சுவாசம் - 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 3

பெண்ணிற்கு
வழித்துணையாக
வருபவன்....
"காதலனாகவோ...
கணவனாகவோ"...
தான் இருக்க வேண்டும்
என்பதில்லை,
"கண்ணியம் தவறாத
நண்பனாகவும்" இருக்கலாம்...

ஒரு தாய் தன் துன்பத்தையும் வீட்டில் இருக்கும் சகோதரிகளின் கஷ்ட நஷ்டங்களையும் தான் பெற்ற மகனிடம் சொல்லி வளர்த்தால் தானே எதிர்காலத்தில் வரும் மனைவி மற்றும் மற்ற பெண்களின் கஷ்டம் தெரியும்? இதை எதையும் சொல்லாமல் அவர்களே புரிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம் என்பது தேவியின் கருத்து.

“நைனா காலையிலே வூட்ல சோறு கீதுனு துண்ணாத. நான் காசியண்ண கடையான்ட உனுக்கு மட்டும் நாஷ்டா சொல்லி கீறேன். கட பையனான்ட குடுத்தனுப்பும். அத்த துண்ணு. இப்போ நான் காலேஜிக்கு போய்ட்டு அப்பால கலெக்டர் ஐயா வூட்டுட்டுக்கும் போய்கினு வரேன்” என்று தன் தந்தையிடம் சொன்னவள் எல்லோரும் பள்ளிக்குச் சென்ற பிறகு தானும் கிளம்பிச் சென்றாள் தேவி.

கல்லூரி முடிந்து மாலை கலெக்டர் வீட்டுக்கு வந்தவள் தோட்டக்காரனில் இருந்து உள்ளே வேலை செய்பவர்கள் வரை அனைவரும் அவரவர் வேலையை ஒழுங்காக அன்று செய்தார்களா என்று மேற்பார்வை பார்த்தாள் அவள். இப்போது இரண்டு வருடமாகத் தான் இந்த மேற்பார்வை வேலை. அதற்கு முன்பு சாதாரண வீட்டு வேலைக்கு வந்தவள் தான் தேவி.

தமிழ்நாட்டில் நேர்மையான கலெக்டரில் சதானந்தனும் ஒருவர். அவர் மனைவி மைதிலி பண்ணாட்டு நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓவாக இருக்கிறார். அவர்களுடைய ஒரே மகன் பிரதாப் தேவியை விட ஜந்து வயது பெரியவன்.

நேர்மையான அதிகாரியான சதானந்தனுக்கு சமூக விரோதிகளால் தினமும் தொல்லைகள் தொடர ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கினார்கள்.

சதானந்தனும் அவர் மனைவியும் காரில் போய் கொண்டிருக்கும் போது ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் வழிமறித்து சில ரவுடிகள் அவரையும் அவர் மனைவியையும் கடுமையாகத் தாக்கி விட அதில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைத்து காரோடு அவர்களைக் கொளுத்த நினைக்க அதைப் பார்த்த பதினைந்து வயது சிறுமியான தேவியோ கூச்சலிட்டு ஊரையே கூட்டி விட பிறகு அந்த ரவுடிகள் தப்பித்தால் போதும் என்று ஓடி விட சதானந்தனும் அவர் மனைவியும் உயிர் பிழைத்தார்கள். அதற்கு நன்றியாக அவளுக்கு பண உதவி செய்ய அவர்கள் எவ்வளவோ முன்வந்தும் இதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தவள் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்க

பதினைந்து வயது பெண்ணாக இருந்தாலும் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது அரசாங்கத்துக்கு எதிரான குழந்தைத் தொழிலாளர்கள் என்ற வரையறையில் சேர்ந்துவிடும் என்பதால் சதானந்தன் ஒரு கலெக்டராய் முடியாது என்று மறுக்க,

“ஐயா! பாஞ்சி வயசு பொண்ணா நான் படிக்கப் போவாம, ஊதாரியா சுத்துற பெத்தவங்களுக்கு வேலைக்கு போய் சம்பாதிச்சி குடுத்துகினா தான தப்பு? அத்தான கொயந்த தொயிலாளர்? நான் ஒன்னியும் அப்டி செய்லியே? நான் இஸ்கூலுக்கு போய்ட்டு வந்த அப்பால நேரத்துல தான வேலை செஞ்சிகிறனு சொல்றன்? என் நைனாவோட கால் நல்லா இருந்தாங்காட்டி நான் ஏன் வேலைக்கு வரப் போறனு எல்லாம் கேட்டுக்க மாட்டேன். அவர் கால் நல்லா இருந்தா காட்டி கூட நான் வேலை கேட்டுகினு வந்திருப்பன்.

எனுக்கு வேண்டியத வாங்கறதுக்கு நான் தான சம்பாதிச்சிகனும்? வெளிநாட்டுல படிக்க சொல்லோ வேலைக்குப் போய்க்குவாங்களாமே! அவங்களுக்கு வோண்டியத அவங்களே பாத்துக்குவாங்களாமே?” என்று அதை மேற்கோள் காட்டிப் பேசியவள் “இங்க கீற பசங்க கூட அப்டி போறத்து தான் நல்லது. அப்டி செஞ்சிகினா தான் உயப்போட அருமையும் அத்தால வர்ற துட்டோட மதிப்பும் இன்னும் பெத்தவங்க பட்டுகிற கஸ்டமும் தெரியும்னு சொல்றீங்கோ!

ஆனா அத்த செய்யறதுக்கு வர்ற எங்களாண்ட மட்டும் ஏன் கொயந்த தொயிலாளர்கள்னு செய்ய வுடாம தடுத்துக்கிறீங்க?” என்று தேவி அவரை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க

ஒரு சேரிப் பெண் இந்த பதினைந்து வயதிலேயே கலெக்டரான தன்னிடமே வெளிநாட்டில் வாழும் வாழ்க்கை முறையைச் சுட்டிக் காட்டி வாதிடவும் வாயடைத்துப் போனார் அவர்.

இதையெல்லாம் பார்த்த மைதிலியோ தனக்கு ஒரு மகள் இருந்தால் இப்படித் தானே தன் கணவனிடம் வாதாடுவாள் என்று பூரித்தவரோ அவளை வாரி அணைத்துக் கொண்டார். அப்படி இந்த வீட்டுக்கு வந்தவள் தான் தேவி.

வெளியூரில் ஏரோநாட்டிக் படிப்பு படித்துக் கொண்டிருந்த பிரதாப் ஒரு முறை விடுமுறையில் வீட்டுக்கு வர அங்கு பாவாடைச் சட்டையில் சென்னைத் தமிழில் பேசி வளைய வந்த தேவியை முதலில் ஒரு அசுவாரசியத்துடன் அவளைப் பார்த்தவன் பிறகு நீ எட்டியே இரு என்ற விலகலுடனே இருக்க, அதெல்லாம் கொஞ்ச நாள் தான். திரும்ப அவன் ஊருக்குப் போனதிலிருந்து அவனுக்கு தேவியின் சிரிப்பு, பேச்சு, அவளுடைய முகம் என அவனை இம்சிக்க அவளைக் காண வேண்டும் என்றே அடிக்கடி விடுமுறையில் வீட்டுக்கு வந்து போனான். அதன் விளைவு அவளை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தான் பிரதாப்.

வீட்டில் நுழைந்து அனைத்தையும் சரிபார்த்தவள் அடுத்து சமையல் வேலை செய்யும் காளியம்மாவிடம் வந்த தேவி

“ஐய்ய காளி, உனுக்கு அறிவு கீதா? எத்தினி தபா சொன்னாலும் ஏன் தான் நீ கேட்டுக்க மாட்ற? கலெக்டர் ஐயாவுக்கு சக்கர போட்டுக்காத சத்துமாவு கஞ்சி வெக்கணும் அம்மாவுக்கு காப்பி நம்ம சின்ன ஐயாவுக்கு பாதாம் பாலுனு அல்லாத்தையும் அல்லாருக்கும் வெக்க சொன்னா நீ பெரிய ஐயா கஞ்சில சக்கரய கலந்து வெச்சி கீற. அம்மா காலில குடிக்கற டீ ய இப்போ போட்டு வச்சி கீற. ஏன் காளி இப்டி அல்லாத்தையும் மாத்தி மாத்தி செஞ்சி கீற?”

“நான் இன்னா செய்ய தேவி? இன்னிக்கி ராவுக்கும் குடிச்சிகினு வந்து என் வூட்டுக்காரன் இன்னாத்த பண்ணுவானோனு ஓசனையாவே கீது. அப்பால எப்டி எனுக்கு இங்க வேலை ஓடும்?” என்று அந்த காளி கண்ணைக் கசக்க

“அடி போடி.. நான் எத்தினி தபா சொல்லிக்கினேன்? என் பேச்ச கேட்டுக்கினியாடி? என்னங்காட்டியும் நீ அஞ்சி மாசம் தான் பெரியவ. இத்தெல்லாம் கல்லாணம் பண்ணிக்கிற வயசா? ஒயிங்கா படிடினு சொன்னா கேட்டுக்காம காதல் முக்கியோம்னு கல்லாணம் பண்ணிக்கின இல்ல? இப்போ பாரு டெய்லி கண்ணக் கசக்கிகினு நிக்கிற! அத்தோட்டு தான் அவசரப் பட்டுக்கக் கூடாதுனு பெரியவங்க சொல்லிக்கினாங்க” என்று அவளுக்கு அறிவுரை சொன்னவள் கூடவே அவரவர்களுக்கு வேண்டியதைச் செய்து டிரேயில் வைத்து

“இந்தா இத்த எடுத்துகினு போய் சாப்பாட்டு மேசையில வை” என்றவள் அந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்க
அதை வாங்கிய காளியோ நகராமல் அதே இடத்திலேயே நிற்கவும்

“ஐய இன்னாத்துக்கு இன்னும் நின்னுனுகீற?…..” என்று கேட்க ஆரம்பித்த தேவியோ அங்கு சமையலறை வாசலில் ஆறடிக்கு சற்றே ஒரு பிடி உயரமாக நல்ல சிவந்த மேனி அலை அலையான கேசம் கலையான முகம் முறுக்கேறிய ஜிம் பாடி. இப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போல! அவன் உடலில் அடித்திருந்த பாடி ஸ்பிரேவே அதைச் சொல்ல தான் அணிந்திருந்த கை இல்லாத டீ ஷர்ட்டில் மார்பின் குறுக்கே இரண்டு கைகளையும் கட்டியபடி நிலைப் படியில் சாய்ந்து நிற்கும் தோரணையே போதும் பார்ப்போர் யாரும் அவனை அழகன் என்று ஒத்துக் கொள்ள! அதிலும் மீசை இல்லாமல் இருக்கும் அவனை ஒரு வடநாட்டு ஹீரோ என்றே அனைவரும் அடித்துச் சொல்வர்.

அப்படி அங்கு நின்றிருந்தது வேறு யாரும் இல்லங்க, நம்ம பிரதாப் தாங்க!

காளி வாசல்படியை நெருங்கவும் ஒதுங்கி அவள் போக வழி விட்டவன் அவள் பின்னாலேயே போக நினைத்த தேவிக்கு மட்டும் வழி விடாமல் அவன் வழி மறித்து நிற்க, தேவிக்கோ டென்ஷனில் கை கால்கள் எல்லாம் சில்லிட ஆரம்பித்தது. இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தன் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் அவள்.

யாருக்கும் பயப்படாத தேவி கூட சற்றே பயப்படுவது இல்லை இல்லை அது பயம் கூட இல்லை சற்றே அடங்கிப் போவது பிரதாப்புக்கு மட்டும் தான். ஆனால் அவன் அவளை அடிக்கவோ திட்டவோ மாட்டான். அதிக பட்சம் அவள் தலையில் கொட்டுவதோட சரி. இதோ இப்போது கையைக் கட்டிக்கொண்டு அசராத பார்வை பார்க்கிறானே அந்த பார்வை ஒன்றே போதும் அவள் அடங்கிப் போக. இன்று நீ செய்த தவறை நீயே சொல் என்பது போல் அவன் பேசாமல் நிற்கவும்

“சொம்மா சொம்மா ரொம்பத் தான் மெரட்டினுகீறாரு இவரு! நான் இன்னா பண்ணிக்கினேன்? சின்ன வயசுலோ இருந்து நான் பேசினுகீற பாஷை! அத்த திடீர்னு வுடச் சொன்னா எப்டி முடியும்? அத்த புரிஞ்சிக்காம எப்போ பாரு மொறச்சினு கீறாரு. படா பேஜாரா கீது இவராண்ட… அட போங்க பா! இன்னைக்கு நான் ஜகா வாங்கிக்க மாட்டேன். நானா அவுரானு ஒரு கை பாத்துக்கலாம்!” என்று மனதில் நினைத்தவளோ பின்பறம் திரும்பி மேடையை ஒழுங்கு பண்ண, ஆனால் அவனோ ‘நீயும் எவ்வளவு நேரம் தான் இருப்பேனு பார்க்கறேன்’ என்ற படி பிடிவாதமாக நின்றான்.

அட! இவங்க இரண்டு பேரும் இப்படி முட்டிகிட்டு நிற்க நடந்த பிரச்சனை தான் என்ன?

எப்போது பிரதாப் அவளைக் காதலிக்க ஆரம்பித்தானோ அப்போதே இவள் தான் என் வருங்கால மனைவி என்ற முடிவில் இருந்தான். அதற்காக அவளிடம் தவறாக பேசவோ நடக்கவோ ஏன் இன்று வரை அப்படி ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை. ஆனால் அவள் தான் கடைசி வரை என்பதில் உறுதியாக இருந்தவனோ தன்னுடைய படிப்புக்கும் அந்தஸ்துக்கும் ஏற்ற மாதிரி அவளை மாற்ற நினைக்க நடை உடை பாவனை என்று எல்லா விதத்திலும் மாறிய தேவியால் அவள் சேரி தமிழை மட்டும் மாற்ற முடியவில்லை.

அவன் சொல்வது போல் வெளி இடத்தில் கொஞ்சமே கொஞ்சமாக மாறினாலும் தன் சேரி மக்களிடமோ இல்லை தன் உறவுகளிடமோ அவளால் அப்படி பேசாமல் இருக்க முடியவில்லை. இப்போது கூட அவள் குப்பத்து ஆளான காளியிடம் அப்படி பேசி தான் இவனிடம் இப்படி மாட்டிக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் தான் அவளால் இல்லாத வேலையை செய்வதாகவே நடிக்க முடியும்? அவன் இப்போதைக்கு தான் வாயைத் திறக்காமல் நகர மாட்டான் என்பதை அறிந்தவளோ சுடிதார் துப்பட்டாவால் தன் இரு கைகளைத் துடைத்த படியே நங் நங் என்று தரையில் தன் பாதம் பதிய கொஞ்சம் கோபத்துடன் அவன் முன் வந்து நின்றவளோ

“இப்போ இன்னா நான் செஞ்சிகினது தப்பு தான்! ஒத்துக்கிறன்.. அதுக்காண்டி சொம்மா சொம்மா என்ன மொறைக்காதிங்க. பொறந்ததுல இருந்து பேசினு கீற பாஷை! ரவ ரவையா தான் மாறும். அதுக்கு ரவ இல்ல நெறயவே டைம் குடுங்க சார்…” என்று அவள் முடிக்கக் கூட இல்லை.

ஆரம்பத்திலிருந்து அவள் செய்கையையும் பேச்சையும் ஒரு வித சுவாரஸ்யத்துடன் பார்த்து இருந்தவனோ இப்போது நங் என்று அவள் தலையில் கொட்ட வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் பல இரும்பு தட்டுகளைக் கம்பியில் கோர்த்துத் தூக்கியவனின் கையால் ஒரு கொட்டு என்று வாங்கினால் அது சாதாரண கொட்டாகவா இருக்கும்?

அவளுக்கு வலியில் தன்னை மீறி கண் கலங்கி விட்டது. அப்போது தான் தான் செய்த மற்றொரு தவறை உணர்ந்தவள் வலித்த தன் தலையை தடவிக் கொண்டே ஒரு கண் மூடித் தன் நாக்கை சிறிதாக நீட்டி அதை மேல் இதழில் பதிய “ஸ்ஸ்ஸ்…” என்று முனங்கியவளோ பிறகு “சாரி பிரதாப்” என்று சொல்ல

“உனக்கு ஒவ்வொரு முறையும் நான் சொல்லிட்டே இருக்கணுமா? நீ பேசுற பாஷையாவது மாற கொஞ்ச நாள் ஆகும்னு சொன்ன! விட்டுட்டேன். ஆனா என் பெயர் சொல்லி கூப்பிடணும்னு நான் சொன்னத விட்டுக் கொடுக்க முடியாது. ஒழுங்கா இந்த சார் மோர் எல்லாம் விட்டுட்டு பிரதாப்னு கூப்பிட்டுப் பழகு” என்று அவன் குரலை உயர்த்தாமலே கட்டளை இட சரி என்று தலை ஆட்டினாள் தேவி.

வந்த புதிதில் சின்ன ஐயா என்று அழைத்தவளைப் பிறகு நாகரீகம் என்ற பெயரில் ஸார் என்று கூப்பிட வைத்தவனோ இப்போதும் அதே நாகரீகத்தை சொல்லியே அவளைத் தன் பெயர் சொல்லி கூப்பிட வைக்கிறான் அவன். அப்படி கூப்பிட்டாலாவது தன்னிடம் ஒரு வித நெருக்கம் ஏற்படாதா என்ற எண்ணம் பிரதாப்புக்கு.

“இன்னும் ஏன் இங்கேயே நிற்குற? இன்றைய பாடத்த படிக்கணும்னு உனக்கு எண்ணம் இன்னும் வரலையா? சீக்கிரம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன கொடுக்கணுமோ கொடுத்துட்டு உனக்கான சத்துமாவு கஞ்சி எடுத்துட்டு ஸ்டடி ரூம் வந்து சேரு” என்று சொல்லி அவள் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து விலகிச் சென்றான் பிரதாப்.

நன்றாகப் படித்த தேவி பனிரெண்டாவதில் பள்ளியிலேயே முதல் மாணவியாக மதிப்பெண் எடுத்திருக்க அவளைத் தன்னை போல் கலெக்டராகப் படிக்கத் தூண்டினார் சதானந்தன். மைதிலியோ அவளை ஒரு லெக்சரராக பார்க்க ஆசைப் பட்டார். ஆனால் பிரதாப்போ அவளுக்கு விருப்பப் பாடமான விண்வெளி ஆராய்ச்சித் துறையை படிக்க வைக்க நினைத்தான். அது உண்மை தான்! தேவிக்கும் அதைப் படிக்க தான் ஆசை. அப்படி ஒரு ஆசை அவளுக்கு வந்ததும் பிரதாப்பால் தான்.

சிறுவயதிலிருந்தே பிரதாப் தான் செய்த பிராஜெக்ட்களை பொக்கிஷமாக வைத்து பாதுகாப்பான். அதெல்லாம் இன்று வரை அவன் ஸ்டடி ரூமில் இருக்கும். அந்த அறையைச் சுத்தம் செய்யும் போது எல்லாம் தேவி காகித அட்டைகளால் ஆனா சாட்டிலைட் மற்றும் விண்வெளி புகைப்படங்களை எல்லாம் பார்த்து வியந்தவள் அது தொடர்பான கேள்விகளைப் பிரதாப்பிடம் கேட்டு அறிய அவள் ஆர்வத்தைப் பார்த்தவனோ தினமும் மாலை நேரத்தில் அதற்கான வகுப்புகளை அவளுக்கு எடுக்க ஆரம்பித்தான்.

இப்போது கூட அது சம்பந்தமாகச் சொல்லிக் கொடுக்கத் தான் அவளை ஸ்டடி ரூம் வரச் சொன்னது. இப்படி என்ன தான் அவள் ஆசைக்குத் துணையாக இருந்தாலும் சரி அதற்காக எல்லாம் அவளை எடுத்த உடனே அந்த துறைக்கான படிப்பை அவன் படிக்க வைக்க வில்லை. முதலில் கம்ப்யூட்டர் சம்மந்தமான டிகிரியை அவள் முடித்த பிறகு அவளைத் திருமணம் செய்து தன்னுடைய மனைவியாய் அவள் ஆன பிறகு அவளைப் அந்த படிப்பை படிக்க வைக்க நினைத்தான்.
அந்த துறை சம்பந்தப் பட்ட படிப்புக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே செலவாகும் என்னும் போது அதற்கான செலவை இப்போது செய்தால் நிச்சயம் தேவி ஒத்துக் கொள்ள மாட்டாள். அதனால் தான் அவளை உரிமை உள்ளவளாய் ஆக்கிய பிறகு படிக்க வைக்க நினைத்தான் அவன்.
அதே போல் இந்த படிப்பு பற்றிய கனவுகளை வெறும் ஆசை என்ற வரையில் இருந்ததை லட்சியம் என்று அவளுக்குள் மாற்றியவனும் பிரதாப் தான்
அதனால் தானோ என்னவோ யாரிடமும் அதிகம் பேசாத தேவி கூட பிரதாப்பிடம் கொஞ்சம் உரிமை கலந்த கெஞ்சலுடன் பேசுவாள். தாம் தான் வீட்டில் பெரியவள் என்பதால் தன்னை விட பெரியவனான பிரதாப்பை ஒரு உடன்பிறவா சகோதரனாக வழி நடத்தும் குருவாக உற்ற தோழனாக நினைத்தது அந்த இருபது வயது தேவியின் மனது. இப்படியே இருவரும் அவரவர் எண்ணத்தில் சென்று கொண்டிருக்க

தேவியின் வாழ்வில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போனாலும் இந்த பத்து வருடம் ஆகியும் அவளால் மறக்க முடியாத ஒரே விஷயம் சிற்பி அவளிடம் அப்படி செய்ததைத் தான்! அதிலும் அந்த தெருப் பக்கம் வரும் போது எல்லாம் அவள் உடல் கூச கொஞ்ச நேரம் இரும்பென இறுகிப் போய் விடுவாள் அவள்.

இன்று விடுமுறை என்பதால் காலையிலேயே அவள் அந்த தெருப் பக்கமாக வர அங்கிருந்த டீ கடை ஒன்றில் ஏழெட்டு ஆண்கள் அமர்ந்திருக்க அதில் ஒருவனுடைய கைப்பேசியில் இருந்து
ல ல ல ல ல ல ல ல....
ரவி வர்மன் எழுதாத கலையோ...
ஹா ஹா ஹா
ரதி தேவி வடிவான சிலையோ...
ஹா ஹா ஹா
கவி ராஜன் எழுதாத கவியோ....
கரை போட்டு நடக்காத நதியோ...
ஓ ஓ ஓ ஓ...
ம்ம்ம்ம்ம்ம்ம்......
ரவி வர்மன் எழுதாத கலையோ...
ஹா ஹா ஹா
என்ற பாடல் ஒலிக்க அதை கேட்ட தேவியின் உடலோ விரைத்தது.

“இவனுங்களுக்கு இதே பொயப்பா பூட்சி! நான் போ சொல்லோ வர சொல்லோ அல்லாம் எத்தா ஒரு பாட்ட போட்டு என்ன கலாய்காகிறானுங்கோ சோமாரிப் பசங்க.. இவனுங்க அல்லாரையும் தூக்கிப் போட்டு மெரிக்கணும் போல கீது!” என்று கோபம் தலைக்கேற முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை கடக்க நினைத்தாள் தேவி.

தேவிக்கு சிறு வயதிலிருந்தே கண் மண் தெரியாமல் தன்னை மீறி கோபம் வரும் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும். ஒன்று அவள் தாய் செய்த செயலுடன் அவளை சம்பந்தபடுத்திப் பேசினாலோ அல்லது வாலிபப் பையன்கள் சீண்டினாலோ அவளுக்குக் கோபம் வரும். பருவ வயதில் பெண்களைச் சீண்டுவது சகஜம் என்றும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் அந்த வம்பு செய்யும் பையன்கள் விலகி விடுவார்கள் என்பது எதுவும் தேவிக்குத் தெரியவில்லை.

அவள் தாயின் நடத்தை அவளை சகஜமான வாழ்வில் இருந்தே தூர நிறுத்தி வைத்தது. தேவிக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே ஒல்லியான உடல்வாகு. ஏதோ எலும்புக் கூட்டில் ஒரு போர்வையைப் போர்த்தினால் போல இருப்பாள்.

பிரதாப் கூட காற்று மழைப் புயலில் அடிக்கடி வெளியே போகாதே என்று சீண்டுவான். ஒருசில நாளில் இன்னும் ஒரு படி மேலே போய் பேராஷூட்டில் உனக்குப் பறக்க ஆசையா என்று கேட்டு அவளிடம் குடையைக் கொடுத்து காற்று வேகமாக வரும் திசையில் நிற்கச் சொல்வான்.

பிரதாப் மற்றும் கூட படிப்பவர்கள் என்ன சொன்னாலும் சிரித்த முகமாக விலகிப் போகும் அவளால் அதே சில குப்பத்துப் பசங்கள் சீண்டினால் மட்டும் அமைதி காக்க முடியவில்லை.

ஒரு நாள் அப்படித் தான். ஃபிப்டி கேஜி தாஜ்மஹால் என்க்கே எனக்கா என்று ஒரு தடியன் பாட நேரம் பார்த்து அவனுக்கே தெரியாமல் மறைவாக நின்று கல்லால் அவன் மண்டையை உடைத்தாள் தேவி.

மற்றொரு நாளும் இப்படித் தான்.
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா… என்று வேறு ஒருவன் பாட, இம்முறை நேருக்கு நேர் நின்று அவன் சட்டையைப் பிடித்து அவனை துவைத்து எடுத்து விட்டாள் அவள்.

ஆனால் இவள் இப்படி நடந்து கொள்வதால் தான் அவளை எல்லோரும் சீண்டுகிறார்கள் என்பது பாவம் அவளுக்குத் தெரியவில்லை. அப்படி தன் மெல்லிய தேகத்தை வைத்துப் பேசியவர்களையே சும்மா விடாத தேவி இப்போது அவள் பெயரையே பாட்டாகப் பாடினால் சும்மா இருப்பாளா?

அவள் அந்த டீ கடை பெஞ்சை நெருங்கும் போதோ
ரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...
விழியோரச் சிறுப் பார்வை போதும்...
நான் விளையாடும் மைதானம் ஆகும்...
இதழோரச் சிரிப்பொன்று போதும்...
நான் இளைப்பாரும் மலர் பந்தல் ஆகும்...
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே...
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே...

என்ற வரிகளை தேவியை விடச் சின்ன வயதுப் பையன் பாடிக்கொண்டிருக்க அதை கேட்டவளோ இன்னும் உக்கிரமாக அவனை நெருங்கி அவன் அமர்ந்திருந்த பெஞ்சை எட்டி உதைக்க, அவனோ “ஐயோ வர்மான்னா!” என்ற கூச்சலுடன் தலை குப்புற கீழே விழுந்தான்.

அவன் சாதரணமாக விழுந்திருந்தால் கூட தேவி ஐயோ பாவம் என்று விட்டிருப்பாளோ என்னமோ? அவன் சொன்ன வர்மா என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்பு ருத்ர தேவியாக நின்றவளோ இப்போதும் அதே போல் மாறி கீழே விழுந்த அவன் நெஞ்சின் மேல் தன் வலது காலைத் தூக்கி வைத்தவளோ

“யாரு? அந்த இடி மாடு தான் உன் அண்ணாத்தையா? எங்க இப்போ வரச் சொல்லு பாப்போம் உன் நொண்ணாவ!” என்றவள் அவன் சட்டையைக் கொத்தெனப் பிடித்தவளோ கூடவே அவனை அறைய கை ஓங்க, அதே நேரம் அவள் கையைப் சட்டெனப் பிடித்தது ஒரு ஆண் கரம். கூடவே அவள் கையைப் பிடித்து முறுக்கியவனோ

“ஒரு ஆம்பளப் பையன அடிக்க நீ கை ஓங்கினதே தப்பு. இதுல உன்ன விட சின்னப் பையன் நெஞ்சில கால வைக்கிறியா? மரியாதையா காலை எடு டி!” என்று அவன் முதல் முறையாக பார்க்கும் பெண்ணை ஏக வசனத்தில் மிரட்ட, சும்மா விடுபவளா தேவி?

“நீ யார் டா அத்த சொல்ல? உன் சோலியப் பாத்துகினு போ. இல்லாங்காட்டி அந்த இடிமாடு வர்மாவ இஸ்துகினு வா. அவனாண்ட நான் பைசல் பண்ணிக்கறதுக்கு கணக்கு ஒன்னு கீது” என்று அவள் பெண் சிங்கம் என கர்ஜிக்க
கையைப் பிடித்திருந்தவனின் புருவங்களோ சற்றே மேலேறி நெற்றி சுருங்க யோசனையைக் காட்டியது

“இன்னா நான் சொல்றது பிரியல? இப்போ கூவுனானே ஒரு பேரு வர்மானு! அந்த இடிமாடு வர்மாவ இட்டாந்துடு. நானும் பத்து வருசமா அவனத் தான் தேடினு கீறேன்” என்று அவள் அதே பிடியிலேயே நிற்கவும்

“நான் தான் டி அந்த வர்மா!” என்று சற்று அழுத்தி நிதானமாகச் சொன்னான் அவள் கையைப் பிடித்திருந்தவன். உண்மை தான்! அன்று தேவியிடம் அடி வாங்கித் திரும்ப அவளுக்கு ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்த அதே சிற்பிவர்மன் தான் இப்போது தேவியின் கண்ணெதிரே அவள் கையைப் பிடித்து கொண்டிருக்கும் வர்மன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN