என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் – 12

மாமனாருக்கு ஆலோசனை வழங்கிய யாழினி அதன் பின் தன் வீட்டுக்கு அழைத்துச் சில கட்டளைகளுடன் கூடிய யோசனையைக் கேட்கவும் யோசனைக்கு வழி சொல்லி அவள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றினார்கள் அவள் தந்தையும் அண்ணனும்.

இரவு உணவுக்கு விஜயனைத் தவிர அனைவரும் இருக்க அவன் நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு அவன் ஆஸ்பிட்டலில் இருப்பதாகத் தகவலைச் சொன்னார் பச்சையப்பன். அவன் இல்லாமல் எப்படி என்று கேட்ட அனைவருக்கும் “அவன் நண்பன் சீரியசா இருக்கிறதால தான் வர முடியலேனு எனக்குச் சொன்னான். அதுவும் இல்லாமல் ஹாஸ்டலில் படிக்கிற பையன் வேற. அவங்க பெற்றோர் வந்த உடனே வந்திடுவேன் அப்பானு சொல்லிட்டான். அதுனாலே நாம் ஆக வேண்டியது பார்ப்போம்” என்று கூறி அனைவரின் வாயையும் அடைத்தார் அவர்.

மறுநாள் காலை அழகாய் விடிய பசுமாட்டுக் கன்றுடன் புதுமனையில் அடியெடுத்து வைத்தவர்கள் அனைவரும் யாழினிக்குக் கொடுத்த சீர்வரிசைகள் ஒரு பக்கம் நிரம்பியிருக்க ஹோமத்தின் எதிரில் தன் தாய் தந்தையர் அமர்ந்திருக்க அவர்களின் வலது பக்கம் மூத்த மகன் அவன் மனைவி இடதுபுறம் இளைய மகன் அவன் மனைவி என்று அமர வைத்து சிறப்பாகவே விழாவை முடித்தார் பச்சையப்பர்.

விஜயன் இல்லாதது குறை என்றாலும் இந்த வீடு எல்லோருக்கும் எத்தனை நாள் கனவு என்பதால் யாரும் தங்கள் வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. எல்லாம் முடிந்து சொந்த பந்தங்கள் கிளம்பிய பிறகு நந்துவும் வெளியே கிளம்பி விட விஜயன் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அவனுக்கு நடந்ததை தன் மனைவிக்குத் தெரியாமல் மற்றவர்களுக்கு கூறினார் அந்த குடும்பத் தலைவர்.

விஜயன் கல்லூரி முடிந்து பஸ்ஸில் திரும்பி வர, இவனுடன் வந்த மற்ற வம்புக்கார நண்பர்கள் சிலர் தங்கள் பஸ்ஸில் ரூட் மாறி வந்த வேறு சில மாணவர்களுடன் ரூட்தல என்ற பேரில் அடி தடி மோதலை ஆரம்பிக்க பஸ்ஸிலேயே அராஜகம் பண்ண அந்நேரம் அந்தப் பக்கம் வந்த கமிஷனர் இதைப் பார்த்து விட பிறகு சொல்ல வேண்டுமா என்ன? அந்த ரூட்தல தெய்வங்களுக்கு அருமையான ரத்தப் பொரியலுடன் படையல் போட்டு பஸ்ஸில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இனிதே தன் கையால் பூஜையை முடித்தார் அந்த காவல் தெய்வமான கமிஷனர்.

இதில் விஜயனும் மாட்டிக்கொள்ள இதையறிந்த யாழினி வீட்டுக்குத் தெரியாமல் அவனை இரவுக்குள்ளே வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் கமிஷ்னர் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. விசேஷத்தை முன்னுறுத்தித் தன் மாமனாரிடம் மட்டும் சொல்லி நிகழ்ச்சியை முடித்தவள் காலையில் அவனை வெளியே எடுக்க ஏற்பாடு செய்து இதோ அவன் வருவதற்குள் பச்சையப்பரே எல்லோரையும் திடப்படுத்தியும் விட்டார்.

ராம்பிரசாத் விஜயனைக் கொண்டு வந்து விட்டு விட்டு சிறு தலை அசைப்புடன் அவன் விலகி விட, முகம் வீங்கி அங்கங்கே ரத்தக் காயங்களுடன் வந்த விஜயனைப் பார்த்ததும் குடும்பமே பதறி அழுதது. யாழினியுமே இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. விஜயனின் நிலையைப் பார்த்து அவளுக்குக் கை கால் எல்லாம் நடுங்கியது. ‘தப்பு பண்ணிட்டோமோ? கணவனிடம் சொல்லி இருக்கலாமோ?’ என அவள் தன்னை ஆசுவாசப்படுத்த தங்களின் அறைக்குள் ஒதுங்க…

அப்போது தான் வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்த நந்தன் கிழிந்த நாராய் இருந்த தம்பியைப் பார்த்தவன் அருகில் உடல் தளர்ந்து வேதனையோடு கண்கலங்கியிருந்த அப்பாவிடம் போய் என்ன நடந்ததது என்று விசாரிக்க, அவன் வயிற்றிலேயே தன் முகத்தைப் புதைத்தவர்

“ஒரு இரவு முழுக்க என் புள்ள ஸ்டேஷனில் அடிவாங்கிட்டு வந்து இருக்கான்பா!” என்று குமுற

“ஸ்டேஷனா? ஆனா நீங்க அவன் ஆஸ்பிட்டலில் இருக்கான் தானே சொன்னீங்க?” என்று நந்து அதிர்ந்து பதற, அவனை விட்டு விலகியவர்

“அப்படி தான் பா யாழினி…” என சொல்ல ஆரம்பித்தவர் துண்டால் கண்களைத் துடைத்து விட்டு மேற்கொண்டு சொல்லும் முன் நந்துவுக்கு யாழினி என்ற பெயரைக் கேட்டதுமே ‘இவதான் அனைத்துக்கும் காரணம்’ என்று நினைத்து ரத்தம் கொதிக்க அந்த இடத்தில் தன் மனைவியைத் தேடியவன் அவள் அங்கில்லை என்றதும் தங்கள் அறைக்கு வர, கட்டிலில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்த யாழினியைப் பார்த்தவாறு கதவைச் சாற்றிவன் இரண்டே எட்டில் ரௌத்திரமாக மனைவியை நெருங்கி அவள் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கியவன்

“நன்றி கெட்ட நாயே! என்னடி நினைத்து இருக்க? எவ்வளவு திமிர் இருந்தா என் தம்பி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இருக்கிறான்… ஆனா நீ எதுவும் சொல்லாம ஒன்னுமே தெரியாத மாதிரி வீட்டில் நடக்கிற விசேஷத்தில் எந்த வித குற்றவுணர்வு இல்லாம எல்லார்கிட்டேயும் சிரித்துப் பேசி வளைய வந்துகிட்டு இருக்க! ச்சீ… பாசம்னா என்னனு தெரியுமா உனக்கு? ஆமா… பணத்திமிரிலே இருக்கிற உன்கிட்ட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? எங்க வீட்டு ஆளுங்க உன்னைய எப்படித் தாங்குனாங்க.. அவங்களுக்கு செய்கிற நன்றி கடனா இது?” என அவன் சன்னமாக கர்ஜிக்கவும்

கணவன் வார்த்தைகளில் விதிர் விதிர்த்து நிமிர்ந்தவள் ‘எனக்கு பாசம்னா என்னனு தெரியாதா? விஜயன் ஸ்டேஷனில் இருக்கிற ஓவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமா கழிய என் வேதனையை யார்கிட்டேயும் பகிர்ந்துக்க முடியாம மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிச் செத்தது உங்களுக்குத் தெரியுமா?’ என்று மறுகியவள் தன் வேதனையை மறைத்துக் கணவனின் கையைத் தன் பலம் கொண்ட மட்டும் பிடித்துத் தள்ள அது வெறும் முயற்சியாகத் தான் ஆனது.

“நீங்க என்ன படித்த முட்டாளா? இப்படி காட்டுமிராண்டியா நடந்துக்கிறீங்க! உங்களுக்கே இது அசிங்கமா இல்லை?” என இவளும் தன்னவன் மனதில் தன்னைப் பற்றிய அபிப்பிராயம் இப்படி இருக்கே என்று கோபத்தில் சரிக்கு சரியாய் வார்த்தைகளை விட, அதில் கோபத்தின் உச்சத்திற்கே சென்றவன் இன்னும் அவள் முடியைத் தன் கையால் முறுக்கிய படி

“நான் படிச்சவனா காட்டுமிரண்டியானு அப்புறம் சொல்லுறேன்டி… முதல்ல உனக்கு அன்பு பாசம் நன்றி இருக்கா? என் அப்பா அம்மா உன்னை எப்படியெல்லாம் பார்த்துகிட்டாங்க! அவங்க பிள்ளைக்கு நீ செய்கிற செயலா இது?” என அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, ஒரு வினாடி வேதனையுடன் தன் கண்களை மூடித் திறந்தவள் முதலில் என் மேலேயிருந்து கையை எடுங்க. இல்லைனா சத்தம் போட்டு வீட்டில் இருக்கிறவங்களைக் கூப்பிடுவேன்” அவள் குரலில் தான் சொன்னதைச் செய்வேன் என்ற திடம் இருந்தது.

கண்கள் சிவக்கத் தன் பிடியை விடவும் கையைக் கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவள் “எதுவா இருந்தாலும் என்னைத் தொடாம பேசுங்க” என்று சொன்னவள் குரலில் நிமிர்வு இருந்தது.

“உடம்பு முழுதும் கொழுப்புடி! அதைவிட தான் என்ற கர்வம் உனக்கு! என்னையும் உன் அப்பா மாதிரியே உங்க அம்மா சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டிட்டு இருப்பேனு நினைக்கிறியா?” என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவன் வார்த்தைகளை விட,
அடி பட்ட வலியுடன் கண்ணில் நீருடன் ‘நீயே இப்படிச் சொல்லலாமா?’ என்ற பார்வையுடன் அவள் பார்க்க

இது எதையும் உணராதவன் “என் தம்பியை ஒரு இரவு முழுக்க ஜெயிலில் வைத்திருக்க. அதையும் என் கிட்டயிருந்து மறைச்சிட்ட இல்ல? என்னை எதுக்கும் லாயக்கு இல்லாதவனு நினைச்சிட்டியா? அவன் என் தம்பி டி! என் தலையை அடகு வைத்தாவது அவனை வெளியே கூட்டி வந்து இருப்பேன். அப்படி செய்யலனா நான் என்ன அண்ணன்? ஆனா உன்னை மாதிரி இப்படி விட்டிருக்க மாட்டேன்” என எகிற..

இப்போது அவளின் கண்ணீர் மட்டுமே நின்று விட, ‘என்னவெல்லாம் பேசணுமோ பேசு!’ என்ற பார்வை மட்டும் தான் இருந்தது அவளிடம். “உன் அப்பா அடிமையா இருக்கிற மாதிரி நானுமே உனக்கு அடிமையா இருக்கணும். ஒரு நோயாளியா இருந்தாலும் பரவாயில்லை. அதான் உன் பாஷையிலும் உன் அம்மா பாஷையிலும் சொல்லணும்னா என்னை மாதிரி ஒரு பைத்தியக்காரன் வேணும். அதனால் தானே இவ்வளவு பிடிவாதமா இருந்து நம்ப கல்யாணத்தை நடத்தி சாதிச்சிட்ட!” என்று கோபத்தில் மனதில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் கொட்டியவன் இறுதியாக,

“என்னை மட்டும் இல்லை டி… நல்லவ மாதிரி நடித்து என் வீட்டில் இருக்கிறவங்களையும் அடிமை ஆக்கப் பார்க்கறியா?” என மீண்டும் அவளை வார்த்தையால் வதைக்க, அதுவரை பொறுத்தவள் எப்போது அவள் அன்பை நடிப்பு என்று சொல்லி விடவும் சற்றே நிமிர்ந்தவள்

“ஆமா! உண்மை தான்… நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை தான்! இப்போ அதுக்கு என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” இனி கணவனை சும்மா விடுவது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டாள் யாழினி.

மனைவியின் பதிலில் சற்றே அதிர்ந்தவன் “அதுக்கு நீ இந்த வீட்டில இருந்தா தானேடி? இந்த நிமிடமே என் வீட்டை விட்டு வெளியே போடி” இவனின் வார்த்தையில் இன்னும் நொறுங்கிப் போனாள் யாழினி.

கணவனின் பேச்சில் ‘தன்னையும் தன் குடும்பத்தின் அங்கம் என்று கருதாமல் வீடு முதற் கொண்டு தன்னைப் பிரித்துப் பார்த்திருக்கிறானே!’ என மனதுக்குள் குமைந்தவள், அப்போதும் அசராமல் கணவனைப் பார்த்து “அதைச் சொல்ல நீங்க யார்? ஓ... என் கணவனா?” அவன் கட்டியிருந்த தாலியை எடுத்து அவன் முன் காட்டியவள் “இதைக் கட்டினதைத் தவிர எனக்காக நீங்க என்ன செய்து இருக்கீங்க? இது என் அத்தம்மா வீடு! நான் இங்கே தான் இருப்பேன்! வேணும்னா நீங்க இந்த வீட்டை விட்டுப் போங்க” சிறு வயதில் அவன் சொல்லும் வார்த்தைக்குப் பதிலாக அவள் எப்போதும் சொல்லும் வார்த்தையை அப்போதும் அவள் சொல்ல,

அவனோ “உனக்கு இருக்கிற திமிருக்கு நல்லா வாங்கிக் கட்டிக்கப் போற. உன்கிட்டயெல்லாம் பேசிட்டு இருக்கக்கூடாது டி” என்ற சொல்லுடன் சட்டென்று அவள் கையைப் பற்றி பின் புறம் முறுக்க,

அதே நேரம் “டேய் நந்தா! அங்கே என்ன டா சத்தம்?” என்று கேட்டபடி ஈஸ்வரி உள்ளே நுழைய அவள் கூடவே மொத்த குடும்பமும் நுழைந்தது. கணவன் மனைவி கோலத்தைப் பார்த்தவள் “டேய் விடுடா அவள் கையை!” என்று மிரட்ட

எது தெரியக்கூடாது என்று இவ்வளவு நாள் உள்ளுக்குள்ளே போட்ட சண்டை எல்லாம் கோபத்தில் மறந்து போக, “நீ தள்ளி போ அக்கா! இன்று இவ கையை காலை உடைக்காம விடமாட்டேன் நான்…” என்று அவன் கர்ஜிக்க

“இப்போ அவ என்ன செய்தானு இப்படி அவளைப் பாடாய்ப் படுத்துற?”

“நம் விஜயனை ஸ்டேஷனில் இருக்க வைத்தது மட்டுமில்லாம அதை நம்ப கிட்ட மறைத்தா இல்லை?” அப்போதும் அவன் மனைவியின் கையை விடவில்லை.

“அப்படி மறைத்ததால் தான் டா இந்த விழா சுமூகமா முடிந்தது. அப்படிப் பார்த்தா இவ நல்லது தான் டா செய்திருக்கா”

“இவ எல்லாம் நல்ல பாம்பு இல்லை க்கா… கருநாகப் பாம்பு!”

பளார் என்று தம்பியின் கன்னத்தில் அறைந்தவள் “இதற்கு மேலே ஒரு வார்த்தை பேசக் கூடாது. வெளியே போடா நீ…”

ஈஸ்வரி அடித்ததற்கே அதிர்ந்து நின்றவன் சற்று நேரத்திற்கு முன் மனைவி சொன்ன மாதிரியே அக்காவும் வெளியே போகச் சொல்லவும் “அக்கா!” என்று அழைத்து ஏதோ சொல்ல வர

“நான் உன்னை வெளியே போகச் சொன்னேன்…” என அவள் வெளிப்புறமாக கை காட்ட, முகம் தொங்கிப் போக யார் முகத்தையும் பார்க்க முடியாமல் வீட்டை விட்டே வெளியே போனான் நந்தா. சண்டை பெரிதாக வேண்டாம் என்பதால் யாரும் அவனைத் தடுக்கவும் இல்லை.

அழுது கொண்டிருந்த யாழினியைத் தன் மேல் சாய்த்தவள் “அவனுக்கு, தம்பி ஜெயிலில் இருந்தானேனு வருத்தம் யாழினி! அதிலும் அவன் அடிபட்டு வரவும் உன்கிட்ட கொஞ்சம் கோபப் பட்டுட்டான். இன்னும் கொஞ்ச நேரத்திலே வீட்டுக்கு வந்துடுவான் பாரேன்…” தன் தம்பி அவளை வார்த்தைகளால் குத்திக் கிழித்து விட்டுப் போனது தெரியாமல் ஈஸ்வரி யாழினியைச் சமாதனப்படுத்த, அவளைக் கட்டி கொண்டு கதறினாள் யாழினி!...

வீட்டை விட்டுப் போன நந்து யார் அழைத்தும் வீட்டுக்கு வரவே இல்லை. இன்னும் சில பொருட்கள் பழைய வீட்டிலேயே இருந்ததால் அவனும் அங்கேயே தங்கி விட, அதைப் பற்றி விசாரிப்பதற்கு ஈஸ்வரி அழைக்க அவன் எடுத்ததும் “என்ன டா பழக்கம் இது, வீட்டுக்கு வராம இருக்கிறது? ஏன் நான் உன்னை எதுவும் கேட்க கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா? நீ என்ன அவ்வளவு பெரிய மனுஷனா ஆகிட்டியா?” என மூச்சு விடாமல் அவள் பொரிந்து தள்ள

“போதும் அக்கா.. பேசி முடிச்சிட்டியா? முதலில் மூச்சை விட்டுக்கோ. என்னையும் கொஞ்சம் பேச விடுக்கா. நீ எதற்கு அனுப்பினேனு புரியாத அளவுக்கு நான் சின்னப் பிள்ளை இல்லை. என்னால விஜயனை அப்படிப் பார்க்க முடியல. மீறிப் பார்க்கும்போது எல்லாம் கீதா என் கிட்ட மறைச்சிட்டாளே என்ற கோபம் தான் வருது. இதெல்லாம் உரிமை கலந்த கோபம் தான். நீ எந்தப் பிரச்சினை வரக் கூடாதுனு என்னை வெளியே போகச் சொன்னியோ அதே காரணத்துக்காகத்தான் நானும் இங்கே தங்கறேன். சோ இன்னைக்கு ஒரு நாள் விடு க்கா. நாளைக்கு ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வரேன். நிச்சயம் உன் மேலே கோபம் எதுவும் இல்ல க்கா புரிஞ்சிக்க” என்று இவன் தன்மையாகச் சொல்ல இதற்கு மேல் யாரால் என்ன தான் செய்ய முடியும் என்ற நிலையில் ஈஸ்வரி போனை வைத்துவிட

ஆனால் அங்கு யாழினியின் பாடு தான் உயிர் வதையாக இருந்தது. அவளுக்கு ஈடு கொடுத்துக் கலகலக்கும் விஜயன் இப்படி இருக்கிறானே மற்றும் அவளைப் புரிந்து கொள்ளாமல் நந்து பேசின பேச்சும் இப்போது வரை கணவன் வீட்டுக்கு வராமல் இருப்பது தான் அவளுக்கு வலித்தது. என்னவெல்லாம் பேசி விட்டான்! இதுவரை கணவனின் அலட்சியத்தை ஒதுக்கியது போல் தலைமுடியைப் பிடித்துக் கை ஓங்கியதை எல்லாம் மன்னித்து ஒதுக்க முடியவில்லை அவளால். அது என்ன பழக்கம் கை நீட்டுவது? நான் தப்பே செய்திருந்தாலும் அதை அவர் பேசிக் கண்டித்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் கணவன் செய்யவோ தான் தன்னிலை மீறி வார்த்தைகளை விட்டாள். அதிலும் அவள் கனவிலும் நினைக்காத வார்த்தைகளை ஒத்துக் கொண்டாள். அப்படி இருந்தும் மனது கேட்காமல் இவள் கணவனுக்குக் கால் செய்யவும் அதை எடுக்காமல் கட் செய்து கொண்டிருந்தான் அவன்.

மறுநாள் காலையில் வழக்கம் போல ஆபீஸ் கிளம்பியவனுக்கு அங்கு போயும் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

‘திருமணத்தை எப்படியாவது நிறுத்தி இருக்கலாமோ? நேற்று அவள் வாயால் சகலத்தையும் ஒத்துக் கொண்டாளே! எல்லாமே பணத்திமிர்! அவங்க அம்மாவோட குணம் அப்படியே இருக்கு. இனியும் அவ கஷ்டப்பட்டு என்னையை சகித்துக் கொண்டு இருக்கணும்னு அவசியம் இல்லை அதேநேரம் அவளை ஜெயிக்க விடக் கூடாது. இதற்கு ஏதாவது செய்து ஆகணும்’ இப்படி ஏதேதோ யோசித்தவனுக்கு ‘கடைசியாக விவாகரத்து தான் இதற்கு முடிவு!’ என்று நினைக்க அதற்கு மேல் அவனால் வேலையே செய்ய முடியவில்லை.

அரை நாள் விடுப்பு எடுத்தவன் வீட்டுக்கும் செல்ல மனம் இல்லாததால் இரண்டு வருடம் கழித்து எப்போதும் செல்லும் ஹோமுக்குச் சென்றான். அங்கு அவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நந்துவின் விபத்து பற்றி அங்கிருக்கும் சிலருக்குத் தெரியும் என்பதால் அதைத் தவிர்த்து அனைவரும் சகஜமாவே பேசினர். அந்த இதமான பேச்சுக்கள் எல்லாம் அவனுக்கு நிம்மதியைத் தர அந்த நிம்மதி எல்லாம் அவனுக்குச் சிறிது நேரம் தான் நீடித்தது.

“அப்புறம் மதர்! ஹோமில் நல்ல மாற்றங்கள் கொண்டு வந்திருக்கீங்க. பசங்களும் தன்னம்பிக்கையா செயல்பட்டு இருக்காங்க. என்னுடைய இடத்திற்கு வேற யாராவது வந்து இருக்காங்களா?”

“எங்கே நந்து? ஹாக்கியை இப்போ யார் பெரிதா விரும்புறாங்க? ஏதோ இரண்டு மூன்று பசங்க தான் அதில் ஆர்வம் காட்டினாங்க. அந்தப் பசங்களுக்காக வரணுமா எனக் கேட்டு எந்த கோச்சரும் வரலை”

“ஒ...” திடீர் என்று அவனுக்கு அந்த கேள்வி கேட்கவேண்டும் என்று தோன்ற “பசங்க எல்லாம் நல்ல அருமையா ட்ராயிங் செய்து இருக்காங்க. யாராவது புது டீச்சர் ஜாயின் செய்து இருக்காங்களா மதர்?’

“இல்லையே1 பழைய டீச்சரே தான் இருக்காங்க நந்து”

ஆனால் அன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதைப் பார்த்தேனே..” என்று இவன் இழுக்க

“நோ... நோ... நந்து! கீதயாழினி நல்லா தானே இருக்கா?”

“வாட்?!” என இவன் அதிர

அதைத் தெரியாமல் அவரோ “நீ ஏதோ தவறா புரிந்திருக்க. அந்த பொண்ணு ரெகுலரா வந்து தான் போறா. இப்போ சமீபத்தில் கல்யாணம் ஆனதிலிருந்து தான் அவள் வருவது இல்லை. இங்கே நல்ல மாற்றம்னு சொன்னாயே, அதற்கு அந்தப் பொண்ணோட அப்பா பாரிவேந்தர் தான் காரணம். பெரிய பிசினஸ் மேன்!” இதற்கு மேல் அவர் சொன்னது எதுவும் அவன் காதில் விழ வில்லை. அவன் ஒருவித இறுகிய தன்மையுடன் அமர்ந்திருக்கவும்

“நந்து! நந்து! ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவர் உலுக்க, தன் பார்வையை அவர் மேல் திருப்பியவன்

“இப்போ நீங்க யாரோட மகள் சொன்னீங்க?” என்று இவன் சந்தேகத்துடன் கேட்க

“ஆந்திராவில் பெரிய பிசினஸ் மேன் பாரிவேந்தரின் மகள்னு சொன்னேன். அவங்க தான் இப்போ நம்ப ஹோமோட டிராயிங் டீச்சர்”

“அப்படீங்களா?” இவன் மனதோ இருக்காது என்ற நிலையில் அடித்துக் கொண்டது.

“இப்போ மட்டுமில்லை, ஆரம்பத்திலிருந்தே அவங்க தான் பசங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க” என மதர் உண்மையைப் போட்டு உடைக்க, இவனுக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

தன் போனைத் திறந்து அவரிடம் ஒரு போட்டோவைக் காட்டியவன் “இவ தான் அந்த யாழினியா?” என்று கேட்க

“ஆமாம்!” என்று சொல்லி அவனின் கடைசி சந்தேகத்தையும் உடைத்தார் அவர்.

அங்கு டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடித்துத் தன் கொதிப்பை ஆற்ற நினைத்து இவன் குடிக்க, ஆனால் வெறும் ஒரு டம்ளர் நீருக்கு அடங்கும் கொதிப்பா அவனுடைய கொதிப்பு?!

எப்படி அங்கிருந்து கிளம்பினான் என்று அவனுக்கே தெரியவில்லை. பார்க்கில் ஓர் இடத்தில் அமர்ந்தவனுக்கு ‘நேற்று மாதிரி இது கோபப் பட வேண்டிய விஷயம் இல்லை. கொஞ்சம் தனிமையில் யோசிக்க வேண்டிய விஷயம்’ என்பது மட்டும் தெரிந்தது. வீட்டுக்குப் போக மனம் வராமல் தன் வண்டியை நண்பனிடம் கொடுத்து அனுப்பியவன் தனக்கு இரண்டு நாளைக்கு வேண்டிய துணிகளையும் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டில் ஆபீஸ் விஷயமாக இரண்டு நாள் பெங்களூர் போவதாகச் சொன்னவன் சொன்ன மாதிரியே பெங்களூரில் தன் நண்பன் தங்கியிருக்கும் அறைக்கு வந்தும் விட்டான் நந்து மனது முழுக்க யாழினி மீது வன்மத்தோடு...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN