காதல் கணவன் 125

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாஜிக்கு விழுந்த அடியை கண்டுவிட்டு ஓடி வந்தாள் தேன்மொழி.

"ஏன் சண்டை போட்டுக்கிறிங்க.?" எனக் கேட்டாள் பயத்தோடு.

"நீ தூர போ தேனு. இன்னைக்கு ஒருத்தனுக்கு டெத் கன்பார்ம்.." என்ற வெற்றி கையை முறுக்கினான்.

"ஆமா நீ தூர போ.. உன் வாழ்க்கையை நாசம் பண்ண இவனுக்கு இன்னைக்கு டெத் கன்பார்ம்தான்.." என்றான் பாலாஜியும்.

நெற்றியில் அடித்துக் கொண்டாள் தேன்மொழி. இருவரின் தோளிலும் மாற்றி மாற்றி அடித்தாள்.

"இருக்கற பிரச்சனையில உங்க பிரச்சனைதான் குறைச்சலா.?" என்றாள் எரிச்சலாக.

"உன்னை எவன் கல்யாணம் பண்ண சொன்னது.?" பாலாஜி தங்கையிடம் எகிறினான்.

தேன்மொழி தலையை பிடித்தாள். அவர்கள் மூவருக்கும் பின்னால் வெறும் பத்தடி தொலைவில்தான் அவளின் புகுந்த வீட்டு ஆட்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள் இவள். இப்போது இவர்களும் சண்டை போட்டால் என்ன செய்வாள்?

"வெளியே போய் பேசலாம் அண்ணா.." சிறு குரலில் அழைத்தாள்.

அவளின் புஜத்தை பற்றி இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான் பாலாஜி.‌ வெற்றி அவர்களின் பின்னால் நடந்தான்.

தனியிடம் வந்ததும் தங்கையின் கையை விட்டவன் "இப்படியொரு நிலையில் உனக்கு கல்யாணம் தேவையா.? உன்னால வீட்டுல சண்டை. சித்தி சித்தப்பாவுக்கு இடையில சண்டை. அவன் இவனை அடிச்சி கொன்னா கூட தப்பு இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன் நான். ஆனா நீ இவனை காப்பாத்துறதா நினைச்சி இப்படி கல்யாணத்தை பண்ணியிருக்க. அறிவிருக்கா உனக்கு.? எல்லாம் இவனை சொல்லணும்.. இவனை நம்பினவங்க ஒருத்தரை கூட வாழ விட மாட்டான். பஞ்ச பரதேசி.." என்றான்.

அதே நேரத்தில் அவனின் கழுத்தில் ஒரு குத்து விழுந்தது. கீழே விழுந்தான் பாலாஜி. வெற்றிக்கு சிரிப்பு வந்தது. தம்பி தன்னை விட அழகாக இருந்தாலும் கூட தம்பிக்கு தன்னை விட பலம் அதிகமில்லை என்று புரிந்துக் கொண்டான்.

"ஐயோ பாலா.." தேன்மொழி பாலாஜியை தூக்கினாள்.

பாலாஜி தங்கையை ஓரம் நிறுத்திவிட்டு வெற்றியை நோக்கி பாய்ந்தான். அவனின் கையை பிடித்தான் வெற்றி. அந்த கையை முறுக்கினான். வலியில் தம்பி துடிப்பதை பார்த்தவன் அவனின் மறு கரம் தன்னை அறைய வருவதை கண்டு அதையும் சேர்த்து பிடித்தான்.

"தேவையில்லாம என்னை டென்ஷன் பண்ணாத பாலா.. இவ கல்யாணம் இவ முடிவு. இதுல எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நான் தப்பு செஞ்சேன். இல்லன்னு சொல்லல. நட்பா பழகிய உன்னாலயே அவளோட பிரச்சனையை கண்டுபிடிக்க முடியல. எதிரியா அவளை கொடுமை செஞ்ச எனக்கு எப்படி அவ பிரச்சனை தெரியும்.? ஆனாலும் நான் என் தப்பை ஒத்துக்கிறேன். தண்டனையை ஏத்துக்கறேன். ஆனா நீ என் அம்மாவை கொன்னுட்ட. ஒரு கார் கூட ஒழுங்கா ஓட்ட தெரியல உனக்கு.." என்றவன் அவனின் தலையில் தட்டினான்.

பாலாஜிக்கு மூக்கு விடைத்தது.

"அன்னைக்கு ஒருநாள் மட்டும் நீ உன் பிடிவாதத்தை பிடிக்காம விட்டிருந்தா இன்னைக்கு எந்த பிரச்சனையும் வந்திருக்காது. செஞ்ச தப்புக்கு நீ தண்டனை அனுபவிச்ச. ஆனா நான் செய்யாத தப்புக்கு அனுபவிச்சேன். இத்தோடு விட்டுடு. உன் லைப்பை நீ பாரு. என் லைப்பை நான் பார்க்கறேன். என் பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ போய் உன் வேலையை பார்க்கலாம். இந்த இரண்டு மேஜர்களும் கல்யாணம் பண்ணது பிடிக்கலன்னா நீ இவங்களையே கூப்பிட்டு விசயத்தை கேட்கலாம்.." என்றவன் அவனை தூர தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து போனான்.

பாலாஜி அவனின் முதுகை வெறித்தான். அருகிலிருந்த தங்கையையும் வெறித்தான்.

"எல்லாம் உன்னாலதான்.." என்றான் எரிச்சலாக.

"எனக்கு வேற வழி தெரியல பாலா. மன்னிச்சிக்க. உன்னால முடிஞ்சா அம்மா அப்பாவை சமாதானம் செய்.." என்றவள் அங்கிருந்து நடந்தாள்.

***

இரண்டு நாட்கள் ஓடி விட்டது. மருத்துவமனைக்கு யாரும் சாப்பாடு எடுத்து வரவில்லை. வெற்றியே தினமும் வீட்டிற்கு சென்று உணவு உண்டான். வங்கி வேலை முடிந்ததும் மருத்துவமனைக்கு ஓடிவந்தான்.

ராமனின் விடுமுறையும் முடிந்து போனது. அதற்கு மேல் விடுமுறை எடுக்க முடியாமல் வேலைக்கு கிளம்பி விட்டார்.

தேன்மொழி அதே உடையோடு மருத்துவமனை வராண்டாவில் உறங்கி எழுந்துக் கொண்டிருந்தாள். ஆரவ் தினம் இரவு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தான். ஆனால் இவளை கவனிக்கவேயில்லை. வெற்றிதான் பணம் கொடுத்திருந்தான். அதை வைத்து காலை மாலையில் உணவு வாங்கி சாப்பிட்டாள்.

"இன்னைக்காவது வீட்டுக்கு போகலாம் வா.. எத்தனை நாள் இப்படி கொசு கடியில் தூங்குவ.?" வெற்றி அக்கறையோடு அவளை அழைத்தான்.

"வேணாம் அண்ணா. வீட்டுல ஏற்கனவே நிலைமை சரியில்ல‌. என்னை பார்த்தா ரொம்ப கோபம் வரும் எல்லோருக்கும்.." என்றாள்.

இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்தை தாண்டி நடந்தான் ஆரவ்.

"ஆரவ் ஒரு நிமிசம்.." நிறுத்தினான் வெற்றி.

"இவளை அவ்வளவு லவ் பண்ண. அட்லீஸ்ட் சாப்பாடு வாங்கி தரணும்ன்னு கூட தோணலையா? உன் அக்காவுக்காக இவளை பழி வாங்கினா எல்லாமும் சரியாகிடுமா.? இரண்டு நாளா குளிக்காம, டிரெஸ் மாத்தாம, தலை கூட சீவாம இருக்கா.." என்றவன் பேசிக் கொண்டே செல்ல, அவன் முன் கை காட்டி தடுத்தான் ஆரவ்.

"நான் இவளை என்னோடு வர வேண்டாம்ன்னு சொல்லல. இவளா தூரமா நின்னா நான் பொறுப்பா.?" என்றவன் தேன்மொழியை வெறித்து விட்டு நகர்ந்துப் போனான்.

வெற்றி இப்போது தேன்மொழியை முறைத்தான்.

"நான் பார்த்துக்கறேன் விடுண்ணா.." என்று சமாளித்தாள் அவள்.

அன்று மாலை வீட்டிற்கு செல்லும்போது தேன்மொழியின் அருகில் வந்து நின்றான் ஆரவ். "உனக்கு நான் வெத்தலை பாக்கு வச்சி வீட்டுக்கு அழைக்கணுமா.?" எரிச்சலாக கேட்டான்.

எழுந்து அவனோடு சென்றாள்.

அவர்களின் வீடு தூசு படிந்து இருந்தது. ராமன் கடையில் உணவு வாங்கி வந்து வைத்திருந்தார். இவளை கண்டதும் முகத்தை திருப்பினார். மகனை முறைத்தார். அவர்களை விட்டுவிட்டு வெளியே கிளம்பினார்.

"பாத்ரூம் அது.." என்று கை காட்டியவன் அம்ருதாவின் உடையில் ஒன்று அவளுக்கு தந்தான்.

குளித்து விட்டு வந்தாள்‌. அவளுக்கும் சேர்த்து தட்டு எடுத்து வைத்தான். இருவரும் பேசிக் கொள்ளாமல் உணவை சாப்பிட்டு முடித்தனர்.

"உன் அக்காவுக்கு ஏதாவது ஆகிட்டா என்னை ஏதாவது செஞ்சிடுவியா?" அவன் சாப்பிட்ட தட்டை கையில் எடுத்தபடி கேட்டாள்.

ஆரவ் நிமிர்ந்துப் பார்த்து முறைத்தான்.

"நெகடிவ்வா யோசிக்காத. என்கிட்ட நெகடிவ்வா எதையும் சொல்லாத.." கல் குரலில் சொல்லிவிட்டு சென்றவன் தனது அறைக்குள் புகுந்தான். படுக்கையின் மீதிருந்த உடைகளை அள்ளி நாற்காலியில் எறிந்தான். ‌படுக்கையை உதறி போட்டான்.

அழுக்காய் கிடந்த பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து வைத்தாள் தேன்மொழி. வீட்டை கூட்டுவதற்காக துடைப்பத்தை கையில் எடுத்தாள்.

"அதை நாளைக்கு செய். இப்ப தூங்கு.." என்ற ஆரவ் தலையணை ஒன்றை ஹாலிலிருந்த சோபாவில் வைத்து‌ படுத்தான்‌.

அவனை வெறித்தாள் தேன்மொழி.

"உன் அக்கா குணமாகிடுவா.." என்றாள்.

"அது எனக்கே தெரியும். குட் நைட்.." என்றவன் போர்வையை போர்த்திக் கொண்டான்.

அவனது அறைக்குள் நுழைந்தாள். அவள் வாங்கி தந்திருந்த காலண்டர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தந்திருந்த வண்ண விளக்கு மேஜையின் மேலிருந்தது. அவள் எடுத்த ஆரவின் புகைப்படம் விளக்கின் அடியில் இருந்தது. பார்க்கும் இடமெங்கும் அவள் வாங்கி தந்த பொருட்கள்தான் இருந்தன.

சோர்வோடு கட்டிலில் அமர்ந்தாள். கைகளிலும் கால்களிலும் கொசு கடித்து கீறிய காயங்கள் எரிந்தன. தேய்த்து விட்டுக் கொண்டாள்.

தலையணையில் தலை சாய்ந்தாள். கட்டிலின் தலைபகுதியில் என்னவோ கிறுக்கியிருந்தது. உற்றுப் பார்த்தாள். அவளின் பெயரைத்தான் ஒன்று மேல் ஒன்றாக கிறுக்கி வைத்திருந்தான் ஆரவ். பெரு மூச்சோடு அந்த பெயரை வருடினாள்.

கஷ்டங்களை நினைத்தபடியே உறங்கி போனாள்.

காலையில் அவள் எழுந்த போது ஆரவ் தயாராகிக் கொண்டிருந்தான். முகத்தை துடைத்துக் கொண்டவள் திரும்பியபோது மேஜையின் மீது கடுங்காப்பி இருந்தது. எடுத்து பருகினாள். கசந்தது. சகித்துக் கொண்டாள்‌.

"நாளைக்கு எக்ஸாம் இருக்கு.." என்றான் அவள் புறம் திரும்பி.

தெரியுமென்று தலையசைத்தாள். இதுவரை எதையும் படிக்கவில்லை. இதற்கு மேல் படிப்போம் என்றும் நம்பிக்கை இல்லை.

"என் புக்ஸ் ஷெல்ப்ல இருக்கு. எடுத்து படி‌‌.." என்றவன் சட்டையின் கை பட்டனை போட்டுக் கொண்டு வெளியே நடந்தான்.

"நானும் வரட்டா.?" என்றவளை திரும்பிப் பார்த்தான். "ரெஸ்ட் எடு.." என்றுவிட்டு போனான்.

"ஆரவ் சாரி.." அவன் வீட்டின் வாசலை கடக்க இருந்த நேரத்தில் சொன்னாள்‌. அவன் காது கேட்காதது போல போய் விட்டான்.

தேன்மொழி அந்த வீட்டை சுத்தம் செய்தாள். இருந்ததை வைத்து சமைத்தாள். அவள் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட்டாள். புத்தகத்தை புரட்டினாள். நெஞ்சில் பதிய மறுத்தது பாடங்கள்‌. முடிந்த அளவிற்கு முயற்சி செய்து விட்டு உறங்கினாள்.

***

மாலையில் வங்கியிலிருந்து நேராக மருத்துவமனைக்கு வந்தான் வெற்றி.

வழக்கம்போல மனைவியின் அருகே அமர்ந்தான். அவளின் கையை பிடித்தான்.

"அம்மு.." அழைத்தான்.

மெள்ள விழிகளை திறந்துப் பார்த்தாள். அவ்வப்போது அவன் அழைக்கும் நேரங்களில் கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"எப்ப அம்மு நீ எழுவ.?"

புரியாமல் பார்த்தாள்.

"எல்லோரும் சந்தோசமா இருக்க பிறந்திருங்காங்க. நீயும் நானும் மட்டும் ஏன் கஷ்டப்படணும்.? சீக்கிரம் எழு அம்மு‌‌. நாம நம்ம வாழ்க்கையை பார்க்கலாம்.." என்றான்.

"வெ... ற்றி.." தீனமாக அழைத்தாள்.

"ம்‌. சொல்லு. முன்ன நீ எப்பவும் திட்டிட்டே இருந்த. இப்ப வாயை மூடிட்டே இருக்க. அப்படி கத்தும்போது கூட என்னால ஏத்துக்க முடிஞ்சது. இப்பதான் முடிய மாட்டேங்குது.." என்றான் அவளின் உள்ளங்கையை அழுத்தியபடி.

"வெற்றி என்னாச்சி.?" புரியாமல் கேட்டாள். அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.

"ஹாஸ்பிட்டல்ல இருக்க.."

அதிர்ந்தாள்.

"நீ சாகல. உன்னை என்கிட்டயிருந்து பிரிக்க யாராலும் முடியாது.."

புருவம் சுருக்கினாள். அவன் சொன்னது உண்மையா என்று யோசித்தாள். பாதி விசயங்கள்தான் நினைவுக்கு வந்தன. பாதி அரை மயக்க நிலையிலேயே இருந்தன.

"இப்படி ஒரே இடத்துல படுத்துட்டே இருக்க உனக்கு போரடிக்கலையா.? எழுந்து வாடி.. நம்ம பையனுக்கு நீ வேணுமாம்.."

கண்கள் அகலமாக விரித்தாள்.

"பை.. பையனா..?" குழம்பியவள் "நமக்கு குழந்தை பிறந்திருக்கா.?" என்றுக் கேட்டாள். கண்களை சுற்றிலும் அலைபாய விட்டாள்.

அவளின் கன்னங்களை பற்றினான்.

"ஆமா. நம்ம பையன் ரொம்ப அழகா இருக்கான். எழுந்து வா. அம்மா வேணும்ன்னு அழறான். நீ எழுந்தா சரியாகிடுவான்.."

புரிந்தும் புரியாமலுமாக தலையசைத்தாள்.

"வயிறு வலிக்குது வெற்றி. உடம்பு வலிக்குது. முதுகும் வலிக்குது.." என்றாள் சிரமத்தோடு.

"எல்லாம் சரியாகிடும்.." என்று அவளின் தலையை வருடினான்.

"இந்த வலிகளை நீ அனுபவிக்கணும்ன்னு விதிக்கல. ஆனா விதி வசத்தால அனுபவிக்கிற. ஆனா இதை உன்னால தாண்ட முடியும். உன்னால எல்லா வலியையும் சமாளிச்சி வெளி வர முடியும். நான் இங்கே இருக்கேன் உனக்காகவும் நமக்காகவும்.." என்றான்.

அம்ருதாவுக்கு எல்லாம் கனவில் பேசுவது போலிருந்தது. ஆனால் வெற்றிக்கோ அவள் இவ்வளவு பேசியதே பெரிய விசயமாக தோன்றியது.

செவிலியர் வந்தார். குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த டியூப்பிலேயே அவளுக்கான இன்ஜெக்சனை செலுத்தினார். பிறகு அங்கிருந்துச் சென்றார்.

"ஏன் ஊசி போடுறாங்க வெற்றி.? மருந்து வேகமா உள்ளே போகும்போது ரொம்ப வலிக்குது.." அவள் பேசுவது அவனுக்கு மட்டும்தான் கேட்டது. அவளுக்கு கேட்கவில்லை. காதுகளில் பஞ்சை வைத்து அடைத்தது போலிருந்தது அவளுக்கு.

"அப்பதான் சீக்கிரம் நீ குணமாவ.." என்றவன் அவளின் படுக்கையின் கீழே பெட்பேனில் நிரம்பியிருந்த சிறுநீரை எடுத்துச் சென்று கழிவரையில் கொட்டிவிட்டு கொண்டு வந்து வைத்தான்.

"என்னாச்சி எனக்கு.? ஏன் இப்படி படுத்திருக்கேன்.?" மீண்டும் கேட்டாள்.

"சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அதனால ரெஸ்ட் எடுத்துட்டு இருக்க.." என்று ஒற்றை உண்மையை மட்டும் சொன்னான்.

"குழந்தை எங்கே.?" எனக் கேட்டாள் ஏக்கமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN