என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் - 11

யாழினி கண் விழித்ததும் அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் இவன் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்ப, எழுந்து அமர்ந்தவள் சுற்றி யாரும் இல்லை என்பதை அறிந்து அங்கு அறையிலிருந்த தேன் பாட்டிலை எடுத்து வந்து கணவன் கையில் கொடுத்தவள், “இதனால் ஏற்படும் வலி வேதனை எல்லாம் ஒரு மணி நேரம் தான் பாவா! பிறகு சரியாகிடும். இதை விட வாழ்நாள் முழுக்க வலி வேதனை இருக்கிற மாதிரி எனக்கு ஏதாவது கொடுங்க பாவா!” என்று உதடு துடிக்கச் சொல்லவும், கண்களை இறுக்க மூடித் திறந்தவன் “ப்ச்...” என்ற சொல்லுடன் கையிலிருந்த பாட்டிலைக் கட்டிலின் மீது வீசி விட்டு வெளியே சென்றவன். பிறகு மனைவியின் முகத்தைப் பார்க்கவும் இயலவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்கவும் அவன் தயாராக இல்லை.

இதெல்லாம் தன் கோபத்தினால் தானே என்று அவன் நினைக்கும் போதே அன்று மதியம் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவன் மனக்கண் முன்னே ஓடியது. மதியம் உணவுக்குப் பிறகு நந்து தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்க, இவன் தூங்கி விட்டான் என்ற எண்ணத்தில் பெண்கள் பட்டாளம் எல்லாம் ஒரு பக்கத்தில் அரட்டைக் கச்சேரியில் இருக்க அப்போது அங்கு வந்த விஜயன் “சின்ன அண்ணி! பல தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து உங்களை ஜெயிக்க வைத்து இருக்கேன். எனக்கு அண்ணன் கிட்ட சொல்லி பைக் வாங்கித் தருவீங்க தானே?” என்று கேட்க

“ஏய்... இத்துணூண்டு ப்ளூடூத் காதில் வைக்கச் சொல்லி அதன் வழிய ஜெயிக்க வைத்ததற்கு இவருக்கு அவ்வளவு பெரிய பைக் வேணும்மாமா?” என்று ஆளாளுக்கு அவனை வார, அப்போது தான் மனைவி பந்தயத்தில் ஜெயித்த பித்தலாட்ட வரலாறு தெரியவும் அதற்கு அவள் மட்டும் தான் காரணம் என்பது போல் எண்ணியவனுக்கு அவளைப் பழி வாங்க என்னென்னமோ யோசித்தவனுக்கு கடைசியாக அவளுக்குத் தேனைத் தொட்டாலோ சாப்பிட்டாலோ அந்த தேனீக்கள் கொட்டுவது போல் துடித்துப் போவாள் என்பதை அறிந்தவன் கோபத்தால் சிறிதும் யோசிக்காமல் அதை அவன் கையால் கொடுத்து துடிக்க வைத்தவனால் அவள் துடிப்பைத்தான் பார்க்க முடியவில்லை. அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் மனைவியிடம் ஒதுங்கியே இருக்க அப்படியே திருவிழா முடிந்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நந்துவின் வீட்டுக்கு சற்றே வயதான தம்பதிகள் வரவும் “வாங்க! வாங்க! வெளிநாட்டிலிருந்து எப்போ வந்தீங்க?” என வரவேற்றது கிருஷ்ணா தான். பின் தோட்டத்திலிருந்து நந்துவும் வந்து விட, “எப்படி தம்பி இருக்கீங்க?” என அவர்கள் பேசிய வார்த்தைகள் முழுவதும் நந்துவிடம் தான் இருந்தது.

நந்துவுக்குத் திருமணம் ஆனது தெரிந்ததும் சந்தோஷப்பட்டவர்கள், உடனே வீடு தேடி வாழ்த்த வந்தனர். அந்தப் பெண்மணி யாழினியைக் கூப்பிட்டு பக்கத்தில் அமர வைத்து அவள் கையைத் தன் கைக்குள் அடக்கியவர், “அவளிருந்திருந்தால் இந்நேரம் அவளும் குடும்பமா இருந்திருப்பா!” என்ற அவரின் குரல் நெகிழ்ந்து இருந்தது. சற்று நேரம் அங்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட, வந்த பெரியவர் தான் தன்னைத் தேற்றிக் கொண்டு ”வீட்டுக்கு வந்திருந்தீங்கனு பக்கத்தில் இருக்கிறவங்க சொன்னாங்க. அதான் பார்க்க வந்தோம்” என்றவர் பிறகு மற்ற விஷயங்களைப் பேசி விட்டு கிளம்பினார்கள்.

பின் தங்கள் அறைக்கு வந்த மனைவியிடம் “வந்தவங்க…” என்று நந்தா ஆரம்பிக்கவும் “தெரியும்” என்று இவள் முந்திக்கொள்ள “அவங்க பொண்ணு...” என்று மறுபடியும் இவன் ஆரம்பிக்க, அதற்கும் “தெரியும்” என்ற பதிலை அவள் தர, தன் கண்களை ஒரு வினாடி மூடியவன் “அப்போது தான் எனக்கு அந்த விபத்து நடந்தது...” என்று சொல்ல கணவன் முகத்தைப் பார்த்துவிட்டு அவன் கையை ஆறுதலாகப் பற்றினாள் யாழினி. ஊரிலிருந்து வந்ததிலிருந்தே இருவரும் முகம் கொடுத்துக் கூடப் பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவளின் இந்த ஆறுதல் அவனுள் இதம் தரத் தான் செய்ததது. அப்படியே அவன் எண்ணங்களும் பின் நோக்கிப் பயணித்தது

இரண்டு வருடங்களுக்கு முன்பு…
காதல் மேல் எந்த வித நாட்டமும் இல்லாமல் எந்த வீண் வம்புகளில் ஈடுபடாமல் உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற சுத்தமான அக்மார்க் மிடில் கிளாஸ் பையன் தான் நம்முடைய நந்தா! தலை சிறந்த ஹாக்கி பிளேயர். உலகளவில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருந்தாலும் கூழைக்கும்பிடோ ஜால்ராவோ அடித்து முன்னேற விரும்பாமல் தன் திறமையை மட்டும் நம்புகிறவன். அதனால் சம்பாதித்த எதிரிகளும் விமர்சனங்களும் அதிகம். இழந்த வெற்றிகளோ பலப்பல..

எப்போதும் வார இறுதி நாட்களில் நந்து ஒரு கிறிஸ்துவ ஹோமில் உள்ள பிள்ளைகளுக்கு ஹாக்கி கற்றுக் கொடுப்பான். அதன் தலைமை பொறுப்பாளராக உள்ள மதர் அவர்கள், அவனுக்கு நல்ல பழக்கமானவர். அங்கு மொத்தம் எண்பது பிள்ளைகள் இருந்தனர். அரசாங்கத்தின் எந்த ஒரு உதவியும் இல்லாமல் சில பெரிய மனிதர்களின் உதவிகளும், நல்லுள்ளமும் தான் அந்த ஹோம் செயல்படக் காரணமாக உள்ளது. அங்குள்ள பிள்ளைகளுக்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், அவர்களின் ஆசைப்படி புது உடைக்கு வழியில்லாமல் போனது. மற்றவர்கள் பயன்படுத்திய பழைய ஆடையே அவர்கள் மானம் காத்தது. அது தான் நந்துவை மிகவும் சங்கடப்படுத்தியது. புது ஆடைக்கு அந்த பிள்ளைகள் ஏங்குவது அவனுக்கு நன்றாகவே தெரிந்தும் இருந்தது. அதற்கு அவன் என்ன தான் நண்பர்களுடன் சேர்ந்து வழிவகை செய்ய நினைத்தாலும் சிறியதும் பெரியதுமாய் வயது வித்தியாசத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனாலேயே பிள்ளைகளின் கனவையையும் சின்னச்சின்ன ஆசைகளையும் பல்வேறு திறமைகளையும் நனவாக்க தன் சம்பளத்தில் சிறுகச்சிறுக சேமித்து வருகிறான் நந்தா.

கம்பெனியின் வேலைப் பளு காரணமாக இவனால் ஒரு வாரம் பயிற்சிக்குப் போக முடியவில்லை. அங்கு குழந்தைகளுக்கு நம்மால் பயிற்சி அளிக்கமுடியவில்லை என்று சிறுசுணக்கத்துடனே இருந்தான். ஆனாலும் அவ்வப்போது போன் மூலம் குழந்தைகள் நலனையும் அங்கே நடப்பவற்றைக் கேட்டறிந்தும் வந்தான்.

அப்போது அங்கிருக்கும் உதவியாளர் “சார்! உங்களை மாதிரி நல்லுள்ளம் கொண்ட ஒருமேடம் ஒவ்வொரு குழந்தைக்கும் என்னென்ன தேவையோ அதைக் கேட்டறிந்து அவங்களுடைய சின்னச்சின்ன சந்தோஷங்களைப் பூர்த்தி செய்திட்டு இருக்காங்க சார்” என்று கூறி நந்துவின் வருத்தத்தைப் போக்கினார். ‘யாரா இருக்கும்?’ என்ற யோசனையுடனே “ஹோமில் மதர் என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க. ஆபீஸில் முக்கியமான மீட்டிங்ல இருந்ததால் பேசமுடியலை. இப்ப இருக்காங்களா?” என்று கேட்க “இல்லை சார்! மதர் வெளிநாடு போய்ட்டாங்க” எனக் கூறி போனை வைத்தார் அவர்.

இப்படியே ஒருவாரமும் நெட்டி முறித்துத் தள்ளிவன் மறுவாரம் ஹோமிற்குச் செல்ல அங்கிருக்கும் பிள்ளைகள் அனைவரும் புது உடையில் முகம் கொள்ளா புன்னகையுடன் கை நிறைய பரிசுப்பொருளுடனும் அவனிடம் தங்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டர்கள். கூடவே அவர்களை அடிக்கடி மியூசியம், சயின்ஸ் எக்ஸிபிஷன், லைப்ரரி என்று பல இடங்களுக்கு அழைத்துப் போனதாகவும் இந்த வாரத்தில் ஒரு நாள் அனைவரும் தீம் பார்க் போகப் போவதாகச் சொல்லியவர்கள் இதற்கெல்லாம் காரணமாக இருந்த தங்கள் புது அக்காவைப் புகழ்ந்து தள்ளவும் தன்னைப் போல் சிந்திக்கும் அந்த முகம் தெரியாதவர் மேல் நந்துவின் மனதில் மதிப்பு கூடியது.

அடுத்த வாரமே பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி நடைபெற, அதில் அந்த ஹோமில் தான் பயிற்சி கொடுத்த பிள்ளைகளும் கலந்துகொண்டனர். இதற்கு முன்னரே இதுபோன்ற ஒரு போட்டியில் கலந்து கொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறியவர்கள் இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் பிள்ளைகள் நன்றாகவே விளையாடினர்.

ஆனால் இறுதிச்சுற்று வரை சென்று நூலிழையில் கோப்பையைத் தவறவிட்டனர். இதில் நந்துவே அதிகம் கவலையுற்றான். ‘ஐயோ! போனமுறை முதல்சுற்றிலேயே வெளியேறியதற்கு கண்ணன் ரொம்ப தேம்பித்தேம்பி அழுதானே! இந்தமுறை இறுதிச்சுற்றில் கோப்பையை நழுவவிட்டதற்கு எப்படி கலங்குவானோ? நான் அவனை எப்படி தேற்றுவேன்?!’ என மனதில் கலங்கியபடி அணித்தலைவனை “கண்ணா!... நீ.. கவ… “அவன் சொல்லி முடிப்பதற்குள்

“அண்ணா! நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்கண்ணா.. இந்த தடவை செம்ம டஃப் கொடுத்திருக்கோம் பார்த்தீங்க இல்ல? நெக்ஸ்ட் டைம் கப் நமக்கு தான்! பார்க்கத்தானே போறீங்க…” என சகஜமாகப் பேச, அதில் வியந்த நந்நனோ

“டேய்.. நீயாடா இப்படி தெளிவா பேசற?! உன்னை எப்படி சமாதானப்படுத்தறதுனு நான் யோசித்தா, நீ என்னை சமாதானப்படுத்துற! எப்படிடா இந்த மாற்றம்?”
“அண்ணா! இப்ப புதுசா வந்திருக்கிற டிராயிங் சொல்லிக் கொடுக்கிற அக்கா தான் எங்களுக்கு யோகாவும் தோல்வியை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறாங்க. இதனால் தான் எங்களால் சுலபமா இலக்கை நோக்கி விளையாட முடிஞ்சது. மனசளவில் பலவீனமா இருந்த எங்களை இப்படி பலசாலியா மாத்தினதே அவங்க தான் ண்ணா.. எங்களுக்கு புதுசா ஸ்போர்ட்ஸ் எக்யூப்மெண்ட்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க” என்று சொல்லி புளகாங்கிதம் அடையவும்

“சரி சரி.. போதும்டா உங்க அக்கா புராணம்! இப்பவே எல்லாம் சொல்லிடாத. .நாளைக்கு சொல்றதுக்கு கொஞ்சம் மிச்சம் வைடா” என்றவன் கூடவே

‘ஓ.. அவங்க தான் இதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்களா? நான் வேற யாரோ பழைய ஸ்பான்ஸர் தான்னு இல்லை நினைத்தேன்? இவங்க நான் நினைத்துக்கு மேலேயே செய்றாங்களே! இங்கே தான் அவங்களும் வந்து கிளாஸ் எடுக்கறாங்களா.. ஆனால் நான் ஒரு தடவை கூட பார்க்க முடியவில்லையே! கண்டிப்பா அவங்களை நேரில் பார்த்து பாராட்டியே ஆகணும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

இதற்கிடையில் மதர் சொல்ல வந்த விஷயம் என்ன என்பது வேறு ஒருவர் மூலமாகத் தெரிய வந்தது. அது அவன் முகம் காண நினைத்த அவன் மனதில் நன்மதிப்பைப் பெற்ற டிராயிங் டீச்சர் எடுத்து வரும் வகுப்புகான நேரத்தை இவனுக்கான நேரத்திற்கு மாற்ற வேண்டும் என்பதால் இவனிடம் பேச வேண்டும் என்று அவள் சொல்லியிருக்க, அவள் முகம் பார்க்கும் உந்துதலில் எந்த யோசனையும் இல்லாமல் “எனக்கு எந்த நேரம் என்றாலும் ஓகேனு சொல்லுங்க” என்றான் நந்து.

“இல்லை சார்! அவங்க உங்க கிட்டதான் பேசணுமாம்”

“சரி… அடுத்த பயிற்சியின் போது அவங்களைச் சந்திக்கிறேன்னு” சொல்லுங்க என்று நகர நினைக்க

“இல்லை சார்! அவங்க இதைக் கொடுத்து உங்களைப் பேசச் சொன்னாங்க” என்று ஒரு தாளை கொடுக்க

அதை வாங்கிப் பார்த்தவனுக்கு முகத்தில் எரிச்சல் தான் மண்டியது. அதில் இருந்தது என்னமோ அனாமிகா ௦௦7 என்ற ஒரு பேஸ்புக் ஐடி. அதே எரிச்சலுடன் “என்ன இது?” என்று இவன் கேட்க

“அவங்க இதில் தான் உங்களைத் தொடர்பு செய்யச் சொன்னங்க” என்று சொல்லி விட்டு அவர் விலகி விட

‘ஏதோ என்னை மாதிரி சிந்திக்கிறாங்களேனு நினைத்துப் பார்க்க ஆசைப் பட்டா இவங்க ரொம்ப ஓவராதான் போறாங்க. எனக்கு ஏற்கனவே இந்த சாட்டிங், டேட்டிங் எல்லாம் பிடிக்காத விஷயம். இவங்க என்னடானா மெசஞ்ஜரில் பேசச் சொல்றாங்க… அதெல்லாம் என்னால முடியாது. நேரில் வந்து பேசட்டும், இல்லைனா தேவையில்லை’ என்ற கடுப்புடன் கையிலிருந்த தாளைத் தூக்கியெறிந்தான் நந்தா. அதன் பிறகு அதை மறந்தும் போனான் அவன்.

ஆனால் அந்த அனாமிகாவோ இவனை விடுவதாகயில்லை. இவன் ஐடியைத் தெரிந்து கொண்டு நான்கே நாட்களில் அதன் மூலமாக வந்து பேச, முதலில் அவளுடமிருந்து வந்த ஹாய்... க்கு எல்லாம் பதில் சொல்லாமல் இருந்தவன் ஒரு நாள் அவள் ‘ப்ளீஸ் கொஞ்சம் எனக்கு டைம் மாற்றித் தர முடியுமா?’ என்று கேட்டிருக்க, அன்று போல் இன்றும் கடுப்பானவன் ‘முகம் காட்டாமல் குரலைக் கூடத் தெரியப்படுத்த விரும்பாத இவள் பெரிய உலக அழகியா?’ என்று ஆண்களுக்கே உரிய எண்ணம் வர ‘ஹோமில் உங்கள் வகுப்பு முடிந்ததும் பேசுங்க அப்போ நேரில் உங்களுக்குப் பதில் சொல்கிறேன்’ என்று இவன் பதில் தர, அவளிடமிருந்து பதில் இல்லை.

ஆனால் மறுநாளே ஹோமுக்குப் பதில் பெசன்ட் நகரில் ஓரிடத்தில் இத்தனை மணிக்கு மஞ்சள் சுடிதாரில் ஆரம்பித்து இன்னும் சில அடையாளைகளைச் சொல்லிச் சந்திக்கலாம் என்று சொல்லவும், ‘ரொம்ப திமிர் பிடித்தவ போல!’ என்று நினைத்தாலும் அவளைச் சந்திப்பதற்குச் சம்மதம் சொன்னான் நந்தா.

அன்றைய நாளும் வர, சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்குச் சென்றவன் சுற்றும் முற்றும் தேட, எதிர்திசையில் இவனைப் பார்த்து அங்கேயே இருக்குமாறும் தான் வருவதாகவும் சைகையில் சொல்லிய மஞ்சள் சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி தன் வண்டியை நிறுத்தி விட்டு சாலையைக் கடந்து வர, அச்சமயம் தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்க முடியாதபடி முழுவேகத்துடன் வரவும், இதைக் கவனித்த நந்து ‘திரும்பிப்போ திரும்பிப்போ’ என கத்தியபடியே அவளை நோக்கி ஓட, ஆனால் அந்தோ பரிதாபம்! அதற்குள் அந்த லாரி அவளை இடித்துக் கீழே தள்ளி அவள் தலை மீது ஏறி விட அந்த தலை உறுப்புகள் அப்படியே சிதறி தரையிலும் அவன் முகத்திலும் தன் கோரத்தைக் காட்ட, ஓடி வந்தவன் பதட்டத்தில் அங்கு நின்றிருந்த பைக் மீது மோதி நிலை தடுமாறி கீழே அடுக்கியிருந்த இரும்புக்கம்பிகள் மேல் மல்லாக்க விழவும் கூரிய கம்பி ஒன்று அவன் தலையை நன்றாகப் பதம்பார்த்தது. தலையில் அடிபட்டதும் இல்லாமல் இப்படி ஒரு அகோரத்தைப் பார்த்த படி கண்கள் செருகி ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றான் நந்தா.

டாக்டர் பரிசோதித்ததில் அவனுக்கு ஏதாவது ஒரு அதிர்ச்சி மிகுந்த சம்பவத்தை கண் எதிரில் பார்த்திருப்தால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு வேதியியல் மற்றும் இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகிறது அதனால் ஒட்டுமொத்த செயல் பாடும் பாதிப்படையும். நம்மை எதிலும் கவனம் செலுத்த விடாது எரிச்சல் அடைந்து பொறுமையின்றி நடந்து கொள்ள நேரிடலாம். நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தி அன்பான அணுகுமுறையாலும் கண்காணிப்பாலும் இதிலிருந்து வெளிக்கொண்டு வரலாம். இதனால் பயம் ஒன்றும் இல்லை தைரியமாக இருங்க என்று ஆலோசனை வழங்கி அவனின் சிகிச்சையை மேற்கொண்டார் அவர். பின்னர் இந்த மயக்கத்தில் இருந்து தெளிய அவனுக்கு முழுதாக ஒரு வாரம் ஆனது. தான் இருக்கும் இடத்தைப் பார்த்தவனுக்கு அப்போது தான் தன் கண் முன்னாள் நடந்த கோரவிபத்து நினைவுக்கு வரவும் திடகாத்திரமான அவனின் உடலும் ஒரு முறை அவனையும் மீறி தூக்கிவாரிப் போட்டது.

அதன் பிறகு போலீஸ் கேஸ் முடிந்து விபத்து நடந்த பெண்ணின் பெற்றோரிடம் தனக்கும் அவளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தி உடல் தேறி வீடு வந்து சேர ஒரு மாதம் ஆனது.

அதன் பிறகு அந்த விபத்துக்கான நினைவுகள் வரும் போதெல்லாம் தலை குத்துவது போல் வலியும் படபடப்புடன் வியர்த்து அன்றைய நிலையில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதே என்று எண்ணி ஒரு விதமன மன அழுத்தத்துடன் இறுகிப்போய் யாரிடமும் எதுவும் பேசாமல் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து விடுவான் நந்து.

இப்போது எழுபத்தைந்து சதவீதம் குணமானாலும் இன்று வரையில் சிகிச்சையில் தான் இருக்கிறான். அதற்காகவே திருமணம் வேண்டாம் என்று மறுத்தும் வந்தான். இந்த விபத்தால் இழந்தது அவனின் லட்சியத்தையும் கனவையும் தான்.

தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவனுக்கு மனைவியைப் பார்க்கும் போது ‘இவளுக்கு எவ்வளவு தூரத்திற்கு இதைப் பற்றி தெரியும்? அப்படியே தெரிந்தாலும் ஏன் எதைப் பற்றியும் கேட்கவில்லை?’ என்ற கேள்விகள் தான் எழுந்தது. ஆனாலும் அதைப் பற்றி மனைவியிடம் கேட்கவெல்லாம் தோன்றவில்லை. நாட்கள் அதன்படியே உருண்டோட திருமணத்திற்கு முன்பே போட்டிருந்த திட்டப் படி தன் மேற்படிப்பைத் தொடர்ந்தாள் யாழினி.

நந்துவும் உயர்பதவிக்காக எழுதின தேர்வில் தேர்வாகிட அவனைத் தவிர வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் யாழினி வந்த ராசி தான் என்று கொண்டாடினார்கள். இவனுடைய பதவி உயர்வால் தடை பட்டிருந்த புது வீட்டு வேலைகள் கூட நடந்தது.

யாழினியின் சின்ன அண்ணியான அருந்ததிக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சிக்கு கூட ஒரு நாத்தனாராய் கணவனுடன் மும்பை சென்று மனநிறைவுடன் அதற்கான சடங்குகளைச் செய்து வந்தாள் யாழினி.

ஈஸ்வரிக்கும் வளைகாப்பு முடிந்து பிரசவ நாளும் நெருங்கி விட அவளைப் போலவும் அவள் கணவனைப் போலவும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் அவள். புது வீட்டுக்குப் பிறகே மனைவியை அனுப்புவது என்ற முடிவால் தலைப்பிரசவத்தைத் தன் வீட்டிலேயே பார்த்துக் கொண்டான் உத்திராபதி. இப்படியே எல்லோர் வாழ்விலும் இனிமை மட்டும் தான் தவழ்ந்து சென்றது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் வரை…

எப்பொழுதுமே நம்மைச் சுற்றி நல்ல விஷயங்கள் நடந்தால் அதன் அதிர்வலைகள் நம்மைத் தாக்கும். அதைப் பாசிட்டிவ் எனர்ஜி என்பர். ஒருவர் தன் வாழ்வில் நடந்த நெகட்டிவான சம்பவத்தை அடிக்கடி மனதிற்குள்ளே போட்டு வைத்து நினைப்பதினால் அதிகமான மன அழுத்தம் ஏற்படும். அது மட்டுமில்லாமல் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தன்னுடனே புதைப்பதால் இறுதியில் இருதயம் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் இந்நோய் பாதிக்க ஆண்களுக்கே வாய்ப்பு அதிகம். பெண்களும் இத்தகைய மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுதுவிடுகிறார்கள் அதனால் அதிகம் பாதிப்பு இருக்காது.

இதற்குத் தீர்வு இப்படி பாதிக்கப் பட்டவர்கள் தங்களுடைய எண்ணங்களை வலுக்கட்டயமாக வேறு ஒரு விஷயத்தில் திசை திருப்ப வேண்டும். முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களுக்கு இதிலிருந்து வெளிவருவதற்குச் சுலபமாக பல வழிகள் இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினரோ தங்கள் மன அழுத்தத்தைப் போக்க யோகா, சிரிப்பு பயிற்சி மேற்கொள்கிறார்கள். இப்போதே இப்படி என்றால் இனி வரும் தலைமுறைகளின் நிலை???

நந்துவின் குடும்பத்தினரின் கள்ளம் கபடமற்ற அன்பாலும் அரவணைப்பாலும் இந்த ஏழு மாதத்தில் நந்துவின் மனநிலையோ எண்பத்தைந்து சதவீதம் முன்னேறி இருந்தது. எல்லாவற்றையும் விட தாயின் உடல் நிலையில் சிறு சிறு முன்னேற்றம் அடைந்து வரவும், அதுமட்டுமின்றி அவர்களின் சொந்த வீட்டின் கனவும் நல்லபடியாக முடிந்து இதோ இன்று கிரகப்பிரவேசம் என்று வந்துவிட இதுவே எல்லோருடைய மகிழ்ச்சிக்கும் அதிக காரணமாகவும் இருந்தது.

நாளைய தினம் கணபதி ஹோமத்துடன் வீடு கிரகப்பிரவேசத்துக்குத் தயாராக, கூடவே வீட்டில் உள்ளவர்களும் அதற்கான வேலையில் மும்முரமாய் சுழன்று கொண்டு அவரவர் வேலையில் முழ்கிக் கொண்டிருந்தார்கள். விழாவிற்கு முன் தினம் மாலை யாழினியும் மற்ற பெரியவர்களும் வீட்டிலிருக்க, விஜயனின் நண்பன் யாழினிக்குப் போன் செய்து “அண்ணி! உங்கிட்ட தனியா பேசணும். தெருமுனையில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு வாங்க விஜயனைப் பற்றிப் பேசணும்” என்று சொன்னவுடனே அங்கு சென்றவள் ”ஏன் என்னாச்சு? விஜயன் எங்கே?” என்று விசாரிக்க

நண்பர்களோ எப்படி சொல்லுவது என்று தெரியாமல் கலங்கியபடி “அண்ணி! ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துடிச்சு” என்று ஆரம்பித்துச் சொல்ல என்ன ஏதென்று இது எப்போது நடந்தது என்று முழுமையாக அனைத்து விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டவள் அவர்கள் சென்றதும் சற்று நேரம் யோசித்துப் பின் வீட்டுக்குச் சென்று மாமனாரிடம் அவர் பதறாத படி விவரம் சொன்னவள் தைரியத்துடன் அவளுக்குத் தெரிந்த ஒரு சில யோசனைகளைக் கூறி அதன் படியே அவரையும் நடக்கச் சொல்ல திகிலடைந்த முகத்துடன் மருமகளின் பேச்சை ஏற்று நடக்க ஆரம்பித்தார் அந்த அப்பாவி தந்தை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN