காதல் கணவன் 117

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மங்கை சொன்னது கேட்டு குழம்பினான் பாலாஜி. ஆனால் புரிந்தது பல விசயங்கள். யார்தான் தனது தாய்மையை இழக்க விரும்புவார்கள்.? ஆனாலும் அவள் செய்த தவறும் பூதாகரமாக தோன்றியது அவனுக்கு.

"இதை அவ வீட்டுல சொல்லியிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை ஆகியிருக்காது. வேற வழி‌ பார்த்திருப்போம்.. கருவை கலைச்சிட்டேன்னு சொன்னா. அது உண்மைதான். இவன் பிராங் பார்டியை அடிச்சதாலதான் குழந்தையை கலைச்சேன்னு சொன்னா. ஆனா அதுக்கு மேல ஒத்தை வார்த்தை சொல்லலியே.. அசால்டா இருந்துட்டா. அவன் மேல இருக்கும் கோபத்துல தன்னை தானே அழிச்சிக்கிட்டா.."

"அப்படி சொல்ல முடியாது. அவளால அவளோட குறையை மனசார ஏத்துக்க முடியல. அதுதான் இங்கே பிரச்சனை. அவளுக்கு மட்டுமில்ல பல பேரும் இதுதான் பிரச்சனை. அவளுக்கு அடிப்பட்ட உடனே வலி பிடிச்சிருக்கு. அப்பவே வந்திருந்தா கண்டிப்பா இவ்வளவு சேதாரம் ஆகியிருக்காது. சர்வ சாதாரணமா குணமாகியிருக்கும். ஆனா இது என் உடம்பு. இது சும்மா வலி. இதை என்னால தாங்கிக்க முடியும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு அவ நினைச்சது முதல் நாள் தப்பு. அப்புறமும் அத்தனையும் நடந்த பிறகும் கூட தனக்கு இப்படி ஆகாது. ஆக கூடாதுன்னு தனக்கு தானே சொல்லிட்டு இருந்திருப்பா பார்த்தியே அது இன்னும் பெரிய தப்பு. அதுவும் இல்லாம அவளுக்கு தன்னோட குறைகளை யார்கிட்டயும் சொல்ல பிடிச்சிருக்காது. அவளால மத்தவங்க கஷ்டபடுவதை விரும்பியிருக்க மாட்டா.." என்று மங்கை சொல்லிக் கொண்டே செல்ல, பாலாஜிக்குதான் கடுப்பானது.

ஏதேனும் ஒரு வகையில் அவளின் உயிர் காப்பாற்றப்பட்டால் நலம் என்று கெஞ்சியது மனது.

"அவனை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஆதங்கமும் ஆத்திரமும்தான் வந்திருக்கு. ஆனா தன்னோட உடல்நிலையை பத்தி சொல்ல முடியல. ஏனா அவளோட மனநிலை அவனை பார்க்கும்போதெல்லாம் மாறி இருக்கு. அவ அவன்கிட்ட மட்டும் சைக்கோதனமா நடந்திருக்கா. அவனால தனக்கு உண்டான இழப்பு மட்டும்தான் அவளுக்கு பிரச்சனையா தெரிஞ்சிருக்கு. அதுதான் அவளுக்கு வினையா வந்து சேர்ந்திருக்கு.. நீங்க அத்தனை பேர் இருந்திருங்கிங்க. அவளால அவன்கிட்ட இயல்பா இருந்திருக்க முடியாது. ஆனா நீங்க காரணம் தெரிஞ்சிட்டு இருந்திருக்கலாமே! முதல்லயே.. அவ கர்ப்பமாகும் முன்னாடியே இதை பத்தி கேட்டிருந்தா அவ சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. அவ மனசுக்குள்ள மருகியிருப்பாதான். ஆனா வீட்டுல உள்ள யாராவது அன்பா அனுசரணையா கேட்டிருந்தா சொல்லி இருப்பா."

பாலாஜி எச்சிலை விழுங்கினான். அவளிடம் கேட்டார்கள். ஆனால் பொறுப்பெடுத்து கேட்கவில்லை. அவள் அவனை வெறுத்தது சட்டபடி குற்றம் என்பது போலதான் அனைவரும் நடந்துக் கொண்டார்கள். ஏன் வெறுக்கிறாள் என்ற காரணத்தை தேடவேயில்லை. வெறுப்பதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுதான் கேட்டார்கள்.

"அவ மனசு ரொம்ப சிதைஞ்சிருக்கு. அவளால தன் காதலனை பிரியவே முடியாது. ஆனா அவளோட வாழ்க்கை அழிய அந்த காதலனே காரணம். ரொம்ப யோசிச்சி இருக்கா. மனசுக்குள்ளவே ரொம்ப போராடியிருக்கா. இருபத்திநாலு மணி நேரமும் டிப்ரஷன்லயே இருந்திருப்பா. அந்த டைம்ல அவளோட காயங்கள் கொஞ்சமா ஆற ஆரம்பிச்சிருக்கும். கண்டிப்பா. இல்லன்னா அவ பிரகனென்ட் ஆக சான்ஸே இல்ல. பாதி குணமாகி பாதி காயமா அப்படியே இருந்திருக்கும். அந்த டைம்லதான் அந்த ரேப் நடந்திருக்கணும். அவ பிரகனென்டானது மிராக்கள்தான். ஏதோ ஒரு மைக்ரோ செகண்ட் வாய்ப்பு. இவளை தவிர வேற யாருக்கும் இப்படி நடக்க வாய்ப்பே இல்ல. அதை மட்டும் அடிச்சி சொல்வேன் நான். ஆனா அந்த ரேப்க்கு பிறகு பிரகனென்ட்ன்னு அவளுக்கு தெரிய வந்தபோது அவ ரொம்ப குழம்பி இருப்பான்னு நினைக்கிறேன். என்னவோ நடக்கட்டும்.. எப்படியோ போகட்டும்ன்னு அந்த செகண்ட்லதான் அவ முடிவெடுத்திருக்கணும். ஆனா அந்த கரு அவ வயித்துல தங்கியதுதான் என்னால நம்பவே முடியல. எப்படி இது பாசிபில்.?" அவளுக்கே குழம்பியது.

"அவ கட்டிலை விட்டு கீழேயே இறங்கல டாக்டர். ஒரு பொம்மை மாதிரி, ஒரு நோயாளி மாதிரி கட்டில்லயே படுத்துட்டு இருப்பா. சாப்பாட்டுக்கு கூட வெளியே வர மாட்டா.. உடம்பை அவ அசைக்கவே இல்ல.."

"அதனாலதான்னு நினைக்கிறேன். அளவுக்கு அதிகமான ஓய்வு, அந்த குழந்தையையே காரணம் காட்டி மன கஷ்டத்தை குறைச்சிக்கிட்டா.. ரொம்ப ரேர் கேஸ்தான்.."

பாலாஜி வாடிய முகத்தோடு தலையசைத்தான்.

"நான் சொன்னது எல்லாமே என் யூகம்தான். அந்த பொண்ணு பிழைச்சி வந்தான்னா மறக்காம கவுன்சிலிங் கூட்டி வாங்க. நான் செக் பண்ணிட்டு மத்த விவரங்களை சொல்றேன்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அண்ணனை தேடி செல்ல முயன்றவனுக்கு அழைத்தான் சக்தி.

"ப்ளட் டொனேட் பண்றியா.?" என்றுக் கேட்டான்.

"வரேன்.." என்று மருத்துவமனைக்குள் ஓடினான் பாலாஜி.

***

"அண்ணா எழு.. அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னு நம்பு.." வெற்றியை தேற்ற முற்பட்டாள் தேன்மொழி.

"என்னை தனியா விடு தேனு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னை விட்டுட்டு போங்க இரண்டு பேரும்.. ப்ளீஸ்.." கெஞ்சினான் வெற்றி.

"பைத்தியம் போல ரியாக்ட் பண்ணாத வெற்றி. எழுந்து வா உள்ளே போகலாம்.." கீர்த்தனா அழைத்தாள்.

"ப்ளீ‌ஸ்.. இரண்டு பேர்க்கிட்டயும் கெஞ்சி கேட்கிறேன்.. என்னை‌ விடுங்க.. கொஞ்ச நேரம் டைம் கொடுங்க.."

கீர்த்தனாவும் தேன்மொழியும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால் தேன்மொழி தூரத்தில் வந்து நின்றாள்.

"நீ போ கீர்த்தனா.‌ நான் இருக்கேன். ஏதாவது பண்ணிப்பானோன்னு பயமா இருக்கு எனக்கு.."

"எதுவா இருந்தாலும் போன் பண்ணு.." என்றுவிட்டு உள்ளே போனாள் கீர்த்தனா.

***

"எல்லாமே என்னாலதான்.." அழுதபடி புலம்பினான்.

வெற்றியின் போன் சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தான். அம்ருதாவிடமிருந்து மெயில் வந்திருந்தது. குழப்பத்தோடு திறந்துப் பார்த்தான்.

"வெற்றி.. இந்த மெயிலை நான் ஷெட்யூல் பண்ணி வச்சிருக்கேன். டாக்டர் என்னை காப்பாத்த முடியாதுன்னு சொல்லி இருப்பாங்க..

நடந்ததை இப்பவாவது உன்கிட்ட சொல்லிடுறேன். அந்த பிராங் பார்டியை நீ அடிச்சபோது நான் குறுக்கே வந்தேனே ஞாபகம் இருக்கா.? அங்கே தொடங்குச்சி எல்லாமே.! நீ தள்ளி விட்டதுல வயித்துல பயங்கர அடி வெற்றி. பயங்கர வலியும் கூட. ஆனா நான் கவனிக்கவே இல்ல. டேட் தள்ளி போச்சேன்னு வீட்டுலயே டெஸ்ட் பண்ணேன். பிரகனென்டுன்னு வந்தது. உனக்கு வேற என் மேல பயங்கர கோபம். இதை சொன்னா உன் கோபம் தீருமேன்னு சொன்னேன். ஆனா அதுக்கப்புறமும் வலி இருந்துட்டே இருந்தது. அடுத்த இரண்டு நாள்ல ப்ளட் ஸ்டெயின் ஆச்சி. பயங்கர பெயின். நான் பிரகனென்ட்ன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்கன்னு பயந்து தனியா ஹாஸ்பிட்டல் போனேன். ஆனா ஹாஸ்பிட்டல் போனதுல என் கருப்பையில் பயங்கரமா அடிப்பட்டதால என்னால இனி குழந்தை பெத்துக்கவே முடியாது, என் கர்ப்பப்பையை கூட உடனே எடுத்தாகணும்ன்னு சொன்னாங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா.? அவங்களே அந்த கருவை அழிச்சிட்டாங்க. ஒரு வாரம் கழிச்சிட்டு வர சொன்னாங்க. நான் எதுக்கும் உதவாதவளா அன்னைக்குதான் மாறி போனேன்.

நான் எதையும் வேணும்ன்னு செய்யல. நீயும் எதையும் வேணும்ன்னு செய்யல. எனக்கு தெரியும் நான் மோசமா நடந்துக்கிட்டேன்னு. பாப்பா என் வயித்துல வளர ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு மூளையே ஒழுங்கா வேலை செய்ய ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் உன்னை பத்தி யோசிச்சாலே கோபம் மட்டும்தான் வரும். உன்னை நினைக்கறதே கஷ்டமா இருந்தது. சாரி வெற்றி. என்னால உன்னை எப்பவுமே வெறுக்க முடியாது. ஆனா என்னால என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியல. உன்கிட்டயிருந்து விலக ஆசைப்பட்டேன். நீ என்னை விடவே மாட்டன்னு தெரியும்.

ஆனாலும் அவசரமா கல்யாண பொண்ணா மாறினேன். ஆனா நீ அதையும் கெடுத்துட்ட. கவினை காதலிக்க போய் தோத்து போய் திரும்பினேன். எங்கேயாவது ஓடிப் போயிருக்கணும் நான். ஆனா அந்த அறிவு அப்ப தோணாம போயிடுச்சி. உன் மேல அவ்வளவு வெறுப்பு. உன் மேல அவ்வளவு காதல். லூசுதனமா இருக்கு இல்லையா? எனக்கும் அப்படிதான் தோணுச்சி.

உன்கிட்ட நான் என்னன்னு சொல்வேன் வெற்றி? உன்னால உன் கோபத்தால எனக்கு இழப்புன்னு எப்படி சொல்வேன்.? நீதான் தெளிவா சொல்லியிருந்தியே, எனக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும். நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு! நான்தானே உன் பின்னால சுத்தி உன் மனசை மாத்தினேன். உன் கோபத்தை பொறுத்து போவதா, உன் கோபத்தை ஏத்துக்கிறதா உன்கிட்ட சொன்னேனே.. பிறகு எப்படி உன் மேல பழி போட முடியும்.?

ஆனா உன் மேல கோபத்தையும் காட்டாம இருக்க முடியல என்னால. உனக்கு அந்த பாரதி மேல கோபம் வந்தது இல்லன்னு கேட்டு எப்படி அழுதேன் தெரியுமா.? தாங்கவே முடியல வெற்றி. நான் உனக்கு தகுதியானவ இல்லன்னு என்னையே வெறுக்க ஆரம்பிச்சிட்டேன்‌.

எதிர்பார்ப்பு இருக்க கூடாதுன்னு நினைச்சிதான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேன். உன் கோபம் கண்டு பயம் வந்துடுச்சி. அதை மறைச்சேன் உன்கிட்ட. எனக்கு பயமே இல்லன்னு எனக்கு நானே சொல்லிக்க ஆரம்பிச்சேன். உன் கோபம் உன்னோட இயல்புன்னு நினைச்சது என் தப்புதான். உன் கோபத்துக்கு நான் ஏதாவது சொல்யூஸன் கண்டுபிடிச்சிருக்கணும். என் பயத்தை சாதாரணமா நினைச்சதும் என் தப்புதான். என் பயத்துக்கு நான் மரியாதை தந்திருக்கணும். அதை உன்கிட்ட சொல்லி இருக்கணும். நான் உன் கோபத்தை கண்டு பயப்படுறேன்னு முதல்லயே சொல்லி இருந்தா நீயும் உன்னை மாத்திக்க டிரை பண்ணி இருப்பியோ என்னவோ? எல்லாமே காலம் கடந்துதான் புரிஞ்சது வெற்றி. முட்டாள் நான்.

பயத்தையும், உன் மேலான ஆத்திரத்தையும் தவிர வேற எதுவுமே இல்ல என்கிட்ட. எண்ணங்கள் நார்மலுக்கு வர ஆரம்பிச்ச பிறகு யோசிச்சதுல தப்பு முழுக்க என் மேலன்னு புரிஞ்சது. ஆனா என்ன செய்யட்டும் வெற்றி.? எல்லாமே போயிடுச்சி. என்னை நீ ரேப் பண்ண போது உண்மையை உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா முடியல. என்னவோ ஆயிடுச்சி எனக்கு. கோபம் மட்டுமே பிரதானமாகிடுச்சி. சைக்கோ சைக்கோன்னு உன்னை திட்டுவேன் இல்ல. நான்தான் சைக்கோ வெற்றி. நீ ரொம்ப நார்மல்டா.. நான்தான் சைக்கோ.. மெண்டல்.."

விம்மி அழுதான்.

"இந்த குழந்தையை கலைக்கறதுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல. உன் மேல இருக்கும் கோபத்துலதான் இந்த குழந்தையை சுமந்தேன். பொய் சொல்ல விரும்பல வெற்றி. எதையும் நான் முழு மனசோடு செய்யல. உன்னை அழ வைக்க நினைச்சேன்‌. என்னை நீ எவ்வளவு அழ வச்சியோ அதே அளவு உன்னை அழ வைக்க நினைச்சேன். தப்பு பண்ணிட்டேன் இல்ல.? என் வெற்றி நீ. உன்னை அழ வைக்கறது எனக்கு நானே கொடுத்துக்கற தண்டனை.. ஆனா அதைதான் தேர்ந்தெடுத்தது என் முட்டாள் மூளை. நான் எங்கேயாவது தூரமா இருப்பேன். குழந்தை பிறக்கும். நான் செத்துடுவேன். உனக்கு தகவல் சொல்வாங்க. நீ அந்த குழந்தையை தூக்கிப் போய் பாரதியோடு சேர்த்து நல்லா வளர்த்திடுவ.. நீ செஞ்ச தப்பு உனக்கு தெரியாது. ஆனா என்னை மறக்காம இருப்ப.. பைத்தியக்காரிதான் இந்த மாதிரி முடிவெடுப்பா. நான் பைத்தியக்காரிதானே வெற்றி.?

ஆனா எல்லாமும் மாறிடுச்சி. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சி. குழந்தை வளரவும் எனக்கு குழப்பம் தெளிஞ்சிடுச்சி.

நான் போன பிறகு அழாத. உன் கோபத்துக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுத்துக்க. உன்னை காதலிக்க ஆரம்பிச்ச புதுசுலயே இந்த வார்த்தையை சொல்லி இருக்கணும் நான்‌. ஆனா கடைசியா உன்னை விட்டு பிரியற நேரத்துல சொல்றேன். சாரி.

உன் அம்மா இறந்ததுக்கு பாலாஜி மேல கோபத்தை காட்டின. நான் இறந்ததுக்கு நம்ம குழந்தை மேல கோபத்தை காட்டிடாத.. ப்ளீஸ். ஐ லவ் யூ.. உன்னால மன்னிக்க முடிஞ்சா என்னை மன்னிச்சிடு. இன்னொரு ஜென்மம் இருக்கான்னு தெரியல. அப்படி இருந்து நீ இதே மாதிரி கோபக்காரனா இருந்தா கூட நானே உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய் சரி பண்ணிடுவேன். உன்னோடு கடைசி வரை வாழ்வேன். அப்படி ஒரு ஜென்மம் இருக்கான்னு தெரியல.. பாதியிலேயே விட்டுட்டு போறதுக்கு மன்னிச்சிடு வெற்றி.."

கைபேசியை தரையில் விட்டுவிட்டான். புல்வெளியில் அமர்ந்திருந்தவன் முட்டிக்காலை கட்டியபடி ஓசையின்றி அழுதான்.

இப்படியொரு இக்கட்டான சூழலை தன் வாழ்வில் அவன் சந்தித்ததே இல்லை. வாழ்க்கை மொத்தத்தையும் இழக்கும் தருணம் இது.

"அம்மு.." என்பதை தவிர வேறு வார்த்தை அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை.

"பிடிக்கலன்னு சொன்னவளை மறுபடி மறுபடி தொல்லை செஞ்சவன் நான்தான். உன் வார்த்தைக்கு மதிப்பு தந்திருந்தா, உன் கோபத்துக்கு மதிப்பு தந்திருந்தா இன்னைக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்காது.." தலையில் அடித்துக் கொண்டான். நிறுத்தாமல் கொட்டியது கண்ணீர்.

***

கீர்த்தனாவின் எதிரில் அமர்ந்திருந்தான் பாலாஜி. அவளின் முகத்தை பார்க்கவேயில்லை. இருவரின் கையிலிருந்தும் இரத்தத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆரவும் இரத்த தானம் செய்தான். விசயம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆதிராவும் கவினும் ஆளுக்கொரு படுக்கையில் படுத்திருந்தார்கள்.

"முத்துராம் வந்திருவாரு. அவரும் ப்ளட் டொனேட் பண்ணுவாரு.." என்றாள் ஆதிரா.

சக்திக்கு கவினை கண்டு வித்தியாசமாக தோன்றியது.

கவினை பொறுத்தவரை தங்கையின் பிரச்சனை வேறு. அம்ருதாவின் பிரச்சனை வேறு. தங்கை தவறு செய்தவள். ஆனால் அம்ருதா அவனை பொறுத்தவரை அன்பின் தேவதை. அவளுக்கான இரத்தம் தருவது சாதாரணம் அவனுக்கு.

அம்ருதாவை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்கள்.

மேகலா‌ சுவரோடு சரிந்து அமர்ந்திருந்தாள்.

"பொண்ணு வளர்ந்துட்டா.. நல்ல வேலையில் இருக்கா. கை நிறைய சம்பாதிக்கிறா.. அவளை அவளே கவனிச்சாப்பான்னு நினைச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.? அவளுக்கு எப்பவும் நான் வேணும். எப்பவும் நான் அவளோட உடம்பை பத்தியும் மனசை பத்தியும் கண்காணிச்சிட்டு இருந்திருக்கணும்.. எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டேன்.." புலம்பிக் கொண்டிருந்தாள்‌.

தேன்மொழி தான் நின்ற இடத்திலிருந்து அண்ணனை கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் அழுவதை காண சகிக்காமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

'என் அண்ணன் தப்பு பண்ணிட்டான் கடவுளே. ஆனா அதுக்காக அவ உயிரை எடுத்துடாத. அவ இல்லன்னா இவனும் செத்துடுவான். தயவுசெஞ்சி இரண்டு பேரையும் காப்பாத்தி கொடுங்க..' கடவுளிடம் கெஞ்சினாள்.

சண்முகாவும் ரேகாவும் திட்டமிட்டு விட்டுதான் ஆபரேஷனை ஆரம்பித்தார்கள்.

***

தேன்மொழியின் கையை பற்றினாள் வளர்மதி.

"என்னம்மா.?"

"நீயும் ப்ளட் டொனேட் பண்றியா.?"

தேன்மொழி உள்ளே ஓடினாள். வளர்மதி பின்தொடர்ந்தாள்.

***
வெற்றியின் போன் மீண்டும் சத்தமிட்டது. எடுத்தான்‌. அவளிடமிருந்துதான் மீண்டும் ஒரு மெயில் வந்திருந்தது.

"என் அம்மா அப்பாவுக்கு சாரி சொல்லி லெட்டர் எழுதி வச்சிருக்கேன்‌. நம்ம ரூம்ல இருக்கு. மறக்காம அதை அவங்ககிட்ட கொடுத்துடு.

ஆத்தங்கரை வீட்டுல இருந்தபோது உன்னை பிடிக்காமலோ, பழைய ஞாபகத்திலோ நான் கண்ணை மூடல வெற்றி. வலியை உன்கிட்ட காட்ட கூடாதுன்னுதான் கண்ணை மூடினேன். உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு. சாரி.." என்று மெயிலை முடித்திருந்தாள்.

எழுந்து நின்றான் வெற்றி. மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பினான்.

வாகனங்கள் சீறி பாய்ந்து சென்றுக் கொண்டிருந்தது. கோபத்தில் கையை முறுக்கியவன் எதிரில் இருந்த லாரியை நோக்கி நடந்தான்.

"நீ இல்லாத உலகத்துல நானும் வாழ மாட்டேன் அம்மு. உன்னை பிரியவும் முடியாது. மறக்கவும் முடியாது. உன்னை விட முடியலன்னுதானே உனக்கு அவ்வளவு பிரச்சனை தந்தேன். அந்த எண்ணத்தை கடைசி வரை தொடரணும் இல்லையா.? எந்த மரணமும் நம்மை பிரிக்க முடியாது. என்னோட சைக்கோதனத்துக்கு எந்த மருந்தும் வேணாம். அந்த சைக்கோதனம் இன்னும் பத்தே பத்து நிமிசம் எனக்கு துணை வரட்டும்.. முட்டாள்தனத்துல யார் உயர்ந்தவங்கன்னு போட்டி போடுறது இன்னையோடு முடியட்டும். போதும் அம்மு.. இந்த அடிப்பட்ட மனசோடு வாழும் வாழ்க்கை. உனக்கு துணையா நான் இருப்பேன், இருந்தாலும் இறந்தாலும்.."

லாரி தூரத்தில் வந்துக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..‌
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN