காதல் கணவன் 126

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குழந்தையை பற்றி கேட்கிறாளே என்று மகிழ்ந்தான் வெற்றி.

"நான் தூக்கிட்டு வரேன்.." என்றான்.

சரியென்று தலையசைத்தாள்.

அவளின் தலையை வருடினான். அவனின் முகத்தை பார்த்தபடி இருந்தாள் அவள்.

"நீ அழகா இருக்க வெற்றி.." என்றாள். அவளுக்கு அனைத்தும் கனவு போல இருந்தது. தான் பேசுவது கூட கனவில் என்றே நினைத்தாள்.

அவளின் நெற்றியில் முத்தமிட்டான். "உன்னை விட அழகு இல்ல நான்.." என்றான்.

இதழ்களை விரித்து சிறு புன்னகை சிந்தினாள்.

அவளின் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அவனுக்கே முகம் சிவந்தது. அவள் இது போல பார்த்து எத்தனை மாதங்கள் ஆகி விட்டது.? நினைக்கும்போதே நெஞ்சம் வலித்தது.

அவளிடம் அதிகபட்ச மாற்றம் இருந்தும் அதை தான்தான் சரியாக புரிந்துக் கொள்ளாமல் போய் விட்டோம் என்று வருந்தினான்.

அம்ருதாவும் வெற்றியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்ததில் நேரம்தான் சென்றது.

வெற்றி எழுந்து நின்றான்.

"நான் வீட்டுக்கு போறேன்.." என்று அவளின் தலையை வருடி விட்டு சென்றான். இரவில் உள்ளே விட மாட்டார்கள். நாளை வங்கியில் வேலை இருந்தது. அதனால் இரவு தூக்கம் முக்கியம் என்பதால் கிளம்பினான்.

அவன் கிளம்பி செல்வதை பார்த்தபடியே படுத்திருந்தாள் அம்ருதா.

***

வெற்றி நல்ல உறக்கத்தில் இருந்தான். காலிங்பெல் ஒலித்தது. எழுந்தான். நேரம் பார்த்தான். மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது.

இந்த நேரத்தில் யார் என்று குழம்பியவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

கீழே எட்டிப் பார்த்தான்.

வீட்டின் கதவை கதிரேசன் திறந்துக் கொண்டிருந்தார். வாசலில் நின்றிருந்தாள் தேன்மொழி.

"தேனு.. இந்த நேரத்துக்கு இங்கே என்ன பண்ற.?" என்றார் அதிர்ச்சியோடு.

தூக்கம் கலைந்து எழுந்து வந்த வளர்மதியும் அவளின் கணவரும் கூட இவளை கண்டு அதிர்ந்தனர்.

"குழந்தையை பார்க்கணும்ன்னு என் நாத்தனார் தூங்காம வெயிட் பண்ணிட்டு இருக்காங்க மாமா. அதான் குழந்தையை வாங்கிட்டு போக வந்தேன்.." என்றாள்.

வெற்றி அதிர்ச்சியோடு கீழே ஓடி வந்தான்.

"தேனு என்ன சொல்லிட்டு இருக்க நீ.?" எனக் கேட்டான்.

தேன்மொழியை விலக்கி நிறுத்திவிட்டு முன்னால் வந்து நின்ற ஆரவ் "என்ன சொல்லணும்.? குழந்தையை தூக்கிட்டு வந்து காமிக்கிறேன்னு நீங்கதானே என் அக்காவுக்கு நம்பிக்கை தந்துட்டு வந்திங்க.? உங்களாலதான் அவ நைட்டெல்லாம் தூங்காம விழிச்சிட்டு இருக்கா. தூக்கம் வர ஊசி போட்டும் கூட வொர்க் ஆகல. குழந்தையை வெற்றி தூக்கிட்டு‌ வருவான். நான் தூங்க மாட்டேன்னு உளறிட்டு இருக்கா.." என்று சீறினான்.

வெற்றி மிடறு விழுங்கினான். அம்ருதாவிடம் குழந்தையை நாளை காலையில் தூக்கி சென்று காட்டலாம் என்றே நினைத்திருந்தான். அவள் இரவெல்லாம் விழித்திருப்பாள் என்று கனவில் கூட யோசிக்கவில்லை.

"ஏதாவது சொல்லி சமாளிச்சி இருக்கலாமே.." என்றவனை முறைத்தான் ஆரவ்.

"ஏன் எங்களுக்கு மூளையே இல்லன்னு நினைப்பா.? ஒரு நோயாளிக்கிட்ட பொய்யான வாக்குறுதி தந்த நீங்க எல்லாம் என்கிட்ட கேள்வி கேட்காதிங்க.." என்று ஆரவ் பேசிக் கொண்டே செல்ல,‌ அவனின் கையை பிடித்து நிறுத்தினாள் தேன்மொழி.

ஆரவ் அவளை முறைத்தபடியே அமைதியாகிக் கொண்டான்.

"குழந்தையை கொடு அண்ணா.." என்றாள்.

வெற்றி செயல்படும் முன்பே அங்கிருந்து சென்றாள் அர்ச்சனா.

மகனின் அறை கதவை தட்டினாள். நான்கு முறை தட்டப்பட்ட பிறகு கதவை திறந்தான் சக்தி.

"ஏன்ம்மா.?"

"குழந்தையை தூக்கிட்டு வாடா.." என்றவள் விசயத்தை அவரிடம் சொன்னாள்.

உடனே சென்று தூக்கி வந்தான்.

அர்ச்சனா குழந்தையை கொண்டு வந்து தேன்மொழியிடம் தந்தாள். குழந்தையின் பொருட்கள் இருந்த பையை வாங்கிக் கொண்டான் ஆரவ்.

மொத்த குடும்பமும் தேன்மொழியை வெறித்துக் கொண்டே நின்றிருந்தது. ஆரவ் எதையும் கண்டுக் கொள்ளாமல் இருந்தான்.

"நாளைக்கு காலையில் வந்து வாங்கிக்க அண்ணா. நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு. குழந்தையை பார்த்துக்க முடியாது.." என்ற தேன்மொழி அங்கிருந்து திரும்பி‌ நடக்க, "போன் பண்ணியிருக்கலாமே தேனு.. எதுக்கு இந்த குளிர்ல இங்கே வந்த.?" என்று கவலையாக கேட்டார் கதிரேசன்.

அவளின் முகத்தில் உறக்கத்தின் கலை அப்படியே இருந்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளை நடு இரவில் எழுப்பி அழைத்து வந்தது போலிருந்தது.

தேன்மொழி ஆரவ்வை பார்த்தாள்.

அவனோ வெற்றியை முறைத்தான். "வாக்குறுதி தந்தா அதை இன்னொரு முறை மறக்காம இருப்பிங்க இல்லையா.? அதுக்குதான் இந்த நடு ராத்திரியில இவளை எழுப்பி கூட்டி வந்தேன்.." என்றான்.

வெற்றி கையை முறுக்கினான். மொத்த குடும்பமும் ஆரவ்வை முறைத்தது.

ஆரவின் கையை தொட்டாள் தேன்மொழி. "போலாம் ஆரவ். உன் அக்கா ரொம்ப நேரமா தூங்காம இருக்கா.." என்றாள்.

அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.

அம்ருதாவின் காரைதான் பயன்படுத்திக் கொண்டிருந்தான் ஆரவ். தேன்மொழிக்காக கதவை திறந்து விட்டான். அவள் அமர்ந்ததும் காரை எடுத்தான்.

"சரியான பைத்தியக்காரனை கட்டியிருக்கா.. மனுசனா அவன்.? அவனுக்கு பழி வாங்க நம்ம பொண்ணுதான் கிடைச்சாளா.? ஆம்பள பையன் இவன்கிட்ட நேரா பேச துப்பில்ல. மயக்கத்துல கிடக்கறவளை வச்சி இவன் சீன் போட்டுட்டு இருக்கான்..." என்று கொந்தளித்தாள் அர்ச்சனா.

"அவனை சொல்லி என்ன புண்ணியம்.? நான் பெத்தேனே அவளைதான் சொல்லணும். அறிவை அடமானம் வச்சிட்டு கல்யாணத்தை பண்ணியிருக்கு. சனியன். அதை பெத்ததுக்கு பதிலா சன்னியாசம் போயிருக்கலாம்.." என்று திட்டிக் கொண்டே அங்கிருந்து போனார் தேன்மொழியின் தந்தை.

வளர்மதி வாடிய முகத்தோடு கணவரை பின்தொடர்ந்தாள்.

மருத்துவமனை செல்லலாமா என்று யோசித்தான் வெற்றி.

"அவ புள்ளையை நல்லா பார்த்துப்பா. நீ எதையும் நினைக்காம போய் தூங்கு.." என்று அனுப்பி வைத்தாள் அர்ச்சனா.

மதில் மேல் பூனையாக மனதை வைத்துக் கொண்டு உறங்க சென்றான் வெற்றி.

***

அந்த வீட்டிலிருந்து சற்று தூரம் வந்ததும் காரை நிறுத்தினான் ஆரவ். பின் சீட்டிலிருந்த ஸ்வெட்டரை எடுத்தான். தேன்மொழிக்கு போர்த்தி விட்டான்.

சிலையாக அமர்ந்திருந்தாள். அவள் தன் மீது கோபமாக உள்ளாள் என்று அறிவான் அவனும்.

காரை எடுத்தவன் "இன்னொரு முறை என் அக்காவை அவ இவன்னோ பேர் சொல்லியோ கூப்பிடாத. அண்ணின்னு கூப்பிடு. பிடிக்கலன்னா அவங்க இவங்கன்னு சொல்லு. என் அக்கா உன் வீட்டு வேலைக்காரி ஒன்னும் கிடையாது.." என்று சீறினான்.

எச்சிலை விழுங்கியவள் சரியென்று தலையசைத்தாள். குழந்தை அசைந்தது. கொஞ்சமாக தாலாட்டு போல ஆட்டினாள். குழந்தை அப்படியே தூங்கி விட்டான்.

***

வெற்றி ஏன் வரவில்லை என்று வாசலை பார்த்தபடியே படுத்திருந்தாள் அம்ருதா.

அருகில் அமர்ந்திருந்த மேகலா மகளின் தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தாள்‌. அவளின் கோதலுக்கு வேறு ஒருவராக இருந்திருந்தால் குறட்டை விட்டு உறங்கியிருப்பார்கள். ஆனால் அவளின் மகளோ கொட்ட கொட்ட விழித்திருந்தாள்.

தேன்மொழி குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

மேகலா எழுந்துப் போய் குழந்தையை பிடுங்காத குறையாக வாங்கினாள். அவன் பிறந்து ஒரு மாதம் கழித்து இன்றேதான் அவனை தூக்கியிருந்தாள் அவள்.

"அம்மா பாருங்க செல்லம்.." என்றபடி குழந்தையை கொண்டுச் சென்று அம்ருதாவின் அருகில் படுக்க வைத்தாள்.

"இது என் குழந்தையா.?"

"ஆமா அக்கா.." என்றபடி முன்னால் வந்தான் ஆரவ். "இங்கே பாரு. மூக்கு கூட உன்னை மாதிரியே இருக்கு.." என்றான்.

"என் குழந்தை.." கண்ணீர் தானாக வழிந்தது அவளுக்கு.

"ஆமா அம்ருதா. உன் குழந்தைதான்.." என்ற தேன்மொழியை முறைத்தான் ஆரவ். அவள் அமைதியாக ஓரம் ஒதுங்கி நின்றுக் கொண்டாள்.

அம்ருதா வெகுநேரம் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த முகத்தில் என்ன இருந்ததோ தெரியவில்லை. ஆனால் குழந்தையை விட்டு பார்வையை திருப்ப‌ முடியவில்லை அவளால்.

குழந்தை உறக்கத்தில் சிரித்தது. இவளுக்கு கண்ணீர் கசிந்தது.

அம்ருதா குழந்தையை பார்த்தபடியே உறங்கி விட்டாள்.

சற்று நேரத்தில் குழந்தை பசிக்கு சிணுங்க ஆரம்பித்தது.

"இந்த சனியனை அந்த பக்கம் தூக்கிட்டு போ.." எரிந்து விழுந்தாள் மேகலா.

தேன்மொழி அவளை முறைத்தபடியே குழந்தையை அள்ளியெடுத்தாள்.

"என்னடி முறைப்பு.? இந்த சனியனை பெத்துக்க நினைச்சிதானே என் பொண்ணு சாகற நிலைக்கு போனா.." என்று அந்த நடு இரவில் திட்டினாள் மேகலா.

"உங்க பொண்ணுக்கு கட்டிக்க மாப்பிள்ளையே கிடைக்காத மாதிரி அன்னைக்கு காரணம் காட்டி கட்டி வச்சிங்களே.. அன்னைக்கு அந்த காரணம் வரம். இன்னைக்கு சனியனா.?" ஆத்திரத்தோடு கேட்டாள் தேன்மொழி. இது அவளின் அண்ணன் குழந்தை. அவர்கள் வீட்டின் முதல் வாரிசு. உயிரை தந்து பெற்றெடுத்தவளே குழந்தையை வெறுக்காத நிலையில் இவர்களுக்கு என்ன வந்தது என்று கோபம் வந்தது இவளுக்கு.

மேகலா அவளை கோபத்தோடு வெறித்தாள். "மாப்பிள்ளை கிடைக்காம நாங்க வந்தோமா.? இல்ல நீ வந்திருக்கியா.?" என்றுக் கேட்டாள்.

முள் சாட்டையால் மனதை விசிறியடித்து காயம் செய்துக் கொண்டிருந்தாள் அவள்.

தேன்மொழி வாயை திறக்கும் முன் அவளின் புஜத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான் ஆரவ்.

"வாயை மூடிக்கிட்டு வா.." என்று சிறு குரலில் எச்சரித்தான்.

இருவரும் காரில் வந்து அமர்ந்தனர்.

"உங்கம்மா பேசுறது கொஞ்சமாவது நியாயமா இருக்கா.?" ஆத்திரத்தோடு கேட்டவளின் முன்னால் கையை காட்டி நிறுத்தினான்.

"அவங்க பெரியவங்க. கோபத்துல பேசுறாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்க. உன் அண்ணனுக்காக என்னையே அட்ஜஸ்ட் பண்ணிக்கறவ அண்ணிக்காக மாமியாரை அட்ஜஸ்ட் பண்ணிக்க.." என்றான் பொய்யான நகைப்போடு.

ஜன்னல் புறம் முகத்தை திருப்பினாள். கண்கள் கலங்கியது.

இருவரும் வீட்டிற்கு வந்தபோது மணி இரண்டை தாண்டி விட்டிருந்தது. வீட்டிற்கு வந்த அதே நேரத்தில் குழந்தை விழித்துக் கொண்டது. ஆரவின் படுக்கையறையில் குழந்தையை படுக்க வைத்து நெஞ்சில் தட்டி உறங்க வைக்க முயன்றாள் தேன்மொழி. உறக்க கலக்கத்தில் அவளுக்கும் கண்கள் சொக்கியது.

"நீ தூங்கு.." என்றுவிட்டு குழந்தையை கையில் தூக்கிக் கொண்டான் ஆரவ்.

எழுந்து அமர்ந்தாள் தேன்மொழி. "கொடு.. நானே பார்த்துக்கறேன்.." என்று கையை நீட்டினாள்.

"நான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே.."

எழுந்து நின்றவள் குழந்தையை பிடுங்கிக் கொண்டாள்.

"எங்க வீட்டு சனியனை நீ ஒன்னும் பார்த்துக்க வேணாம்.." என்றாள்.

ஆரவ் முறைத்தான். "அது என் அம்மா சொன்னது.."

"நீ ஒன்னும் அது தப்புன்னு சொல்லலியே. உனக்கும் இவன் சனியன்தானே.? உன் அக்காவோட குணத்தை உன்னை விட நல்லா தெரிஞ்சவ நான்.. இவனை சனியன்னு சொன்னதுக்கு உங்க அம்மா பீல் பண்ணலன்னா கேளு.." என்றவள் குழந்தையை மடி மீது வைத்து மெள்ள தாலாட்ட ஆரம்பித்தாள்.

ஆரவ் குழந்தையையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். தேன்மொழிக்கு அழுகைதான் வந்தது. மாமியாரின் சனியன் என்ற சொல் மனதை விட்டு அகலவேயில்லை. இரண்டு பைத்தியக்காரர்கள் செய்த தவறுக்கு இந்த குழந்தை என்ன பாவம் செய்வான் என்று கலங்கினாள்.

அவளருகில் அமர்ந்தான் ஆரவ். அவளின் கன்னத்தில் கோடிட்டு இருந்த கண்ணீரை துடைத்தான்.

"மாப்பிள்ளை கிடைக்காம வந்தேனா நான்.? என் அண்ணன் என்னை நினைச்சாவது அவன் பீலிங்ஸை கட்டுப்படுத்துவான்னு எவ்வளவு கன்வின்ஸ் பண்ணி என்னை கல்யாணம் பண்ண.. என் வீட்டுல இருக்கும் எல்லோரும் என்னை வெறுக்கறாங்க. உங்க அம்மா கண்டபடி திட்டுறாங்க. எதுக்கு இப்படி செஞ்ச.?" என்று அழுதபடி கேட்டாள்.

அவளை அணைத்துக் கொண்டான். அக்காவின் உடல் நலனுக்காக இவளை உபயோகப்படுத்துகிறான் என்பது உண்மையென்றாலும் கூட இந்த திருமணத்தை அவன் செய்ய வேறு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது.

ஒருவேளை நூறில் ஒரு சதவீதமாக அக்காவிற்கு ஏதாவது நடந்து விட்டால் அதன் பிறகு அவன் என்ன செய்தாலும் தேன்மொழியை மனைவியாக்குவது நடக்காத காரியமே. அவனுக்கு அவள் மீது அளவில்லா ஆத்திரமும் கோபமும் உண்டு. ஆனால் தன் காதலை துறக்கும் அளவுக்கு தைரியம் இருக்கவில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல தன் காதலை காப்பாற்றி கொள்ளவும், தன் அக்காவை அந்த முரட்டு மாமனிடமிருந்து காப்பாற்றவும் இந்த கல்யாணத்தை செய்து விட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN