சுவாசம் - 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 9


அப்பா!
5 வயதில் ஹீரோ!
10 வயதில் நண்பன்!
20 வயதில் வில்லன்!
30 வயதில் காமெடியன்
40 வயதில் நல்லவன்!
50 வயதில் ஹீரோ!


தான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட இணக்கமே காட்டாமல் நிற்கும் சிற்பியின் மேல் கோபம் வர அதையும் மீறித் தன்னை இப்படி நிறுத்திய விதியை நினைத்துத் தான் ரதிக்குக் கோபம் வந்தது. அதுவே இறுதியில் சுய இரக்கத்தைக் கொடுக்கத் தன்னையும் மீறிக் கண் கலங்கினாள் அவள்.

அவன் முன் ஆடை மாற்றவும் விரும்பாமல் வேறு எங்கே மாற்றுவது என்று தெரியாமல் அவள் தவிக்க, அவள் தவிப்பையும் கலங்கிய விழிகளையும் பார்த்தவன்

“இப்போ நான் வெளியே போகிறேன். பத்து நிமிடம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள புடவை மாற்றிக்க. நான் வெளிப் பக்கம் பூட்டு போடுறேன். பெரிய அறிவாளி மாதிரி உள் பக்கம் பூட்டு போட்டா இவன் எப்படி வருவானு நினைத்து ஏதாவது செய்தா கதவை உடைக்கவும் தயங்க மாட்டான் இந்த சிற்பி.. ஞாபகம் வைச்சிக்க!” என்ற எச்சரிக்கை சொல்லுடன் அவன் விலகிச் செல்ல, சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டாள் ரதி.

‘திருமணத்திற்குப் பிறகு நடக்கும் தாம்பத்தியம் என்பது சகஜம் தான். ஆனால் அது சாதாரண திருமணத்திற்குப் பொருந்தும். எனக்கு நடந்த திருமணம் அப்படி இல்லையே? அதில் இன்றே தாம்பத்திய உறவை எதிர்பார்ப்பவன் என்றால் அப்போ இவன் எப்படிப் பட்ட வெறியனாக இருக்க வேண்டும்? இப்போது அவனை அடித்து வீழ்த்தத் தன்னிடம் பலம் இல்லையே?’ என்று ஏங்கித் தவித்தவள் பின் அவன் சொன்ன காலக்கெடு நினைவு வர அவசரமாக ஆடையை மாற்றினாள் ரதி.

அவன் சொன்ன நேரம் முடிய அழகான பட்டு வேஷ்டி சட்டையில் உள்ளே நுழைந்தான் சிற்பி. அதில் இன்னும் நெஞ்சுக்குள்ளே ரயில் வண்டியே ஓடியது அவளுக்கு. கூடவே அவன் கைகளில் பழத் துண்டுகள் அடங்கிய சிறு தட்டும் ஒரு டம்ளர் பாலும் பார்த்தவள்

‘ஓ… இதை எல்லாம் சாப்பிட்டு அவன் உடலுக்கு சக்தி ஏற்றி இரவு முழுக்க என்னை உயிரோட வதைக்கப் போறானோ?!’ என்ற எண்ணம் எழ பயத்தில் அவள் கை கால்கள் எல்லாம் சில்லிட ஆரம்பித்தது.

அவனோ கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்து திராட்சையும் ஆப்பிளும் அடங்கிய சிறு தட்டை அவளிடம் கொடுத்து அவளைச் சாப்பிடச் சொல்ல

“வேணா…. ம்…” என்ற வார்த்தை தந்தி அடித்தது ரதியிடமிருந்து.

“அடிக்கடி என்ன கோபப் பட வைக்காத ரதி. காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடலையாம். இப்படி இருந்தா குழந்தை எப்படி ஆரோக்கியமா இருப்பா?” என்று அதட்டியவன் “இந்தா சாப்பிடு” என்று மறுபடியும் தட்டை நீட்ட, அதை வாங்காமல் மறுபடியும் அவள் மறுக்கவும்

“நான் சொன்னா அதை செய்யனும். உனக்கு வேணுமா இல்ல வேணாமானு எல்லாம் நான் கேட்கலை. ம்ம்…. சாப்பிடு” என்று அவள் மேலுள்ள அக்கறையைக் கூட அவன் உறுமலோட சொல்லவும், அவன் மேல் அவளுக்குக் கோபம் வெறி இருந்தாலும் பயம் அந்த இரண்டையும் வென்று விட கை நடுங்க ஒரே ஒரு திராட்சையை மட்டும் எடுத்து வாயில் வைத்தாள் ரதி. அதைப் பார்த்தவன்

“சரி பழம் வேணாம். இந்த பாலையாவது குடி” என்று சொல்லி பால் டம்ளரை அவள் கையில் திணிக்க, கையில் அவள் நடுக்கத்தை அவன் உணரவும் அவள் கையைத் தன் கைக்குள் கொண்டு வந்தவன் தன் மென்மையான அழுத்தத்தால் அவள் நடுக்கத்தைப் போக்க நினைத்தவன், உடனே

“இரு நானே கொடுக்கிறேன்” என்று சொல்லி பால் டம்ளரை அவள் உதட்டருகில் வைக்க, அந்த வீட்டில் எதுவும் சாப்பிடக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தவள் தான் ரதி. ஆனால் இன்று அவனே தன் கையால் அவளுக்குக் கொடுப்பதைக் கூட அவன் கையின் அழுத்தத்தால் பயத்தில் அனைத்தையும் மறந்தவள் ஒரே மூச்சாக அந்த பாலை அருந்த அதை முழுமையாகக் குடிக்க விடாமல் தடுத்தவன் அவள் மீதம் வைத்த பாலை சிற்பி அருந்த நம் முன்னோர்கள் சொல்லும் சம்பிரதாயப் படி முதன் முதலில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் தம்பதிகளில் கணவன் அருந்திக் கொடுக்கும் மீதிப் பாலை மனைவி அருந்துவதற்கு எதிர் மாறாக இங்கு தன் மனைவி ரதி அருந்திக் கொடுத்த மீதியை சந்தோஷமாக சிற்பி குடிக்க அதை எல்லாம் உணரும் நிலையில் ரதி இல்லை.

அவளுடைய எண்ணம் பார்வை பயம் எல்லாம் தன்னவன் பிடித்திருந்த கையிலேயே இருந்தது. அவன் சாதரணமாகப் பிடித்திருந்த அந்த பிடி கூட அவளுக்கு பெரும் வலியாக மேற்கொண்டு என்ன மாதிரி வலிகளை எல்லாம் தாங்க வேண்டி இருக்குமோ என்ற அச்சத்தைத் தான் அவளுக்குத் தந்தது.

பிறகு சிற்பியோ மென்மையாக பிடித்திருந்த அவள் கையை விடாமலே தன் முகத்தை மனைவியின் முகத்தருகே கொண்டு செல்ல அவன் பிடியிலிருந்து தன் கைகளை உருவியவளோ கூடுமானவரை அவன் மார்பில் தன் கைகளை வைத்துத் தடுத்தவளோ கூடவே தன் முகத்தை இப்படியும் அப்படியுமாகத் திரும்பி எதிர்ப்பைத் தெரிவிக்க, அவளின் செயலை சுலபமாக சமாளித்து மனைவியின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தம் பதித்தவனோ

“இது தான் நான் உன் விருப்பம் இல்லாமல் கொடுக்கற முத்தம். இனி எல்லாம் உன் விருப்பப்படி தான் நடக்கும். அதனால எதையும் யோசிக்காம பயப்படாம தூங்கு” என்றவன் மனைவியை விட்டு விலகி பட்டு வேஷ்டி சரசரக்க கட்டிலின் மறுகோடியில் வந்து படுத்துத் தூங்க முயன்றான் சிற்பி.

ரதிக்கோ அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். தன்னை சுலபமாக அடக்கி அவன் கொடுத்த மென்மையான முத்தம் அதிர்ச்சி என்றால் மேற்கொண்டு முன்னேறாமல் விலகிச் சென்று அவன் தூங்கியது ஆச்சரியம். அவளும் கண்களை மூடி இருந்ததால்

‘பயத்தில் நாம் தான் அவன் முத்தம் தந்தது போல் கனவு கண்டோமோ? உண்மையிலேயே அப்படி ஒன்றும் நடக்கவில்லையா?’ என்று அவள் யோசித்து வகிடுக்குக் கீழே தன் ஆள்காட்டி விரலை அவள் ஓட விட அங்கே அவன் இதழின் ஈரமிருந்தது. அதை உணர்ந்ததும் உடல் தூக்கி வாரிப் போட அவன் தந்த முத்தம் நிஜம் தான் என்பதை அறிந்தவள் கூடவே அவன் இறுதியாக சொன்ன வார்த்தையை மனதில் கொண்டு வர

‘சொன்னான் பாரு ஒரு வார்த்தை. உன் விருப்பம் இல்லாமல் எதுவும் இங்கு நடக்காது. அதாவது நானா இவனைத் தேடி வருவேனு நினைத்தானா?’ என்று மனதுக்குள் நினைத்துப் பொங்கியவள் தன் தலையை சிலுப்பிக் கொண்டு அதே கோபத்துடன்

“அடேய் கஸ்மாலம்! கம்னாட்டி! உனக்கு இன்னா தில்லிருந்தா எங்கிட்டேயே டபாய்க்கிற நீ? அப்டியே இவரு பெரிய மன்மதன் பாரு.. நீ செஞ்சது எல்லாம் ஊர் கடைஞ்சியெடுத்த மொள்ளமாரி கேப்மாறித் தனம். இதெல்லாம் தெரிஞ்சிகின பிறகும் உன்கிட்ட மயங்கி உன்னைய விரும்பி நான் ஏத்துக்குவேனு எந்த நம்பிக்கைல அந்த வார்த்தைய சொன்ன? என் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் நீ சொன்னது நடக்காது” என்று தன் மனநிலையை முதல் நாளே அவனுக்கு அவள் உணர்த்த

இதையெல்லாம் அவளை விட்டு விலகித் தூங்கப் போனவன் ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு வலது கையை நெற்றியில் வைத்துக் கண் மூடிய படி படுத்திருந்தவனோ இவ புலம்பலைக் கேட்டுவிட்டு அந்த நிலையிலிருந்து மாறாமல் ஏன் அவன் கண்களைக் கூடத் திறக்காமல்

“அடியேய் வாயை மூடு டி. உன்னோட விருப்பமில்லாமல் எதுவும் நடக்கக் கூடாதுனு தான் விலகி வந்தேன். இப்படியே என்னையும் என் மகளையும் தூங்க விடாம நொய் நொய்னு கத்திகிட்டு இருந்தேனு வை உன்னைய கில்மா பண்ணிடுவேன். எப்படி வசதி?” என்றவன் சட்டென எழுந்து தன் வேஷ்டியை மடித்துக் கட்டிய படி அவள் அருகில் செல்ல அதே நேரம் அவன் மகளோ அடுத்த வேலை பசிக்கு அழ ஆரம்பிக்கவும் உடனே மகளைத் தூக்கி மனைவியிடம் தந்தவனோ ஒரு அழுத்தப் பார்வையை அவளிடம் செலுத்திய படி கூடவே ஒரு விஷமச் சிரிப்புடன் விலகிச் சென்று படுத்தான் அவளுடைய பொறுக்கி.

ரதியும் மகளுக்கு வேண்டியதைச் செய்து பசியாற்ற அந்த நேரமெல்லாம் அவள் மனதில் ஓடியது இது தான். ‘இவன் எதற்கு பூட்டின அறைக்குள் வந்தான்? அப்படி வந்தும் ஏன் என்னை எதுவும் செய்யாமல் இப்படி நல்லவன் போல் நடித்து ஒதுங்கிப் போகிறான்? இவனுடைய நோக்கம் என்ன? எதற்காக இந்த வேஷம்?’ என்றெல்லாம் யோசித்து மண்டையை உருட்டியவள் எதற்கும் பதில் கிடைக்காமல் போகவும் தூங்கும் அவனையே எழுப்பிக் கேட்டால் என்ன என்ற முடிவுடன் மகளைத் தொட்டிலில் கிடத்திவிட்டு அவனை நெருங்கி எழுப்பக் கை நீட்டியவளோ அது அவன் மேல் படும் முன்னே தீ சுட்டார் போல் விலகியவள்

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற மாதிரி நான் அவனை எழுப்பிக் கேட்கப் போக இதுதான் சாக்குனு அவன் என் மேல பாய்ஞ்சிட்டா என்ன பண்ணுறது? இப்போ தானே சொன்னான் என் விருப்பம் இல்லாமல் தொட மாட்டேனு.... க்கும்! இந்த கஸ்மாலம் ஒருவேளை கை தானே தொடாது ஆனா என் இதழ் தொடும்னு சொல்லி மறுபடியும் முத்தம் தர எழுந்து வந்தா? ஏற்கனவே என்னிடம் எந்த உரிமையும் இல்லாதப்பவே அந்த இருட்டுல முத்தம் தந்தவன் இப்போவா விட்டுடுவான்?’ என்று தன் மனதாலே பல கேள்விகளைக் கேட்டவள் இறுதியில் அவனுக்கு அடங்கிக் கட்டிலில் மறு கோடியில் படுத்துத் தூங்க முயன்றாள் ரதி.

மறுநாள் விடிந்து வெகு நேரம் ஆகியும் ரதி ரூமை விட்டு வெளியே வராததால் ஏதாவது தப்பான முடிவுக்கு ரதி போய் இருப்பாளோ என்ற பயத்தில் பத்மாவதி வேகமாகக் கதவைத் தட்ட வந்து கதவைத் திறந்தது என்னமோ சிற்பி தான். அவனைப் பார்த்து இவன் எப்படி பூட்டிய ரூமுக்குள்? அதுவும் ரதி ரூமுக்குள்! என்று பத்மாவதி அதிர்ச்சியுடன் நிற்கவும்

“என்ன பத்துமா உள்ள பாப்பா தூங்கறா இல்ல? நீங்க பாட்டுக்கு இப்படி கதவைத் தட்டுறீங்க! கொஞ்சம் கூட உங்களுக்குப் பொறுமையே இல்லை. நைட் முழுக்க ரதி தூங்கல இப்போ தான் தூங்கறா. இப்போ என்ன காலையிலே எழுந்து தான் ஆகனும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? போங்க அவ பொறுமையா எழுந்து வரட்டும். பாப்பா எழுந்தா ரதியை தொந்தரவு பண்ணாம நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்று அவரின் அதிர்ச்சியைக் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இது கணவன் மனைவிக்குள் சகஜம் என்பது போல் அவரிடம் பேசியவன் “ராத்திரி இவ தூங்க விடமாட்டேன்றா. பகல்ல இவங்க தூங்க விடமாட்டேன் என்றாங்க” என்று முணுமுணுத்து விட்டு தன் மகளுக்காகக் கதவைத் திறந்த படியே வைத்து விட்டுப் போய் கட்டிலில் படுத்துத் தன் தூக்கத்தைத் தொடர்ந்தான் அந்த கள்வன்.

இரவு முழுக்க மனைவி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்திருந்ததையும் தான் தூங்கும் சாக்கில் பார்த்துக் கொண்டிருந்தவன் தானே! அந்த எண்ணத்தில் மனைவி இரவு முழுக்கத் தூங்கவில்லை என்று அவன் சொல்ல, அப்போது தான் எழுந்த ரதியோ இதைக் கேட்டு அவமானத்தில் முகம் சுளித்தாள்.

அதன் பிறகு அவன் எப்போதும் போல் சகஜமாக இருக்க ரதி தான் மறுபடியும் திண்டாடிப் போனாள். கணவன் மனைவிகுள் தான் எல்லாம் சகஜமாகி விட்டதே என்று நினைத்து பத்மாவதி ரதியை சிற்பிக்கு வேண்டியதைப் பார்த்துச் செய்யச் சொல்ல அவளோ மறுக்க பிறகு சிற்பியின் மாமாவோ எடுத்த உடனே அவளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்க வேண்டாம். சின்னப் பெண் அவளாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாறட்டும் என்று சொல்லி அனைவரையும் தடுத்து விட அதையே சலுகையாக எடுத்துக் கொண்டு ரதி அங்கே சாப்பிடாமல் முரண்டு பிடிக்க இதையெல்லாம் பார்த்த சிற்பிக்குக் கோபம் தான். ஆனால் மாமா சொன்ன பிறகு அவனால் என்ன தான் செய்ய முடியும்?

இதற்கிடையில் பக்கத்து வீட்டிலிருந்த வயதான பாட்டி அவர்கள் வீட்டிற்கு வந்தவர் சிற்பியிடம் பூவைக் கொடுத்து ரதி தலையில் வைத்து விடச் சொல்லி பின் அதே போல் குங்குமத்தைத் தந்து ரதியின் வகிடிலும் தாலியிலும் வைக்கச் சொன்னார். இதற்கெல்லாம் ரதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவளுக்கு சிற்பி மட்டும் தானே எதிரி... ஆனால் அவளுக்குள் கோபம் ஏறி கொண்டு தான் இருந்தது

அன்று பின்புற கட்டிற்கு எதற்கோ ரதி செல்ல வேண்டி வர அப்போது அங்கு
“உன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகுதோனு அம்மா ரொம்ப பயந்தாங்க வர்மா. ஆனா ஒரே நாள் இரவுக்குள்ள நீ ரதியை சமாதானப் படுத்திடுவேனு அவங்க நினைக்கவில்லை. அதையும் நீ செய்திட்டியேனு சந்தோஷப் பட்டாங்க. ஆனா ரதி மறுபடியும் முரண்டு பிடிக்கவோ இப்போ மறுபடியும் அவங்களுக்குக் கவலை வந்துடுச்சி” என்று நிரல்யா நண்பனின் வாழ்வை நினைத்துத் தன் தாய் பட்ட கவலையைச் சொல்ல அதே கவலை தான் சிற்பிக்கும். இனி வரும் வாழ்வில் ரதியை எப்படி மாற்றப் போகிறேன் என்பது தான்.

அதை அவன் முகத்தில் அறிந்தவள் “டேய்! அதற்கு நான் அம்மா கிட்ட என்ன சொன்னேன் தெரியுமா டா?.. என்று இழுத்து நிறுத்தியவள் “கவலைப்படாதீங்க மம்மீ! சிற்பிக்கு கௌரவம் தான் முக்கியம். அதற்காக அவன் என்ன வேணா செய்வான். அதுவுமில்லாம அவன் காதல் மன்னன் ஜெமினி கணேசனாச்சே! சோ கொஞ்சி கொஞ்சியே அவன் பொண்டாட்டிய வழிக்குக் கொண்டு வந்துடுவானு சொன்னேன்” என்று சொல்லி அவள் சிரிக்க

தோழியின் மனநிலையை உணர்ந்தவனோ தானும் அச்சூழ்நிலையை மாற்ற நினைத்து “இதுக்குத் தான் உன்னை உங்க அம்மா கூட சேர்ந்து பழைய படம் எல்லாம் பார்க்க வேணாம்னு சொல்றது. அதென்ன நிரல் ஜெமினி கணேசன்! ஏன்? இந்த காலத்து யூத் ஸ்டார் யாரும் உன் கண்ணுக்குத் தெரியலையா? என்று சலித்தவன் “நான் வக்கீல் மா! யாரையும் பேசியே வசியம் பண்றவன். என் வீட்டுப் பறவையான ரதி எல்லாம் எனக்கு எம்மாத்திரம் சொல்லு” என்று அவன் தோழியின் காலை வாற

இதையெல்லாம் மறைவாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரதிக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது. இரவு சிற்பி தன் அறைக்கு வந்து ஆடை மாற்றச் சொன்னது பிறகு காலையில் எனக்கு முன்னே அறைக் கதவைத் திறந்து அவ்வளவு பேசியது எல்லாம் அவன் கவுரவத்துக்காகவும் நான் சகஜமான வாழ்க்கை தான் வாழ்கிறேன் என்பதைக் காட்டுவதற்காகவும் தான் என்பதை உணர்ந்து கொண்டாள் அவள். அப்போது முடிவு எடுத்தாள் ரதி. இனி வரும் நாளில் கணவனின் கவுரவத்திற்குத் தான் இடைஞ்சலாக இருக்க வேண்டும் என்று...

திருமணத்திற்குப் பிறகு ரதியின் வாழ்வில் மாற்றம் நிகழவில்லை என்றாலும் அவள் மகளான சந்திராவின் வாழ்வில் மாற்றம் வரத்தான் செய்தது. ரதி தன் மகளைக் கொஞ்சிப் பேசி சீராட்டாவே மாட்டாள். அதற்காக முகம் திருப்பவும் மாட்டாள். ஆனால் மகளுக்கு வேண்டியதைச் செய்வாள்.

அதனாலோ என்னவோ சிற்பி தன் மகளைக் கண்ணே மணியே பட்டு செல்லம் ராஜாத்தி என்று கொஞ்சுவதைக் கேட்டு தந்தையிடம் ஒட்டிக் கொண்டாள் அவள். அதிலும் தந்தையைப் பார்த்தாலே அவன் அவளைத் தூக்கிக் கொஞ்சும் வரை தன் கை கால்களை உதைத்துக் கொண்டு அவனை ம்…ம்…. என்று அழைக்கும் போது சிற்பிக்கு உலகமே மறந்து போகும்.

என்ன வேலை இருந்தாலும் தினமும் மாலை சீக்கிரம் வீடு வந்து மகளைக் கொஞ்சுவதையே வழக்கமாக வைத்திருந்த சிற்பி ஒரு நாள் இரவு தாமதமாக வந்தவன் தூங்கும் மகளைத் தொந்தரவு பண்ணாமல் அவள் தூங்கும் அழகைக் கண் கொட்டாமல் சிறிது நேரம் பார்த்திருந்தவன் பிறகு சென்று படுத்து விட கணவனைத் தேடி அழுத மகளைப் பல சமாதானத்திற்குப் பிறகு இப்போது தான் தூங்க வைத்த ரதி இதெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் அதையெல்லாம் கணவனிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள் எந்த நெருக்கமும் இல்லையே. அதனால் அவரவர் இடத்தில் இருவரும் படுத்து விட இவ்வளவு நேரம் அங்கில்லாத தந்தையின் வாசத்தை இப்போது உணர்ந்த மகளோ அழ ஆரம்பிக்க அதை அறியாமல் சிற்பி ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று விட்டிருந்தான்.

அதனால் ரதி எழுந்து மகளை சமாதானப் படுத்த கொஞ்சம் கூட சமாதானம் ஆகவில்லை அவள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பின் மகளைத் தூக்கிக் கணவனின் பக்கத்தில் படுக்க வைக்க அதில் அவளோ அழுகையை நிறுத்தி விட்டு உ….. ஆ… என்ற மழலைக் குரலுடன் தன் கொலுசு காலால் அவன் மார்பில் உதைத்துப் பிஞ்சுக் கையால் தந்தையின் கன்னத்தில் இடிக்க,

இதையெல்லாம் பார்த்த ரதிக்கு கோபமும் அழுகையும் போட்டி போட மேற்கொண்டு அவர்களின் பாசப் பிணைப்பைப் பார்க்கப் பிடிக்காமல் தன் இடத்திற்குச் சென்று படுத்துத் தலை வரை பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு கண்ணீர் விட்டாள் அவள்.

மகளின் செயலில் தூக்கம் கலைந்தவனோ மகளைத் தன் பக்கத்தில் பார்த்து விட்டு ஆச்சரியத்துடன் மனைவியைப் பார்க்க, அங்கு போர்வை மூடிய அவள் செயலில் அவளுக்கு வெட்கம் என்று தவறாக உணர்ந்தவனோ சின்ன சிரிப்புடன் மகளைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தான் சிற்பி. அவனின் கொஞ்சலும் மகளின் சிரிப்புச் சத்தமும் ரதியின் நெஞ்சுக்குள்ளே தீயாய் எரிந்தது.

‘பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து இன்று என் ரத்தத்தைப் பாலாகக் கொடுப்பது நானு. இப்படி ஒரு மகள் தங்கிப் பிறந்தது கூட இத்தனை நாள் தெரிஞ்சிக்க விரும்பாமல் இருந்து விட்டு இன்று வந்து சொந்தம் கொண்டாடி என் மகளை என்னிடமிருந்தே பிரிச்சிட்ட இல்ல நீ?’ என்று எண்ணி கண்ணீர் விட்ட ரதி இறுதியில் மகளை வைத்தே அவனுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் தூங்கப் போக,

இதையெல்லாம் உணராத சிற்பியோ மனைவி தானாகவே மகளைத் தன்னிடம் தந்து சுமூகமான உறவுக்கு வந்து விட்டாள் என்றும் அப்படி இல்லை என்றாலும் மகளே தங்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடுவாள் என்ற கனவுடன் தூங்கப் போனான் அவன்.

கணவனின் கவுரவத்திற்குப் பிரச்சனை கொடுக்க வேண்டும் என்று யோசித்தவளோ இப்போது மகளை அவனிடமிருந்து பிரிப்பதிலே குறியாக இருக்க அதற்கு என்ன செய்கிறோம் என்று யோசிக்காமல் கோபத்தில் அறிவிழந்து தான் பெற்ற மகளுக்கு தாய் பால் தராமல் தவிர்த்தாள் ரதி. சிற்பியின் மாமா குமார் வாங்கிக் கொடுத்த உணவைச் சாப்பிடாமல் அவள் தவிர்க்க

“தேவி நான் தான் உன்னை என் மகள்னு சொன்னனேமா! பிறகு ஏன் மா இந்த அப்பா வாங்கிக் கொடுக்கிறதைக் கூட சாப்பிடாம அடம்பிடிக்கிற?”

“…..” தேவியிடம் மவுனம் மட்டுமே பதிலாக வந்தது.

அப்போது குழந்தை பசிக்கு அழ காலையில் வேலையாளிடம் சொல்லி பால் பாட்டில் வாங்கி வரச் சொன்னவள் அதில் பசும் பாலைக் கலந்து குழந்தைக்குக் கொடுக்க இதையெல்லாம் பார்த்த குமார் என்ன செய்வது என்று தெரியாமல் திணறியவர் எது நடந்தாலும் பரவாயில்லை என்று சிற்பிக்கு அழைத்து அனைத்தையும் சொல்ல அடுத்த வினாடி வீட்டிலிருந்தான் அவன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN