காதல் கணவன் 121

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் மங்கை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் வெற்றி.

எழுந்து சென்று காலை நேரத்து வேலைகளை முடித்து வந்தாள். அவளுக்கு அது வெறும் கன்சல்டிங் அறை மட்டுமல்ல. அவளுக்கு அது வீடும் கூட. வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில், தனிமையை அளவுக்கு அதிகமாக உணரும் நேரத்தில், பக்கத்து வீட்டார் சண்டை போட்டுக் கொள்ளும் நேரத்திலெல்லாம் இங்கேயே தங்கி விடுவாள்.

"ஏய் மேன்.." வெற்றியின் தோளை தட்டி எழுப்பினாள்.

எழுந்தவனிடம் டூத்பேஸ்டையும் புது பிரெஸ்ஸையும் தந்தாள்.

"போய் பல் விளக்கிட்டு வா.." அனுப்பினாள்.

அவளது ரெஸ்ட் ரூமையே பயன்படுத்தி வந்தான்.

சுட சுட காப்பி இருந்தது மேஜையின் மீது. எடுத்து அருந்தினான்.

"இப்ப சொல்லு உன் பிரச்சனையை.." என்றாள்.

வெற்றி விசயத்தை ஆதி முதல் அந்தம் வரை சொன்னான். அவளுக்கு அவனை பார்த்து பயமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

"உன் நிலை ரொம்ப மோசமாதான் இருக்கு. அம்மா இறந்ததுக்கு காரணம் நீங்கற குற்ற உணர்ச்சிதான் உன்னை இத்தனை தப்பு செய்ய தூண்டியிருக்கு. இப்ப காதலியோட உடல்நிலைக்கு காரணம் நீதாங்கற குற்ற உணர்ச்சியில் எப்படி ரியாக்ட் பண்ண போறியோ? அந்த பொண்ணு செத்துட்டா நீ சைக்கோவா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.."

வெற்றிக்கு பயமாக இருந்தது. குடித்துக் கொண்டிருந்த தேனீரை மேஜையின் மீது வைத்துவிட்டான்.

"உங்ககிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன் நான். என்னை பயமுறுத்தாதிங்க.." என்றான்.

மங்கை கொஞ்சமாக சிரித்தாள். தேனீர் அருந்திய தன் உதடுகளுக்கு டிஸ்யூ பேப்பரால் ஒத்தடம் தந்தாள்.

"ஓகே. இனி பயமுறுத்தல. ஆனா உண்மையை உன்கிட்ட சொன்னாதான் உனக்கு விசயம் புரியும். அந்த பொண்ணு செத்துட்டா உன் பையனுக்கு நீயேதான் எமன். அந்த பையன் பத்து வயசு கூட தாண்ட மாட்டான். கண்டிப்பா கொன்னுடுவ நீ. இந்த பிரச்சனை உனக்கு மட்டுமில்ல. இங்கே பலருக்கு இருக்கு. ஆசை மனைவி பிரசவத்துல இறந்து போனான்னு புள்ளையை தள்ளி வச்ச தகப்பன்களை நானும் நிறைய பார்த்திருக்கேன். உன் கேஸ் இதுலயே ரொம்ப மோசமா இருக்கு. வெளிநாட்டு கேஸ் ரிப்போர்ட்ஸ் படிச்சிருக்கேன். தன் மனைவி சாவுக்கு காரணமான பொண்ணை அடைச்சி வச்சி ரேப் பண்ண தகப்பன் கேஸெல்லாம் சகிக்க முடியாத அளவுக்கு மோசமா இருக்கும். தாயின் சாயல் உள்ள பொண்ணுங்க இன்னும் மோசமான தண்டனை அனுபவிச்சிருக்காங்க. உனக்கு பையன் பிறந்ததுல முதல் சந்தோசம் எனக்குத்தான்.."

வெற்றி எழுந்து நின்றான்.

"நான் வேற எங்கேயாவது பார்த்துக்கறேன். போதும் உங்க கவுன்சிலிங்.. இரண்டு நிமிசத்துல எவ்வளவு பயப்படுத்த முடியுமோ அவ்வளவு பயப்படுத்திட்டிங்க.." என்றான் எரிச்சலாக.

அவனே தலைக்குள் சத்தமிட்டபடி ஓடிக் கொண்டிருந்த தொடர்வண்டியை நிறுத்தும் வழி தெரியாமல் போராடிக் கொண்டிருந்தான். இதில் இவள் வேறு ஏதேதோ சம்பந்தமில்லாத வழக்குகளை சொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

"ஓகே ஓகே.. இனி நான் அந்த மாதிரி பேச மாட்டேன். ஆனா நீ ஒன்னை புரிஞ்சிக்கணும். நான் ஒரு மனநல மருத்துவர். அதை விட முக்கியமா அதிகமான மனநோயால பாதிக்கப்பட்ட ஆளும் கூட. நான் அப்பப்ப ஏதாவது பேசுவேன். நீ கண்டுக்காம இருந்தாதான் உனக்கான டிரீட்மெண்ட் கிடைக்கும்.." என்றாள் எச்சரிக்கையாக.

தலையை கோதியபடி அமர்ந்தான்.

"நீ முதல்ல உன் குற்ற உணர்ச்சியை விட்டு வெளியே வரணும். அதுக்கு நான் முழுமையான உதவி செய்றேன். அதோ போல நீ பில்லையும் கரெக்ட் டைம்க்கு பே பண்ணிடணும்.." என்று ஆரம்பித்தாள்.

சரியென்று தலையசைத்தான்.

"தப்புக்கு இரண்டு எதிர்வினை உண்டு. ஒன்னு பரிகாரம். இன்னொன்னு தண்டனை. உன் மனைவி கண் விழிச்சதும் அவளுக்கு நீ சேவை செய்யும்போது உன் தப்பு உனக்கு தரும் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உன் மனசு அனுபவிக்கும் தண்டனை குறையும். அதே சமயம் ஒரு சிலருக்கு இது ஆப்போசிட்டா நடக்கும். காயம் பட்டவங்களை பார்த்து பார்த்து மனசு ரொம்ப நொந்துப் போவாங்க. இவங்களுக்கு இப்படி நடக்க நாமதான் காரணம் நாமதான் காரணம்ன்னு நினைச்சி நினைச்சி பரிகாரம் செய்யும் முன்னாடியே மனசால சிதைஞ்சிடுவாங்க.."

தலையை பிடித்தான் வெற்றி. "இப்ப நான் என்ன செய்யணும்.? நான் அவளுக்கு பணிவிடை செஞ்சா என் குற்ற உணர்வு குறையுமா அதிகமாகுமா.?" என்றான் பற்களை கடித்தபடி. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. இந்த மருத்துவரிடம் முழு மருத்துவம் பார்த்து முடிக்கும் முன்னால் தனது பைத்தியத்தின் காரணம் மாறி விடும் என்று.

மங்கை தனது கண்ணாடியை எடுத்து அணிந்தாள். "அதை எப்படிப்பா இப்பவே சொல்ல முடியும்.? அவ முதல்ல எழணும். அப்புறம் அவளுக்கு நீ சேவை செய்யணும். அப்புறம் நான் உன் மனசை படிக்கணும்.. இப்பவே கேட்டா நான் எப்படி சொல்வேன்.?"

வெற்றி தலையை ஆட்டினான். எழுந்து நின்றான்.

"தூக்க மாத்திரை பிரிஸ்கிரிப்சன்ல எழுதி கொடுங்க.. நான் வாங்கிட்டு போறேன். அவ எழுந்த பிறகு சேவை பண்ணி பார்த்துட்டு வரேன்.." என்றான்.

மருத்துவர் அவனை நக்கலாக பார்த்தாள்.

"பழைய கேஸ் இருக்கு தம்பி. உட்காரு. உன் அம்மாவோட சாவுக்கு காரணம் நீதான்னு நீ நினைச்சதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். அதுக்கு முதல்ல சொல்யூஸன் தேடலாம் வா.." என்றாள்.

மட்டை பந்து விளையாடலாம் வா என்று அழைப்பது போலவே அழைத்தாள். வெற்றி தயக்கத்தோடு அமர்ந்தான்.

"சைட் ஸ்டோரி சொல்லாம நேரா என் கேஸை மட்டும் பேசுங்க ப்ளீஸ்.." என்றான் கையெடுத்து கும்பிட்டபடி. மனைவியை திருப்பி கொடுக்க சொல்லி எமனிடம் வாதாட வேண்டிய இந்த நேரத்தில் இப்படி ஒரு பைத்தியக்கார மருத்துவரிடம் உட்கார்ந்து இம்சையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே என்று வருந்தினான் அவன்.

"சைட் ஸ்டோரி சொன்னாதான் உனக்கான பிரச்சனை உனக்கு புரியும்.." என்றவள் "நீ சிலப்பதிகாரம் படிச்சி இருக்கியா.? அதுல ஏன் அந்த மன்னன் இறந்து போனான்.?" என்றுக் கேட்டாள்.

சம்மந்தமில்லாத கேள்வி என்று நினைத்தவன் "கோவலனை கொன்னுட்டதால.." என்றான்.

"ஒரு அப்பாவியின் உயிர் போக தான் ஒரு காரணம்ன்னு அவர் நினைச்சதால மட்டும் அவர் உயிரை துறக்கல. அவர் ஒரு ராஜா. பலருக்கு வழிக்காட்டி. பலருக்கு சூரியன். அவர் தவறு செஞ்சா அது அவரை பின்தொடரும் அனைவரையும்‌ தவறான பாதையில் கொண்டு செல்லும். அவருக்குன்னு இருக்கும் அந்த கண்ணியம் கட்டுப்பாடு உடையும். தான் இந்த ஒரு நிலையில் இருந்துட்டு இப்படியொரு தப்பை செய்யலாமான்னு குற்ற உணர்வுல மூழ்கி உயிரை துறந்துட்டாரு. இங்கே நல்லவன் தப்பு பண்ணாதான் அது குற்ற உணர்ச்சியா மாறுது. அதுவே கெட்டவன் தப்பு பண்ணா அது தப்பாவேதான் நிலைச்சி நிற்கும். அவன் அந்த தப்புக்கு ஆயிரம் சப்பை கட்டு கட்டிட்டு போயிட்டே இருப்பான்.. நீ நல்லவன். அதுதான் இங்கே பிரச்சனை. ஒரு குட்டி தப்பை பண்ணிட்டு அப்புறமா அதுக்காக வருச கணக்குல மனசுக்குள்ள கஷ்டப்படுற உன்னை மாதிரி ஆட்களோட கஷ்டம் எனக்கும் தெரியும்.." என்றவள் அவனின் தாயார் இறப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.

***

வளர்மதி வீட்டிற்கு சென்று உணவு சமைத்து கொண்டு வந்திருந்தாள்.

"சாப்பிட வாங்க.." என்று மேகலாவை அழைத்தாள்.

"என் பொண்ணு அங்கே சாக கிடக்கறா.. ஆனா உங்களுக்கு உங்க பசி முக்கியமா போச்சி.." என்று திட்டினாள் மேகலா.

வளர்மதி பரிதாபம் நிறைந்த முகத்தோடு அர்ச்சனாவை பார்த்தாள்.

"குற்ற உணர்வு.." என்றாள் அர்ச்சனா சிறு குரலில்.

புரியாமல் பார்த்தாள் வளர்மதி.

"அவங்க பொண்ணோட நிலமைக்கு அவங்களும் காரணம்ன்னு நம்புறாங்க. முன்னாடியே தன் பொண்ணுக்கிட்ட நல்ல முறையில் விசாரிச்சி இருந்தா இப்ப தன் பொண்ணுக்கு இந்த நிலமை வந்திருக்காதேன்னு தன் மேலயே பழி போட்டுட்டு குற்ற உணர்வுல மூழ்கி கஷ்டப்படுறாங்க.." சிறு குரலில் விளக்கம் சொன்ன தன் நாத்தனாரை ஆச்சரியத்தோடு பார்த்தாள் வளர்மதி.

"இது எப்படி உங்களுக்கு தெரியும்.?"

"வெற்றியை தேடி போனேன். அங்கே அந்த டாக்டர் அவன்கிட்ட சொல்லிட்டு இருந்ததை வச்சி இவங்க பிரச்சனையை நான் கால்குலேட் பண்ணேன்.."

வளர்மதி ஆச்சரியத்தோடு அவளை பார்த்தாள். "செம திறமை உங்களுக்கு.." பாராட்டினாள்.

"சரி நீ சோறு போடு. சாப்பிடுவோம்.." என்று தட்டை கையில் எடுத்தாள் அர்ச்சனா.

மருத்துவமனையில் காலியாக இருந்த படுக்கை ஒன்றில் படுத்திருந்தாள் கனிமொழி. அவளின் அருகில் படுத்திருந்தான் குழந்தை. இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அவர்களை கண்காணித்தபடி அமர்ந்திருந்தான் சக்தி. குழந்தைக்கும் தன் மனைவிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லாதது போலிருந்தது அவனுக்கு.

நெற்றியில் அடித்துக் கொண்டு பார்வையை திரும்பினான். "குழந்தை குழந்தைன்னு சொல்லி மறுபடியும் பழைய நிலைக்கு போயிடாத.." தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டு மீண்டும் இவள் பக்கம் திரும்பினான்.

இதே போல இவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினான். மோசமான எண்ணம் என்று சொன்னது மனசாட்சியின் ஒரு பகுதி. ஆனால் அப்படி மோசம் மோசமாக எண்ணினால்தான் கணவனுக்கான தகுதியை அடைய முடியும் என்று தனக்குதானே சொல்லிக் கொண்டான்.

"அப்படியே என் கலர்ல, இவளோட கூர் மூக்கா இல்லாம, என் சின்ன கண்ணோடு, இவளை மாதிரி வாயாடியா இல்லாம அழகா ஒரு குழந்தை பிறந்தா எப்படி இருக்கும்.?" மனைவியை பார்த்தபடி கேட்டான்.

"அப்படியே உன் ஜெராக்ஸா இருக்கும்.." அம்மாவின் குரலில் திரும்பினான்.

"சாப்பிட வா.." என்றழைத்தாள் அவள்.

"அப்புறமா.." என்றவனின் அருகில் வந்தவள் அவனின் கலைந்த தலையை நீவி சரி செய்தாள்.

"உலகத்துல நானும் எத்தனையோ காதல் பார்த்திருக்கேன். ஆனா உன்னை மாதிரி ஒரு டுபாக்கூர் லவ்வரை பார்த்ததே இல்ல.." என்றாள் கேலியாக.

அம்மாவின் பேச்சை காதில் வாங்கவில்லை அவன். கனிமொழி எழுந்து அவள் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிட்டான்.

அன்றைய நாள் முழுக்க இறுக்கமாகவே கழிந்தது. யாரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை. குழந்தையின் முகம் பார்த்து மட்டும்தான் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

மறுநாளும் வந்து விட்டது. அழுக்கு உடையோடு அம்ருதா இருந்த அறையின் வாசலில் அரை தூக்கம் தூங்கி எழுந்தாள் மேகலா.

"இன்னைக்கு பன்னென்டு மணிக்குள்ள பேஷண்ட் கண் விழிக்கலன்னா அவ உயிர் பிழைக்கிறது கஷ்டம்.." என்றாள் ரேகா‌.

"நீங்க போய் அவகிட்ட பேசி கண் விழிக்க வைங்க. மறக்காம ஒவ்வொருத்தரா உள்ளே போங்க.." என்றுவிட்டு நகர்ந்தாள்.

முதலில் மேகலாதான் ஓடினாள். உள்ளே நுழைந்தவளுக்கு அழுகைதான் வந்தது.

"அம்ருதா.. என் தங்கம்.." என்று அழுதவளின் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார் செவிலியை.

"இப்படி அழுதா பேஷண்ட் கண் விழிக்கிற சான்ஸ் குறைஞ்சிடும்.." என்றாள் கடுமையாக.

மேகலா அழுதபடிதான் இருந்தாள். அவளால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வளர்மதி ஓடிச்சென்று அவளை தாங்கி பிடித்து அழைத்து வந்து இருக்கை ஒன்றில் அமர வைத்தாள். அவளுக்கு சமாதான வார்த்தைகள் சொல்ல ஆரம்பித்தாள்.

"யாராவது பேஷண்டுக்கு ரொம்ப நெருக்கமானவங்க போய் பேசுங்க.." என்று கதவை திறந்தார் செவிலியை.

அனைவரும் வெற்றியை பார்த்தனர். தயங்கி நின்றிருந்தான் தூரமாக.

கனிமொழி அவனருகில் சென்றாள். அவனின் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.

"பயமாயிருக்கு கனி.." என்றவனை அறையின் வாசலில் நிறுத்தியவள் தேன்மொழியின் கையிலிருந்த குழந்தையை வாங்கி அவனிடம் தந்தாள்.

புரியாமல் பார்த்தான். "அண்ணிக்கு ரொம்ப நெருக்கமானவங்க.." என்று குழந்தையை கண் காட்டினாள்.

உதடு கடித்தான். குழந்தையோடு உள்ளே நுழைந்தான். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கால்கள் துவண்டு விழுவது போலவே இருந்தது.

"செஞ்ச தப்புக்காக குற்ற உணர்வுலேயே உட்கார்ந்திருந்தா வாழ்க்கையில அரை அடி கூட நகர முடியாது. ஆனா அதை சரி பண்ண நினைச்சி நடந்தா அந்த தப்பே நம்ம வாழ்க்கையை விட்டு மறந்து போகும் அளவுக்கு நம்மால எல்லாத்தையும் மாத்த முடியும்.." மங்கையின் குரல் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.

அம்ருதாவிற்கு ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டு விட்டிருந்தார்கள்‌. நிறைய வொயர்கள் அவளை மானிட்டரோடு இணைத்திருந்தன.

முகம் கறுத்து போயிருந்தது அவளுக்கு. உதடுகள் வறண்டு கிடந்தன.

"அம்மு.." அவளின் அருகே சென்று அழைத்தான்.

"நான் தப்பு பண்ணிட்டேன் அம்மு.. எனக்குதானே நீ தண்டனை தரணும்.? ஏன் நம்ம குழந்தைக்கு தண்டனையை தர.? நீ உயிரோடு எழுந்து வந்தாதான் எனக்கும் உயிர் இருக்கும். எப்போதும் நான் உன்னை விட மாட்டேன்னு உனக்கே நல்லா தெரியும். நீ இறந்தா உன்னை விட்டுடுவேன்னு நினைக்காத.. அப்புறமும் தொடருவேன். ப்ளாக்மெயிலா நீ நினைச்சாலும் எனக்கு அது மேட்டரே இல்ல. ஆனா நீ உயிரோடு எழுந்து வந்தே ஆகணும்.." என்றவன் குழந்தையை பார்த்தான்.

"உனக்காக அவளோட உயிரை பணயம் வச்சிருக்கா அப்பு. அம்மாவை எழுந்து வர சொல்லுடா. இவ இல்லன்னா உனக்கும் அம்மா இல்ல. எனக்கும் அம்மா இல்ல.." என்றவனின் கண்ணீர் குழந்தையின் உடை மீது விழுந்தது.

"அப்பாவாலதான் உனக்கு இந்த நிலை.. என்னை மன்னிச்சிக்க. ஆனா அம்மாவை எழ சொல்லு. என் வாழ்க்கை அவதான். அவ இல்லன்னா நான் வெறும் பிணம். உன் அம்மாவுக்கு என் கோபத்தை கண்டு பயம்ன்னு தெரிஞ்சிருந்தா நான் இப்படி இருந்திருக்க மாட்டேன் அப்பு.. அவளை ரொம்ப விரும்புறேன்டா. ஆயிரம் தப்பு பண்ணிட்டேன். எந்த காதலனும் கணவனும் செய்ய கூடாத தப்பை உன் அம்மாவுக்கு செஞ்சிட்டேன். ஆனா இப்பவும் கூட இவளை விடணும்ன்னு தோணல எனக்கு. அவ எழுந்தே ஆகணும்‌. எழ சொல்லு.." என்றான் கரகரத்த குரலில்.

குழந்தையை அவளின் அருகில் படுக்க வைத்தான்.

"நம்ம குழந்தை அம்மு. கண்ணை திறந்து பாரு ப்ளீஸ்.. அப்படியே என்னை மாதிரியே இருக்கான் அம்மு. இவன் வளரும்போது ஏதாவது குறும்புதனம் செஞ்சா அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான்னு இவனை திட்டுவியான்னு பார்க்கணும். உன்னை இம்சை செய்யணும் நாங்க இரண்டு பேரும். எழுந்து வாடி.." என்றான்.

குழந்தை சிணுங்கியது. சற்று நேரத்தில் வீறிட்டு அழுதது. அம்ருதாவை கவனித்துக் கொண்டிருந்த மானிட்டரில் எண்கள் மாறியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே. எபி நாளான்னைக்கு வராது. இரண்டு நாள் கழிச்சிதான் வரும். மூணு நாள் முன்னால உடம்பு சரியில்லன்னு லீவ் போட்டேன். அதனாலதான் இந்த லேட்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN