நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம்8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 8

சிவாவை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் இவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எப்போதும் பார்க்கும் அதே பார்வை. ஆளை அடிக்கும் பார்வை. அவளை கொல்லாமல் கொல்லும் பார்வை.

உதட்டில் பூத்த சிறு புன்னகையோடு தலையசைத்தாள்.

"வேண்டாம்... அவனை கொல்லாதிங்க... என்னை மட்டும் கொல்லுங்க... இங்க சாக வேண்டியது நான்தான்... என்னை காதலிச்சதுதான் அவன் செஞ்ச பாவம்... அதுக்காக அவன் சாக வேண்டாம்... அவனை விட்டுடுங்க ப்ளீஸ்..."

"அவளை விட்டுடுங்க... என்னை கொல்லுங்க... அவளோடு வாழனும்ன்னுதான் அவளை காதலிச்சேன்... என்னால அவ சாக வேண்டாம்..." சிவா உடைந்த குரலில் கூற அவனை முறைத்தாள் அன்புச்செல்வி.

"அவங்க வாழ வேண்டிய பசங்க தம்பி... அவங்கள விட்டுடுங்க... அவங்க எங்காவது கண் காணாத தூரத்துல போய் வாழட்டும்..." சிவாவின் அம்மா கெஞ்சினாள்.

"நீங்க என்ன சொல்றீங்க...?" அன்புச்செல்வியின் அப்பாவை பார்த்து கேட்டான் மகேஷ்.

"எனக்கு பொறந்து என் உப்பை தின்னு வளந்துட்டு எந்த நாய்காகவோ உயிரை குடுக்கறங்கறா... அவள் நான் வீட்டுக்கு கூட்டி போய் மானம் கெடுறத விட அவள கொன்னு புதைச்சிட்டு வாழ்க்கையில கௌரவமாவது வாழலாம்..." என்றார் அவர். அவரை ஈர விழிகளுடன் பார்த்தாள் அன்புச்செல்வி.

"என்னை அவனோடு வாழ விடுங்க... இல்லன்னா கொன்னுடுங்க..

எங்க அப்பா எனக்கு நியாயம் தர்மம் சொல்லி கொடுத்து வளர்த்துருக்காரு... நான் சிவாவுக்கு மனசை மட்டும் தரல... என் மனசோடு சேர்த்து அவனோடு நான் வாழ்க்கை முழுக்க வாழப்போறேன்ங்கற நம்பிக்கையையும் அவனோடு இன்ப துன்பத்தை பகிர்ந்துக்கிட்டு வாழ்வோடும் சாவோடும் வருவேங்கற நம்பிக்கையையும் தந்திருக்கேன்...
எங்க அப்பா எந்த நிலையிலும் நாம கொடுத்த நம்பிக்கையையும் நாம தந்த வாக்கையும் காப்பாத்தனும்ன்னு சொல்லியிருக்காரு... நான் எங்க அப்பா வளர்த்த பொண்ணு... அவர் எனக்கு சொல்லி தந்த மாதிரியேதான் வாழப் போறேன்..."

அவளின் அப்பா அவளை பார்க்காமல் தவிர்த்தார்.

"நான் கிளம்பறேன் மகேஷ்... உனக்கு இஷ்டப்படி இவளை ஏதாவது செய்..."

மகேஷின் பதிலை எதிர்பார்க்காமல் அவர் கிளம்பி விட்டார்.

அன்புச்செல்வியின் அண்ணன் முன்னால் வந்து நின்றான்.

"இவங்கள விட்டுடுங்க... எங்க அப்பா உங்களுக்கு தந்த பணத்தை விட அதிகமா நான் தரேன்..." என்றான்.

அன்புச்செல்வியின் அம்மா தன் கழுத்திலும் கையிலும் இருந்த நகைகளை கழட்டி தன் உள்ளங்கையில் வைத்து அவன் முன் நீட்டினாள்.

"அவங்கள விட்டுடுங்க... இதை வச்சிக்கங்க... அவங்க எங்கேயாவது போய் வாழட்டும்..." என்றாள்.

சிவாவின் அப்பா முன்னால் வந்தார்.

"உனக்கு யாரையாவது கொல்லனும்ன்னா என்னை கொன்னுக்கோ... வாழ வேண்டிய பசங்களை விட்டுடு..." என்றார்.

அன்புச்செல்வியை விட்டு விலகி நின்றவன் "நான் ரவுடிதான்... கட்டப்பஞ்சாயத்துகாரன்தான்... ஆனா காதலர்களுக்கு நான் எதிரி இல்ல..." என்றான்.

அன்புச்செல்வி அவனை புரியாமல் பார்த்தாள்.

"உங்க அப்பாவை போல பைத்தியகாரர்தான் எங்க அப்பாவும்... அவரால இன்னைக்கு வரைக்கும் நான் நேசிக்கிற பொண்ணை விட்டு விலகி நிக்கிறேன்... நேசிக்கிற பொண்ணை எதிரலயே வச்சிக்கிட்டு மனசுக்குள்ள எந்த ஆசையும் எந்த வலியும் இல்லாத மாதிரி நடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..?
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி என் நண்பனுக்காக இந்த வேஷம் போட ஆரம்பிச்சேன்... இன்னைக்கு வரைக்கும் இது தொடருது..." என்றவன் தன் பாக்கெட்டிலிருந்த பணக் கட்டை எடுத்து அவளின் முன்பு நீட்டினான்.

"இது உன் அப்பா உன்னை கொல்ல தந்த பணம்... அவர் தன் கௌரவத்தோடு வாழ்க்கை முழுக்க வாழட்டும்... நீ இந்த பணத்தோடு எங்காவது தூரமா போய் அந்த பையனோடு சேர்ந்து வாழு..." என்றான்.

அவனை நம்பாமல் பார்த்தாள் அன்புச்செல்வி.

"நீ பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் சிங்கம் புலி இல்ல... நானும் இந்த விளங்காத கௌரவத்தை கட்டி அழற அப்பாவால பாதிக்கப்பட்டவன் தான்.. உனக்கு நான் இந்த அளவுக்கு மட்டும்தான் உதவி பண்ண முடியும்... இதுக்கும் மேல உங்க அப்பா கண்ணுல படாம உன் காதலனோடு உனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழுறது உன் கையில்தான் இருக்கு... நீயும் உன் காதலனும் எப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சாலும் சரி நீங்க இரண்டு பேரும் பிரியாம வாழுறதுலதான் கவனமா இருக்கணும்... சரியா...?"

அன்புச்செல்வி சரியென தலையசைத்தாள்.

"காதலுக்காக தங்களோட உயிரை ஜஸ்ட் மிஸ்ஸுல காப்பாத்திகிட்டு இந்த ஊரை விட்டு எத்தனையோ ஜோடி போயிருக்காங்க... போனவங்க எல்லோரும் தங்களோட வாழ்க்கை மேல உள்ள ஆசையால இன்னைக்கு வரைக்கும் இந்த ஊர் பக்கம் எட்டிப் பாக்காம இருக்காங்க... நீங்களும் அது போலவே இருங்க... நீங்க உயிரோட இருக்கற விஷயமோ நீங்க ஊரை விட்டு போன விஷயமோ எந்த சூழ்நிலையிலும் உங்க அப்பாவுக்கு தெரியாம பாத்துக்கங்க..."

அன்புச்செல்வியின் அம்மா தன் மகளின் கைகளை பிடித்தாள். மகேஷை திரும்பி பார்த்தாள்.

"என் உயிர் உள்ள வரை என் பொண்ணு எங்கே இருக்கான்னு என் புருசனுக்கு தெரியாம பார்த்துப்பேன் தம்பி... நீ செஞ்ச உதவியை எப்போதுமே மறக்க மாட்டேன்... ரொம்ப நன்றிப்பா..." என்றாள்.

தன் மகளிடம் திரும்பியவள் "நீ மகாராணி போல வாழனும்... உன்னை கஷ்டப்பட்டு நான் பெத்தது உங்க அப்பனோட வெத்து கௌரவத்துக்கு பலி தர‌ இல்ல... அந்த ஆளோட முதுகு பின்னாடி வாழப் போறதா ஒரு நாளும் நினைக்காத... நீ எங்கேயோ ஒரு மூலையில உயிரோடு... அதை விட முக்கியமா உனக்கு பிடிச்ச வாழ்க்கையை சந்தோசமா வாழுற ஒவ்வொரு நாளும் இங்கே உன் அம்மா நிம்மதியா தூங்க போறாங்கறதை நினைச்சு சந்தோசபடு...
உனக்கு எந்த உதவி வேணாலும் உன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி சொல்லு... உனக்கு என்ன தேவையோ அதை நான் செய்யுறேன்... ஆனா இந்த ஊரோட மண்ணுல இனி எப்போதும் கால் வச்சிடாத... உன் அப்பா முகத்தில செத்தாலும் விழிச்சிடாத..." என்றாள்.

"தேங்க்ஸ் அம்மா.." என்று தன்னை கட்டி அழுதவளின் தலையை வருடி விட்டாள்.

சிவா மகேஷின் அருகே வந்தான்.

"தேங்க்ஸ் ஸார்... உங்களை ரவுடின்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டேன்..."

"டேய்... நான் நிஜமாவே ரவுடிதான்டா... இது வரைக்கும் எத்தனையோ முறை கை கால் உடைச்ச கேஸ்ல ஜெயிலுக்கு போயிருக்கேன்... இந்த காதல் என்னோட வீக்னஸ்... இதை யாருக்கும் தெரியாம மறைக்க நான் படுற பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்..."

அன்புச்செல்வி கண்ணீரை துடைத்தபடி அவனருகே வந்தாள்.

"நீங்க செஞ்ச உதவியை எப்போதும் மறக்க மாட்டோம்... எங்க பிரெண்ட் ஒருத்தன் டெல்லியில் இருக்கான்... நாங்க அங்கேயே போய் செட்டில் ஆக போறோம்... உங்களுக்கு ஓகேன்னா நீங்களும் உங்க காதலியோடு எங்களோடு வாங்களேன்..."

மகேஷ் தன் கையிலிருந்த துப்பாக்கியை மேஜை டிராவின் உள்ளே வைத்து பூட்டி விட்டு நிமிர்ந்தான்.

"நீ நினைக்கிற மாதிரி இல்லம்மா... நான் நேசிக்கிற மகாராணிக்கு இந்த சேர்ந்து வாழும் காதல் மேல நம்பிக்கை இல்லையாம்... அவளை விலகி இருந்தாதான் நான் அவ மேல வச்சிருக்கற காதல் நிஜமாம்..." சலிப்போடு கூறியவன் அன்புச்செல்வி ஏதோ கேட்க முயல அவளை பேச விடாமல் தொடர்ந்தான்.

"அந்த மகாராணி யாருன்னுதானே கேட்க போற..? காலையில நீ உதவி கேட்டு போனியே சிவசக்தி மேடம்... அந்த பைத்தியகாரியைதான் ஆண்டவன் எனக்குன்னு எழுதியிருக்கான்... நல்ல வேளை நான் நல்ல நேரத்தில வந்தேன்... அவ வேற மாதிரி... நீயும் இந்த பையனும் அவளோட அட்வைஸை அரைமணி நேரம் கேட்டிருந்திங்கன்னா இந்த உலகத்தில காதல்ன்னு எதுவும் இல்லன்னு நீங்களே உங்க அம்மா அப்பாவுக்கு சத்தியம் பண்ணி தந்திருப்பிங்க...
அவ இது வரைக்கும் மூணு காதல் ஜோடிகளை பிரிச்சு வச்சிருக்கா... இவ சொன்ன அட்வைஸை கேட்டு தன் அப்பா சொன்ன பையனை கட்டிக்கிட்ட பொண்ணு ஒன்னு இரண்டாம் மாசமே தன் புருசனை விட்டுட்டு அம்மா வீடு வந்துடுச்சி... ஆனா நான் இது வரைக்கும் எட்டு காதல் ஜோடியை சேர்த்து வச்சிருக்கேன்... எல்லோரும் செமையா இருக்காங்க..."

"உங்களை போல ஒருத்தரை விலக்கி வச்சிருக்கற அவங்க கண்டிப்பா முட்டாள்தான்..." என்றவள் தன் காதலனோடு புது வாழ்க்கைக்காக பயணப்பட்டாள்.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு இரு குடும்பத்தையும் பார்த்த மகேஷ் "இன்னும் கொஞ்ச நேரத்தில சட்டம் பேசிக்கிட்டு ஒருத்தி உங்க வீட்டுக்கு வருவா... அவளுக்கு இந்த இரண்டு பேரும் உயிரோடு ஊரை விட்டு போன விஷயம் தெரிஞ்சதுன்னா அது அன்புச்செல்வி அப்பாவுக்கும் தெரிஞ்சிடும்... அதனால நான் சொல்லுற மாதிரி செய்யுங்க..." என்றான்.

அன்புச்செல்வியின் அம்மா தன் வீட்டுக்கு வந்த போது தன் வீட்டு வாசலில் நின்றிருந்த போலிஸ் வாகனத்தை பார்த்தாள்.
இவளை கண்டதும் எங்கிருந்தோ வந்தாள் சக்தி.

"மேடம் நான் யாருன்னு உங்களுக்கு தெரியும்... நான் உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கேன்... நீங்க என்னை முழுசா நம்புங்க... உங்க பொண்ணு எங்கே இருக்கான்னு எனக்கு தெரியும்... நீங்க ஒரே ஒரு புகார் கொடுங்க... உங்க பொண்ணை பத்திரமா நான் கூட்டி வரேன்..."

சிவசக்தி புகார் மனு இல்லாமல் மகேஷை நெருங்க முடியாது. ஏற்கனவே பல முறை புகார் மனு இல்லாமல் மகேஷிடம் மொக்கை வாங்கியுள்ளாள். அதிலும் போன முறை அவன் 'தேவையில்லாமல் எனது நேரத்தை வீணடித்து என் மீது பொய்யான பழியை போட முயற்சிக்கிறார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி...' என மேலதிகாரியிடம் புகார் தந்து இவளை அலைகழித்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா..?

அன்புச்செல்வியின் அம்மா அவளை ஏற இறங்க பார்த்தாள்.

"நீங்க என்ன சொல்றீங்க..? எனக்கேது பொண்ணு..? எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன்தான்.."

"நீங்க எதுக்கும் பயப்படாதிங்க... நான் உங்க பொண்ணை காப்பாத்துறேன்... அவ காலையிலதான் எங்கிட்ட வந்து நடந்ததை சொல்லி உதவி கேட்டாள்... நீங்க என்னதான் உங்க புருசனுக்கு பயந்தாலும் என்கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க... உங்க புருஷனையும் ஜெயில்ல போட்டுடுறேன்..."

"பைத்தியமா நீங்க..? என் புருசனை ஏன் ஜெயில்ல போடணும்..? எனக்கு பொண்ணே கிடையாதுன்னு சொல்றேன்... ஆனா நீங்க அவ உங்களை தேடி வந்ததா சொல்றிங்க.. தேவையில்லாம என் வீட்டு வாசல்ல நிக்காதிங்க... இல்லன்னா நான் உங்க மேலதிகாரிக்கு ஃபோன் பண்ணிடுவேன்.."

சக்தி புரிந்து கொண்டவளாக அவளை பார்த்தாள்.

"நீங்களும் கூட காதலை எதிர்ப்பவங்கதானா..? உங்க பொண்ணை அவனோட காதலன்கிட்ட இருந்து நான் பிரிச்சு கூட்டி வரேன்..."

சக்தி மேலும் பேசும் முன் அவளை இளக்காரமாக பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்.

சக்தி கோபத்தில் பற்களை கடித்த படி சிவாவின் வீடு நோக்கி சென்றாள். அங்கே அவர்களின் வீடு பூட்டு போட்டிருந்தது. அருகிலிருந்த வீட்டின் கதவை தட்டினாள். இளம்பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.

"இந்த வீட்டுல இருந்தவங்க எங்கன்னு தெரியுமா..?"

"காசிக்கு போயிருக்காங்க.."

"ஏன்..?"

"அந்த வீட்டுல சிவான்னு ஒரு அண்ணா இருந்தாரு... அவர் ஒரு வாரம் முன்னாடி இறந்துட்டாரு... அவரோட அஸ்தியை கரைக்கதான் காசி வரைக்கும் போயிருக்காங்க.." என்றவள் தன் கண்களின் ஓரம் துளிர்த்த கண்ணீரை துடைத்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. கதை பிடிச்சா லைக் அன்ட் கமெண்ட் பண்ணுங்க நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN