நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி அந்த பெண்ணை நம்பாமல் பார்த்தாள்.

"சிவா செத்து ஒரு வாரமாச்சா..?"

"ஆமா மேடம்... ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு லாரி ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாரு..."

அந்த பெண் பொய் சொல்கிறாள் என் புரிந்து கொண்ட சக்திக்கு இது மகேஷின் வேலைதான் என்பது தெளிவாக தெரிந்தது.

மகேஷ் அழகான இரு மாஞ்செடிகளை கையில் எடுத்து கொண்டு தோப்பின் ஓரத்திற்கு சென்றான். இரண்டுக்கு இரண்டில் இரண்டடி குழி தோண்டினான்.

அவன் செடிகளை நட முயன்ற போது தோப்பின் காவலாளி அவனை நெருங்கினார்.

"ஐயா... சக்தி மேடம் வந்திருக்காங்க... ஏற்கனவே ஒரு முறை வந்தாங்க... நான் நீங்க சொன்ன மாதிரியே 'சரியான காரணம் இல்லாம உள்ளே விட மாட்டேன்'னு சொல்லி அனுப்பிட்டேன்... இப்போ என்ன செய்யட்டும்..?"

"உள்ளே அனுப்புங்க.." என்றவன் செடிகளை நட ஆரம்பித்தான்.

சக்தி சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள். எங்காவது மூர்த்தி தெரிகிறானா என பார்த்தபடி நடந்தாள்.

சக்தி கோபத்துடன் அவனெதிரே வந்து நின்றாள்.

"இன்னைக்கு என்ன பழி போட வந்திருக்காங்க நம்ம மேடம்..." என நக்கலாக இழுத்து பேசியவனை முறைத்தாள்.

"அந்த பொண்ணு எங்கே..?"

"எந்த பொண்ணு..?"

"அன்புச்செல்வி..."

"அப்படி யாரையும் தெரியாது..." என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

"சும்மா நிக்கிறத இப்படி பக்கத்துல வந்து இந்த செடியை நட உதவி செய்யலாம் இல்ல... பொறந்த நாளும் அதுவுமா செடி வச்சா நல்லதாச்சே.."
அவள் பதில் சொல்லாமல் முறைத்தாள்.

"முறைக்கிறத அப்புறம் பண்ணுவ... இப்போ இங்கே வா..." என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைத்தான்.

அவளது கையால் செடியை நட வைத்து மண்ணை தள்ளி விட வைத்தான். அமைதியாக தான் இழுத்த இழுப்புக்கு வந்தவளின் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவளின் கண்களில் கண்ணீர் துளியொன்று எட்டிப் பார்த்தது.

"நீ அவங்கள கொன்னுட்ட இல்ல... சாமிநாதனையும் கலையையும் எப்படி கொன்னுயே அப்படியே இவங்களையும் கொன்னுட்ட இல்ல.."

மகேஷ் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

"பிறந்தநாள் அன்னைக்கு அழலாமா..? நீ உன் வேலையை மட்டும் பாரேன்... உனக்கு எதுக்கு இந்த எமோஷனல்..?"

"நீ நிஜமாவே மனுசனா மகேஷ்..? அவங்க உனக்கு என்ன துரோகம் பண்ணாங்க..."

"இந்த உலகத்தில காதலர்கள் சிலரால சேர்ந்து வாழ முடியாது நம்ம இரண்டு பேரை போல... அவங்க சேர்ந்து சாகுற அளவுக்காவது புண்ணியம் பண்ணத நினைச்சி சந்தோசப்படு..."

சக்தி அவனை தள்ளி விட்டு எழுந்தாள்.

"உன்னை இந்த முறை சும்மா விட மாட்டேன் மகேஷ்..." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்றதும் செடிகளுக்கு தண்ணீர் விட்டான். செடிகள் அழகாக இருப்பது போல தெரிந்தது.

தன் முன்னால் நின்ற சக்தியை கேள்வியாக பார்த்தார் ஐஜி குமரன்.

"ஸார்... நான் சொல்வதை இந்த முறையாவது நம்புங்க... அந்த மகேஷ் இன்னைக்கு ஒரு காதல் ஜோடியை தன் மாந்தோப்பில் வச்சி கொலை பண்ணிட்டான்... இந்த முறையாவது அவனை அரஸ்ட் பண்ண அனுமதி தாங்க.."

அவர் தனது வேலையை நிறுத்தி விட்டு இவளை பார்த்தார்.

"நீ சொல்லுற அந்த மகேஷ் கட்டப் பஞ்சாயத்து ரவுடியாக இருந்தாலும் கூட நியாயம் தர்மம் தெரிஞ்ச மனுசன்... இதுவரைக்கும் அவன் எத்தனை முறை நம்ம காவல் துறைக்கு மறைமுகமாக உதவி பண்ணியிருக்கான்னு உனக்கே நல்லா தெரியும்... நாம கைது பண்ண தயங்கற பெரும்புள்ளிங்க கூட அவனோட அடி உதைக்கு பயந்து தானா வந்து சரண் அடைந்திருக்காங்க... அவனோ..."

"ஸார் அவனை இப்படி பாராட்டுவதை நிறுத்துங்க... அட்லீஸ்ட் என் முன்னாடியாவது பாராட்டாம இருங்க... அவன் ரவுடி ஸார்... நமக்கு பயப்படாதவங்க கூட அவனுக்கு பயப்படுறாங்க... நான் இல்லன்னு சொல்லல... ஆனா இங்கே நாமதான் காவல்துறையே தவிர அவன் இல்ல... அவன் பண்றது எல்லாமே தப்பு ஸார்..."

"நாம செய்ய தவறும் காரியத்தை செஞ்சிட்டு அது தவறுன்னு ஒத்துக்கிட்டு அவனே ஒவ்வொரு முறையும் தானா வந்து சரண் அடையுறான்... அவன் மேல இது வரை ஒருத்தர் புகார் தந்திருக்காங்களா..? அவனாதானே வந்து நான் இவனை அடிச்சேன்... இவனை அடிச்சிருக்கேன்னு சொல்லியிருக்கான்...?"

"ஸார் ஆனா அவன் இந்த முறை நிஜமாவே இரண்டு பேரை கொன்னுட்டான்... இதுக்கும் முன்னாடியும் கொன்னுருக்கான்... நீங்க ஒரே..."

அவளை மேலும் பேச விடாமல் கை காட்டி நிறுத்தினார் குமரன்.

"ஆதாரம் எங்கே..?"

"ஆதாரம் கண்டு பிடிக்கதான் அனுமதி கேட்குறேன் ஸார்..."

"அனுமதி தரேன்... ஆனா புகார் மனு எங்கே..? புகார் தந்தவங்க எங்கே."

"அது..."

"என் நேரத்தை வீணடிக்காத..."

"அந்த பொண்ணோட அம்மா தனக்கு பொண்ணே இல்லன்னு சொல்லிட்டாங்க... அந்த பையனோட ஏரியாவுல அவன் செத்து ஒரு வாரமாச்சின்னு சொல்றாங்க..."

"சக்தி உனக்கும் அந்த மகேஷுக்கும் நடுவுல ஏதோ பெர்சனல் பிரச்சனை இருக்குன்னு எனக்கும் தெரியும்... ஆனா நீ அதை சாக்கா வச்சி அவன் மேல பொய் கேஸ் போடலாம்னு முயற்சிக்கறத நிறுத்து..."

"ஸார் இது உண்மை..."

"பிறகெங்க ஆதாரம்..? இந்த நவீன யுகத்தில ஒரு பொண்ணு இது நாள் வரை வாழ்ந்ததுக்கான ஆதாரத்தை கூடவா உன்னால தேடி கண்டுபிடிக்க முடியாது..?" கோபமாக கேட்டார் அவர்.

ஒரு முடிவோடு அவரை பார்த்தாள் சக்தி.

"இன்னும் இரண்டு நாள்ல நான் ஆதாரத்தை கொண்டு வரேன் ஸார்... இப்போ நான் கிளம்பறேன் ஸார்..."

அவள் கிளம்பி சென்ற பிறகு தனது மொபைலில் மகேஷிற்கு தொடர்பு கொண்டார் குமரன்.

"என்ன குமரன் மாமா... எங்க மேடம் அதுக்குள்ள உங்ககிட்ட புகார் சொல்ல வந்துட்டாங்களா..?"

"ஆமா மகேஷ்... உன்னை கொலை கேஸ்ல உள்ள தள்ளனும்ன்னு சக்தி பாடா படுறா... பேசாம அவக்கிட்ட உண்மையை சொல்லிடலாமில்ல..?"

"அவளோட முகத்துல தெரியற அப்பாவி தனத்தை நம்பி ஏமாந்திடாதிங்க... அவளுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சது நான் கஷ்டப்பட்டு காப்பாத்தி உயிரோடு அனுப்பி வச்சவங்களுக்கு அவங்க பெத்தவங்க கையால கருமாதி பண்ணிடுவா... அவ ரொம்ப கெட்டவ மாமா..."

"உங்க சண்டையை உங்களோடவே முடிச்சிக்க மகேஷ்... இந்த விசயம் என் மூலமா வெளியே போகாது... ஆனா சக்தி என்னோட ஹையர் ஆபிசர்க்கிட்ட போயிட்டான்னு வச்சிக்கோ எல்லோரோட கதையும் முடிஞ்சது..."

"அதுக்குள்ள நான் ஏதாவது வழி பண்றேன் விடுங்க..."

குமரனோடு பேசி முடித்த பிறகு யோசனையோடு நெற்றியை தேய்த்த மகேஷ் ஒரு முடிவோடு சக்தியை தேடி கிளம்பினான்.

இரவு நெருங்கி கொண்டிருந்தது. சக்தி செல்வாவிற்கு ஃபோன் செய்து தனது நிலையை சொல்லி கொண்டிருந்தாள்.

"இவனால என் மொத்த தூக்கமும் போச்சி செல்வா... எங்க குமரன் ஸார் கூட அவனுக்குதான் சப்போர்ட் பண்றாங்க..."

"நீதான் அவனோடு எந்த சகவாசமும் வச்சிக்கறது இல்லன்னு ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டியே பிறகேன் உனக்கு இந்த குழப்பம்..? அவன் எக்கேடு கெட்டா உனக்கென்ன..?"

"அவனை பத்தி எனக்கு கவலை இல்ல செல்வா... நான் ஒரு காவல்துறை அதிகாரி... நான் நியாயத்துக்காக மட்டும்தான் பாடுபடுவேன்... நீதான் சிறந்த டிடெக்டிவ் ஆச்சே... எனக்கு ஹெல்ப் பண்ணேன்..."

"நான் உனக்கு ஹெல்ப் பண்ண நினைச்சிருந்தா ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே பண்ணியிருப்பேன்... என்னால அங்கே வர முடியாது சக்தி... அவனை கண்ணுல பார்த்த அடுத்த செகண்டே நான் உண்மையை சொல்லிடுவேன்... உனக்கு இதுல இஷ்டமா..?"

சிவசக்தி தலையெழுத்தை நொந்து கொண்டாள்.

"இங்கே வராமலேயே இரு... இந்த பிரச்சனையை நானே சமாளிக்க பார்க்கறேன்..."

"சரி... நான் சொல்லுற மாதிரி செய்... அந்த பொண்ணு வீட்டுக்கோ பையன் வீட்டுக்கோ போகாத..."

"அவங்க பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போகணுமா..?"

"இல்ல... அவங்க எதிரி வீட்டுக்கு போய் விசாரி... அவங்கதான் உண்மையை சொல்லுவாங்க..."

"சரி நாளைக்கே போறேன்..."

"எங்கே..?"

குரல் தன் பின்னால் இருந்து வரவும் திரும்பியவள் தன் தலையை கோதியபடி நின்றிருந்த மகேஷை பார்த்தாள்.

"நான் அப்புறம் பேசுறேன்..." என்றபடி அழைப்பை துண்டித்தாள்.

"உனக்கு இப்போ என்ன வேணும்..?"

"தாலி கட்ட உன் கழுத்து வேணும்ன்னு சொன்னா கழுத்தை நீட்டவா போற..?"

"மகேஷ்..."

"இல்ல முத்தம் கொடுக்க உன்..."

அவனிடம் கையெடுத்து கும்பிட்டாள் சக்தி.

"இந்த மாதிரி பேசாத... ப்ளீஸ்... யாராவது காதுல கேட்டாங்கன்னா என்னைத்தான் தப்பா நினைப்பாங்க..."

"காதலிக்கும் போது இப்படி தோணல இல்ல... என் நம்ப வச்சி கழுத்தறுத்த போது இப்படி தோணல இல்ல..."

"தப்பு பண்ணிட்டேன்... தண்டனை போதும் ப்ளீஸ்..."

சிரித்தபடியே அவளை பார்த்தான்.

"உனக்கு நியாயம் தெரியாதா...? தண்டனையை நீ அனுபவிக்கல... நான்தான் அனுபவிக்கறேன்... ஆனா இனி மேல் அப்படி இல்ல... என்னை ஏமாத்தினதுக்கு இனி உனக்குத்தான் தண்டனை..."

‌ ‌ அவனை புரியாமல் பார்த்தாள் சக்தி.

"தண்டனையை தர போறவன் நான்தான்டி..." அடிக் குரலில் பேசினான்.

சக்தி வெளியே விறைப்பாக நின்றாலும் மனதுக்குள் சிறு நடுக்கம் ஓடியது.

"இப்போ என் கூட கிளம்பி வா..."

"நான் போலீஸ் மகேஷ்... நீ சொல்லுற நேரத்துக்கு உன்னோடு கிளம்பி வர நான் உன் வீட்டு நாய் குட்டி இல்ல..."

கலகலவென சிரித்தான் அவன்.

"நாய்க்குட்டியை பத்தி நீ பேசாத... அது எப்போதும் யாரையும் ஏமாத்தாது உன்னை போல..."

"நாயை விடவும் தரம் கெட்டாச்சி..." என தனக்கு மட்டும் கேட்கும்படி சலித்து கொண்டாள்.

"நான் உன் கூட வர மாட்டேன்... எங்கேயும் வர மாட்டேன்..."

தனது மொபைலிலிருந்த புகைப்படம் ஒன்றை இவளிடம் காட்டினான். அவளும் அவனும் நெருக்கமாக அமர்ந்து மாங்கன்று வைத்த புகைப்படம்.
"நீ இப்போ என் கூட வரலன்னா இதை பெரிய போஸ்டரா அடிச்சி பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கோவில், இன்னும் கூட்டம் சேருர எல்லா இடத்திலயும் ஒட்டுவேன்... நெட்டுல கூட போட்டு விடுவேன்..."

"நான் போலீஸ் மகேஷ்... உன்னை இப்பவே இதுக்காக உள்ள தூக்கி வைக்க முடியும்..."

"வச்சிதான் பாரேன்... இப்பவாவது 'போலிஸ் சக்திக்கும் ரவுடி மகேஷுக்கும் காதலா..?'ன்னு மட்டும்தான் கேப்பாங்க... நீ என்னை இதுக்காக உள்ள வச்சன்னா 'போலிஸ் சக்தி ரவுடி மகேஷை காதலித்து ஏமாற்றி அவரை பழி வாங்க கைது செய்தார்'ன்னு பேப்பர்ல மொத பக்கத்துலே கொட்டை எழுத்துல போடுவாங்க... வசதி எப்படி..?"

கோபத்தோடு பற்களை கடித்தாள். யாராவது தன்னையும் அவனையும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"நீ என் பொறுமையை ரொம்ப சோதிச்சிட்ட..." என்றவள் நொடியில் தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியில் வைத்தாள்.

"மரியாதையா வந்த வழியிலயே போயிடு... இல்ல வேலை போனாலும் பரவாயில்லன்னு உன்னை என்கவுண்டர்ல போட்டுடுவேன்..."

தன் நெற்றியில் இருந்த துப்பாக்கியை ஓர கண்ணால் பார்த்தவன் சக்தியை நம்ப முடியாமல் பார்த்தான்.

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க நட்புள்ளங்களே...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top