நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 4

மகேஷ் வாசலுக்கு வந்த போது அவனது முகத்தில் கண்ணீர் கரை காய்ந்து இருந்தது.
செல்வா எங்கோ பார்த்தப் படி நின்றுக் கொண்டிருந்தான்.

"செல்வா எனக்கு தலை வலிக்குது. நாம நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாமா?"

‌‌ஆமெனும் விதமாக தலையசைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தான். இரண்டடி சென்றவன் மீண்டும் இவனிடம் திரும்பி வந்தான். தன் உள்ளங்கையை அவனிடம் நீட்டினான்.

அவனது உள்ளங்கையில் இருந்த அழகான பம்பரத்தை பார்த்தான். அதை கையில் எடுத்துத் திருப்பி பார்த்தான்.

"நீ செய்யற பம்பரம் செய்யும் முன்னாடியே உடையுதுன்னு சொன்னியே...அதனால இதை செஞ்சி கொண்டு வந்தேன். இது ரொம்ப ஸ்ட்ராங்க்... எப்பவுமே உடையாது.."

செல்வா வீட்டின் கேட்டை கடந்து சென்றான். மகேஷ் தன் கையிலிருந்த பம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அம்மா வந்தவுடன் அவளிடம் நடந்த அனைத்தையும் கூறினான் மகேஷ். அம்மா அவன் கன்னத்திற்கு ஒத்தடம் கொடுத்தாள்.

"தாத்தா இவ்வளவு கெட்டவரா அம்மா?"

அம்மா கசப்பாக சிரித்தாள்.

"அவர் எல்லைக்குள் இருந்தா அவர் நல்லவர் தான்..."

"நான் ஏன் அவர் எல்லைக்குள் இருக்கனும்? எனக்குன்னு என் எல்லை இல்லையா? நான் என்ன நாய் குட்டியா? அவர் சொல்லுவதை மட்டும்தான் நான் கேட்கனுமா..? செல்வா ரொம்ப நல்லவன்ம்மா..." என்றவனுக்கு தொண்டை அடைத்தது.

அம்மா அவனை மடி மீது படுக்க வைத்து தலை கோதி விட்டாள்.

அன்று இரவு மகேஷின் உறக்கத்தில் செல்வாவை நான்கு பேர் கத்தியோடு விரட்டிக் கொண்டிருந்தனர். நடு இரவில் பதறியடித்து எழுந்தவன் தூக்கத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

மறுநாள் பள்ளியில் செல்வாவை கண்டதும் விலகிச் சென்றான் மகேஷ்.

உணவு இடைவெளியில் தன் அருகே செல்வா அமர முயற்சி செய்கையில் மகேஷ் எழுந்து நின்றான்.

"நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்..." சாமி நாதனிடம் சொல்லி விட்டு அவன்
வகுப்பறையை நோக்கி நடந்தான். செல்வா அவனை பின் தொடர்ந்து வந்தான்.

"மகேஷ்..."

"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன் செல்வா..."

மகேஷ் பயங்கரமாக பயந்துப் போயிருந்தான். செல்வாவிற்கு தன் தாத்தாவால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என உள்ளுக்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். தாத்தா சொன்னதை செய்வார் என்ற விசயம் அவனை சிந்திக்க கூட விடவில்லை. இதை பற்றி செல்வாவிடம் கூறவும் அவனுக்கு தைரியம் இல்லை.

"மகேஷ் நீ என்கிட்ட ஏதாவது சொல்லனுமா..?"

"எதுக்கு இப்படி கேள்வியா கேட்கற..? கொஞ்சம் தொல்லை பண்ணாம இரேன்..."

"நானா உன்னை தொல்லை பண்றேன்..? உண்மையிலேயே தொல்லை நீதான் தெரியுமா..?"

"நான்தான் தொல்லைன்னு தெரியுதே அப்புறம் ஏன் கூடவே சுத்தி உயிரை வாங்குற..? உனக்கு அறிவே கிடையாதா? இல்ல உன் சாதியில பொறந்த எவனுக்குமே அறிவு கிடையாதா?"

"தேவையில்லாம பேசாத மகேஷ்... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ..." செல்வா எச்சரிக்கை செய்தான்.

'ஸாரி செல்வா... நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னால உனக்கு எந்த கஷ்டமும் வேண்டாம்.'

"இதுல வருத்தப்பட என்ன இருக்கு? நீ இல்லன்னா ஒரு தொல்லை ஒழிஞ்சதா நினைச்சு
சந்தோஷப்படுவேன்... உன் கூட பழகறதால மொத்த பேரும் என்னை கேவலமா பாக்குறாங்க.. உன்னால..." மகேஷ் மேலும் பேசும் முன் அவனை கை காட்டி நிறுத்தினான் செல்வா.

"செத்தாலும் என்னை உன் நண்பனா யார்க்கிட்டயும் சொல்லிடாத..." செல்வா அவனிடம் கடைசியாக பேசிய வார்த்தை அதுதான்.

உண்மையில் மகேஷ் ஏன் இப்படி பேசினான் என செல்வா அறிவான். நேற்று மகேஷ் தாத்தாவோடு பேசியதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் நின்றிருந்தான் செல்வா. மகேஷ் வாங்கிய அறைகள் இவனுக்கும்தான் வலியை தந்துச் சென்றிருந்தன. மகேஷ் தனக்காக தாத்தாவை எதிர்த்து பேசியது செல்வாவிற்கு ஆறுதலாக இருந்தது.

தாத்தாவின் மிரட்டல் இவனை துளியும் பாதிக்கவில்லை. பூச்சாண்டிக்கு பயப்படும் வயதை தாண்டி விட்டதாக தனக்குத்தானே கர்வப்பட்டுக் கொண்டான்.

சிறு வயதிலிருந்தே செல்வாவிற்கு தைரியம் அதிகம். அதனால் இது ஒரு விசயமாக அவனுக்கு தெரியவில்லை.

செல்வா மகேஷின் மீது வைத்திருந்த நம்பிக்கை இன்று அவன் இப்படி பேசவும் மணல் கோட்டை போல சரிந்தது. உண்மையில் மகேஷின் வார்த்தைகள் அவனை பாதிக்கவில்லை. மகேஷின் கோழைத்தனம் தான் அவனை கடுப்பாக்கியது.

'ச்சே... இப்படி ஒரு கோழையோடு நண்பனா இருப்பதை விட சும்மாவே இருக்கலாம்.' செல்வா அதன் பிறகு மகேஷின் பக்கம் திரும்பவே இல்லை.

மகேஷ் அந்த சம்பவத்திற்கு பிறகு தாத்தாவோடு பேசவே இல்லை. அவர் இரண்டு வருடங்களுக்கு பிறகு இறந்த பிறகு கூட அவர் மீது அவன் வைத்திருந்த வெறுப்பு தீரவில்லை.

தாத்தா இறந்த சில நாட்களுக்கு பிறகு செல்வாவை தேடி வந்து மன்னிப்பு கேட்டான். செல்வா அவனையோ அவன் மன்னிப்பையோ கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.

இதோ இன்றும் அதே மன்னிப்பை கேட்டு விட்டு செல்வாவின் வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கிறான்.
"என்னை உன் வீட்டுல தங்க வைப்பியா?"

‌ மகேஷ் தன் அப்பா மீது நம்பிக்கை வைத்திருந்தான். ஆனாலும் கூட சிறிய தயக்கம் இருந்தது.
யாரேனும் ஏதாவது சொல்லிவிட்டால்.? சிறிய வார்த்தைகள் கூட நண்பனின் மனதை புண்படுத்தி விடும் என்ற பயம் அவனை தயங்க வைத்தது.

"செல்வா அது..."

"மகேஷ் அன்னைக்கு நீ ஏன் அப்படி பேசினன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ உன் தாத்தாக்கிட்ட வாங்கிய அடியும் தெரியும். அவரோட மிரட்டலும் தெரியும்..."

‌‌மிரட்சியோடு நண்பனை பார்த்தவன் "தாத்தா இறந்துட்டார் செல்வா..." என்றான்.

சின்னதாக சிரித்த செல்வா "உனக்கு விசயம் புரியல. பிரச்சினை உன் தாத்தா இல்லை. நீதான்..." என்றான்.

புரியாமல் பார்த்தான் மகேஷ். "உன்னோட வார்த்தைகள் உன்கிட்ட இருந்து என்னை விலக வைக்கல... உன் கோழைத்தனம் தான் என்னோட விலகலுக்கு காரணம்..."

"என் இடத்துல இருந்து யோசி செல்வா... அவர் உன்னை ஏதாவது பண்ணியிருந்தா என்ன செய்றது..?"
"நீ உன் இடத்தில‌ இருந்து யோசிச்சயே தவிர என் யோசனையில் என்ன ஓடுச்சுன்னு தெரிஞ்சிக்க விரும்பல..."

குழப்பமாக நண்பனை பார்த்தான் மகேஷ்.

"மகேஷ் என்னை சமமான மனுசனா மதிக்காத யாரையும் நானும் மதிக்கிறது இல்லை. ஆனா நீ என் நண்பன், எனக்கும் என் உணர்வுக்கும் மதிப்பு தராம யாரோட வார்த்தைகளுக்கோ முக்கியம் தரயே..." செல்வாவின் குரல் உடைந்திருந்தது.

"செல்வா நான் உனக்காகத்தான் பயப்படுறேன். யாராவது உன்னை ஏதாவது சொல்லிட்டா..."

"நான் என்னை மதிக்காத மனுசனையே மதிக்க மாட்டேன். அவங்க வார்த்தை என்னை என்ன செய்ய முடியும்? நீ என் நண்பன்,‌ உன் வார்த்தைதான் எனக்கு முக்கியம்... இந்த சமுதாய வேறுபாட்டுக்கு சுத்தி இருக்குற எல்லோரையும் குறை சொல்லாம தான் செய்யுற தப்பை பார்க்கனும் மகேஷ்...
இந்த நாட்டுல தொண்ணூறு சதவீதம் பேருக்கு வேற சாதியிலயும் வேற மதத்திலயும் நண்பர்கள் இருக்காங்க... நண்பனுக்காக உயிரை தரவும் தயங்க மாட்டாங்க... ஆனா தன் வீட்டுல சேர்த்துக்க ஓராயிரம் தயக்கம் காட்டுவாங்க... அவன் என்ன சொல்வான்... இவன் என்ன சொல்வான்... சுத்தியிருக்கற எல்லோரையும் யோசிப்பாங்க... ஆனா தன் மனசுல இருக்கற நண்பனோட மனசை யோசிக்க மாட்டாங்க...
நண்பனை அப்பா ஏதாவது சொல்லிருவாரு... மனைவி ஏதாவது கேவலப்படுத்திருவா... மகன் இளக்காரமாக பார்த்துடுவான்... இதுதான் நட்புக்கு தர மரியாதையா..?
வீட்டு ஆளுங்கக்கிட்ட தன் நட்போட முக்கியத்துவத்தை புரிய வைக்க முயற்சி செய்யுறது இல்லை... பேசுறவன் நாலு நாள் பேசுவான்... அப்புறம் சமுதாயத்துக்கு பயந்திருந்தவன் இதுதான் சாக்குன்னு தன் நண்பனையும் வீட்டுல சேர்ப்பான்... இது ஏன் உனக்கு புரியல மகேஷ்..? உன் வட்டத்தை விட்டு வெளியே வாடா... எவனாவது அடிச்சா திருப்பி அடிக்கனும்.. எவனுக்கோ பயந்து வாழ கூடாது. நாம நமக்காக வாழனும் மகேஷ்... உனக்கு இதை விட...." செல்வா அடுத்த வார்த்தை பேச வாய்ப்பு தராமல் அவனை பாய்ந்து அணைத்தான்.

"ஸாரிடா... நான் ... நான் இதை யோசிக்கவே இல்லை... உனக்கு என் மனசுல இடம் இருக்கு... என் வீட்டுல உனக்கு இடம் தரலன்னா கண்டிப்பா அது எனக்கும் சத்திரம்தான் செல்வா..."

"சரிடா... என்னை விடு... இரும்பு தூண் மாதிரி கையை வச்சிக்கிட்டு இப்படி கட்டிப்பிடிச்சா இரண்டே நிமிசத்துல நான் செத்துருவேன்டா..."

கண்ணீர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மகேஷின் கண்களில் சிரிப்பு குடி ஏறியது.

கலகலவென சிரித்தவன் "ஆம்பள மாதிரி பேசுடா..." என்றபடி அவனை இன்னும் இறுக்கினான்.

அன்று மாலை செல்வாவின் வீட்டில் சாப்பிட்டு முடித்த பிறகு இருவரும் மகேஷின் வீட்டிற்கு கிளம்பினர்.
மகேஷ் வெகு நேரமாகியும் வராததால் வாசலிலேயே காத்திருந்த அவனின் அம்மா இருவரும் சேர்ந்து வரவும் குழப்பமாக பார்த்தாள்.

"யார் இது மகேஷ்..?"

மகேஷிற்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. 'கடவுளே, அம்மா செல்வாவை வெறுக்கக் கூடாது.'

"என் நண்பன் செல்வா... "

"நல்லாருக்கியா தம்பி..? எந்த ஊர் நீ..?"

செல்வாவை பதில் சொல்ல விடாமல் மகேஷ் முந்தினான்.

"இவன் துளசி பட்டி. இவன் ஒரு வாரத்துக்கு இங்கேதான் தங்க போறான்.."

அம்மா வீட்டை திரும்பி பார்த்தாள்.

"அப்பாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடு மகேஷ்.." மகேஷிற்கு அம்மாவின் மீது கோபம் வந்தது.

"அம்மா இவன் என் நண்பன்..."

"ஆனா இது உன் அப்பாவுக்கு சொந்தமான வீடு மகேஷ். இங்கே முடிவெடுக்கற உரிமை அவருக்குத்தான் இருக்கு.."

மகேஷ் அம்மாவின் சொல்லில் இருந்த உண்மையை புரிந்து கொண்டவனாக வீட்டிற்குள் நுழைந்தான்.
அப்பா தாத்தாவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு கொண்டிருந்தார்.

"அப்பா என் நண்பனை வீட்டுக்கு கூட்டி வந்திருக்கேன். அவன் ஒரு வாரம் இங்கேதான் தங்க போறான்..."

"சாமி நாதனா?"

"இல்ல... செல்வா... துளசி பட்டி..." மகேஷின் குரலில் இருந்த தைரியம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அப்பா சில நொடிகள் யோசித்து விட்டு "சரி..." என்றார்.

மகேஷ் மகிழ்ச்சியோடு வாசலுக்கு விரைந்தான்.

அப்பா பரிகாசமாய் சிரித்தார். மகேஷிற்கு எதனால் தாத்தாவின் மீது வெறுப்பு வந்தது என்பதை அறிவார். மகன் தன் மீதும் அதே வெறுப்பை காட்டுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சாதிசனத்தின் கேலி கிண்டலுக்கு மரியாதை தருவதை விட மகனின் நட்புக்கு மரியாதை தருவது எவ்வளவோ மேல் என நினைத்தார்.

மகேஷ் புன்னகை முகத்தோடு ஓடி வந்து செல்வாவை அணைத்தான்.

"வாடா... என் ரூமுக்கு போகலாம்..." செல்வாவை இழுத்து கொண்டு உள்ளே ஓடினான்.

அறையினுள் வந்ததும் அவனை தன் கட்டிலில் அமர வைத்து விட்டு மாற்றுடை எடுத்து வந்து தந்தான்.
உடை மாற்றி விட்டு திரும்பிய செல்வாவின் கண்களில் மேஜை மீதிருந்த பம்பரம் தென்பட்டது. செல்வா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அதுமட்டுமல்லாமல் இன்னொன்றும் கண்களில் பட்டது. அது சிவசக்தியின் புகைப்படம். செல்வா மூச்சு விடவே மறந்து விட்டான்.

"மகேஷ் உன் ரூமுக்குள்ள உன் வீட்டாளுங்க யாருமே வருவதில்லையா?"

புன்னகையோடு திரும்பினான். "ஆமா... நட்புன்னா இதுதான். ஒரே முறைதான் ரூமுக்குள்ள வந்துருக்க.. ஆனா ஒரே நிமிஷத்துல நண்பனை பத்தி கண்டு பிடிச்சிட்ட..."

செல்வாவிற்கு நல்ல வார்த்தையாக நான்கு திட்ட வேண்டும் போல இருந்தது.

அவன் வாய் திறக்கும் முன்பு கலகலவென சிரித்தபடி உள்ளே வந்தான் சாமிநாதன்.

"உன் அம்மாவோ அப்பாவோ இந்த ரூமுக்குள்ள வந்திருந்தா இன்னேரம் உன்னை தோலை உரிச்சி தொங்க விட்டிருப்பாங்க... நீ நல்லா கொழுக்கட்டை போல கொழு கொழுன்னு இருப்பதை பார்த்துதான் அவன் அப்படி கேட்கிறான்..."

மகேஷ் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

" சக்தி போட்டோ இங்கே ஏன் இருக்கு..?"

இரண்டே எட்டில் மேஜை அருகே வந்தவன் புகைப்படத்தை கையில் எடுத்தான். குற்ற உணர்வோடு நண்பனை பார்த்தான்.

"ஸாரி செல்வா... சக்தி உன் தங்கச்சின்னு தெரிஞ்சிருந்தா அவளை லவ் பண்ணியிருக்கவே மாட்டேன்..."

கதை பிடிச்சிருந்தா மறக்காம வோட் அன்ட் கமெண்ட் பண்ணுங்க நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN