சுவாசம் - 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 5

ஒரு பெண் அழுதால் ஆயிரம்
கைகள் துடைக்க நீளும்...
ஒரு ஆண் அழுதால் அவன்
கைகள் மட்டுமே துடைக்க நீளும்,
தன்னை தேற்றிக் கொள்ள
தெரிந்தவன் தான் ஆண்...

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் உறவுகளையும் மீறி நிறைய பேர் அறிமுகம் ஆவார்கள். அதில் சிலரை ஐயோ இவர்களை முன்பே நாம் பார்த்திருக்கலாமே என்றோ இன்னும் ஒரு சிலரை கடைசி வரை இவர்கள் முகத்தில் முழிக்கவே கூடாது என்றோ நினைப்பது மனித இயல்பு. ஆனால் விதியின் வழியை யார் அறிவரோ??...

தான் முதல் முறையாக பார்த்ததிலிருந்து கெட்டவனாகவே தோன்றிய சிற்பியைத் தேவி சந்திப்பாளா? அப்படி சந்தித்தால் மேலே சொன்ன இரண்டில் அவனை எதுவாக பார்க்க வைக்கப் போகிறது அவளின் விதி.

அதைப் போல் தன்னைச் சந்தித்த நாள் முதல் இன்று வரை தன்னைத் தப்பானவனாகவே நினைப்பது மட்டுமில்லாமல் இன்று தன்னை ஜெயிலுக்கே அனுப்பிய தேவியை சிற்பி மன்னிப்பானா இல்லை காலம் போன போக்கில் விட்டு விடுவானா..

மூன்று வருடங்கள் கழித்து..

கலெக்டர் பங்களா ..
இருண்ட தன் அறையில் ஸோஃபாவில் நீண்ட நாட்களாக வெட்டப் படாத தலைமுடியில் இருந்து முகத்தில் மீசை தாடி என்று வளர்ந்திருக்க உடல் மெலிந்து போய் கண்ணுக்குக் கீழே கருவளையத்தோடு கண்ணில் உயிர்ப்பே இல்லாமல் ஸோஃபாவில் தலை சாய்த்து விட்டத்தை வெறித்த படி அமர்ந்திருந்தது சாட்சாத் நம்ம பிரதாப்பே தான்!

அப்போது கவலை தோய்ந்த முகத்துடன் அவன் அறைக்கு வந்த மைதிலி அங்கிருந்த திரைச்சீலைகளை விலக்கி அறை விளக்கைப் போட்டவர் மகன் பக்கத்தில் அமர்ந்து அவன் தலை முடியைக் கோதியவரோ

“பிரதாப்! என்ன பா நீ? தினம் தினம் இப்படியே இருந்தா எப்படி? தேவிக்கு ஆறுதலா இருக்க வேண்டிய நீயே இப்படி ஒடஞ்சி போய் உட்கார்ந்தா பிறகு அவள யார் பார்த்துக்கிறது? என்ன தான் நீ அவ எதிர்ல தைரியமா இருந்தாலும் இப்படி தனியா வந்து மருகுறியே டா!

ஒரு தாயா இப்படி உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது என் மனசு என்ன பாடுபடும்னு கொஞ்சமாவது நினைச்சிப் பாரு பிரதாப். எப்போதும் தேவிய நான் என் மகளா தான் பார்த்திருக்கன். இனிமே அவள என் மருமகளா பார்த்துக்கறன். போடா.. போய் சீக்கிரமா அவ கிட்ட பேசி அவள இங்க கூட்டிட்டு வாடா” என்று மைதிலி குரல் தழுதழுத்துப் போய் மகனிடம் கெஞ்ச

வந்ததிலிருந்து அவர் முகத்தைக் கூட பார்க்காமல் அமர்ந்திருந்தவனோ அவர் சொன்ன கடைசி வார்த்தையில் அடிபட்ட குழந்தையின் தவிப்போடு அவன் தாயின் முகத்தைப் பார்க்கவும் அதில் தவித்தவளோ

“என்ன பிரதாப் பண்றது? அன்னைக்கு நாம பேசி வச்ச மாதிரியே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருந்தா இந்நேரம் தேவி உன் மனைவியா இருந்திருப்பா! அதற்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் அவளுக்கு நடக்க நாம விட்டிருக்க மாட்டோம்.

அப்படியே மீறி நடந்திருந்தாலும் நிச்சயம் என் மருமகள நான் விட்டிருக்க மாட்டேன். விதி என்ற பெயர்ல உங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் இப்படி ஆகும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பார்க்கலையே பிரதாப்!” என்று மைதிலி கண்ணீர் விட, தாயின் கண்ணீரைப் பார்த்ததும் அவர் மடியில் தலை சாய்ந்தவனோ

“அம்மா அழாதிங்க.. அழாதிங்க மா. எனக்கு ஆறுதலா இருக்கற நீங்களே இப்படி உடைஞ்சி போய்ட்டா பிறகு நான் எப்படி மா தைரியமா இருக்கறது?” என்று தழுதழுத்த குரலில் அவன் கேட்கவும்

“இல்ல ராஜா! இனி நான் அழல.. அப்பவும் இப்பவும் நான் சொல்ற விஷயம்னா அது நீ சீக்கிரம் தேவி கிட்ட பேசி அவளக் கல்யாணம் பண்றது தான். அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த அம்மாவுக்காக செய் டா”

“எப்படி மா? எப்படி என்னை அதை செய்யச் சொல்றீங்க? தேவி இப்போ இருக்கற நிலையில என்னால அவ கிட்ட நெருங்கக் கூட முடியலையே மா! பிறகு எங்க நான் அவளக் கல்யாணம் பண்ண? மனசு முழுக்க ஆயிரம் ஆயிரம் காதல அன்ப பாசத்த நேசத்த அவ மேல நான் வச்சிகிட்டு இருக்கன் மா. அதை எல்லாம் அவ புரிஞ்சிக்காம நான் ஏதோ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கறதா நினைச்சா அதை என்னால தாங்கிக்கவே முடியாது மா!” என்று குமுறியவன்

“அதனால அவள நான் இப்படியே விடவும் மாட்டேன். அவ தான் என் மனைவி. எனக்கு இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க மா. இப்போ தான் அவ தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனே புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கா. சீக்கிரமே நான் நேரம் பார்த்து அவ கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கறேன் மா” என்று அவன் உறுதிபடச் சொல்லவும் மகனின் தலையை வருடியவளோ

“செய் பா.. அதைச் சீக்கிரம் செய். இப்போ சாப்பிட வாடா” என்று சொல்லி விடாப்பிடியாக அவனை அழைத்துச் சென்றார் மைதிலி.

அங்கு தேவி வீட்டில் காலை நேர பரபரப்பு எதுவும் இல்லாமல் ஏதோ கடமைக்கென்று அவரவர் தன் வேலைகளைப் பார்க்க மருந்துக்குக் கூட அங்கிருந்தவர்கள் யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை. சின்ன வயதிலிருந்தே அறிவுமதி அமைதியானவள் தான். எண்ணி ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசுவாள்.

இப்போதெல்லாம் அது கூட இல்லை. அவள் சமையலில் ஏதோ வேலையாக இருக்க அடுத்தவள் அமுதரசியோ திறந்த வாயை மூடாதவள் ஆனால் இப்போதெல்லாம் வாயே திறப்பதில்லை. அவளும் அறிவுக்கு உதவியாக இருக்க இதில் அந்த வீட்டில் முன்பு போல் சகஜமாக இருக்கும் ஒரே ஆள் கதிர் மட்டும் தான்.

அவன் தன் படிப்பில் கவனமாக இருக்க இவர்களின் தந்தை கந்தசாமியோ காலையிலேயே பீடி சுருட்டும் தன் வேலையில் மும்முரமாக இருக்க அந்த நேரம் பார்த்து அந்த வீட்டின் மவுன நிலையைக் கலைத்தது நடுக்கூடத்தில் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத கைக் குழந்தையின் வீல் என்ற அழு குரல்.

அந்த சத்தத்தில் அறிவு தன் கையிலிருந்த பாத்திரத்தை நழுவ விட அமுதரசியோ இப்போது என்ன செய்வது என்பது போல் கையைப் பிசைந்து கொண்டிருக்க, கதிர் எழுந்து வந்து தொட்டிலை ஆட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த நினைக்க, ஆனால் அந்தக் குழந்தையோ அழுகையை நிறுத்தின பாடில்லை.

குழந்தை பசிக்காகத் தான் அழுகிறது என்பதை அறிந்த கந்தசாமியோ “எம்மா அறிவு! பாப்பா பசிக்கு அயிவுது பாரு. ரவ பால் எடுத்துகினு வா. அமுது! என் கை கயிவ ஒரு குண்டான்ல தண்ணி மொண்டுகினு வா. அதுக்கு முந்தி கதிரு! இந்த பீடி கட்ட அல்லாம் எடுத்து அப்பால வைய்” என்று கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் தன் பிள்ளைகளுக்கு வேலை இட அனைவரும் அவர் சொன்னதைச் செய்தனர்.

அறிவு, தந்தை கேட்ட பாலை ஒரு கிண்ணத்தில் கொடுத்தவள் கூடவே தந்தை சொல்லாமலே தூளியிலிருந்த குழந்தையைத் தூக்கி அவர் மடியில் படுக்க வைக்க அன்று தேவி ஒரு மாத குழந்தையாய் இருந்த கதிருக்கு எப்படி ஸ்பூனால் பால் புகட்டினாலோ அப்படியே அவர் இன்று அந்தக் குழந்தைக்குச் செய்யப் போக, அதே நேரம் திடீரென்று ஓடி வந்து அவர் முன் மட்டியிட்டு அமர்ந்த கதிரோ

“வேணா நைனா.. அந்த பால பாப்பாக்கு குடுக்காத” என்று சொல்லித் தடுக்கவும்

“ஏன் டா வோணான்ற?”

“இப்டி மாட்டுப் பால் குடுத்தா அப்பால பாப்பாக்கு நோவு எதிர்ப்பு சத்து இல்லாம பூடுமாம். பக்கத்து வூட்டு அக்கா சொல்லிக்கினாங்க. அத்தால இத்த குடுக்க வேணாம். நான் அக்காவ பால் குடுத்துக்கச் சொல்றன்” என்றவன் தந்தையின் பதிலுக்குக் காத்திராமல் அந்த பிஞ்சி மொட்டை பயத்துடனே தன் கையில் ஏந்தியவனோ அந்தக் கூடத்திலேயே ஒரு பகுதியில் புடவையை மறப்பாய் கட்டித் தொங்க விட்டிருக்க அந்த மறப்புக்குள் போனவன் எங்கோ வெறித்த படி குத்து காலிட்டு சுவரில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த தேவியை நெருங்கியவனோ

“எக்கா பாப்பா பசியில அயிவுது பார். இந்தா நீ பசியாத்து எக்கா” என்று குழந்தையை அவள் முன் நீட்ட, எதுவும் எனக்கு கேட்கவில்லை என்பது போல் தேவியோ அமர்ந்திருக்க இதுவரை பசிக்கு அழுது கொண்டிருந்த குழந்தையோ தாயின் வாசத்தை உணர்ந்தாலும் அவளுடைய கதகதப்பான கை இன்னும் தன்னைத் தீண்டவில்லை என்பதை அறிந்தவளோ அவள் அரவணைப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் பெருங்குரல் எடுத்து அழ,

அந்தக் குரல் தேவியை கொஞ்சமே கொஞ்சம் அசைத்ததோ என்னவோ! அதில் எங்கோ வெறித்திருந்தவளின் உடலோ ஒரு முறை தூக்கிப் போட தன் கண்ணிமைகளை அசைத்தாள் தேவி.

அவள் முட்டியின் மேல் குழந்தையைத் தான் பிடித்த படி வைத்தவனோ “எனுக்கு அம்மா இல்ல.. அத்தால நான் மாட்டுப் பால் குடிச்சிகினேன். பாப்பாக்கு தான் அம்மா நீ கீறியே க்கா! அப்பால ஏன் அது மாட்டு பால் குடிச்சிக்கனும்? உனுக்கு தெரியாத்து இல்ல.. அப்டி செஞ்சிகினா பாப்பா ஒடம்பு வீக்கா பூடும் இல்ல?” என்று கதிர் அவளை கேள்வி கேட்க அதற்குள் குழந்தையோ தன் தாயின் கழுத்து மார்பு என்று தனது பிஞ்சிக் கை காள்களால் உதைக்கவும் உடலில் ஒருவித சிலிர்ப்பு ஓட எந்த வித மறுப்பும் இல்லாமல் குழந்தையை வாங்கினாள் தேவி. இதையெல்லாம் சற்றுத் தூரயிருந்து பார்த்துக் கொண்டிருந்த அறிவோ

“கதிரு! உனுக்கு இஸ்கூலுக்கு டைம் ஆச்சி. நீ கெளம்பு” என்று சொல்ல அவன் விலகியதும் கையில் வெந்நீர் பாத்திரம் மற்றும் சுத்தமான துணியுடன் தேவியிடம் வந்தவள் இப்போதும் தேவி குழந்தையை மடியில் வைத்த படி எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கீழே படுக்க வைத்து விட்டு

பின் தேவியின் மாராப்பை விலக்க எங்கோ வெறித்திருந்த தன் பார்வையின் நிலையிலேயே தேவி தங்கையின் கையை இறுக்கப் பிடித்தவளோ பின் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து தானே தன் மார்பை அந்த வெந்நீரால் தங்கை கொண்டு வந்த ஆடை கொண்டு சுத்தம் செய்தவள் பின் கீழேயிருந்த குழந்தையைத் தூக்கித் தன் மடி மீது வைத்துப் பால் தர, இதெல்லாம் பார்த்த தங்கைக்குக் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.
கண்ணீருடன் தேவியின் தோளில் சாய்ந்தவளோ
“எக்கா… எக்கா…. நீ இப்டி இருக்கணும்னு தான நான் வேண்டிக்கினன்?” என்று அழுகையின் ஊடே சொன்னவள்

“அம்மு செல்லம்! நீங்கத் தான் அம்மாவ மாத்தினீங்களா சாமி?” என்று குழந்தையிடம் கேள்வி கேட்டவள் குழந்தை ம்ம்ம்…. என்று சப்புக் கொட்டி பால் குடிக்கவும் அதில் நெகிழ்ந்து போய் குழந்தையின் நெற்றியில் ஒரு முத்தத்தைத் தந்து விட்டுத் தன் சந்தோஷத்தை தந்தையிடம் சொல்ல ஓடினாள் அறிவுமதி.

ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுப்பதில் மற்றவர்களுக்கு என்ன பெரிய சந்தோஷம் இருக்க முடியும்? ஆனால் இவர்களுக்கு சந்தோஷம் தான்!

பத்து வயதிலிருந்து தன் குடும்பத்தைப் பார்த்துக் கொண்ட தேவிக்கு இன்று தன் தேவையையும் தன் மகளின் தேவையையுமே பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு அப்படி என்ன நடந்தது?

சிற்பியைப் போலீஸில் மாட்டி விட்ட பிறகு மூன்று வருடம் தேவியின் வாழ்வு சாதாரணமாகத் தான் போனது. கல்லூரி இளங்கலை முடித்தவுடன் மேற்கொண்டு முதுகலை படிக்கப் போகிறேன் என்று சொன்னவளை வேண்டாம் என்று தடுத்த பிரதாப் அவளை சிறிது நாட்கள் கணிணி ஆசிரியராக வேலை பார்க்கச் சொல்ல அதையே தட்டாமல் செய்தாள் தேவி.

மும்பையில் சுங்கத் துறையில் வேலை செய்த பிரதாப் எப்போதாவது சென்னை வந்து போக அதில் அதிகமாக தேவியின் அருகாமையை இழந்தவனோ தன்னுடைய பதவி உயர்வையும் அவள் படிப்பையும் ஒரே இடத்தில் வைக்க முடிவு செய்திருந்தான் அவன். அதனால் தேவியைத் தான் விரும்புவதாகப் பொற்றோரிடம் சொல்லி திருமணத்திற்குச் சம்மதம் கேட்க

ஏற்கனவே தனக்கு சந்தேகம் இருந்தது என்ற சொல்லுடன் அவன் விருப்பத்திற்குச் சம்மதித்தார் அவன் தாய் மைதிலி. ஆனால் பிரதாப்பின் அப்பா மட்டும் தேவியின் பின்புலத்தை நினைத்துக் கொஞ்சம் யோசிக்க அதையும் மகனின் விருப்பம் என்ற பெயரில் எதை எதையோ பேசி அவரையும் கரைய வைத்து சம்மதத்தை வாங்கினார் மைதிலி. அவருக்குத் தங்கள் இரண்டு பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

தந்தையிடம் சம்மதத்தை வாங்கிய பின் முழு வீச்சாய் தன் வேலையில் இறங்கி பதவி உயர்வை வாங்கியவன் தன் காதலை தேவியிடம் சொல்வதற்காக ஓடோடி வர

அவன் வருவதற்கு முந்தைய நாள் தேவி தான் படித்த கல்லூரியில் பழைய மாணவர்களுக்கான கூட்டம் ஒன்றில் பங்கேற்கப் போனவள் காணாமல் போய் விட எங்கு தேடியும் கிடைக்கவில்லை அவள். மறுநாள் காலையிலேயே வந்த பிரதாப்பும் அவளை எங்கெல்லாமோ தேட பலன் தான் இல்லை.

கல்லூரியில் விசாரித்ததில் எல்லோரும் எப்போதோ சென்று விட்டார்கள் என்ற பதில் தான் கிடைத்தது. அவள் நண்பர்கள் தெரிந்தவர்கள் அவள் எப்போதும் போகுமிடம் என்று ஒன்றையும் விடாமல் விசாரிக்க அவள் வந்ததற்கான தடயமே இல்லை என்றார்கள்.

‘கந்தசாமி அங்கிளோட பேச்சைக் கேட்டுப் போலீஸ்ல ரிப்போர்ட் தராமல் இருந்தது தப்பு. இனி போலீஸ் உதவியோட தான் தேவியைத் தேட வேண்டும்’ என்ற முடிவுடன் பிரதாப் காரை எடுக்க நினைக்க

“கலிகாலம் டா! சீக்கிரம் உலகம் அழியப் போறதுனு சொல்றது நிஜம் தான் போல.. சின்னப் பொண்ணு! என்னமா குடிச்சிட்டு குப்ப மேடு சாக்கடைனு கூட தெரியாம இல்ல விழுந்து கிடக்குது! இதுங்க எல்லாம் எங்க நாட்டுக்கு நல்லது செய்யப் போகுதுங்க?” என்று ஒருவர் சொல்ல

“அட ஆமா யா.. நீ சொல்றது சரி தான். இதுல அந்தப் பொண்ண அடிக்கடி கலெக்டர் வீட்டுல நான் பார்த்து இருக்கன் பா. இது தான் கொடுமையிலும் கொடுமை” என்று இரு பெரியவர்கள் பேச்சுவாக்கில் பேசிக் கொண்டு போக, அவர்கள் பேச்சு சுரீர் என்றது பிரதாப்புக்கு.

‘அது தேவியாக இருக்காது என்றாலும் யாராவது அவளை அப்படி செய்திருந்தால்?’ என்ற உள்ளுணர்வில் காரை விட்டு இறங்கி ஓடிச் சென்று பார்த்த பிரதாப்பின் இதயம் ஒரு வினாடி நின்று தான் போனது. அங்கு சாட்சாத் நிதானம் இல்லாமல் விழுந்து கிடந்தவள் தன்னுடைய வருங்கால மனைவியாய் பாவித்த அவனுடைய தேவி தான்! அவளைத் தூக்கித் தன் மடியில் போட்டவனோ

“தேவி மா! தேவி! இங்க பாருடா.. உன் பிரதாப் வந்திருக்கன். என்ன பாரு மா” என்று பலமுறை அவள் கண்ணத்தில் அடிக்க எதற்கும் அவளிடம் பலனில்லை. அவனுக்குக் கண்ணீரே வந்து விட்டது. நேற்றிலிருந்து காணாமல் இருந்தவள் கிடைத்து விட்டாள் என்று சந்தோஷப் படுவதா இல்லை இப்படி பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறாளே என்று வருந்துவதா?

எதுவும் புரியாமல் கண்ணீர் விட்டவன் அவளைத் தூக்கித் தன் காரில் போட்டு மருத்துவமனைக்குச் செல்ல வழியிலேயே தன் வீட்டுக்கும் தன் குடும்ப மருத்துவருக்கும் தகவல் சொல்ல இவன் கார் மருத்துவமனை வாசலில் நிற்கும் போதே அங்கு எல்லாம் தயாராகவே இருந்தது. கூடவே அங்கு மைதிலியும் இருக்க, தேவியிருந்த கோலத்தைப் பார்த்ததுமே அவருக்குள் ஒரு திகிலைப் பரப்பியது என்னவோ உண்மை தான்.

முழுமையாகத் தேவியைப் பரிசோதித்த மருத்துவர் அவளுக்குப் போதை மருந்து அதிகம் கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளதாகச் சொல்ல அதைக் கேட்ட வினாடியே உறைந்து போனான் பிரதாப். தேவியை யாரோ கடத்திப் போயிருப்பார்கள் என்பது அவன் யூகித்தது தான்.

அதிலும் தேவிக்கு இருக்கும் திறமையில் அவர்களிடமிருந்து தப்பி வந்து விடுவாள் என்றே அவன் நம்பினான். ஆனால் இப்படி ஒன்று அவளுக்கு நடந்திருக்கும் என்பதை இந்த வினாடி அவளை மருத்துவமனையில் சேர்க்கும் வரை அவன் நினைத்துக் கூட பார்க்க வில்லை.

மைதிலி ஏற்கனவே ஒரளவு யூகித்தவர் என்பதால் “டாக்டர்! தேவி உயிருக்கு ஆபத்து இல்லயே?” என்று கேட்க

“உயிருக்கு இப்போதைக்கு ஆபத்து இல்ல. ஆனா அதையும் உறுதியா நிலையா சொல்ல முடியாது. அவளுக்கு அளவுக்கு அதிகமா போதை மருந்தைக் கொடுத்திருக்காங்க. ஒருவேளை அதை வலுக்கட்டாயமா செலுத்தி இருக்கலாம்னு நினைக்கிறன். அந்த டோஸ் அவள முழு நேர மயக்கத்துல வைக்கத் தான் அப்படி செஞ்சி இருக்காங்க.

இப்போதுமே அவளுக்கு மயக்கம் தெளிய எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. என்னுடைய யூகப் படி பார்த்தா தன்னைச் சுற்றியும் தனக்குமே என்ன நடக்குதுனு தெரியாமே இருக்கும். கை கால் உடம்பில் வளு இருக்காது.

இன்னும் சொல்லப் போனா யாரவது இந்த போதை மருந்து எடுத்திருக்கும் அந்த நபர் மேல அந்த நேரத்துல நீங்க கொதிக்கிற எண்ணையையே ஊற்றினா கூட அவங்களுக்கு வலியோ அதைத் தடுக்கணும் என்ற உணர்வோ இருக்காது. மொத்தத்தில் சொல்லனும்னா அவங்க உயிருள்ள ஒரு பொருள் மாதிரி தான் இருப்பாங்க.

அவ்ளோ வீரியமுள்ள போதை மருந்தைத் தான் தேவிக்கும் கொடுத்திருக்காங்க. பல வருடமா இந்த போதைப் பழக்கத்துல இருந்தாலோ இல்ல பல பேருக்கு இதைக் கொடுத்துப் பரிசோதித்து கண்ணால அவர்களைப் பார்த்து உணர்ந்தால் மட்டும் தான் இதை இவ்வளவு அளவு என்ற பெயர்ல சுலபமா பயன்படுத்த முடியும்.

இதுல கொடுமை என்னனா தனக்கு என்ன நடந்ததுனு நீங்க யார்னா சொன்னா தான் அவளுக்கே தனக்கு நடந்த வன்கொடுமை பற்றி தெரியும். ஒருவேளை அப்படி ஒன்று நடந்த இடத்திலே அவள் தெளிந்து இருந்தா ஏதோ தனக்கு நடந்த விபரீதத்தை உணர்ந்து இருப்பாளோ என்னமோ? ஆனா இப்போ இங்கு வந்து நாம அவள முழுமையா பரிசோதித்து பார்த்துகிட்ட தால அவளுக்கு ஏதோ விபத்து ஆச்சினு கூட சொல்லலாம்”

இதுவரை வாயே திறக்காத பிரதாப் “அப்படியே சொல்லிடலாம் அங்கிள்!” என்று சொல்ல

“அப்படி பண்ணலாம் பிரதாப்! ஆனா இப்படி ஒரு கேடுகெட்டத் தனத்த செய்தவன் யாருனு தெரியாமலே போய்டுமே? ஏதோ ஒரு பர்சன்ட் தனக்கு நடந்தத வச்சி யூகிச்சி அந்த பெண் சொல்ல வாய்ப்பு இருக்கு. அதிலும் தேவி மாதிரி டேலன்டான பொண்ணுங்க கொஞ்சம் மன தைரியத்தோட மூளையிடம் போராடுனா நிச்சயம் அவனக் கண்டு பிடிக்கலாம்.

ஆனா அதை யோசிக்கச் சொல்லி நாம அவளுக்குப் பிரஷர் கொடுத்தா தேவிக்கு புத்தி பேதலிச்சிப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால தான் தேவிக்கு அப்படி ஒரு பிரஷர் கொடுக்கவா வேண்டாமானு யோசிக்கறன்”

“வேணாம் அங்கிள்! எனக்கு என் தேவி உடல் நிலை தேறி வந்தாலே போதும்” என்று பதைபதைத்தான் பிரதாப்.

“அதே தான் நானும் யோசிக்கறன் பிரதாப். அதிலும் தேவி உடம்பு ரொம்ப பலவீனமா இருக்கு. இப்பவே அவ ஒருவாரம் ஐ.சி.யூல இருந்தா தான் கொஞ்சமாவது நாம அவள பழைய தேவியா பார்க்க முடியும்” என்று இப்போது தேவி இருக்கும் நிலையைக் கண்ணாடியாய் வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான அந்தக் குடும்ப மருத்துவர் சொல்லி முடிக்க

இதை எல்லாம் ஆரம்பித்ததில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவியின் தந்தை வெளியில் ஊமையாகக் கண்ணீர் விட்டாலும் உள்ளுக்குள் ரத்தக் கண்ணீரே வடித்தார் அவர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN