சுவாசம் - 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 7

அப்பாவின் அன்பை
முழுமையாக பெறும்
ஒவ்வொரு மகள்கள்
கடவுளைக் கேட்கும் வரம்
அடுத்த ஜென்மத்திலும்
இவருக்கே மகளாக
பிறக்க வேண்டுமென்றுதான்..!

“ஆமா தேவி மா! இப்ப நீ தான் முடிவு எடுத்துக்கனும். உன் முடிவு இன்னாவா இருந்தாலும் நான் ஏத்துக்கிறன். இப்டி உனுக்கு நடந்ததால உன் வாழ்க்கையே அயிஞ்சி பூடுச்சி அதுக்கு இந்த கல்லாணம் தான் கரீட்டுனு நான் சொல்லிக்கல.. எனுக்கு ஒரு விபத்து நடந்து கால் போய்க்கின போல இப்போ உனுக்கு ஒரு விபத்து நடந்து கீது.

அத்தால தான் இப்டி ஒன்னு நடந்ததுல என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உன்னைய பாத்துக்குவேன். இதுக்கு அப்பாலயும் பாப்பேன். ஆனா அத்தெல்லாம் நான் உயிரோட கீற வரியில தான். அப்பால உனுக்கு யார் கீறா? இதுக்கப்பால நீ எதிர்காலத்துல மோதிக்கப் போற எடமோ ஆள் பலம் வசதி அதிகாரம் அல்லாத்துலயும் ரொம்ப பெருசு. அதுக்கு நொண்டி காலோட கீற இந்த அப்பனோட தொணைய காண்டி அவங்களுக்கு அல்லா விதத்திலும் சமமா கீற பிரதாப் தம்பி தான் சரியா இருக்கும்.

அவர நீ கல்லாணம் பண்ணிக்கறது தான் உனக்கு பாதுகாப்பு. இப்டி உனுக்கு நடந்துகினப்பவே எங்க ரெண்டு பேத்துக்கும் கல்லாணம் செஞ்சி வச்சிடுங்க. நான் அவள என் கூட கூட்டுகினு போய் என் பொஞ்சாதிய நல்லா பாத்துகிறேனு தான் பிரதாப் தம்பி கேட்டுச்சி. ஆனா நான் தான் உனுக்கு ஒடம்பு சரியான பின்னாடி என்னாண்ட கேட்டுக்காம உங்கள யார் இப்டி ஒரு கல்லாணத்தப் பண்ணி வைக்க சொன்னதுனோ இல்ல கடசி வரில ஏதோ ஒரு குத்த உணர்வுல நீ துடிச்சிக்க கூடாதுனு தான் நாங்க பண்ணல.

ஆனா அதுக்கான நேரம் இப்போ வந்து கீது. இப்ப சொல்லு உனுக்கு பிரதாப் தம்பிய கல்லாணம் பண்ணி அவரு பொஞ்சாதியா ஆக உனுக்கு சம்மதமா?” என்று அந்த பதிலை இப்போதே சொல்லித் தான் ஆக வேண்டும் என்ற விதத்தில் தேவியின் தந்தை அவளுக்கு நெருக்கடி வைக்க எதுவும் வாயே திறக்காமல் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த தேவியைப் பார்த்த பிரதாப் எங்கே அவசரத்தாலும் இந்த சூழ்நிலையினாலும் திருமணமே வேண்டாம் என்று தேவி சொல்லி விடுவாளோ என்று பயந்தவன்

“அங்கிள்! இப்போ எதற்கு இவ்வளவு அவசரப் படறீங்க? நாம முதல்ல இங்கேயிருந்து கிளம்புவோம். அம்மா சொன்ன மாதிரி பிறகு இவங்களா நாமளானு பார்த்துப்போம்!” என்று பிரதாப் தேவியின் நிலையறிந்து கொஞ்சம் அவகாசம் கேட்க

“உங்கள விட என் மவளப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் தம்பி. அத்தால இப்பவே முடிவ சொல்லட்டும் தம்பி” என்று முதல் முறையாக அவர் சற்று பிடிவாதக் குரலில் சொல்ல அமைதியானான் பிரதாப்.

யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருந்த ரதியோ திடீரென்று எழுந்து போய் மைதிலியின் காலில் விழுந்தவள்

“என்ன மன்னிச்சிடுங்க மா. நான் கடைசி வரைக்கும் உங்களுக்கு மகளாவே இருக்கேன் மா. மருமகளா வேணா மா” என்று சொல்ல, அவளைப் பிடித்துத் தூக்கிய மைதிலியோ

“ஏன் அதற்கான தகுதி உனக்கு இல்லனு நீ நினைக்கிறியா?” என்று அவர் ஆத்திரப் பட

“அப்டி நான் நெனைக்கவே இல்ல மா..” என்று தலை அசைத்து மறுத்தவள் “ ஒரு வினாடி கூட ஒரு துளி கூட சின்ன ஐயாவ நான் அப்படி நெனைச்சது இல்ல மா. ஒரு அப்பாவா குருவா சகோதரனா நல்ல தோழனா தான் மா அவரப் பாத்திருக்கேன்”

“இனி கணவனா பாரு. ஏன் ஒரு நல்ல தோழன் கணவனா ஆகக் கூடாதா?” என்று மைதிலி ஆதங்கப் பட..

“ஆகலாமா ஆகக் கூடாதா எல்லாம் எனக்குத் தெரியாது மா. ஆனா என் வாழ்வில் ஆக முடியாது மா. இனி என்னை யார் கல்யாணம் செய்தாலும் அவங்க எனக்குத் தெய்வமா தான் மா தெரிவாங்க. அந்த தெய்வத்தை நித்தமும் வணங்கி என்னால் பூஜிக்கத் தான் முடியுமே தவிர நிச்சயம் என்னால் அவருக்கு மனைவியா வாழ முடியாது மா” என்று பிடிவாதமாக இத் திருமணத்தை அவள் மறுத்துப் பேச தேவியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் சிற்பியின் உடல் தன்னை மீறி சிலிர்க்கவும் அந்த சிலிர்ப்பைக் கண்கள் மூடி சமன் செய்தான் அவன்.

அடுத்த வினாடியே “அப்போ அந்த பெரியவர் சொல்லிக்கின மாதிரி அவங்க ஊட்டுப் பையனையே கல்லாணம் பண்ணிக்கோ” என்ற வார்த்தை தங்கு தடையின்றி வந்து விழுந்தது தேவியின் தந்தை வாயிலிருந்து.

தேவி மறுப்பாள் என்று தெரிந்தும் அவள் மறுத்ததில் கவலையிலிருந்த பிரதாப் தான் அவர் சொன்ன வார்த்தையில் அங்கிள் என்று அதட்டி அவரை அழைத்திருந்தான். இதில் கண் மூடி நின்றிருந்த சிற்பி தான் ஆச்சரியத்துடன் கண் திறந்து நன்றியுடன் அவரைப் பார்த்தான்.

“இங்க நீ இன்னா முடிவு எடுத்துகினாலும் எனுக்கு சரினு நான் சொல்லிக்கல. இத்தான் என் முடிவுனு சொல்லுறேன். உன் ஆத்தாவோட பேரை நீ எடுத்துக்காம எப்டி பட்ட வாய்க்க வாய்ந்து காட்ட நீ இருந்தனு ஒரு அப்பனா எனுக்குத் தெரியும். இப்போ உன் மேல தப்பு இல்லனாலும் உனுக்கு கெடச்சி கீற நல்ல வாய்க்கைய வாய நீ தயங்குற. அதுவும் எனுக்குப் புரியுது.

பொரட்சினு சொல்லிக்கினு வேற யார்னா உன்ன கல்லாணம் கட்டிக்க கேட்டுகினு வந்தா அவனுக்கு கல்லாணம் பண்ணி குடுத்த அப்பால நீ நல்லா இருந்தாகாட்டி சந்தோசம். ஆனா அதுங்காட்டியும் நீ டெய்லி கண்ணீர் உட்டுகிற போல ஆயிடுச்சுனா என்னால பாக்க முடியாது. அப்டி ஓரு பொரட்சிகார அப்பனா நடந்துகிறத வுட ஒரு சராசரி அப்பனா நான் இருந்துகினு என் மவ உனுக்கு கல்லாணம் செஞ்சி வச்சிடுறேன்.

சராசரி அப்பாவுக்கும் மேல ஒரு சொயநலம் புடிச்ச அப்பாவா தான் நான் இங்க இருந்துக்க ஆசப்பட்டுகிறன். ஏன்னா இன்னும் ரெண்டு பொட்ட புள்ளைங்கள பெத்து வச்சினு கீறனே! அவுங்களுக்கு இந்த அரசியல்வாதியால எதாவது கஸ்டம் வந்துகினா இன்னா பண்றது.. நீ கல்லாணம் பண்ணிகினு அங்க போய்ட்டா மட்டும் வராதுனு இல்ல. நீ அந்த வூட்டுக்குப் போய்கினாலாவது ஏதோ ஒரு வகையில கொஞ்சமாவது அப்டி நடந்துக்காம தடுக்க வயி கீது இல்ல? அந்த சொயநலம் தான் அது.

அல்லாத்துக்கும் மேல ஏதோ டப்பு தரேன் வாங்கினு ஓடிப் போனு சொன்னவர்க்கு எதிரா நான் இந்த வூட்டு மருமக தான் எனுக்கு எல்லா உரிமையும் கீதுனு வாய்ந்து காட்டு. இதுக்கு அப்பால நான் உனுக்கு வேறெதுவும் சொல்றதுக்கு இல்ல” என்றவர், பிரதாப்பிடம் திரும்பி

“என்ன மன்னிச்சிக்கோங்க தம்பி” என்றவரோ சிற்பியின் மாமாவிடம் திரும்பி

“நீங்க நாள் கெயமை அல்லாம் பாத்து கல்லாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. என் மவ இந்த கல்லாணத்துக்கு சம்மதிப்பா” என்று கந்தசாமி உறுதி அளிக்கவும்

“நீ என்ன டா சொல்ற?” என்று சிற்பியிடம் அவர் மாமா கேட்க

“சரி சம்மதிக்கிறேன்” என்ற வார்த்தை அடுத்த கணமே வந்தது சிற்பியிடமிருந்து.

தன் வார்த்தைக்கு மதிப்பு இல்லை என்றதும் அந்த இடத்தை விட்டு ஆத்திரத்துடன் சில வார்த்தைகளால் சிற்பியையும் அவன் மாமாவையும் அர்ச்சித்து விட்டு விலகிச் சென்றார் திருநீலகண்டன்.

அவர் சொன்ன படியே சிற்பியின் மாமா அடுத்த வாரமே நல்ல நாள் பார்த்துச் சொல்ல திருமணத்திற்கான வேலையையும் தானே பார்த்துக் கொள்வதாக அவர் சொல்லி விட கந்தசாமிக்கு எதற்கும் சிரமம் இல்லாமல் போனது. அதாவது தேவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதைத் தவிர.

அன்று அனைவர் எதிரிலும் அவர் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டு வந்தது தான். அதன் பிறகு தேவி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி வைத்தவர் மகளை இரவு பகல் என்று கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்.

இரவில் தேவி இயற்கை உபாதைக்காக எழுந்தாலோ அல்லது புரண்டு படுத்தாலோ உடனே அவளுக்கு முன் கண் விழித்து எழுந்து அமர்ந்தவரோ அறிவுமதியை எழுப்பி அவளுக்குத் துணையாக அனுப்பியவரோ திரும்ப அவர்கள் உள்ளே வரும் வரை நிலையில்லாத ஒருவித தன்மையில் அவர் அமர்ந்திருக்க தொடர்ந்து இதைப் பார்த்த தேவியோ ஒரு நாள் அவர் முன் வந்து அமர்ந்து

“இங்க பார் நைனா உன் மக ஒன்னும் கோழை இல்ல தற்கொலை பண்ணி சாகற அளவுக்கு. அப்படி நெனைச்சிருந்தா என்னைக்கு என்னை அவன் சீரழிச்சானோ அன்னைக்கே நான் அதை செஞ்சிருப்பேன். நான் ஒன்னும் புரட்சிகார அப்பா இல்லனு சொல்லிகின நீ தான் சின்ன ஐயாவக் கல்யாணம் பண்ணச் சொன்ன. அதுல உனுக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லனாலும் பிரதாப் ஐயாவுக்காக தான் நீ சொன்னனு எனுக்கு அந்த வர்மாவ கல்யாணம் பண்ண சொன்னப்பவே தெரியும்.

என் வாழ்க்கைய வீணாக்கினவன் கையாலேயே தாலி கட்டி நான் வாழணும்னு தான் உன் இஷ்டப் படி நான் யாரையோ கல்யாணம் பண்ணி அவனுக்கு எதிரா வாழ்ந்து காட்றத விட என்னோட இந்நிலைக்கு காரணமானவனையே கட்டி அவனை சாகற வரைக்கும் எனுக்கு செஞ்ச பாவத்துக்கு பழி வாங்கத் தான் நானும் பேசாம இருந்துட்டேன். அத்தால நான் தற்கொலை செய்துக்குவேனு பயப்படாம போய் தூங்கு நைனா” என்று அவரின் பயம் போக்கியவளோ அதன் பிறகு தனக்கான தினசரி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் தேவி.

அன்று திருநீலகண்டத்திற்குப் பிறகு வருத்தத்துடன் சென்ற மைதிலி கூட இன்று வரை இவர்கள் யாரிடமும் பேசவில்லை. ஒரு தந்தையாய் அவருக்கு தேவி மேல் இல்லாத உரிமையா நமக்கு என்று எண்ணியவர் கூடவே தேவி பிரதாப் விஷயத்தில் தனக்கு அப்படி ஒரு விருப்பமே இல்லை என்று சொன்ன பிறகு தாங்கள் என்ன செய்து அவள் மனதை மாற்ற முடிந்திடப் போகிறது என்று ஒன்றும் செய்ய முடியாத கையாளாகாத தனத்துடன் ஒதுங்கி விட்டார் அவர்.

பிரதாப் தான் ரொம்பவே நொறுங்கிப் போனான். கடைசி வரை தன் மேல் தேவிக்குக் காதல் வராது என்பதை அவள் வாய் வார்த்தையாய் கேட்டதிலிருந்து அவனுக்கு அவன் மேலேயே கோபம் வந்தது. முன்பே தன் காதலை அவளுக்குக் கொஞ்சமாவது உணர்த்தி இருக்கலாமோ இல்லை என்றால் காதல் என்றால் என்ன என்பதையாவது உணர வைத்திருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்க தேவியை இழந்து விட்டோம் என்பது தான் அவனுக்குப் பெரும் வலியைக் கொடுத்தது.

இதோ விடிந்தால் திருமணம்! திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட சிற்பியோ வேற எந்த சடங்குக்கோ ஆடம்பரத்திற்கோ ஒத்துக் கொள்ளவில்லை. அவனுடைய குல சாமியான அந்த பெண் தெய்வத்தின் பாதத்தில் தாலியை வைக்கச் சொல்லி அதைத் தன் மாமா கையால் எடுத்துக் கொடுக்கச் சொன்னவனோ கூடவே தன் பர்சில் இருந்த தன் தாயின் புகைப்படத்தை எடுத்து திருமணத்திற்கு வந்திருந்த தோழியான நிரல்யா கையில் கொடுத்துத் தன் திருமணத்தை அவர்களும் மானசீகமாகப் பார்ப்பது போல் பிடிக்கச் சொன்னவனோ பின் அறிவுமதி கையிலிருந்த தன் குழந்தையை வாங்கி தேவியின் கையில் கொடுக்க அதில் அவள் கேள்வியாய் அவனை நோக்கும் போதே அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே தன் கையிலிருந்த தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றை தேவியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு கட்டி அவளைத் தன் மனைவி ஆக்கி இருந்தான் சிற்பிவர்மன்.

திருமணம் நடந்த அன்றே தங்களுக்குள் கிடைத்த சிறு தனிமையில் சிற்பியிடம் பேசினார் கந்தசாமி.
“என் மவ, ரவ இல்ல நெறையவே கோபக்காரி தான். ஆனா நீங்க சொல்லிக்கினா போல அடங்காதவளோ திமிர் புடிச்சவளோ இல்ல. அவள மைதிலி அம்மா கேட்டுகின மாதிரி அவங்க வூட்டுக்கு மருமவளா அனுப்பியிருந்தா நிம்மதியா சந்தோசமா இருந்திருப்பா.

ஆனா தெனம் தெனம் குத்த உணர்ச்சில செத்துகினு கெடப்பா. அதே இப்ப உங்களுக்குக் கல்லாணம் கட்டி குடுத்ததால அவ சந்தோசம் நிம்மதி பறி போய்கினாலும் குத்த உணர்ச்சி இருக்காது. இன்னா ஒன்னு.. டெய்லிக்கும் உங்க மேல காண்டு வெறுப்பு தான் வளர்ந்துகினு போகும். அது நீங்க அவளுக்கு செஞ்சிகின அநியாயத்தால வந்தது. அப்போ நீங்களும் அத்த அனுபவிச்சி தான் ஆகணும்.

இன்னா தான் நான் வெகுளியா இருந்து கீனு மனுசங்கள அப்படியே நம்பிகினாலும் எனுக்கும் ரவோண்டு மனுசங்கள எட போட்டுக்கத் தெரியும். அத்தால தானோ இன்னாமோ உங்க பேச்சும் நீங்க நடந்துகினதும் எனுக்கு வித்தியாசாமாவும் எத்தையோ நீங்க எங்களான்ட மறச்சினகின மாதிரியும் பட்டுச்சி. அல்லாத்துக்கும் மேல உங்கள கல்லாணம் பண்ணிகினா என் மவ வாய்க்கல இப்போ இல்லனாலும் எதிர்காலத்துல ஏதோ ஒரு மாற்றம் வரும்னு என் மனசுக்கு படுது.

அத்தான் உங்க மாமா சொல்லிக்கினதும் ஒடனே இந்த கல்லாணத்துக்கு ஒத்துக்கினேன். எப்டியா பட்ட ஆம்பளையும் ஒரு கட்டத்துல தன் மவளுக்காண்டி மாறுவாங்க. அப்டி நீங்களும் மாறுவீங்கனு நம்புறேன். அப்டியே நீங்க மாறிக்காம இருந்தாலும் எனுக்கு கால் தான் ஊனமா பூட்சே காண்டி என் மவள வச்சிப் பாத்துக்க முடியாத அளவுக்கு இன்னும் மனுசு ஊனமா போன ஈன பெறவியா நான் போகல. அப்டி போகவும் மாட்டேன்” என்று நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுத்தாலும் எப்போதும் அவள் எனக்கு மகள் தான் என்று அவனுக்கு மறைமுகமாக எச்சரித்தவரோ அதே போல் தான் இந்த திருமணத்திற்கு எதற்கு சம்மதித்தேன் என்பதையும் அவனுக்குச் சொல்லி முடித்து விலகிச் சென்றார் கந்தசாமி.

அவரைப் பார்க்க சிற்பிக்குப் பெருமையாக இருந்தது. உடல் ஊனமான இந்த நிலையிலும் தன் மகளை விட்டுக் கொடுக்காத இவர் எங்கே அதே தன் சுகம் தான் முக்கியம் என்று விலகிப் போன தன் தந்தை எங்கே என்று ஒரு வினாடி என்றாலும் அப்படி யோசிக்கத் தான் செய்தான் சிற்பி.

திருமணம் முடிந்ததும் தேவி குடும்பத்தார் கோவிலில் இருந்து அப்படியே சென்று விட தேவி குழந்தையுடன் சிற்பியின் மாமா வீட்டுக்கு வந்தாள். மணமக்களுடன் குழந்தையையும் சேர்த்தே ஆரத்தி எடுத்தார் நிரல்யாவின் தாய் பத்மா. பிறகு நிரல்யா அழைத்துச் செல்ல ஓர் அறைக்குச் சென்றவள் தான் தேவி. அதன்பிறகு அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை அவள்.

எந்த சடங்குக்கும் அவள் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஏனோ சிற்பியின் தாய் படத்திற்கு மட்டும் பூ போட்டு விளக்கு ஏற்றச் சொன்னதற்கு மட்டும் அதுவும் சிற்பியின் மாமா சொல்லவே அவரிடம் மறுக்க முடியாமல் அதைச் செய்தாள் அவள்.

சிறுவயதில் இருந்து பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுத்து வந்த பழக்கம் என்பதால் அவளால் அவள் இயல்பை மாற்ற முடியவில்லை.
தேவி இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட அங்கு அவள் குடிக்கவில்லை. நிரல்யாவின் தாய் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் மறுத்து விட பச்சை உடம்புக் காரி என்பதால் அவளை அப்படியே விட மனமில்லாமல் நிரல்யாவை அழைத்து தேவி எதிரிலேயே ஆன்லைனில் உணவை ஆர்டர் பண்ணச் சொன்னவர் பின் அந்த உணவு வந்ததும் இந்த உணவு எங்கள் பணத்தில் வாங்கியதாக சொல்லியவரோ ஒரு தாயாகத் தானே அவளுக்கு உணவு ஊட்டி விட்டார் அவர்.


காலையில் திருமணம் முடிந்து ரதியையும் குழந்தையையும் தன் மாமா வீட்டில் விட்டு விட்டு வெளியே போனவன் தான் சிற்பி. அவனும் சாப்பிட வில்லை வீட்டில் இருந்தவர்கள் சாப்பிட்டார்களா என்று எதையும் கேட்கவில்லை அவன்.

பத்மாவுக்குக் கூட சிற்பிக்கும் ரதிக்கும் இடையே நடந்த விஷயங்களும் அதனால் நடந்த இந்த திருமணமும் தெரியும் என்பதால் ரதி தன் வெறுப்பைக் காட்டும் விதமாக முதல் நாளே அந்த வீட்டில் பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் போர்க் கொடி தூக்க, பத்மாவுக்கோ மனது கேட்காமல் சிற்பியை போனில் அழைத்து இங்கு நடந்ததைச் சொன்ன போது கூட எந்த வித அனுசரணையான பேச்சையோ சமாளிப்போ தெரிவிக்கவில்லை அவன்.

மிகவும் நிதானமாக அவனுக்கான வேலையை முடித்துக் கொண்டு இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு வந்தான் சிற்பி. அதற்கு முன்பே ரதி தான் இருந்த அறையில் புகுந்து கொண்டு கதவை அடைத்துக் கொண்டாள் அவள்.

கண்கள் எல்லாம் சிவந்திருக்க முகமும் உடலும் சோர்ந்து போய் ஹால் ஸோஃபாவில் வந்து அமர்ந்தவனை காலையிலிருந்து அவன் செய்கையில் பொறுமை இழந்தவளான நிரல்யா சிற்பியை ஏதோ கோபமாகக் கேட்க நினைத்தவள் சோர்ந்த அவன் முகத்தைப் பார்த்ததும் தன் கோபத்தை விட்டவள்

“வா வர்மா வந்து சாப்பிடு” என்று அழைக்க ஸோஃபாவின் பின்புற விளிம்பில் தலை சாய்ந்து கண் மூடி இருந்தவனோ கண் திறவாமலே

“ரதி சாப்பிட்டாளா?” என்று கேட்க அந்த குரலே அவனும் காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை என்பதற்கு சாட்சியாக நாக்கும் தொண்டையும் வறண்டு போய் ஒலிக்க அதை அங்கிருந்து உணர்ந்த பத்மாவதியோ அவன் முன் ஒரு டம்ளர் தண்ணீரை நீட்டிய படி

“அவ சாப்பிட்டா வர்மா நீ வந்து சாப்பிடு” என்று அழைக்க அந்த குரலே அவர் பொய்யுரைக்கவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது இருந்தும் அவரைத் தன் நேர் கொண்ட பார்வையால் சந்தித்தான் சிற்பி. அந்த பார்வையே அவன் கேட்க வந்த கேள்வியை உணர்த்த

“நிஜமா அவ சாப்பிடா வர்மா. நான் தான் உணவு வரவழைத்து அவளுக்கு வம்பு பண்ணி ஊட்டி விட்டேன். அவளும் குழந்தையும் எப்பவோ தூங்க போய்ட்டாங்க. எதுவா இருந்தாலும் அவ கிட்ட காலையில பேசலாம் இப்போ நீ வந்து சாப்பிடு பா” என்று அவர் அழைக்கவும்

“மாமா நீங்க எல்லோரும் சாப்டீங்களா?” என்று கேட்ட படி எழுந்தவன் காலையில் தன் திருமணத்திற்காக தான் அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையில் இன்னும் இருப்பதை அறிந்தவனோ குளிக்க நினைத்துத் தன் அறைக்குப் போக நினைக்க அதைத் தான் உள் பக்கமாக பூட்டியிருந்தாள் ரதி.

அவன் எண்ண ஓட்டத்தை உணர்ந்த நிரல்யாவோ அவனுக்கு வேண்டியதை வேறு ஒரு அறையில் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்ல அங்கே சென்று குளித்து முடித்து வேறு உடை மாற்றி சாப்பிட்டவனோ பிறகு தன்னுடைய அறை வாசலில் நின்று ரதி உள் தாழ்ப்பாள் இட்டிருந்த கதவை உள்ளே இருக்கும் அவன் குழந்தையை நினைத்து மெதுவாக இரண்டு முறை தட்ட உள்ளேயிருந்து எந்த சத்தமும் இல்லை. ஏன் குழந்தையின் சிறு சிணுங்கல் கூட இல்லை.

சற்று நேரம் அங்கேயே நின்று பார்த்தவனோ பின் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து விலகிச் சென்றான் சிற்பி.
பக்கத்து அறைக்கு வந்தவனோ விட்டத்தைப் பார்த்த படி கட்டிலில் படுத்து வலது கையைத் தன் நெற்றியின் மேல் வைத்து கண்களை மூடி எதையோ யோசிக்க அந்த யோசனையின் முடிவாக எழுந்து அந்த அறையில் உள்ள பீரோவில் எதையோ தேடியவன் அவன் தேடிய சாவி கிடைத்ததும் அந்த வீடு தோட்டத்துடன் கூடிய தனி வீடு என்பதால் அங்கிருக்கும் ஒவ்வொரு அறையிலிருந்தும் தோட்டத்திற்குப் போக தனி கதவுடன் கட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி அந்த கதவுகள் இருப்பதே தெரியாத வகையில் பார்ப்பவர்களுக்கு அதுவும் சுவர் போல நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது.

அந்த கதவுகள் எல்லாம் வெளிப்புறமாக பூட்டியிருக்கும் என்பதால் தேவி தங்கியிருக்கும் அறையிலிருந்து தோட்டத்திற்குச் செல்லும் கதவின் சாவியை எடுத்து சத்தமில்லாமல் அந்த கதவைத் திறந்து பூனை நடையிட்டு அறைக்குள் வந்து பார்க்க அவன் நினைத்தது போலவே ரதி அவன் முன்பு தட்டிய கதவில் சாய்ந்த படி சம்மணமிட்டு தரையில் அமர்ந்த படி கண்கள் மூடி மடியில் குழந்தையைப் போட்டுத் தட்டிக் கொண்டிருந்தாள் அவள். அது அந்த விடி விளக்கின் வெளிச்சத்திலும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN