காதல் கணவன் 127

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றிக்கு மறுநாள் வங்கியில் வேலை அதிகமாக இருந்தது. கணக்கு வழக்குகளை சரி பார்த்து மேலிடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டியிருந்தது. அம்ருதா எப்படி இருக்கிறாளோ என கவலைப்பட்டபடியே வேலையை பார்த்தான்.

பாலாஜியை பார்க்கும் வேளையில் எல்லாம் இருவரும் நெருப்பாக முறைத்துக் கொண்டனர்.

தேன்மொழியும் ஆரவும் கவனமுடன் பரிட்சையை எழுதினார்கள். அவ்வப்போது தேன்மொழியின் புறம் பார்த்தான் ஆரவ். ஆனால் அவள் மறந்தும் கூட இவன் புறம் பார்க்கவில்லை.

பிற்பகல் வேளையில் தேன்மொழியும் ஆரவும் பரிட்சை ஹாலை விட்டு வெளியே வந்தனர்.

பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தாள்‌ தேன்மொழி.

காரை அவளுக்கு முன்னால் நிறுத்தினான் ஆரவ். "வா போகலாம்.." என்றான்.

"மரியாதையா போயிடு ஆரவ். என்கிட்ட வாங்கி கட்டிக்காத.." என்றவள் அவனை முறைத்துவிட்டு நடந்தாள்.

"ஏன்டி தப்பு முழுக்க உன் மேல. ஆனா என்கிட்ட இப்படி எரிஞ்சி விழுற.." என்றவனிடம் திரும்பி வந்தாள்.

"என் மேல தப்புன்னு சொன்னா பிஞ்சிடும் ஆரவ்.‌." என்று கையை நீட்டி சொல்ல, அந்த கையை பற்றிக் கொண்டான் இவன்.

"பிஞ்சா நானே கூட தச்சிக்கிறேன். வந்து கார்ல ஏறு.." என்றான்.

முறைத்தாள்.

"வருசம் முழுக்க முறைக்கதான் போற. இப்பவே ஆரம்பிக்காம வந்து ஏறு.." என்றவன் அவளுக்காக கதவை திறந்து விட்டான்.

கோபத்தோடு ஏறி அமர்ந்தாள்.

அவளின் கையை பற்றினான் ஆரவ். "என் அம்மா கோபத்துல திட்டுவாங்க. அதையெல்லாம் மனசுல வச்சிக்காத.." என்றான்.

"உனக்கு ஒன்னு சொல்லட்டா.?" எனக் கேட்டவளிடம் தலையசைத்தான்.

"உன் அக்கா இன்னொருத்தனை லவ் பண்ணா. இன்னொரு மேரேஜ் பண்ணிக்க போனா. ஆனா அவ எங்க வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு என் அம்மாவோ என் அத்தையோ அவளை ஒரு வார்த்தை திட்டி பேசியிருக்க மாட்டாங்க. அவளை குத்தி காட்டியிருக்க மாட்டாங்க. ஆனா உங்க அம்மா இருக்காங்க பார்த்தியா.? உன் அக்கா நிலைக்கு நான் காரணங்கற மாதிரி பேசுறாங்க. என் அண்ணன் சண்டை போடுற இடத்துல உன் அக்காவுக்கு என்ன வேலை.? இவளை யார் குறுக்கே போக சொன்னது.? இவ அப்படி குறுக்க போனதாலதான் இவ்வளவு பிரச்சனை.."

ஆரவ் அதிர்ச்சியோடு வாயை பொத்தினான். வரவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"இது உனக்கே ஓவரா தெரியல.?" சிரித்தபடியே கேட்டான்.

அவளின் கூந்தலிலிருந்து ஒதுங்கி கன்னத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சிறு கற்றை கூந்தலையும் அவளின் இதழின் வண்ணத்தையும் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

'இவ ஏன் இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்கா.? இவ கோபப்பட்டா கூட கும்முன்னுதான் இருக்கா. சும்மா சொல்லக் கூடாது. வளர்மதி அத்தை தங்கத்தையே பெத்து போட்டிருக்காங்க..' ஆச்சரியம் குறையாமல் நினைத்தான்.

அவனின் பார்வை கண்டு எரிச்சல் வந்தது அவளுக்கு. "மனசாட்சியோடு இந்த முகத்தை பாரு ஆரவ்.." என்றாள்.

"போடி அரை லூசு. உன்னை மாதிரி சப்போர்ட் பண்றதுக்கு உலகத்துல வேற எவளுமே யாருக்குமே கிடைக்க மாட்டாங்க. உங்க நொண்ணன் சண்டை போட்டது தப்பில்ல. என் அக்கா குறுக்க போனதுதான் தப்பாம். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி என் அண்ணன் காதலிச்சது தப்பு இல்ல. உன் அக்கா பொண்ணா பிறந்ததுதான் தப்புன்னு சொன்னாலும் சொல்வ நீ.." என்றவன் அவள் மீண்டும் பேச தொடங்குவதை கண்டு விட்டு கையை நீட்டி தடுத்தான்.

"ப்ளீஸ் ஸ்டாப். உன் அண்ணன் பீலிங்ஸை கட்டுப்படுத்ததான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ நடிக்க வந்திருக்க. அதை மறந்துடாத. நடிப்புன்னு வந்தா திட்டும்தான் வாங்கியாகணும். அடியும் கூடதான் வாங்கியாகணும்.." என்றவன் காரை ஓட்டினான்.

அவனை வெறித்தாள் தேன்மொழி.

"உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல.." என்றாள் தளும்பும் கண்ணீரை தடுத்து நிறுத்திக் கொண்டு.

"ஆமா. இல்லன்னா மட்டும் எனக்கு உயிரை தர போறியா.? உங்க அண்ணனுக்காக வெட்கமே இல்லாம கெஞ்சற. கால்ல விழற.. நீயெல்லாம் உண்மையாவே என்னை லவ் பண்ணியா.?" சந்தேகமாக கேட்டான்.

தேன்மொழி வாய் திறக்கவில்லை. அவனது பொசசிவ்னெஸ்ஸுக்கு தன்னால் பலியாக முடியாது என்று புரிந்துக் கொண்டாள்.

***

மாலை நேரத்தில் சக்தி கனிமொழியோடு வீடு வந்து சேர்ந்தான்.

"இண்டர்வெல்ல கூட எக்ஸாமுக்குதான் படிச்சேன் மாமா. நான் ஐ.ஏ.ஏஸ் ஆகிடுவேன்தானே.?" எனக் கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தாள்.

ஹாலில் ஒரு கூட்டமே நின்றிருந்தது. கனிமொழி தன் கணவனை பார்த்தாள். அவளின் கைப்பிடித்துக் கொண்டு முன்னால் வந்தான் சக்தி.

வளர்மதி தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். குழந்தையை மடி மீது வைத்தபடி ஓரமாக அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. தாத்தாவும் பாட்டியும் எங்கேயோ வெளியே சென்றிருந்தார்கள்.

கனிமொழியின் சின்ன தாத்தாவும் அவரின் பையன்கள் இருவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

"வாம்மா சின்ன பாப்பா.." அழைத்தார் சின்ன தாத்தா.

"நல்லாருக்கிங்களா தாத்தா.? நல்லாருங்கிங்களா மாமா.?" அன்போடு விசாரித்தாள்.

"உங்க அம்மாவை மாதிரி ஒரு தங்கச்சி இருந்தா நாங்க எப்படி நல்லா இருக்க முடியும்.?" எனக் கேட்டபடி எழுந்தார் பெரிய மாமா.

"எங்க வீட்டுல மூனு பசங்க இருக்காங்க. ஆனா உங்க அம்மா பேச்சுக்கு கூட எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லாம, ஒரு வார்த்தை அனுமதியும் கேட்காம உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா. சரி போனா போகுதுன்னு விட்டோம். இப்ப இரண்டாவதாவும் உங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. இப்பவும் ஒரு வார்த்தை சொல்லல. முறை மாமனுங்கன்னு எங்க புள்ளைங்க எதுக்கு இருக்காங்க.? இல்ல தாய் மாமனுங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்.?" எனக் கேட்டார்.

தாத்தா வளர்மதியை முறைத்துக் கொண்டிருந்தார்.

கனிமொழி திருதிருவென விழித்தாள். சக்தி அவளின் தோளை அணைத்தான்.

"நாங்க லவ் பண்ணதுக்கு அவங்க என்ன செய்வாங்க.?" எனக் கேட்டான் சக்தி.

'நாங்களா.? யோவ் மாமா.. இது நீதானா.? ரொம்ப புதுசா ஜெர்க் கொடுக்கிறியே.! என்னவோ போ நல்லாரு இனியாவது.!' மனதுக்குள் வாழ்த்தினாள்.

"தம்பி உங்களுக்கு எதுவும் தெரியாது. மூனு முறை பசங்க இருக்காங்கன்னு இவளுக்கு தெரியும்தானே.? பொட்ட புள்ளைங்ககிட்ட என்ன சொல்லி வளர்த்தணும்.? மாமனுங்க இருக்கானுங்க. அவனுங்க உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க. உங்க மனசுல வேற யாரையும் நினைக்காதிங்கன்னு சொல்லி வளர்க்கணுமா இல்லையா.?" எனக் கேட்டார் பெரிய மாமா.

கனிமொழி கண்களை சுழற்றினாள்.

சக்திக்கே கடுப்பானது. "ஏன் என்னை பார்த்தா முறை மாமன் மாதிரி தெரியலையா.?" கடுகடுவென்று கேட்டான்.

கனிமொழிக்கு உள்ளம் உருகியது. காதலின் அளவு கூடியது. தன்னை அணைத்திருந்த சக்தியின் கரத்தில் வலு கூடியது போல கூட உணர்ந்தாள். ஆனால் அவன் உண்மையில் அப்படிதான் இறுக்கமாக அணைத்திருந்தான்.

"தம்பி இதுல நீங்க தலையிடாதிங்க.." என்றார் தாத்தா.

"உன் இஷ்டத்துக்க நீயும் உன் பிள்ளைங்களும் இருந்தா நாங்க எப்படி உன்னோடு உறவு கொண்டாட முடியும்.?" வளர்மதியிடம் கேட்டார் சின்ன மாமா.

"என்னத்துக்கு இப்படியொரு உறவு.?" கனிமொழி தன் தந்தையின் குரல் கேட்டு திரும்பினாள்.

வேலையிலிருந்து திரும்பி வந்திருந்தவர்‌ தனது உணவை பையை வேலைக்காரியிடம் தந்தார். பிறகு மனைவியை வெறித்தபடி வந்து சோபாவில் அமர்ந்தார்.

"மாப்பிள்ளை நீங்களும் புரியாம பேசாதிங்க.." என்ற பெரிய மாமனாரை முறைத்தவர் "இவளோட அம்மாவும் அப்பாவும் செத்து போன பிறகு இவளுக்கு சோறு போட கூட வக்கில்லாமதானே இவளை கொண்டுப் போய் அனாதை ஆசிரமத்துல சேர்த்துனிங்க.? உறவை அப்ப கொண்டாடல. ஆனா இப்ப கொண்டாடுறிங்க. என் புள்ளைங்களுக்கு அறிவு இல்லையா.? இல்ல அவங்களுக்கு இந்த மொத்த உலகத்திலயும் மாப்பிள்ளையே இல்லையா.? எதுக்கு உங்க புள்ளைங்களை மாப்பிள்ளைன்னு சொல்லி வளர்க்கணும்.? நாளைக்கு உங்க பசங்க வேற ஏதாவது பொண்ணை பார்த்து போயிட்டா ஆசையை வளர்த்துகிட்ட என் பொண்ணுங்க நிலமை என்னாகியிருக்கும்.?" எனக் கேட்டார் சாதாரண குரலில்.

"அப்ப ஒரு சூழ்நிலை. இவளை ஹாஸ்டல்ல விட வேண்டியதா ஆகிடுச்சி. அதுக்காக உறவு அந்து போயிடுமா.? உங்க புள்ளைங்க படிக்கறாங்கன்னு எங்க பசங்க இவ்வளவு நாளும் காத்துட்டு இருக்காங்க. ஆனா நீங்க உங்க புள்ளைங்களை ஓடுகாலிகளா வளர்த்தியிருக்கிங்க.." என்று பெரிய மாமா சொல்லவும் இருக்கையிலிருந்து எழுந்தார் கனிமொழியின் அப்பா.

"என் வீட்டுல நின்னுக்கிட்டு என் புள்ளைங்களை ஓடுகாலின்னு சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மரியாதையா வெளியே போங்க.." என்றவர் மனைவியின் முகம் பார்த்தார்.

"உன்னை கல்யாணம் பண்ணும்போது எனக்கு எந்த சொந்தமும் இல்ல. யாரையும் நான் வீட்டுக்குள்ள சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிதானே கல்யாணம் பண்ண.? இப்ப இவங்க நடு வீட்டுல நின்னுட்டு நான் பெத்த புள்ளைங்களையே தப்பு தப்பா பேசுறாங்க. நீ வேடிக்கை பார்த்துட்டு நிற்கற. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.?" எனக் கேட்டார் அதட்டலாக.

வளர்மதி குனிந்த தலையோடு கண்ணீரை வடித்தாள். இது ஒரு ஒருவழி பாதையை கொண்ட உறவு. இவளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது அவர்களை திட்டவோ அரவணைக்கவோ. ஆனால் அவளுக்கென்று இருந்த அந்த ஒற்றை சொந்தத்தையும் அவள் இழக்க விரும்பவில்லை.

வளர்மதியின் மனதை மற்ற யாரையும் விட அவளின் கணவர் நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதற்காக தன் மகள்களை ஓடுகாலிகள் என்று சொல்லும் ஒருவரை வீட்டில் நிறுத்தி பாராட்ட அவரால் முடியுமா.?

வந்தவர்கள் வளர்மதியையும் அவளின் கணவரையும் மாறி மாறி பார்த்தனர்.

"தாயை போலதான் புள்ளைங்களும் இருப்பாங்க.." என்றவர் மேலே பேசும் முன் "வெளியே போங்க.." என்று ஆரவின் குரல் கேட்டது.

அனைவரும் திரும்பிப் பார்த்தனர். குழந்தையை வாங்கிச் செல்ல வந்திருந்தார்கள் அவர்கள். வெற்றியும் இன்னும் வங்கியிலிருந்து வந்திருக்கவில்லை. ஆனால் அம்ருதா குழந்தையை கேட்டாள். அதனால் குழந்தையை தூக்கிச் செல்ல இருவரும் இங்கே வந்திருந்தார்கள்.

அவர்கள் பேசியதை ஆரம்பத்திலிருந்தே கேட்டு விட்டனர் இருவரும். அவர்களை தாண்டி சென்ற தேன்மொழியின் தந்தையும் கூட அவர்களை எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் சென்று விட்டிருந்தார்.

"இதோ இன்னொரு ஓடுகாலி.." தேன்மொழியை கை காட்டி திட்டினார் சின்ன மாமா.

"உங்க வீட்டு பொண்ணுங்க ஓடுகாலிங்க இல்ல இல்லையா.? அத்தோடு வாயை மூடிக்கிட்டு கிளம்புங்க.. எனக்கு லவ் பண்ண உரிமை இருக்கு. என் மாமனை கட்டிக்கவும் உரிமை இருக்கு.. என் அக்காவுக்கும் மனசு இருக்கு. அந்த மனசை திருடுற அளவுக்கு என் அத்தானுக்கும் திறமை இருக்கு. போய் உங்க புள்ளைங்களுக்கு உழைச்சி பொண்ணு தேடுங்க. இல்லன்னா இளிச்சவாயா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ண சொல்லுங்க. எங்களை கேவலப்படுத்தாதிங்க.." என்ற கனிமொழி "நீங்க வாங்க மாமா. நாம நம்ம ரூமுக்கு போய் ரொமான்ஸா பேசலாம். இங்கே ஒரே சந்தை கடை கூட்டமா இருக்கு.." என்று கணவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

சொந்தக்காரர்கள் வளர்மதியை பார்த்தார்கள். அந்த வீட்டிலிருந்தவர்களை முறைத்தபடியே அங்கிருந்து கிளம்பி போனார்கள்.

தேன்மொழி ஓடி வந்து அம்மாவின் காலை பற்றினாள். "அம்மா சாரிம்மா. நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிடும்மா.." என்றாள் அழுதபடி.

தன்னால்தான் அம்மாவுக்கும் ஓடுகாலி பட்டம் என்பது அவளுக்கு வலியை தந்து விட்டது.

ஆரவ் அவளை முறைத்தான்.

"எதுக்கு இங்கே வந்தியோ அந்த வேலையை பாரு. பெத்தவங்க சொல்ல சொல்ல கேட்காம திருட்டு கல்யாணம் செஞ்ச உனக்கு மன்னிப்பு கேட்கற தகுதி கூட கிடையாது.." என்ற அப்பா தன் மனைவியின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

"குழந்தை வேணும்.." ‌என்றான் ஆரவ்.

அர்ச்சனா குழந்தையையும் கூடையையும் கொண்டு வந்து தந்தாள். எதிர்பார்த்து காத்திருந்திருப்பாள் போல.

அழுதபடி அமர்ந்திருந்த மனைவியை முறைத்த ஆரவ் "போலாம் வா.. நீ இல்லன்னா இந்த குழந்தையை பார்த்துக்க அங்கே ஆள் இல்ல.." என்றழைத்தான்.

கையூன்றி எழுந்தாள். கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆரவின் பின்னால் நடந்தாள்.

"உன்னை நான் லவ் பண்ணதே பாவம் ஆரவ்.." என்றாள்.

"சரி விடு பரவால்ல.." என்றவன் காரில் அவள் அமர்ந்த பிறகு குழந்தையை அவளின் மடியில் வைத்துவிட்டு சென்று காரை எடுத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN