சுவாசம் - 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 1

அப்பா
எத்தனையோ சரிவுகளுக்குப்
பிறகும் தைரியமாய் சிரித்துக்
கொண்டிருக்கிற அப்பாவுக்கு
நிகரான நம்பிக்கையூட்டும்
புத்தகம் பிரபஞ்சத்தில்
எங்குமே இல்லை.!

எந்தனையோ கார்ப்பரேட் கம்பெனிகள் சென்னையில் வந்து பலருடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்தாலும் இன்னும் எங்கள் வாழ்க்கைத்தரம் மாறவே இல்லை என்பதற்கு அடையாளமாக சென்னையின் மையப் பகுதியான தேனாம்பேட்டையில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல பங்களா வீடுகளைத் தாண்டி சற்று உள்ளே அடங்கியிருந்தது அந்த குடிசைப் பகுதி. வெள்ளைக் காகிதத்தில் கருப்புப் புள்ளி போல் இருக்கும் இந்தப் பகுதியை அகற்ற பல பங்களாவாசிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி மக்களோஅது எதற்கும் அசராமல் சமாளிக்கும் நிலைதான் இன்னமும் தொடர்கிறது.

“டேய் சாமீ! தா இந்த நீச்ச தண்ணியக் குடிச்சிக்கோ” என்று சாமியின் தாய் நீட்ட அதை வாங்கிக் கீழே வைத்த சாமீ எனும் கந்தசாமி

“எம்மா இன்னோர் லோட்டா எடுத்துகினு வாயேன்”

“இன்னாத்துக்கு? அந்த தர்த்திரம் புடிச்ச கயிதைங்களுக்கா? மூணும் பொட்டக் கயிதைங்களா பொறக்க ஆம்பளப் புள்ள வோணும்னு நென்சப்ப பொறந்தது பாரு ஒண்ணு! நாலாதும் ராசி கெட்டது! அத்தால தான் நீ இப்டி கீற. ஒன்னிய பேசாம குடிச்சிட்டு வேலை வெட்டியப் பாரு. இந்த நீச்சத் தண்ணிக்கே தள்ளாத வயசுலோ நான் நாலு குடிச தாண்டி பொன்னம்மா கிட்ட வாங்கியாந்தேன்” என்று அவர் நொடிக்க

அவர் சொல்வதைப் போல் செய்ய முடியுமா கந்தசாமியால்? முன்பு கை கால்கள் நன்றாக இருக்கும் போதே சொந்தமாக மூணு சக்கர வண்டியில் காய்கறி மூட்டைகளைத் தூக்கிய போது கூட தனக்குக் கிடைக்கும் உணவை வேர்வை சிந்திய தன் ஆடையில் மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து தன் பிள்ளைகளுக்குக் கொடுத்தவர் இப்போது நடக்க முடியாத இந்த நிலையிலும் விட்டு விடுவாரா என்ன? ஆனால் அவரைப் பெற்றவளோ

“கஸ்மாலம்! எத்தினி தபா சொல்றது? உனுக்கு ஆத்தா நல்ல புத்தியே குடுக்க மாட்றா. அதுங்களப் பெத்தவளே இந்த தர்த்திரங்க வோணானு தன் சொகம் சந்தோசம் தான் முக்கியம்னு வேற வாழ்க்கையப் பாத்துகினு பூடுச்சி. நீ தான் இதுங்கள இஸ்துவெச்சிகினு கீற. கண்ணு முயிச்சதுலயிருந்து குந்திகின எடத்துலருந்துகினே பீடி சுருட்டினு கீற.

சாயங்காலம் அத்த வாங்க வேண்டியவங்க வந்து வாங்கினு போனாத் தான் துட்டு. அப்பால தான் சோறாக்கித் துண்ணனும். அத்தவரைக்கும் பசிச்சினு கீறியேனு குடுத்தா நீ இத்த பங்கு போட்டுனு கீற. ஐய, உனுக்கு உன் புள்ளைங்க பசி முக்கியம் காட்டி எனுக்கும் என் புள்ள பசி முக்கியம்” என்றவரின் குரலில் கோபமும் பாசமும் இருந்தாலும் மகன் கேட்ட படி டம்ளரை எடுத்து வந்து ‘நங்’ என்ற சத்தத்துடன் தரையில் வைக்கவும் மறுக்கவில்லை அவர்.

அவருடைய கோபத்திற்குக் காரணம் நேற்று சோறு வடித்த கஞ்சித் தண்ணீரை மகனுக்கென்று அவர் எடுத்து வைத்திருக்க, இப்பொழுது காலையில் போய் பார்த்தால் வெறும் மண்சட்டி தான் இருந்தது.

கந்தசாமியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அதை குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே போனவர்கள் பாட்டியின் அடிக்குப் பயந்து கொண்டு இன்னும் வீடு வந்து சேரவில்லை. கால்வலியில் இவரே போய் அந்தக் கஞ்சியை வாங்கிக் கொண்டு வந்தது தான் இப்போதைய கோபத்திற்குக் காரணம். அப்போது பார்த்து தரையில் படுத்திருந்த கந்தசாமியின் நான்காவது மகன் வீறிட்டு அழவும்

“தோ ஒண்ணு கூவுது பாரு.. பீட” என்று அவர் மீண்டும் புலம்ப

கையிலிருக்கும் கஞ்சித் தண்ணியைக் கூட குடிக்க முடியாதவராய் கோபத்துடன் ஆத்தா என்று அதட்ட நினைத்தவர் சற்று தன் கோபத்தை அடக்கிக் கொண்டு

“ஆத்தா புள்ள அயிவுது பாரு.. செத்த தூக்கு ஆத்தா” என்று கெஞ்சவும்

“தோடா.. அது பசிக்கு அயிவுது. நான் தூக்குனா கண்டி அத்தோட பசி பூடுமா?” என எரிச்சலுடன் கேட்கவும்

அவர் மனதில் சுருக்கென்று எதுவோ தைக்கவும் கண்ணை மூடி அந்த வலியைப் பொறுத்தவர் பின் கண்ணைத் திறந்து

“ஆத்தா அவனத் தூக்கி என்னான்டவாது குடு” என்று அவர் கேட்கும் நேரம்

அந்த குடிசைக்குள் நுழைந்தாள் நம் கதையின் நாயகி ரதிதேவி.

பத்து வயது சிறுமிக்கே உள்ள மெலிந்த உடல் வாகு, அதற்கேற்ற உயரம், மாநிறம். அவள் முகத்தில் எப்போதும் அந்த வயதுக்கே மீறிய யோசனை தைரியம் தன்னம்பிக்கையுடன் இருப்பவள். பெயருக்கு ஏற்றார் போல் பார்த்தவுடன் ஆளை மயக்கும் அதிக அழகு எல்லாம் இல்லை இவள்.

ஆனால் சற்று உற்று நோக்கினாலோ அவள் முகம் பார்ப்போர் மனதில் ஒற்றிக் கொள்வது நிச்சயம். அதிலும் அல்லியிதழ்களைப் போலிருந்த அவள் உதடுகளை நெருக்கத்தில் பார்த்தாலே போதும் அவளைத் தேவலோகத்து ரதியென்றே சொல்லத் தோன்றும்.

தொளதொள வென்று அவள் அணிந்திருந்த மேல்சட்டையும் தன் உயரத்துக்கு எட்டும் எட்டாமல் கணுக்கால் வரையிருந்த பாவாடையும் முடியை சீப்பு கொண்டு வாராமல் கையால் ஒதுக்கிக் கொண்டையிட்டிருக்க கையில் கழுத்தில் காதில் நகை எதுவுமின்றி நெற்றியில் பொட்டு கூட இல்லாமல் இடது கையில் டீ சொம்பு மற்றும் வலது கையில் ஒரு சின்ன தூக்கு வாலி பன்னுடன் உள்ளே வந்தவள்

“நைனா! அத்தக் கீய வை. தா, டீயும் பன்னும் துன்னு. ஆயா நீ கூடத் தான்” என்றவள் தன் வலது கையிலிருந்த சொம்பிலுள்ள பாலை டம்ளரில் ஊற்றி ஆற்றிய பின் தன் தம்பியிடம் சென்று

“உலுல்லாயி.... உலுல்லாயி... கதிர் குட்டி! தோ அக்கா வந்துக்கினேன்.. பசிச்சிகிச்சா உனுக்கு? அதுக்காண்டி அக்கா பால் வாங்கியாந்தேன்” என்ற படி தரையில் அமர்ந்து அவனைத் தூக்கி மடியில் படுக்க வைத்தவள் ஸ்பூனால் பாலை எடுத்து அவன் உதட்டில் சிறிது சிறிதாக சொட்ட தன் நாக்கால் சப்புக் கொட்டிக் குடித்தான் ஒரு மாதக் குழந்தையான கதிரேசன்.

மகளைப் பெருமையாய் பார்த்தவர் மகனுக்குப் பசி அடங்கி அழுகை நிற்கவும் தானும் டீயை குடிக்க ஆரம்பித்தார் கந்தசாமி.

தம்பி தூங்கியதும் தந்தை பக்கத்தில் ஒரு துணியை விரித்து அதில் அவனைப் படுக்க வைத்தவள் சொம்பில் உள்ள பாலையும் அவர் பக்கத்தில் வைத்து

“தம்பி அயும் போது எல்லாம் இந்த பாலைக் குடு நைனா. அப்பால, நான் வேலை செய்யப் போறேன். முக்குத் தெருவுல நாலு கடை கீது இல்ல? அத்த காலங்காத்தால பெருக்கிக் கூட்டித் தண்ணி தெளிச்சிக் கோலம் போட்டா துட்டு தரன்னு சொல்லிக்கினாங்க.

பக்கத்து வூட்டு அக்கா தான் என்னைய கூட்டிகினு போச்சு. ரெண்டு கடையான்ட இன்னிக்கே வரச் சொல்லிக்கினாங்க. மீதி ரெண்ட நாளைக்கு தான் கேட்டுக்கணும். தெனக் கூலி தான் பேசிக்கினேன் நைனா. அத்துல தான் இதெல்லாம் வாங்கிக்கினேன்.

இன்னிக்கு ஒரு நா மஜ்ஜானம் பொறுத்துக்க நைனா. நாளிலிருந்து காலயிலே சுடக் கஞ்சி வெச்சிட்டுப் போய்க்கிறேன். நீ வெங்காயம் வச்சி துண்ணுக்கோ நைனா” என்று சொல்லி வெளியே செல்லத் திரும்ப, பாட்டியோ அப்படி நீ எங்கே டீ போகப் போற என்று கேட்பதற்கு வாய் திறப்பதற்குள்

“நான் போய் தங்கச்சிங்க ரெண்டு பேரையும் இட்டுகுனு வரேன்” என்றவள் அங்கிருந்து விடுவிடுவென்று செல்ல ஆரம்பித்தாள் தேவி.

போகும் மகளையே பார்த்தவர் ‘இதுத் தான் என் மவ தேவி. எம்மவள எங்க போய்க்கின வந்துக்கினனு விலாவாரியா கேட்டுக்க வோணாம். எத்த செஞ்சிக்கினாலும் அது கரீட்டா இருக்கும். என்னான்ட எத்தும் மறச்சிக்காது . பாவம் இந்த வயசுல என் மவ எம்மா கஷ்டப்பட்டுகிது. அப்பாலயும் படப் போகுது’ என்று நினைத்தவரின் கண்ணில் தன் பெண்ணுக்காக இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடியது.

தன் தங்கைகளைத் தேடிப் போனவள் அவர்கள் இருவரும் பலகாரக் கடையில் இட்லி அவிப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் நெஞ்சு வலிக்க அவர்கள் இருவரின் தலையையும் வருடித் தடவியவள்

“இந்தா! இனிமேட்டுக்கு இப்படி எல்லாம் நின்னுகினு வெறிச்சிப் பாத்துக்க கூடாது. வாங்க வூட்டுக்கு போய்க்கலாம்” என்று எச்சரித்தவள் அவர்களை அழைத்து வந்து குளிக்க வைத்து தலை சீவி உடை மாற்றி டீ கொடுத்துத் தானும் தயாராகிப் பள்ளிக் கூடத்துக்குக் கிளம்ப

“எங்க டி கெளம்பிக்கினீங்க?” என்ற கேள்வியுடன் உறுத்து விழித்தபடி எதிரில் வந்து நின்றார் அவள் பாட்டி.

உடனே தேவி தந்தையைப் பார்த்தவள் பிறகு திரும்பி பாட்டியைப் பார்த்து

“இஸ்கூலுக்கு ஆயா...” என்று முடிக்கக் கூடயில்லை.

“அடி செருப்பால! பொட்டக் கயிதைங்களுக்குப் படிப்பு இன்னாத்துக்கு டி? ஒயிங்கா வூட்டுல கெடங்க. இல்லாங்காட்டி வூட்டான்ட நம்மாளுங்க கூட சோலிக்குப் போய்க்கங்க. அத்த வுட்டுட்டு இந்த சீவிசிங்காரிச்சிகினு இஸ்கூல் போய்க்கிறதெல்லாம் வோணாம். ஏன் உன் ஆத்தா உங்களையும் என் மவனையும் வுட்டுட்டு எவனையோ இஸ்துகினு ஓட்னாப்ல நீங்க மூணு பேரும் இப்பவே ரெடியானுக்கீரீங்களா? ஆரு கண்டா? உன் ஆத்தாளுக்கு அந்த வயசுல வோணும்னு நெனச்ச சொகம் உங்களுக்கு இப்பவே கேக்குதோ?” என்று அவர் வார்த்தைகளை நெருப்புத் துண்டுகளாய் கொட்ட

“ஆத்தா!...” என்ற கூவலுடன் மேற்கொண்டு பேச முடியாதவராய் ஸ்தம்பித்துப் போனார் கந்தசாமி.

பாட்டி என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்பது அவளுடைய வயதுக்குப் புரியவில்லை என்றாலும் தன் தாய் ஏதோ செய்யக் கூடாதத் தவறை மட்டும் செய்து விட்டார் என்பதை வெளி ஆட்களின் பேச்சில் அறிந்தவளோ உள்ளுக்குள் கூனிக் குறுகிக் கண்ணில் நீர் வர அதை உள்ளுக்கு இழுத்தவளோ

“நாங்க இஸ்கூல் போனாத் தான் மஜ்ஜானம் சோறு துண்ண முடியும் ஆயா. நம்ப வூட்டுல அந்த சோறு மிச்சமாகும் இல்ல?” என்று அவள் கண்ணீரை அடக்கியக் குரலில் சொல்ல

சோறு என்ற மந்திர வார்த்தைக்குக் கட்டுப்பட்டு சில முணுமுணுப்புடன் வழிவிட்டார் அவள் பாட்டி.

அவருக்குத் தன் பேத்திகள் மேல் கோபமோ வெறுப்போ இல்லை. இன்னும் சொல்லப் போனால் பேத்திகள் மேல் அன்பு பாசம் எல்லாம் இருக்கிறது தான். ஆனால் தன் மருமகள் செய்த காரியத்தால் தான் அவர் இப்படி ஆனார்.

கந்தசாமி ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் அட்டெண்டராய் வேலை செய்ய அங்கு கூட்டிப் பெருக்க என்று வேலைக்கு வந்த லோகநாயகியைக் காதலித்துத் திருமணம் செய்ய அதற்கு இருவீட்டாரும் எதிர்க்க முன்பு கோபத்திலிருந்த கந்தசாமி அம்மாவும் கணவன் இறந்த பிறகு மகனிடமே வந்து விட அப்போதும் மருமகளைப் பிடிக்காமல் தான் வந்தார் அவர்.

கணவன் மனைவி இருவரும் வேலை செய்த கம்பெனியை மூடி விட அதிக படிப்பறிவு இல்லாத இருவரும் மேற்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதற்காக கந்தசாமி மூணுச்சக்கர வண்டி ஓட்டவும் லோகநாயகி வீட்டு வேலைக்கும் செல்ல நேர்ந்தது. அவர்களுக்கு முதல் குழந்தையாக ரதிதேவி பிறக்க அடுத்து நான்கு வருடம் கழித்து அறிவுமதி பிறக்க ஆண் குழந்தைக்கு ஆசைப்பட அடுத்து மூன்று வருட இடைவேளையில் பிறந்ததும் பெண்ணான அமுதரசி தான்.

ஐயோ மூன்றும் பெண்ணா என்று தாங்கள் செய்த தவறை உணர்ந்து வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்த நேரத்தில் தான் நான்கு வருடம் கழித்து லோகநாயகி மறுபடியும் கருவுற்றாள். அதை அழிக்கவும் முடியாத நிலையில் கருவும் வளர்ந்து விட, அவளுடைய எட்டாவது மாதத்தில் அவர்கள் வாழ்ந்து வந்த குப்பம் ஒரு அரசியல் வாதியின் சுயநலத் தேவைக்காக அவர்கள் இருந்த குடிசைகளைத் தீயிட்டு எரிக்க அதில் குடிசையுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் மூணுச்சக்கர வண்டியும் எரிந்து போக கந்தசாமிக்கும் உடலில் நிறைய தீக்காயங்கள் ஏற்பட்டு அதில் நடக்க முடியாமல் அவருடைய கால் சேதமானது.

அந்த நேரம் வீட்டிலிருந்த மற்றவர்கள் வெளியே சென்றிருந்ததால் இவர்கள் தப்பினர்.

கணவன் நடக்க முடியாமல் ஆஸ்பிட்டலில் இருக்க நிறைமாத கர்ப்பிணியான லோகநாயகி தான் மாமியார் மற்றும் பிள்ளைகளைப் பார்க்க வேண்டியதாயிற்று. அதிலும் வீடில்லாமல் ரோட்டோரம் தங்கி வாழும் நிலையும் உருவானது.

கந்தசாமிக்கும் நாயகிக்குமே 13 வயசு வித்தியாசம். அதிலும் பதினாறு வயதில் இவரைக் கல்யாணம் பண்ணி வந்ததிலிருந்து கண்டது எல்லாம் என்ன என்ற அலுப்பும் சலிப்பும் லோகநாயகிக்கு வர அவர்கள் கேட்ட ஆண் குழந்தை பிறந்தவுடன் தான் வேலை செய்த ஒரு வீட்டு உரிமையாளர் வயதானவராக இருந்தாலும் பரவாயில்லை என்று அவருடன் தன் மீதி வாழ்க்கையைத் தொடர நினைத்து கணவன் பிள்ளைகளைப் பற்றி நினைக்காமல் தன் சுகம் தான் முக்கியம் என்ற முறையில் ஓடிப் போய் விட்டார் கந்தசாமியின் மனைவி.

பெற்றவளே ஓடிப் போன பிறகு இந்த வயதான காலத்தில் இவர்களை நான் பார்க்கவேண்டுமா என்ற வெறுப்பு கந்தசாமியின் அம்மாவுக்கு.

முன்பே இவர்களுடைய வாழ்க்கைத் தரம் அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை தான். ஆனால் இப்போதோ அதை விடப் படுமோசம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் தேவி கவலைப் படவோ கஷ்டப் படவோ இல்லை. இந்த வயதிலேயே அவள் கூனிக் குறுகிக் கண்ணீர் சிந்தி சோர்ந்து போகும் விஷயம் என்றால் அது அவள் தாய் செய்த இழிவுச் செயலால் தான்.

இப்படியே வாழ்க்கை அதன் போக்கில் போய் கொண்டிருக்க காலையில் பள்ளிக்குச் சென்று வந்த பிறகு தன் வயதுக்கே உரிய சின்னஞ்சிறு ஆசை மற்றும் விளையாட்டுக்களை எல்லாம் தவிர்த்து இப்பொழுதெல்லாம் மாலை நேரத்திலும் தேவி வீட்டு வேலைக்குப் போய் வருகிறாள்.

ஒரு நாள் அப்படி வேலை முடித்து வரும்போது அவள் வீட்டுக்குப் போகும் வழியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு தெருவில் அவள் வர, அவளுக்கு எதிர் திசையில் பதிமூன்று வயதுப் பையனும் அவனுடன் எட்டு வயது சிறுவனும் பேசி விளையாடி நடந்து கொண்டு வந்தார்கள்.

அவளுக்குப் பின்புறமோ மூன்று பதினாறு வயது விடலைப் பையன்களும் வந்து கொண்டிருக்க

அந்த நேரம் பார்த்து தேவியின் செருப்பு அறுந்து போக
“அச்சச்சோ…. நேத்திக்கி தான தீபாக்கா (அவள் வேலை செய்யும் வீட்டில் ஒரு வீடு) செருப்பு குடுத்துச்சி போட்டுக்கோனு? அதுங்காட்டியும் பிஞ்சிகிச்சா?” என்றவள் குனிந்து அதன் வார்களைப் பார்க்க அவளுக்கு இடது பக்கத்திலிருந்து பின்புறமாய் வந்த பையன்களில் ஒருவன் அவள் வலது பின்புற மேட்டில் அவன் கையால் சில சிலுமிஷங்களைச் செய்து விட, அதே நேரம் அவளுக்கு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த பையன் வலது புறமாக அவளை உரசியபடி போகவும் அவன் தான் அப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்ததாகத் தப்பாகக் கணித்தவள் ஒரு நிமிடம் விதிர்விதிர்த்துப் போய் நிற்க.

அவனோ கூட வந்த அந்த சிறுவனுக்குக் கையில் வைத்திருந்த ரிப்பனால் நீட்டி மடக்கி விளையாட்டுக் காட்டி அதில் லயித்துப் போக..

“அண்ணா! அண்ணா! சூப்பர் ணா! எவ்ளோ அழகா செஞ்சீங்க” என்று கூட இருந்த சிறுவன் குஷிப்பட்டு சிரிக்கவும்

தன்னைச் சில்மிஷம் செய்ததைப் பார்த்துத் தான் அந்த சிறுவன் குஷிப்படுவதாக தவறாக யூகித்தவள் உடம்பில் தீப்பற்ற கண் மண் தெரியாத கோபம் தலைக்கு ஏற அறுந்து போன செருப்பைக் கையில் எடுத்தவளோ ஓடிச் சென்று அவன் முன் ருத்திர தேவியாக நின்று அவன் சுதாரிக்கும் முன் அவன் சட்டையைக் கொத்தெனப் பிடித்துத் தன் வலது கையில் வைத்திருந்த செருப்பால் அவன் கன்னத்தில் அறைவிட்டவள் மறுபடியும் அடிக்கக் கை ஓங்க

முதல் முறை விதிர்விதிர்த்துப் போய் அடி வாங்கியவனோ இரண்டாவது அடிக்கு காலசம்ஹாரமூர்த்தியாய் தன் கண்ணில் நெருப்பு சூவாலையுடன் ஓங்கிய அவள் கையைப் பிடித்துத் தடுத்தவனோ அந்த பதிமூன்று வயதுக்குமே ஏதோ கடப்பாரையைப் போல் வலு ஏறியிருந்த தன் கையால் ஒன்றுக்கு மூன்று அறையாக அவளுக்குத் திருப்பிக் கொடுக்கவும் மறக்கவில்லை அவன். கூடவே சட்டையைப் பிடித்திருந்த அவள் கையைப் பின்புறமாக முறுக்கியவனோ அவள் தலையை அங்கிருந்த மரத்தில் மோதி சிதறு தேங்காயாக உடைக்க நினைக்க

“ஐய்யயோ! ஐய்யயோ! வர்மன் ணா வேணாம்னா” என்று கூட வந்த சிறுவன் கூச்சலிடுவதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் அந்த வர்மனோ இல்லை. அவனோ அவளைத் தாக்குவதிலேயே குறியாக இருந்த நேரம்

எங்கிருந்தோ அப்போது அங்கு ஓடி வந்த தேவியின் பாட்டி அவன் காலைக் கெட்டியாகப் பிடித்து

“ஐயோ! ராசா… அவ செஞ்சது தப்பு தான் யா!” என்று அவள் என்ன செய்தாள் என்பதை அறியாமலேயே பதறியவர்

“வுட்டுடு ராசா! அவளுக்காண்டி நான் உன்னான்ட மன்னிப்பு கேட்டுக்கறன்” என்று அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டவர்

“நான் வோணும்னா அவளையும் மன்னிப்பு கேட்க வெக்கறன் ராசா” என்றவர் அவன் சற்று அசந்த நேரம் பார்த்து அவளையும் பிடித்துக் கீழே இழுத்து அவள் தலை முடியைக் கொத்தென பற்றி அவள் முகத்தை அவன் காலில் புதைத்தவரோ

“கேளு டி.. ராசா கிட்ட மன்னிப்பு கேளு டி” என்று அவள் முகத்தை அங்கு புரட்ட, ஆனால் தேவியோ மன்னிப்பு என்ற வார்த்தையை மட்டும் சொல்லவில்லை.

அதில் கோபமுற்று அவள் முகத்தை நிமிர்த்தியவர் ஏற்கனவே பூரி என வீங்கிப் போயிருந்த அவள் கன்னத்திலேயே நான்கு அறை அறைந்து தன்னால் முடிந்தவரை அவளைக் குலுக்கியவர்

“தம்பியான்ட மன்னிப்பு கேளு டி” என்று அதிகார தோனியில் மிரட்ட,

தங்களுக்குள் பிரச்சனை நடக்கும் போது ஆள் அரவம் எதுவுமே இல்லாமல் இருந்த தெருவில் இப்போது ஊரே கூடியிருக்க அதைப் பார்த்தவளோ வேறு வழி இல்லாமல் மன்னிப்பைக் கேட்கவும் அப்போது தான் அவள் முதுகுக்குப் பின்னால் பிடித்திருந்த அவள் கையை விட்டான் சண்டியரான வர்மன்.

“ஐயா! இங்க நடந்தத எத்தையும் உன் மாமாவான்ட சொல்லிக்காத பா. அப்பால அவரு என் பேத்திய எதுங்காட்டியும் செஞ்சிகின போறாரு!” என்று அவள் பாட்டி பயத்துடன் கேட்கவும், அவருக்கு வாயைத் திறந்து பதில் சொல்லாமல் வெறும் சிறு தலை அசைப்புடன் விலகிச் சென்றான் அந்த கோபக்கார வர்மன்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN