காதல் கணவன் 122

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பயத்தோடு மானிட்டரை பார்த்தான் வெற்றி. ஓடிச் சென்று கதவை திறந்தான்.

"டாக்டரை வர சொல்லுங்க.." என்றான் அவசரமாக. சக்தி மருத்துவரிடம் ஓடினான்.

மருத்துவர் வந்து சோதித்தனர். வெற்றி குழந்தையை மடியில் வைத்தபடி வராண்டாவில் அமர்ந்து காத்திருந்தான்.

"அப்பு.. டாக்டர் என்ன சொல்வாங்க.? ஒருவேளை அவ இல்லன்னா நாம என்ன செய்வோம்.?" என்றுக் கேட்டான். குழந்தை உறக்கத்தில் புன்னகைத்தது.

"சாமி குழந்தையோட கனவுல வந்து விளையாட்டு காட்டுறாரு.." அவனின் தோளில் சாய்ந்து சொன்னாள் கனிமொழி.

"நிஜமாவா.?" என்றவனின் கன்னம் கிள்ளியவள் "ஆமா அண்ணா.." என்றாள்.

"பாசிட்டிவா யோசி. கண்டிப்பா அண்ணி எழுந்துடுவாங்க.." என்றவள் அவனின் தலையை கலைத்தாள்.‌ குழந்தையை அவனின் மடியிலிருந்து தூக்கிக் கொண்டாள்.

"இவனை நான் வச்சிக்கிறேன். நீ போய் டாக்டரோடு பேசு.." அவனின் தோளில் தட்டி அனுப்பி வைத்தாள். வராண்டாவில் சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள். சக்தி அவளின் அருகில் வந்து அமர்ந்தான். முட்டியை கட்டிக் கொண்டான்.

"இந்த குழந்தை அழகா இருக்கு.." என்றான் மனைவியை பார்த்து.

"ஆமா எங்கண்ணன் குழந்தையாச்சே.!" என்றவளின் புசுபுசு கன்னத்தில் ஒற்றை விரல் பதித்தவன் "நான் குழந்தைன்னு சொன்னது என் மாமனார் பெத்த பொண்ணை.." என்றான்.

அவன் புறம் திரும்பியவள் அவன் சொன்னதற்கு முகத்தைக் கோணினாள். "இம்ப்ரஸ் பண்ண டிரை பண்றிங்களா.? அதுவும் இங்கே.?" சந்தேகமாக கேட்டாள்.

"இல்ல. உன்னை பார்க்கும்போது அப்படி தோணுச்சி. அதான் சொன்னேன்.." என்றவன் அவளின் கன்னம் வருடினான்.

"ஏன் மாமா.?" அவன் புறம் பார்த்து முகத்தை காட்டினாள்.

"மனுசனை கொஞ்சறதுக்கு விடுடி.." அவனும் அவளுக்கு சமமாக முறைத்தான்.

"எது.. எங்க அண்ணி அங்கே ஆபத்தான கட்டத்துல இருக்கும்போதுதான் உங்களுக்கு கொஞ்சல்‌ வருமோ.?" முறைத்தாள்.

"சரி போ.. அந்தந்த நேரத்து உணர்வை சொல்ல கூடாதுன்னு நீ சொன்னா இனி நான் அதை சொல்லல.." எழுந்து நின்றான்.

அதே நேரத்தில் மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

அனைவரும் மருத்துவரை நெருங்கினர்.

"பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டாங்க. இன்னைக்கு நைட்க்குள்ள விழிச்சிடுவாங்க.." என்று சொல்லிவிட்டுப் போனார்.

வெற்றி தன் கன்னத்தில் வழியும் கண்ணீரை கூட கவனிக்காமல் நின்றிருந்தான்.

மேகலா நெஞ்சை பற்றினாள். இப்போதுதான் மூச்சே விட முடிந்தது. ராமன் வானத்தை பார்த்து கும்பிட்டார்.

ஆரவ் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

இரவு மணி ஏழு.

அம்ருதா வலியோடு கண்களை திறந்தாள். அதை திறப்பதுமே சிரமமாக இருந்தது. கண்களின் மீது யாரோ இரண்டு யானைகளை கொண்டு வந்து நிறுத்தியது போலிருந்தது. சிரமப்பட்டு விழித்தாள்.

"அம்மு.." வெற்றியின் குரலை கேட்டு கண்களை சுருக்கினாள். கண்களை மூடி திறந்தாள்.

"அம்மு.." மீண்டும் அழைத்தான். அவனின் கையிலிருந்தது குழந்தை. இருவரையும் கனவில் பார்ப்பது போலிருந்தது. வாயை திறக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை.

"அம்மு நான் செத்து பிழைச்சேன்டி. ஏன்டி இப்படி செஞ்ச?" என்றான் கரகரத்த குரலில்.

அவனின் கண்களிலிருந்து வழியும் கண்ணீரை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள். கனவா.? தான் சொர்க்கத்துக்கு வந்து விட்டோமா.? இது யார் குழந்தை.? புரியாமல் மீண்டும் கண்களை மூடினாள்.

அவள் மீண்டும் கண் விழித்தபோது அம்மா நின்றிருந்தாள். அங்கிருந்த வெற்றி எங்கே சென்றான் என்று தெரியவில்லை.

"அம்மாவை மன்னிச்சிடு அம்ருதா. அம்மா உன் பேச்சை கேட்காம போயிட்டேன்.." என்று அழுதாள் மேகலா.

"அப்பாகிட்ட சொல்லியிருக்கலாமே தங்கம்.?" என்று வருத்தமாக கேட்டார் அப்பா.

அம்ருதா மீண்டும் கண்களை மூடினாள். எல்லாமே சூன்யம் போலிருந்தது. ஆனால் யார் யாரோ பேசும் சத்தம் அவளின் காதுகளில் விழுந்துக் கொண்டே இருந்தது. வெற்றியும் குரலும் அம்மாவின் குரலும் செவிகளில் விழுந்தபோது தன்னையும் மீறி கண்ணீரை சிந்தினாள்.

மறுநாள் காலையில் மருத்துவரின் அறைக்கு சென்றனர் வெற்றியும் தேன்மொழியும்.

"டாக்டர்.. நீங்க அவளை டிஸ்சார்ஜ் செய்ய எவ்வளவு நாளாகும்.?" என்று விசாரித்தான் வெற்றி.

"எதுக்கு.?" மருத்துவர் சந்தேகமாக கேட்டார்.

"பெட்க்கும் ரூம்க்கும் அட்வான்ஸ் பீஸ் கட்ட சொல்றாங்க. எத்தனை நாளைக்கு கட்டுறதுன்னு உங்ககிட்ட கேட்டு போகலாம்ன்னு வந்தேன்.."

அவனின் முகம் பார்த்த ரேகா "அவ ஒரு மாசத்துக்கு கண்டிப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்தாகணும்.." என்றாள்.

"இட்ஸ் ஓகே டாக்டர். நான் பீஸ் கட்டிடுறேன்.." என்றான்.

ரேகா தலையசைத்தாள்.

"மேடம்.." தேன்மொழி சந்தேகத்தோடு அழைத்தாள்.

"யெஸ்.?" என்றவளிடம் "அம்ருதாவால தாம்பத்தியத்துல ஈடுபட முடியாதுன்னு சொன்னிங்களாமே.! இது சும்மா இவனை பயமுறுத்த சொன்னதுதானே.?" எனக் கேட்டாள்.

"தேனு நீ ஏன் இதையெல்லாம் கேட்கற.?" வெற்றி சிறு குரலில் கடிந்துக் கொண்டான்.

"இவங்க சும்மா சொல்றாங்க அண்ணா. கருப்பை எடுத்தவங்க கூட தாம்பத்தியத்துல ஈடுபட முடியும். ஆனா இவங்க சும்மாவே.." தேன்மொழி மேலே பேசும் முன் மேஜையின் மீது கையை அடித்தாள் ரேகா.

இருவரும் அவள் புறம் பார்த்தனர்.

"இவரை பயமுறுத்துவதால் எனக்கு எந்த லாபமும் இல்லை. கருப்பை எடுத்தாலும் தாம்பத்தியத்துல ஈடுபட முடியும். ஆனா அவ தாம்பத்தியத்துல ஈடுபட முடியாதுன்னு சொல்ல காரணம் அவ கருப்பையை எடுத்ததால இல்ல. அவ வீக்கா இருக்காங்கறதால. அவ முதுகெலும்பு வீக்கா இருக்குங்கற காரணத்தால. அவ மொத்த உடம்பும் வீக்குங்றதால.." என்றாள் அவளை உறுத்து பார்த்து.

வெற்றி உதட்டை கடித்தபடி தலை குனிந்தான். தலை குனிவது தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் தனது கண்ணீரையாவது மறைத்தால் நலம் என்று தோன்றியது.

"நேத்து ஒரு பொண்ணுக்கு பிரசவம் பார்த்தேன்‌. ஒன்பது அபார்சனுக்கு பிறகு அவளுக்கு குழந்தை பிறந்திருக்கு. முந்தைய கர்ப்பத்தின்போது உங்க அண்ணியை போலவே வயித்துல அடிப்பட்டுடுச்சி அவளுக்கு. ஏழு மாச குழந்தை வயித்துலயே செத்து போச்சி. ஆனா அவ இப்ப சுக பிரசவத்துல குழந்தை பெத்திருக்கா. பிரசவம் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல மத்த அம்மாக்களை போலவே எழுந்து உட்கார்ந்து பால் தந்துட்டு இருக்கா.. ஆனா உன் அண்ணி நார்மலா எழுந்து உட்காரவே இரண்டு மாசம் ஆகும்.. பலமும் பலவீனமும் உடம்போடு மட்டுமல்ல மனசோடும் கலந்தது.. அவ உடம்பு கம்ப்ளீட்டா ரெகவர் ஆகவே ஒன்னு இரண்டு வருசத்துக்கு மேல ஆகும். அதன் பிறகும் கூட முழுசா சோதிக்காம அவளோட பாடி ஹெல்த் கூட கண்டுக்காம தாம்பத்தியத்துல ஈடுப்பட்டா அவளுக்கு அவளே ஆபத்தா மாறிடுவா.."

தேன்மொழி எதுவோ கேட்க முயன்றாள. அவளின் கையை பற்றினான் வெற்றி.

"எனக்கு அவ கிடைச்சதே போதும் டாக்டர். சத்தியமா வேற எதுவும் வேணாம்.." என்றான் நன்றி கூறும் தொனியில்.

"இப்ப வார்த்தையால சொல்றதை மனசுல எப்பவும் வச்சிருங்க பிரதர். இங்கே உடல் பலவீனம் குணப்படுத்த முடியாதது இல்ல. ஆனா நீங்க எக்குதப்பா ஏதாவது டிரை பண்ணா அதை போல் முட்டாள்தனம் எதுவும் இருக்காது.. அவ ரெகவர் ஆகிட்டா அப்புறம் அவளின் உடல் பலவீனம் குணமான பிறகு உங்களோட மத்த சந்தேகத்து பதில் சொல்றேன் நான்.." என்றாள்.

வெற்றி தலைசைத்துவிட்டு எழுந்து நின்றான். அவள் கிடைத்ததே போதும். அவனின் மனம் இப்போது உண்மையிலேயே சலனமில்லாமல் இருந்தது.

அந்த அறையை விட்டு வெளியே வந்தனர் இருவரும். ஆரவ் கதவின் அருகில் நின்றிருந்தான். வெற்றியை முறைத்தான். பிறகு அங்கிருந்து கிளம்பி போனான்.

'என்னால எத்தனை பேருக்கு கஷ்டம்.?' நினைக்கும்போதே கஷ்டமாக இருந்தது வெற்றிக்கு.

மதிய உணவை முடித்துக் கொண்டு திரும்பினர் வெற்றியும் தேன்மொழியும். அம்ருதா இருந்த அறைக்குள் நுழைய முயன்றான் வெற்றி.

ஆரவ் அவனை மறித்தான்.

"அம்மா இவரை இங்கிருந்து போக சொல்லுங்க.." என்றான் அடி குரல் மிரட்டலாக.

"ஏன்.? என் அண்ணன் ஏன் போகணும்.? இது அவன் பொண்டாட்டி.." தேன்மொழி சீறினாள்.

ஆரவ் அவள் புறம் கையை காட்டினான். "உன் பேச்சு எனக்கு இவ்வளவு இரிடேட்டிங்கா இருக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல. உன்கிட்ட பேச விரும்பல நான். ப்ளீஸ் ஸ்டாப் இட்.." என்றவன் வெற்றியின் கண்களை பார்த்தான்.

"உங்க குழந்தையை தூக்கிக்கிட்டு இங்கிருந்து போயிடுங்க. டைவர்ஸ் பேப்பரை சீக்கிரமா அனுப்பி வைக்கிறேன்.." என்றான் உணர்ச்சிகளை காட்டாத ஒரு குரலில்.

தேன்மொழி அவனை முறைத்தாள். வளர்மதி அருகில் வந்து மகளை தூர நகர்த்தி நிறுத்தினாள்.

"ஏன் தம்பி இப்படி பண்றிங்க.? அவங்க வாழ்க்கை இவ்வளவு கஷ்டத்துக்கு பிறகு இப்பதான் நார்மலுக்கு வந்திருக்கு. அதுக்குள்ள நீங்க.." என்றவளின் முன்னால் கையெடுத்து கும்பிட்டான்.

"என் அக்கா உயிரோடு வேணும் ஆன்டி. உங்களோடு அனுப்பினா அவ செத்து போயிடுவா.." என்ற மகனின் தோளை பற்றினார் மோகன். மகன் சொல்வது சரிதான் என்பது போன்ற பார்வை பார்த்தாள் மேகலா.

"என் அக்காவோட உடம்பு ரொம்ப வீக்கா இருக்காம். அவளால தாம்பாத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. குறைஞ்சபட்சம் இரண்டு மூனு வருசத்துக்காவது அவ தாம்பத்தியதுல இருந்து விலகி இருந்தாதான் அவ உயிர் பிழைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க.." என்றவனை புரியாமல் பார்த்தான் வெற்றி.

"என் அக்காவை ரேப் பண்ண இவனை.. இவரை நம்பி என்னால அவளை அங்கே அனுப்ப முடியாது. இவர் மேல எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல. என் அக்காக்கிட்ட மறுபடியும் தப்பா நடந்துக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்.? பலவாயிரம் முறை உடலுறவு வச்சிக்கிட்டாலும் ஒரு பொண்ணு நல்லாவே இருப்பா. ஆனா ஒரே ஒரு ரேப்ல செத்த பெண்கள் இங்கே ஏராளம். ஏனா உடலுறவுக்கும் வன்புணர்வுக்குமான வித்தியாசம் அப்படி. என் அக்காவோட ஏதோ ஒரு நல்ல நேரம் அவ போன முறை தப்பிச்சிட்டா. ஆனா மறுபடியும்.. எல்லாம் தெரிஞ்சே அவளை அங்கே அனுப்ப மாட்டேன். ப்ளீஸ். இவரை கூட்டிட்டு போயிடுங்க. பிடிக்கலன்னு சொன்ன என் அக்காவை வலுக்கட்டாயபடுத்தியவர் இதுக்கு மேல மட்டும் அமைதியா விடுவாரா.?"

ஆரவின் வாதம் ராமனுக்கும் மேகலாவுக்கும் ரொம்ப சரியாக தோன்றியது.

வளர்மதி வெற்றியின் தோளை வருடினாள். "இதுக்கு மேல இப்படி இருக்க மாட்டான் ஆரவ்.." என்றாள் தயக்கமாக.

கண்களை மூடி பற்களை கடித்தவன் "உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை எனக்கு இல்ல ஆன்டி. என் அக்காவை அங்கே அனுப்பிட்டு தினமும் பயந்து சாகறதுக்கு பதிலா இப்பவே அவளோட ஆக்ஸிஜன் மாஸ்கை கழட்டி கொன்னுடலாம்ன்னு தோணுது. ப்ளீஸ் என்னையும் புரிஞ்சிக்கோங்க.. உங்க பையனை விடவும் அதிக பைத்தியமா நான் மாறிட்டு இருக்கேன்.." என்றான்.

தேன்மொழி அவனை வெறித்தாள்.

வளர்மதி வெற்றியின் முகம் பார்த்தாள். "நாம அப்புறமா பேசிக்கலாம்.." என்றாள்.

விழியசைக்காமல் ஆரவ்வை பார்த்துக் கொண்டிருந்த வெற்றி எதுவும் பேசாமல் சித்தியோடு திரும்பி நடந்தான். இதயத்தின் கனத்தை அவனால் தாங்கவே முடியவில்லை. ஆரவின் சந்தேகம் அவனை பொறுத்தவரை நியாயம் போலதான் தோன்றியது.

நடைப்பிணம் போல நடந்துச் சென்ற அண்ணனின் முதுகை வெறித்த தேன்மொழி ஆரவின் புறம் திரும்பினாள். அவன் அந்த வராந்தாவின் மறுதிசையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தான். அவன் பின்னால் ஓடினாள்.

ஆரவ் அந்த மருத்துவமனை கட்டிடத்தின் பின்னால் வந்தான். அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். தலையை கோதியபடி இருக்கையில் பின்னால் சாய்ந்தான்.

"நீ ஏன் இப்படி பண்ற.?" தேன்மொழியின் கேள்வியில் எரிச்சலாக கண் திறந்தான்.

"என்னை தனியா விட்டு போ.." என்றான் ஆத்திரத்தோடு.

"என் அண்ணன் அப்படி பண்ண மாட்டேன்.." என்றவளை நக்கலாக பார்த்தான்.

"அம்ருதாவோட முட்டாள்தனமான முடிவால அவன் ஏற்கனவே மனசால செத்துட்டான். செத்த பாம்பை அடிக்கற மாதிரி நீ உன் வீரத்தை அவன்கிட்ட காட்டத.."

வெடுக்கென்று எழுந்து நின்றான்.

"இன்னொரு முறை என் அக்காவை பத்தி ஏதாவது பேசினன்னா வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்க.. ஒருத்தியை மெண்டலா வீக்காக்கிட்டு புத்திசாலித்தனமான முடிவெடுக்கலன்னு அவ மேலயே பழி போடுவிங்களா? உங்க அண்ணன் ஒரு சைக்கோன்னு ஆரம்பத்துலயே தெரிஞ்சும் அவனையே லவ் பண்ண ஆரம்பிச்சா பார்த்தியா.? அதுதான் அவளோட முட்டாள்தனம்.." என்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் தேன்மொழி.

நான்கு நாட்களாக குளிக்க கூட இல்லை அவன். சரியாக சாப்பிடவில்லை. உறங்கவில்லை. அவளின் அறையை வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் அளவுக்கு அவன் புத்தி அமைதி பெற்றிருக்கவில்லை.

அவள் தந்ததை விட வேகமாக அறையை தந்தான். காது ங்கொய்யென்றது அவளுக்கு‌.

"பிச்சிடுவேன். யார்கிட்ட உன் திமிரை காட்டிட்டு இருக்க‌.? உன் அண்ணன் சைக்கோன்னா சைக்கோன்னுதான் சொல்ல முடியும். யோக்கியவான்னு சொல்ல முடியாது. எனக்கு இருக்கற ஆத்திரத்துக்கு உங்க அண்ணனையும் உன் மொத்த குடும்பத்தையும் ஜெயிலுக்கு அனுப்பாம இருக்கறதே பெரிய விசயம். பெருசா *** மாதிரி பேச வந்துட்டா. தூர போடி.." அவளின் தோளை பற்றி பின்னால் தள்ளினான்.

கன்னத்தை பிடித்தபடி கண்ணிலிருந்து வழியும் கண்ணீரோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

அவள் அங்கிருந்து செல்வாள் என்று காத்திருந்தவன் அவள் செல்லாததால் அவனே அங்கிருந்து புறப்பட்டான். அவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

"ஆரவ்.. ப்ளீஸ்.. நீ என் மேல இருக்கும் கோபத்துல இந்த முடிவை எடுத்திருந்தா சாரி. உனக்கு என் மேலதானே கோபம்.? என்னை கூட இன்னும் நாலு அறை அறைஞ்சிக்க. ஆனா பாவம் என் அண்ணன். ரொம்ப மன உளைச்சல்ல இருக்கான். நீ இப்படி செஞ்சா அவன் ஏதாவது தப்பான முடிவுக்கு கூட போயிடுவான். ப்ளீஸ். என் மேல இருக்கும் கோபத்தை அவன் மேல காட்டாத.." என்றாள் கெஞ்சலாக.

இவர்கள் அறைந்துக் கொள்வதை தூரத்திலிருந்து பார்த்த ஒருவர் இருவரையும் நெருங்கினார்.

"ஏதாவது பிரச்சனையா பாப்பா.?" என்று அவளிடம் விசாரித்தார்.

"ஒன்னும் இல்லைங்க.." என்றவள் திரும்பியபோது ஆரவ் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தான்.

அவனின் பின்னால் ஓடினாள்.

"ஆரவ் ப்ளீஸ்.." அவனின் கைப்பிடித்து நிறுத்தினாள்‌‌.

"லீவ் மீ.." கையை உருவினான்.

"அவனுக்கு கருணை காட்டு.‌." என்றாள் கெஞ்சலாக. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனின் காலில் விழுந்தாள்.

"ச்சீ.." பின்னால் நகர்ந்து நின்றான்.

"உன் அண்ணனை காப்பாத்திக்க அவனுக்கே தெரியும். நீ வந்து என்கிட்ட நடிக்காத. உன் அண்ணனோட உயிரை விட எனக்கு என் அக்காவோட உயிர்தான் முக்கியம்.." என்றான் அழுத்தமாக.

"அவன் எதுவும் செய்ய மாட்டான்.."

"நீ என்ன சைக்யாட்ரிஸ்ட் டாக்டரா.?" நக்கலாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் "அவன் எதுவும் செய்ய மாட்டான்‌. நான் உனக்கு உறுதி தரேன். சத்தியம் பண்ணி தரேன்.." என்றாள்.

நகைத்தான்.

"நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். தூர போ.."

"உன் அக்காவுக்கு எதுவும் ஆகாது. அப்படி ஏதாவது ஆச்சின்னா நீ என்னை எது வேணாலும் செஞ்சிக்க.. உன் அக்கா உயிருக்கு பணயமா என்னையே தரேன்.." என்றாள் கெஞ்சலாக. அவளை பொறுத்தவரை உயர் மன அழுத்தத்தில் இருக்கும் தன் அண்ணனுக்கு ஒரே மன ஆறுதல் அம்ருதா மட்டும்தான். அதற்காக இவள் எப்பாடுபட்டாவது ஆரவின் மனதை மாற்ற நினைத்தாள்.

அவளை சில நொடிகள் வெறித்தான். "உன் சைக்கோ அண்ணனை போலவே நீயும் சைக்கோ ஆகிட்ட.." என்றான்.

"ப்ளீஸ்.." கெஞ்சினாள்.

கண்களை மூடி யோசித்தான். அவனால் தன் அக்காவின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது.

"உனக்கு அவ்வளவு தேவைன்னா என்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு வந்துடு. என் அக்காவை நான் உங்க வீட்டுக்கு அனுப்பிடுறேன். ஆனா நீ என் வீட்டுக்கு வந்தா சத்தியமா ஒரு செகண்ட் கூட நிம்மதியா இருக்க முடியாது. உன்னை நானோ என் அம்மாவோ நிம்மதியா இருக்க விடவே மாட்டோம். உன் மேலயும் உன் குடும்பத்து மேலயும் அவ்வளவு வெறுப்பு இருக்கு. உன்னை உடல்ரீதியாவோ மனரீதியாவோ என்னையும் மீறி காயப்படுத்துவேன். இதுவும் உண்மை. என் அக்காவுக்கு ஏதாவது ஆச்சின்னா நான் உன்னை கொன்னுடுவேன். இதுக்கெல்லாம் உனக்கும் உன் அண்ணனுக்கு சம்மதம்ன்னா நீ எங்க வீட்டுக்கு வரலாம்.." என்றான்.

தேன்மொழியால் வாய் பேச முடியவில்லை. வாயடைத்து அமர்ந்திருந்தவளை மேலே எழுப்பி நிறுத்தியது கரம் ஒன்று.

திரும்பிப் பார்த்தாள். வெற்றி நின்றிருந்தான். இரும்பு போல முகம் வைத்திருந்தான்.

"உன் அக்காவை நீயே கூட்டிப் போ.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. இந்த கதையில் அம்ருதாவை பற்றி சொல்லும் உடல் கோளாறுகள் அத்தனையும் கற்பனையே மக்களே. சாபமடா நீ எனக்கு கதையில் சங்கவியோட அபார்ஷன் பத்தி எழுதியது மிக மிஞ்சிய கற்பனைன்னு ஒருத்தங்க சொன்னாங்க. ஆனா அது கற்பனை கிடையாது. என் ரிலேஷன்ல ஒருத்தங்க பத்து அபார்சனுக்கு பிறகு இரண்டு குழந்தைகளை பெத்தாங்க. அவங்க ரொம்ப நார்மலாவே இருக்காங்க. அதைதான் அந்த கதையில் எழுதினேன். இதுல உள்ளது என்னோட கற்பனை மட்டுமே. உடல் பலமும் மன பலமும் மட்டும்தான் இங்கே ஒரே அடிப்படை காரணி. மூனு முறை சிசேரியன் மூலம் குழந்தை பெத்த பிறகும் வெயிட் தூக்கி, நார்மலா இருக்கும் பெண்களும் உண்டு. ஒரே ஒரு சுக பிரசவத்திற்கு பிறகு தண்ணீர் குடத்தை கூட தூக்க முடியாத அளவுக்கு பலவீனமா மாறி போன பெண்களும் உண்டு. வளர் இளம் பருவத்திலும், கர்ப்ப காலத்திலும் நீங்க சாப்பிடும் சாப்பாடு மட்டும்தான் உங்களோட பிற்காலத்து பலத்துக்கு வலு சேர்க்கும். சோ யாரும் உணவை டைம் டேபிள் போட்டு ஒதுக்காதிங்க. அத்தனை சக்திகளும் உடம்புக்கு கிடைக்கும்படி உணவை எடுத்துக்கோங்க. முக்கியமா கர்ப்ப காலத்துல ஹாஸ்பிட்டல்ல தர இரும்பு சத்து மாத்திரையை சாப்பிடுங்க. அதுதான் நமக்கு நல்லது‌. இந்த கதையில் வர எதையும் நிஜம்ன்னு நம்பாதிங்க. முழுசா கற்பனை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN