காதல் கணவன் 128

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார் சென்றுக் கொண்டிருந்தது. விம்மிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

"சும்மா அழாத. உங்க நொண்ணனுக்கு என் அக்காவை விட வேலைதான் முக்கியமா போயிடுச்சி. இல்லன்னா நாம ஏன் இங்கே‌ வரோம்.? இப்படி திட்டு வாங்கறோம்.?" என்றான் ஆரவ் எரிச்சலோடு.

தேன்மொழி அவனை முறைத்தாள்.

"உன் அக்காவுக்கு ஹாஸ்பிட்டல் தண்டம் நீ கட்டு. என் அண்ணன் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது அப்ப. அதனால உங்கக்கக்கா காலடியில தவம் இருப்பான்.." என்றாள் வெடுக்கென்று.

அவளை நகைத்தபடி பார்த்தான் அவன். 'உன்கிட்ட வாயை கொடுத்து ஜெயிக்க முடியுமா.?' என நினைத்தான்.

"உங்க அண்ணன்தான் எல்லா சேதாரத்துக்கும் காரணம். காசையும் அவன்தான் கட்டணும்.."

"அதுக்குதானே வேலைக்கு போய்ட்டு இருக்கான். அப்புறம் என்ன பக்கத்துல இல்ல தூரத்துல இல்லன்னு சீன்.?"

குழந்தை சிணுங்கியது. பால்புட்டியை எடுத்து குழந்தைக்கு பால் புகட்டினாள்.

"அழாத செல்லம்.. நாம சீக்கிரமா போய் அம்மாவை பார்க்கலாம். அழாம இரு.." என்று கொஞ்சினாள்.

ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடியே காரை ஓட்டினான் ஆரவ்.

"நேரா பார்த்து ஓட்டி தொலை. இத்தனை பிரச்சனையும் ஆரம்பிக்க காரணமே ஒரே ஒரு கார் ஆக்ஸிடென்ட்தான். அன்னைக்கு பாலா எங்க பெரியம்மாவோடு போய் காரை ஆக்ஸிடென்ட் பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு வரை பிரச்சனை வளர்ந்திருக்காது.." என்றாள்.

ஆரவ் சாலையை பார்த்தான்.

"அழாம இரு ஹனி. அடிக்கடி அழுதா உடம்பு கெட்டு போயிடும்.." அவன் சொன்னது கேட்டு தலையை பிடித்தாள்.

"முடியலடா உன்னோடு. நான் பார்த்ததுலேயே வொர்ஸ்ட் கேரக்டர் நீயாதான் இருப்ப.." என்றாள் பெருமூச்சோடு.

***

வளர்மதி தன் கணவனின் கையிலிருந்து தன் கையை உருவினாள். அவரும் விட்டுவிட்டார்.

தரையில் ஓரமாக அமர்ந்தாள். சுவரோடு முதுகை சாய்த்தாள். முட்டிக்காலை கட்டிக் கொண்டவளுக்கு அழுகையாக வந்தது.

அவர் சட்டையை கழட்டினார். மாற்று உடை உடுத்தினார். மனைவி அழுவதை பார்த்தபடி இருந்தவர் அவளின் அருகே வந்து முன்னால் அமர்ந்தார்.

"எதுக்கு இப்ப அழற.?"

"நான் அழ காரணமா இல்ல.?" என்னவளின் முகத்தை நிமிர்த்தினார். கண்ணீரை துடைத்தார்.

"போய் என் பொண்ணுக்கிட்ட சாரி கேளு‌.." என்றவரின் கையை தட்டி விட்டாள்.

"தூர போங்க.. என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா அழவாவது விடுங்க.."

"மாட்டேன்.." என்றவரின் குரலில் வெகுநாளுக்கு பிறகு குறும்பு கலந்திருந்தது.

அவரை தூர தள்ளினாள். "நீங்க ஒன்னும் என்கிட்ட பேச வேணாம்.." முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நான் பேசுவேன்.."

"உங்களுக்கு என்னை விட உங்க புள்ளைதானே முக்கியமா போயிட்டா. போய் அவகிட்ட பேசுங்க. என்கிட்ட பேச வேண்டாம்.." என்றவளின் கன்னத்தை வருடினார்.

கையை தட்டி‌விட்டாள்.

"தொடாதிங்க.." என்றவளுக்கு மூக்கு சிவந்தது.

மூக்கை பிடித்து ஆட்டினார். "அவ உனக்கும் எனக்கும் பிறந்தவ.. அவளை பார்த்து பொறாமைப்படாத.." என்றார்.

"இத்தனை நாள் நீங்க என்கிட்ட பேசலையே.. அதே போல இருங்க.." என்றவளின் கை விரல்களோடு தன் கையின் விரல்களை கோர்த்தார்.

"நீ தாலியை கழட்டி வீசும்போதும், கனிமொழியோட கஷ்டத்தை அசால்டா எடுத்துக்கும் போதும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா.?" எனக் கேட்டவரின் முகம் பார்த்தவள் "உங்ககிட்ட நான் சாரி கேட்டேன். நீங்கதான் என்னை மன்னிக்கல.." என்றாள்.

அவளின் கையோடு கோர்த்திருந்த தனது கையை பார்த்தவர் "எனக்கு கோபம்.." என்றார்.

"இப்ப போயிடுச்சா.?" என்றவளின் முகம் பார்த்தவர் ஆமென்று தலையசைத்தார்.

"தேனு தப்பு பண்ணிட்டான்னு திட்டுனிங்களே.!" குழப்பமாக கேட்டாள்.

"அது ஏதோ ஆதங்கம்.."

"நான் நம்ப மாட்டேன்.." என்றவளின் நெஞ்சில் கையை பதித்தார்.

"இந்த ஹார்ட் மேல சத்தியமா எனக்கு உன் மேல கோபம் இல்ல. வெறும் ஆதங்கம் மட்டும்தான். கோபப்பட ஆசையில்ல. ஆனா ஆதங்கத்துல வார்த்தைகள் வந்துடுச்சி. மன்னிச்சிடு. இப்ப இந்த அழுகையை நிறுத்து. உன் ஒரே சொந்தம் அவங்கதான்னு நினைக்கிறதை நிறுத்து. அவங்க உன் சொந்தம் இல்ல‌. இந்த வீட்டுல இருப்பவங்கதான் உன் சொந்தம். உன்னை அனாதையா நிறுத்திய ஒரு கும்பலுக்காக நீ கண்ணீர் விட்டா அது இங்கே இருப்பவங்களை நீ அவமானப்படுத்துற மாதிரி ஆகிடும்.." என்றார்.

புரிந்துதான் இருந்தது அவளுக்கும்.

அவளின் விழிகளை துடைத்தார். "அவங்க சும்மா வந்து கேட்டிருந்தா கூட என் பொண்ணுங்களை கட்டி தந்திருக்க மாட்டேன்.." என்றார்.

"எனக்குத்தான் அவங்களை சரியா வளர்க்க தெரியல.." என்றவளை பார்த்து சிரித்தார்.

"நானும் சேர்த்துதான் வளர்த்தினேன். பழியை மட்டும் ஒரே ஆள் மேல போடும்போது நல்லாதான் இருக்கு.."

வளர்மதி அவரின் நெஞ்சில் குத்தினாள். சிரித்தபடியே பின்னால் விழுந்தார்.

"உனக்கு வாய் இருந்தும் வேஸ்ட். பேசுறது எப்படின்னு என் பொண்ணுங்ககிட்ட கத்துக்க.." என்றார்.

***

வெற்றி வீட்டிற்கு வரும்போது மணி ஆறை கடந்து விட்டிருந்தது. அவசரமாக குளித்து உடை மாற்றி மருத்துவமனைக்கு கிளம்பினான்.

நேற்று மாலையில் பார்த்தது. தான் இல்லாமல் குழந்தையை மட்டும் இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறாளே என்று வேகமாக சென்றான்.

அவன் சென்றபோது ஆரவ்வும் தேன்மொழியும் அம்ருதாவின் அறை வாசலில் காத்திருந்தனர். வெற்றி வேக மூச்சை சரி செய்தபடி அவர்களை நெருங்கினான்.

அம்ருதா இருந்த அறையின் கதவு திறந்தது. மேகலா வெளியே வந்தாள்.

"அந்த பால் டப்பாவை எடு ஆரவ். அந்த சனியன் அழுதுகிட்டே இருக்கு. எப்ப பார்த்தாலும் பாலை குடிச்சிக்கிட்டே இருக்கு.." என்று கையை நீட்டினாள்.

தேன்மொழி ஆத்திரத்தோடு அவளை முறைத்தாள். "இன்னொரு முறை குழந்தையை சனியன்னு சொன்னிங்கன்னா மரியாதை கெட்டுடும்.." என்றவள் முழுதாக சொல்லி முடிக்கும் முன்பே அவளின் கன்னத்தில் அறைந்து விட்டாள் மேகலா.

"அம்மா.." ஆரவ் அவனையும் மீறி அதட்டினான்.

"அந்த சனியனை இவ்வளவு நாளும் கொல்லாம விட்டதே என் தப்புதான். அந்த சனியனாலதான் என் மக இன்னும் எழாம இருக்கா.." என்றாள் மேகலா.

கன்னத்தை பிடித்தபடி நின்ற தேன்மொழி வாயை திறக்க இருந்த நேரத்தில் அவளின் தோளில் பதிந்தது ஒரு கரம். திரும்பி பார்த்தாள். வெற்றி நின்றிருந்தான்.

ஆரவின் கையிலிருந்த பால்புட்டியை பிடுங்கிக் கொண்டு உள்ளே போனாள் மேகலா.

"அண்ணா.." அவனின் நெஞ்சில் பாய்ந்து அணைத்துக் கொண்டாள் தேன்மொழி. அவள் இருந்த மனநிலைக்கு அழுக மட்டும்தான் தோன்றியது.

அவளின் தலையை வருடினான் வெற்றி. "அழாதே. எல்லாமே சரியாகிடும்.." என்றான்.

ஆரவ்வை பார்த்தவன் "உங்க அம்மாவை இன்னைக்கு ஒருநாளாவது வீட்டுக்கு கூட்டி போ. பைத்தியக்காரி மாதிரி இருக்காங்க.. போய் ஒருநாளாவது நிம்மதியா தூங்க‌விடு.." என்றான்.

"வர மாட்டேங்கிறாங்க.." என்றான் ஆரவ் தேன்மொழியின் முகத்தை பார்த்தபடி.

"அடம் பிடிச்சி இழுத்துட்டாவது போ. இப்படியே போனா இன்னும் நாலு நாள்ல உங்க அம்மாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்த வேண்டி வரும்.." என்றவன் தேன்மொழியை நேராக நிறுத்தினான். அவளது கண்ணீரை துடைத்தான்.

"கோபத்துல திட்டுறாங்க தேனு.. அவங்க ஒரு ஆள் சனியன்னு சொல்றதால அவன் சனியன் ஆகிட போறதில்ல. நம்ம வீட்டுல எல்லோரும் எவ்வளவு செல்ல பேர் வச்சி கூப்பிடுறாங்க. அந்த செல்ல பேர்தான் அவன். சனியன் இல்ல.." என்றான்.

தேன்மொழி தலையை அசைத்தாள்.

வெற்றி உள்ளே போனான்.

மேகலா இவனை கண்டு முறைத்தாள்.

"வெற்றி.." அம்ருதாவின் அழைப்பில் எதையும் பேச தொடங்காமல் அமைதியாகி கொண்டாள் மேகலா.

அருகில் வந்து குழந்தை படுத்திருந்த இடத்தை விடுத்து அவளுக்கு அருகில் அமர்ந்தான்.

"அம்மு.." அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

"இன்னைக்கு பரவால்லையா.?"

"ம்.." என்றவள் அம்மாவை தயக்கமாக பார்த்தாள்.

"வெளியே போங்க கொஞ்ச நேரம்.." வெற்றி முகத்திற்கு நேராக சொன்னான்.

மேகலா மகளை பார்த்தபடி வெளியே நடந்தாள். குழந்தை கடைவாயில் பால் ஒழுக உறங்கி விட்டிருந்தது.

இவன் குழந்தையின் உதட்டை துடைத்து விட்டான்.

"என்ன நடந்ததுன்னு நேத்து நைட் முழுக்க யோசிச்சி பார்த்தேன் வெற்றி.." அவள் சொன்னது கேட்டு சிறிது பயத்தோடு அவளை பார்த்தான்.

"நான் உயிர் பிழைச்சிட்டேங்கறதை என்னால நம்பவே முடியல. அதனால்தான் இன்னைக்கு மறுபடியும் குழந்தையை கேட்டேன்.. எப்படி தப்பிச்சேன்.? எப்படி பிழைச்சேன்.?" வறண்ட உதடுகளை நாக்கால் தடவிக் கொண்டு கேட்டாள்.

அவளின் நெற்றியை வருடினான். "நீ கடைசி வரை என்னோடு வாழணும்ன்னு விதி அம்மு. அதை யாரால மாத்த முடியும்.?" எனக் கேட்டான்.

அம்ருதா ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள். "என் மேல உனக்கு கோபம் வரலையா வெற்றி.? ச்சீன்னு தோணலையா.? இப்படியொருத்தி நமக்கு வேணுமான்னு தோணலையா.?" சந்தேகமாக கேட்டாள்.

"அடிப்பாவி. உனக்காக சாகறேன் இங்கே. எப்படி கேட்கறா பாரு.." அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

"உன் இடத்துல நான் இருந்திருந்தா இன்னும் மோசமா முடிவெடுத்திருப்பேன். நீ பழி வாங்கணும்ன்னு சின்னதாதானே நினைச்ச.. அதுவும் நான் உன்னை அவ்வளவு மோசமா ரேப் பண்ண பிறகு.." எனக் கேட்டவனின் கலங்கிய விழிகளிலிருந்து கண்ணீர் சொட்டியது.

தேம்பினாள்.

"அழாத அம்மு. ப்ளீஸ்டி. உன் ஹெல்த் கன்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு. உனக்கு ஏதாவது ஆச்சின்னா அப்புறம் நான் இல்ல.. அழாத. ப்ளீ‌ஸ்.." கெஞ்சினான்.

உதட்டை கடித்தாள். அழுகையை அடக்கினாள்.

"தப்பு முழுக்க நான்தான்டி செஞ்சேன்.. பழகிட்டு சாக சொல்லியிருந்தா கூட செத்திருப்பேன். இப்படி எனக்கு சாவை காட்டிட்டியே.." என்றவன் கண்களை துடைத்தான்.

"வெற்றி சாரி.." என்றவளின் காதோரத்தில் முகம் புதைத்தான். "நான்தான்டி சாரி கேட்கணும். நான்தானே எல்லா தப்பும் செஞ்சேன். சாரிடி அம்மு.. ரியலி சாரி.. ரொம்ப ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.."

இருவரும் சிறிது நேரத்திற்கு அப்படியே இருந்தனர்.

அம்ருதா உறங்கியபிறகு குழந்தையோடு வெளியே வந்தான் வெற்றி‌.

மேகலா எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.

"அவங்களை கூட்டிப் போக சொன்னேன்.." என்றான் ஆரவிடம்.

"நைட்ல ரூமுக்குள்ள பெண்களை மட்டும்தான் விடுவாங்களாம். அக்காவுக்கு உதவி தேவைப்படும்ன்னு அவங்க வர மாட்டேங்கிறாங்க.." பதில் சொன்னான் ஆரவ்.

"நான் என் அண்ணன் கூட இருக்கேன்.." என்றாள் தேன்மொழி.

"உனக்கு பரிட்சை.. மறந்துட்டியா.?" ஆரவ் கோபமாக கேட்டான்.

"நான் என் வீட்டுல இருந்து வேற யாரையாவது வர சொல்லிக்கிறேன். நீ உன் அம்மாவை கூட்டிக்கிட்டு கிளம்பு." என்றவன் "உன் அக்காவுக்கு என்னால சின்ன தொந்தரவு கூட வராது.. என் தங்கச்சியை நீயோ உன் அம்மாவோ அடிச்சா அப்புறம் நடக்கிறதே வேற ஆரவ். இன்னைக்கு நான் பொறுமையா இருந்ததே உன் முகத்துக்காதான். உன் அம்மாகிட்ட சொல்லி வை.." என்று எச்சரித்தான்.

அவனை வெறுப்போடு பார்த்துவிட்டு அங்கிருந்து எழுந்து நடந்தாள் மேகலா.

தேன்மொழி அண்ணனை திரும்பி திரும்பி பார்த்தபடி ஆரவோடு சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் குளித்து உடை மாற்றி வந்தாள் மேகலா‌.

தேன்மொழியும் ஆரவும் சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஆரவ் ஐஸ் கட்டி ஒன்றை எடுத்து வந்து தேன்மொழி அறை வாங்கிய கன்னத்தில் வைத்தான். அவனின் கையை தூர தள்ளினாள் அவள்.

"ஒன்னும் தேவையில்ல. ஆடு பகை குட்டி உறவு கதையே வேணாம்.." என்றாள்.

மேகலா அங்கே வரவும் இருவரும் விலகி நின்றுக் கொண்டனர்.

"இவளை ஏன்ம்மா அடிச்சிங்க.?" ஆரவ் கஷ்டம் நிறைந்த மனதோடு கேட்டான்.

"என் பொண்ணு நிலைக்கு காரணம் இவங்க அண்ணன்தானே.?" என்ற அம்மாவை வருத்தமாக பார்த்தவன் "அதுக்கு இவ என்ன செய்வா.? அவரை மிரட்ட இவளை கல்யாணம் செஞ்சேன். நீங்க அடிக்க இல்ல. இவ என் பொண்டாட்டி. தயவு செஞ்சி இன்னொரு முறை அடிக்காதிங்க.." என்றான்.

மேகலா நக்கலோடு மகனை பார்த்தாள். "முந்தானை வாசம் இந்த அளவுக்கு மாத்திடுச்சா.?" எனக் கேட்டாள்.

"அக்காவுக்கு உடம்பு சரியில்லாம போகவும் உங்களுக்கு ஏதோ ஆகிடுச்சி. விடுங்க இதை.." என்றவன் தேன்மொழியின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

***

"உன் உடம்புல இருக்கும் பிரச்சனைகள் உனக்கு தெரியணும் அம்ருதா.." என்று ஆரம்பித்தாள் ரேகா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN