய காட்சி அங்கிருந்த ஒருவரின் செல்போன் ஒன்றில் பதிவாகியுள்ளது. அதைதான் இப்போது பார்க்க போகிறோம்.." என்று திரையை மாற்றினாள்.

சுப்ரியா அடம் பிடித்து ஷாலினியை அழைத்துச் செல்வதும், துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தமும், திரும்பி வந்த சுப்ரியா காவலர் ஒருவரை சுட்டு விட்டு நண்பர்களோடு தப்பியோடும் காட்சியும் பக்காவாக அதில் ஓடியது.

கவினுக்கு அவமானத்தில் முகம் கறுத்தது. அவள் செய்த செயலுக்கு தான் இறந்து விடலாமா என்று கூட தோன்றியது.

சுப்ரியாவின் பெற்றோரும் மற்றவர்களும் இனி தங்களின் பிள்ளைகளை காப்பாற்ற வழி இல்லையா, அப்படி இருந்தால் அது என்ற வழி என்ற யோசனையில் ஈடுப்பட்டு இருந்தனர்.

இனி கனிமொழியின் குடும்பத்திடம் பேரம் பேசினாலும் பயனில்லை. வேறு ஒரு சாட்சி அவர்களுக்கு எதிராக இருந்தது. சட்டமெனும் சிலந்தி வலையில் சிக்கும் சிறு பூச்சியாக இருக்காமல் அந்த சிலந்தி வலையை ஒற்றை விரலில் நசுக்கி எறிந்து விட்டு போகும் காட்டெருமையாய் இருந்தார்கள் அந்த பெற்றோர்கள். அதனால் தங்களின் பிள்ளைகளை காப்பாற்றி விடலாம் என்பதில் நம்பிக்கையோடு இருந்தார்கள். அந்த இடத்தை விட்டு போனார்கள்.

ஒரு மன்னிப்பை கூட கேட்காமல் சென்ற அந்த பெற்றோரை அதிர்ச்சியோடு பார்த்தாள் வளர்மதி.

"என்னடி இது.? ஒரு வருத்தம் கூட இல்ல இவங்ககிட்ட.? இவங்க புள்ளைங்க இப்படிதான் செய்வாங்க.. ச்சை.. இந்த உலகத்துல இருக்கும் எல்லோரும் என்னை போலவே நெஞ்சுல ஈரத்தோடு இருப்பாங்கன்னு நினைச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.." என்று புலம்பினாள்.

சக்தி அவளை கண்டுக் கொள்ளவேயில்லை. கண்களை மூடியபடி கழுத்தை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தான். நேரம் நகர்வது போல உணரவேயில்லை. நீண்ட இரவு அதே இடத்தில் நின்றுக் கொண்டிருப்பது போலிருந்தது. நொடிகளையும் கூட பிடித்து தள்ளிக் கொண்டிருந்தான்.

பாலாஜியும் வெற்றியும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.

"அந்த புள்ளைங்களை கொல்லணும்.." என்றான் வெற்றி காற்றை குத்தியபடி.

"ஆமா.. ஆனா நாமதான் செஞ்சோம்ன்னு தெரிய கூடாது.." என்றான் பாலாஜி.

இருவரும் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மாநிலத்தை விட்டு வெளியேறும் பாதையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அந்த காவலர் வாகனம். சிற்றுந்தை ஓட்டிக் கொண்டிருந்த சுப்ரியா நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தினாள்.

"இனி போக முடியாது. போனா போலிஸ் முன்னாடி நின்னு நம்மை பிடிச்சிடுவாங்க. நாம இப்படியே இந்த வயல் வழியா தப்பிச்சி போயிடலாம்.." என்றாள். அவளின் நண்பர்கள் சரியென்று தலையசைத்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN