என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் - 15

நந்து அங்கே பார்க்கையில் “அச்சச்சோ குட்டிஸ்! நீங்க ரெண்டு பேரும் அம்மாவை இப்படிப் பாடு படுத்தினா எப்படி? அம்மா பாவம் தானே? ஒருத்தி புவா சாப்பிட்ட உடனே சமர்த்தா நான் சொல்லுறதைக் கேட்டுத் தூங்கிட்டா. ஆனா நீயும் இருக்கியே… அப்படியே உன் அப்பா மாதிரி! அவர் எப்படி என் பேச்சைக் கேட்காமா வம்பு வளர்க்கிறாரோ அப்படித் தான் நீயும் இருக்க. சமர்த்தா தூங்கு டா. உன் அப்பா வந்தா அவருக்கு சாப்பாடு கொடுக்கணும். ப்ளீஸ் செல்லம்!” என்று வயிற்றிலிருந்த துணி மூட்டையை வருடிய படியே தன் கனவான இரண்டு பெண் குழந்தைகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தாள் யாழினி.

இன்று நடந்த நிகழ்வில் இவளுக்கு இப்படி ஒரு ஆசை வர “குட்டீஸ்! இன்று உங்க மாமிக்கு வளைகாப்பு செய்தாங்களே… அதைப் பார்த்ததும் அம்மாவுக்கும் அப்படி ஆசை வந்திடுச்சு” என்று கொஞ்சிய படி இவள் ஏற்கனவே அங்கு எடுத்து வைத்திருந்த சந்தனத்தில் கை வைக்க அதைச் செய்ய விடாமல் தடுத்தது நந்துவின் கை. இவளோ ஒரு வித தவிப்புடனும் வெட்கத்துடனும் தலை குனியவும்

அவளிடம் எதுவும் பேசாமல் கண்களாலேயே காதலைச் சுமந்த படி மனைவியை அலுங்காமல் தன் மடியில் அமர வைத்தவன் அங்கிருந்த சந்தனத்தை எடுத்து கன்னத்தில் பூசிவிட அதன் குளுமையில் சொக்கித்தான் போனாள் அவனவள். பின் மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்து வளையல் பூட்டியவன் அட்சதை தூவி இறுதியாக அவள் வயிற்றிலிருந்த தங்களின் கற்பனைப் பிள்ளைகளுக்கு முத்தம் தர அதில் சிலிர்த்தவள் கணவனின் கழுத்தைக் கட்டியபடி கிறங்கித் தான் போனாள் அவனின் மனையாட்டி. அதேநேரம் அவனுடைய போனில் அழைப்பு வர, அதில்…

வேறதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

என்ற பாடல் வரிகளில் மெய்மறந்தார்கள். மனைவியின் காது மடல் உரச சன்னமாக “இரண்டு மட்டும் போதுமா? ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் வேண்டுமே எனக்கு! அதற்கு உனக்கு சம்மதமா...? என்று ஹஸ்கி வாய்ஸில் இவன் கேட்க, தன்னவனின் தோள்வளைவில் தலை சாய்த்தவள் “என்னதூ நான்கா? அப்ப மீதி பாவா?” என்று கண்களில் குறும்பு கூத்தாடிய படியே கேட்க “அடிப்பாவி! என்னை விட வேகமா இருக்கியே டி!” என்றவன் இதற்கு மேல் பேச்சே இல்லை என்பது போல் காதலுடன் கூடிய இறுகிய அணைப்பின் மூலம் தங்கள் காதலை அழகாக பரிமாறிக் கொண்டார்கள். கூடவே தங்கள் வருங்காலப் பிள்ளைகளுக்காக மனம் ஒன்றினார்கள்.

என்ன தான் அன்றைய சம்பவத்தில் இருவரும் தங்கள் காதலை மறைமுகமாகப் பரிமாறிக் கொண்டிருந்தாலும் அதன் பிறகு வந்த நாட்களில் சற்றே விலகித்தான் இருந்தார்கள் இருவருமே. என்னை வெறுப்பவரிடம் என் மனதை இப்படி வெளிபடுத்தி விட்டேனே என்ற எண்ணத்தில் மருகியபடி இவள் விலக, இப்படி ஒரு அன்புக்குத் தான் தகுதியானவனா என்ற எண்ணத்தில் இவன் மருக இப்படியே நாட்கள் சென்றது.

கொடூரனைப் போல் மனைவியைக் கொடுமைப் படுத்தவில்லை என்றாலும் எத்தனை முறை அவளை உதாசீனப் படுத்தி உள்ளான்! கொஞ்ச நஞ்ச பேச்சுக்களா? எப்படியெல்லாம் அவளைக் குற்றம் சாட்டினான்! அதையெல்லாம் மறந்து விட்டு இப்போது மட்டும் எப்படி காதலை சொல்ல முடியும்? அதிலும் வளைகாப்பு அன்று மனைவியின் காதலைப் பார்த்த பிறகு அவனால் அவளை விட்டு விலகவும் முடியாமல் ஒன்றவும் முடியாமல் தடுமாறினான். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான். இனி மனைவியை விட்டு விலகுவதும் இல்லை, பிரிவதும் இல்லை என்று.

இதற்கிடையில் ஒரு நாள் இரவு உணவுக்குப் பிறகு தங்கள் அறைக்கு வந்த யாழினி தூங்காமல் இப்படியும் அப்படியும் கொஞ்ச நேரம் நடந்தவள் பிறகு அங்கிருந்த பொருட்களை மாற்றி மாற்றி என வைக்க மனைவியின் செயலைப் பார்த்தவனுக்கு அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என புரிந்தது. இருப்பினும் அதை அவளாக சொல்லட்டும் என்று காத்திருந்தவனுக்குப் பொறுமை பறக்க, படுக்க ஆயத்தமாகவும்

“படுக்காதீங்க... படுக்காதீங்க...” என்று கத்தியபடி கணவன் முன் வந்து நின்றவள் “நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்” என சொல்லியே விட

“சொல்லு” என்றான் ஒரு கொட்டாவியை வெளியிட்ட படி.

“அது வந்து… நான் சொன்னா நீங்க கோபப்படுவீங்களா?” என்று இவள் பீடிகை போட

“ஆமாம்!” என்றான் அவன்.

“என்னது!?’ என்று இவள் அதிர்ந்த படி விழி விரித்துப் பார்க்கவும், சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் அமர வைத்தவன் வலதுகையை எடுத்துத் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு இடதுகையைத் தன் கன்னத்தில் பதித்து “இப்போ சொல்லு டி. நீ அங்கிருந்து சொன்னா தான் நான் நிச்சயம் கோபப்படுவேன்” என்ற படியே இவன் கண் சிமிட்ட

‘நான் அங்கே இருந்தாலே பேச்சு வராது. இதில் இது வேறயா? இனி காத்து தான் வரப்போகுது’ என தேவர்மகன் ரேவதி போல் நினைத்து ‘என்ன பண்ண? காரியம் ஆகணுமே!’ என்று மனதுக்குள் சலித்துக் கொண்டவள்

“அது வந்து... அது வந்து...” என்று இழுக்க

“என்ன? அப்பா வீட்டில் நாலு நாள் தங்கணுமா?” என்று கோபக்குரலில் இவன் கேட்கவும்

“ஐய்ய... ஆடி மாதத்துக்கே அப்பா வீட்டுக்குப் போக மாட்டேனு சொன்னவ நானு. இப்போ போய் விடுவேனா?”

“அப்போ என் செல்லம்மா என்ன சொல்ல வந்தாங்க?” என்று தன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டிய படி இவன் கொஞ்ச, சற்றே தைரியம் வரப் பெற்றவளாக

“அது வேற ஒண்ணுமில்லை… நம்ம விஜயன் யாரோ ஒரு வேற ஜாதிப் பெண்ணை விரும்புறானாம் அந்தப் பெண்ணும் இப்போ வீட்டை விட்டு வெளியே வந்திட்டாங்களாம். கண்ணை மூடிக் கொண்டு கடகடவென்று சொல்லி முடித்தவள் கணவனிடம் இருந்து காச்..மூச்.. என்று கத்தலுடன் கூடிய எரிமலையை எதிர்பார்த்திருக்க, அங்கோ இரவின் நிசப்தம் நிலவியது.

இவள் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்க்க இவள் முகத்தையே தான் பார்த்து கொண்டிருந்தான் அவன். இவள் கண்ணைத் திறந்ததும் “இன்னும் ஏதோ இருக்கு போல! அதையும் முழுசா சொல்லிடு” என்று கேட்க, யாழினியோ ‘முன்பே விஜயன் விஷயமாக நடந்ததிலிருந்தே இன்னும் யாரும் வெளியே வரலை. அதிலும் இவர் சுத்த மோசம்! இப்போ என்ன சொல்லப் போறாங்களோ!?’ என்று நினைத்துத் தயங்கிய படி எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “அந்தப் பெண்ணை நான் தான் மதர்கிட்ட சொல்லி ஹோமில் சேர்த்திருக்கேன்” என்று சொல்லிவிட

“அப்போ அவன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினது மட்டுமில்லாமல் கூடவே இருந்து திருட்டுத்தனமா உதவியெல்லாம் செய்து இருக்க! ஒருவேளை அந்த ஐயாவுக்கு காதலிக்கப் பிளான் போட்டுக் கொடுத்ததே நீங்க தானா மேடம்?” என்று நக்கல் குரலில் நையாண்டியுடன் கேட்கவும்..

“இதுக்குத் தான் நான் அவ்வளவு தயங்கினேன். எப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க விடுங்க!” என்று கோபத்துடன் மடியிலிருந்து எழுந்திருக்க நினைக்க, கணவன் பிடி மேலும் இறுகவும் “வேறு என்ன செய்யச் சொல்லுறீங்க? விஜயனுக்கே தெரியாம அந்தப் பொண்ணு வீட்டை விட்டு வந்திட்டா. அண்ணி நீங்க தான் இவளுக்குத் தங்க இடம் சொல்லணும் என்று என்னிடம் வந்து நிற்கிறான். அந்நேரம் வயசுப் பெண்ணோட பாதுகாப்பைப் பார்ப்பாங்களா இல்லை உங்களைத் தேடி வந்து விவரம் சொல்லுவாங்களா? அதே மாதிரி நேற்று தான் எனக்கே இந்த காதல் விஷயம் தெரியும். இதான் உண்மை! இதை நம்பினால் நம்புங்க இல்லைனா போங்க” என்று கோபப்படவும்

“நீ அந்தப் பெண்ணு கிட்ட பேசி அவங்க வீட்டுக்கே திரும்ப அனுப்பி இருக்கணும்” தணிந்திருந்தது அவனின் குரல்.

“நான் எவ்வளவோ சொன்னேன்… அந்தப் பெண் கேட்கலையே! இங்கிருந்து போனா செத்துடுவேன்னு சொன்னா”

“ம்ம்ம்... சரி! இதுக்கு நான் என்ன செய்யனும்?”

“ம்ம்ம்... உட்கார்ந்து ஆப்பம் சுடச் சொல்லுறேன். என்ன கேள்வி இது? அவங்களுக்குக் கல்யாணம் செய்து வைங்க” இப்போது துணிச்சலுடன் பேசினாள் யாழினி.

“அடியேய் குந்தானி! நான் திட்டினா மட்டும் கோபப்படுறியே! கொஞ்சமாவது அறிவு இருக்குதா டி உனக்கு? அவனுக்கு முன்னாடி விஜி இருக்கா. அவளுக்கு முடிக்காம இவனுக்குச் செய்வாங்களா? அது மட்டுமில்லாமல் நான் மட்டும் முடிவு எடுக்கிற விஷயம் இல்லை. அப்பா தான் முடிவு எடுக்கணும். அதைவிட அண்ணா கிட்ட விஷயத்தைச் சொல்லணும். இதை எல்லாம் விட அந்தப் பெண் வீட்டில் ஒரு முறையாவது நாம் பேசிப் பார்க்கணும் .பிறகும் அந்தப் பெண் உறுதியா இருந்தா அப்போ வேண்டுமானால் யோசிக்கலாம். நல்லா கேட்டுக்கோ! இப்பவும் நான் யோசிக்கலாம்னு தான் சொல்கிறேன்”

“அப்போ எனக்காக நீங்க எதுவும் செய்ய மாட்டீங்களா பாவா? தானே முடிவு எடுக்காம இந்தக் காலத்திலும் நம்ப முடிவுக்காக வந்து நிற்கற புள்ளைக்கு எதுவும் செய்ய மாட்டீங்க! அப்படித் தானே?”

செல்லமாக அவளின் தலையில் கொட்டியவன் “புரிஞ்சிக்க டி! உனக்காக மட்டும் இல்லை என் தம்பிக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆனா இதில் ஒரு பெண்ணோட வாழ்க்கையும் ரெண்டு குடும்பத்தோட கவுரவமும் இருக்கு. அதான் யோசிக்கிறேன். வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். அந்தப் பெண் வீட்டைப் பற்றி விவரம் சேகரித்து அப்பாவுக்குத் தெரியாமல் அண்ணா கிட்ட பேசி சுமூகமா முடிக்க வழி செய்கிறேன். போதுமா?”

“ம்ம்ம்...” என்று அவள் உம் கொட்டவும் தன்னுடைய பார்வை சற்றே மனைவியின் உதட்டை நோக்கிப் போகவும் சுதாரித்தவன் “ஹேய்! எழுந்திரு டி... நான் உட்காரச் சொன்னா நீயும் வந்து மடியில் உட்கார்ந்திடுவியா டி குந்தாணி? ஐயோ! அம்மா! காலை உடைச்சிட்டாளே… இப்போ மாவு கட்டுதான் போட...”

எழுந்து அவன் வாயைத் தன் கைகளால் மூடியவள் “டேய் கட்டதுரை! உன்னைக் கொன்னுடுவேன் டா. நீங்க தானே என் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைச்சிங்க? சொல்லு செல்லம், செல்லம் எல்லாம் சொல்லிட்டு இப்போ கால் உடைச்சிட்டேனு கூப்பாடா போடுறீங்க? இனி வாயைத் திறந்தீங்க.. உங்க பல்லை எல்லாம் பேர்த்துக் கையில கொடுத்திடுவேன். எந்த சத்தமும் வரக் கூடாது! மூச் பேச்சு இல்லாமப் படுங்க” என்று மிரட்டிய படி மெதுவாக இவள் கையை விலக்க..

“ஹா... ஹா...” என்று சிரித்த படி மனைவியையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் உருண்டான் நந்து.

மனைவியிடம் சொன்ன மாதிரியே அந்தப் பெண் வனிதாவின் குடும்பத்திடம் இவன் பேச அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் ஒத்துக் கொண்டாலும் வனிதாவின் தாய் மாமன் மட்டும் சவடால் விட்டு அதிகமாக வேலையைக் காட்ட, ஊர்க்காரர்கள் என்பதால் உத்திராபதியிடம் விஷயத்தைச் சொல்லி அவன் மூலமாக சரிக் கட்டின பிறகு அவர்கள் வீட்டாரிடம் விஜியின் திருமணத்திற்குப் பின் தான் இவர்கள் திருமணம் என்பதைப் பேசி முடிவெடுத்தார்கள் அண்ணனும் தம்பியும்.

அன்றிரவு வீட்டிற்குத் தாமதமாக வந்தவன் தூங்கியிருந்த மனைவியை நெருங்கி இடுப்பில் கை போட்டு அவளின் முதுகைத் தன் நெஞ்சோடு இறுக்கியவன் “ஹேய் குந்தாணி! உன் பாவா ஒரு விஷயம் சொல்லவா?” என்று இவன் கிரக்கமாக கேட்கவும் அவளோ அமைதியாகக் கண் மூடிப் படுத்திருந்தாள்“நீ ம்ம்ம் கொட்டினாதான் நான் சொல்லுவேன்” இப்பொழுதும் அவள் அமைதி காக்கவும் விஜயன் விஷயம் காயா பழமா என்று உனக்குத் தெரிய வேண்டாமா? என்னைத் தவிர யாரும் உனக்கு சொல்ல மாட்டாங்க டி குந்தாணி இவன் கறார்றாக சொல்லவும் அதில் பட்டென்று விழித்தவள் அவன் கேட்ட “ம்ம்ம்” மை சொல்லவும்

‘ஓஹ்ஹோ! மேடம் விஜயன் விஷயமா நாம என்ன கேட்டாலும் செய்வா போலயிருக்கே!-விடாதே டா நந்து! விடாதே…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் “உன் பாவாவை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடு டி செல்லம்!” என்று பேரம் பேச, அதிர்வுடன் திரும்பிக் கணவனின் முகம் பார்த்தவள் எனக்கு ஒன்றுமே தெரிய வேண்டாம் போ…” என்று சிணுங்கிய படி அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ள அதில் சற்றே நகர்ந்தவன் மறுபடியும் அவளை நெருங்கி

“நீ கொடுக்கலைனா என்ன? நான் கொடுக்கிறேன் டி” என்று சொன்னவன் “அவர்களிடம் பேசியதற்கு…” என்று சொல்லியபடியே நெற்றியில் இதழ் பதித்தவன் “அவங்க அப்பா…” இப்போது வலது கண்ணில் இதழ் பதித்தவன் “அவங்க அம்மா…” என்று சொல்லி இடது கண்ணிலும் இதழ் பதித்தவன் “அவங்க வீட்டில் சம்மதம் சொல்லிட்டாங்க” கூறியபடி அவளின் இதழை நெருங்க, கணவனின் நோக்கம் புரிந்து கையால் தன் இதழ் மூட அதேநேரம் அவனின் இதழின் தீண்டல் அவளின் உள்ளங்கையில் போய் முடிந்தது.

“இந்த குந்தாணி இப்படி பழி வாங்கிட்டாளே” என்று கூறி சலித்தவன் “அவ்வளவுதான் போடி!” என சொன்னாலும் அவளை அணைத்துக் கொண்டு படுக்க “அதான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டாங்களே! இன்னும் என்ன அணைச்சுக்கிட்டு இருக்கீங்க? தள்ளிப்படுங்க…” என்று முணுங்கவும் “நீ என்னடி சொல்லுறது?” என்றவன் அவளின் முகத்தை நெஞ்சில் புதைத்தவன், “என் தங்கம்! என் உரிமை! நான் குடு குடு கிழவனா ஆனாக்கூட உன்னையை இப்படி அணைத்துக் கொண்டே இருப்பேன் டி!” என்று மேலும் மேலும் சீண்ட இவ்வளவு நேரம் இருந்த வீம்பை எல்லாம் தூக்கி போட்டு விட்டு தன்னவனை அணைத்துக் கொண்டாள் யாழினி.

காலையிலிருந்தே வீட்டில் இருந்தவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அன்று நந்துவின் வாழ்வில் ஒரு பொன்நாள்! இன்றைய நாளுக்காகத் தானே அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்! ஆனால் இந்நாளுக்காக யாழினி தவமே இருந்தாள் எனலாம்.

“டேய் சபரி! நான் உன்னைப் ப்ளூ கலர் பேன்ட் தான் போடச் சொன்னேன் ப்ளூ ஷர்ட் இல்லை. சிந்துஜா! நீயும் உன் அண்ணன் கூட சேர்ந்து ப்ளூ ஃப்ராக் எடுத்திட்டியா? போ போய் உள்ள வை. நீ கடைசியா போட்டுக்கோ. அப்போ தான் விழாவுக்கு போகும்போது கசங்காம இருக்கும்”

“அண்ணி! நானும் கோட் போடணுமா?”

“விஜய்! நீ மட்டும் இல்லை, பெரிய மாமாவும் கோட் போடணும்! சொல்லிடேன்…”

“ஏன் மா! எனக்கு வழக்கம் போல இந்த வெள்ளை வேட்டி சட்டையே கொடுத்திடேன்”

“மாமகாரு! அதெல்லாம் முடியவே முடியாது. அழகா ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி போட்டுகிட்டு ப்ளூ கலர் சட்டை போடுறீங்க!” என்று யாழினி ஆளாளுக்கு உத்தரவு இடவும், இதையெல்லாம் தங்கள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நந்து

“கீதா!” என்று மனைவியை அழைக்க, அவன் முன் வந்து நின்றவளிடம்

“ஏன் டி இப்படி எல்லாரையும் படுத்துற? அவங்களுக்கு எப்படி வரணும்னு தோணுதோ அப்படியே வரட்டும் விடு…” என்று தன்மையாகச் சொல்ல

“இன்றைக்கு நீங்க எதுவும் பேசக் கூடாதுன்னு முதலிலேயே சொல்லியிருக்கேன் தானே பாவா? இன்னும் நீங்க சாப்பிடலை. மதியம் இரண்டு மணிக்கு நீங்க ஸ்கூலில் இருக்கணும். சீக்கிரம் கிளம்புங்க அப்போ தான் மாலை ஆறு மணிக்கு விழாவில் இருக்க முடியும். கிளம்புங்க” என்று கணவனை விரட்டியவள் அவன் எடுத்துக்கொண்டு போகும் பையில் எல்லாம் சரியா இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்தவன்

“எல்லோர் கூடவும் ஈவினிங் நீ சீக்கிரமே வந்திடுவ தானே டி? இல்லை இப்போதே என் கூட வரீயா குந்தாணி?” என்றவனின் குரலில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு.

நந்துவின் தலைமையில் அவனிடம் பயிற்சிபெற்ற ஹாக்கி குழுவினர் இன்னும் நாலு மாதத்தில் ஜெர்மன் செல்லவிருப்பதால் அவனைப் பாராட்டி கவுரவித்து ஒரு அமைப்பினர் இன்று மாலை விழா நடத்துகின்றனர். அதற்காக இவன் பள்ளி சென்று, பின் அவர்களுடன் விழாவுக்குச் செல்ல வேண்டும். ஏனோ இன்று அப்படி போகவே அவனுக்கு மனசு இல்லை. அவன் வாழ்வின் முக்கியமான தருணம் தான் இது. ஆனால் இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக அவன் உள்ளுணர்வுக்குப் படவும் ஆயிரம் முறையாவது சீக்கிரமே வந்திடுடி என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் நந்து.

இடுப்பில் கை வைத்தபடி கணவனை முறைத்தவள் “நான் இல்லாம எப்படி பாவா? இன்றைக்கு எல்லோரையும் இந்த டிரஸ் தான் போடணும் என்று சொல்லி விரட்டி விரட்டிக் கிளப்பிகிட்டு இருக்கேன். அப்போ நான் இல்லாமலா? நீங்க கிளம்புங்க நான் வரேன்” என்று அவளும் காலையில் இருந்து இரண்டாயிரமாவது முறையாக சொல்லிக் கொண்டேயிருக்க, மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றான் நந்தன்.

மாலை இவள் ரெடியாகிக் கொண்டிருந்த நேரம் அவளுக்குப் போனில் அழைப்பு வரவும், அதிலிருந்து வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தவள் இதற்கு வேறு யாரையாவது சென்று பார்க்கச் சொல்லலாம் என்று நினைத்தவள் அதுவும் சரி வராது என்ற முடிவில் தந்தை இல்லாத இந்த நேரத்தில் தான் சென்றால் தான் சரியாக இருக்கும் என்ற முடிவை எடுத்தவள் கணவனை மேடையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இப்போது இது தான் முக்கியம் என்று நினைத்தவள் நிகழ்ச்சிக்காகப் போட்ட அலங்காரத்தைக் கலைத்துவிட்டு சாதாரணமாக வெளியே வந்து வீட்டில் இருந்தவர்களிடம் தான் முக்கியமான வேலையாக வெளியே செல்ல வேண்டும் என்றும் எதையும் கணவனிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னவள் தான் சீக்கிரம் வருவதாகச் சொல்லி ஒரு வழியாக வீட்டில் உள்ளவர்களை அனுப்பினாள். பின் அவளும் ஒரு கால் டாக்ஸியைப் பிடித்துக் கிளம்பி விட, உண்மையிலேயே அவளின் வேண்டுதல் எல்லாம் சீக்கிரம் முடித்து கணவனிடம் செல்ல வேண்டுமே என்பதாகத் தான் இருந்தது.

இங்கு நந்து, தன்னவள் தேர்ந்தெடுத்த கோட் சூட்டில் தன் குழுக்களுடன் கம்பீரமாக மேடை ஏறியவன் நிமிர்ந்து தன் வீட்டாருக்காக முன் வரிசையில் ரிசர்வ் செய்திருந்த இடத்தைப் பார்க்க அங்கு தன் மனைவியைத் தவிர அனைவரும் இருக்கவும் இவன் விஜயனைப் பார்த்துக் கண்ணால் கேட்க, அவனோ அண்ணனின் பார்வையைத் தவிர்த்தான். அவனுக்கே தெரியாத விஷயத்தை என்னவென்று சொல்லுவான்?

‘தெரியும் டி! எப்போதுமே நான் உனக்கு இரண்டாம் பட்சம் தான் டி! என்னுடைய வெற்றியை எல்லாம் நீ பார்க்க நினைப்பியா?’ என்று மனதிற்குள் புலம்பியவன் தான் இருப்பது மேடை என்பதால் அமைதி காத்தான். ஆனால் மனைவியை ‘அவ்வளவு தூரம் வந்திடு டி என்று கெஞ்சியும் நீ உன் திமிரைக் காண்பிச்சிட்டியே டி?’ என்று மனதில் வறுத்து எடுப்பதை மட்டும் விடவேயில்லை. தொடர் அர்ச்சனை நடந்தது யாழினிக்கு.

விழாவில் இந்தியாவுக்கு ஹாக்கியில் உலக கோப்பையை வாங்கித் தந்த முன்னாள் ஹாக்கி வீரர் தலைமை தாங்கி, நந்துவின் திறமையையும் செயல்திறனையும் பாராட்டியவர், இப்படியே அவன் குழுக்களில் உள்ள பிள்ளைகளை வழி நடத்தினால் நிச்சயம் அவர்கள் ஜெர்மனியில் நடக்கும் நாடுகளுக்கிடையேயான மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று ஆரூடம் சொல்லவும், தான் ஹீரோவாக நினைப்பவரின் வாயால் இப்படி ஒரு வார்த்தையைக் கேட்ட நந்து மனது பூரிப்படைய, அவனின் பெற்றோரும், உடன் பிறப்புக்களும் மனதால் குளிர்ந்தனர்.

“பெற்றோர்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளைப் பேரும் புகழும் மற்றும் பணம் கொழிக்கும் விளையாட்டில் விருப்பம் இல்லாமல் சேர்ப்பதை விட குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கோ அந்த துறையில் சேர்த்து விடுவது அவர்களுக்கும் நல்லது, நலிந்து வரும் பல விளையாட்டுகளுக்கும் நல்லது. இனிமேலாவது நம் பின் வரும் சந்ததிகளுக்கு நாம் ஏன் வழிகாட்டியாய் இருக்கக் கூடாது? இது என்னுடைய ஆதங்கம் மற்றும் கோரிக்கையே தவிர கட்டளை எல்லாம் கிடையாது தோழர் தோழமைகளே!” என்று அந்த விளையாட்டு வீரர் தன் உரையை முடிக்க, அன்றைய விழாவும் இனிதே முடிந்தது.

அங்கேயே டின்னர் என்பதால், குடும்பத்தினருடன் அமர்ந்து உணவை கொறித்துக் கொண்டிருந்தவனிடம், “யாழினிக்கு ஏதோ வேலையாம்” என்று சொன்னதற்கு “ம்...” கொட்டியதொடு உணவை முடித்து விட்டு அவர்களை வழி அனுப்பினான். பின் சில வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வர இரவு ஆனது. வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, இவன் நேராக தங்கள் அறைக்கு வர, அங்கே யாழினி தன்னவனுக்காகக் காத்திருந்தவள் குளித்து முடித்து ஈர தலையுடன் இருந்ததால், கண்கள் சொருக கணவன் வந்தது கூட தெரியாமல் சோர்ந்து போய் கட்டிலில் படுத்திருந்தாள்.

அதைப் பார்த்தவனுக்கு சர்ரென ராக்கெட் போல் கோபம் ஏற, கோட் டைக் கழற்றி மனைவியின் முகத்திலேயே விசிறியடித்தவன் “உன்னைப் பற்றி தெரியும் டி எனக்கு. நான் நல்லா வந்தா உனக்குத் தான் பிடிக்காதே? எப்போதும் நான் உனக்குக் கீழேயே இருக்கணும் டி. அதனால் தானே இன்று என் வளர்ச்சியைப் பார்க்க வரலை? ஆனா காலையில் என்னமா பேசின டி? நீ செய்த செயலால் இந்தப் பிறவியில் நான் இழந்தது அதிகம். அப்படி இருந்தும் ஒரு கணவனா உன்னை இன்று தேடினேன் பாரு! ச்சை... அன்று நடந்த விபத்தில் ஒன்று நான் செத்திருக்கணும் இல்லைனா நீ என் வாழ்க்கையிலேயே வராம இருந்திருக்கணும். இது இரண்டும் நடக்கலை என்னும் போது நிச்சயம் இனி என் வாழ்க்கை நரகம் தான் டி!” என்று எந்த வார்த்தையெல்லாம் ஒரு கணவன் மனைவிக்குள் வரக் கூடதோ அந்த வார்த்தையெல்லாம் சர்வ சாதாரணமாக கோபத்தில் வீசி விட்டு வெளியே சென்று விட, ஆணி அடித்தார் போல் அப்படியே அமர்ந்து விட்டாள் யாழினி.

‘என்ன வார்த்தை பேசிவிட்டார்! செத்திருக்கணுமாமே? நான் அவர் வாழ்க்கையில் வந்தே இருக்கக் கூடாதாமாம்! அப்போ இவருக்கு எல்லாமே தெரியுமா? கடைசியில் என் வாழ்க்கை நரகம்னு சொல்லிட்டார்! அப்ப கூட நம்ப வாழ்க்கைனு சொல்லவில்லையே?’ என்று எண்ணியது அவளின் காதல் கொண்ட மனது.

வெளியே சென்ற நந்துவோ தன் கோபம் மட்டுப்படும் வரை நடந்தவனின் கைபேசி, அவனை அழைக்கவும் எடுத்துப் பார்த்தவன், அழைப்பது மாமானார் என்றதும் என்ன இந்த நேரத்தில் கூப்பிடுகிறார் என்று யோசனையோடு அதை ஏற்றுக் காதில் வைத்தவன் “சொல்லுங்க மாமா!” என்றதும்

“மாப்பிள்ளை! விழா எல்லாம் எப்படி முடிந்தது? நீங்க வீட்டுக்கு வந்த பிறகு தான் பேசணும்னு நினைத்துப் பண்ணினேன். யாழினிக்குப் போன் செய்தேன் எடுக்கலை. அதான் உங்களை அழைத்தேன் மாப்பிள்ளை. பாவம் என் மகள் தனியா ரொம்ப சிரமப்பட்டு விட்டதா? மதர் சொன்னாங்க… நான் இல்லாம எல்லாத்தையும் சரி செய்து பிறகு விழாவுக்குப் போக முடியலைன்னு என் ராஜத்தி ரொம்பவே அழுதிட்டு இருந்...”அவருடைய வார்த்தை முடிவதற்குள்

“மதருக்கு என்ன ஆனது மாமா?” இவன் பதட்டத்துடன் கேட்க

“உங்க கிட்ட யாழினி எதுவும் சொல்லலையா மாப்பிள்ளை? ஹோமில் திடீர்னு எலெக்ட்ரிக் சர்க்கியூட்ல ஏதோ ஷார்ட் ஆகி நெருப்புப் பிடிச்சிருக்கு. யார் உயிருக்கு ஆபத்து இல்லைனாலும் நிறைய பேருக்குக் காயம் ஏற்படவோ, கவர்மென்ட் ஆஸ்பிட்டலில் பசங்களை அட்மிட் செய்ய மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். மதர் வேற இல்லாததினால் அங்கே இருக்கிறவங்க பயந்து என்னை அழைக்க முயற்சி பண்ணி இருக்காங்க. நான் வெளிநாட்டில் இருக்கவும், அடுத்து ராமுக்கும் அழைக்க, அவனும் மும்பை போய் இருக்கவே என்ன செய்றதுனே தெரியாம தான் யாழினிக்குச் சொல்ல, பாப்பா உடனே கிளம்பிப் போயிருக்கு.

எனக்குத் தெரியும் மாப்பிள்ளை, பாப்பாவுக்கு இந்த விழா எவ்வளவு முக்கியம்னு! இந்த அமைப்பின் தலைவர் என் கிட்ட வந்து உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப் போவதா சொன்னார். அதை பாப்பா கிட்ட சொன்ன போது, அப்பா இந்த விழாவைச் சிறப்பா செய்யணும். அவருடைய ஹீரோவையே தலைமை தாங்க வைக்கணும் என்று அப்படி இப்படினு பிளான் எல்லாம் போட்டுட்டு உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு என் கிட்ட சொன்னா. என் பொண்ணு அவ்வளவு ஆசையா பார்த்துப் பார்த்து செய்தது எல்லாம் நடக்கப்போற அந்த பொன்னான நாளில் போக முடியாம ஆகிடுச்சேனு பாப்பா ரொம்பவே அழுதுட்டா மாப்பிள்ளை!”

“ஆங்...” அவனால் எப்படி பேச முடியும்? அவன் கண்ணிலிருந்து தான் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறதே! தன்னை சமாளித்தவன் “நான் பார்த்துக்கிறேன் மாமா” என்று அவருக்கு உறுதி அளித்தவன் அதே உறுதியுடன் “ச்சை... நான் என்ன செய்து வைத்திருக்கேன்? எனக்குத் தெரிந்தா என்னால் விழாவில் ஒன்ற முடியாதுன்னு வீட்டில் கூட யார்கிட்டையும் சொல்லாம இவளே எல்லாத்தையும் செய்து இருக்காளே! எனக்குப் பிடித்தவரை கண்ணெதிரில் பார்க்க வைத்திருக்கா. என்னுடைய சந்தோஷத்திற்காகவே பாடுபட்டவளை என்னவெல்லாம் சொல்லிட்டேன்! இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று தோன்றியதே! அது இதுதானா?’ என தன்னந்தனியாக புலம்பிய படி வீட்டை நோக்கி வேகமாக வந்தவன் கதவைத் திறந்து உள்ளே வர,

அவன் மனைவியோ அவர்களின் அறையில் இல்லை. சற்றே அதிர்ந்தவன் ‘எங்கே போய் இருப்பா? வெளியே போக வழியும் இல்லை. ஏன்னா நான் தான் வீட்டைப் பூட்டிக் கொண்டு போனனே! ஒருவேளை…’ என்று யோசித்தவன் மேலே மாடிக்குப் போக, அவன் நினைத்தது போல் அவன் மனைவி அங்கு தான் இருட்டில் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். கணவன் வந்த அரவம் கேட்டும் திரும்பாமல் இருக்க..

“சாரி டி செல்லம்மா...!” என்று அவளை இவன் நெருங்க

“அங்கேயே நில்லுங்க!” என்று அதிகாரத்துடன் கட்டளை இட்டவள் “இனி இந்த செல்லம்மா மூக்கம்மா என்று எந்த கொஞ்சலும் வேண்டாம். எல்லா இடத்திலும் நமக்காக நான் பார்த்துப் பார்த்துச் செய்தால், நீங்க என்னைக் குற்றம் சொல்லி விலக்குவதிலேயே குறியா இருக்கீங்க. நான் என்ன செய்தா உங்களோடவளா என்னைப் பார்ப்பீங்க? நான் கனவிலும் நினைக்காததை எல்லாம் என் மேலே பழியா சுமத்தி என்னை வார்த்தைகளால் ஒவ்வொரு நிமிடமும் கொன்னுக்கிட்டு வரீங்க…” என்று தன் குமுறலைக் கொட்டி விட்டுத் திரும்பி இருளை வெறித்தவள்,

“நீங்க இந்த துறையில ஜெயிக்கணும் என்பது நான் எடுத்துக் கொண்ட சங்கல்பம் பாவா! ஏன்? என் வாழ்நாள் தவம்னு கூட சொல்லலாம்…” என்று குரல் கம்மியபடி சொல்லியவள் அதே குமுறலுடன் அந்த இடத்தை விட்டுப் போக, கொட்டிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தவன் விக்கித்துப் போய் நின்றே விட்டான் நந்து.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN