என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் - 16

இரண்டாவது முறையாக கோபத்தில் பேசக் கூடாததை எல்லாம் பேசி, மனைவியின் மனதை உடைத்தான் நந்து. ‘எனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்தவளுக்கு நான் என்ன செய்தேன்? அபாண்டமான பழி சுமத்தியதைத் தவிர வேற என்ன செய்தேன்? கோபத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற மாதிரி வார்த்தைகளை விட்டுட்டேன். அதை எல்லாம் என் செல்லம் மனதில் ஏற்றி இருப்பாளா? இருக்காது… அவள் எதையும் மனதில் வைத்திருக்க மாட்டா. ஒருவேளை நான் சொன்னதை உள்வாங்கி இருந்தா இந்நேரம் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிட்டு என்னைப் பிரிந்து போய் இருப்பளே!’ என்று தனக்குள் பலவாறு சிந்தித்தான்.

பிறகு வந்த நாட்கள் எல்லாம் இப்படியாக நினைத்துக் கொண்டு சுற்றினானே தவிர மனைவியிடம் என்ன விளக்கம் கொடுத்து சமாதானப் படுத்த வேண்டும் என்பதையே அறியாமல் இருந்தான் நந்து. ஏனென்றால் அவன் பேசிய வார்த்தை அப்படியானதே! சும்மாவா சொல்வார்கள்? பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான்! பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்! என்று.

யாழனியோ, கணவனிடம் மட்டும் இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசாமல் தன் இயல்பை இழந்து சுற்றிக் கொண்டிருந்தாள். எல்லோரும் சேர்ந்திருக்கும் பொழுது, மாடியில் நிலா சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த மாதிரி நேரத்திலும் யாழினி ஒதுங்கியே இருக்கவும்

“அவளுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா நந்து? நான் எது கேட்டாலும் எதுவும் இல்லைன்னு தான் சொல்கிறா. ஆனா சோர்ந்த முகத்துடன் எப்போதும் ஏதோ யோசனையாவே இருக்கா. மாமா கூட என்னை ரெண்டு தடவை கேட்டுட்டார், நீ என்ன தான் பார்த்துக்கிற என்று?” சந்தியா நந்துவிடம் கோபப்பட

“உடம்புக்கு எதுவும் இல்லை அண்ணி! தீசிஸ் சப்மிட் பண்ணனும், அந்த டென்ஷன்ல இருக்கா. நான் பார்த்துக்கிறேன் அண்ணி!” என்று பொய்யாக உரைத்தவன் மனைவியைத் தேடிப் போக அங்கே அவளோ டேபிள் முன் அமர்ந்து அவளின் படிப்புக்கான நோட்ஸை எடுத்துக் கொண்டிருந்தாள்.

“இங்கே பார் கீதா! நான் பேசினது தப்பு தான், அதற்குத் தண்டனையா என்னை நாலு அடி கூட அடிச்சிடு. இல்லையா, கோபமாவது பட்டு வாயைத் திறந்து திட்டவாது செய் டி. ஆனா இது எதையும் செய்யாம உன்னை நீயே வருத்திக்கிட்டா எப்படி டி?” என்று கோபப்பட்டு நந்து இவ்வளவு பேசிய பிறகும் அவள் மவுனமாக இருக்கவும், “நீ நடந்துக்கிற விதத்தைப் பார்த்து எல்லாரும் என்னையைத் தான் கேள்வி கேட்கிறாங்க. நீ அவளைப் பார்த்துக்க மாட்டியா என்று அண்ணி கூட என்னிடம் சண்டை போடுறாங்க. ஏன் டி... இப்படி செய்கிற?” என்று அவன் குரல் ஆற்றாமையோடு ஒலிக்கவும்

“ஓ... அக்கா உங்களைக் கேள்வி கேட்டதாலே தான் நீங்க என்கிட்ட வந்து பேசுறீங்களா? இல்லைனா என்னைக் கண்டு கொள்ளக் கூட மாட்டீங்க இல்ல? அந்த அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளா ஆகிட்டேன். இப்ப என்ன? இனி எல்லோர் எதிரிலும் பார்த்து நடந்துக்கிறேன். அப்படியும் உங்களுக்கு நான் இருக்கிறது தொந்தரவா இருந்தா நான் கொஞ்ச நாள் என் அப்பா வீட்டில் போய் இருக்கேன்”.

“ஏய்ய்!...” என்ற உறுமலுடன் மனைவியை நெருங்கியவன் “நான் இப்ப என்ன கேட்டுட்டேன் இப்படியெல்லாம் பேசுற கீதா?”

“என்ன நடந்தாலும் நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்னு சொன்னவ தானேடி நீ?” என்று ஆதங்கத்துடன் கேட்கவும், “ஓஹோ… இதெல்லாம் கூட ஞாபகம் இருக்கா? அப்படி இருந்த என்னை மாற்றினது உங்க வார்த்தைகள் தானே?” என்று கண்களில் வெறுமைபடற சொல்லி முடித்தவள் அதன் பிறகு வந்த நாட்களில் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் கணவனிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள் அவனின் குந்தாணி.

இப்படியே நாட்கள் செல்ல ராம் பிரசாத்துக்கு அவர்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி பொருத்தமான பெண்ணைப் பார்த்து பாரிவேந்தர் முடிக்க, அதையே சாக்காக வைத்து வீட்டில் இருப்பவர்களிடமும் கணவனிடமும் சொல்லிக் கொண்டு அப்பா வீட்டுக்குச் சென்றாள் யாழினி. கொஞ்ச நாள் இருவரும் தனித்தனியாக இருந்தால் ஏதோ ஒருவகையில் குழப்பம் தீருமோ என்ற எண்ணம் அவளுக்கு. தான் செய்த விஷயங்கள் கணவனுக்குக் கடுப்பு தருவதால் அவனை விட்டு ஒதுங்கினாள் அவள். தன் அண்ணன் திருமணத்திற்குப் பிறகு நிரந்தரமாகப் பிரிவதற்கு முடிவெடுத்திருந்தாள் யாழினி. அதனால் இந்த விஷயங்களிலேயே உழன்று கொண்டிருக்காமல் அவளுடைய Ph.D விஷயமாக லண்டன் செல்ல வேண்டியிருப்பதால் அதற்கான விசா விஷயத்தில் தன்னை உட்புகுத்திக் கொண்டாள் அவள்.

ஆனால் நந்துவுக்கோ ஏதோ உப்பு சப்பு இல்லாத வாழ்வாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாய் கழிய இத்தனை வருடம் அவள் நினைவே இல்லாமல் திரிந்தவனுக்கு, பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா போல் எங்கு பார்த்தாலும் எதை எடுத்தாலும் மனைவியின் நினைவாகவே தான் இருந்தது. இப்போது போய் கூப்பிட்டால் கூட மனைவி வந்துவிடுவாள் என்பது இவனுக்குத் தெரியும் தான். ஆனால் அவளாகவே போனவள் அவளாகவே வரட்டுமே என்று சராசரியான ஆண்களைப் போல ஈகோ தடுக்க, போகாமல் இருந்தான் நந்து.

திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஒரு நாள் பாரிவேந்தருக்குப் பெண் வீட்டாரிடமிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசியவரின் முகம் கவலையைத் தத்து எடுத்தது. சற்று நேரம் யோசித்தவர் பின் வீட்டுக்கு வந்து மனைவி மக்கள் இருவரையும் அழைத்தவர், “ராம்! பங்குச் சந்தையில் இன்வெஸ்ட் செய்திருந்த உன் பங்குகள் எல்லாம் லாஸ் ஆகிடுச்சா?” என்று கேட்க

“அப்பா! அது வந்து…” என்று அவன் தலை குனியவும்

“சரி விடு ராம்! லாஸ் ஆனது பரவாயில்லை. இனி அவ்வளவு பணத்தையும் எப்படி சரி செய்யப் போற நீ?”

பாரிவேந்தர் எப்போதுமே பாசம் கலந்த கண்டிப்பையே தான் தன் பிள்ளைகளுக்குக் காட்டுவார். அதிலும் பண விஷயத்தில் அதிக கெடுபிடி எல்லாம் இருக்காது. பணத்தோட மதிப்பையும் அருமையையும் சொல்லிக் கொடுத்திருப்பாரே தவிர பணம் தான் வாழ்வு என்று வளர்த்ததில்லை. ஆனால் இன்று பெண் வீட்டார் ‘இப்படியே உங்க பிள்ளை எல்லா பணத்தையும் இழந்து வந்தா என் மகள் வாழ்வு என்ன ஆகுறது?’ என்று கேள்வி கேட்கவே இவ்வளவு நாள் இல்லாமல் இன்று பிள்ளையிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார் அவர்.

“என்னால் முடிந்த அளவுக்கு நான் சமாளித்து அடுத்த முறை எடுத்திடுவேன் பா!” தர்மசங்கடத்துடன் இருந்தாலும் உறுதியோடு ஒலித்தது ராமின் குரல்.

“என்னப்பா திடீர்னு இப்படி கேட்கறீங்க! அண்ணா ஒன்றும் ஊதாரி இல்லையே பா? அவர் நேரம், எல்லாம் நஷ்டத்தில் போகுது” என்று யாழினி அண்ணனுக்காகப் பேசவும்

“அது எனக்குத் தெரியாதா மா?... ஆனா பெண் வீட்டுப் பக்கம் கேட்கிறாங்களே? இப்படியே போனா என் பெண்ணுக்கு ஒண்ணுமே இருக்காதுனு சொல்லுறாங்க. அதனால் உங்க எல்லோரையும் விட இவனுக்கு மட்டும் ஷேர் அதிகமா கேட்கிறாங்க. அதிலும் அவங்க பெண் பெயரில் திருமணத்திற்கு முன்பே எழுதி வைக்கணும் என்று கேட்கிறாங்க”

“அட்ரா சக்கை! பிடித்தாலும் பிடித்தோம் நல்ல புளியங்கொம்பா பிடித்தோம் என்று எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு நம்மளை நடுதெருவில் விடப் பார்க்கிறாங்களா?” என்று அலமேலு எகிற…

“ஓ...” அண்ணனைப் பார்த்தவள் அவன் தலை குனிந்து இருக்கவும் “அதனால் என்னப்பா? அப்படியே செய்திட்டா போகுது. இதில் என் பங்கு மொத்தத்தையுமே அண்ணனுக்குக் கொடுத்துடுங்க பா. பாவா கிட்ட கேட்கணும்னு கூட இல்லப்பா” என்றவள் அவள் தந்தை ஏதோ சொல்ல வருவதற்குள் சற்றுத் தள்ளிச் சென்று கணவனைப் போனில் அழைக்கவும் இங்கிருக்கும் சூழ்நிலை அறியாமல் போனை எடுத்தவன்,

“ஹாய் குந்தாணி! இப்பதான் உன் பாவா ஞாபகம் வந்ததா?” என்று மனைவிடம் கொஞ்ச இவள் பல்லைக் கடித்தபடி “இப்படியெல்லாம் பேசினீங்க பல்லைக் கழட்டிடுவேன்” என்று எகிற, அந்தப் பக்கம் நந்துவோ “என்னது சட்டையைக் கழட்டப் போறியா? நான் ரெடி டி குந்தாணி!” என்று சில்மிஷமாகச் சொல்ல, பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவள் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் அவனின் குந்தானி. “பக்கத்தில் அப்பா இருக்காங்க, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்க” என்றவள் அனைத்தையும் விவரமாகச் சொல்லி முடிக்க, மனைவியின் பேச்சைக் கேட்ட அடுத்த நிமிடமே அவளின் செயலுக்கு ஆமோதித்தான் அவளின் மணவாளன்.

அதன் பிறகு தன் இரு அண்ணன்களிடம் பேச, அவர்களும் தங்கள் பங்கையையும் கொடுக்க முழுமனதாகச் சம்மதித்தார்கள். அதையும் அவள் தன் தந்தையிடம் சொல்லத் தன் பிள்ளைகளை நினைத்துப் பெருமைப் பட்டார் பாரிவேந்தர். ஆனாலும் அவர் முகம் யோசனையில் தான் இருந்தது.

இந்த திருமணம் காதல் திருமணம் இல்லை என்றாலும் இப்போது பேசி முடிவான பிறகு அண்ணன் விரும்புகிறானே, இந்த திருமணம் நடக்காமல் போனால் வருந்துவானே என்றுதான் யாழினி இவ்வளவு அவசரமாகச் செயல் பட்டாள். ஆனால் அதற்கான எந்த சந்தோஷமும் இல்லாமால் ராம் அமர்ந்த இடத்திலேயே தலை குனிந்து இருக்கவும்

“என்னண்ணா? அதான் கல்யாணம் நடக்கப் போகுதே! பிறகு ஏன்னா அமைதியா இருக்க?” என்று யாழினி கேட்க

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் குட்டிமா நிறுத்திடுங்க”

“அண்ணா என்னண்ணா சொல்கிற?”

“இல்லை வேண்டாம் மா.. என்னையும் என் உழைப்பையும் மதிக்காம பணத்தை மட்டுமே மதிக்கிறாங்க. அப்படிப் பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் பா. நிச்சயம் கூட செய்யவில்லை, வெறுமனே பேசி தானே முடிவு செய்திருக்கோம்? மற்றபடி எங்களுக்குள்ளும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லைப்பா. அதனால் அவங்க பெண்ணுக்கு வேற வசதியான இடமா பார்க்கச் சொல்லிடுங்க. இது தான் என் முடிவு. இதற்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு நினைக்காதிங்க. நிச்சயம் நீங்க கை காட்டறப் பெண்ணை நான் கல்யாணம் செய்துக்குவேன் பா. ஆனா வாழ்க்கையில் ஜெயித்த பிறகு செய்துக்கிறேன்” என்று ராம் தன் நிலையில் உறுதியாக இருக்கவும்.

“இல்லைண்ணா…”

“யாழினி! அண்ணன் சொல்கிறது தான் சரி. இந்தக் கல்யாணம் வேண்டாம். இதைத் தான் நானும் சொல்லணும்னு இருந்தேன். என் அன்பு பாசத்தை எப்படி நான் உங்களுக்கு சரி பங்கா கொடுத்தேனோ அதே மாதிரி தான் என் சொத்திலும் உங்களுக்கு சரி பங்கா கொடுப்பேன். நீ ரிலாக்ஸா இரு ராம்! அப்பா நான் பேசிக்கிறேன்” என்று பாரிவேந்தர் தன் மகனுக்கு உற்ற தோழன் போல் பக்கபலமாய் இருக்க எல்லாம் நல்ல படியாவே பேசி முடிக்கப்பட்டது.

கல்யாணம் நின்றும் யாழினி தன் கணவன் வீட்டுக்குப் போகாமல் ஆந்திராவிலேயே இருக்கவும், ஒரு தந்தையாய் மகளின் விஷயம் கவனத்தில் பட, மகளிடம் இதைப் பற்றி கேட்காமல் மருமகனை அழைக்க, அந்த அழைப்பை எடுத்தது விஜி. “மாமா! அண்ணா மொபலை வீட்டில் வைத்துவிட்டு வெளியே போய் இருக்காங்க. எப்படி இருக்கீங்க மாமா? அண்ணன் கிட்ட ஏதாவது சொல்லனுமா? வீட்டில் உள்ளவங்க எல்லோரும் எப்படி இருக்காங்க? ராம் அத்தான் எப்படி இருக்கார்?” என்று இவள் படபடவென விசாரிக்க அப்போது தான் அந்த எண்ணம் உதயமானது பாரிவேந்தருக்கு. முன்பு பேசிய திருமணம் நின்ற பிறகு விஜியைப் போய் பெண் கேட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தவர் பின் நந்துவிடம் மட்டும் தன் எண்ணத்தைச் சொல்ல

“நான் மட்டும் இல்லை மாமா! வீட்டில் இருக்கிறவங்களும் இதற்கு முழு மனதோட சம்மதிப்பாங்க தான். ஆனா இது நடக்கணும்னா நீங்க எனக்கு ஒன்று செய்யணுமே மாமா…”

“சொல்லுங்க மாப்பிள்ளை! விஜி எங்க வீட்டுக்கு மருமகளா வர நான் என்ன வேணா செய்யத் தயாரா இருக்கேன்” என்று உறுதி அளிக்க

“அது ஒன்றுமில்ல மாமா! பிரிந்திருக்கிற சாரங்கன் அத்தானிடம் நீங்க திரும்ப பேசணும். உங்களுக்கும் மனதில் அன்பு பாசம் ஆசை இருக்கு மாமா. அவர் கிட்ட பேசணும்னு துடிக்கிறீங்க. ஆனா எங்க அக்காவை வேண்டாம்னு சொல்லிட்டாங்களே என்ற கோபம் தான் உங்களுக்கு அவர் மேல். அதையே எங்களுக்குச் செய்த குற்றமாகக் கருதி குற்றவுணர்ச்சியில் இருக்கீங்க. நான் இங்கே ஒன்று சொல்லுறேன் மாமா. அவர் என்ன என் அக்காவைக் காதலிச்சா ஏமாற்றிட்டுப் போனாங்க? உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருந்தது. ஆனால் விதியால் அது நடக்காமப் போய்விட்டது. என் அக்காவும் திருமணமாகி நல்லா இருக்காங்க.

பிறகு என்ன மாமா? எங்க வீட்டிலிருந்து ஒரு பெண் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும் என்று தானே நீங்க ஆசைப்பட்டீங்க? அதான் இப்போ விஜி வராளே! இன்னார்க்கு இன்னார்னு என்று தான் இருக்கு. இதைப் போய் நான் உங்க கிட்ட சொல்லணும் என்ற அவசியமே இல்லை. நீங்க இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் நிச்சயம் இந்த திருமணம் நடக்கும் மாமா. ஆனா ஒவ்வொரு முறையும் என் மனைவி உங்க வீட்டுக்கு வரும்போது எல்லாம் உயிர்ப்பே இல்லாம தான் அங்கே தங்குவாள். ஆனாலும் நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம் மாமா!” என்று இவன் முடித்து விட

மாப்பிளை இவ்வளவு சொல்லிய பிறகு அவரால் பிடிவாதமாக இருக்க முடியுமா? இல்லை பெண்ணைத் தான் அவரால் அப்படி பார்க்க முடியுமா? தன் பிடிவாதத்தை விட்டுவிட்டு மகன் குடும்பத்துடன் சந்தோஷமும் கண்ணீரும் போட்டி போட ஒன்றினார் பாரிவேந்தர்.

சாரங்கன் வந்ததைப் பார்த்து வீட்டிலிருந்த மற்ற பிள்ளைகளுக்கும் சந்தோஷம். யாழினிக்கும் சந்தோஷம் என்றாலும் இதற்குக் காரணமான கணவனிடம் மட்டும் அவள் தன் மகிழ்ச்சியை வெளிக் காட்டவில்லை. அன்று ராம் விஷயமாக பேசிய பிறகு இன்றுவரை கணவனிடம் பேசவில்லை அவள். நந்து சொன்ன மாதிரி அவன் வீட்டில் ராம் விஜி திருமணத்திற்கு எல்லோரும் சம்மதித்தனர். ராமுவுக்கும் விஷயம் சொல்ல விஜியிடம் பேச வேண்டும் என்றான் அவன். அதற்கும் வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவும் ஒருநாள் சென்னை வந்தவன்

“உனக்குப் பிடித்துதானே நம்ப திருமணத்திற்கு நீ முழுமனதா சம்மதம் சொன்ன?” என்று விஜியைச் சந்தித்து ராம் கேட்க, அவன் முன் துப்பட்டாவின் நுனியைத் திருகிய படி தலை குனிந்து இருந்தவள்

“எங்க வீட்டில் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்…” அவளிடமிருந்து வந்த பதிலால் புருவம் சுருக்கியவன் நான் உன் சம்மதத்தைக் கேட்டேன் விஜி. இதற்கும் அவளிடம் பதில் இல்லை.

“நான் சாதிச்ச பிறகு தான் திருமணம் என்று வீட்டில் கூறி இருக்கேன். அதற்குள் உன் பதில் எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம்” என்று சொல்லியபடி அவன் அந்த இடத்தை விட்டு விலக எழுந்திரிக்க…

“எனக்கும் பிடித்துத் தான் சம்மதம் சொன்னேன் அத்தான். நம் வீட்டில் குறித்த தேதியிலேயே திருமணத்தை வைக்கச் சொல்லுங்க. நீங்க சாதிச்ச பிறகு நான் உங்களைத் திருமணம் செய்தால் பிறகு அந்தப் பெண் வீட்டுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? நீங்க சாதிப்பீங்க! எனக்கு முழு நம்பிக்கை இருக்கு அத்தான்” என்று அவன் முகம் பார்த்து அவசரமாகச் சொல்லவும், தெளிந்த முகத்துடன்

“தேங்க்ஸ் விஜி! என்று கூறியபடி வெளியில் செல்ல ஒரு அடி எடுத்து வைத்த நேரம்,

“இனி நமக்குள்ளே தேங்க்ஸ் வரக் கூடாது அத்தான்! நோ தேங்க்ஸ்… நோ சாரி…” என்று விஜி மென் நகையுடன் கூறவும் இவன் முகத்திலும் அந்த மென் நகை படர்ந்தது.

விஜி கேட்டுக் கொண்ட மாதிரி பெண் மட்டும் மாற்றப் பட்டது என்ற அறிவிப்புடன் அதே நாளில் அதே நேரத்தில் ராமின் திருமணம் நடந்து முடியவும் அங்கு நடந்த சடங்குகளை எல்லாம் பார்க்கும் பொழுது நந்துவுக்குத் தங்கள் திருமணம் ஞாபகம் வர, அன்று எந்த ஒட்டுதலும் இல்லாமல் தான் இருந்ததை யோசித்தவன் மேடையிலிருந்த மனைவியிடம் நெருங்கி, அவளின் கையைச் சுரண்டியவன்

“கீத்து குட்டிச் செல்லம்! நாம் முதலிலிருந்து ஆரம்பிக்கலாமா டி செல்லம்?” என்று கண்ணில் குறும்புடன் கேட்க, அவளோ முறைப்புடன்

“எதற்கு? மீண்டும் பால் அபிஷேகம் செய்யவா?” என்று பல்லைக் கடித்த படி கேட்கவும்

“அச்சோ செல்லம்! உன் பாவா ரொம்ப நல்லவன் ஆகிட்டேன் டி” என்று கிசுகிசுக்க

“அப்படியா? அதான் அப்பா வீட்டுக்கு வந்த மனைவியைப் பிரிய முடியாம உடனே வந்து அழைச்சிட்டுப் போனீங்க போல!” என்று குத்தல் சொல்லுடன் அவனிடமிருந்து விலக, நந்துவுக்கோ எந்த பால் போட்டாலும் நோ பாலா போகுதே, எது பேசினாலும் சுவற்றில் முட்டிக் கொள்ளும் நிலையாகிப் போனதே என்ற வருத்தம்.

திருமணம் முடிந்தவுடனே மணமக்களை ஆந்திராவில் இருக்கும் தங்கள் வீட்டில் அழைத்து வந்துவிட்டு, யாழினி முன்பே போட்ட பிளான் படி அன்றே அவளுடைய படிப்பு சம்பந்தமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு அவள் சகஜமாகக் கிளம்பவும் நந்து தான் தவித்துப் போனான். ‘இங்கே ஆந்திராவில் இருந்தாலே, போன் செய்தா எடுத்துப் பேச மாட்டா. இதில லண்டன் வேறயா? சரிதான் போ டி… ஆனா திரும்பி வரும் போது உன் பாவாவைப் புதுசா தான் பார்ப்ப! அப்போ என்னை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வருதுன்னு பார்க்கிறேன்…’ எனப் பலவாறு கன்னாபின்னாவென்று தனக்குள் முடிவு எடுத்தவன், மனைவியைக் கண்டு கொள்ளாமல் இருக்க, அழகாகவே கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடினார்கள் கணவனும் மனைவியும்.

யாழினி கிளம்புவதற்கான நேரம் வரவும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவள் கணவனிடம் வரும் போது மட்டும் எதுவும் பேசாமல் உதட்டைக் கடித்த படி நிற்க, “டேக் கேர்… முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடு டி…” அவன் குரல் லேசாக கரகரப்பாக ஒலித்தது. எங்கே வாயைத் திறந்தாள் அழுது விடுவோமோ என்ற பயத்தில் இவளோ “ம்ம்ம்...” என்று மட்டும் தலையாட்ட

“நந்து! நீங்க கூட்டிட்டுப் போகலையா?”

“இல்லை மகேஷ்! நீங்க கூட்டிட்டுப் போய் ஏர்போர்ட் விடுங்க”

‘அப்போ நீங்க வரலையா?’ என்பது போல் இவள் பார்வையால் கேட்க, ‘நான் வந்தா நிச்சயம் உன்னைப் போக விட மாட்டேன் டி’ என்று இவன் கண்களால் செய்தி சொல்ல யாழினி முகம் கூம்பிப் போனது. அவளின் முகத்தைப் பார்த்தவன் மனதிற்குள் ஏதோ செய்ய

“சரி மகேஷ்! நானே அழைச்சிட்டுப் போகிறேன்” என்று சொல்லியபடி காரைக் கிளப்ப, அங்கு மௌனம் மட்டுமே நிலவியது. ஏர்போர்ட் வந்ததும் காரிலிருந்து யாழனி இறங்காமல் அமர்ந்திருக்கவும், சற்றுநேரம் இருவருக்குமே என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஒரு முடிவுடன் அவள் இறங்க நினைக்க உடனே தன்நிலைப் பெற்று மனைவியை இழுத்து அணைத்தவன் ‘ஐ மிஸ் யூடா செல்லம்! சீக்கிரமே வந்துடு டி குந்தாணி! ஐ லவ் யூ டி!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தன்னவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து “ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் சக்சஸ் டி!” என்று வாழ்த்திபடியே மனைவியை அனுப்பி வைத்தான் நந்து.

மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு துவண்டு போய் தங்கள் அறையில் அமர்ந்திருந்த நந்துவிடம் வந்த யாழினி தங்கை அஞ்சலி “என்ன மாம்ஸ்! அக்கா ஊருக்குப் போனதும் உங்களுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆப் இந்தியாவா? அதுக்குத் தான் உங்களைப் பூஸ்ட் பண்ண ஒன்று கொண்டு வந்திருக்கேன்” என்றவள் தன் கையிலிருந்த அழகாக பேக் செய்யப்பட்டிருந்த பரிசுப் பெட்டகத்தை அவன் முன் வைத்தவள்

“இதற்குள்ளே இருப்பதெல்லாம் உங்க மனைவி ரூமிலிருந்த குப்பைகள். இவ்வளவு நாள் எங்கள் வீட்டிலிருந்தது. இனி இதை உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க. நல்ல வேளை! அக்கா இல்லை… இருந்திருந்தால் இதை உங்க கிட்ட கொடுத்ததுக்கும், குப்பையென்று சொன்னதுக்கும் என்னை மிதி மிதினு மிதித்திருப்பா. என்னடா அழகா பேக் பண்ணியிருக்குனு பார்க்கிறீங்களா? இது உங்க கல்யாணம் அன்றே உங்ககிட்ட கொடுக்க நான் பேக் செய்தது. ஆனால் இப்போ தான் கொடுக்க நேரம் வந்தது. ஆனா மாம்ஸ், இதை இங்கே பிரிக்காமல் சென்னை போய் தான் பிரிக்கணும், ஓகே வா?” என்று அவனுக்குப் பேசவே இடம் கொடுக்காமல் பேசினாள் அஞ்சலி.

நந்து, அப்பொழுதிருந்த மனநிலையில் உண்மையாகவே அதைப் பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. அன்றே சென்னை கிளம்பித் தங்கள் அறைக்குள் வந்தவன் அங்கேயும் மனைவி வாசமே மூச்சுடைக்கவும் திணறித்தான் போனான். அந்த நிலையில் இருந்தவனுக்கு அஞ்சலி தந்த பரிசு நினைவு வர அதை எடுத்துப் பிரித்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் நிலைகுத்தி நின்றது.

அந்தப் பெட்டி முழுக்க நந்துவை விதவிதமாய் வரைந்த ஓவியங்களைப் பார்த்தவன் மேலும் அதில் ஒரு ஓவியத்தில் i love you I love you என்று பல i love you க்களை எழுதி அதற்குள் அவனுடைய உருவத்தை அதிலும் கன்னத்துக் குழியுடன் அழகாய் முகவரி கொடுத்திருந்தவள் கூடவே ‘உங்க வீட்டில் இருங்கவங்களைப் பிடிக்கும் பாவா! ஆனா அதை விட உங்களை ரொம்பப் பிடிக்கும். எப்படி என் மனசுக்குள்ளே வந்தீங்கனு எனக்குத் தெரியவில்லை. ஆனா என்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே என் மனதுக்குள் வந்துட்டீங்க !’ என்ற வாக்கியத்தை அவனின் படத்தின் கீழே எழுதிக் கையெழுத்திட்டு இருந்தாள் யாழினி.

அதைப் படித்தவனின் கண்கள் பனித்தது. ஒரு ஆண்மகனுக்குத் தான் ஒரு பெண்ணை விரும்புறோம் என்பதை விட தன்னை ஒரு பெண் விரும்புறாள் என்பதும் அதிலும் பத்தொன்பதாவது வயதிலேயே தான் அவளுக்கு உயிராய் இருந்திருக்கிறோம் என்பதையும் ஒரு கர்வத்தோடு நினைத்தான் நந்து. முன்பு புரியாத சில விஷயங்கள் இப்போது புரிவது போல் இருந்தது அவனுக்கு. அதன் பிறகு வந்த ஒரு வாரமும் எப்படி போனது என்று கேட்டால் அது நந்துவுக்கே சொல்லத் தெரியாது ஏதோ டீன் ஏஜ் பையன்களைப் போல் மனதால் காதல் வயப்பட்டு வளைய வந்தான் அவன்.

ஒரு வாரம் கழித்து அன்று தான் யாழினி லண்டனிலிருந்து வருகிறாள். அதுவும் சென்னைக்கே வருகிறாள். தான் அழைத்து வருவதாக நந்து சொல்லி இருந்ததால், இதோ இப்போது அழைத்து வரவும் கிளம்பியும் விட்டான்.

தரையிறங்கிய யாழினி கணவனை எப்படி எதிர்கொள்வது என்று சிறு வெட்கத்துடன் தடுமாறியபடி கணவன் எங்கே என்று முகம் விகாசிக்க மனம் நிறைய காதலுடன் விழிகளில் ஏக்கங்களுடன் தேட ஊகூம்... அவனைக் காணவேயில்லை.

சிறுது நேரத்திற்கு எல்லாம் நீயே வீட்டுக்கு வந்துவிடு என்ற பீப் சத்தத்துடன் கூடிய மெசேஜ் தன்னவனிடமிருந்து வரவும், அதைப் பார்த்தவள் விழிகளில் நீர் கோர்த்து வர, எழுந்த கேவலை அடக்கியவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அங்கேயே அமர்ந்தவளின் நினைவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சலி சொன்ன விஷயத்தை நோக்கி அசை போட்டது மனது.

‘அக்கா... நீ இவ்வளவு நாள் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த உன் காதல் ரகசியத்தை எல்லாம் மாமாகிட்ட கொடுத்து விட்டேன். இந்நேரம் மாமா அதைப் பார்த்து விட்டு செம்ம ஃபீலிங்ல இருப்பாங்க. நீ இந்தியா வந்ததும் ஏர்போர்ட் என்று கூட பார்க்காமல் உன்னைக் கட்டிப் பிடித்து ஐ லவ் யூ சொல்லப் போறாங்க பாரேன்…’ தங்கையின் வார்த்தைகள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கவும் விழிகளை மூடி ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்த்தவள்

‘போடி... அப்படி எல்லாம் சொல்ல முதலில் உன் மாமாவுக்கு என்னைப் பிடித்து இல்ல இருக்கணும் டி? என் காதலைத் தெரிந்தும் என் முகத்தைக் கூட பார்க்க அவருக்கு விருப்பம் இல்லைனா பிறகு எதற்கு இந்த பந்தத்தைத் தொடரணும்? முன்பே நான் யோசித்தது போல் இன்றே இதற்கு முடிவு எடுக்கிறேன்…’ என்ற எண்ணத்துடன் இவள் வீட்டுக்கு வரவும் அங்கேயும் அவள் கணவன் இல்லை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN