காதல் கணவன் 112

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றியின் நெஞ்சில் இருந்தது அம்ருதாவின் பின்னந்தலை. அவளின் வயிற்றின் மீது இருந்தது அவனின் கரம்.

"அம்மு.." அவளின் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு அழைத்தான்.

உடம்பெங்கும் ஓடிய சிலிர்ப்போடு "ம்." என்றாள்.

"எனக்கு பாப்பாவை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு.." என்றான் வயிற்றை வருடியபடி.

ஏழாவது மாதம் இது. அவனின் கெஞ்சலுக்கு மசியவே இல்லை அவள்.

"இன்னும் மூனு மாசத்துல பார்த்துடலாம்‌ வெற்றி.."

"ஹாஸ்பிட்டல்ல உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க. நீ பயப்பட தேவையில்ல.." அவளின் தோளில் இருந்த உடையை விலக்கி முத்தங்களை தந்தபடி சொன்னான்.

முத்தங்கள் தந்த மாயங்களில் மூழ்கி கொண்டிருந்தவளுக்கு அவன் சொல்வது கேட்டு எரிச்சல் ஒருபுறம் வந்தது.

அவன் புறம் திரும்பினாள்.

"அந்த காலத்துல யார் ஹாஸ்பிட்டல் போனாங்க.?"

"அப்ப அந்த வசதி இல்ல. ஆனா இப்ப இருக்கு. நாம போகலாம். செக் பண்ணி வரலாம் அம்மு. எனக்கு எல்லாம் நார்மலா இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆசை. நீ ஏன் பயப்படுறன்னு ஒன்னும் புரியல எனக்கு.."

அவனின் இதழில் தன் இதழை ஒற்றினாள். ஒற்றை நொடியில் விலகிக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவனின் கரம் அவளின் பின்னங்கழுத்தில் பதிந்தது. முத்தம் தொடர்ந்தது. விழிகளை மூடியிருந்தவளின் முகத்திலிருந்த ஆனந்தம் அவனுக்கு நிறைவை தந்தது. அவளின் முகத்தில் உண்டான சிறு சிறு அசைவுகளையும் ரசித்துக் கொண்டிருந்தான். சிவந்த கன்னங்களில் கை பதித்தான். வருடியபடியே கீழே நகர்ந்தான்.

கூடல் கூடாது என்று சொல்லியிருந்தாள். ஆனால் அவனுக்குதான் அது சிரமமாக இருந்தது. இவளிடம் மட்டும் தனக்கு ஏன் இவ்வளவு பேராவல் என்று அறிய முயன்றான்.

வயிற்றுக்கு வந்து சேர்ந்தது அவனின் கரம். முத்தத்தை நிறுத்திவிட்டு அவசரமாக விலகினான்.

"நீ பார்த்தியா.?" எனக் கேட்டான்.

"என்ன.?"

"பாப்பா உதைச்சதை.?"

எழுந்து அமர்ந்தாள். வயிற்றின் மீது கையை வைத்தாள். ஆறாம் மாதம் முன்பே குழந்தைகள் சில உதைக்கும் என்று கேள்விப்பட்டுள்ளாள். தன் குழந்தையின் அசைவு நெளிவு உணர்ந்துதான் இருந்தாள். ஆனால் உதைத்ததை இன்றுதான் அறிந்தாள்.

மீண்டும் ஒரு உதை விழுந்தது.

சிரித்தாள்.

"சூப்பரா இருக்கு.." புடவையை விலக்கினாள். மீண்டும் உதைப்பது தெரிந்தது. வயிறு மெள்ள ஏறி இறங்கியது.

வாயை பொத்திக் கொண்டு சிரித்தாள். அத்தோடு சேர்த்து அழுதாள்.

வெற்றி வயிற்றின் மீது முத்தமிட்டு நிமிர்ந்தான். அம்ருதாவின் நெற்றியில் முத்தமிட்டான்.

"நம்ம குழந்தை வெற்றி.. இது உன்னை மாதிரி இருக்குமா இல்ல என்னை மாதிரி இருக்குமா.?" எனக் கேட்டவள் "உன்னை மாதிரியே இருக்கட்டும்.." என்றாள்.

தன்னை போல இருந்தால் பிறகு அவன் தன்னையே நினைத்துக் கொண்டு கவலைப்படுவான் என்று தோன்றியது.

அவனது நெஞ்சில் சாய்ந்தாள். "வெற்றி.." அழைத்தாள் ஆசையோடு.

"சொல்லு அம்மு.." அவளின் கன்னங்களில் முத்தங்களை மாறி மாறி தந்தான்.

"ஐ லவ் யூ வெற்றி. இதுவரைக்கும் நான் உன் மனசை கஷ்டப்படுத்தியிருந்தா சாரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை மறக்கவே முடியல என்னால. கவின் அழகா இருப்பான் தெரியுமா? க்யூட்டா நடந்துப்பான்.." என்று சொல்லி சிரித்தாள்.

கையை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் வெற்றி.

"பார்த்த உடனே அவனை பிடிச்சிருந்தது. உன்னை பார்க்கும் முன்னாடி அவனை பார்த்திருக்கலாமேன்னு நிறைய முறை நினைச்சிருக்கேன். நல்ல பையன். அதிர்ந்துக் கூட பேச மாட்டான் ரொம்ப கேரிங். உனக்கு தெரியுமா, நான் செஞ்ச தப்புக்கும் கூட அவனே வந்து சாரி கேட்பான்.." என்று சிரித்தாள்.

வெற்றிக்குதான் இரத்தத்தில் சூடு ஏறிக் கொண்டிருந்தது.

"அவனுக்கு கோபமே வராது. எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நிதானமா இருப்பான். அவனை பிடிச்சிருந்தது‌. ஆனா காதலிக்கவே முடியல. கொஞ்சமா லவ் உருவாகி இருந்தா கூட நான் அவனையே கல்யாணம் பண்ணியிருப்பேன்.." என்றாள் சோகமாக.

பற்களை நெரித்தவனின் சத்தம் அவளுக்கு கேட்கவில்லை.

"நீ ஏன் வெற்றி என் மனசை விட்டு போகல.? நீ அப்படி என்னதான் பண்ண.? ஏன் இந்த காதலை என்னால மறக்க முடியல? இன்னொரு ரிலேஷன்ஷிப்குள்ள போக முடியல.?" சந்தேகமாக கேட்டாள்.

கடைசியில் தான்தான் வெற்றிப் பெற்றது போலிருந்தது அவனுக்கு. சந்தோசப்பட்டான்.

"ஏனா நான்தான் உனக்கானவன். விதி போல இது. இந்த காதல் உன் விதி. நானும் உன் விதி.." என்றவனிடம் ஆமென்று தலையசைத்தாள்.

"அது என்னவோ உண்மைதான்.." என்றாள்.

அவனின் உதடுகளை வருடினாள். "நீ கிஸ் பண்ணா எனக்கு பிடிக்கும் தெரியுமா.?" சிரிப்போடு கேட்டாள்.

"ஓ.. ஹேப்பி நான்.!" என்றவனிடம் "உனக்கு என்னை பிடிக்குமா வெற்றி.?" என்று விசாரித்தாள்.

"ரொம்ப பிடிக்கும் அம்மு. நீ இல்லாம வாழ்ந்தா அது சும்மா ஏனோதானோ வாழ்க்கைதான் எனக்கு. உன்னை தொடாமலேயே இருந்தாலும் அது ஒரு தனி பீல். பாரதியோடு இருந்திருந்தா இந்த அளவுக்கு இருந்திருப்பேனான்னு தெரியல.."

கரங்களை இணைத்தபடி அமர்ந்திருந்தனர்.

***

கனிமொழி ஹாலில் அமர்ந்திருந்தாள். பெரிய புத்தகம் ஒன்றை பரபரவென்று புரட்டிக் கொண்டிருந்தாள்.

"பாவம் நல்லா இருந்த புள்ளைக்கிட்ட எதையோ சொல்லி லூசாக்கி விட்டுட்டான். எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமாவே திரியுது.." மருமகளின் நிலை எண்ணி கலங்கினாள் அர்ச்சனா.

நிமிர்ந்த கனிமொழி "நான் கலெக்டர் ஆக போறேன் அத்தை. மாமாவுக்கும் எனக்கும் சவால்.." என்றாள்.

பாட்டியும் வளர்மதியும் இவளை திரும்பிப் பார்த்தனர்.

அர்ச்சனா ஆச்சரியத்தோடு மருமகளின் அருகே வந்தாள்.

"சவாலா.?" என்றாள் மருமகளின் தாடையை பற்றி.

"ஆமா அத்தை.." தலையை மேலும் கீழுமாக ஆட்டியவளிடம் "என்கிட்ட ஒரு சவாலுக்கு வாயேன்.!" என்றாள்.

"என்ன.?"

"தினம் திங்கற இல்ல.? அந்த தட்டை நீயே கொண்டுப் போய் கழுவி வச்சிடு. அது போதும். இது நான் உனக்கு தர சவால்.." என்றாள் புன்னகை மாறாமல்.

கனிமொழி வெடுக்கென்று எழுந்து நின்றாள். அவளின் மடியிலிருந்த புத்தகம் கீழே விழுந்தது. "ஒரு கலெக்டருக்கு சொல்ற வேலையா இது.?" நெஞ்சை நிமிர்த்திக் கேட்டாள்.

கீழே கிடந்த புத்தகத்தை எடுத்து அவள் முன்னால் இருந்த மேஜையின் மீது வைத்தாள் அர்ச்சனா.

"இது வேலை இல்ல. ஒழுக்கம். சாப்பாட்டு தட்டையே க்ளீன் பண்ண தெரியல. நீ கலெக்டராகி நாட்டுக்கு சேவை பண்ண போறியா.?"

மூக்கு சிவந்தது இவளுக்கு.

"ஹலோ மாமியாரே.!" என்றாள் ஒரு விரலை நீட்டி.

"இனி நானே என் சாப்பாட்டு தட்டை க்ளீன் பண்றேன். என்னோடது மட்டுமில்ல.. என் புருசனோடது. உங்களோடது.. எல்லோரோடதும்.. டிசிபிள்ன்ல இந்த கனிமொழி எந்த விதத்திலும் குறைஞ்சவ இல்லன்னு காட்டுறேன்.." என்றாள்.

அர்ச்சனா இடம் வலமாக தலையசைத்தாள். "எல்லார் தட்டையும் கழுவிட்டு இருந்தா எப்ப படிப்ப.? உன் தட்டை க்ளீன் பண்ணு. அதுவே போதும்.." என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பாட்டி தலையை திருப்பிக் கொண்டுச் சிரித்தாள். தனது மகளும் பேத்தியும் மாமியார் மருமகள் விவாதம் நடத்துவது பிடித்திருந்தது.

வளர்மதி சிறு புன்னகையோடு தன் மகளை பார்த்தாள். மகள் எத்தனை பெரிய இக்கட்டை கடந்து வந்திருக்கிறாள் என்று அறிந்தவள்தானே அவளும்! இன்று மகள் சாதாரணமாக உலவுவது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.

கனிமொழி தான் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். மகளின் அருகே வந்து தலையை வருடினார். தனது பேக்கிலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து தந்தார். "நீ எழுதி தந்த புத்தகம்.. வாங்கிட்டு வந்துட்டேன்.!" என்றார்.

"தேங்க்ஸ்ப்பா.." பற்களை காட்டினாள்.

"நாளைக்கு என் புள்ளையும் கலெக்டரு.." பெருமிதத்தோடு சொன்னவர் "அம்மா டீ தரிங்களா.?" எனக் கேட்டார். மனைவி அந்த திசையில் இருப்பதை அவரும் அறிவார். அதனால்தான் அந்த பக்கம் கூட திரும்பாமல் கேட்டார்.

கனிமொழிக்கு வருத்தமாக இருந்தது. தன்னால்தான் அவர்களுக்குள் சண்டை என்று தினமும் வருந்தினாள்.

வழக்கம் போல அன்று இரவும் "மாமா.. பாவம் எங்க அம்மாவும் அப்பாவும்.." என்றாள்.

"அதுக்கு நான் என்னடி பண்ணட்டும்.?" என்றவனின் நெஞ்சில் சாய்ந்தவள் "ஏதாவது செஞ்சி சேர்த்து வைங்க.." என்றாள்.

"நானா.? அவங்களையா.? சண்டை போட்டுக்கிட்ட அவங்களுக்கு சேர்ந்துக்க தெரியுதா.? அதெல்லாம் சேர்ந்துப்பாங்க. நீ உன் வேலையை பாரு.." என்றான்.

***

வளர்மதி கட்டிலில் படுத்திருந்தாள். அவள் கணவன் வழக்கம்போல தலையணையை எடுத்து சென்று சோஃபாவில் சாய்ந்தார்.

மனைவியின் முகம் பார்க்கவேயில்லை அவர். வளர்மதிக்குதான் மன அழுத்தம் கூடிக் கொண்டிருந்தது.

மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது. தனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

"ஏங்க.." என்றாள் தனது மொத்த பிடிவாதத்தையும் கைவிட்டுவிட்டு.

அவர் பதில் சொல்லவில்லை. திரும்பிப் பார்த்தாள். கூரையை பார்த்துக் கொண்டிருந்தது அவரின் பார்வை.

"என்னோடு பேச கூட மாட்டிங்களா.?"

மௌனமே பதிலாக வந்தது.

அதற்கு மேல் பேச வாய் வரவில்லை. கவிழ்ந்துப் படுத்துக் கொண்டாள். கண்ணீர் ஓசையின்றி தலையணையை நனைத்தது.

***

அம்ருதாவை பார்க்க வந்தாள் அவளின் அம்மா.

மகளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து எடுத்து வந்திருந்தாள். மாலை வரை அவளின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

"இந்த மாசம் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்திங்களா அம்மு.? என்ன சொன்னாங்க.?"

"எல்லாமே நல்லாருக்குன்னு சொன்னாங்க.."

மகளின் தலையை வருடி‌விட்டவள் "ஸ்கேன் ரிப்போர்ட் காட்டும்மா.." என்றாள் ஆசையோடு.

"வெ.. வெற்றி எங்கேயோ வச்சிட்டான்ம்மா. நான் எங்கே தேடி எடுக்கறது? குழந்தை பிறந்த பிறகு நீயே பார்த்துக்க.."

"ஒவ்வொரு மாசமும் இப்படியே சொல்லு.." என்றவள் மகளின் கழுத்து எலும்புகளை கவலையோடு பார்த்தாள்.

"என்ன பொண்ணு நீ.? சாப்பிடுறியா இல்லையா.? எலும்பா இருக்க. எல்லோரும் புள்ளைதாச்சியான்னா உடம்பு பிடிப்பாங்க. நீ என்னடான்னா தீஞ்சிக்கிட்டு போற.." சலித்துக் கொண்டாள்.

"சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கேன்ம்மா.."

மகளுக்கு தலைவாரி பூ‌ வைத்து விட்டாள்.

"இந்த வீட்டுல இருப்பவங்க உன்னை கொடுமை பண்ணுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனா பரவால்ல.‌ இவங்களும் மனுசங்களாதான் இருக்காங்க. இப்படியொரு குடும்பத்துல எப்படிதான் பிறந்தானோ உன் புருசன்.? மூக்குக்கு மேல் கோபத்தை வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு திரியறான்.."

அம்ருதாவிற்கு சிரிப்புதான் வந்தது.

கிளம்பிக் கொண்டிருந்த மேகலா நினைவு வந்தவளாக மகளின் முன்னால் அமர்ந்தாள்.

"வந்த வேலையை மறந்துட்டேன் பாரு. உனக்கு வளைகாப்பு நடத்தி வீட்டுக்கு கூட்டிப் போகணும்.." என்றவள் ரவிக்கையின் உள்ளே இருந்து காகிதம் ஒன்றை எடுத்து நீட்டினாள்.

"இதுல நாலு தேதி இருக்கு. உனக்கும் உன் புருசனுக்கும் எது சரியா இருக்கும்ன்னு பேசிட்டு சொல்லுங்க. நாங்க அந்த தேதியிலேயே வளைக்காப்பை‌ வச்சிடுறோம்.." என்றாள்.

அம்ருதா காகிதத்தில் எழுதி இருந்ததை பார்த்தாள்.

"நான் அங்கே வரலம்மா. வளைகாப்பு நடத்திட்டு இங்கேயே விட்டுட்டு போயிடுங்க. நான் இங்கிருந்து‌ வரல.." என்றாள்‌ தயக்கமாக.

"இப்படி சொல்ல கூடாது. ஊர் உலகம் என்ன பேசும்.? பிள்ளைத்தாச்சி பிள்ளையை இங்கே விட்டுட்டு எனக்கு எப்படி அங்கே தூக்கம் வரும்.? ஒரு ஏழெட்டு மாசம் நம்ம வீட்டுல இருப்பதுல என்ன குறையற.?" என்றுக் கேட்டாள்.

"என்னை இங்கேயே விட்டு போறதா இருந்தா வளைகாப்பு வைங்க. இல்லன்னா வேணாம்.." ஒரே முடிவாக சொன்னாள்.

மேகலா எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். ஆனால் அம்ருதா மசியவில்லை.

"உங்க அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்.." என்று அங்கிருந்து கிளம்பிப் போனாள்.

வெற்றி வந்த பிறகு தேதிகளை சொன்னாள். "எப்ப வளைகாப்பு வைக்கலாம்.?" என்றுக் கேட்டாள்.

"உனக்கு பிடிச்ச நாள்ல.." அவளின் கன்னம் கிள்ளி சொன்னான்.

அவளுக்கு பிடித்த நாளிலேயே வளைகாப்பு நடத்த திட்டமிட்டார்கள்.

வளைகாப்பு நாளும் வந்தது. வீடு புது பொலிவோடு இருந்தது. அம்ருதாவிற்கு அணிகலங்களை அணிவித்து அழகாக தயார் செய்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN