சுவாசம் - 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 2

தந்தைக்கு நிகரான
ஒர் உறவு யாதெனில்..
அதுவே தாய்மாமன் உறவு!

வர்மனிடம் கெஞ்சிப் பேசி தன் பேத்தியைக் காப்பாற்றிய தேவியின் பாட்டி குடிசைக்கு வந்ததும் அவளை அடித்து உதைத்து கோப வார்த்தைகளினாலும் வெளுத்து வாங்கியவர்

“பொட்டக் கயிதைங்களுக்கு இம்மா திமிர் வோணா டி.. நட்ரோட்ல ஒரு ஆம்பள பையனான்ட மல்லு கட்டிகினுயாமே? பொன்னம்மாக்கா சொல்லி இன்னமோ யேதோனு நான் ஓடியாறேன். இந்த வயசான காலத்தில இந்த கர்மம் எல்லாம் எனுக்கு வோணுமா?”

“ஆயா! அவன் என்னான்ட என்ன செஞ்சிக்கினானு தெரியு……”

“அடிக் கயித! அவனாமே அவன்! வாயத் தொறந்த கீசிடுவேன். இம்மா வாயாடாத.. அது உனுக்கு நல்லதுக்கில்ல. நம்மள மாதிரி வக்கெத்த நாய்களுக்கு மானம் ரோசம் திமிரு ஆணவம் அல்லாம் இன்னாத்துக்கு டி?

ஏன் டா சாமீ! நீ இன்னாமோ ஊர்ல இல்லாத மகாராணிய பெத்துகினாப்ல அவ மூஞ்சியே பாத்துனு கீற.. எப்பபாரு இந்த சிறுக்கிங்க செய்யறதுக்கு வாயத் தொறக்காத போல இப்பயும் ஊமக்கோட்டனாட்டும் குந்திகினு கீறியே டா. இந்த அடங்காப்பிடாரி யாரான்ட வம்பு பண்ணிகினா தெரியுமா?

இந்த குப்பத்துலயே எம்மா பெரிய ரவுடியாம் கொக்கி குமார் அவன் வூட்டுப் பையனான்ட இவ மதப்ப காமிச்சிகினு வந்து கீறா.. அவனுங்க துட்டுக்காக எத்தையும் செய்வானுங்களாம். கட்டப் பஞ்சாயத்துனு இந்த ஊரையே மடக்கி அவுங்க காலுக்கு கீய வச்சிகினு கீறானுங்க. யாருனா ஒருத்தர் இவனுங்களுக்கு எதிர்ல சுட்டுவிரல அசச்சிகினா கூட அவனுங்கள கொன்னு போட்டு ஒடம்ப கண்டந்துண்டமா வெட்டி மூட்டைக் கட்டி போட்டுடுவானுங்களாம்.

நாமளே அல்லாத்தையும் தாராந்துட்டு இங்க ஓடியாந்துக்குனோம். பொயக்க வந்த எடத்துல உன் மவள பொணமா பார்க்க ஆசப்படுறியா நீ? இந்த கூறுகெட்ட சிறுக்கி இன்னாத்த செஞ்சிகினாளோ அவன் இவ வாய கீச்சி அனுப்பி கீறான்.

இனிமேட்டுக்கும் இவ இப்படியே கெடந்தா இப்ப வாயக் கீச்சி அனுப்புனவன் அப்பால இவளையே டார்டாரா கீச்சி அனுப்புவான். அப்பால நான் எத்தும் சொல்றத்துக்கு இல்ல. இதுக்கு மேல உன் பாடு உன் பொண்ணு பாடு. ம்ம்ம்… பாடையிலோ போவுறப்பவும் என்ன நிம்மதியா போகவுடமாட்டிங்களா?” என்று அவர் சலித்துக் கொள்ள

“ஏன் தேவி மா இப்படி பண்ணிக்கின? இந்த வயசுலேயே என் மவளுக்கு இம்மா பொறுப்பானு நெனைச்சி பெருமையா கீந்துச்சி. கடசியிலோ இப்படி பண்ணிக்கினியே?” உன்னான்ட நெயாயம் இருந்தாலும் வந்துகீற எடத்துல இன்னாத்துக்கு மா வீண் பொல்லாப்பு?” என்று அவர் ஒரு தந்தை என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டாமல் நைந்த குரலில் தன் மகளைக் கண்டிக்கவும்

“தோடா.. இவன் ஒருத்தன்! அதட்டி கேளுனு சொன்னா வயவயா கொய கொயானு வெண்டக்கா வியாபாரம் பண்ணினு கீறான் நான் பெத்த கூறுகெட்ட மவன்...” என்று இதைப் பார்த்த பாட்டி தலையில் அடித்துக் கொண்டார்.

இப்படி தான் கந்தசாமி. யாரையும் அதிர்ந்து ஒரு வார்த்தைக் கூட பேசத் தெரியாதவர். அதற்காக கோழை எல்லாம் இல்லை. கொஞ்சம் பயந்த சுபாவம் வெகுளி அப்பாவி. நாள் முழுக்க மூட்டை தூக்கி சம்பாதித்த காசை யாராவது கஷ்டம் என்று வந்து கேட்டால் உண்மையிலேயே கஷ்டத்தில் தான் அவன் கேட்கிறானா என்றெல்லாம் யோசிக்காமல்அப்படியே தூக்கிக் கொடுத்து விடுவார்.

இப்படி ஏமாற்றிய எத்தனையோ பேர் குடித்துவிட்டு அவரையே திட்டுவதும் வழக்கம் தான். வண்டி வண்டியாய் மனைவி பிள்ளைகள் மேல் பாசம் இருந்தாலும் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பாசத்தை வெளிப்படுத்த மாட்டார்.

தந்தையின் முன் வீங்கிய தன் கன்னத்தைக் காட்டாமல் திரும்பியபடி தேவி தலை குனிந்து நிற்க

“கஸ்மாலம்! எங்கனா வாயத் தொறந்து இனிமேட்டுக்கு யாரான்டையும் வம்புக்குப் போக மாட்டன் நைனானு சொல்றாளா பாரு!” என்று மீண்டும் அவள் பாட்டி வார்த்தையால் தாளிக்க ஆரம்பிக்கவும்..

‘சொல்லு சொல்லுனா எப்டி சொல்லுவேன்? அது தான் ஒரு சைடு வீங்க வைச்சிட்டானே இடிமாடு!’ என்று மனதுக்குள்ளே புலம்பியவள்

“சரி நைனா, இனிமேட்டுக்கு யாரான்டையும் எந்த வீண் வம்புக்கும் நான் போகல” என்று முணுமுணுத்துச் சென்றாள் தேவி.

அன்றிலிருந்து ஒரு வாரம் அவளால் தூங்கவோ சாப்பிடவோ பேசவோ முடியாமல் அவதிப்பட்டவள் காலையில் பள்ளிக்கும் மாலையில் வேலைக்கும் கூட போக முடியாமல் இருந்த அவளின் மனதில் முழுக்க முழுக்க அந்த வர்மன் என்பவனின் மேல் தான் வன்மம் வளர்ந்தது. இதற்கு முன் அவனை ஓரிருமுறை பார்த்து இருக்கிறாள் தான். அப்போதெல்லாம் தூக்கிக் கட்டிய லுங்கியுடன் பீடி பிடிப்பதையும் ஏன் ஒரு நாள் அவன் மது அருந்துவதைக் கூட பார்த்து இருக்கிறாள். ஆனால் அவன் கொலை செய்யும் அளவுக்கு அரக்கன் என்பது தெரியாது. இவன் கொலைகாரன் என்பதால் தான் அப்படி ஒரு கேவலமான சில்மிஷத்தை தனக்குச் செய்தான் என்று நம்பியது அவள் மனது. ஆனால் அவன் மாமா தான் கொலைகாரன் என்று அவர் பாட்டி சொன்னதை மறந்தது தேவியின் வன்மம் நிறைந்த மனது.

தேவி நினைப்பது போல் அந்த வர்மன் கெட்டவனா? அவன் யார்? இதோ பார்ப்போம்..

சிற்பிவர்மன் இது தான் அவன் முழுப் பெயர்.

சென்னையில் குப்பத்து ராஜாக்கள் என்ற பெயரில் பேட்டை ரவுடிகளாகத் திரிபவர்களில் கொக்கி குமாரும் ஒருவன். சிறுவயதில் இருந்தே அரசியல்வாதிகளுக்கு கையாளாய் இருந்து பல கொலை அடி தடி என்று இறங்க அவன் விரல் அசைவுக்கு அந்த குப்பமே பயந்து ஒரு கட்டத்திற்கு மேல் கொக்கி குமார் என்று அழைக்கபட்டான் அவன்.

திருநீலகண்டன் ஒரு தொண்டனாய் அரசியலில் சேர்ந்து இன்று M.L.A வாக வளர்ந்தவருக்கு எதிராக கொக்கி குமார் தான் சேர்ந்திருக்கும் அரசியல்வாதிக்காக சிலதைச் செய்ய அதில் கோபமுற்ற திருநீலகண்டனின் மகன் ஞானேந்திரன் தன் வன்மத்தைப் போக்கிக் கொள்ள குமாரைப் பழிவாங்க நினைத்து அவனை விட பதினைந்து வயது சின்னவளான அவன் தங்கை சந்திரவதியைக் காதலிப்பது போல் நடித்து வயிற்றில் குழந்தையைத் தந்தது மட்டுமில்லாமல் உன் அண்ணனைப் பழிவாங்கத் தான் நடித்தேன் என்று சொல்லி அவளைக் கை விட்டு விட

அப்படி ஒரு அரசியல்வாதிக்கும் இருபது வயது அப்பாவியான சந்திரவதிக்கும் பிறந்தவன் தான் சிற்பிவர்மன்.

தன் காதல் உண்மை என்பதால் வயிற்றில் வளர்ந்த கருவை அழிக்காமல் அதன் பிறகு ஞானேந்திரனை திரும்பியும் பார்க்காமல் தன் அண்ணனுடன் இங்கு வந்தவள் தான் சந்திரவதி.


அந்த ஞானேந்திரன் குடும்பத்தை வெட்டுவேன் குத்துவேன் என்று கிளம்பிய அண்ணனைத் தன் உயிரை முன்னிறுத்திக் காட்டித் தடுத்தவள் அதன் பிறகு அவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவோ கஷ்டமோ கொடுக்கக் கூடாது என்று தன் அண்ணனிடம் வாக்கையும் வாங்கிக் கொண்டாள் சந்திரவதி.

என்ன தான் இடம் மாறினாலும் செய்து வந்த தொழிலை விட முடியுமா இல்லை கத்தி பிடித்தக் கை தான் சும்மா இருக்குமா? அதை விட சுற்றியிருக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் காரர்களும் தான் விட்டு விடுவார்களா? அதனால் குமாருடைய தொழில் அடியாள் என்றே ஆகிப் போனது. இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததால் தேவியின் கண்களுக்கு வர்மன் கெட்டவன் ஆகிப் போனான்.

அடி வாங்கிய வர்மனோ “எவ்வளவு திமிர் இருந்தா என்னைக் கை நீட்டி அடிச்சிருப்பா? அதுவும் செருப்பால! என்னை யாருனு நினைச்சா? பார்க்க நரம்பு மாதிரி இருந்துகிட்டு என்னையே அடிச்சிட்டா இல்ல? ஒரு நாள் இருக்கு அவளுக்குக் கச்சேரி!” என்று வரும் வழி எல்லாம் வாய் விட்டுப் புலம்பியவனோ கை முஷ்டி இறுக சுவற்றில் குத்திக் கொண்டும் காலால் அடிக்கடி தரையை உதைத்துக் கொண்டு வீடு வந்து சேர, அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தது ஒரு உயர் ரக ஆடி கார்.

இவன் உள்ளே நுழையவும்
“வா வர்மா!” என்று அவன் மாமா அழைக்க அவனோ சற்று தள்ளி முகத்தில் நிறைவுடனும் கவலையுடனும் தலை குனிந்த படி சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்த தாயைப் பார்த்தபடியே அவரிடம் நெருங்கியவனோ.

கூடத்தில் இதற்கு முன் அறிமுகமில்லாத அறுபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெரியவர் வழுக்கைத் தலையும் சிவந்த மேனியும் தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியும் பேனா மற்றும் இடது கையில் கடிகாரமும் விரலில் நவரத்தினக் கல் பதித்த மோதிரம் கூடவே தங்கத்தால் ஆன சிகரெட் பாக்ஸ் சகிதம் அமர்ந்து இருக்க,

உச்சி முதல் பாதம் வரை பணத்தின் செழுமை தெரிய அவர் சேரில் அமர்ந்திருந்த தோரணையே சொன்னது அவர் மேல் தட்டு வர்கத்தைச் சேர்ந்தவர் என்று.

கூடவே அவர் கட்டியிருந்த கரை வைத்த வேட்டியுமே அவரை அரசியல்வாதி என்பதைச் சொல்லாமல் சொல்லியது வர்மனுக்கு.

அந்த பெரியவரோ முதல் பார்வையிலேயே வர்மன் தன்னைக் கணக்கெடுப்பதை அறிந்து உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவர்

“என் பக்கத்துல வந்து உட்காருப்பா” என்று அவனை அழைக்க, எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தான் வர்மன்.

“நான் நேரடியா விஷயத்துக்கே வரேன். நான் தான் உன் தாத்தா திருநீலகண்டன். எக்ஸ் மினிஸ்டர் உன் அப்பாவப் பெத்தவன்.

நீ பொறக்கறதுக்கு முன்னே உன் மாமனுக்கும் எனக்கும் பகை. அதனால உன் அம்மா வாழ்க்கை என் மகனால திசை மாறிப் போச்சி.

அப்போ இருந்த சூழ்நிலைக்கு என் மகன் செய்தது தப்பா சரியானு நான் சொல்ல வரல.

ஆனா இப்போ சூழ்நிலை வேறையாகிப் போச்சி. இந்த வயசுல உனக்கு நான் எப்படி சொன்னா புரியும்னு எனக்குத் தெரியல.

நேத்து நடந்த ஆக்ஸிடென்ட்ல உன் அப்பாவுக்கு இடுப்புக்குக் கீழ செயலிழந்து போய் ஆஸ்பிட்டல்ல இப்பவோ அப்பவோனு இருக்கான். டாக்டரும் உயிருக்கு உத்திரவாதம் இல்லனு சொல்லிட்டாரு.

சாகறதுக்கு முன்ன உன் அம்மாவப் பார்த்துத் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு சட்ட ரீதியாக உன்னைத் தன் மகன்னு சொல்ல விரும்பறான் உன் அப்பா.

எனக்குப் பிறகு என் அரசியல் வாழ்க்கைய அவன் தான் எடுத்துப்பானு நினைச்சேன். ஆனா இப்படி நடந்து போச்சி. இப்போ நீ என் அரசியல் வாரிசா வரணும்னு நான் நினைக்கிறேன். அதுக்கான ஃபார்மாளிடிஸ் எல்லாம் செய்ய நான் தயாரா இருக்கேன்.

என்ன டா இவ்வளவு நாள் இல்லாம இப்போ வந்து இவரு அதிகாரமா கூப்பிடறாரேனு நினைக்காதே வர்மா. நான் ஒரு அரசியல்வாதி. எனக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா தான் பேசத் தெரியும்.

அதுக்காக நான் உன்ன மட்டுமே அழைச்சிகிட்டுப் போக நினைக்கில. உன் அம்மாவையும் சேர்த்துத் தான் கூப்பிடறேன்.

இதை எல்லாத்தையும் உன் மாமாகிட்டையும் அம்மா கிட்டையும் சொல்லிட்டேன். இப்போ உன்கிட்டையும் சொல்லிட்டேன். நாளைக்கு ஈவினிங் எனக்கு டெல்லிக்கு ஃபிளைட். அதுக்குள்ள உங்க முடிவச் சொல்லுங்க” என்றவர் எழப் போக

“ஒரு நிமிஷம் உட்காருங்க” என்று அவரை அமரச் சொன்ன வர்மனின் அம்மா
“இதுல யோசிக்கவோ இல்ல தனியா எங்களுக்குள்ள பேசவோ எதுவும் இல்லங்க… சிற்பி இங்க வா” என்றழைக்க அவன் வந்ததும் தலை கோதி முகம் வருடியவரோ

“உங்க அப்பாவும் நானும் ஒரு சில மனஸ்தாபத்தால பிரிஞ்சிட்டோம்னு உனக்கு முன்னமே சொல்லியிருக்கேன் தானே? நான் இறந்த பிறகும் ஒரு நாள் உங்க அப்பா உன்னைத் தேடி வருவாருனு சொன்னேன் இல்ல? ஆனா அது நான் உயிரோட இருக்கும் போதே நடந்திருக்கு. அதனால நீ கிளம்பி உன் தாத்தா கூட போ” என்றவள், அந்த பெரியவரிடம் திரும்பி

“உங்க மகன் என்ன விட்டுப் போகும்போதே நான் சொன்ன வார்த்த, என்னையும் என் பிள்ளையையும் ஒதுக்கிற நீ ஒரு காலத்துல நீ தான் என் மனைவி இவன் தான் மகன்னு சொல்லுற நாளும் உன் வாழ்க்கையில் வரத் தான் போகுதுனு! அது இன்னைக்கு வந்துடிச்சி.. அவருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் ஞானேந்திரனுடைய வம்சத்துக்கு இந்த சிற்பிவர்மன் தான் வாரிசுனு நான் நினைச்சது நடந்துடுச்சி. எனக்கு அது போதும்.

ஆனா அதுக்காக நான் மனைவி என்ற உரிமை எடுத்துக்க விரும்பல. அவர் எனக்கு செய்த துரோகத்துக்கு நான் அவரை மன்னிக்கவும் மாட்டன். செத்தாலும் அவர் முகத்துல முழிக்க மாட்டனு முடிவு பண்ணிட்டேன். அதனால நீங்க இவன மட்டும் கூட்டிகிட்டுப் போங்க. சத்தியமா இதை உங்க சொத்துக்காவோ அரசியல் வாழ்வுக்காவோ நான் செய்யல.

அண்ணா இது நான் உன் கிட்ட கேட்காம எடுத்த முடிவுனு உனக்கொண்ணும் வருத்தம் இல்லையே?” என்று அவள் தன் அண்ணிடம் கேட்க

“எனக்கு எந்த வருத்தமும் இல்ல சந்திரா! அன்னைக்கு இவங்கள எதுவும் செய்யக் கூடாதுனு நீ தடுக்கும் போது கோபம் ஆத்திரம் எல்லாம் இருந்துச்சி தான். ஆனா நான் எவ்வளவு வற்புறுத்தியும் வேற ஒரு வாழ்க்கைய பத்தி நெனைக்காம இன்று வரை நீ ஒரு தவ வாழ்க்கை வாழறத பார்க்கும் போது உன் காதல என்னால புரிஞ்சிக்க முடியுது மா..

அதுவும் இல்லாம எத்தனை நாளைக்கு தான் நானும் நம்ம குடும்பமும் இன்னொருத்தங்களுக்கு அடியாளாவே வாழறது? என் மாப்பிள்ளையும் அரசியல்ல சேர்ந்து தலைவனாகி அவனுக்குக் கீழ நாற்பது என்ன நானூரு அடியாளுங்க வேலை செய்யணும். அது தான் எனக்கு வேணும்” என்று மனைவி குடும்பம் என்று இன்று வரை வாழாமல் தங்கைக்காகவும் அவள் மகனுக்காகவும் வாழும் அவர் தன் ஆசையைச் சொல்லி வர்மன் அவன் தாத்தாவுடன் போவதற்குச் சம்மதித்தார்.

குமாரின் இந்த எண்ணம் தெரிந்து தானே திருநீலகண்டனும் இதைப் பற்றி கேட்க இங்கே வந்தது?

அப்படி ஒன்றும் அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்யாமல் எல்லாம் இல்லை. மந்திரி பதவிக்காக ஒருவருடன் கூட்டணி வைக்க அந்த கூட்டணி நிலைக்கத் தன் மகனை அரசியல் எதிர்க்கட்சி குடும்பத்துடன் பொய்யான திருமணத்தை நடத்த, அதுவோ கட்சி உடையும் போது சேர்ந்து அவர்கள் திருமணமும் உடைந்து போனது.

அதன் பிறகு மகன் ஆயிரம் பெண்களுடன் பழகினாலும் குழந்தை என்று இருந்தது என்னமோ சந்திரவதிக்கு மட்டும் தான்.

குமாரைத் தான் அவருக்குப் பிடிக்காதே தவிர பொறுமையும் அமைதியுமான சந்திரவதியை அவருக்குப் பிடிக்கும். தன் பேரனையும் அவள் நல்ல முறையில் வளர்த்திருப்பாள் என்பதும் அவருக்குத் தெரியும். என்றாலும் இப்போது விசாரித்ததில் தன் பேரனைப் பற்றி நல்ல விதமாகவே பல பேர் சொல்ல அது போதாதா திருநீலகண்டத்துக்கு?

அனைவரும் அவரவர் நிலையிலிருந்து வர்மனை போகச் சொல்ல, வர்மனோ போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.

என்ன தான் தாய் தன் தந்தை செய்ததை மறைத்து முன்பு பொய் சொன்னாலும் இப்போது ஒரு சிலரின் பேச்சால் அவன் தந்தை செய்த துரோகம் அவனுக்குத் தெரிந்து நெஞ்சில் வன்மம் வளர்ந்திருந்தது. இதை எல்லாம் விட தாயை விட்டுச் செல்ல அவனுக்கு விருப்பமுமில்லை. இத்தனை வருடம் தனக்காக வாழ்ந்த தாயை விட்டுப் போக மாட்டேன் என்று அவன் ஒற்றைக் காலில் நிற்க.

“இங்க பார் சிற்பி! இனி அது தான் உன் குடும்பம். அங்க இருக்கறவங்க தான் உன் சொந்தம் பந்தம் எல்லாம். இனி எங்களப் பார்க்கவோ இல்ல நினைக்கவோ ஏன் எங்களிடம் பேசவோ கூடாது. இது என் மேல சத்தியம்! இது தான் என் முடிவும் கூட” என்று சந்திரவதி தன்நிலையிலேயே நிற்கவும், வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாகத் தன் தாத்தாவுடன் கிளம்பிச் சென்றான் வர்மன்.

அந்த குப்பமே வர்மனுக்கு வந்த வாழ்வைப் பார்த்து வாய் பிளந்தது. இன்று யார் முகத்தில் முழித்தானோ? இவனுக்கு அடிச்சது பார் யோகம்! என்றனர் பலர். பாவம் அவர்களுக்கு தெரியாது தேவி கையால் வாங்கின அடி தான் அவனை கோபுரத்து உச்சிக்கு அழைத்துச் சென்றது என்று!

ஆனால் அடி வாங்கின வர்மாவுக்குத் தெரியுமே! தன் வாழ்வில் வந்த முதல் பெண்ணான அந்த ராங்கிக்காரியை சந்தித்த நேரம் தான் தன்னைத் தன் தாயிடமிருந்து பிரித்தது என்று!

இப்படியே அவரவர் வாழ்க்கையும் இயல்புநிலையில் உருண்டோட இதோ பத்து வருடங்கள் கழித்து....

“அடியேய் அரசி! எயிந்துரு டி.. வெடிஞ்சி எம்மா நேரம் ஆகுது? நீ இன்னானா இன்னமும் தூங்கினு கீற.. எயிந்துரு டி” என்று தன் தங்கை அமுதரசியை எழுப்பிக் கொண்டிருந்தாள் தேவி.

அப்பால இஸ்கூலுக்கு நேரம் ஆச்சினு ரெக்க கட்டிகினு பறந்துகினு கூட கீற எங்களையும் பறக்க வைக்க வோண்டியது” என்று என்ன தான் தங்கையை எழுப்பினாலும் அவள் கையோ அடுப்பிலிருந்த சட்டியைக் கிளரி கொண்டிருக்க “அடிங்க.. எயிந்துரு டி” மறுபடியும் கத்தவும்

எழுந்து அமர்ந்த அமுதரசி “எக்கா இன்னாத்துக்கு இப்போ இப்படி கூவுர? நைட் முயிக்க கண்ணு முயிச்சி படிச்சேன். காலங்காத்தால எயிந்திரிக்க சொன்னா எப்டி கா?”

“ஐய சோம்பேறி! நைட் முயிக்க கண்ணு முயிச்சி படிச்ச கதிரே எயிந்துக்கினான். ஒம்போது மணிக்கே படுத்த உனுக்கு இன்னா டி தூக்கம் கேக்குது?” என்று கேட்ட தேவி இரண்டு டம்ளர் கருப்பட்டி டீயை எடுத்தவள்

“இந்தா டா இத்த குடிச்சிட்டுப் படிச்சிக்கோ” என்று காலையிலே எழுந்து படித்து கொண்டிருந்த தம்பிக்குக் கொடுத்தவள் வெளியில் திண்ணையில் படுத்திருந்த அவள் தந்தைக்குக்கும் டீ கொடுத்தவள் உள்ளே வர அங்கே ஒரு மூலையில் இரண்டாவது தங்கை அறிவுமதியோ வயிற்றை குறுக்கிக் கொண்டு சுருண்டு போய் படுத்திருந்தாள்.

அவளைப் பார்க்கவே தேவிக்குப் பாவமாக இருந்தது. அவளால் என்ன செய்ய முடியும்? இது பெண்களுக்கு இயற்கையிலே வரும் உபாதை தானே? மாதம் மாதம் வரும் அந்த மூன்று நாட்களும் தேவி வயிற்று வலியால் படுவது போலவே தான் அறிவும் படுகிறாள். அதற்கு என்ன செய்ய முடியும்?

குழந்தையாய் இருக்கும் பெண்கள் பருவ வயதில் ஒரு முழுமை அடைந்த பெண்ணாய் உருமாறும் போது அவர்களுக்கு உடல் வலியாலும் பயத்தாலும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தாலும் அவர்கள் அனுபவிக்கும் மன உலைச்சல்கள் கொஞ்சமா நஞ்சமா? அதையே அவளும் நினைத்து பெருமூச்சு விட்டபடி தான் பெரிய மனுஷியாய் ஆன போது நடந்ததைச் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்துக் கொண்டாள் அவள்.

அவள் வர்மனிடம் அடி வாங்கிய சம்பவத்திற்குப் பிறகு ஐந்தாறு மாதத்திலேயே அவள் பாட்டி இறந்து விட பதினோரு வயதிலேயே பெரிய மனுஷியாய் ஆன தேவிக்குத் தன் உடலில் ஏற்பட்ட உபாதைக்கு இது தான் காரணம் என்று தெரியவில்லை.

முதலில் வயிற்றுக்கு ஆகாததைச் சாப்பிட்டால் வரும் வயிற்றுப் போக்கு போலவே இப்போது உடல் சூட்டில் அடி வயிறு வலித்து உதிரப் போக்கு வருவதாக நினைத்தவள் அது நேரம் கடந்து அதிகமாக நீடிக்கவே பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இல்லாமல் தவித்தவள் தந்தையிடம் சொல்ல பிறகு அவர் என்னவென்று சொல்லவும் இந்த நேரத்தில் தாய் இல்லையே என்று மருகி கூசி சங்கடப்பட்டவளுக்கு ஒரு தாயுமானவனாய் நின்று அவள் தந்தை வழி காட்டவும் அதிலிருந்து வெளி வந்தாள் தேவி.

பின் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் இயற்கையான மாற்றம் என்பதை அறிந்தவள் அதையே இப்போது பத்து வயதிலிருக்கும் தம்பிக்கும் சொல்ல இன்றும் அவன் தன் மூன்று அக்காக்களின் கஷ்டம் உணர்ந்து அந்த நேரத்தில் அவர்களுக்கு அதிக கஷ்டம் கொடுக்காமல் தன் வேலையைத் தானே செய்து கொள்ளும் அளவுக்கு அவனையும் பக்குவப்படுத்தி வளர்த்திருந்தாள் அன்னையாக மாறிய தேவி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN