நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

7. வாழ்வே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
7. வாழ்வே..

மைவிழி செழியனின் கையை பற்றியபடி காரிலிருந்து கீழே இறங்கினாள். கதிர் தன்னை விஷ்வா பின்தொடர தன் வீட்டை நோக்கி நடந்தான். மைவிழி அங்கிருந்த சுற்றுச்சூழலை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

நகரத்தின் ஒதுக்கு புறத்தில் இருந்த அந்த குடியிருப்பு வளாகத்தில் அனைத்து வீடுகளும் சீரான இடைவெளியுடன் அழகான முறையில் கட்டப்பட்டிருந்தன. அனைத்து வீடுகளிலும் சுற்று சுவரை தாண்டி பல செடி கொடிகள் வளர்ந்திருந்தன. கதிரின் வீடு மட்டும் அந்த மொத்த இடத்திற்கும் பொருந்தாதது போல் செடி கொடி இல்லாமல் வெற்றாயிருந்தது. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த களைகளை சமீபத்தில் சுத்தம் செய்திருந்ததால் காணும் இடமெங்கும் செம்மண் வண்ணமே தெரிந்தது.

'இந்த வீடு என்னுடையதாக இருந்திருந்திருந்தால் இந்த மொத்த வீட்டையும் பச்சை போர்வையில் போர்த்தியிருப்பேன்.. ரசனை கெட்ட இவனுக்கும் எனக்கும் ஆரம்பமே செட்டாகல.. அப்பா எதற்காக இவனை எனக்கு கட்டி வச்சாரோ..?'

"அக்கா நீங்கதான் இங்கே புதுசா குடி வந்திருக்கிங்களா..?" குரல் கேட்டு திரும்பினாள் மைவிழி. ஒரு குட்டிப்பையன் அவளது புடவை தலைப்பை இழுத்தபடி கேட்டான்.

அவனது உயரத்திற்கு குனிந்தவள் அவனது குண்டு கன்னங்களை இரு கைகளாலும் பிடித்து கிள்ளினாள்.

"ம்.. இன்னும் கொஞ்ச நாள் இங்கேதான் நான் இருக்கப் போறேன்.. உன் பேர் என்ன வாலு..?"

"நான் வாலுபையன் இல்ல.. ரொம்ப நல்ல பையன்.. என் பேரு மிதுன்.. அம்மா மிதுன்னு கூப்பிடுவாங்க.." மழலையில் சொன்னவன் குரலுக்கு உடனே மயங்கி விட்டாள் மைவிழி.

"நீ செம க்யூட்டா இருக்க.." அவனது கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தாள். மிதுனின் முகத்தில் வெட்க புன்னகை உதித்தது. அவளிடமிருந்து நகர்ந்து தன் வீட்டை நோக்கி ஓடினான்.

தன் வீட்டிற்குள் நுழைய முயன்ற கதிரின் நெஞ்சில் கை வைத்து அவனை வெளியே தள்ளினாள் ருத்ரா. ருத்ராவை இதற்கு மேல் சீண்டக் கூடாது என ஏற்கனவே முடிவெடுத்திருந்தான் கதிர்.

"ஏன் ருத்ரா..?" அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல் அவளது கண்கள் அவனுக்கு பின்னால் வந்த மைவிழியை தேடியது.

"ஆரத்தி எடுக்கனும்.. இப்படி இவனோடு வந்து சேர்ந்து நில்லு மைவிழி.."

தன்னை விட்டு ஓடிய மிதுனை பார்த்தபடி நின்றவள் ருத்ரா அழைக்கவும் அவளோடு போராட விரும்பாமல் அமைதியாக வந்து கதிர் அருகே நின்றாள். இருவருக்கும் ஆரத்தி எடுத்து முடித்த ருத்ரா "பூஜை ரூமுக்கு போய் விளக்கு பத்த வச்சிடு.." என்றாள் மைவிழியிடம்.

சரியென தலையசைத்து உள்ளே செல்ல முயன்றவளின் கரம் பற்றி தடுத்தது ஒரு சிறு கரம். திரும்பி பார்த்தவளின் முன்னே ஒரு சிவப்பு ரோஜாவை கையில் பிடித்தபடி நின்றிருந்தான் மிதுன். அவனின் முன் மண்டியிட்டு அந்த பூவை வாங்கினாள்.

"இது எதுக்காக..?"

"எங்க வீட்டுல பூத்த பூ இது.. அண்ணா அவனோட கேர்ள் பிரெண்டுக்கு பறிச்சிட்டு போவான்.. நான் உங்களுக்கு பறிச்சிட்டு வந்தேன்.. என் கேர்ள் பிரெண்டா இருக்கிங்களா நீங்க..?" மிதுனின் காதை பற்றி திருகினான் கதிர்.

"இவ்வளவு நாளா எத்தனை முறை நான் உன்னை கூப்பிட்டு இருப்பேன்.. ஒரு முறையாவது என்கிட்ட பேசியிருக்கியாடா..?"

"நீங்க பூச்சாண்டி.. உங்க பக்கத்துல வந்தா நீங்க என்னை கோணியில கட்டி தூக்கிட்டு போயிருவிங்க.." என்றபடியே மைவிழியின் அருகே நெருங்கி நின்றான் மிதுன்‌.

"நான் பூச்சாண்டியா..?" குழப்பமாக கேட்டான் கதிர்.

"ஆமா.. எங்க அம்மா சொல்லியிருக்காங்க.. நீங்க குழந்தைகளை கடத்தற பூச்சாண்டியாம்... நான் சாப்பாடு சாப்பிடலன்னா நீங்க என்னை கடத்திட்டு போயிருவிங்களாம்.." மைவிழி பொங்கி வந்த சிரிப்பை மறைக்க தன் வாயின் மீது கையை வைத்து மறைத்தாள்‌. விஷ்வாவும் செழியனும் கலகலவென சிரித்தனர். கதிர் தன் விழிகளை விரித்தபடி மிதுனை முறைத்தான்.

"நல்ல நேரம் முடியும் முன்னால விளக்கு பத்த வச்சிரு மைவிழி.." ருத்ரா ஆரத்தியை வாசலில் கொட்டிவிட்டு வந்து நினைவுபடுத்தினாள்.

"என்னோடு இந்த வீட்டுக்குள்ள வரியா..? நாம இரண்டு பேரும் சேர்ந்து விளக்கு பத்த வைக்கலாம்.." மிதுனிடம் கேட்டாள் மைவிழி.

அவன் தன்னை முறைக்கும் கதிரை பயம் நிறைந்த கண்களுடன் பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வை சென்ற திசையை பார்த்த மைவிழி "இவர் பூச்சாண்டி இல்ல மிது.. பூச்சாண்டிக்கு நாலு கண் பத்து கை இருக்கும்.. இவருக்கு இல்ல பார்த்தியா..?" மிதுன் இவளை சந்தேகமாக பார்த்தான்.

"நிஜமாவா..?"

"ஆமா.. நீ என்னை நம்பலாம்.. வரியா என்னோடு வீட்டுக்குள்ள..?" அவன் சரியென தலையசைக்க அவனது சிறுவிரலை பிடித்தபடி வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் மைவிழி.

வீடு அழகாய் இருந்தது. ஹாலில் இருந்து பார்க்கையில் எளிமையும் அழகுமாய் சமையலறை தெரிந்தது. ஹாலில் இருந்த சோஃபாவில் களைப்பாக அமர்ந்தான் அவளை தொடர்ந்து வந்த கதிர். அவனுக்கு பின்னால் வந்த விஷ்வா டிவியை இயக்கிவிட்டு அவனருகே அமர்ந்தான். செழியன் நேராக சமையலறை சென்று எதையோ தேடினான். மைவிழி மற்றோரு திசையிலிருந்த பூஜையறைக்குள் நுழைந்து விளக்கை ஏற்றினாள்.

"அந்த டிவியை ஆஃப் பண்ணு விஷ்வா.." தலையை பிடித்தபடி சொன்னவனின் எதிரே வந்து நின்றாள் ருத்ரா.

"எழுந்து போய் சாமி கும்பிடு.."

அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் "காலையிலிருந்து கல்லை கண்ட இடமெல்லாம் கும்பிட வச்சிருக்காங்க.. இதுக்கும் மேல எந்த சாமியாலும் எனக்கு வரம் தர முடியாது..." என்றவன் சாய்ந்து அமர்ந்தபடி கண்களை மூடினான்.

மைவிழி ஹாலுக்கு வந்த போது செழியன் கையில் திராட்சை கொத்து ஒன்றை கையில் பிடித்தபடி வந்து அமர்ந்தான். அவனருகே சென்று அமர்ந்த மைவிழியின் மடி மீது ஏறி அமர்ந்தான் மிதுன்.செழியன் தந்த திராட்சையை சாப்பிடபடியே டிவியை பார்த்தான் மிதுன்.

ருத்ரா அனைவருக்கும் காபி போட்டு கொண்டு வந்து தந்தாள். "தேங்க்ஸ்க்கா.." என்றபடி எடுத்துக் கொண்ட மைவிழிக்கு திருஷ்டி கழித்தவள் "என் கூட பொறந்தவன் ஒரு நாள் கூட என்னை அக்கான்னு கூப்பிட்டதே இல்லை.." என சலித்தபடி அவளருகே அமர்ந்தாள்.

"உங்களை போல கல்யாணம் பண்ண ஜோடியை நான் பார்த்ததே இல்லை.. வரவேற்பு, மறுவீடு எதுவுமே இல்லாம நேரா தனி குடித்தனம் வந்திருக்கிங்க.. யாராவது பார்த்தா இதை காதல் கல்யாணம்ன்னு நினைப்பாங்க.." என ருத்ரா அலுத்துக் கொள்ள "இதுல உனக்கென்ன பிரச்சனை ருத்ரா..?" என்றான் கதிர்.

"உன் கல்யாணத்துக்கு வர கிப்டெல்லாம் நானே பிரிச்சி பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டேன்.." அவள் சொன்னதை கேட்டு சட்டென சிரித்து விட்டான் விஷ்வா.

"கிஃப்ட்..? இவனுக்கா..? இவனுக்கு இருக்கற ஒரே பிரண்ட் நான் மட்டும்தான்... நானே கிஃப்ட் ஏதும் வாங்கல... இவன் சிடுமூஞ்சிக்கு உங்க சொந்தக்காரங்க கூட மொய்யை பணமாதான் வைப்பாங்க.." விஷ்வா சொன்ன அதே நேரத்தில் வாசலில் கை நிறைய அடுக்கப்பட்ட கிஃப்ட் பாக்ஸ்களை ஏந்தியபடி வந்து நின்றான் சித்தார்த். ருத்ரா எழுந்து சென்று அவனது கையில் அடுக்கியிருந்த கிஃப்ட் பாக்ஸ்களை அவனிடமிருந்து வாங்கி வைத்தாள். சித்தார்த் மீண்டும் தனது காருக்கு சென்று கிஃப்ட் கவர் சுற்றிய பெரிய போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். தனது கையிலிருந்ததை கதிரின் முன்னே வைத்தான்.

"இது உன் அம்மாவோட கிஃப்ட்... இதை உன்னை மட்டும் பிரிச்சி பார்க்க சொன்னாங்க..." அது தன் அம்மா தந்தது என தெரிந்த மறு நொடியே அதை வெறுப்போடு பார்த்தான் கதிர். அதை கையில் தொட கூட அவனுக்கு விருப்பமில்லை.

"இதை எடுத்துட்டு போய் அவங்ககிட்டயே கொடுத்துருங்க மாமா.." சித்தார்த் மறுத்து கூறும் முன் ருத்ரா கோபமாக எழுந்தாள்.

"என் புருஷன் ஒன்னும் உங்க வேலைக்காரன் இல்ல.. உனக்கு தேவைப்பட்டா நீயே அதை கொண்டு போய் திருப்பி கொடு.. இல்லன்னா நெருப்பு வச்சி கொளுத்து.." என பொரிந்து தள்ளிவிட்டு தன் கணவன் பக்கம் திரும்பினாள். "நாம நம்ம வீட்டுக்கு போகலாம்.. வாங்க.." அவனது கை பற்றி அழைத்து கொண்டு கிளம்பி விட்டாள்.

விஷ்வா சங்கடமாக தலையை ஆட்டினான். "உன்னால எதையுமே கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ண முடியாதா..? இந்த போட்டோவை வாங்கிகறதால குறைஞ்சா போயிட போற..?"

"பிடிக்காதவங்ககிட்ட வாங்கற பொருள் தங்கமானாலும் சரி அந்த பொருளுக்கு என்கிட்ட மதிப்பு இல்ல.. இதை நீயே வச்சிக்க.."

"உன் கிஃப்ட் எனக்கெதுக்கு..? உன் கூட பழகற தோசத்துக்கு இதை உள்ளே ரூம்ல வைக்கிறேன்... இஷ்டபட்ட அன்னைக்கு பிரிச்சி பாரு.." அதை எடுத்து சென்று அறை ஒன்றின் உயர ஷெல்ப் ஒன்றில் வைத்தான்.

மைவிழி தன் மடியிலிருந்த மிதுனை கொஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தி விட்டு உள்ளே வந்தான் சரண். அவனது கையில் இரண்டு பெரிய பெட்டிகள் இருந்தது. அதில் அவளுடைய ஆடைகள் அணிகலன்கள் இருந்தது.

"இதை உன்கிட்ட தந்துட்டு வர சொன்னார் அப்பா.." என்றவன் அந்த பெட்டிகளை அவள் முன்னால் வைத்தான்.

"பாட்டிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்க கூட உனக்கு பிடிக்கல இல்ல..? நீயெல்லாம் எப்பவுமே திருந்த மாட்டியா..? உன் குணம் இன்னைக்கு கூட மாறாதா..?" சரணின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெறுப்பு மட்டுமே இருந்தது.

பாட்டி அவளது திருமணத்திற்கு கூட வராமல் வீட்டிலேயே இருந்து விட்டாள். அப்படிப்பட்ட பாட்டியிடம் வலிய வீடு தேடி சென்று காலில் விழ ஆசையில்லை மைவிழிக்கு.

செழியன் சரணை பார்வையால் எரித்தான். "இவக்கிட்ட எரிஞ்சி விழாம இருக்க முடியாதா உன்னால..? இவளும் உன்னோடு பிறந்தவதானே?"

"இவளா..? இவளை தலை முழுகியதுல எனக்கு இன்னைக்குதான் ரொம்ப சந்தோஷம். வீட்டுல இவளோட எரிச்சலான முகத்தை பார்க்காம நாங்க எல்லோரும் இனி நிம்மதியா இருக்க போறோம்.."

மைவிழி மிதுனை கீழே இறக்கி விட்டுவிட்டு எழுந்து தன் அண்ணனருகே வந்தாள்.

"உன் ஒப்புதலுக்கு நன்றி... நான் இல்லாத வீட்டுல இனி நீ நிம்மதியா இருப்பன்னு நான் நம்புறேன்.. உன் முகத்தை பார்க்க எனக்கும் கூட விருப்பமில்ல... இனி நானும் கூட நிம்மதியா இருக்க போறோன்.." சலனமற்ற முகத்தோடு வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெறுப்பை நிரப்பி கூறியவளை கடுகடுப்போடு பார்த்தான் சரண்.

"இனி அந்த வீட்டு பக்கம் எப்பவுமே வந்துடாத.. நீ ஒரு கெட்ட சகுனம்.. உன் வரவு எங்களுக்கு எப்போதும் கெட்டதை மட்டும்தான் தரும்.." சரணின் வார்த்தைகள் மைவிழியின் மனதில் துரு பிடித்த இரும்பு கத்தியாய் இறங்கியது. வலிகளை மறைக்க முடியுமே தவிர அதை தடுக்க முடியாதல்லவா..?

ஹாலுக்கு வந்த விஷ்வாவை பார்த்தபடி சோஃபாவிலிருந்து எழுந்த கதிர் "நான் கடுப்பில் எதையாவது தூக்கி அடிக்கும் முன்னாடி அவனை போக சொல்லு விஷ்வா.." என்றான். எவனை சொல்கிறான் என புரியாமல் பார்த்தான் விஷ்வா.

"ஹலோ.. மாப்பிள்ளை ஸார்... எனக்கு ஒன்னும் இவ இருக்கற வீட்டுல இருக்க ஆசை கிடையாது... இவளோட வெளி அழகை பார்த்து அதுக்குள்ள மயங்கிட்டிங்க போல... இவ ஒரு கஷ்டகாலம்.. காலனே இவளை கண்டா கதறிடும்... இதெல்லாம் உங்களுக்கு.."அவன் அடுத்த வார்த்தை பேசும் முன் மைவிழிக்கும் அவனுக்கும் இடையில் வந்து நின்றான் கதிர்.

"என் வீட்டை விட்டு வெளியே போ.. உன்னை இனி இந்த வீட்டு பக்கம் பார்த்தால் எதை கொண்டு வேணாலும் அடிப்பேன்.." அவனது அடிக் குரலில் இருந்த மிரட்டலை கேட்டு மைவிழியை முறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினான் சரண்.

நீங்க கதிரை பற்றி என்ன நினைக்கிறீங்க நண்பர்களே..?

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க... Comment பண்ணுங்க... Share பண்ணுங்க... Follow பண்ணுங்க...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top