என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்– 18

எட்டு வருடங்களுக்குப் பிறகு…

SG ஸ்கூல் OF SPORTS கட்டிடத்தின் உள்ளே அதன் நிர்வாகியான கீதயாழினி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவள் பின் தன் இருக்கையில் அமர்ந்த நேரம் கதவைத் தட்டி அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே வந்தார்கள் ஏழு வயது வாண்டுகளான இரண்டு பேரும், அவர்களுடன் சுவேஷ்நந்தனும். அதில் ஒரு வாண்டு குள்ளம் என்பதால் அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அதன் மேல் ஏறி நிற்க நந்து சிரிப்பை அடக்கிக் கொண்டு

“எஸ் மேம்… வரச் சொன்னீங்களாமே?” என்றுகேட்க

அவனுக்குப் பதில் தராமல் வர்ஷினியைப் பார்த்து “நான் உன்னை வரச் சொல்லலையே?” நாற்காலி மேல் நின்றிருந்த வாண்டைக் காட்டி “நான் தர்ஷினியைத் தானே வரச்சொன்னேன்?” என்று கேட்க தலை குனிந்து நின்றாள் அந்தக் குட்டி வாண்டு வர்ஷினி.

“யு மே கோ நௌ” என்றவள் வர்ஷினி போனதும் “என்ன மிஸ்டர் நந்தன்! நீங்க கோச்சராக இருந்தும் இதெல்லாம் கண்டிக்க மாட்டீங்களா? இந்த தர்ஷினி ஏதோ சண்டையில் டென்னிஸ் மட்டையால் ஒரு பையனை அடித்திருக்கா. நல்ல வேளை! அடி பலமா இல்ல… இதே பெரிய அடியா இருந்திருந்தா அந்த பையனோட பெற்றோர் வந்து கேட்டா நிர்வாகம் என்ன பதில் சொல்லணும்னு நினைக்கிறீங்க?” என்று கொஞ்சம் சூடாகவே கேட்டவள்,

தர்ஷினியிடம் திரும்பி “திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங் ஃபார் யூ தர்ஷினி! இனி இப்படி எல்லாம் உன் மேல் கம்ப்ளைண்ட் வந்தா உன்னை இந்த பள்ளியிலிருந்து அனுப்பிடுவேன். உங்க அப்பா வந்து என்ன சொன்னாலும் சேர்த்துக்க மாட்டேன்” என எச்சரித்தவள், இருவரையும் போகச் சொல்ல

“இனிமே கவனமாக பார்த்துக்கிறேன் மேம்!” என்ற சொல்லுடன் அவன் விலக

நின்றிருந்த நாற்காலிருந்து இறங்கிய தர்ஷினி அதைப் பழைய படியே அதன் இடத்தில் வைத்து அதன் மேலிருந்த தூசியைத் துடைத்தவள் கதவு வரை சென்று திரும்பி தைரியமாக “சாரி மேம்! இனி நான் தப்பு செய்தா நீங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். என் அம்மாவை வந்து பேசச் சொல்லுகிறேன். அவங்க பதில் சொல்வாங்க மேம்!” என்று சொன்னவள் யாழினி ஏதோ சொல்வதற்குள் அங்கிருந்து ஓடியே போனாள் குண்டு தர்ஷினி.

யாழினிக்கு சிரிப்பு வந்தது. “வாலு! நான் தான் அவள் அம்மா என்பதாலேயே என்னை மடக்கிட்டுப் போறா பாரு…” என்று சொல்லி முறுவலித்தாள். உண்மை தான்! அவள் ஆசைப்பட்ட படியே முதல் பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளான வர்ஷினி தர்ஷினி என்று இருவரையும் பெற்றெடுத்தாள் யாழினி.

நந்துவின் தலைமையில் ஜெர்மன் சென்ற அணி வெற்றி பெற்று கோப்பையோடு தாயகம் திரும்ப, அதற்குப் பிறகு உயர் முகமாகவே இருந்தது அவனுக்கு. நந்து பல வெற்றிகளைக் குவிக்க, அவனைத் தங்கள் பொருட்களின் விளம்பரத் தூதுவராக நியமித்துப் பல நிறுவனங்கள் மாடலாகவும் பல விளம்பரத்திலும் போட முன்வர, ஒரு தலைசிறந்த ஹாக்கி பயிற்சியாளர் என்ற முத்திரையுடன் பிரபலமானான் நந்து. கூடவே இந்த பள்ளியை நிறுவி இதில் பலதரப்பட்ட விளையாட்டுகளுக்குப் பயிற்சி தர, யாழினியும் அவள் படித்து முடித்த சைக்கலாஜி மூலம் விபத்தினால் மேற்கொண்டு விளையாட முடியாமல் மனவுளைச்சலால் தோல்வியையும் சோர்வையும் சந்திக்கும் பலரை ஒன்று சேர்த்து தன்னம்பிக்கை மனிதர்களாக மாற்றி, இந்தப் பள்ளியைச் சிறந்த வெற்றிக் கூடாரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள் இருவருமே. யாழினி இனி வரையவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததால் நந்து பிடிவாதமாக இருந்து இந்த பள்ளிக்கு மனைவியை M.D ஆக்கினான் நந்து.

அன்று வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே கூடத்தில் ஒன்று கூடி இருந்தனர். தாத்தா பாட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, ஒரு பக்கம் மாமியார் காந்திமதியுடன் மூன்று மருமகள்கள் அமர்ந்திருக்க, இன்னொரு பக்கம் தன் அப்பாவுடன் மூன்று மகன்கள் அமர்ந்து இருந்தனர். இப்போதெல்லாம் காந்திமதி உடல்நிலை குணமாகி பழைய படியே நடமாடினார். அங்கு கீழே அமர்ந்திருந்த பிள்ளைகள் முதற்கொண்டு எல்லோருடைய கண்ணும் காதும் டிவியில் தான் இருந்தது. ஒரு பிரபல தொலைக்காட்சி ஊடகம் யாழினியைப் பேட்டி எடுத்திருக்க, அது தான் இப்போது ஒளிபரப்பாக இருக்கிறது.

டிவியில்....
நிருபர் : வணக்கம் நேயர்களே! இன்று சாதனைப் பெண்கள் வரிசையில் சைக்காலஜியில் டாக்டர் பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்க ஒரு பள்ளியை நடத்தி தான் கற்ற கல்வியின் மூலம் எல்லோருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டி வரும் திருமதி கீதயாழினி சுவேஷ்ந்தன் அவர்களைத் தான் சந்திக்க இருக்கிறோம். வாருங்கள்! அவர் எப்படி இந்த சாதனையை சாத்தியமாக்கினார் என்று அவரிடமே கேட்போம்.

வணக்கம் திருமதி. கீதயாழினி சுவேஷ்நந்தன் அவர்களே!
யாழினி : வணக்கம் சார்!
நிருபர் : சிறந்த விளையாட்டு வீரர்களைத் தான் தேடிப் பிடித்து பயிற்சி கொடுப்பாங்க. ஆனா அது எப்படி மேம், நீங்கள் மட்டும் தோல்வி அடைந்தவர்களைத் தேடிப் பிடித்து ஊக்கம் கொடுக்கறீங்க? இதில் நீங்க பட்ட சிரமங்கள் பற்றி எங்களுக்கும் சொல்லுங்க.
யாழினி : ஏற்கனவே நல்லா விளையாடுறவங்களை முன்னுக்குக் கொண்டு வருவதில் என்ன சார் இருக்கு? அதைத் தான் எல்லோரும் செய்கிறார்களே! நாங்க கை தட்டுறவங்க இல்ல, கை தூக்கி விடுறவங்க. நல்லா விளையாடி சூழ்நிலையால் இத்துறையை விட்டு விலகி இருக்கிறவங்களைத் திரும்ப கொண்டு வந்து ஜெயிக்க வைக்கணும். அதில் தான் சார் இருக்கு எங்களோட உண்மையான வெற்றியே!
இந்த அமைப்பை ஆரம்பிக்கும் போது எங்களுக்கும் சவாலாகத் தான் இருந்தது. அதிலும் ஆரம்பத்தில் ஒவ்வொருத்தராகத் தேடி, அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கவே ரொம்ப சிரமப்பட்டோம். ஆனா அதன் பிறகு எங்களுடைய அமைப்பைக் கேட்டுத் தெரிந்து கொண்டவங்க எல்லோரும் அவர்களாகவே முன் வந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு வயதா இருந்தாலும் கொண்டு வந்து எங்க கிட்ட சேர்த்து, இவங்களை நீங்க தான் பழைய படி விளையாட வைக்கணும் என கேட்டுக் கொண்டுயிருக்கிறாங்க.
நிருபர் : இப்போ இந்த அமைப்பு பள்ளிகளுக்கும் உதவுறதா சொல்கிறாங்க. அதைப் பற்றி நீங்களே சொல்லுங்க.
யாழினி : ஆமாம்! இப்போது எல்லாம் நாங்களே ஒரு சில பள்ளி கல்லூரிகளில் முகாம் போடுகிறோம். இன்றைய குழந்தைகளுக்கு வெற்றி தோல்விகளை மனதால் சரிசமமாக ஏற்றுக் கொள்ள நாம் தான் வழி செய்யணும். வெற்றி பெற்றவன் பெரிய சாதனையாளனும் இல்லை. தோல்வி அடைந்தவன் வாழவே முடியாத அடி முட்டாளும் இல்லை. இதை பிள்ளைகளுக்கு அவர்களின் சிறுவயதிலேயே மனதில் படும்படி விதைக்கணும். விதைத்தவன் உறங்கினாலும், நாம் விதைத்த விதைகள் உறங்குவதில்லை. முன்பெல்லாம் காதலில் தோல்வி அடைந்தா தான் தற்கொலை எண்ணம் வரும். ஆனால் இன்றைக்கு இருப்பவர்களுக்குப் படிப்பில் தோல்வி அடைந்தாலோ அல்லது பெற்றோரோ, ஆசிரியரோ திட்டினால் அல்லது கூட இருப்பவர்கள் கேலிக்கு ஆளாக்கினாலோ உடனே தற்கொலைக்கு முயல்வது சகஜமாகிவிட்டது. அப்படிப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்குத் தன்னம்பிக்கையுடன் எப்படி வெளியே வரணும் என்று சொல்லித் தருகிறோம்.
நிருபர் : நிச்சயமாக மேம்! இப்படி செய்கிறதால் தான் பத்து மற்றும் பன்னிரண்டாம் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வெளி வருவார்கள் என நினைக்கிறேன்.
யாழினி : உறுதியா சொல்கிறேன், மேலே வருவாங்க சார்! தன்னம்பிக்கையான வார்த்தைகள் தரும் உற்சாகம் வேறு எதிலும் வராது. நாங்கள், உன்னால் மட்டுமே முடியும் என்ற தலைக்கணம் வார்த்தைகள் சொல்வது இல்லை. உன்னால் முடியும், உன்னாலும் முடியும்! என்று சொல்லித்தான் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறோம். இனிமே பாருங்கள், எப்படி நம்ம பிள்ளைகள் மேலே மேலே வருவார்கள் என்று! அதனால் தான் எங்க அமைப்பின் சார்பா எட்டாவதில் இருந்து சைக்காலஜியையும் ஒரு பாடமாக வைக்கச் சொல்லி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கோம்.
நிருபர் : நல்ல விஷயம் மேம்! பிள்ளைகளா இருக்கும் போதே அவர்கள் மனதில் வாழும் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தைப் பசு மரத்தாணியா பதிய வைக்க நினைக்கிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றி அடையவும் நீங்கள் மென்மேலும் வளரவும் வாழ்த்துகள் மேம்.
யாழினி : இது அனைத்தையும் என் கணவர் மற்றும் என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் தான் சாத்தியமாக்கியது. இப்படிப் பட்ட உறவைத் தந்த இறைவனுக்கும், அவரின் அருளால் இனி எங்களின் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதற்கும் நன்றி!

பேட்டி முடிந்த பின்னரும் இன்னுமும் எல்லோர் முகங்களும் டிவியிலேயே இருக்க, நந்து மட்டும் பெருமை பொங்க மனைவியைத் திருட்டுத் தனமாகப் பார்க்க, அவன் பார்வைக்காகவே காத்திருந்தது போல் பார்வையை அவன் புறம் திருப்பியவள் “எல்லாம் உங்களால் தான் பாவா!” என்று உதட்டசைவால் “ஐ லவ் யூ சோ மச்!” என்று சொல்லி மெல்லியதாக உதடு குவித்து முத்தம் போல் செய்ய,

அதைப் புரிந்து கொண்டவன் ‘ரூமுக்குப் போவோமா? இறுக்கி அணைத்து உம்மா தருவீயா?’ என்று கண்களாலேயே கேள்வி கேட்டுத் தன் கைகளை இறுக்கி அணைத்த படி உதட்டசைவால் கேட்க

“முடியாது போடா கட்டதுரை!” என்றவள் அடுத்த நிமிடமே கணவனின் ஆசையை நிறைவேற்ற பூனை போல் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
யாழினியின் நாட்கள் இப்படியே மகிழ்ச்சியாக சென்றது.


அன்று… வெளிவாசலில் காம்பௌண்ட் சுவரின் மேல் நின்றிருந்த விஜயன் “மகேஷ் அத்தான்! வாழை மரம் சாய்கிறது, சரியா பிடிங்க” என்று கத்த,

மகேஷோ வேட்டியை மடித்துக் கட்டிய படி வாழைமரத்தின் மேல் தன் சுண்டு விரலை வைத்த படி அங்கே நடமாடிக் கொண்டிருந்த பெண்களை சைட் அடித்த படி “நான் சரியாதான் டா பிடித்திருக்கேன், நீ ஒழுங்கா கட்டு” என்று கூறவும்

பிறகு ஏன் சாய்ந்தது என யோசித்த படியே கீழே எட்டிப் பார்க்க, மகேஷின் ஜொள்ளு லீலைகளைக் கண்டவன் உடனே “அருந்ததி அக்காஆஆ!” என்று கூப்பாடு போட்டு “அத்தானுக்கு மரத்தைத் தனியா பிடிக்க முடியலையாம். நீங்களும் வந்து டூயட் பாடிகிட்டே மரத்தைப் பிடிப்பீங்களாம்“ என்று கத்திக் கூப்பிடவும் மனைவியின் பெயரைக் கேட்டவன் சட்டென்று அதிர்ந்து

“டேய் டேய்! அவகிட்ட ஏன் டா கோர்த்து விடுற?” என பதறியவன் “நீ வராத டா அருக்குட்டி!” என்று அங்கே இல்லாத மனைவிக்குப் பதில் கொடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அசடுவழியவும்.. அதைப் பார்த்த விஜயன் “அந்த பயம் இருக்கட்டும் அத்தான்!” என்று வாய்விட்டு சிரிக்க இன்னும் அசடு வழிந்தான் மகேஷ்.

இங்கே இப்படி என்றால் சற்றுத் தள்ளி உள்வாசலில் பாரிவேந்தரின் மூன்று மருமகள்களும் ஒரு மரத்தில் காய்கனி இலைகள் மற்றும் அழகான குருவிக்கூடுடன் கோலம் வரைந்து பலவித கலர் பொடிகளால் அந்தக் கோலத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒற்றுமைக் கோலமே, இவர்கள் அனைவரும் நந்து வீட்டு விழாக்களில் இருந்தே ஆகவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருப்பதைக் காட்டியது.

அப்பொழுது விஜியின் மூன்று வயது மகன் “மெர்சிமா மெர்சிமா! நான் தாச்சிக்கணும்” என்று கண்ணைக் கசக்கிய படி கழுத்தைக் கட்டிக்கொண்டு உதட்டைப் பிதுக்கவும் “அச்ச்சோ! என் குட்டிப் பாப்பாக்கு தூக்கம் வந்திடுச்சா?” என்று சொல்லிய படி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து பையனை மடியில் படுக்க வைத்த படி தான் செய்த வேலையைத் தொடர்ந்தாள் மெர்சி.

குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உறவுமுறையில் சித்தி சித்தப்பா பெரியம்மா பெரியப்பா என்று அழைக்காமல் எந்தவித பாகுபாடுன்றி எல்லாரையும் அம்மா அப்பா என்று அழைப்பதை வழக்கப்படுத்தி இருந்தார்கள்.
அப்போது சாரங்கனின் மகன் அங்கே வந்தவன் “விஜிம்மா! ராம் அப்பாக்கு ஏதோ வேணுமா, உடனே சீக்கிரம் வரச் சொன்னாங்க” என்றான். மெர்சி குனிந்த தலை நிமிராமல் ஐம்பத்தைந்து என்று வாய்க்குள் முணுமுணுத்த படியே தன் வேலையைச் செய்ய, பக்கத்திலிருந்த அருந்ததியோ களுக் என்று சிரிக்கவும் விஜி சிவந்த முகத்துடன் “போடா… அப்பா என்னைக் கூப்பிட்டு இருக்க மாட்டாங்க. நீயே என்ன வேணும்னு கேட்டு எடுத்துக் கொடுடா”

“ஐய்யோ! விஜிம்மா… ராம் அப்பாவுக்கு நீங்க தான் வேணுமா. சீக்கிரம் வாங்க” என பிடிவாதமாக அங்கேயே நிற்கவும், “விஜி! சும்மா போகாதே. எதுக்கும் உன் மச்சானுக்கு சூடா பால் எடுத்திட்டுப் போமா” என்று நமுட்டுச் சிரிப்புடன் அருந்ததி வாற “பால் மட்டும் போதுமா இல்ல பழமும் வேணுமா?” என்று மெர்சியும் சேர்ந்து கலாய்க்கவும் “அச்சோ! இந்த மனுசனால என் மானமே போகுதே” என விஜி நெளிந்த படி இருக்க. அதேநேரம் அங்கு வந்த மெர்சி மகளோ “அம்மாஆஆ! அப்பாக்குத் தலைவலியாம். மில்க் வேண்டுமா” என்று கூற அருந்ததியும் விஜியும் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியபடியே மில்க் மட்டும் போதுமா இல்லை ப்ரூட்ஸூம் சேர்த்து வேணுமா?” என்று கோரசாக மெர்சியைக் கலாய்த்த படி இருக்கும்போது அங்கு வந்த மகேஷோ “அருக்குட்டி! இந்தா அல்வா. எப்படி இருக்குனு சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லு டி” என்று கூறிய படி வாயில் திணிக்கவும் அங்கிருந்தவர்கள் “ஓஓஓஓஹோ” என்று கூச்சலிடவும் “என்ன இங்கு ஒரே சத்தம்?” என்று கோவைசரளா மாதிரி சொல்லிக்கொண்டு வந்த அஞ்சலி “எங்க வீட்டுமருமகள்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடி கும்மி அடிக்கிறாங்க. அங்கே நான் மட்டும் பொண்ணுக்கு மேக்கப் போட்டு விடணுமா?” என்று கூறி குறைபட,

அப்பொழுது அங்கு வந்த அவளின் கணவன் “உனக்குத் தான் அடிமை நான் சிக்கிட்டேனே எலிக்குட்டி! பிறகு என்ன? இந்த மாமா இருக்க கவலை ஏன்?” என்று கூறியபடி நிற்கவும்..

“ஏன்? அங்கே வந்து உதவி செய்கிறேன் என்ற பேரில் கல்யாணப் பெண்ணை சைட்டடிக்கவா?” என்று அஞ்சலி கேட்க “

உண்மை தான் டி டார்லிங்! கல்யாணப் பொண்ணு உன்னையை விட சூப்பர் பிகரா இருந்தா சைட் அடிக்கத்தானே தோணும்?” என்று அவன் மனைவியைக் கலாய்க்க

“உங்களை…” கை ஒங்கியபடி அவனைத் துரத்த அந்த இடமே கலகலப்பானது. உள்ளே மணமேடையில் இருந்த யாழினிடம் ஐயர் ஏதோ கேட்க, அதை எடுத்து வர ஒரு அறைக்குள் அவள் செல்ல, இதுதான் சாக்கு என்று நந்துவும் மனைவியின் பின்னே சென்று, மெதுவாகத் தாழிட்ட படியே மனைவியைப் பின்புறமாக அணைத்தவன்

“செல்லகுட்டி! உன் பாவாக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு டி” என்ற கூற

“உங்களுக்கு என்னைக் கட்டிப்பிடிக்க ஒரு சாக்கு பாவா…”

“போடி குந்தாணி! உன் பாவா ஃபீல் பண்ணிச் சொல்லுகிறேன் நீ காமெடி செய்ற! போடி…” என்று கரகரப்பான குரலில் சொல்ல

யாழினியோ சட்டென்று திரும்பி “என்னாச்சு பாவா?” என்று கேட்க

“உனக்கு நான் நிறைய அநியாயம் செய்திட்டேன் டி. உன்னைத் திருமணம் செய்ய முதலில் முழு மனதோடு சம்மதிக்கலே. நம் திருமணத்தின் போதும் எந்தவித ஒட்டுதலும் இல்லாமல் இருந்தேன். அதன் பிறகும் உன் காதலையும் புரிந்து கொள்ளாமல் வருத்தப்பட வைத்தேன். இன்றைக்கு நான் உணருகிறேன் டி. என் நினைவுகள் உன்னை எவ்வளவு தூரம் எவ்வளவு நாள் எப்படி எல்லாம் துரத்தியிருக்கு! அன்றைக்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப? அதிலும் அவ்வளவு காதலையும் மனசுக்குள் வைத்திருந்த. நான் என்ன டி செய்தேன் உனக்கு? இவ்வளவு காதலை என் மீது வைத்ததற்கு!” என்று குமுறியவன் சட்டென அவள் முன் மண்டியிட்டு அவளின் இடுப்பை இறுக்கிய படி தன் முகத்தை அவள் வயிற்றில் புதைத்த படி பிதற்றவும்…

கணவனின் தலையைக் கோதியவள் “என்ன பாவா இது சின்னப்பிள்ளை மாதிரி! உங்களுக்கு எத்தனையோ முறை சொல்லியிருக்கேன் இப்பவும் சொல்லுகிறேன். சின்ன வயதிலிருந்து நான் உங்களைக் காதலித்ததை விட இப்ப உங்க காதல் தான் பாவா பெரியது. அதை ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு செயலிலும் நான் உணர்ந்திட்டு வரேன். அப்படி இருக்கும்போது நீங்க ஏன் முடிந்ததைப் பற்றி யோசிக்கிறீங்க?”

“இல்ல டி… காதலிக்கிறதை விட காதலிக்கப்படுவது சுகம் டி. என் அறியாமையில் நானும் அந்த சுகத்தை அனுபவிக்கல, உன்னையும் அனுபவிக்க விடலை” என புலம்ப

தன்னவனின் மனநிலையை மாற்ற வேண்டுமென்று நினைத்தவள் “அன்று இழந்தது எதுவும் திரும்பக் கிடைக்காது பாவா!” கணவனின் முகத்தை நிமர்த்தி “ஆனால் ஒன்று செய்யலாம்…” என்று ராகம் இழுத்தவள் “நாம ஹனிமூன் போகலாமா?” என்று கிசுகிசுக்கவும், தன் மனைவியின் நோக்கம் புரிந்து

“நான் ரெடி டி குந்தாணி! ஆனா ஒரு டீல்! அப்போது விட்டதற்கு எல்லாம் இனி வருடம் ஒருமுறை ஹனிமூன் போகலாம்னா எனக்கு ஓகே தான் டி…” கணவனின் வார்த்தையில் இன்பமாக அதிர்ந்தவள்

“ஏமி ஏடுகொண்டலவாடா மகிம!” என்று சொல்லிக்கொண்டே தன் கன்னத்தில் போட்டுக் கொண்டவள் “என் பாவாவை இப்படி மாற்றிட்டியே! இதற்கே வருஷத்திற்கு ஒருமுறை திருப்பதி வந்து என் பாவாக்கு மொட்டை போடுகிறேன்” என்று எப்போதும் போல் இப்போதும் கணவனின் முடிக்கு வேட்டு வைக்க..

“அடியேய் குந்தாணி! நான் ரொமன்ஸ் பண்ண போகலாம் சொன்னா நீ என்ன டி மொட்டைக் காவியுடை கொடுத்து என்னைச் சாமியாராக்கிவிடுவ போலிருக்கே!” என்றவன் “நான் எல்லாம் அதுக்கு லாயக்கு இல்ல டி. ஒன்லி சம்சாரம் வாழ்க்கைக்குத் தான் டி லாயக்கு” என்று கூறிய படி இடுப்பைக் கிள்ள அவள் “ஐயோ பாவா!” என்று துள்ளவும் எழுந்து மனைவியை இழுத்து அணைத்த நேரம் “ஐ லவ் யூ பாவா!” என்று கூறித் தன்னவனின் கன்னத்தில் இதழ் பதிக்க அவனோ

“ஐ டூ லவ் டி செல்லம்!” என்று சொல்லிய படி தன்னவளின் செவ்விதழை நெருங்கிய போது தட்… தட்… தட்… என்று யாரோ கதவைத் தட்டவும் மென்மையாகத் தன்னவளின் இதழைத் தீண்டிவிட்டு மிச்சத்தை எல்லாம் நைட் பார்க்கலாம்” என்று தாபமாகக் கூறி மனைவியை அணைத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கதவைத் திறக்க அங்கே மொத்தக் குடும்பமே கூடியிருந்தது. நீங்க என்ன தம்பி உள்ளேயிருந்து வரீங்க! யாழினிதானே உள்ளே போனாள்! என் தங்கச்சி எங்கே தம்பி?” என்று தெரிந்து தெரியாத மாதிரி சந்தியா கேட்கவும் “இது தெரியாதா அண்ணி உங்களுக்கு? யாழினி எங்கே இருப்பாளோ அங்கே தானே கோந்து போட்டு ஒட்டின மாதிரி என் தம்பி இருப்பான்” என்று ஈஸ்வரி கலாய்க்க..

“நந்து மாமா! கல்யாணம் அவங்களுக்குத் தான். உங்களுக்கு இல்லை. புதுசா திருமணம் ஆன நாங்களே வெட்டியா சுற்றிட்டு இருக்கோம். நீங்க என்னனா வருஷத்துக்கு ஒருமுறை ஹனிமூன் பிளான் போடுவீங்க போலிருக்கே!” என்று எதார்த்தமாக வனிதா சொல்ல நந்துவின் பார்வை ரகசியமாக மனைவியைப் பார்க்க அவளோ கண்களாலேயே எச்சரிக்கை செய்ய

“என்ன அண்ணி என் மனைவி சொன்னது சரிதானா?” என்று விஜயன் கேலி செய்ய யாழினியின் முக சிவப்பில் “ஓஹோ! அதேதானா?” என்று எல்லோரும் கோரசகாகக் கேட்டுச் சிரிக்க

“முகூர்த்தத்திற்கு நாழி ஆகிடிச்சு. பொண்ணை வரச் சொல்லுறாங்க. திருமணம் முடிந்து பிறகு உங்க கலாட்டாவை வைத்துக்கோங்க” என்று காந்திமதி ஒரு சத்தம் போடவும் அங்கே சூழ்ந்து இருந்தவர்கள் சிரிப்புடன் விலகினார்கள்.

இன்று பச்சையப்பர் வீட்டில் திருமணம்! மொத்த குடும்பமும் மண்டபத்தில் கூடியிருந்தது. அங்கே பந்தியில் மற்றவர்களுடன் கிருஷ்ணா, சாரங்கன், ராம்பிரசாத் வேட்டியை மடித்துக் கட்டிய படி பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்கள். “கல்யாணத்திற்கு முன்னாடியே பந்தி போட்டுட்டிங்க?” என்று ஒருவர் கேட்க

“தாத்தா தான் முதலில் பந்தி பரிமாறிடுங்க. பிறகு நிறைந்த வயிற்றோடு நடக்கிற திருமணத்தை பார்க்கட்டும்னு சொல்லிட்டார்” என்று கிருஷ்ணா பதில் தர

“அதுவும் சரி தான். இப்படி நீங்க சகலைகளுடன் ஒற்றுமையா இருக்கிறதைப் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எப்போதும் இப்படியே நீங்க இருக்கணும்” என்று பெரியவர் சொல்ல “நிச்சயம் மாமா!” என்றான் கிருஷ்ணா.

பின் ஐயர் பெண்ணை அழைத்து வரச் சொல்ல இப்போது தான் புதுப் பெண் போல் வெட்கத்துடன் நாணி கோணியபடி வந்து அமர்ந்தார் ருக்குமணி பாட்டி!

தன்னுடைய எண்பத்தி ஐந்தாவது வயதில் ம்ருத்யுஞ்ஜய சாந்தி விழாவைத் தன் மகன் மகள் பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் என்று இன்னும் தங்களுடைய சொந்தங்கள் சூழ அட்சதை தூவ தாலி கட்டி ருக்குமணிப் பாட்டியை மறுபடியும் தன் மனைவியாக்கிக் கொண்டார் கோபால் தாத்தா.

வந்தவர்கள் எல்லோரும் இக்குடும்பத்தை இதே அன்பு பாசத்தோடு ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்று வாழ்த்தி விட்டுச் செல்ல நாமும் அதே வாழ்த்துடன் இவர்களிடமிருந்து விடை பெறுவோமாக நண்பர்களே!…


அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

பொருள்: உயிரும் உடம்பும் சேர்ந்த வாழ்வு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையே.

குடும்பத்தில் மட்டுமில்லாமல் சமூகத்தில் மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்துவோம். நம்மை நேசிப்பவர்களை மட்டுமின்றி வெறுப்பவர்களுடனும் அன்பால் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வோம்!

நன்றி!

வாழ்க பல்லாண்டு
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN