என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் – 13

பஸ்ஸில் வரும்போதும் சரி இப்போது பெங்களூர் வந்த பிறகும் சரி நந்து யோசித்தது எல்லாம் ஒரு பெண்ணால் தான் முட்டாள் ஆக்கப்பட்டு ஏமாந்தது தான்.

இறந்த அந்தப் பெண் கூட யாழினி வைத்த ஆளோ என்றே நினைத்தான். நல்ல மனநிலையில் இருந்து யோசித்தாலே மூளை மீட்டர் போட்ட ஆட்டோவாக அதிவேகத்தில் ஓடுமாம். இப்போது நந்து இருக்கும் மனநிலைக்கு மெட்ரோ டிரெயின் வேகத்திக்கு சென்று தப்பும்தவறுமான முடிவுகளை எடுக்க வைத்தது. ஒரு நாள் முழுக்க பலவாறு சிந்தித்து யோசித்து ஒரு முடிவுடன் இவன் மனைவிக்கு அழைக்க.. எப்போதும் இயல்பான குணம் போல் அவள் முதல் ரிங்கிலேயே எடுத்தவள்

“சொல்லுங்க பாவா!” என்றாள்

“எங்கே இருக்க?”

“அப்பா வீட்டில் இருக்கேன் பாவா! நேற்றே உங்களுக்கு மெசேஜ் செய்தேனே.. என்னோட PhD விஷயமா பேச ராம் அண்ணா ஒருத்தரை அறிமுகப் படுத்தறேன் சொன்னார்னு..”

“ம்ம்ம்... எப்போ வருவ?”

“மதியம் லஞ்ச் முடிந்ததும் வருவேன்” இதைச் சொல்லும்போதே அவள் மனதிற்குள் சின்னதாய் ஒரு மழைச்சாரல்.. ‘கணவன் தன்னைத் தேடுகிறானோ?’

“ம்ம்ம்.. நான் வந்த வேலை முடிந்தது. அப்போ நானும் மாலை வந்திடுறேன். யார் கூட நீ வர?”

“அண்ணா கூட…”

“சரி பார்த்து வா” என்று பட்டும் படாமல் பேசி வைத்து விட, இப்போது அவள் மனதில் மழைச் சாரல் மட்டுமில்லை, ஆலங்கட்டி மழையே கொட்டியது.

மதியம் என்றவள் எல்லாம் முடித்துப் பேசிக் கிளம்ப மாலை ஆனது. பிறகு இருவரும் காபி ஷாப் போக, ராம் தான் ஆர்டர் செய்த காபியை வாங்கி வரப் போன போது அவனுக்குத் தெரியாத நம்பரிலிருந்து போன் வர, இவன் யோசனையுடன் ஆன் செய்ய, எடுத்ததும் “கிரானைட் பிசினஸ் பண்ற பரிவேந்தரோடைய மகன் ராம்பிரசாத் தானே?”

“எஸ்ஸ்...”

“உங்க மாப்பிள்ளை தானே சுவேஷ்நந்தன்? அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கோம். கொஞ்சம் சீக்கிரம் வாங்க” ஆஸ்பிட்டல் பெயர் சொல்லி அங்கே வரச் சொல்ல

“வாட்!?... நீங்க தப்பா புரிஞ்சிட்டுப் பேசுறீங்க. அவர் பெங்களூர் போய் இருக்கார். இதைச் சொல்லும் போதே அவனுக்கு உள்ளுக்குள் உதறியது.

“சார்!...” நந்தன் வேலை செய்யும் கம்பெனி பெயரைச் சொல்லி “இவர்தானு எனக்குத் தெரியாதா? பெங்களூர் டூ சென்னை ஹைவேயில் தான் சார் இப்படி ஆகிடுச்சு” எதிர்முனையில் இருப்பவன் எல்லாம் சரியாகச் சொல்லவும்

“நீங்க அங்கேயே இருங்க. இதோ வந்திடுறேன்..” இவனிடம் பதட்டம் தொற்றிக்கொள்ள

“சார்... சார்... எனக்கு எதுக்கு வம்பு? ஏதோ எனக்குத் தெரிந்தவர்னு சொன்னேன். இதற்கு மேலே என்னை எதிலும் கூப்பிடாதிங்க சார்...” போன் கட்டாகி விட அதற்குப் பிறகு இவன் அழைத்த போது எல்லாம் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

இவர் சொல்லுவதை எப்படி? நம்புவது பேசாமல் நந்துவுக்கே போன் போட்டுப் பார்த்திடலாம் என்று நினைத்தவன் நந்துவுக்கு அழைக்க அதுவும் சுவிட்ச் ஆப் என்று வரவும் இவனுக்குள் மேலும் மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

இவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யோசித்து இவன் தன் டி.எஸ்.பி நண்பரை அழைக்க அவன் எடுக்கவில்லை. ஆனால் மறுநிமிடமே நான் மீட்டிங்ல இருக்கேன் என்று பீப் சவுண்டுடன் மெசேஜ் வரவும் இந்த விஷயத்தைத் தானே தான் கையாள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன், தங்கையிடம் எதுவும் சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான் ராம். பாதியிலேயே அங்கிருந்து கிளம்பச் சொன்னது மட்டுமில்லாமல் அவனிடம் தென்பட்ட கலக்கத்தையும் பதட்டத்தையும் பார்த்தவள்

“என்ன அண்ணா… ஏன் இவ்வளவு பதட்டம்? எங்க போறோம் ண்ணா?” என்று கவலையுடன் விசாரிக்க,

அதற்குள் ஆஸ்பிட்டல் வந்து விட யாருக்கோ ஏதோ என்று உணர்ந்தவள் கண்ணில் அலைபுறுதலுடன் அண்ணனைப் பார்க்க, அவளைப் பார்த்தவன் “குட்டிமா! ஒண்ணும் இல்லடா. என் நண்பனுக்கு சின்ன ஆக்சிடென்ட். அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் டா. ஒஹோ… அப்போ நீங்க மட்டும் பார்த்திட்டு வாங்க. பாவா மதியமே வீட்டுக்கு வந்திடுவேன் என எனக்குப் போன் பண்ணினாங்க. நான் கிளம்புறேன்ணா”

“குட்டிமா! அதுவந்து.. நீயும் வா.. கொஞ்சம் பொறுமையா என்… கூட இரு டா.. நான் இருக்கேன்ல?” அவன் சம்மந்தம் இல்லாமல் தடுமாறவும், ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவள்

“என்னாச்சுண்ணா? நீங்க ஏன் இப்படி த..த தடுமாறீங்க? நீங்க ஏதோ மறைக்கிறீங்க. யாருக்கோ ஏதோ நடந்திருக்கு. நான் உள்ள வர மாட்டன்ணா” அவள் கன்னத்தில் கண்ணீர்க் கோடுகள்.

“இல்லடா யாருக்கும் எதுவும் இல்லடா. நீ வா மா.. அண்ணன் இருக்கேன்டா உன் கூட”

“யாருக்கு என்னணா? எனக்கு பயமா இருக்குண்ணா” யாழினி எதையும் எதிர்கொள்ளத் தெரியாத கோழை இல்லை. அதே சமயம் தன் உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் அவள் எதையும் எதிர்கொள்ளத் தெரியாத கோழை தான்!

“நீ முதல்ல இறங்குடா” ராம் கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு கூப்பிட

தட்டுத் தடுமாறி இறங்கியவள் அவன் கையை இருக்கப் பிடித்த படி “யாருக்குன்னு சொல்லுண்ணா” என்று கெஞ்ச

“அது வந்து மா.. மாப்பிள்ளை வந்த வண்டி...” என்று அவன் இழுக்க

விபத்து என்று உணர்ந்தவள் அவ்வளவு தான்! ஒரு கேவலுடன் “இல்லண்ணா.. இல்ல! அப்படி எதுவும் இருக்காதுண்ணா” என்ற படி அவள் கால் மடங்கத் தரையில் அமர்ந்த படி கைகளால் முகத்தை மூடிக் கொண்டு குமுறவும், என்ன தான் இருவரும் கார் பார்க்கிங்கில் இருந்தாலும் சில பேர் இவளைத் திரும்பிப் பார்க்கத் தான் செய்தார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளும் நினையில் யாழினி எங்கே இருந்தாள்?

“இன்னைக்கு தான்ணா அவர் அன்பா பாசமா பேசினாரு. அதுக்குள்ள...” என்றவள் மறுபடியும் முகத்தை மூடிக் கதறினாள். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கேட்கக் கூடிய மனநிலையில் கூட அவள் இல்லை. ஏதேதோ நினைத்தவளாக நிமிர்ந்தவள் “அவர் தான்னு உனக்கு உறுதியா தெரியுமாண்ணா?” கண்ணீர் குரலில் கேட்க

“இன்னும் இல்ல டா. அதை உறுதிப் படுத்திக்க தான் மா உன்னைக் கூட்டி வந்தேன்”

“எதை உறுதிப் படுத்தண்ணா?” அவள் கேட்ட விதத்தில் இவனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.

“குட்டிமா!..” அவனும் குமுற

தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள் “அவருக்கு ஏதோ ஒண்ணுனா அவர் கூட சேர்ந்து கடைசி வரை போராட நான் தயார் ண்ணா ஆனா... அதே...” சொல்ல முடியாமல் நிறுத்தியவள் “அடுத்த நிமிஷம் நான் உயிருடன் இருக்க மாட்டேன்” அவள் உறுதியுடன் சொல்லவும் கணவனுக்கு சின்னதாகத்தான் ஏதோ நடந்திருக்கும் என்பதை அவளின் அன்பு கொண்ட நெஞ்சால் யோசிக்கக் கூட முடியவில்லை.

“கீதா!” இது வரை அவள் முன்னாள் மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் இப்போது அவள் பக்கத்தில் அமர்ந்து தங்கையைத் தோள் மேல் சாய்த்து முதுகை வருடியவனோ “அப்படி எதுவும் ஆகாது மா” என்று தேற்றியவன் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது.

அவன் மட்டுமா? இதை சற்றுத் தூரயிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது. அந்த உருவம் அவளை அணைத்துத் தேற்ற நினைக்க, பாவம்! அதனால் நகரக் கூட முடியவில்லை.

இதற்கிடையில் ராம் தங்கையைத் தேற்றி தன் கைப் பிடியிலேயே அழைத்துச் சென்றவன் ரிசப்ஷனில் விபத்தாகி வந்திருக்கும் சுவேஷ் நந்தனைப் பற்றி விசாரிக்க

“சார்! இப்படி பெயர் மட்டும் சொன்னா எப்படி சார்? எங்கே விபத்து நடந்தது? இங்கே எத்தனை மணிக்குக் கொண்டு வந்தாங்கனு சொல்லுங்க” தங்கள் வேலையின் கடுகடுப்பில் அங்கிருந்தவர்கள் சிடுசிடுக்க இவன் எதுவும் தெரியாமல் முழிக்கவும்

அந்த சமயத்தில் அங்கு வந்த நர்ஸ் ஒருவர், “சார்! ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று அழைக்கவும் யாழினியை ஓரமாக நிற்க வைத்து விட்டுப் பதட்டத்துடன் அவரிடம் செல்ல

“சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆக்ஸிடென்ட் கேஸ் ஒண்ணு.. யாரோ அட்மிட் பண்ணிட்டுப் போனாங்க. 35 வயசுக்குள் இருப்பாரு. நீங்க தேடி வந்தது இவரானு பாருங்க. ஆனால் சாரி சார்.. அவர் இப்ப உயிரோட இல்ல..” என்று அவனிடம் சன்னமாக அப்போதுதான் மார்ச்சுவரி போவதற்காக ஸ்டெரெச்சரில் வெள்ளைத் துணி போட்டு மூடியிருந்த சடலமொன்றைக் காண்பித்துச் சொல்லவும்

என்னதான் தனியாக நிற்கவைத்து விட்டு வந்தாலும் பின்னோடு வந்த யாழினி, அனைத்தையும் கேட்டவள் காதில் ‘உயிரோடு இல்லை’ என்ற வார்த்தைகள் மட்டும் நுழைந்து மூளைக்குள் தாக்கத்தை ஏற்படுத்த அப்படியே பித்துப் பிடித்தவள் போல் பார்வை ஓரே இடத்தில் நிலைகுத்தி நிற்க

“இல்ல.. பாவா என்னை விட்டுட்டுப் போகல.. என் பாவா என்னை விட்டுட்டுப் போகல.. அவர் எனக்கு வாக்கு கொடுத்திருக்கார் அண்ணா, கடைசிவரை அவர் என்கூட இருப்பேன்னும் என்னை விட்டுப் பிரிய மட்டேன்னும்.. அப்புறம் எப்படி அவரால என்னைப் பிரிய முடியும்? இல்ல.. அவர் என்னை விட்டுட்டுப் போகல” இதையே திரும்பத் திரும்ப சொல்லவும், ராம் அது யார் என்று கூட பார்க்கவில்லை. திரும்பி இரண்டே எட்டில் தங்கையைப் பிடித்து உலுக்கியவன், பின் அவள் கன்னம் தட்டி

“கீதா! இங்க பாருமா.. நந்துவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது டா. அது யாருனே தெரியல மா.. அது உன் நந்துவா இருக்காதுமா.. நீயா கற்பனை பண்ணிக்காத டா.. இங்க பாருமா.. அண்ணன் சொல்றதக் கேளுமா” என்று சொல்லவும் தன் பார்வையை அவன்புறம் திருப்பியவள் மயங்கி அப்படியே சரியவும், தங்கையைத் தாங்கிப் பிடித்தவன் “நர்ஸ்!” என்று கத்த, ஓடிவந்த நர்ஸ் அவளை ஸ்டெரெச்சரில் படுக்க வைக்கும் சமயம்,

“கீதா!” என்று ஓடிவந்த நத்துவும் அவள் கையைப் பிடித்துக் கதற “சார்! அவங்களை விடுங்க. இப்போ அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கனும். ப்ளீஸ்! விலகிப் போங்க” என்றவாறே நர்ஸ் அவளை அழைத்துச் செல்ல

“நந்தா! நீங்க எப்படி இங்கே? உங்களுக்கு ஆக்ஸிடென்ட்னு எனக்குப் போன் பண்ணாங்களே! அது யாரு? என்ன நடக்குது இங்கே? தயவுசெய்து சொல்லுங்க” என்று ராம்பிரசாத் பரிதவிக்கவும்

“ப்ளீஸ் ராம்! இப்ப என்னை எதுவும் கேட்காதிங்க. முதலில் யாழினி தெளியட்டும். அப்புறம் சொல்கிறேன்” என கண்ணில் கண்ணீருடன் வேண்டவும், அவன் அமைதியாகிவிட, நந்துவின் மனதுக்குள் புயலே அடித்துக் கொண்டிருந்தது.

வெளியே வந்த நர்ஸ் “சார் அவங்க ஹஸ்பென்ட் யாரு? கொஞ்சம் உள்ளே வாங்க, டாக்டர் கூப்பிடறாங்க” என அழைக்கவும் உள்ளே சென்றவனிடம் “பெரிதா பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல. அவங்க மனதால் இல்லைனு வைத்திருந்த ஒரு விஷயத்தை மூளை ஆமான்னு சொல்லவும் அவர்களால் தாங்கிக்க முடியலை. அதனால் வந்த அதிர்ச்சி பிளஸ் மனதில் உள்ள அழுத்தம். அதனால் தான் அவங்களே நினைத்தாலும் அவங்களாலேயே வெளிய வர முடியலை. அது என்னனு தெரிந்து அது சம்மந்தமா நீங்களே பேசிப் பாருங்க. கண்டிப்பா சுயநினைவுக்கு வரலாம்” என்று சொல்லிய டாக்டர் அறையிலிருந்து வெளியேறிவிட

அங்கு சலனமற்றுக் கிடந்த யாழினியின் அருகே சென்றவன், “கண்ணைத் திறந்து பாருடி..” என்று கத்தியவன் பிறகு கீதா இங்கே பாருமா...” என்று கெஞ்ச ஆரம்பித்தான். உனக்கு நான் எப்படியோ அப்படி தான் டி நீ எனக்கு. இல்லை இல்லை.. அதற்கும் மேலே! என் உலகமே நீ தான் டி செல்லம்மா. இங்கே பார் உன் பாவா நல்ல மாதிரியா உன் முன்னாடி நிற்கிறான்” என்றவன் அவள் கையை எடுத்துத் தன் கன்னம் தாடை கழுத்து என்று வருடியவன் இறுதியாக மனைவியின் ஒவ்வொரு விரலுக்கும் முத்தமிட, அந்த மயக்கத்திலும் தன் மன்னவனின் முத்தத்தை ரசித்தவளுக்கு தன்னை மீறி மூடியிருந்த விழியிலிருந்து நீர் வடிந்தது.

அதைப் பார்த்ததும் அவள் கண்களைத் துடைத்தவன் “அழாதடா.. அதான் உன் பாவா வந்துட்டேன் தானே? எனக்கு ஒண்ணும் இல்ல டி” என்றதும் அவளிடமிருந்து லேசாக முனகல் சத்தம் கேட்கவும் நெருங்கி என்னவென்று கேட்க “என் பாவா என்னை விட்டுட்டுப் போக மாட்டார்.. அவரில்லாம நான் இல்லைனு அவருக்குத் தெரியும். என்னை ஏமாற்றிட்டுப் போகமாட்டார்” என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க, சட்டென அவளிடம் இன்னும் நெருங்கி அவள் நெற்றியோடு தன் நெற்றியைப் பதித்து அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன்

“உண்மை தான் டி. இனி எப்போதும் உன்னை விட்டுப் போகமாட்டேன். நீ இப்படி என் மேலே உயிரையே வைத்திருப்பேன்னு தெரிந்திருந்தா நிச்சயம் இப்படி ஒரு வார்த்தையை பொய்யா கூட சொல்லியிருக்க மாட்டேன் டி. நான் வெறுமனே உன்னைப் பழிவாங்க வார்த்தையா தான் டி சொன்னேன். இதைக் கார் பார்க்கிங்லயே சொல்லியிருக்கணும். ஆனால் நானே நினைத்து பார்க்கலை டி, நீ உள்ளே வரும்போது இப்படி ஒரு சடலத்தைப் பார்ப்பேன்னும் அதனால நீ இவ்ளோ பாதிக்கப்படுவேனும் கனவில் கூட நினைக்கலை. உன்னை துடிக்க வைக்கிறதா நினைத்து இப்போ நான் தான் டி உயிர் போறமாதிரி துடித்துப் போய் நிற்கிறேன். ” சொல்லும் போதே அவன் கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் அவள் கன்னத்திலும் விழ சற்றே இமைகளை அசைத்தாள் யாழினி.

ஆனால் அதையெல்லாம் நந்தன் கவனித்தால் தானே? அவன் தான் தன் மனதின் வாக்கு மூலங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தானே. “உன்னை கல்யாணம் செய்யும் போது மனதில் எதுவும் இல்லாம தான் டி கல்யாணம் பண்ணினேன். இன்னும் சொல்லப்போனா வெறுப்பு தான் டி இருந்தது. உன்னைக் காணாம தேடும்போது கூட என் வீட்டில் ஒருத்தின்னு தான் தேடினேன். உனக்கு தேன் கொடுத்து நீ துடித்தப்போ ஐயோ பாவம்னு பரிதாபம் தான் வந்தது. ஆனா... இன்று நீ பாவான்னு விழுந்தப்போ என் உயிரே என்னை விட்டுப் போன மாதிரி இருந்ததடி. ப்ளீஸ் செல்லம்மா! எழுந்திரு டா. உன் பாவா சொல்றேன் இல்லை?...” இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பானோ? அதற்குள் அவள் சிறிது தெளிந்து அசையவும் சற்றே விலகி நிற்க, அவளோ கண் திறவாமல்

“ஏடுகொண்டலவாடா! என் பாவாவை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டா அவருக்கு நான் மொட்டை போடறேன் பா” என மிகவும் பலவீனமான குரலில் வேண்டவும், ‘அடியேய் குந்தாணி! இந்த ரணகளத்திலேயும் உன் வேண்டுதலை விட்டு வைக்க மாட்டியா டி? மயக்கத்துல கூட என் முடிக்கு ஆப்பு வைக்கறதிலேயே குறியா இருக்காளே!’ என உள்ளுக்குள் பொய்யாய் நொந்தவன் அவள் முழுமையாக விழித்ததும்

“செல்லம்மா!” என்று ஓடிச் சென்று அவள் முகத்தைப் பற்றி முத்த மழை பொழிந்தான் நந்தா.

பிறகு சிறிது நேரம் கழித்து டாக்டர் வீட்டுக்கு அனுப்பிவிட, விழித்ததில் இருந்து எதுவும் பேசாமல் இருக்கும் மனைவியிடம் தானும் எதுவும் பேசாமல் வந்தான் நந்தா. ஆனால் மனைவி கையை மட்டும் விடவில்லை.

வீட்டு வாசலில் இவர்கள் இறங்கிய நேரம் இதுவரை எதுவும் பேசாத ராம் “உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லுங்க, என் தங்கச்சியை நான் கூட்டிட்டுப் போய்டுறேன். இந்த மாதிரி கஷ்டப்பட வேண்டாம்” என்று தனக்குள் யூகித்ததை வைத்துச் சொல்ல, யாழினியிடம் எந்த சலனமும் இல்லை

நந்து தான் ‘இது என்ன பஞ்சு மிட்டாய்னு நினைத்தானா? பிடிக்கலைனா கொடுக்க? அவ என் மனைவி டா!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் “அவ என் மனைவி! நான் சாகறவரை என் கூடத் தான் இருப்பா” என்று தன் மச்சானுக்கும் மனையாளுக்கும் சேர்த்து பதில் தந்து விட

“அப்படி இருந்தா சந்தோஷம் தான்” என்ற சொல்லுடன் காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் ராம்.

உள்ளே வந்ததும் யாழினி தனக்குத் தலைவலி என்று சொல்லித் தங்கள் அறையிலேயே இருந்து விட, இரவு உணவுக்கும் அவள் வெளியே வரவேவில்லை.

மனைவி சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிட மனம் வராததால் ஒரு தட்டில் உணவுடன் தங்கள் அறைக்கு வந்தவன் தட்டை டேபிளில் வைத்து விட்டு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த மனைவியை நெருங்கி “செல்லம்! எழுந்திரு மா.. சாப்பிடாம படுத்தா தூக்கம் வராது டா” என்று கொஞ்ச

கட்டிலில் படுத்திருந்தவளுக்கு இப்போது கண்ணீர் வரவில்லை. மாறாக கோபம் தான் வந்தது. ‘செய்யுறதை எல்லாம் செய்திட்டு என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு?’ என்ற கோபம் தான். அதனால் இவள் கண்ணைத் திறக்காமல் அப்படியே படுத்திருக்கவும்

“செல்லம்மா! எழுந்திருடா...” இவன் மனைவியைத் தன் பக்கம் திருப்ப, அவ்வளவு தான்! எழுந்து அமர்ந்தவள் பத்திரகாளி என மாறி கொடுத்தாள் ஒரு அரை கணவனாகிய நந்துவுக்கு. அவன் அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி பேந்தப் பேந்த முழிக்கவும்

“என்ன டா நினைத்து இருக்க உன் மனசுல? என்ன உயிரோட புதைச்சிட்டு இப்போ பாசமா இருக்கிற மாதிரி நடிக்கறியா?”

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வார்த்தைகள் வந்தது யாழினிடமிருந்து.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN