நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

10.அன்பே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
10. அன்பே

கதிரின் வலது கை அனிச்சையாக நெற்றிக்கு சென்றது. தனது கையில் ஈரத்தை உணர்ந்தவன் நம்ப முடியாமல் கையை கண்களுக்கு எதிரே கொண்டு வந்தான். சுட்டு விரலோரம் சிவப்பு நிறத்தில் இருந்தது.
"நீ என் மண்டையை உடைச்சிட்ட..!?"

"உடைச்சதே நான்தான்.. பிறகெதுக்கு என்கிட்ட சொல்ற..? டைம் வேஸ்ட் பண்ணாம டைவர்ஸ் நோட்டிஸ்ல கையெழுத்தை போடு.." அவனுக்கெதிரே பேனாவை நீட்டியபடி சொன்னாள்.

கதிருக்கு கோபத்தில் கை நரம்புகள் முறுக்கேறியது. அவன் விவாகரத்து என்ற வாசகத்தை மறந்து விட்டான். தன்னையே ஒருத்தி இப்படி ரத்தம் வரும் படி அடித்து விட்டாளே என்ற நிதர்சனம் அவனுக்கு கோபத்தை தந்தது.

கை விரல்களை மடக்கியபடி எழுந்தவன் வன்மத்தோடு அவளை நெருங்கினான்.

அவனை அர்த்தத்தோடு பார்த்தாள் அவள். "என்ன என்னை அடிக்க போறியா..? நான் ஒரு மாதிரி.. நீ ஒரு அறை விட்டா நான் திருப்பி நாலு அறையாவது தந்துடுவேன்.. சாவு எதிர்ல வந்து நின்னா கூட அதை ஒரு கை பார்க்காம சாக மாட்டேன்.. ரௌத்திரம் பழகறது தப்பே கிடையாது.." மைவிழி தன் கையை சுழற்றியபடி போருக்கு தயாராவது போல் நின்றாள்.

'ரௌத்திரம் பழகறது தப்பே கிடையாது' என்ற அவளது வார்த்தை அவனை அங்கேயே நிற்க வைத்தது. அந்த வார்த்தை அவன் தினசரி தனக்குள் சொல்லிக் கொள்ளும் மந்திரம்.

'ஒத்த வார்த்தையில என்னை இப்படி இம்ப்ரஸ் பண்ணிட்டாளே..! என்னை மாதிரியே யோசிக்கறாளே! இவ கோடியில் ஒருத்திடா..!'

அவள் அப்படியே நிற்க அவன் தன் கோபத்தை விட்டுவிட்டு அங்கிருந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுதிட்டான். அதை அவளுக்கெதிராக அவன் நீட்ட அவனை வியப்பாக பார்த்தாள் மைவிழி.

'ஒரு நிமிசம் கோபமா இருந்தான்.. அடுத்த நிமிசம் கையெழுத்தை போடுறான்.. ஒரு வேளை மென்டலா இருப்பானோ..!?'

அதை வாங்கியவள் தனது அறைக்கு சென்று பத்திரப்படுத்தினாள். பின்னர் அருகேயிருந்த ஷெல்பில் இருந்த சிறு பெட்டியை எடுத்துக் கொண்டு கதிரிடம் வந்தாள்.

அவள் சொன்ன வாசகத்தையே மனதிற்குள் திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான் கதிர்.

"இந்த சேர்ல வந்து உட்காரு.." அவளது குரல் அவனை யோசனையிலிருந்து வெளி கொண்டு வந்தது. கையில் முதலுதவி பெட்டியோடு நின்றுக் கொண்டிருந்தாள் மைவிழி. இப்போது அவனுக்கு குழப்பமாக இருந்தது.

"எதுக்கு இப்படி திருதிருன்னு பார்க்கற..? எனக்கு முன் கோபம் கொஞ்சம் அதிகம்.. அதுக்காக நான் ரொம்ப கெட்டவளெல்லாம் கிடையாது.." அவனை இழுத்து அருகிருந்த நாற்காலியில் அமர வைத்தாள்.

அவனுக்கெதிரே மற்றொரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தபடி அவனது காயத்தை சுத்தப்படுத்தி மருந்து தடவினாள்.

"அது... அது... ஐயம் ஸாரி... ஓகே.. இன்னும் ஆறு மாசம் நான் இந்த வீட்டுலதான் இருந்தாகனும்.. உனக்கும் என்னை பிடிக்கல.. எனக்கும் உன்னை பிடிக்கல.. அதுக்காக நாம எதிரியை போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆறு மாசத்துக்கு நாம இரண்டு பேரும் நண்பர்களா இருப்போம்.." என்றவள் தனது கையை அவனுக்கெதிரே நீட்டினாள்.

அவளையும் அவளது கையையும் மாறி மாறி பார்த்தவன் சில நொடிகளுக்கு பிறகு அவளது கரத்தை பற்றினான்.

"இனிமேல் வயலன்ஸ் யூஸ் பண்ணாத.. நான் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேன்.. எனக்கும் முன் கோபம் அதிகம்.."

நட்பென்று கை குலுக்கிய இருவருக்குமே உள்ளங்கைகளில் கண்கள் அறியா கண்ணாடி பூக்கள் பூத்தன. அதை ஏற்றுக் கொள்ள இருவருக்குமே மனம் வரவில்லை.

"இந்த வீட்டுல தங்கறதுக்காக மாசமாசம் வாடகை நான் தந்துடுறேன்.. ஆனா ஒரு கன்டிசன்... என் ரூம்க்குள்ள நீ வரவே கூடாது.."

"திறந்திருந்தா கூட அந்த ரூமை நான் திரும்பி பார்க்க மாட்டேன்..." என்றான் அவன் பற்களை கடித்தபடி.

"அப்ப சரி.. அப்புறம்.. தினம் காலை சாப்பாடு நான் செஞ்சிடுறேன்.. நைட் சாப்பாட்டை நீ செஞ்சிடு.. செலவை இரண்டா பிரிச்சிக்கலாம்.. வீட்டு வேலைகளை இரண்டு பேரும் சமமா செஞ்சிக்கலாம்.. என் பெர்சனல் லைஃப்ல நீ தலையிடாத.. அது மாதிரி உன் பெர்சனல் லைஃப்ல நான் தலையிட மாட்டேன்.. வேறு ஏதாவது இருக்கா..?" கதிர் பேச வேண்டும் என நினைத்த அத்தனையையும் மைவிழியே பேசிவிட்டாள். அதனால் வேறு ஏதும் இல்லை என தலையசைத்தான்.

"ம்.. ஓகே..." எழுந்து செல்ல முயன்றவள் மீண்டும் யோசனையோடு அமர்ந்தாள்.

"ஆறு மாசத்துக்கு அப்புறம் நான் இங்கிருந்து போயிடுவேன்..‌ ஆனாலும் ஒரு ஆசை.. இந்த வீட்டை சுத்தி நான் செடிகள் வளர்க்கட்டா..? நான் போனதுக்கு அப்புறம் நீ வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டா கூட போதும்.."

பாலாவுடனான காதல் தோல்வி தந்த வலிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னேரம் இவளை காதலிக்க தொடங்கியிருப்பான் கதிர். அவனுக்கும் செடிகள் என்றால் உயிர். வீடு வாங்கிய முதல் மாதத்திலேயே நிறைய செடிகள் வாங்கி நட்டு வைத்திருந்தான். ஆனால் அப்பா அவனை இந்த வீட்டிற்கு அனுப்ப மறுத்து விட்டதால் இவன் வைத்த செடிகள் அனைத்தும் நீரின்றி இறந்து விட்டன.‌

"வீட்டுக்கு பின்னாடி ஒரு சின்ன ஷெட் இருக்கும்.. அதுல செடிகள், மண்வெட்டி எல்லாமே இருக்கும்.." என்றான் கதிர்.

வீட்டிற்கு வந்து விட வாய்ப்பிருக்கிறது என தெரிந்தவுடனே கதிர் நர்சரிக்கு சென்று நிறைய செடிகள் வாங்கி வந்து வைத்திருந்தான். அதை இன்று நடலாம் என நினைத்திருந்தான். ஆனால் மைவிழியின் ஆசை மிகுந்த கண்களை கண்டதும் செடிகளை நடும் வாய்ப்பை அவளுக்கே தந்து விட சொன்னது அவனது சிறு இதயம்.
அவனிடம் தலையசைத்து விட்டு வெளியே ஓடினாள் மைவிழி. வீட்டின் பின்புறம் குட்டி குட்டியாக நிறைய செடிகள் இருந்தது. விதத்திற்கு ஒன்றென அத்தனை செடிகளை கண்டவளுக்கு மனது முழுக்க சந்தோசம் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு செடிகளுக்கும் ஒவ்வொரு இடத்தை தேர்ந்தெடுத்து குழிகளை வெட்டினாள்.

"ஆண்டவன் எனக்கு காதலிக்கற வாய்ப்பை கொடுத்தால் நான் இவனையே காதலிக்கற மாதிரி வாய்ப்பை கேட்டிருப்பேன்.." என்றாள் தனக்குள்.

மாதுளை, கொய்யா, மா, சப்போட்டா என அனைத்தையும் நட்டு வைத்து தண்ணீர் விட்டாள். ஆனால் பூச்செடிகள்தான் ஒன்று கூட இல்லை. அவள் அதை அனைத்தையும் செய்து முடிக்கையில் மணி பத்தை தாண்டியிருந்தது. அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

அங்கிருந்த தண்ணீர் பைப்பில் முகம் கைகளை கழுவிக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள். வீடு கமகமத்துக் கொண்டிருந்தது.

"சாப்பிடலாம் வா.." சாப்பாட்டு மேஜையிலிருந்து குரல் கொடுத்தான் கதிர்.

"இன்னைக்கு நைட் நான் சமைச்சிடுறேன்.." என்றபடியே வந்து அமர்ந்தவளின் முன் உணவு பாத்திரங்களை தள்ளி வைத்தான்.

தட்டில் சாதம் பறிமாறிக் கொண்டாள். சாம்பாரை தள்ளி வைத்து விட்டு அருகிருந்த புளி குழம்பை ஊற்றிக் கொண்டாள். உணவை ஒரு வாய் அள்ளி நின்றவள் தன்னையும் மறந்து சப்புக் கொட்டினாள்.

"செம டேஸ்ட்..." கண்களை மூடி தன் நாவிலிருந்த ருசியை ரசித்தாள். அவள் கண் திறந்த போது அவளையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். மைவிழி அவனை புரியாமல் பார்த்தாள். அவன் சின்ன சிரிப்போடு தனது உணவை உண்ணும் போதுதான் மைவிழி கவனித்தாள் அவனது தட்டிலும் புளி குழம்பு மட்டும் இருப்பதை.

"உ..உனக்கும் புளிப்புன்னா பிடிக்குமா..?" என்றாள் தயக்கமாக.

"என் தட்டை பார்த்தா எப்படி தெரியுது..?" பதிலை நேரடியாக சொல்லாமல் அவளை பார்த்தான். அவள் அவனையும் அவனது தட்டையும் மாறிமாறி பார்த்தாள்.

"எனக்கும் புளிப்புன்னா ரொம்ப பிடிக்கும்.. செழியன் கூட எனக்காகவே அவன் பாக்கெட்டில் ஆரஞ்சு மிட்டாய் வச்சிருப்பான்.."

அவன் முகத்தில் மீண்டும் குறுநகை பூத்தது. அவன் ஆரஞ்சு மிட்டாயை காதலித்துக் கொண்டிருக்கும் விசயம் அவனுக்கு மட்டும்தானே தெரியும்.!

"ஏன் ஒரு பூச்செடி கூட இல்ல.." மைவிழி கேட்கவும் அவள் நட்டுவிட்ட வந்த செடிகளை பற்றி கேட்கிறாள் என புரிந்து கொண்டான்.

"நான் பையன்.. என் வீட்டுல பூச்செடிகளுக்கு என்ன வேலை..?"

"பொண்டாட்டி ஒருத்தி வந்தா தேவைப்படுமே..?"

"உனக்கு தேவைப்படுதா..?" என கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.

"நீதானே என் பொண்டாட்டி.." இந்த வார்த்தைகளை அவன் யோசிக்காமல் தான் சொன்னான். ஆனால் இந்த வார்த்தைகள் இருவர் மனதிலும் சிறு சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

"நான்.. நான்.." மைவிழிக்கு வார்த்தைகள் தடுமாறின. "நான் என்னை சொல்லல.. எனக்கப்புறம் வர போறவங்களை சொன்னேன்.." எப்படியோ சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தாள்.

"யாரும் வர மாட்டாங்க.." என்றான் அழுத்தமாக. அதன்பிறகு இருவருமே பேசிக் கொள்ளவில்லை.

காற்றில் இறுக்கம் இருந்தது. இருவருக்குமே அதை கலைக்க தோணவில்லை.

கதிர் அந்த வீட்டிலிருந்த மற்றொரு அறையில் தனது பொருட்களை வைத்தான். அந்த அறை மைவிழி அறையின் நேரெதிரே இருந்தது.

ஜன்னலை திறந்து விட்டான் கதிர். அவனுக்கு ஜன்னல் இரவும் பகலும் திருந்திருக்க வேண்டும்.. ஜன்னல் வழியே மைவிழி நட்டிருந்த செடிகள் தெரிந்தன. அவன் எந்த இடத்தில் எந்த செடிகளை நடலாம் என நினைத்திருந்தானோ சரியாக அதே இடத்தில் அவள் அந்தந்த செடிகளை நட்டு வைத்திருந்தாள்.

'இவ எப்படி நான் நினைக்கறதையே சொல்லுறா..? நான் யோசிச்சதையே செய்யுறா..? ஒருவேளை இது எல்லாமே அப்பாவோட பிளானா..? அவர்தான் இவக்கிட்ட என்னை பத்தி சொல்லியிருக்காரா..? அப்படி இருந்தால் இவ ஏன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாள்..? ஒருவேளை இது எல்லாம் எதேச்சையாக நடக்கறாத இருக்கும்..' தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டவனின் கண்களில் மேல் ஷெல்பிலிருந்த அவனது அம்மா தந்த கல்யாண பரிசு தெரிந்தது. அதை கண்களுக்கு தெரியாதபடி நகர்த்தி தள்ளி வைத்தான். அதை தொட்ட கைகளை நெருப்பில் சுட்டு கொள்ள வேண்டும் போல இருந்தது கதிருக்கு.
அவன் அறையிலிருந்து வெளியே நடந்தபோது எதிரிலிருந்த அறையில் ஜன்னலருகே நின்று கொண்டிருந்த மைவிழி அவனது கவனத்தை ஈர்த்து விட்டாள்.

வானத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தது அவளது கண்களின் தேடல். விழிகளில் தெரிந்த ஏக்கம் அவளை ஒரு கற்பனை ஓவியமென காட்டிக் கொண்டிருந்தது கதிரின் கண்களுக்கு.

மனதின் மயக்க விளையாட்டுக்கு பலியாக விரும்பவில்லை கதிர். அதனால் தலையை அசைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அன்றைய நாள் அப்படியே முடிந்து போனது.

மறுநாள் கதிர் பணிக்கு செல்ல தயாராகி வந்தான். மைவிழி சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவன் வந்து அமர்ந்ததும் தலையை நிமிர்த்தி சிறு புன்னகை பூத்தாள். அந்த சிறு புன்னகைக்கே கதிரின் மனதில் சிறகில்லா பட்டாம்பூச்சி ஒன்று பறந்தது.

'பெண்களின் சிரிப்பில் பாம்பின் விஷம் ஒளிந்திருக்கிறது..' என எண்ணியவன் தன் அறிவையும் மீறிக் கொண்டு அவளின் புன்னகைக்கு பதில் அளிப்பது போல சிறு நகையை தன் முகத்தில் தவழ விட்டான்.
"நான் திரும்பி வர மணி எட்டாகும்... நீ கதவை தாழ் போட்டுவிட்டு உள்ளே இரு.. இந்த ஏரியாவுல திருடங்க சுத்துறதா கேள்வி பட்டேன்.." என்றான் கதிர் உணவை பரிமாறிக் கொண்டே.

உணவை முடித்துக் கொண்டு எழுந்தாள் மைவிழி. "நான் வீடு வந்து சேர மணி பதினொன்னுக்கு மேல ஆகும்.. நான் ஸ்பேர் கீ வச்சி உள்ளே வந்துக்கறேன்.. அதனால் நீ கதவை சாத்திக்கிட்டு பத்திரமா தூங்கு.. இந்த ஏரியாவுல வயசு பசங்களை குறி வச்சி கொல்லுற சைக்கோ கொலைகாரி சுத்துறதா நானும் கேள்வி பட்டேன்.."
என அவள் சொல்லவும் அவனது கையிலிருந்த குழம்பு கரண்டி அவன் பிடியிலிருந்து நழுவி விழுந்தது.

கதையோடு இணைந்திருந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றிகள்..

மைவிழியை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. ரொம்ப பிடிச்சிருந்தா ஒரு commentம் சேர்த்து பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top