என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் – 10

சிறு கேவலுடன் ஆரம்பித்த யாழினி “ஏன் பாவா இப்படி செய்தீங்க? இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் என் மேல கோபமா இருக்கப் போறீங்க? கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தி இருந்தா உங்களுக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு? அதை நீங்க உணரவில்லையா பாவா? ஆபீஸுக்கு கிளம்பும் போது எல்லாம் என்கிட்ட சொல்லிட்டுப் போகமாட்டீங்க தான். ஆனா ஊருக்குக் கிளம்பும் போதாவது என்கிட்ட சொல்லிட்டுப் போவீங்கனு நினைத்திருந்தேன். ஆனா… நீங்க… நீங்க...

நம்ப கல்யாணத்துக்குப் பிறகு வர்ற முதல் பிரிவு பாவா! இதை எப்படி தாங்குவேன்?” என அவன் நேரிலிருந்தால் சட்டையைப் பிடித்துக் கேட்டிருப்பாளோ என்னமோ?! அவன் இல்லாததால் அவன் புகைப்படத்திடம் மனபாரம் தீரும் வரை உள்ளக்குமுறலுடன் பல கேள்விகளைக் கேட்டபடி இருந்தாள் யாழினி.

கொஞ்சம் தெளிந்ததும் கட்டிலில் படுக்காமல் அந்த அறையில் கணவனின் வாசம் இல்லாததால் அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு தரையில் படுக்க ஆயத்தமாகும் நேரம் கதவைத் தட்டியபடி உள்ளே நுழைந்த விஜி “அண்ணி! அண்ணன் வரும்வரை நான் உங்க கூட தான் படுக்கணும், பாட்டியின் உத்தரவு” என்றவள் இவள் பதிலை எதிர்பார்க்காமல் கட்டிலில் படுத்ததும் தூங்கிவிட, வேறுவழி இல்லாமல் கணவனின் சட்டையை தலையணையாக வைத்து இவளும் தூங்க முயற்சித்தாள். அதே நேரம் ஏக்கங்கள் இருந்தாலும் கணவனே போன் செய்யும் வரை நாமாக அழைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் யாழினி.

மறுநாளிலிருந்து எல்லோரிடமும் சகஜமாக இருக்கவும் வீட்டில் உள்ளவர்களும் சற்று நிம்மதி அடைந்தனர்.

ஐந்தாம் நாள் காலை இவள் வாசல் தெளித்துக் கொண்டிருக்கும் போது தான் வருவதை யாரிடமும் தெரிவிக்காமல் தன் நண்பனின் பைக்கில் வந்திறங்கினான் நந்தன்.

வீட்டிலிருந்தவர்களிடம் என்னதான் சகஜமாகப் பேசினாலும் கண்கள் என்னமோ மனைவி மேலேதான் இருந்தது. சொல்லாமல் போனதற்கு முகம் திருப்புவாளா இல்லை இவ்வளவு நாள் பேசாமல் இருந்ததற்கு கோபப்படுவாளா என யோசித்தவன், கூடவே தன்னைப் பார்த்தவுடன் கட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவித தவிப்பு ஏக்கத்துடன் முகத்தில் வாட்டம் என்று ஏதாவது இருக்குமோ என இவன் எதிர்பார்த்திருக்க அங்கே அவளோ புத்தம் புது பூவென தலை குளித்து மாசுமருவற்ற வட்டநிலவென குளிர்ந்து இருந்தாள் அவனின் அகமுடையாள்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் சின்னச்சின்ன பரிசுப்பொருட்களை வாங்கி வந்து கொடுத்தவன் அவளுக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை.

சாப்பிட்டு முடித்து அவன் அறைக்கு வரும் வரை எதுவும் நடக்காதது போல் இருந்தவள், தன் வீம்பை விட்டு ஆசையோடு “எனக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க பாவா?” என்று கேட்க

ஆமாம் இப்போ இதுதான் முக்கியம் என்று மனதிற்குள் கடுப்பானவன் “நீங்க பெரிய பணக்காரங்க! உங்களுக்கு நான் என்னங்க வாங்கி வரமுடியும்? இதோ இருக்கிற பாண்டிச்சேரியில் இருந்து வரேன். அங்கே சரக்குதான் இங்கே விட விலை கம்மி. அதுதான் வாங்கி வந்திருக்கேன். வேணும்னா அதை எடுத்துக்கோங்க” என்று சொல்ல

கண்கள் விரித்து “ஒஹ் ஓஹோ!” என்றவள் ஹஸ்கி வாய்ஸில் “வைங்க பாவா! எல்லாருமே தூங்கிய பிறகு நாம் இரண்டு பேரும் சேர்ந்து சரக்கடிக்கலாம்… ஆனா சைட்டிஷ் நீங்க வாங்கிட்டு வரீங்களா இல்லை நான் செய்யணுமா?” என்று படு சீரியசாகக் கேட்டு அடுத்த நிமிடம் அவனை விட்டு விலகி ஒட

“கொழுப்புடி உனக்கு!” என்றபடி கடுப்பின் உச்சத்திற்கே சென்றான் நந்தா.

அன்று மட்டும் இல்லை அதன் பிறகு வந்த நாளில் இவன் மனைவியைச் சீண்டிப் பார்க்க, அவளோ கொஞ்சமும் அசராமல் இடக்காக பதில் தந்தவள் கூடவே எல்லோரிடமும் கலகலப்பாக இருக்கவும் கொதி நிலைக்கே போனான் நந்து.

இதற்கிடையில் உத்ராபதியின் ஊர் திருவிழா வரவும் இங்கு பெரியவர்கள் தவிர இளையவர்கள் அனைவரும் அதற்கு தயார் ஆனார்கள்.

உத்திராபதி புண்ணியத்தில் அனைவரும் விமானத்தில் பயணித்தனர். சென்னையிலிருந்து தூத்துக்குடியில் உள்ள வாகைகுளம் விமானநிலையம் போய் பின் காரில் கோவில்பட்டி போக வேண்டும். அவர்கள் அங்கு போய் இறங்குவதற்குள் உத்ராபதியைப் பற்றி…

இவன் தாத்தா கடலை மிட்டாய் தொழில் செய்ய இவன் தந்தையோ நூல் ஆலை வைத்து நடத்த இவனுக்கோ உயிரைக் காக்கும் மருத்துவத்துறையின் மேல் உயிருக்கு மேல் ஆர்வம் இருக்க, அதையே படித்தான். நோயாளிகளின் உயிரைக் காப்பது டாக்டர் என்றாலும் அதற்கு உதவுவது மருந்து மாத்திரைகள் என்பதை டாக்டர் தொழிலுக்கு வந்த பிறகு உணர்ந்தவன் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் போலி இல்லாமல் தரமான மருந்து கிடைக்க வழி செய்ய அவனால் உருவாக்கப்பட்டது தான் நாயகன் பார்மஸி.

அதை இந்தியா முழுவதும் விரிவடையச் செய்வதே அவனுடைய கனவு. தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கிய நேரத்தில் தான் தன் தம்பிக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிகிச்சைக்காகத் தான் வேலை செய்யும் மருத்துவமனையின் M.D. யான உத்ராபதியைச் சந்திக்க வந்தவள் தான் ஈஸ்வரி. இதுவரை அந்த ஆஸ்பிட்டல் சி.இ.ஓவைக் கூட பார்த்து இருக்காதவளுக்கு ஒரு வாரம் கழித்தே அதுவும் அவள் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் என்பதால் உத்ராபதியைப் பார்க்க அனுமதி கிடைக்க,

கை விரல்களைப் பின்னிய படி முகத்தில் பதட்டத்துடனும் அதை விடக் கண்ணில் அலைபுறுதலுடன் தன் முன் வந்து நின்ற போதும் நிமிர்வாகப் பேசிய அவளின் முகம் சிறிதே சிறிது அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்த, பத்து வயது வித்தியாசத்துக்காகத் தன் எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டவனோ பின் அவள் வீட்டாரையும் அவள் தன் தம்பி மேல் வைத்திருக்கும் பாசத்தையும் பார்த்த பிறகு அந்த வித்தியாசத்தையும் தூக்கி எறிந்து விட்டு தாயிடம் சொல்லி ஈஸ்வரியைக் கைப்பிடித்தான் உத்ராபதி.

அங்கு போய் இவர்கள் இறங்க, அனைவரையும் மேளதாளம் முழங்க ஆரவாரத்துடன் வரவேற்றார்கள் அந்த ஊர் மக்கள். பத்து நாட்கள் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் முதல் நான்கு நாட்கள் கோவில் விஷயத்திலே சென்று விட, ஐந்தாம் நாள் உத்ராபதியைத் தேடி அவன் அறைக்கு வந்த யாழினி அங்கு அவன் சிறு பாத்திரத்தில் இருந்த மனைவியின் பாதத்தை எடுத்துத் தன் மடி மீது வைத்து ஈரம் போக துடைத்தவன் பின் காலில் உள்ள வீக்கம் குறைந்ததும் தளரும் தசைகளைப் போக்க அவன் தன் மனைவியின் காலுக்குக் களிம்பு பூசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், குறும்பு கூத்தாட

“ஐயோ! தப்பான நேரத்தில் வந்துட்டேனா?” என்ற படி அவள் கைகளால் தன் கண்களை மூடிக் கொள்ளவும்

“தப்பு தான்! எங்களை டிஸ்டர்ப் பண்ணியது…” என்று மனைவியைப் பார்த்துக் கண்சிமிட்டியவாறு சொன்னவன் “எங்களுக்கான சொர்கமே இது தான். அது நாளைக்கு என் மாப்பிள்ளை உனக்கு செய்யும் போது தெரியும் யாழினி!” என்று இவன் உணர்ந்து சொல்லவும்

‘யாரு? அந்த கட்டதுரையா? க்கும்…’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டவள் தான் வந்த காரணத்தை உணர்ந்து “அண்ணா! நாங்க ஊரைச் சுற்றிப் பார்க்கணும். அதற்கு ஏற்பாடு செய்றீங்களாண்ணா?”

“கோவில் வேலையில் அதை மறந்திட்டேன். இப்போவே அதற்கு ஏற்பாடு செய்றேன் யாழினி!” என்றவன் அதற்கான வேலையைப் பார்க்க

தங்கள் அறைக்கு வந்தவள் ஜன்னலில் நின்று வெளிச்சாலையை வெறிக்க, அங்கு ஒரு சிறுவன் சைக்கிளை மிதிக்க முடியாமல் குரங்கு பெடல் போட்ட படி எட்டி எட்டிப் பழகவும் அதைக் கண்கொட்டாமல் பார்த்தவளின் எண்ணங்கள் கழுகின் இறக்கை போல் பின்னோக்கிப் பறந்தன… அன்று…

“டேய்... டேய்... ப்ளீஸ் டா! எனக்கும் ஒரே ஒரு ரவுண்டு டா...” என்று எட்டு வயசு யாழினி அங்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த பத்து வயது நந்துவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க

“போடி குந்தாணி! உன் கிட்ட இல்லாத சைக்கிளா? நான் தரமாட்டேன்” என்று அவளையே சுற்றிச் சுற்றி ரவுண்டு அடித்த படி பிகு பண்ண

“அதெல்லாம் என்னால் ஓட்ட முடியும் டா. இதில் தானே நான் மங்கி பெடல் போட முடியும்?” என்று அவள் பாயிண்ட்டுக்கு வர

“அதெல்லாம் முடியாது போடி…”

“ப்ளீஸ்! ப்ளீஸ் டா...” இவள் மறுபடியும் கெஞ்ச

சைக்கிளை அவள் முன் நிறுத்தி படியே ஸ்டைலாக ஒரு காலை ஊன்றி நின்றவன், “அப்போ இனி என்ன டேய் சொல்லிக் கூப்பிடக் கூடாது” என்று பேரம் பேச,

உடனே குதூகலத்துடன் “ம்ம்ம்...” என்றவள் “அப்போ, என்னனு கூப்பிட?’

“அதுவா?...” அவன் மேலே பார்த்த படி தாடையில் விரல் தட்டி யோசிக்கவும் உடனே யாழனி

“பெயரைச் சொல்லிக் கூப்பிடவாடா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ அண்ணானே கூப்பிடு” என்று வழி சொல்ல

“ஐய! அண்ணனா?” என்று முகம் சுளித்தவள் “அதெல்லாம் என் மேலே பாசமா இருக்கறவங்களைத் தான் அப்படி கூப்பிட முடியும்” என்று இவள் முறுக்கிக்கொள்ளவும்

“அப்படினா இனி நீ என்னை அண்ணா தான் டி கூப்பிடணும். அப்போ தான் உனக்கு சைக்கிள் தருவேன்” என்று இவன் உறுதியாய் இருக்க,

சைக்கிளுக்கு ஆசைப் பட்டு இவளும் அப்படி அழைக்க, இதைப் பார்த்த அவளின் தந்தையான பாரிவேந்தன், இரண்டு குடும்பங்களுக்குமுள்ள உறவுமுறையை விளக்கிச் சொல்லி நந்துவை பாவா என்று அழைக்க வைத்தார்.

தன் சிந்தனையிலிருந்து வெளி வந்தவளுக்கு மீண்டும் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வர, கணவனுக்குத் தெரியாமல் அதற்கு வழி செய்யச் சொன்னவள், சந்தியா விஜி சௌமியா ஏன் விஜயனைக் கூட விட்டு வைக்காமல் கூட்டு சேர்த்துக் கொண்டு சைக்கிளில் ஊர் சுற்றி வந்தாள்.

எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது “அண்ணி எல்லா விஷயத்திலும் என்னமா கலக்குறீங்க! கிராமத்துப் பெண்ணாவே மாறிட்டிங்க. நாளைக்கு உறியடி விழா இருக்காம். அதிலும் கலந்து வெற்றிவாகை சூடி வாங்க அண்ணி!” என்று யாழினியைப் பார்த்து விஜயன் சொல்ல, கூடத்தில் இருந்தவர்கள் அமைதியாக இருந்தாலும், “யாரு? இந்த குள்ளகத்திரிக்காவா?!” என்று நந்து வம்பிழுக்க..

“ஆமா… இவரு பெரிய ஈபில் டவர்! என்னைச் சொல்ல வந்துட்டாங்க. நான் கலந்துகிட்டு ஜெயித்தா இந்த குள்ளக் கத்திரிக்காய்க்கு என்ன தருவீங்க என் கணவரே?” என்று இவளும் வம்பிழுக்க, இது தான் சாக்கு என்று அங்கிருந்த ஆண்கள் பட்டாளம் நந்து பக்கமும் பெண்கள் பட்டாளம் யாழினி பக்கமும் சேர்ந்து கொண்டு அவர்கள் இருவரையும் தூண்டி விட..

அது இது என எல்லோரும் பேச, கடைசியாக யாழினி “சரி சரி... கலந்துக்கிறேன். அப்படி நான் ஜெயித்து வந்தா உங்க தலைவர் நான் சொல்லுறதைக் கேட்கணும்” என்று பந்தயம் கட்ட, நந்துவுக்கு முன்பே அங்கிருந்த ஆண்கள் அனைவரும் “ஓ... ஓஒ...” என்று தங்கள் சம்மதத்தைத் தந்தார்கள். இரவு கணவனின் கோபத்திற்குப் பயந்து இவள் விஜி சௌமியாவுடன் தூங்கப் போனாள்.

விடிந்ததும் அவனுக்குப் போக்குக் காட்டியபடியே இருந்தவள், அனைவருடனும் கிளம்பி திருவிழாவுக்குச் சென்று அங்கே சொன்னது போலவே உறி அடிப்பதில் கலந்து கொள்ளவும், ஏதோ விளையாடுகிறாள் என்று முதலில் நினைத்தவன் மனைவி உண்மையாகவே வரவும், கொஞ்சம் ஜெர்க் ஆனவன் பின் அவள் ஜெயிக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் நிற்க,

கண்கள் கட்டப்பட சுற்றி இருப்பவர்களின் ஆரவாரத்தில் இரண்டு முறை கழி சற்றுத் தடுமாறி மண்ணில் தட்டி நிற்க அதைப் பார்த்து அனைவரும் ஓ.... என்று சோக கீதம் வாசிக்கவும் உடனே இவள் சற்றே முன்னேறி கொஞ்சம் எம்பி கையில் உள்ள கழியைப் பின்புறம் வளைத்துப் பின் முன்புறம் அடிப்பது போல் இவள் இரண்டு முறை போக்குக் கட்டியவள் எல்லோரும் கண் இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஓங்கி ஒரு அடி அடிக்கவும் பட்டென உடைந்தது தாழி. அதிலிருந்த பூக்ககள் எல்லாம் அவள் மேல் பூமாரிப் பொழிய, அவளோ வெற்றிக் களிப்பில் கண் கட்டை அவிழ்த்தபடியே கணவனைத் தேட…

அவள் மணாளனோ ஏதோ கதைகளில் வரும் வான் தேவதைகள் எல்லோரும் தன் ராஜகுமாரிக்கு சுற்றி நின்று பூ மழை பொழிவது போல் கற்பனையில் மிதந்த படி அவளையே பார்க்கவும்..

எப்போதும் அவனுக்குப் பிடிக்காத பாகற்காயைப் பார்ப்பது போல் தன்னைப் பார்க்கும் கணவனின் பார்வையில் சற்றே மாறுதலை உணரவும், ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்று மனைவி கேட்கவும் தான் தன் நிலைக்கு வந்தான் நந்தன். வீட்டுக்கு வந்தும் அவரவர்கள் தங்களின் வேலையைப் பார்த்தார்களே தவிர யாரும் பந்தயத்தில் ஜெயித்ததைப் பற்றி பேசவில்லை என்றதும் நந்தனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் அந்த நிம்மதிக்கு வேட்டு வைத்தார் உத்ராபதியின் தாயார் நாயகி. எல்லோரும் இரவு உணவைச் சாப்பிடும்போது “என்ன யாழினி, நீ சொன்ன மாதிரி ஜெயிச்சிட்ட! அப்போ நந்து கிட்ட என்ன பரிசு கேட்கப் போற?” என்று அவர் இலகுவாக ஆரம்பிக்கவும், அதுவரை நந்தனுக்காக அமைதியாக இருந்த சின்னவர்கள் எல்லாம் ஆமாம் என்ன ஏது என்று பரபரக்க

“அது வேற ஒண்ணும் பெருசா இல்லைமா” என்று கன்னம் குழிய சிரித்தவள் “நாளைய தினம் விடிந்ததிலிருந்து இரவு வரை நான் என்னவெல்லாம் சாப்பிட நினைக்கிறனோ, அதாவது குடிக்கிற தண்ணீரில் இருந்து சாப்பாடு வரை என் பாவாவே அவர் கையால ஊட்டி விடணும்” என்று அவள் வெட்கத்தில் தலை குனிந்த படி மெல்லிய குரலில் சொல்ல அதைக் கேட்டு நாயகி அம்மா முதற்கொண்டு அனைவரும் ஓ.... என்று ஆர்ப்பரிக்க நந்தனுக்குத் தான் புரை ஏறியது.

எல்லோரும் ஆர்ப்பாட்டத்துடன் குதூகளிக்க, உடன் பட வேண்டியவனோ மனைவியின் வரவுக்காக கூண்டுப் புலியின் கோபத்துடன் தங்களின் அறையில் சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் நேற்றைய தினம் போல் இன்றும் டிமிக்கி கொடுத்தாள் அவனின் குந்தாணி.

காலையில் எழுந்ததிலிருந்து எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க யாழினியோ பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் அறையிலேயே உட்கார்ந்திருந்தாள். இதைக் கவனித்த விஜி ஈஸ்வரியிடம் விஷயத்தைச் சொல்ல

காலை உணவுக்காக எல்லோரும் டேபிளில் அமர்ந்திருக்க யாழினி இல்லாததால் அவளை அழைத்து வந்த ஈஸ்வரி தன் தம்பி மேல் சிறு கோபம் மேலிட “அப்படி என்ன டா உனக்கு வீம்பு? கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சாதாரண விஷயம். இதுக்குப் போய் ஏன் அலட்டிக்கிற? வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தோஷமான நிகழ்வுகளையும் அனுபவித்து வாழணும் நந்து. நீ எதுக்கு இவ்வளவு தயங்குற?” என்று படபடக்கவும்

“அக்கா! வீம்பு பிடிக்கறது நானா அவளா? எதுவும் தெரியாம என்னைத் திட்டுறதும் இல்லாம நீ ஏன் க்கா டென்ஷன் ஆகிற?” என்று அப்போதும் தான் ஊட்டி விடத் தயாராக இல்லை என்பது போல் பேச

‘அப்போ நான் பட்டினியே இருந்தாலும் இவருக்கு ஒன்றும் இல்லை தானே?’ என்ற எண்ணம் யாழினிக்கு வரவும் அவளும் தன் வீம்பை விடவில்லை.

இதில் ஈஸ்வரிக்கு மேலும் கோபம் ஏற, “யாழினி சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன்” என்று அமர்ந்து விட

ஒருவர் நமக்கு பிடித்துப் போய் மனதிற்கு நெருக்கமானவர்களாக ஆகி விட்டால் அவர்களுக்காக காலைக் கூட பிடித்து விடுவோம். அதே நேரம் அவர்களைத் தூர வைத்துப் பார்த்தோம் என்றால் நம் கையால் பச்சைத்தண்ணீர் கூட தரமாட்டோம். இது மனித இயல்பு! அந்த நிலையில் தான் இருந்தான் நந்து. அதுவுமில்லாமல் அவனுக்கு இப்படி பொதுவில் செய்ய வராது அப்படி செய்யப் பிடிக்கவும் பிடிக்காது. எனவே சங்கடமான நிலையில் அக்காவைப் பார்க்க

அதைப் பார்த்த உத்ராபதி “டேய் மாப்பிள்ளை! உனக்கு ஊட்டத் தெரியாதா? பார், நான் எப்படி ஊட்டி விடுறேனு” என்றவன் கொஞ்சம் உணவை எடுத்து மனைவிக்கு ஊட்டி விட, அதே மாதிரி சொல்லிக் கொண்டு கிருஷ்ணாவும் தன் மனைவிக்கு ஊட்ட, அடுத்து விஜி “ஊட்டி றதுனா இப்படி தான் என்று சொன்ன படி” சிந்துஜாவுக்கு ஊட்ட, அவளைப் பார்த்து விஜயன் சபரிக்கு ஊட்ட “ஓஹ்... அப்போ எனக்கு மட்டும் ஊட்டத் தெரியாதா?” என்ன என்ற நாயகி அம்மா அங்கு அமர்ந்திருந்த சுந்தரியின் மகள் சௌமியாவுக்கு ஊட்டி விட, இதையெல்லாம் பார்த்த கடைக்குட்டிகள் இரண்டும் “ஐயோ! நந்துப்பா இதோ இப்படித் தான் ஊட்டணும்” என்று சொல்லிய படி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொள்ள

இதையெல்லாம் பார்த்த யாழினிக்குக் கண்ணே கலங்கி விட்டது. ‘யாரும் இது தேவையா என முகம் சுளிக்கவில்லை, நீ சாப்பிடாமல் போ என்று ஒதுங்கவும் இல்லை. ஆனால் ஒருவரின் மேல் உள்ள அன்பை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்கள்?’ என்ற எண்ணத்தில் அவளிருக்க, இவைகளைப் பார்த்த நந்தா எந்த தயக்கமும் இல்லாமல் கூடவே முழுமனசும் இல்லாமல் தான் ஊட்டி விட்டான் மனைவிக்கு.

கணவன் ஊட்ட ஆரம்பித்ததும் முகத்தை விகாசித்து உணவை வாங்கியவளின் சந்தோஷமான மனநிலை எல்லாம் மதியம் கையில் மருதாணி வைத்து விடச் சொல்லி கணவன் முன் நிற்கும் வரை தான் இருந்தது.

மதியம் உணவுக்குப் பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த மருதாணியை அவன் முன் நீட்டித் தன் கைகளுக்கு வைக்கச் சொல்ல, அவள் விழிகளைப் பார்த்த படி வாங்கியவன் “இதோ வரேன்” என்று சொல்லிச் சென்றவன், சிறிது நேரம் கழித்து வந்து வைத்து விட்டான். அது முடிந்ததும் ஒரு தட்டில் ஜீரா வழிய ஜிலேபியை அவள் முன் நீட்ட, அவள் அதை விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே

“உனக்கு ஜிலேபினா பிடிக்குமே! அதான் பேபி நான் எடுத்து வந்தேன்” என்றவன் “சோ.... உன் பாவா ஊட்டி விடவா?” என்று அவன் கேட்ட குரலில் ஜிலேபியில் உள்ள ஜீராவை விடத் தன் கணவன் குரலில் தான் ஜீரா அதிகம் இருப்பதாக உணர்ந்தவள், ஆசையுடனே வாய் திறக்கவிருந்த நேரம் அவள் கண் இமைகள் சுருங்கியது. அதைப் பொருட்படுத்தாமல் சந்தோஷத்துடனே கணவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்து அதிலுள்ள இனிப்பின் சுவையை உணரும் முன்னே உதடு வீங்கி வயிற்றெரிச்சலால் அடுத்த வினாடி ஒரு வித அசகவுரியத்துடன் லேசாகத் துடித்தபடி தரையில் சரிந்து அமர்ந்தாள் அவனவள்.

மனைவியின் நிலையைப் பார்த்துப் பதறிப் போய் நந்தா கையிலிருந்த தட்டைப் போட்டு விட்டு மனைவியை நெருங்க, அதற்கு முன்பே சந்தியா அவளைத் தன் மடி தாங்கினாள்.

கீழே விழுந்து அரண்டு புரண்டவளை என்ன ஏது என்று தெரியாமல் கையிலிருந்த மருதாணியை அலம்பி விட்டு “என்னம்மா ஆச்சு?” என்று கேட்க, அவளால் பதில் சொல்ல முடியாத நிலை. கண்ணிலும் மூக்கிலும் நீர் வழிய அவளின் உதடும் நாக்கும் சிவந்து தடித்துப் போய்விட, வீட்டிலுள்ள அனைவரும் பயந்தே விட்டார்கள்.

பிறகு உத்ராபதி வந்து யாழினியின் உடல்நிலையைப் பரிசோதித்து “விஷப்பூச்சி கடித்து அலர்ஜி ஆகிடுச்சு மாப்பிள்ளை! ஊசி போட்டிருக்கேன். ரெஸ்ட் எடுக்கட்டும், கொஞ்ச நேரத்தில் சரியாகிடும்” என்று சொல்லிய படி செல்லவும்,

மொத்த குடும்பமும் சற்று நிம்மதியுடன் விலக, மனைவி கண் விழிக்கும் வரை அவளின் அருகே ஒரு வித குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான் நந்தன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN