என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்– 17

அறையில் கணவன் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் இன்னும் மனம் வெதும்பினாள் யாழினி. உடை கூட மாற்றத் தோன்றாமல் கட்டிலிலேயே அமர்ந்தவளுக்குத் தன்னையும் மீறிக் கண்களில் நீர் வழிந்தது.

‘உங்க மேல் நான் வைத்திருக்கிற காதல் தெரிந்தும் கூட இன்னும் என்னை வெறுக்கறீங்களே பாவா? நான் உங்களைக் காதலிக்கிற மாதிரி நீங்களும் என்னைக் காதலிக்கணும்னு நான் சொல்லலை… என் காதலை ஏற்று என்னைப் புரிந்து கொண்டு என்னை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துப் போக வருவீங்கனு நினைத்தேன் பாவா.. இன்னுமா என்னுடைய காதலைப் பொய், நடிப்புனு நினைக்கிறீங்க? இந்தளவுக்கு என்னை நீங்க வெறுக்க என்ன காரணம் பாவா? ஒருவேளை.. உங்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்ததால் தான் என்னை வெறுத்திட்டீங்களா? போதும் பாவா… நீங்களும் கஷ்டப்பட்டு நானும் கஷ்டப்பட்டு நம்ம உறவை நீடிக்கிறதை விட இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவு கட்டிடலாம் பாவா!’ என்று தனிமையில் பலவாறு யோசித்துக் கொண்டிருக்க..

ஒரு மணி நேரம் கழித்து வீடு வந்தவன் மனைவியைப் பார்த்ததும் “வந்திட்டியா கீதா? இரு… குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லி குளித்து முடித்து அவன் வரவும்.. யாழினியோ கட்டிலில் அதே நிலையில் இருக்கவும், ஒரு யோசனையுடன் மனைவியைப் பார்த்தவன் அப்போது தான் கவனித்தான் அவள் இன்னும் ஆடை கூட மாற்றாமல் இருப்பதை. பின்னர் தான் மனைவியை அழைத்து வராதது உறுத்தவும், “சாரி கீதா! இன்னைக்கு…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டவள்

“போதும் பாவா! இதுக்கு மேல நீங்க எந்த காரணமும் சமாதானமும் சொல்லவேண்டாம். நான் மனதளவில் ரொம்ப நொந்துட்டேன் பாவா! சும்மா சும்மா ஏதாவது சொல்லி இன்னும் என் மனசை ரணப்படுத்தாதீங்க. இதுக்கு மேலேயும் நான் உங்களை இழுத்துப் பிடிக்கவிரும்பலை போதும்.. நாம ரெண்டு பேரும் பிரிந்திடலாம் பாவா! எனக்கு விவாகரத்து கொடுத்திடுங்க” என்று மிகவும் தோய்ந்த குரலில் கண்கள் பனிக்க விரக்தியுடன் சொல்லவும், நந்தா அதிர்ந்தே போனான். ஆனால் அதிர்ந்தது என்னமோ ஒரு வினாடி நேரம்தான்.. அடுத்த நொடியே பீரோவைத் திறந்து அதிலிருந்து அஞ்சலி கொடுத்த பெட்டியைக் கட்டிலின் மீது விசிறியடித்தவன்

“இதுக்கெல்லாம் என்ன காரணம் சொல்லப் போற டி? விவாகரத்தாடி கேட்கிற விவாகரத்து! முதலில் இதற்குப் பதில் சொல்லு. அதற்குப் பிறகு நீ கேட்டதைத் தரவா வேண்டாமானு யோசிக்கிறேன்” என்று இவன் பொறும, ‘ஏன்? இவருக்கு ஒன்றுமே தெரியாதமா? என் காதலைப் புரிந்து தெரிந்த பின்னும் என்னிடமே விளக்கம் கேட்கிறாரு! ஆனால் இவர் மட்டும் மனதில் உள்ளதைச் சொல்லமாட்டாங்க. ஒருவேளை இவருக்கு என்மேல் காதல் இல்லையோ?’ என்றெல்லாம் மனதிற்குள் நினைத்தவள் அவனிடம்

“நான் ஏன் இந்த குப்பைகளுக்கு விளக்கம் கொடுக்கனும் என்று தெனாவட்டான பார்வையில் கேட்கவும்

“ஏய்ய்!” என்ற உறுமலுடன் மனைவியை நோக்கி ஒருஅடி எடுத்து வைத்தவன் ‘ச்சே…. எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்தைக் குப்பைனு சொல்கிறா! அப்போ என்மேல் வைத்திருந்த காதல் இவ்வளவுதானா டி?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “உனக்கு இது குப்பை தானே? அப்படினா இதை உன் கையாலேயே எரித்து விடுடி…”

“பாவாஆஆஆ! என்ற வலியுடன் தன்னை மீறிக் கத்தியவள் கண்களில் நீர் திரள தன் மனதை திடப்படுத்திக் கொண்டு உங்களால் முடிந்தா அதை நீங்களே செய்யுங்க பாவா” என்று இவள் சவால் விட ‘இப்ப கூட உன் காதலை வாய் திறந்து சொல்லமாட்டியா டி? சரியான ஈகோ பிடித்தவளே.. என் கண்ணெதிரில் உன் காதலை அறிந்த பின்னுமே நீ பிடிவாதமா இருக்கீயே தவிர என் காதலை உணரவே இல்லையா டி? இத்தனை வருட காதலை நீயே சொல்லாதபோது இப்போது நான் உணர்ந்த காதலை மட்டும் சொல்லிடுவேனா டி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் கட்டிலை நெருங்கி காகிதத்தின் மேல் அவன் கை வைக்கவும் வெறியோடு கணவனைப் பிடித்துத் தள்ளியவள்

“போடா ஈகோ பிடிச்சவனே… அதைத் தொட்ட நீ செத்த! என்று கூறிய படியே கையில் கிடைத்த பேப்பர்களை வாரி சுருட்டி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழவும்.. அதைப் பார்த்தவன் ‘இது நம்முடைய பொக்கிஷம் டி இதை நான் எரிப்பேனா?’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே மனைவியைச் சமாதானப்படுத்த நெருங்கவும் எங்கே தன் கையிலுள்ள காகிதத்தைப் பிடிங்கிவிடுவானோ என்று அதை இறுக்கிப் பிடித்தபடி “கிட்ட வராதீங்க பாவா! இங்கிருந்து போய்டுங்க பாவா!” என்று கத்தவும், அவனோ மனைவியைச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விட இன்று அனைத்தையும் பேசி தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது.

“இன்றைக்கு கிட்ட வராதேனு சொல்லுகிறவ அன்றைக்கு என் வாழ்க்கையில் நீயாதானே டி வந்த? வந்து என்ன டி பண்ண? உன்னைத் தேடி அலைய வைத்த தானே டி? அப்புறம் என்னை அசிங்கப் பட வைக்கலையா? எல்லாத்தையும் விட நீ என்னை ஏமாற்றி தானே இருக்க?” என அவனிடமிருந்தும் கேள்விக்கணைகள் அமைதியாக வந்தது.

“நான் ஹாக்கிப் பயிற்சி ஆசிரியராய் இருந்த ஹோமுக்கு டிராயிங் டீச்சராய் வந்து அனாமிகா என்ற பெயரில் என் கிட்ட போனில் சாட் செய்தது நீ தானே?” யாழினியிடம் இவ்வளவு நேரமிருந்த வீம்பு விலகித் தலை குனியவும் மனைவி மறுக்கவில்லை என்பதிலேயே தான் யூகித்தது சரி என்று நினைத்தவன்

“இன்று தான் நாம் முதலும் கடைசியுமா இதைப் பற்றி பேசுவது” என்றவன் ஒரு வினாடி கண்ணை மூடித் திறந்து ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தான் நந்தா. “நான் முன்பு யோசித்தது இப்படிதான். நீ எந்த காரணத்திற்காக என்னைத் திருமணம் செய்தீயோ எனக்குத் தெரியாது. ஆனா நான் நினைத்தது உன் அம்மாவுக்கு உன் அப்பா எப்படி அடிமையா கிடைத்தாரோ அதே காரணத்திற்குத் தான் நீ என்னைத் திருமணம் செய்தியோ என்று தான் நினைத்தேன்”

அவள் உடல் இறுகவும்,“சாரி! அதற்கும் காரணம் இருக்கு. என்ன தான் உன் அம்மா மற்றவர்கள் எதிரில் எங்களிடம் நல்லா பேசினாலும் தனிமையில் எங்களைக் கேவலமா நடத்துவாங்க. அந்தக் கோபத்தை எல்லாம் நான் உன் மேல் காட்டி அன்று பழி தீர்த்துக்கிட்டேன். அதையும் மீறி நீ என்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கவும் என்னை மாதிரியே பழிவாங்கத் தான் செய்கிறியோ என்று நினைத்தேன். அன்று கூட உன் அம்மா என்னைப் பைத்தியக்காரன்னு சொன்னப்போ கூட நீ மறுத்து எனக்காக எதுவும் பேசலையே? கல்யாணத்திற்குப் பிறகு என் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட ஒட்டுதலா இருந்த. அதையும் நான் நடிப்புன்னு தான் நினைத்தேன். அதற்கு ஏற்ற மாதிரி விஜயன் விஷயம் வரவோ கண்ணு மண்ணு தெரியாத கோபம் வந்தது.

அப்படியும் மனசை சமாதனப்படுத்தியிருந்த சமயத்தில் தான் ஹோம்ல நீ தான் அந்த டீச்சர்னு தெரிய வந்தது. நான் நினைத்த மாதிரியே என்னைப் பழிவாங்குவது தான் உன் நோக்கம்னு நினைத்தேன். அதற்கு ஏற்ற மாதிரி அன்று நடந்த விபத்திற்குப் பிறகும் அனாமிகா நீ தான்னு சொல்லலை. அதை இரண்டு வருஷமா மறைத்தது மட்டுமில்லாமா என் கூடவே அந்த விபத்துப் பகுதிக்கு வந்தே பாரு! அதை எல்லாம் நினைத்து சுத்தமா குழம்பிட்டேன். அதில் உன் மேலிருந்த வெறி கோபம் எல்லாம் அதிகமாகவே, என்னை மாதிரி உன்னையும் துடிக்க வைக்கணும் திண்டாட வைக்கணும் என்ற ஒரு வன்மம் எனக்குள் வந்தது.

எனக்கு விபத்துன்னு உன் கிட்ட சொன்னா நீ துடித்துப் போவியோனு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும் நம்பிக்கை இல்லாம தான் என் நண்பனை விட்டுப் பொய் சொல்லச் சொன்னேன். ஆனா நீ அப்படி துடித்துப் போவேனு நான் நினைக்கலை டி. அதிலும் என் கண்ணெதிரில் பார்த்தபிறகு…” சொல்லும் போதே அவன் உடலே நடுங்கியது. ஒரு வினாடி கண்ணை மூடித் திறந்து மனைவியைப் பார்த்தவன், அவளின் பார்வையை உணர்ந்து “உன் துடிப்பைப் பார்க்க அங்கேயே மறைந்து நின்று கொண்டிருந்தேன்” தலை குனிந்தபடி அவன் சொல்ல

ஒரு நிமிடம் கண் மூடித் தன் வேதனைகளை விழுங்கியவள், “பின் இப்போ மட்டும் என் மேலுள்ள உங்க உயர்ந்த அபிப்ராயங்கள் எப்படி மாறியது?”

மனைவியின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன் “அப்பொழுது இருந்த கோபம் வஞ்சம் எதுவும் இப்போது இல்ல டி! மாறாக…” காதல் என்று சொல்ல வந்தவன் என்ன தான் அவள் தன்னைக் காதலித்தாலும் இன்னும் நேரிடையாக தன்னிடம் அவள் சொல்லாமால் தான் மட்டும் எப்படிச் சொல்வது என்ற காரணத்தால் அதை மறைத்து “அன்பு பாசம் இருக்கு. அதனால தான் நீ நடந்துகொண்ட முறையில் எல்லாம் ஏதாவது காரணம் இருக்கும்னு இப்போ தோன்றுகிறது டி”

கணவன் சொல்லி முடித்ததும் கட்டிலில் குத்துக்காலிட்டு கைகளால் காலைக் கட்டியபடி தலை கவிழ்ந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் யாழினி. நந்துவுக்கு அவளைப் பார்த்து சிறிது கோபம் துளிர் விடத் தான் செய்தது. ‘இன்று ஒரே நாளில் எல்லாவற்றையும் பேசி தீர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்தால், இவள் என்னமோ பெரிய மகாராணி மாதிரி உட்கார்ந்திட்டு இருக்கா பாரு!’ என்று அவன் கடுப்பானாலும், மனமோ ‘நந்தா! இப்போது நீ கோபப்பட்டால் வேலைக்கு ஆகாது டா’ என்று எடுத்துரைக்க, சற்று நேரத்திற்கு எல்லாம் பொறுமை இழக்க ஆரம்பித்தான் நந்தா. ‘இந்நேரம் நான் பழைய நந்தனாக இருந்திருந்தால் எனக்கு விளக்கம் சொல்லுடி என்று மனைவியைப் போட்டு உலுக்கி இருப்பேன். ஆனால் இப்போ எதையும் செய்ய முடியவில்லையே? இதைத் தான் பெரியவர்கள் பிடித்தம் இல்லாமல் போவதற்கும் பிடித்ததற்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம் என்றார்களோ?!’ என்றெல்லாம் பலவாறு யோசித்தவன் இறுதியாக என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் அவன் மனைவியை நெருங்க, அதே நேரம் கண்ணில் வலியுடன் அதைவிட குளம் கட்டிய விழிகளுடன் நிமிர்ந்தவள் ஒரு முடிவுடன் இவளும் பேச ஆரம்பித்தாள்.

“நீங்க என் மேல வைத்துக்கிற நல்ல அபிப்ராயத்துக்கு நன்றி! முதலில் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றவள் “சின்ன வயசுல நாமெல்லாம் ஒன்றாக இருந்தப்போ நீங்களும் உங்க வீட்டில் இருந்தவர்களும் என் கிட்ட எப்படி நினைத்துப் பழகினீங்களோ எனக்குத் தெரியாது பாவா! ஆனா நான் என் வீட்டை விட உங்க வீட்டைத் தான் என்னுடைய வீடா நினைத்தேன். அது ஏன்னு கேட்டா என்னுடைய பதிமூன்றாவது வயது வரைக்குமே எனக்குப் பதில் தெரியாது. ஏன்னா அதுவரைக்குமே நான் உங்க யாரையும் விட்டுப் பிரிந்து இருந்தது இல்லை. எங்களுக்குச் சொந்தம்னு சொல்ல அப்பா வீட்டுப் பக்கம் யாரும் இல்லை. அம்மா அவங்க வீட்டுப் பக்கம் எங்களை அழைச்சிட்டுப் போனது இல்லை.அதுனால் தான் உங்க குடும்பத்துல நான் அதிகம் ஒட்டிக்கிட்டேனோ என்னவோ? பிறகு யோசித்துப் பார்த்ததில் எனக்கு அப்படித் தான் தெரிந்தது.

மனைவியின் திடீர் பேச்சில் அவன் குழம்பிப் போய் பார்க்க, அவன் நிலை உணர்ந்தவள் “இதை எல்லாம் இவ ஏன் திடீர்னு பைத்தியக்காரி மாதிரி உளற்ரானு பார்க்கறீங்களா? நான் பைத்தியக்காரியே தான்!” இதைச் சொல்லும் போது அவள் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டு கன்னம் தொட்டது. அதைத் துடைத்தவள் “அப்படி இருந்ததால் தான் அந்தப் பதிமூன்று வயதில் நீங்க எல்லாம் என்னை மறந்து விட்டுட்டுப் போகும்போது அப்படி துடித்து இருந்திருப்பேனா? அந்த வயதில் கண்ணீரைக் காட்ட கூடாதுன்னு மனசுக்குள்ளேயே அழுவேன்” தன் மூக்கை உறிஞ்சியவள்

“ஆனா இரவில் லேசில தூக்கம் வராது. சில சமயத்துல தூக்கத்திலேயே அழுவேனாம்! ஒருவேளை இருந்திருக்கலாம்… ஒரு பக்கம் ஈஸ்வரி அக்கா இன்னொரு பக்கம் அத்தம்மான்னு படுத்தவளுக்கு அந்த அணைப்பை மறக்க எப்படி முடியும்? சில சமயங்கள்ல ஜுரம் வந்து நடுஇரவில் நான் அனர்த்தும்போது அப்பாவும் பெரிய அண்ணாவும் நான் வளர்ந்த பொண்ணுனு என்கிட்டயே வர மாட்டாங்க. அம்மா சொல்லவே வேண்டாம்… மகேஷ் தான் என் கையைப் பிடித்த படி கட்டில் அருகிலேயே நாற்காலியில் உட்கார்ந்த படியே தூங்குவான்” அவள் கண்ணில் சரசரவென கண்ணீர் கொட்டியது. இப்போது உதடு துடிக்க

“நான் என்ன பாவம் செய்தேனு எல்லோரும் என்ன விட்டுட்டுப் போனீங்க? அதைக் கேட்கும் போதே அவளிடமிருந்து ஒரு கேவல் வரவும், இமைக்கவும் மறந்தும் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான் நந்து.

‘அப்போது ஒண்ணும் இவளுக்கு விவரம் தெரியாத வயசு இல்லையே? நாங்களும் சண்டை போட்டுப் பிரிந்து போகவில்லையே? என் அப்பாவுக்கான சொத்து சம்பந்தமான கேஸ் விஷயமாதானே வந்தோம்? இப்போ மாதிரி அப்போ மொபைல் வசதி இல்லைனாலும் எப்போதாவது இரண்டு வீட்டுத் தலைவர்களும் பேசிக்கொண்டு தானே இருந்தாங்க. ஏன்? எனக்கு விபத்து நடந்தப்போ கூட பாரிவேந்தர் மாமா தானே முதல் ஆளா நின்றாரு!’ இப்படி எல்லாம் இவன் தன் எண்ணத்தில் இருக்க

“சொல்லுங்க! நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?” அழுகையின் ஊடே மனைவி மறுபடியும் கேட்கவும், ‘இந்தக் கேள்வியை இவள் தன்னைத் தானே கேட்டிருப்பாளோ? அட! அந்த அளவுக்கா எங்களைத் தேடினா?’ அவனுக்குள் எங்கோ வலிக்க, இவன் மனைவியை அணைக்க நெருங்கவும் “அங்கேயே இருங்க. கிட்ட வராதிங்க…” என்று மனைவி அதட்டலிட

அவள் சொல்லவதைக் கேட்டால் அவன் நந்து இல்லையே? ஒரே எட்டில் மனைவியை அணைத்துக் கொள்ள, முதலில் திமிறியவள் அவன் பிடி இறுகவும் அவனுள் அடங்கியவள் “கிருஷ்ணா மாமாவும் ஈஸ்வரி அக்காவும் என்னைக் குண்டு தக்காளினு கூப்பிடறது வேணும். எப்போதும் சண்டை போடுற நீங்க வேணும். கையில் மருதாணி வைத்து விட்டு சாப்பாடு ஊட்டி மருதாணி கலையாம இருக்க மடிமேல தூங்க வைக்குற அத்தம்மா வேணும். நாம எல்லாரும் ஒண்ணா நிலாசோறு சாப்பிட வேணும். என் கூட சேட்டைசெய்கிற விஜயன் வேணும். நான் என்ன செய்தாலும் பொறுத்துப் போகிற விஜி வேணும். அவள் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே செல்லவும், இதெல்லாம் அன்று இவள் இழந்தவைகள்! இன்று வரை ஏக்கங்களாக இருப்பவைகள்! என்பதைப் புரிந்து கொண்டவன் இதமாய் அவள் தலை வருட,

“அப்பா கூட என் ஏக்கங்களைப்பார்த்துவிட்டு உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகிறேன் வரியான்னு கேட்பாங்க. ஆனா நான் தான் ஒரு முறையாவது நீங்க யாராவது என்னைத் தேடி வரமாட்டீங்களானு நினைப்பேன். நீங்க யாரும் வராததாலே அந்த வீம்பிலேயே நானும் உங்களைப் பார்க்கணும் என்ற முடிவையே விட்டுட்டேன். போனில் பேசும்போது கூட அப்பாவை உங்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம்னு கண்டிஷன் போட்டேன்”.

இவள் தாயின் பேச்சுக்குப் பயந்து யாரும் அங்கு போகாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைக் காலம் கடந்து உணர்ந்தான் நந்தா. வலுக்கட்டாயமாக கணவனிடமிருந்து விலகியவள் “உங்களை எனக்குப் பிடிக்கும்பாவா! ஆனா அதை விட உங்க குடும்பத்தைத் தான் அதிகம் பிடிக்கும். இப்படி எல்லாம் இருந்த என்னைப் போய் நீங்க பழிவாங்க வந்தவ பாசமா இருக்கற மாதிரி நடிக்கிறவ அப்படி இப்படினு என்னவெல்லாமோ பேசினப்போ நான் எப்படி துடித்திருப்பேன்? சொல்லுங்க…” மனைவி கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

“அதற்குப் பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வெளியேவும் வந்துட்டேன். ஆனாலும் உங்க எல்லோர் மேலேயும் வைத்த பாசத்தை மறக்க முடியலை. உங்க எல்லோருடைய அன்பும் பாசமும் உறவும் திரும்ப வேண்டும்னு நினைத்தேன். அதிலும் உரிமையா உங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தேன். அப்போ தானே இடையில் பிரிந்து போகாம கடைசி வரைக்கும் எனக்கு நிலைக்கும்னு யோசித்தேன். அதனால் தான் உங்களுக்கே தெரியாம உங்க சம்பந்தப்பட்டது எல்லாம் விசாரித்தேன். அப்பா கிட்ட சொல்லியிருந்தா இரண்டு வீட்டிலேயும் பேசி நமக்குத் திருமணம் முடிச்சிருப்பாங்க. ஆனா நீங்க என்னை சின்ன வயசுலயிருந்து வெறுத்த மாதிரி இப்போதும் வேண்டாம்னு சொன்னா என்ன பண்ணமுடியும்? அதான் உங்களை நெருங்கிப் பழகின பிறகு வீட்டுல சொல்லலாம்னு இருந்தேன். அதற்கு நான் பயன்படுத்திக்கிட்ட வழிதான் தப்பா போயிடுச்சி!” இதை அவள் உணர்ந்து சொல்ல, அதுவும் அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது.

“அனாமிகா என்ற பெயர்ல உங்ககிட்ட சாட் செய்தது நான் தான்.நேரில் உங்களை வரச் சொல்லியும் பார்க்கத்தான் வந்தேன். ஆனால் முகத்தைக் காட்ட பயம். அதனால் நான் காரிலேயே உட்கார்ந்து இருந்தேன். எதேச்சையா யாரோ மஞ்சள் நிற டாப் போட்ட பெண் உங்க பின்னாடி இருந்தவர் கிட்ட சைகையில் பேசிகிட்டு வரவும், அது தான் அனாமிகானு நீங்க தப்பா நெனச்சிட்டீங்க. சரி அந்தப் பொண்ணு விலகின பிறகு நான் உங்க கிட்ட வேறொரு நாள் சந்திக்கலாம்னு சொல்லயிருந்தேன். அப்போ தான் அப்படி ஒரு விபரீதம் நடந்தது. சாரி! சாரி! ஐயம் எக்ஸ்டீரீம்லி சாரி! அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை!” ஒரு குற்றவாளியைப் போல் அவள் துடிக்கவும், அவனுக்கே என்ன சொல்வது என்று புரியாத நிலை. சற்று நேரம் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு கதறியவள்,

“அன்றைய தினமே நான் அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். ஆனா உங்க கிட்ட சொல்ல எனக்குத் தைரியம் வரல. மறுபடியும் நீங்க என்னை வெறுத்திட்டீங்கனா என்ன செய்வதுனு பயமாக இருந்தது. கூடவே உங்க உடல் நிலையும் நான் சொல்லாததற்கு மற்றொரு காரணம். அது இன்று வரை இருக்கு. ஆனா என் அப்பா நீங்க தான் மாப்பிள்ளை என்றதில் உறுதியாக இருந்தார். அத்தம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் உங்க அப்பா கிட்ட சீக்கிரமா பேசி நம்ம திருமணத்தை முடிக்க நினைத்தார். மாமகாருதான் தான் கொஞ்ச நாள்னு சொல்லி நாள் கடத்தி கல்யாணத்தை நடத்தினார். இடையில நீங்களும் வந்து இந்த கல்யாணத்தை நிறுத்தச்சொன்னீங்க. அதற்க்குக் காரணமா உங்க நோயைத் தான் சொன்னீங்ளே தவிர என்னைப் பிடிக்கலைனு சொல்லவில்லையே! அப்பொழுதாவது நான் உண்மையச் சொல்லி இருக்கலாம். ஆனா உங்க வீட்டில் இருக்கறவங்க என்னை வெறுத்துட்டா?... அதான் சொல்லல!”

‘இப்போ மட்டும் உன்னை வெறுக்க மாட்டாங்களா டி?’ என்ற வார்த்தை அவன் தொண்டை வரை வந்து விட, அதை அப்படியே விழுங்கினான். ‘கதையில் வர்ற ஹீரோக்கள் மாதிரி என்னவெல்லாம் செய்திருக்கா! இதற்காகவா டி இப்படி எல்லாம் செய்த?’ என்று ஒரு மனம் நினைத்தாலும் காதல் கொண்ட மனமோ ‘அவள் எவ்வளவு எல்லாம் ஏங்கி இருக்கா?!’ என்று தான் கலங்கியது.

“இதற்குத் தண்டனையா நீங்க என்ன கொடுத்தாலும் நான் ஏற்றுக்கிறேன். ஏன்? விவாகரத்துக் கூட தரேன். நீங்க உங்களுக்குப் பிடிச்ச வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழுங்க. எப்படியோ நீங்க எனக்கு ஜீவனாம்சம் தரணும் இல்ல? அதற்குப் பதில் எனக்கு இந்த குடும்பத்தை விட்டுக் கொடுத்துட்டுப் போய்டுங்க. நான் கடைசிவரை என் அத்தம்மா மாமகாரு கூடவே இருந்துக்கிறேன்” என்று அவள் சொல்ல, ஒரு நிமிடம் ஆடித் தான் போனான் நந்து.

“இவள் என்ன புரிந்து தான் பேசுகிறாளா? நடந்த விஷயத்தைச் சொன்னாலோ இல்லை நான் விவாகரத்து தந்தாலோ அதன் பிறகு இவள் இந்த வீட்டில் செல்லாக் காசு என்பது தெரியாதா?’ என்று அவன் மனதிற்குள் கேட்டுக்கொண்டவன் கூடவே அப்பவும் இவளுக்கு என் குடும்பம் தான் வேண்டும் இந்த குடும்பத்தில் ஒருவனா இருக்கிற நான் வேண்டாமாம். எவ்வளவு கொழுப்பு இருக்கும் இந்த குந்தாணிக்கு? ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று என்னுடைய நிழல் முகத்தை வரைந்திட்டு இப்போ என்னமோ என்னையை விட்டுப் பிரியறதுலே குறியா இருக்கா! கொடுக்கிறேன் டி உனக்கு ஷாக்!’ என்ற அவனுடைய நினைவை பாதி தடைப்படுத்தியது யாழினியின் குரல்..

“என்னோட முடிவு சரிதானே? உங்களை இதுக்கு மேலேயும் நான் கஷ்டப்படுத்த விரும்பலை. நானே லாயரைப் பார்த்து இதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என வலியுடன்அவள் முணங்கவும்,

‘என் மனதைப் பற்றி புரிவதற்கு முன் நீ இதைக் கேட்டிருந்தால் உனக்குப் பால் அபிஷேகமே செய்திருப்பேன் டி. ஆனால் இப்போது என் மனது முழுக்கக் காதலை வைத்துக் கொண்டு என்னால் எப்படி விவாகரத்துத் தர முடியும்?அது மட்டுமா? வாய்க்கு வாய் விவாகரத்து என்று நீ உதட்டால் மட்டுமே சொல்கிறாய் தவிர உள்ளத்தால் அல்ல என்பதும் எனக்குத் தெரியும் டி!’ என்று யோசித்தவனின் இன்னோர் மனமோ என் குடும்பத்திற்காகவும் குற்ற உணர்வுக்காகவும் தான் என்னைக் கட்டினாளா? அதைத் தான் தன் வாயாலே சொல்லிட்டாளே!அப்போ என் மேலே காதலே இல்லையா? அவள் என்னைக் காதலிப்பது எனக்குத் தெரிந்திருந்தும் இப்படிசொல்கிறாளே? இப்பொழுதாவது அவள் என்னிடம் நேரிடையாக சொல்லிருக்கலாமே!… இரு டி குந்தாணி! என்னடமிருந்து விவாகரத்தா வேணும்?’ என்று மனதில் எண்ணியவனுக்கு, தானும் ஒரு ஆண்மகன் என்பது மேலோங்க,

“சரி… விவாகரத்து தானே? தாராளமா… கொடுத்துட்டாப்போச்சு! ஆனா அதுக்கு இன்னும் நாம் கொஞ்ச நாள்காத்துகிட்டு இருக்கணும். ஏன்னா இன்னும் நமக்குக் கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகலை. அதுவரை நீ இந்த வீட்டில் எப்போதும் போல இரு.அதனாலே முதல்ல இப்போ பேசாம தூங்கு” என்று அவனிடமிருந்து சர்வசாதரணமாகப் பதில் வந்தது. யாழினி படுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க

“இப்போ என்ன டி?”

“நான் தான் அனாமிகானு வீட்டில் சொல்லிடுவீங்களா?”

“அவ்வளவு பயமா குந்தானிக்கு? எப்படி இருந்தாலும் விவாகரத்து வாங்கும் போது சொல்லித் தானே ஆகணும்? அதுவும் அந்த விவகாரத்தை நீ தானே கேட்கற! அதை அப்போ பார்ப்போம்… இப்போ படு!” என்று சொன்னவன் கட்டிலில் படுத்து விட, யாழினியால் தான் படுக்க முடியவில்லை. கணவனின் கோபத்தைக் குறைக்கவும் அவனின் மனதை அறியவும் தான் அவள் விவாகரத்துக் கேட்டது. ‘நான் கேட்டதும் இவர் கொடுத்திடுவாரா? அப்போ இவருக்கு என் மேல் ஒன்னுமே இல்லையா? திருமணத்தின் முதல் நாள் அன்று கூட விவகாரத்துத் தர மாட்டேனு சண்டை போட்டாரே! ஆனா இப்போ இப்படி சொல்கிறாரே! அந்த அளவுக்கா நான் செய்த தப்பால் என்னை வெறுத்துவிட்டார்?’ என்றெல்லாம் எண்ணியவாறு கொஞ்சம் கூட தூங்காமல் விழித்தே இருந்தாள் யாழினி! நந்துவும் தான்…

இருவர் மனதிற்குள்ளும் அன்பு பாசம் காதல் இருந்தும் சிறுவயது முதலேயிருந்த ஈகோவினால் தங்கள் சுயத்தை இழந்து ஒருவர் மனதை இன்னொருவர் ரணமாக்கிக் கொண்டனர். ஆம்! சொல்லாத காதல் செல்லாது!

இரண்டு நாட்கள் எந்தவொரு சலனமும் இல்லாமல் செல்லவும், யாழினிக்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை. இப்படியே இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் என்ற எண்ணத்தில் கணவனின் சர்பிகேட் இருந்த பகுதியைத் திறந்து சுத்தம் செய்யவும் அங்கிருந்த காக்கி நிற கவர் அவளின் கைப்பட்டு கீழே விழந்த நேரம் அதிலிருந்து கொலுசு, வாழ்த்து அட்டை, நகை வாங்கிய பில் ஒன்று கீழே விழவும் எடுத்துப் பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் பெருகியது! இரண்டு நாட்களாக அவள் தனக்குள் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்ததில் குத்தாட்டம் போடவேண்டும் போல் தோன்றியது யாழினிக்கு! இருக்காதே பின்னே? கணவன் தன் மனைவியைக் காதலிக்கிறேன், அவன் உயிரே அவள் தான், என்றும் அவளைப் பிரியமாட்டேன் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அன்பைப் பரிமாறும் திருமணநாள் வாழ்த்து அட்டை அது. கூடவே நந்துவின் கையால் எழுதிய ஐ லவ் யூ கீதா! என்று இருக்கவும் இது போதாதா பெண்ணவளுக்கு?

‘அடப்பாவி கட்டதுரை! எல்லாத்தையும் உள்ளுக்குள்ளே வைத்துகிட்டு எதுவுமே இல்லாதது மாதிரியா நடிக்கிற? விவாகரத்து பற்றி பேசினப்ப கூட எதுவுமே சொல்லலையே! அந்தளவுக்கா உன் ஈகோ உன்னை தடுக்குது? இருக்கும் இருக்கும்… கட்டதுரை கூடவே பொறந்தாதச்சே இந்த ஈகோ? அவ்வளவு சீக்கிரம் அத விட்டுட்டு என்கிட்ட சொல்லிடுவாரா? இருக்கட்டும்… இன்னைக்கு காட்டுற காட்டுல, பயபுள்ள அந்த ஈகோவை விட்டுத் துண்டக் காணோம் துணியக் காணோம்னு என்கிட்ட சரண்டராக வைக்கிறேன்’ என்று மனதுக்குள் சபதமிட்டுக் கொண்டாள் யாழினி!

இரவு வேலை முடிந்து இவன் வர, அறையில் யாழினிக்குப் பதிலாக கட்டிலில் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தது மனைவி கையொப்பமிட்ட வெத்து விடுதலைப் பத்திரம்.

அதைப் பார்த்ததும்அதிர்ந்தவன் “கீதா! கீதா!”என்று பலமுறை அழைத்தும் வரவில்லை அவள். ஒருநிமிடம் அவனுக்கு உள்ளுக்குள் உதறியது. ‘ஒருவேளை நிஜமாகவே என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாளா?’ என்று கலங்கிய வேளையில் பொறுமையாக அவனெதிரே கைகள் கட்டியபடி கதவில் சாய்ந்து நின்றாள்யாழினி.

“என்னடி இது?”என்று இவன் உறும

“ஏன்? பார்த்தா தெரியலை? நம்ம இரண்டு பேருக்கும் விவாகரத்துக்கு அப்ளை செய்கிற பத்திரம். இதுக்கு மேல் பிடிக்காகாத மனைவியா உங்க முன்னாடி நான் இருக்க மாட்டேன். அன்றைக்குக் கூட என்னைக் கூட்டிட்டு வரணும்னு தோணாத அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளா ஆகிட்டேன் இல்ல?...” சட்டென்று பேச்சு தடைபட்டதை விட இரண்டு கன்னமும் எரியவே தான் யாழினிக்குத் தெரிந்தது கணவன் தன்னை அடித்திருக்கிறான் என்று.

“இப்ப என்ன நடந்ததுனு நீ விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்க? சும்மா எனக்கு உன்மேல் அன்பு இல்ல பாசம் இல்ல அது இல்ல இது இல்லனு சொல்லாதே. என்னை நீ பேசவே விடமாட்டேங்கிற. அன்னைக்குக் கூட உன்னைக் கூட்டிட்டு வரத் தான் டி ஏர்போர்ட் கிளம்பினேன். இடையில ஒரு பையன் பயிற்சி செய்யும்போது கீழ விழுந்து அடி பட்டுட்டானு போன் வந்தது. அதான் பாதி வழியிலேயே திரும்பிப் போய்ட்டேன். அப்பவும் உன்னை வரச் சொல்லி மெசேஜ் பண்ணேன் இல்லையா? உனக்கு மட்டும் தான் அதுமாதிரி சூழ்நிலை வருமா? ஏன்.. எனக்கும் வராதா? அதற்குப் போய் என்ன முடிவெடுத்திருக்குற டி?” என்றவன் அந்த பத்திரத்தை எடுத்து அவள் கண் முன்னாலேயே சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டவன் ஒரெட்டில் மனைவியை இழுத்து அணைத்தவன்

“ஐ லவ் யூ டி செல்லக்குந்தாணி! காதலிக்கிறதை விட காதலிக்கப் படுவது சுகம் டி. நீ வேண்டும்னா என்னையை விட்டுட்டு என் குடும்பம் மட்டும் போதும்னு இருப்ப. ஆனா எனக்கு நீ இல்லைனா பைத்தியமா கூட இல்லை டி உயிரோடவே இருக்கமாட்டேன் டி…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தன் இதழாலேயே தன்னவனின் இதழைச் சிறைச் செய்தாள் யாழினி. இவள் அந்த வார்த்தைக்கான வீரியத்தைத் தாங்கமுடியாமல் அப்படி செய்யவும் ஆனால் அவனோ அதையே நீண்டதொரு முத்தமாக தனதாக்கிக் கொண்டான். கணவனிடமிருந்து திமிறியவள் “விடுங்க பாவா! பேசணும்” என்று சிணுங்க, “பேசினவரை போதும் டி குந்தாணி! பேசிப் பேசியே மனுஷனைக் கொல்றியே டி” என்று சொல்லியவன் குனிந்து அவள் காதுமடலில் ஏதோ ரகசியம் சொல்ல, “ச்சீ…” என்ற வெட்கத்துடன் முகம் சிவந்து போனாள் அவனின் குந்தாணி.

பிடிவாதமாகக் கட்டிலில் அமர வைத்தவள் நேற்று அவள் கையில் கிடைத்த பொருட்களுடன் கணவனை நெங்கியவள், “இந்த கொலுசை எனக்காக வாங்கி நாலு மாதம் ஆகுது. ஏன் என்கிட்ட சொல்லவும் இல்லை இதுவரை கொடுக்கவும் இல்லை?” என்று உரிமையாய் சண்டையிடவும்..

“இதை உனக்கு தான் வாங்கினேன் என்று யார் டி சொன்னாங்க குந்தாணி?” “பாவாஆஆ!” என்று ஏமாற்றத்துடன் இவள் ராகம் இழுக்கவும் மனைவியை இழுத்து அணைத்தவன் உனக்காகத் தான் வாங்கினேன். உனக்கு மட்டும் தான் டி வாங்கினேன்! என்னைக்கு என் மனதைப் புரிந்து கொண்டேனோ அப்போதே இதைச் செய்யச் சொல்லிட்டேன் டி” என்று அவன் கூற “கேடி கட்டதுரை! இவ்வளவு நாளா என்னை என்ன பாடுபடுத்தின?” என மொத்தவும், நீ மட்டும் என்ன டி செய்த? இத்தனை வருட காதலைச் சொன்னியா டி நீ? என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கிறனு சொன்னியே! இதை விட என்னடி எனக்கு சந்தோசம்?” என்று அவன் கேட்க அதற்குப் பதில் கூறாமல் கணவனை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டாள் யாழினி.

இதுவரை இருவருக்குள்ளும் இருந்த வந்த கோபங்கள் கோணல்கள் முடிவடையவும், மனைவியைக் கட்டிலின் திட்டில் சாய்த்து அமரவைத்தவன் தான் அணிந்திருந்த டிஷர்ட்டைக் கழற்ற, இவளோ அவனை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அலமாரியிடம் சென்று எதையோ எடுத்து வந்தவன் அதை மனைவி முன் நீட்டி “இது நான் பாண்டிச்சேரி போன போது உனக்காக வாங்கி வந்தது” என்று சொல்லி ஒன்றை ஓர் கையில் வைக்க அது சோழியால் ஆன அழகான கால் கொலுசு.“முதல் நாள் நீ வாசல் தெளித்துக் கோலம் போட்ட இல்ல? அப்பவே இந்த மாதிரி ஒன்றை உன் காலுக்குப் போட்டு அழகு பார்க்கணும்னு ஆசை வந்தது”

“அப்பவேவா?”என்று இவள் கண்களை விரிக்க

“ம்ம்ம்...”என்று அசடு வழிந்தவன் தங்கக் கொலுசை இன்னோர் கையில் வைத்து “இது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்! எப்படினு சொல்லு…” அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லிய செயினில் மிதமான தங்க முத்துக்கள் ஆங்காங்கே கோர்க்கப்பட்டு அழகாக இருந்தது கொலுசு. அதை வருடியவள் சிறு குழந்தையென உதட்டைப் பிதுக்கி “தெரியலையே!” என்று இவள் தலையாட்ட

“நான் சாதித்து வாங்கின பதக்கங்களை எல்லாம் உருக்கி உனக்குக் கால் கொலுசு செய்தேன். இப்போது இல்ல…! உன்னோட விஷயங்கள் அன்றே எனக்குக் கொஞ்சம் தெரிந்திருந்ததால் உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வரக்கூடாது என்பதற்காகவும் என் காதலைச் சொல்லவும் இதைச் செய்தது. அடுத்த வாரம் நம் திருமணநாள் அன்று கொடுத்து என் காதலைச் சொல்லி அன்றைக்கு ரொமான்ஸ் செய்யலாம்னு இருந்தேன். ஆனால் நீ இன்னைக்கு செய்த அளப்பரையால் முன்பே சொல்ல வேண்டியதாகிப் போகிடுச்சு. சரி விடு… அதான் போனஸா இன்றே எனக்கு ஏதேதோ கிடைக்கப் போகுதே!” என்று கண்ணில் காதலுடன் ஒற்றைக் கண் சிமிட்டிச் சொல்ல

“பாவா...” என்று அவனை அணைத்துக் கொண்டவள் “அப்போ என்னை மன்னிச்சிட்டீங்களா? இது உங்க கனவு பாவா! நான் உங்க கனவை அழிச்சவ…” என்று இவள் குமுற

“அதை விட நீ என் மனைவி, காதலி, வெல்விஷர்! அப்படி ஒரு சம்பவம் நடக்காம இருந்திருந்தா ஒரு விளையாட்டு வீரனா நான் இந்தியாவுக்கு ஒன்றோ இரண்டோ தான் வெற்றியைப் பெற்றுத் தந்திருப்பேன். இப்போதுகோச்சராக இருந்து பல வெற்றிகளை வாங்கித் தரப் போகிறேன். சோ அதுக்காகவே ஐ லவ் யூ டி செல்லம்!” என்று அவளின் காதுமடல் உரசி முத்தம் தர, அவனை இன்னும் இறுக்கிக் கட்டிக் கொண்டாள் அவள்.

தன்னிடமிருந்து மனைவியைப் பிரித்தவன் அவள் கையில் இருந்ததைக் காட்டி “சொல்லு…இரண்டில் எது உனக்குப் பிடிச்சிருக்கு?” என்று கேட்க அவள் “இரண்டுமே!” என்று சொல்ல

“அப்போ கொடு… இரண்டையும் போட்டு விடறேன்” என்றவன் மனைவி கால் பக்கம் அமர்ந்து அவள் பாதத்தைத் தன் மடி மீது வைத்துப் போட்டுவிடப் போக இவளோ தயக்கத்துடன் காலை இழுக்க, விடாப்பிடியாகக் கொலுசை அணிவித்தவனோ வலது பாதத்தை எடுத்துத் தன் நெஞ்சின் மீது அழுத்திக் கொள்ள, இவ்வளவு நேரமிருந்த தயக்கம் போய் கர்வம் வந்து ஒட்டிக் கொண்டது பெண்ணவளுக்கு! ‘உன் இதய பீடத்தில் என்றும் அமர்ந்திருக்கும் இதய ராணி நான் தான்!’ என்ற கர்வம் அது. தன் கால் கட்டை விரலால் தன்னவன் நெஞ்சில் இவள் கோலமிட,

மன்னவனோ கோலமிடும் தன்னவளின் விரல்களுக்குக் குனிந்து முத்தமிடவும் உடல் கூசி சிலிர்க்க, இப்போது பெண்ணவளுக்கு வெட்கம் போய் காதல் வந்து ஒட்டிக் கொள்ளவும் கூடவே அதை அவள் கண்கள் வழியே தூதுவிட, இது ஒன்றே போதுமே ஒரு ஆண்மகனுக்கு தன்னவளுடன் சங்கமதத்தை ஆரம்பிக்க!


இந்த காதல் பாடத்தை யார் யாரிடம் படித்ததோ?! ஆனால் அதை இருவருக்குள்ளும் பரிமாறும் நேரம் இப்போது வந்தது. மற்றவர்களுக்கு விடியப்போகும் இந்த இரவு இவர்களுக்கு மட்டும் என்றும் விடியாத இரவாகப் போகிறது. தேன் சிந்தும் காதலைத் தீராத கூடலுடன் ஒருவருக்கொருவர் சொல்லி முடிக்க இந்த ஒரு யுகம் போதாது. அவனவளிள் காதல் நினைவுகள் அனைத்தும் அவன் மேல் தென்றலாய் வீச, கட்டதுரையாய் இருந்தவன் இன்று கொஞ்சி விளையாடும் மன்மதன் ஆனான் யாழினியின் உள்ளங்கவர் கள்வனான நந்து!...

புரிதல் ஒன்று இருந்தால் வாழ்க்கையில் பிரிதல் ஒன்று இல்லை. இருபதிலும் சரி நூறிலும் சரி உண்மைப் பாசமே வாழ்க்கையை வெல்லும் சந்தோஷமாக…

திருமணத்திற்கு முந்தைய காதல் எல்லாருக்கும் வருவதில்லை. அது அவசியம் என்பதை விட திருமணத்திற்குப் பிறகு காதல் வரவேண்டியது அவசியமானது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN