சுவாசம் - 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 6

வெளியே அன்பே
இல்லாதவன் போல
நடிக்கும் எல்லா ஆணுமே
தனக்கு பிடிச்சவளையும்
பிடிச்சவங்களையும்
தன் மனசுக்குள் வைத்து
தன் உயிரை விடவும் உயர்வாய்
நேசிப்பது மறுக்கவே முடியாத உண்மை..!

தேவியின் உடல் நிலை மருத்துவர் சொன்ன படி ஒரு வாரம் சென்ற பிறகே சிறிது தேறியது. அடிக்கடி கண் விழித்துத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்தாலும் பக்கத்தில் இருப்பவர்களை உணர்ந்தாலும் வாய் திறந்து யாரிடமும் அவளால் பேச முடியாமல் போக அடுத்தப் பத்துத் தினங்கள் கழித்துத் தான் தெளிந்தாள் அவள்.

தேவிக்கு என்ன நடந்திருந்தாலும் அவள் தான் தன் மனைவி என்பதில் பிரதாப் உறுதியாக இருந்ததால் அவளுக்கு நடந்ததை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று அவன் நினைக்க அதற்கு முன்பே ஒரு தந்தையாய் அவளிடம் அதைச் சொல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தார் கந்தசாமி.

எக்காரணத்தைக் கொண்டும் அவர் தன் மகளை விட்டு விடவும் இல்லை யாரிடமும் அவளை விட்டுக் கொடுக்க தயாராகவும் இல்லை. ஒரு தாயாய் தன் மகளைத் தன்னால் முடிந்த வரை பார்த்துக் கொண்டார் அவர். தேவிக்கு விஷயம் தெரியாமல் மறைத்ததால் போலீஸில் பகிரங்கமாகப் புகார் கொடுக்காமல் இருந்தாலும் பிரதாப் தன் தந்தையின் பதவி பலத்தை வைத்து அந்தக் கயவன் யார் என்ன ஏது என்பதை விசாரிக்கச் சொல்லியிருந்தான்.

தேவியை வேலைக்கு வர வேண்டாம் என்று பிரதாப் சொல்லி விட அதனால் தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் மைதிலியே வந்து அவளைப் பார்த்து விட்டுப் போனார்.

என்ன தான் உடனிருப்பவர்கள் தேவியிடம் அவளுக்கு நடந்த கொடுமையை மறைக்க நினைத்தாலும் விதி வேறாகத் தான் நினைத்தது.

இப்படியே மூன்று மாதம் செல்ல இப்போதெல்லாம் தேவிக்கு நரம்புத் தளர்ச்சி என்ற பெயரில் அடிக்கடி உடம்பு உதற ஆரம்பிக்க அதனால் தன்னால் முடிந்த வேலையை மட்டும் வீட்டிற்கு செய்து வர ஒரு நாள் தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கப் போனவள் மயங்கி விழ அங்கிருந்தவர்கள் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்ததும் தூக்கி நிறுத்த பலமில்லாமல் உடல் உதற சரிந்து விழுந்தவளைக் கூட்டத்திலிருந்த வயதான பாட்டி அவளுக்கு என்ன நோயோ என்று அறிய அவள் நாடியைப் பிடித்துப் பார்க்க அப்போது தான் அவள் உண்டாகி இருப்பது தெரியவரவும் அதை அவர் அங்கேயே தேவியிடம் போட்டுடைக்க அந்த வார்த்தையிலும் ஏற்கனவே மருந்தின் வீரியத்தில் உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து மயக்கத்துடன் கூடிய அதிர்ச்சியில் அன்று தன்னிலை இழந்தவள் தான் தேவி. அதன் பிறகு அவளிடம் மாற்றமே இல்லாமல் போனது.

கருவைக் கலைக்க நினைக்க மூன்று மாதமே என்றாலும் அது தேவியின் உயிருக்கு ஆபத்து என்றார் டாக்டர். வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை தேவியே சுமக்க வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் பிரதாப் கந்தசாமியிடம் தன் விருப்பத்தைச் சொல்லி தேவியைத் திருமணம் செய்து வைக்கச் சொன்னவன் அவளை ஆள் வைத்துத் தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துக் கேட்க முடியவே முடியாது என்று அவன் விருப்பதிற்கு மறுத்து விட்டார் அவர்.

இப்போது தன்னிலை மறந்திருக்கும் அவள் பிறகு ஒரு நாள் தெளிவான பிறகு ஏன் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையக் கொடுத்துக் கடைசி வரை தன்னைக் குற்ற உணர்ச்சியில் சாக வைத்தீர்கள் என்று தன்னைத் தன் மகள் கேட்கக் கூடாது என்றும் உண்மையாகவே தன் மகள் மேல் பாசம் இருந்தாலும் அவள் தெளிவாகும் வரை பொறுத்திருக்கும் படி அவர் பிரதாப்பின் பதவி அந்தஸ்தையும் மீறி மறுத்து விட அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் மகளைத் தான் தான் பார்த்துக் கொள்வேன் என்பதிலும் உறுதியாக இருந்தார் அவர்.

அறிவுமதி அப்போது தான் தன் படிப்பை முடித்தவள் என்பதால் தன் அக்காவான தேவிக்குத் தலை சீவ உடல் துடைக்க ஆடை மாற்ற சோறு ஊட்ட என்று ஒரு சிறு குழந்தையைப் போல் அவளைப் பார்த்துக் கொண்டாள்.

அதற்காக தேவிக்குப் புத்தி பேதலிக்கவோ அம்னீஷியாவோ இல்லை. சொல்லப் போனால் தன்னைச் சுற்றி நடப்பது அவளுக்குத் தெரியும் தான். ஆனால் அதிலெல்லாம் ஈடுபடவோ எந்த ஒரு செயலையும் விரும்பி செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள் தேவி.

அவளிருக்கும் அப்படிப்பட்ட நிலைக்கும் ஒரு நாள் முடிவு வந்து தானே ஆகவேண்டும்? அந்த நாளும் வந்தது.. அவளுடைய பிரசவத்தை வைத்து!

ஒரு நாள் நிறை மாத கர்ப்பினியான தேவியை நிற்க வைத்து அறிவுமதி ஆடை மாற்றி விட அதே நேரம் தேவிக்கு இடுப்பில் சுருக்கென்ற வலியுடன் பனிக்குடம் உடைந்து அவள் காலுக்குக் கீழ ஆறென ஓட அதைப் பார்த்த தேவிக்கு அதிர்ச்சியுடன் கூடிய வலிப்பும் வந்து விட தன்னை மீறி கண்கள் சொருகி கை கால்கள் வெட்டு வெட்டென்று இழுத்த நேரம் அவளுக்கு பிரசவ வலியும் வந்து விட இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலை பெரும் சவாலாகவே இருந்தது மருத்துவர்களுக்கு.

பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். ஆனால் தேவி உண்மையிலேயே மறுபிறவி தான் எடுத்தாள். முன்பெல்லாம் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவள் பிரசவத்திற்குப் பிறகு தன்னிடம் பேசுபவரின் முகம் பார்க்க ஆரம்பித்தாள். குழந்தை அழுதாலும் அதை வெறித்த பார்வை பார்ப்பவள் இன்று குழந்தைக்கு அவளாகவே பசியாற்றும் அளவிற்கு வந்திருந்தாள்.

அதிலும் எப்போதும் குழந்தைக்குப் பால் தருவதற்கு முன் தங்கை தன்னைத் தூய்மை செய்வதையே இன்று தேவியே செய்ய அது தான் அறிவுமதியின் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இருந்தது. குழந்தை பிறந்த பிறகும் பிரதாப் திருமணத்தைப் பற்றி கந்தசாமியிடம் பேச

“தம்பி நான் திலுப்பி திலிப்பி இப்டி சொல்லிகிறதுக்கு என்ன மன்னிச்சிக்கோங்கோ. இப்போ ஒரு வேகத்துல முடிவு எடுத்துகினு அப்பால நீங்க எதுகாண்டியும் ஃபீல் பண்ணிக்க கூடாதுனு தான் சொல்லிக்கிறன். இப்ப நான் சொல்லிகின அல்லாத்தையும் என் பொண்ணு காண்டி தெளிவா இருந்துகினா சத்தியமா இத்தே தான் சொல்லிகினு இருப்பா. அப்டி காண்டி அவ மாத்தி வேற எதுனா முடிவு எடுத்துகினா அத்த அவ வாயாலே சொல்லிக்கிறது தான் ரைட்டு. ஆனா அது இன்னா எப்போனு தெரியாத்தப்ப நீ ஏன் சாமி இப்டியே கீற? சீக்கிரமா உங்க அந்தஸ்துக்கும் அயகுக்கும் ஏத்த பொண்ணா பாத்து கல்லாணம் பண்ணிக்கோங்க” என்று அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

இன்றும் தேவியிடம் தன் விருப்பத்தைச் சொல்லி திருமணம் செய்து அவளையும் குழந்தையையும் தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல பிரதாப் தயார் தான். ஆனால் தேவியோ, எங்கே தான் அவளுக்கு வாழ்வு கொடுப்பதாக நினைத்து விடுவாளோ என்ற பயம் தான் அவனுக்கு!

இதற்கிடையில் ஒரு நாள் தாங்கள் தேவியின் வழக்கை ரகசியமாக விசாரிக்கச் சொல்லியிருந்த கமிஷனரிடமிருந்து குற்றவாளியைப் பிடித்து விட்டதாகவும் தேவி வந்து பார்த்து இவன் தான் குற்றவாளி என்று சொல்லி விட்டால் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்கத் தயார் என்ற தகவல் வரவும் தன் தாயை அழைத்துக் கொண்டு போய் இப்போதெல்லாம் கொஞ்சமே தேறியிருந்த தேவியிடம் இந்த விஷயங்களைச் சொல்ல எல்லாவற்றையும் கேட்டவள் எந்த வித சலனமும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் தந்தையுடன் பிரதாப் காரில் கமிஷனர் வீடு நோக்கிச் சென்றாள் தேவி.

இவர்கள் கமிஷனர் வீட்டிற்குப் போன நேரம் அவருக்கு ஏதோ முக்கியமான வேலை வந்து விட பிரதாப்பையும் அவர்களையும் விருந்தினர் அறையில் அமர வைத்த உதவி கமிஷனர் அவர்களுக்கு வேண்டியதை செய்து உபசரிக்க அது எதையும் ஏற்க முடியாத பதட்டமான மனநிலையில் இருந்தான் பிரதாப். இன்னும் சொல்லப் போனால் தேவியை இப்படி சீரழித்தவனை அவள் கண் முன்னாலேயே துடிக்க துடிக்க அவன் உதிரத்தை எடுத்து தேவி பாதத்தில் அபிஷேகம் செய்யும் அளவுக்கு வெறியே இருந்தது அவனுக்கு.

இவன் மனநிலை உணர்ந்து தானோ என்னமோ கமிஷனர் அவன் கண்ணில் படாமலும் அந்த குற்றவாளியைக் காட்டாமலும் நேரத்தைக் கடத்தினார். காலை பத்து மணிக்கு வந்தவன் இபொழுது மதியம் இரண்டு மணி வரை அந்த வீட்டின் வரவேற்பறைக்கும் அந்த விருந்தினர் அறைக்கும் ஓராயிரம் முறை நடந்து விட்டான். அவர் கைப்பேசிக்கோ பல லட்சம் முறை அழைத்தும் விட்டான் பிரதாப். ஆனால் எதற்கும் பலனில்லை. வந்திலிருந்து யாரும் சாப்பிடவுமில்லை. அவனுக்கு அது வேறு கோபம். தேவியோ இறுகிப் போய் அமர்ந்தவள் அமர்ந்தவள் தான். மேற்கொண்டு பொறுக்க முடியாமல் நேரே அங்கிருந்த உதவி கமிஷனரிடம் சென்று

“என்ன ஸார், அந்த பொறுக்கி நாய் அவ்வளவு பெரிய ஆளா? இவன் தான் அக்கியூஸ்ட்டுனு தெரிஞ்சும் இவ்வளவு நேரத்துக்கு எங்க கிட்ட அவனப் பற்றி சொல்லாம காட்டாம இருக்கிங்கனா அப்ப அந்த எச்ச யாராவது அரசியல் வாதிக்குக் கையாளா தான் இருப்பான் இல்லனா அவனே அரசியல்வாதியா இருப்பான். அது தான நீங்க இப்படி நடக்கக் காரணம். ஆனா நீங்க என்ன தான் அவனக் காப்பற்ற நினைத்தாலும் நான் இனி சும்மா இருக்கப் போறது இல்ல. இந்த நிமிஷமே டிவி பேப்பர்னு போய் நானா அவனானு பார்த்துக்கிறன்” என்று பிரதாப் அவரிடம் எகிற

“ஸார் ஸார்! கொஞ்சம் பொறுமையா இருங்க. இதுல ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்மந்தப்பட்டு இருந்ததால தான் கமிஷனர் ஸார் இப்படி பொறுமையா போறாரு. நான் இப்போ அவர அழைச்சிட்டு வரேன். நீங்க ரூமுக்குப் போங்க என்று ஏ.சி.பி சப்பைக் கட்டுக் கட்ட

உதவி கமிஷனர் சொன்ன அவர் என்ற வார்த்தையில் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் பிரதாப் இப்படி செய்துது பெரிய ஆள் தான் என்பதை. அப்போது தான் அவருடன் அங்கு சற்று மேல் தட்டு ஆண்மகன் ஒருவன் இருப்பதைப் பார்க்கவும் மௌனமாக அங்கிருந்து வெளியேறினான் பிரதாப்.

சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த உதவி கமிஷனர் பிரதாப் இருக்கும் விருந்தினர் அறைக்கு வர அவன் பின்னால் வேறொருவன் வருவதைப் பார்த்ததும் ‘இவனைத் தானே சற்று முன் ஏ.சி.பியுடன் அங்கு பார்த்தோம்?!’ என்று பிரதாப்பின் நெற்றியில் முடிச்சி விழ, அதே நேரம் உள்ளே வந்தவனைப் பார்த்ததும் குழந்தையை மைதிலியின் கையில் வீசிய தேவியோ பெண் புலியென பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தவள்

“துத்தேரி! எனக்குத் தெரியும் டா எனக்குத் தெரியும்.. என்ன இப்டி நாசம் பண்ண பொறுக்கி கம்னாட்டி நீ தான்னு எனக்குத் தெரியும் டா. முன்னாடியே என்கிட்ட ராங்கா நடந்துகினதுக்கு செருப்படி வாங்கிகினவன் தான் டா நீ? அதோடு வுட்டியா டா? திருவிழால சின்னப் பொண்ணுகிட்ட ராங்கா நடந்துகினதும் இல்லாம தட்டி கேட்ட என்னையும் மெரட்டி உன்னையும் நாசம் பண்ணிடுவேனு சொன்னவன் தானே.. நீ தப்பு மேலே தப்பு பண்ணதுனால போலீஸாண்ட புடிச்சி குடுத்தேன்.. அதெல்லாம் மனசுல வெச்சிகினா என் வாழ்க்கைய இப்டி நாசம் பண்ண? அதும் நான் சுய நெனவே இல்லாதப்ப இப்டி செஞ்சிருக்கியே.. ச்சீ நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? உன் பழிய தீத்துக்கனும்னா என்னைய கொன்னு போட்டு இருக்கலாமே டா!” என்று வாயும் கையும் அவனை சரமாரியா அடிக்க சோர்ந்து போயிருந்தாள் தேவி.

அவள் நடத்தையை பார்த்து அவளைத் தடுக்க வந்த உதவி கமிஷனரைத் தன் ஒற்றைப் பார்வையால் தடுத்து நிறுத்தியவனோ உலக்கையென இருக்கும் தன் இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு இரும்பென இருக்கும் தன் உடலில் தேவி அடிக்கும் அடிகளை எந்த வித மறுப்பும் இல்லாமல் வாங்கிக் கொண்டிருந்தான் நம் சிற்பிவர்மன்!

தன் பலம் கொண்ட மட்டும் அவன் முடியை இரு கைகளிலும் பிடித்து உளுக்கியவள்
“நான் உன்ன செருப்பால அடிச்சதுக்காவா டா என் வாழ்க்கைய நாசம் பண்ண இல்ல உன்ன போலீஸ்ல புடிச்சி குடுத்தது காண்டி என்ன பழி வாங்குனியா? சொல்லு டா எதுக்காட டா என்ன இப்டி பண்ண?” என்று கேட்டு அவன் முகம் கழுத்து கன்னம் என தன் விரல் நகங்களால் கீறியவள் அவனை எரிக்கும் சக்தியோ பலமோ தனக்கு இல்லையே என்ற இயலாமையில் தன்னையும் மீறி கண்ணில் கண்ணீர் பெருக கால்கள் துவள அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறினாள் தேவி.

இவன் தான் குற்றவாளி என்று சொல்லாமலே தேவி நடந்து கொண்டதை வைத்து சிற்பி தான் அவளை வீணாக்கியவன் என்பதை அறிந்த அங்கிருந்தவர்களில் பிரதாப்புக்கோ தேவி மேல் தான் கோபம் வந்தது. இவனோடு இவ்வளவு நடந்திருந்தும் ஏன் நம்மிடம் இவள் எதையும் சொல்லவில்லை என்பது தான் அது.

அந்த கோபம் எல்லாம் சிற்பியிடம் திரும்ப பிரதாப் அவன் மேல் பாய இருந்த நேரம் உள்ளே வந்தார் கமிஷனர். அங்கு நடக்கவிருந்த ரசவாதத்தைப் பார்த்தவர் ‘இதற்காகத் தானே நான் எதுவும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்?!’ என்பது போல் அவர் உதவி கமிஷனரை முறைக்க அவரோ தலை குனிந்தார்.

அப்படி மட்டும் பிரதாப் சிற்பி மேல் கை வைத்திருந்தால் பிறகு அவர் தானே சிற்பியின் தாத்தாவான திருநீலகண்டத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்? அதுவுமில்லாமல் சிற்பிவர்மன் இந்தியாவின் புகழ்பெற்ற முண்ணனி வழக்கறிஞர்களில் ஒருவன். அவன் மேல் கை வைத்தாலோ இல்லை அவன் தான் குற்றவாளி என்பது தெரிந்தாலோ வெளியுலகம் அவனை குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ளுமா இல்லை அப்படியே தான் விட்டுவிடுமா? எத்தனை பஸ் எரியும்? சக வழக்கறிஞர்கள் சும்மா விடுவார்களா? பெரிதாக நியாயம் வேண்டி மனிதச் சங்கிலி என்ற பெயரில் போராடுவார்கள். இன்னும் என்னென்னமோ நடக்குமே! அதனால் பாதிக்கப்படப் போவது யார்? அப்பாவி பொதுமக்கள் தானே!’

ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் மேல் கை வைத்தாலே அதில் அரசியல் ஆதாயம் காணத் துடிப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்னும் போது இப்போது இன்று ஆளும் கட்சியில் முன்பு மந்திரியாக இருந்த திருநீலகண்டத்தின் பேரன் என்றால் சும்மா இருப்பார்களா? என்பதே கமிஷனரின் எண்ணமாக இருக்க, அதனால் தான் அவர் சிற்பியின் தாத்தா வரும் வரை இவர்களைச் சந்திக்க விடாமல் இருந்தார்.

தேவி கொடுத்த அடிகளையும் பேச்சையும் வாங்கிய சிற்பி எதற்கும் மறுத்து ஒரு வார்த்தை பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு நின்றதைப் பார்த்ததும் இன்னும் ஆச்சரியம் ஆகிப் போனார் அவர். அதே நேரம் உள்ளே நுழைந்தார்கள் சிற்பி தாத்தாவும் மாமாவும். உள்ளே வந்த மறுகணமே அங்கிருந்த ஷோஃபாவில் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்த திருநீலகண்டம்

எடுத்த எடுப்பிலே “நடந்த விஷயம் என்னனு எனக்குத் தெரியும். அதை எப்படி சரி பண்றதுனும் எனக்குத் தெரியும்” என்று பிசிர் இல்லாத குரலில் சொன்னவர் அங்கிருந்த உதவி கமிஷனரிடம் வெளியில் இருக்கும் தன் பி.ஏ விடம் இருக்கும் பெட்டியை வாங்கி வரச் சொல்ல அதன்படியே சென்று பெட்டி உள்ளே வந்ததும் அதைத் திறந்து தேவி முன் தள்ளியவர்

“இங்க பார் பாப்பா, பார்க்க சின்னப் பெண்ணா இருக்க! நான் சொல்றதக் கேளு. ஏதோ நடந்தது நடந்து போச்சி.. அதுக்காக உன்ன சும்மா விட மாட்டேன். என்ன இருந்தாலும் என் பேரன் தொட்ட பெண்ணாச்சே நீ! அதான் உனக்கு ஒரு விலை போட்டு எடுத்து வந்திருக்கேன். நீ வாழ்நாள்ள பார்த்திருக்காத பணம் இந்த பெட்டியில இருக்கு. வாங்கிகிட்டு சத்தம் போடாம நழுவிடு.

வேணும்னா என் தொண்டன்ல எவனாவது ஒருத்தன உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறேன். கூடவே அவனுக்கு அரசாங்கத்துல நல்ல வேலையா வாங்கித் தரேன். என்ன நான் சொல்றது? இதைக் கேட்டு அதே மாதிரி நடந்துகிட்டா உனக்கு நல்லது. இல்லனா நாளைக்கு உன் குடும்பத்துல நடக்க இருக்கிற எந்த கெட்டதையும் என்னால தடுக்க முடியாது” என்று அவர் பேரம் பேச

அதைக் கேட்டுத் தன் தலையிலே அடித்துக் கொண்டு இன்னும் கதறி அழுதாள் தேவி. அவர் சொன்ன வார்த்தைக்கு பிரதாப்போ அவரை அடிக்கக் கை ஓங்கி விட அங்கிருந்த ஏ.சி.பி தான் அவனைத் தடுத்தார். அதைப் பார்த்த திருநீலகண்டன்

“என்ன தம்பி, இள ரத்தம் இல்ல? அதான் சும்மா துள்ற! நான் அரசியல்வாதி பா.. எனக்கெல்லாம் இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா தான் பேசத் தெரியும். இதை விட்டா உங்களுக்கு வேற வழியே இல்ல பா. இந்தப் பெண்ணோட குடும்பப் பிண்ணனிய எல்லாம் விசாரிச்சிட்டு தான் நான் வந்திருக்கன்” என்று அவர் மேலும் எகத்தாலமாகப் பேச

அவர் பேசப் பேச கை முஷ்டி இறுகக் கண்கள் மூடி பாறை என ஒரு கையாலாகாத தனத்துடன் நின்றிருந்தான் சிற்பி.

“ஏன் இல்ல? இதுக்கு வேற ஒரு வழி இருக்கு” என்று இதுவரை பேசாமல் இருந்த சிற்பியின் மாமா சொல்ல, அதை என்னவென்று யூகித்த திருநீலகண்டனோ

“டேய் குமாரு! உன் வேலையப் பார்த்துட்டுப் போடா” என்று எகிற

“இதுவும் என் வேலை தான்” என்று அவருக்குப் பதில் கொடுத்தவர் சிற்பியிடம் திரும்பி

“சொல்லு வர்மா! எனக்கு உண்மையச் சொல்லு. நீ இந்தப் பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கினியா? அதாவது இந்த பெண்ணோட பெண்மைக்கு பங்கம் விளைவிச்சியா?” என்று அவர் சிற்பியிடம் கேட்க

“ஆமா!” என்று தயங்காமல் ஒத்துக்கொண்டான் அவன்.

“எதுக்காக அப்படி ஒரு கேடுகெட்ட செயல செய்தனு நான் தெரிஞ்சிக்கலாமா?

“பெருசா காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. இவ பத்து வயசுல என்ன செருப்பால அடிச்சா. அதுக்குப் பிறகும் என்ன பொறுக்கியாவே பார்த்தா. ஒரு கட்டத்துல என்ன ஜெயிலுக்கும் அனுப்பினா. அதை எல்லாம் மனசுல வச்சிகிட்டு தான் நான் இவளைப் பழி வாங்க இவ வாழ்க்கைய அழிச்சேன். இதுல ஒளிவு மறைவுனு எதுவும் இல்ல. இவளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. திமிர் பிடிச்சவ! பெண்களுக்கு உள்ள அடக்க ஒடுக்கம் எதுவும் இல்ல. எப்ப என்னைய போலீஸ்ல பிடிச்சிக் குடுத்தாளோ அப்பவே மனசுல தேக்கி வெச்சிருந்த கோபத்துக் கூட பழியுணர்ச்சியும் சேர்ந்து வெறியா மாறிடுச்சு.

இவ என்ன போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்ததால நான் ஒன்னும் ஜெயில்லையே இல்லை. என் மாமா உதவியால நான் வெளிய வந்துட்டேன். அப்பவே இவளை நான் ஏதாவது செய்யணும்னு தான் நினைச்சேன். ஆனா என் தாத்தாவும் என் மாமாவும் என்ன வெளிநாடு அனுப்பிட்டாங்க. அங்கே ரெண்டு வருஷம் இருந்தேன். அப்பவும் எனக்கு இவ மேல இருந்த வன்மம் குறையல. ஒரு நண்பனோட திருமணத்திற்காக இந்தியா வர வேண்டி இருந்தது.

அந்த நேரத்தை எனக்குப் பயன்படுத்திக்க நினைச்சேன். அதே நேரம் இவளும் இவ படிச்ச காலேஜ்க்கு வரவோ இவ குடிச்ச ஜூஸ்ல இவளுக்கே தெரியாம போதை மருந்து கலந்து கொடுக்க வழி பண்ணினேன். அந்த மருந்து உடனே போதையைக் கொடுக்காது. நம்பள சிறுக சிறுகத் தான் தன்னிலை மறக்க வைக்கும். இவ வெளியே வர இருக்கும் அந்த நேரத்தைக் கணக்கிட்டு சற்று தள்ளி யாருக்கும் தெரியாமல் நான் காத்திருந்து இவ மயங்கி விழுந்ததும் கார்ல தூக்கிப் போட்டுட்டுப் போய் என் நண்பனுடைய கெஸ்ட் ஹவுஸ்ல வெச்சி எனக்குள்ளே இருந்த இத்தனை நாள் வன்மத்தை தீர்த்திட்டேன்..

என் முகம் தெரியக் கூடாதுனு தான் இவளை முழு நேர போதையிலேயே வெச்சிருந்தேன். அது எதுக்குனா இவ என்னை அடையாளம் தெரிந்து போலீஸ்ல காட்டிக் கொடுக்கக் கூடாதுனு இல்ல இவளுக்குத் தன்னை யார் இப்படி செய்தாங்கனு தெரியாமலே இவ தவிக்கணும்னு தான் செய்தேன். அதன் பிறகும் அதே மயக்கத்திலேயே இருந்த இவளை ரோட்டோரம் போட்டுட்டு உடனே வெளி நாடு கிளம்பிட்டேன். ஆனா நான் என்ன தான் மறைக்க நினைச்சாலும் இன்னைக்கு தமிழ்நாடு போலீஸ் கிட்ட மாட்டிகிட்டேன்” என்று கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் தன் மாமா கேட்ட கேள்விக்கு தன் வாக்குமூலமாக அங்கிருக்கும் அனைவருக்கும் அனைத்தையும் தெரியப் படுத்தினான் சிற்பி.

அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க அதே நேரம் பளார் என்ற சத்தத்துடன் சிற்பியின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது அவன் மாமாவின் கரம்.

“ச்சீ!…… நான் வளர்த்த பிள்ளையாடா நீ? சின்ன வயசுல இருந்து நான் உனக்கு ஒழுக்கத்தைச் சொல்லித் தானேடா வளர்த்தேன்? நீ கோபக்காரன்னு தெரியும். ஆனா இப்படி ஒரு கேவலமான ஜென்மமா இருப்பேனு நினைக்கலையே! நாங்க என்ன தான் வளர்த்தாலும் உனக்கு உன் அப்பன் புத்தி வந்துடிச்சி இல்ல? அவங்க ரத்தம் தானே உனக்கும் ஓடுது பிறகு நீ மட்டும் எப்படி இருப்ப? காதலிச்சிக் கை விட்டுப் போனதுக்கே உங்க அம்மா எப்படிப் பட்ட வாழ்வு வாழ்ந்து சாகற வரை நிம்மதி இல்லாம போனவ டா!

ஆனா இன்று நீ இந்த பெண்ணோட வாழ்க்கையப் பழி வாங்கறேன்ற பெயர்ல அழிச்சி இருக்க! இதைப் பார்த்து நான் சும்மா இருப்பேன்னு நினைக்கிறியா? என்னால அப்படி இருக்க முடியாது. அதே நேரத்துல உன் தாத்தா சொல்ற மாதிரி அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தவும் முடியாது. அன்று உன் அம்மா கையில நீ ஆண் குழந்தையா இருந்த. ஆனா இன்னைக்கு அந்தப் பொண்ணு கையில பெண் குழந்தை இருக்கு. அந்த குழந்தையை என்னால விட முடியாது. அதனால அந்த பெண்ணோட வாழ்க்கைய கெடுத்த நீயே அந்த பெண்ண கல்யாணம் பண்ணி உன் குழந்தைக்கு நல்ல தகப்பனா வாழுற வழியைப் பாரு” என்று அவர் முடிக்க

“நான் பண்ணிக்க மாட்டேன்” என்ற சொல் அடுத்த வினாடியே வில்லென அந்த சபையில் பாய்ந்தது.

அப்படி ஒரு சொல்லை அனைவரும் சிற்பியிடம் இருந்து எதிர்பார்த்திருக்க, வந்தது என்னமோ வாழ்க்கையை இழந்தாலும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்ற வீம்புடன் அங்கு அமர்ந்திருந்த தேவியின் வாயிலிருந்து! அவள் மறுத்ததும் அந்த வினாடியே தன் மனதில் ஒரு வெறுமையை உணர்ந்தான் சிற்பி. அதைக் கேட்டு சிற்பியின் மாமா தேவியிடம் ஏதோ சொல்ல வர, உடனே அந்த இடத்தைத் தன் வார்த்தையால் நிரப்பினார் மைதிலி

“எங்க வீட்டுப் பெண்ணை இப்படி வீணாக்கியவன் யாருனு தெரிந்து அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கத் தான் அவனைக் கண்டுபிடிக்கச் சொன்னோமே தவிர எங்க பொண்ணுக்கு வாழ்க்கைப் பிச்சை கொடுங்கனு கெஞ்ச வரல. எப்பவோ தேவி என் வீட்டு மருமகள் ஆக வேண்டியவ. இவனுடைய சூழ்ச்சியால இடையில இவ்வளவும் நடந்திடுச்சி. இப்பவும் அவ என் வீட்டு மருமக தான். இந்த வினாடியே அவ கழுத்துல தாலி கட்டி எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக நாங்க தயாரா தான் இருக்கோம்.

இப்படி ஒரு நிலையில ஒரு பொண்ணு மேல உள்ள வன்மத்தையும் கோபத்தையும் போக்கிக்க அவளுக்கே தெரியாம அவ வாழ்க்கைய அழிச்சி சித்திரவதைப் பண்ணி சாகறவரை அவளைத் துடிக்க வெச்சவனே அதையும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாம நெஞ்சை நிமிர்த்திகிட்டு ஏதோ சாதனை செய்தது போல சொல்லிக் காட்ட அவன் தாத்தாவோ அவனுக்கும் ஒருபடி மேல போய் பேரன் செய்ததை தட்டிக் கொடுத்து எங்க பொண்ணுக்குப் பேரம் பேசி பணத்தக் கொடுத்தது இல்லாமல் கூடவே உன் குடும்பத்த அழிச்சிடுவேனு மிரட்டுறாரு. இதுதான் எங்க குடும்ப வழக்கம்னு வேற பெருமையா சொல்லிக்கிறாரு.

ஒரு பெண்ணைப் பழி தீர்த்துக்க அவளை வன்கொடுமை செய்யறதும் காதலிக்க மறுத்தா உடனே முகத்துல ஆசிட் வீசுறதும் என்ன கலாச்சாரம் இது? இதுலயா ஒரு ஆணோட வீரம் அடங்கி இருக்கு?” என்றெல்லாம் கேட்டவர் சிற்பியின் மாமாவிடம் திரும்பி

“நீங்க என்ன சொன்னீங்க? உங்க வீட்டுப் பையன் எங்க வீட்டுப் பெண்ணோட பெண்மைய அழிச்சா உடனே நாங்க எங்க பெண்ணோட வாழ்க்கையையே பறிபோனதா நினைத்து ஏதோ இந்த உலகத்துல இனி அவ வேற ஒருவனைக் கல்யாணம் பண்ணி வாழவே தகுதி இல்லாம போய்ட்ட மாதிரி பேசி உங்க பையனையே தான கல்யாணம் பண்ணச் சொல்றிங்க..

அவன் செய்தது வன்கொடுமை! அதாவது எங்க பெண்ணோட விருப்பம் இல்லாம அதுவும் சுயநிலையை இழக்க வைத்து செய்திருக்கான். இங்கே அவனைத் தவிர இன்னும் நாலைந்து பேர் சேர்ந்து இப்படி செய்திருந்தா அப்பவும் அந்த ஐந்து ஆண்களையும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்பீங்களா இல்லைனா இவனையே கட்டித்தான் ஆகணும்னு வற்புறுத்துவீங்களா?.

உங்களைச் சொல்லி தப்பு இல்ல. காலம்காலமா ஒரு பெண்ணை ஒரு ஆண் சீரழிச்சா அவனுக்குத் தண்டனை கொடுக்காம அந்த பெண்ணுக்கு நல்லது செய்யறதா நினைச்சி உடனே அவனையே கல்யாணம் பண்ணி வெச்சி அந்த பொண்ணுக்குத் தண்டனை தர்றது தானே வழக்கம்?

இதுக்கு ஒருகாலும் நான் சம்மதிக்க மாட்டேன். எங்களுக்கும் அரசாங்கத்துல செல்வாக்கு இருக்கு. என் கணவரும் கலெக்டர் தான். இந்த வினாடியிலிருந்து தேவி கலெக்டர் வீட்டு மருமக!” என்று ஒரு பெண்ணாய் தேவிக்காக வாதிட்டாலும் ஒரு தாயாய் தேவியின் மனநிலை உணர்ந்து கொண்டவரோ தேவியைக் கேட்காமலே அவள் தான் என் மருமகள் என்று சொல்லி அவள் துயர் துடைத்து அரவணைக்கச் செய்தவரோ இறுதியாக திருநீலகண்டத்தைப் பார்த்து

“எதுவா இருந்தாலும் இனி நாம சட்டத்தின் மூலமாக சந்திக்கலாம்!” என்ற சவாலையும் விட்டார் மைதிலி.
அவர் பேசி முடித்ததும் உன்னால் முடிந்ததை நீ பார்த்துக் கொள் என்பது போல் திருநீலகண்டன் இருக்க தேவியோ ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல் அதிர்ச்சியில் இருக்க சிற்பியோ தேவி அவனை மறுத்ததையும் மீறி இவன் யார் எங்களுக்கு இடையில் என்று பிரதாப்பை உக்கிர பார்வைப் பார்க்க

“எனுக்கு இதுல முயு சம்மதம் தான். ஆனா தேவியாண்ட தான் கடசி முடிவு கீது” என்று முதல் முறையாகத் தன் வாய் திறந்தார் கந்தசாமி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN