நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம்7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 7

மகேஷ் சக்தியை விலகி நடந்த போது அவனது செல்போன் ஒலித்தது. ஃபோனை எடுத்து பேசியவன் தூரத்தில் ஸ்டேசனுக்குள் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த இளம்பெண்ணை பரிதாபமாக பார்த்தான்.

"மகேஷ்வரா என் பொண்ணை காணோம்... இந்த பையன் அவ எங்க போனான்னு சொல்ல மாட்டேங்கறான்..."

"உன்‌ பொண்ணு இங்கே போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கா... இவ இன்னும் பத்து நிமிஷத்துல உன் வீட்டுல இருப்பா... நான் வருவதற்குள் அவங்கள என் மாந்தோப்புக்கு கூட்டிட்டு போயிடு... முக்கியமான விஷயம் சொல்லுறேன் கேளு... நான் வர வரைக்கும் அவங்க இரண்டு பேர் மேலயும் தூசி கூட படக்கூடாது... சரியா..?"

எதிராளி "சரி..." யென சொன்னதும் ஃபோனை வைத்து விட்டு அந்த இளம்பெண்ணை நோக்கி நடந்தான்.

"பாப்பா..."

நிமிர்ந்து பார்த்த அன்புச்செல்வி மகேஷை கண்டதும் பேய் அறைந்தது போலானாள்.

"உங்க அப்பா உன்னை காணாம மனசு கஷ்டபடுறாராம்... உங்க அம்மா உன்னை காணாம தற்கொலை செய்ய போயிட்டாங்களாம்..."

அன்புச்செல்வியின் கண்களில் திகில் தெரியவும் மகேஷ் தன் பொய்யை தொடர்ந்தான்.

"உன் காதலன் கூட உன்னை தேடி அலையுறான்... யார்க்கிட்டயும் சொல்லாம இப்படியா ஓடி வருவ? உன் அப்பா உன் காதலையும் கல்யாணத்தையும் ஏத்துக்கிட்ட பிறகும் ஏன் ஓடி வந்த...?"

"அ... அது... அவங்க எங்களை கொல்ல கூட்டிட்டு போறாங்கன்னு என் அண்ணன் சொன்னான்..."

"பெத்த புள்ளைங்கள யாராவது கொல்லுவாங்களா...? உன் அப்பா உன் மேல வச்ச பாசத்தை மறந்துட்டியா..? அவர் உனக்காக உயிரையும் தருவார்... அவர் எப்படி உன் காதலை மறுப்பாரு..?"

‌ "அன்னைக்கு..."

அவளை பேச விடாமல் இடையில் குறுக்கிட்டான் மகேஷ்.

"அன்னைக்கு ஏதாவது கோபமா இருந்திருக்கும்... நீயாவே இருந்தாலும் உன் பசங்க தன்னோட காதலை சொன்னா முதல்ல மறுப்ப... அப்புறம் அவங்க பிடிவாதம் பிடிக்கறத பார்த்துதான் அவங்க வழிக்கு இணங்கி போவ... உன் அப்பா உன் வழிக்கு வந்ததால்தான் உன்னையும் உன் காதலனையும் ஏத்துக்கிட்டு வீட்டுக்கு கூட்டி வந்தாங்க... நீ இப்படி அவசரப்பட்டு ஓடி வந்துட்டியே..."

அன்புச்செல்வியின் கண்களில் நம்பிக்கை தென்பட ஆரம்பித்தது. எவ்வளவு போராட்டாங்களை பார்த்தாலும் கூட தன் பெற்றோர் எதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இவளையும் தடுமாற வைத்தது.

"நீ உன் காதலனையும் விட்டுட்டு வந்துட்டதால நீ அவங்கள விட்டுட்டு வந்து தற்கொலை முயற்சி பண்ணிகிட்டியோன்னு உன் வீட்டுல எல்லோரும் பயப்படுறாங்கம்மா..."

அன்புச்செல்வி திகிலோடு எழுந்து நின்றாள்.

"நான் வீட்டுக்கு போறேன்..." என்றபடி அவள் கிளம்ப அவளை நிறுத்தினாள் வனஜா.

" மேடம் வந்த பிறகு அவங்ககிட்ட சொல்லிட்டு போம்மா..."

"இல்ல மேடம்... எங்க அப்பா ரொம்ப நல்லவரு... அவர் மேல நம்பிக்கை இல்லாம இவ்வளவு தூரம் வந்தது என் தப்புதான்... நான் இப்பவே கிளம்பறேன்... அவங்க எல்லோரும் என்னை காணாம பயந்து போயிருப்பாங்க..." என்றவள் வேக வேகமாக வெளியே நடந்தாள்.

வனஜா சக்தியை பார்க்க கிளம்ப அதை அறிந்தவன் போல அவளை நிறுத்தினான் மகேஷ்.

"உங்க மேடத்தை நான் கூட்டி வரேன்..." என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தான்.

சக்தி அவன் நெருங்கி வருவதை கூட அறியாமல் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

"லவ் யூ டூ... " என்ற அவளின் வார்த்தைகள் அவனின் மொத்த உலகையும் கவிழ்ப்பது போலிருந்தது. அந்த வார்த்தை அவனது இதயத்தில் இடி விழுந்த வலியை தந்தது. கோபம் அவனின் கண்களை மறைத்தது.

போனில் பேசி முடித்த சக்தி திரும்பினாள். இவனது கோப முகம் கண்டு தன்னையும் மீறி பின்னால் நகர்ந்தாள்.

"யாருடி அவன் என் பொண்டாட்டிக்கு ஐ லவ் யூ சொல்லுற அளவுக்கு தில் உள்ள ஆம்பள..?"

"நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்ல மகேஷ்..." பொறுமையுடன் மெல்லிய குரலில் கூறினாள் சக்தி.

"யார் அவன்னு கேட்டேன்..?"

மகேஷின் கோபம் என்ன செய்யுமென்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தாள் சக்தி. ஆனால் இருபது வருடங்களாக மறைத்து வருவதை இவனது கோபத்திற்கு பயந்து சொல்லி விட மனமில்லை. இனியன் என்று தனக்கு ஒரு மகன் இருப்பதை மகேஷ் அறிந்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை சக்தி அறிவாள். வாழ்க்கையில் எக்கச்சக்க போராட்டங்களை பார்த்து விட்டவளுக்கு இனியும் போராட மனது இடம் தரவில்லை. அதிலும் இனியனின் உயிரையும் மகேஷின் உயிரையும் ஒரே ஒரு நொடியில் இழக்கும் அளவுக்கு துணிவும் இல்லை.

"உனக்கு சொன்னா புரியாது... இதை பெரிசு பண்ணாம அமைதியா கிளம்பு மகேஷ்..."

மகேஷின் கோபம் எல்லையை மீறி விட்டது.

"யார் அவன்..? அந்த **பையனுக்காதான் என்னை இவ்வளவு நாள் ஒதுக்கி..."

அவன் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்பு அவனை பளீரென அறைந்து விட்டிருந்தாள் சக்தி. அவன் நடந்ததை நம்ப முடியாமல் தன் கன்னத்தில் கை வைத்தான். அவள் அறைந்த இடம் சுரீரென எரிந்தது.

சக்தி கோபத்தில் பத்ரகாளி போல நின்று கொண்டிருந்தாள்.

"நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல... புரிஞ்சதா... எதுவும் இல்ல... இது இனியன்... செல்வாவோட மகன்... இன்னொரு முறை தேவையில்லாம வார்த்தையை விட்டன்னா நான் ஜென்மத்துக்கும் உன் முகத்துலயே விழிக்க மாட்டேன்... புரிஞ்சதா..?" அவள் ருத்ரமாக கேட்க அவன் அனிச்சையாக தலை ஆட்டினான்.

செல்வா எங்கே இருக்கிறான் என கேட்க நினைத்தவன் அவளின் கோபத்தை கண்டு அமைதியானான்.

சக்தி ஸ்டேசனுக்குள் நுழைந்ததும் அவளின் பார்வை முதலில் தேடியது அன்புச்செல்வி அமர்ந்திருந்த இடத்தைதான்.

"வனஜாக்கா அந்த பொண்ணு எங்கே..?"

"அந்த பொண்ணு அவங்க வீட்டுக்கு போயிட்டா..." வனஜா சொன்னதை நம்பாமல் பார்த்தவள் கன்னத்தை தடவிய படியே வந்த மகேஷை கண்டதும் புரிந்து கொண்டாள்.

"அந்த பொண்ணு எங்கே மகேஷ்..?"

"இது அநியாயம்... என்னை பார்த்தா உனக்கு கடத்தல்காரன் போல தெரியுதா..?"

"கட்டப் பஞ்சாயத்து பண்ற நீ கடத்த மாட்டன்னு சொன்னா யார் நம்புவாங்க..?"

"உன்னை மாதிரி போலிசுக்கு வேலை தரதே என்னை மாதிரி ஆளுங்கதான்..."

"அந்த பொண்ணோட உயிர் ஆபத்துல இருக்கு... தயவு செஞ்சு விளையாடாதே... அந்த பொண்ணு எங்கன்னு சொல்லு..."

"எனக்கும் நீ சொல்லுற அந்த பொண்ணு காணாம போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... நான் கையெழுத்து போட வந்தேன்... என் வேலை முடிஞ்சது நான் கிளம்பறேன்..."

அவன் வாசலை நோக்கி நடந்தான்.

'இந்த முறை உன் கையால் யாரும் சாக போறது இல்ல... அதை நான் நடக்க விட போறதில்ல...'

அவள் மனதில் உறுதிமொழி எடுத்த நேரத்தில் திரும்பி வந்தான் மகேஷ்.

அவள் புரியாமல் பார்க்க "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..." என்றவன் திரும்பி நடந்தான்.

அவன் தன் கண் மறைவிலிருந்து சென்றதும் வனஜாவை பார்த்தவள் "வண்டியை எடுக்க சொல்லுங்க... அந்த பொண்ணு வீட்டுக்கு போகலாம்..." என்றாள்.

மகேஷ் தன் மாந்தோப்பிற்கு வந்த போது சிவாவின் குடும்பமும் அன்புச்செல்வியின் குடும்பமும் ஆளுக்கொரு திசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.

இவனை கண்டதும் சிவாவின் அம்மா ஓடி வந்து இவனின் காலில் விழுந்தாள்.

"தம்பி வாழ வேண்டிய பசங்க அவங்க... அவங்கள விட்டுடுப்பா..." என்னவளின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.

"நீங்க என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டிங்க..." என்ற அன்புச்செல்வி தன் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்தபடி அவனை முறைத்தாள்.

"அவங்க இரண்டு பேரையும் குடோனுக்கு கூட்டி வாங்க..." என்றவன் தன் ஆளிடம் திரும்பினான்.

"இவங்க இரண்டு குடும்பத்தை தவிர வேற ஈ காக்கா கூட இந்த தோப்புக்குள்ள வரக் கூடாது... புரிஞ்சதா..?"

குடோனில் இரு குடும்பமும் உள்ளே நுழைந்ததும் ஷட்டரை இழுத்து சாத்தியவன் உள்ளே இருந்த சன்னல் அனைத்தையும் மூடினான். நிதர்சன இருட்டில் சில விம்மல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

தன் அருகிலிருந்த ஸ்விட்சை அவன் போட்டதும் அங்கிருந்த அனைத்து விளக்குகளும் வெண்ணிற ஒளியை துப்ப ஆரம்பித்தது.

தன் வழக்கமான நாற்காலியில் சென்று அமர்ந்தவன் தன் முன்னிருந்த மேஜை டிராவை இழுத்தான். உள்ளிருந்து நீளமான இரு கத்திகளை எடுத்து வெளியே வைத்தான்.

கத்திகளை கண்டதும் அன்புச்செல்வி ஓரடி பின்னால் நகர்ந்தாள். சிவாவின் கண்களில் கோபம் மட்டும் நெருப்பாக எரிந்தது.

"இந்த கத்திக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்..." என்ற சிவா மகேஷ் துப்பாக்கி ஒன்றை எடுத்து வெளியே வைக்கவும் பயத்தில் மிடறு விழுங்கினான்.

"இது என் கோட்டை... இந்த கோட்டைக்குள்ள வந்த பிறகு யாரா இருந்தாலும் நான் சொன்னா மட்டும்தான் பேசனும்..." என்று அடிக்குரலில் கூறியவன் அனைவரையும் கடை கண்ணால் ஒரு பார்வை பார்த்தான்.

துப்பாக்கியை கையில் எடுத்தவன் அன்புச்செல்வியின் அருகே சென்றான். யாரும் எதிர்பாராத நேரத்தில் அவளது தோளை பற்றினான். அவளை தன் ஒற்றை கையில் சிறை பிடித்தவன் தன் மற்றொரு கையில் இருந்த துப்பாக்கியை அவளது நெற்றிக்கு குறி வைத்தான்.

"யாரும் இவளை நெருங்க கூடாது..." என்றவன் அந்த பெண்ணை பார்த்தான்.

"நான் உன்னை கொல்ல போறேன்... உனக்கு சாக விருப்பம் இல்லன்னா 'அவனை பிடிக்கல'ன்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லு... "

அன்புச்செல்வி பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள். சிவாவை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கோபத்தோடு மகேஷை பார்த்து கொண்டிருந்தான்.

"ப... பரவாயில்லை... என்னை கொன்னுடுங்க..." நடுங்கிய குரலில் கூறியவளை ஆத்திரத்துடன் பார்த்தார் அவளின் அப்பா.

"அந்த நாயை கொன்னுடு மகேஷ்... இவளை பெத்து வளர்த்த பாவத்துக்கு இந்த கொடுமையையும் கடைசியா பார்த்து தொலைக்கிறேன்..."

மகேஷ் சட்டென தன் துப்பாக்கியை அவளது அப்பாவின் திசைக்கு திருப்பினான். அவளது அப்பா பயத்தோடு ஓரடி பின்னால் நகர்ந்தார்.

"நீ சொல்லு பாப்பா... உங்க அப்பாவை கொன்னுடுறேன்..." ‌அன்புச்செல்வி திகிலோடு மகேஷை பார்த்தாள். கண்ணீர் சாரை சாரையாக வழிந்தது. விம்மி விம்மி அழுதபடி மகேஷை பார்த்தாள்.

"ப்ளீஸ் எங்க அப்பாவை எதுவும் பண்ணிடாதிங்க..." என்று கெஞ்சினாள்.

"ஏன் பாப்பா...? அவர் உன்னை கொல்ல நினைக்கும் போது நீ ஏன் அவரை காப்பாத்த நினைக்கிற..? உன் காதலுக்கு தடை இவர்தான்... இவரை நான் கொன்னுட்டா அப்புறம் நீ இந்த பையனோடு சந்தோசமா வாழலாம்..."

வேண்டாம் எனும் விதமாக தலை அசைத்தாள்.

"தப்பு பண்ணது நான்தான்... நான்தான் சாகனுமே தவிர அவர் இல்ல... எங்க அப்பா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாரு... அவர் இல்லன்னா இன்னைக்கு நான் இங்க இல்ல... அவர் என் காதலை ஏத்துக்க மாட்டார்ன்னு தெரிஞ்சும் காதலிச்சது நான்தான்... ப்ளீஸ் அவரை ஏதும் பண்ணிடாதிங்க..." விம்மலுக்கு இடையே திக்கி திக்கி பேசியவளை பாவமாக பார்த்தான் மகேஷ்.

"சரி பாப்பா நான் உனக்கு இன்னொரு வாய்ப்பு தரேன்... இந்த பையனை கொன்னுடுறேன்... நீ உங்க அப்பா கூட போறியா..?"

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN