சுவாசம் - 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 10

அன்பான அம்மாவும்
தோழமையான அப்பாவும்
கிடைக்கப்பெற்ற குழந்தைகள் யாரும்
“தடு” மாறியதும் இல்லை..
“தடம்” மாறியதும் இல்லை..!


வீட்டிற்குள் ஆவேசமாக நுழைந்து நேராக ரதியிடம் சென்றவன்
“என்ன டி என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? எதுவும் சாப்பிடாம இருக்கியாம். கூடவே பாப்பாக்கு பால் தராம இருக்க. என்ன டி என்ன தான் உன் பிளான்?” என்று சிற்பி சீற..

“பரவாயில்லையே நான் ஏதோ பிளான்ல இருக்கனு கண்டு பிடிச்சிட்டிங்க! நல்லது.. அப்போ நானும் நேரடியாவே சொல்றன்.
எனக்கு என் மகள் வேணும். அவளுக்கு நான் மட்டும் தான் அம்மாவா அப்பாவா இருக்கனும். உன் மூச்சுக் காற்று கூட அவ மேல படக் கூடாது..”

“அதுக்கு?” கண்ணில் கூர்மையுடன் கணவன் கேட்க

“ஒரே வீட்டில் இருந்தாலும் அவளைப் பார்க்கவோ தூக்கவோ கொஞ்சவோ மாட்டேனு சொல்லு. இனிமே நீ அவகிட்ட இருந்து ஒதுங்கிப் போகனும்”

“அப்படி நான் செய்யலனா?”

“இன்று நடந்ததை நான் தினம் தினம் தொடர வேண்டியிருக்கும்”

தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்ததால் கோபத்தில் தண்டனை கொடுப்பதாக நினைத்துத் தன் கண்ணையே குத்திக் கொண்டானாம் ஒருத்தன். அப்படி ஒரு முட்டாள் தனமான செயலைத் தான் இன்று தேவியும் செய்கிறாள். அது சிற்பிக்குப் புரிய

“அதாவது நான் உன் மேலையும் என் மகள் மேலையும் பாசமும் அக்கறையும் வைத்திருக்கிறது உனக்குத் தெரிந்து தான் இருக்கு. அதனால அதை வைத்து என்ன எமோஷ்னல் பிளாக்மெயில் பண்ணிப் பார்க்கிற. இதுக்கெல்லாம் அசருபவன் உன் கணவன் சிற்பி இல்ல டி. என்ன நடந்தாலும் உன்னையும் என் மகளையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் டி. இந்த பிடிவாதத்தால வீணா தோற்கப் போவது நீ தான் நான் இல்லை” என்று அவன் உறுதி பட சொல்லிய நேரம்.

தந்தையின் குரலில் எழுந்து சிணுங்க ஆரம்பித்தாள் மகள். அவளைத் தூக்கி சிற்பி சமாதானம் செய்ய இவ்வளவு சொல்லியும் அடங்க மாட்டேன்றானே என்று ரதிக்கு வயிறு காந்தத் தான் செய்தது. மகளின் சிணுங்கல் ஒரு கட்டத்திற்கு மேல் அழுகையாய் மாற

“ரதி! பாப்பா பசிக்கு அழறா பாரு..” என்று அவன் தன்மையாக எடுத்துச் சொல்ல

“….”ரதியிடம் அதே பிடிவாதம் மட்டுமே....

“ரதீஈஈஈ….” என்று அவன் சற்று அழுத்தி அழைக்கவும்

“சமையல் அறையில பசும் பால் இருக்கு. வேணும்னா நீங்களே கலந்து கொடுங்க” என்றவள் அவனுக்கு முதுகு காட்டிக் கட்டிலில் படுத்து விட ஒரு வினாடி அவள் முதுகை வெறித்தவனோ பிறகு ஒரு முடிவுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றான் சிற்பி.

கணவன் அங்கில்லை என்பதை அறிந்ததும் பால் கட்டியதால் வலி எடுத்த தன் மார்பை நீவி விட்டவள்

“போ….. போய் உன் மகளுக்கு நீயே பால் கலந்து தா. நான் இப்படி இருந்தா தான் இந்த ரதி யாருனு உனக்குத் தெரியும்” என்று அவள் வாய் விட்டு முணுமுணுக்க

“ஐயயோ!” என்ற குமாரின் திடீர் குரலில் ரதி அடித்துப் பிடித்து வெளியே வந்து பார்க்க

“ஏன் டா பாவி இப்படி பண்ற? உங்க ரெண்டு பேர் பிடிவாத்தால அந்த பச்ச மண்ணக் கொலை பண்றீங்களே? பேசாம என்கிட்டவாது விட்டுடுங்க. நானே அந்த குழந்தையை வளர்த்துக்கிறேன்” என்று கெஞ்சாத குறையாக அவர் கேட்க
சிற்பியோ மகளைத் தன் மடியில் வைத்த படி அமர்ந்து கண்கள் சிவந்திருக்க எங்கோ வெறித்திருந்தான்.

ரதி ஒன்றும் புரியாமல் அவன் மாமாவையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தவள் குழந்தை பசிக்கு இன்னும் அழவும் தானும் அந்த பாலை கலந்து தர மாட்டேன் என்று பிடிவாதத்தில் அமர்ந்திருக்கும் கணவனின் செயலில் தன் பிடிவாதத்தை விட்டவள் சமையல் அறைக்கு ஓடிச் சென்று பாட்டிலில் பாலைக் கலக்க நினைக்க அங்கே கணவன் செய்து வைத்திருந்த செயலில் அவளுக்கு இதயமே ஒரு வினாடி நின்று விட்டது.

அங்கே கண்ட காட்சி குழந்தைக்கு வைத்திருந்த பாலை பாத்திரம் கழுவும் தொட்டியில் கொட்டியிருந்தான் அவள் கணவன். அதைப் பார்த்ததும் ஒருவினாடி கூட தாமதிக்காமல் கை கால்கள் உதற தன் வீம்பை எல்லாம் மறந்து கண்ணில் நீர் முட்ட அவனிடமிருந்து மகளை வாங்கியவள்

“உனுக்கல்லாம் ஈவு இரக்கம் மனசாட்சி இல்லையா? நீ மனுசப் பொறவியே இல்லனு எனக்குத் தெரியும். ஆனா இன்னிக்கு தான் நீ ஒரு அரக்கனு தெரிஞ்சிக்கினேன். துத்தேரி...” என்று காறித் துப்பாத குறையாக குழந்தையைப் பிடிங்கிக் கொண்டு தன் அறை சென்றவள் இயலாமையுடன் பாலைக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.

அதன் பின் தன் மகளின் அழுகுரல் நின்றதும் சிற்பி உள்ளே வர அவனைப் பார்த்ததும் முந்தானையால் அவள் தன் தோளை மூட, மனைவியை நெருங்கி அவள் கண்களில் வழியும் கண்ணீரை ஒரு உயிர்ப்பில்லாத பார்வை பார்த்தவன்

“உனக்கு என் மேலே தான டி கோபம்? அந்த பச்சக் குழந்தை உன்னைய என்ன டி செய்தது? என்னை ஈவு இரக்கம் இல்லாதவன்னு சொன்னியே அப்ப நீ செய்த வேலைக்கு என்ன சொல்லுவ? ஒரு பெத்த தாயா நீ செய்ய நினைத்தததைவிட நான் இப்போ செய்தது ஒன்னும் பெரிசு இல்லை. என் மனதைக் கட்டுப்படுத்தி நான் இப்போது செய்த செயலால் நானே என்னை வெறுக்க வெச்சுட்டியே டி பாவி.. நீ என்ன சொன்னாலும் நான் என் மகளைத் தூக்குவேன் கொஞ்சுவேன். உன்னால ஆனதைப் பார்த்துக்கோ டி. இனி குழந்தையை வைத்துப் பழி தீர்க்கணும்னு நினைச்சா நீ என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி வரும்..” என்ற உறுமலுடன் தன்னவளை ஒரு தீப்பார்வை பார்த்துச் சென்றான் அந்த பாசக்காரத் தந்தை.

சிற்பியின் பேச்சும் செயலும் ரதியின் பிடிவாதத்தை வென்று விட அதுவே இன்னும் அவன் மேலுள்ள கோபத்திற்கு எண்ணை விட்டது போல் ஆனது. எப்படி எல்லாம் அவனைப் பழி தீர்க்கலாம் என்ற யோசனையில் இருந்தவளுக்குப் பதிலாக கிடைத்ததோ அவள் வீட்டு வேலைக்குப் போய் அவனுடைய கௌரவத்தை குலைக்க வேண்டும் என்பதே.

ஆனால் குழந்தையை வைத்து அவனிடம் மறுபடியும் மல்லு கட்ட மட்டும் அவள் விரும்பவில்லை. சிற்பியின் மாமாவிடம் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கச் சொல்லி ரதி வேலைக்குச் சென்று விட அவள் போறாத காலமோ என்னமோ ரதி அப்படி வேலைக்குப் போனது பிரதாப்பின் நண்பன் வீடு. அது அவளுக்குத் தெரியாமல் போக அந்த நண்பனுக்கு அவளைத் தெரியும் என்பதால் அவளின் நிலையை உடனே பிரதாப்பிடம் தெரியப் படுத்தினான் அவன்.

இதையறிந்த பிரதாப்போ கோபமடைந்து உடனே வர்மாவுக்குப் போன் செய்ய ரிங் போனதே தவிர அவன் எடுத்தபாடில்லை. உடனே சிற்பியின் அலுவலகத்திற்குச் சென்றவன் தான் வந்திருப்பாதாக தெரிவிக்க அவனை உள்ளே அனுமதித்த சிற்பியோ தீர்க்கமான பார்வையுடன் நாற்காலியைக் காட்ட.

“நான் உன்கிட்ட உட்கார்ந்து பேச வரலை. தேவியோட வாழ்க்கையைப் பற்றி கேட்க வந்திருக்கேன்” என்று காட்டமாகப் பேச, சிற்பியோ ஒரு நொடி துணுக்குற்று

“இப்ப என்னாச்சு பிரதாப்? எதுக்கு இவ்வளவு கோபம்?”

“தேவியோட லட்சியம் தெரியாமல் அவளை வீட்டு வேலைக்கு அனுப்பிட்டு அவ படித்த படிப்பை குழி தோண்டிப் புதைக்கப் போறியா? உன்னாலே தேவியைப் படிக்க வைக்க முடியலைனா சொல்லிடு நான் ஒரு நண்பனா இருந்து அவளைப் படிக்க வைக்கிறேன்” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக பிரதாப் எகிற..

சிற்பியோ பிரதாப்பின் ஓவ்வொரு சொல்லுக்கும் தன்னுள் கொந்தளித்து தன் மனதிலுள்ள கோபத்தைக் கை முஷ்டிகளால் சமன் செய்தவன்

“என் இடத்திலேயே வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறியா? என் மனைவி மேல் நான் வைத்திருக்கிற அக்கறை பற்றி உனக்கு என்ன டா தெரியும்?” என்று பதிலுக்கு இவன் எகிற

“நீ செய்த லட்சணம் தான் இங்கு தெரியுதே. நம்பி வந்தவளுக்கு ஒரு வேலை சோறு போட வக்கில்லாம தேவிய வீட்டு வேலைக்கு அனுப்பி பச்சைக் குழந்தையையும் தாயையும் இப்படி பிரித்து வைக்கிறியே உனக்கு வெட்கமா இல்ல? தேவி எல்லோரையும் மாதிரி சாதாரணப் பெண் இல்லை வர்மா. தேவியுடைய லட்சியமே விண்வெளியில் தன் கால் பதித்து ஒரு சாதனைப் பெண்ணா வரணும் என்றது தான். அப்படிப்பட்ட அந்த பெண்ணை இப்படி மறுபடியும் வேலைக்கு அனுப்பிட்டியே? ச்ச…. நீ எல்லாம் மனுஷனா? உன்கிட்ட பேசறது எல்லாம் வேஸ்ட் தான்.. இருந்தாலும் மனசு பொறுக்காம தான் வந்தேன்..” என்ற கோபத்துடன் மேற்கொண்டு அங்கிருக்க பிடிக்காமல் விலகிச் சென்றான் பிரதாப்.

‘நான் அவ்வளவு சொல்லியும் இன்னிக்கு இந்த வேலை செய்து வைத்திருக்காள்னா அப்ப இவ மனசுல என்ன தான் நினைக்கிறா? எதை எதிர்பார்க்கிறாள்? எதுவாக இருந்தாலும் இந்த சிற்பி தழைந்து போறவன் இல்லைனு இப்பவே உனக்குப் புரிய வைக்கிறேன் டி ராட்சஸி!’ என்று மனதுக்குள் வெகுண்டெழுந்தான் சிற்பி.

தான் செய்ய வேண்டிய வேலைகளைச் சீக்கிரம் முடித்து மீதமிருக்கும் வேலையைத் தன் கீழ் உள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு விரைந்தவன் அங்கே தன் மகளின் அழகுரலே வரவேற்க தன் மாமாவிடமிருந்து குழந்தையை வாங்கும் போது அவராகவே

“தேவி எங்கே போயிருக்குனு தெரியல வர்மா. இதோ வந்துடுவேன் பா என்று சொன்ன பெண் இன்னும் காணோம். என்னாச்சுனு தெரியல வர்மா!” என்று அவர் சொல்லி முடிக்கும் நேரம் உள்ளே நுழைந்த ரதி

“செல்லக் குட்டீ! என்ன பண்றீங்க? அம்முகுட்டிக்குப் பசி வந்திச்சா? நீங்க அம்மாவைத் தேடுனீங்களா?” என்ற கொஞ்சலுடன் குழந்தையை வாங்க. மனைவியை ஒரு வினோதப் பார்வை பார்த்தபடி அவளிடம் மகளைத் தந்து விட்டு ஆண்கள் இருவருமாக விலகிச் சென்றார்கள்.

குழந்தை தூங்கியதும் அவளைத் தொட்டிலில் படுக்க வைத்து விட்டு ரதி நிமிர்வதற்க்குள் புயலென உள்ளே வந்த சிற்பி மனைவியின் கையைப் பிடித்துத் தர தரவென பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்றவன்

“நீ என்கிட்டயிருந்து என்ன டி எதிர்பார்க்கற? நிரந்தரமான பிரிவையா?”

தான் வேலைக்குப் போனதைத் தெரிந்து தான் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள்

“ஏய்! பிரிவா? அதுவும் உனக்கா? நான் அப்படி உன்ன பிரிஞ்சி போய்டுவனு நினைக்கிறியா இல்ல இப்படி எல்லாம் நான் செய்யறதால நீயே என்ன விரட்டி விட நான் பிளான் போடறதா நினைக்கிறியா? அதெல்லாம் என் செய்கைக்குக் காரணம் இல்ல. எனக்கு நீ எப்போதும் நிம்மதியாவே இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் நான் துடிச்ச மாதிரியே நீயும் துடிக்கணும் அசிங்கப்படணும். மற்றவங்க முன்னால கூனிக் குறுகிப் போகணும். அது தான் எனக்கு வேணும். அதுக்கு சாகற வரை நான் உன் கூட தான் இருப்பன்” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே ரதி அவனுக்கு வேண்டியதைச் சாதகமாகப் பேச

அதையெல்லாம் கேட்டு சிற்பியின் கண்ணுக்குள் ஒரு மின்னல் ஒளிர்ந்து மறைய ஆனால் அதை கவனிக்கும் நிலையில் தான் ரதி இல்லை.

“இந்த வேலைக்குப் போகறது மட்டும் இல்ல. இன்னும் உன் கவுரவத்திற்கு இழுக்கா என்னவெல்லாம் செய்யணுமோ அதையெல்லாம் செய்வேன்” என்று அவள் தொடர்ந்து கொண்டேயிருக்க

“ஆனா இதுக்கெல்லாம் நான் அசரவும் மாட்டேன் உன்ன அப்படியெல்லாம் செய்ய விடவும் மாட்டேன்” என்று சிற்பி உறுதிபடக் கூறவும், உன்னால் முடிந்ததை நீ பார்த்துக்க என்ற அர்த்தத்தில் ஒரு தலை சிலுப்பலையே அவனுக்குப் பதிலாக அவள் தர

அவளை ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்தவாறே விலகியவனோ சட்டென நின்று திரும்பி மனைவியை ஒரு தீர்க்கப் பார்வை பார்த்து

“என் கவுரவத்தக் கீழ இறக்குறனு சொல்லிட்டு நீ உன் லட்சியம் கனவு எல்லாத்தையும் புதைச்சிட்டு சாகறவரை ஒரு வேலைக்காரியா தான் இருக்கப் போற போல! இதுல என்னை ஜெயிச்சிட்டதா நினைச்சி துள்றியா? நல்லா யோசிச்சிப் பாரு யார் யாரை ஜெயிச்சாங்கனு உனக்கே தெரியும்..” என்ற கேலி குத்தல் பேச்சுடன் அங்கிருந்து விலகிச் சென்றான் சிற்பி.

அவன் கேட்ட கேள்வியில் ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றவளோ அடுத்த வினாடியே மீண்டும் ஒரு தலை சிலுப்பலுடன் விலகிச் சென்றாள் ரதி.

அவன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அன்று மாலை மறுபடியும் அவள் வேலைக்குச் செல்ல அதையறிந்து அவள் வருவதற்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்த சிற்பியோ மகளைத் தங்கள் அறையில் வைத்துப் பூட்டியவனோ மனைவி வந்ததை அறிந்தும் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் ஹால் ஷோஃபாவில் அமர்ந்து தன் வேலையில் மும்முரமாக இருக்க ரதியும் அவனிடம் எதுவும் கேட்காமல் மகள் வேறு அறையில் எங்கோ இருக்கிறாளோ என்று நினைத்துத் தேடியவள் குழந்தையை எங்கும் காணாமல்

இறுதியாக “பாப்பா எங்க?” என்று சிற்பியிடம் கேட்க

“….” அவனிடம் அமைதியே பதிலாக வந்தது.

“சிற்பி! உன்னத் தான் கேட்கறன் பாப்பா எங்க? என்று அவள் சற்று அழுத்திக் கேட்க, அவளை நிமிர்ந்து பார்க்காமலே

“நீ கேட்டா நான் உடனே பதில் சொல்லணுமா?”

“ஏய்! இப்படி அநியாயம் பண்ணாத.. பாப்பா எங்கனு சொல்லு” என்று அவளுக்கே தெரியாமல் சற்று கம்மிய குரலில் அவள் கேட்க, அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு பூட்டிய தங்கள் அறைக் கதவை ஒரு தலை அசைப்புடன் காட்டியவனோ

“பாப்பா தூங்குறா” என்று சொல்ல

“அதற்கு எதற்கு கதவைப் பூட்டி வச்சிருக்க? தெறந்து விடு நான் பாப்பாவப் பார்க்கணும்”

“எதுக்கு? என் மகள் வேணாம்னு தான வேலைக்குப் போன? இப்போ மட்டும் எதுக்கு தேடற?”

“பாப்பா எழுந்ததும் பசியில என்னைத் தேடுவா சிற்பி”

“அப்படியெல்லாம் என் பொண்ணு தேட மாட்டா. இப்போ தான் பாட்டில் பால் கொடுத்து தூங்க வச்சிட்டு வந்தேன். நீயும் நேற்று முழுக்க அதைத் தானே கொடுக்க சொல்லி வீம்புல இருந்த? இப்பவும் அந்த தைரியத்துல தான நான் அவ்வளவு சொல்லியும் பாப்பா வ விட்டுட்டு வேலைக்குப் போன? அதனால இனி நானும் அதையே கொடுத்து என் மகள நானே வளர்த்துக்கிறேன்”

“டேய் சோமாறி.. பேமானி.. கொஞ்சம் கூட நீ யோசிக்கவே மாட்டியா டா?”என்ற கத்தலுடன் அவள் தன் மார்பை நீவி விட்டுக் கொள்ளவும்

“ஏன்? நேற்று நீ யோசித்து சொன்னது தான? இதே வீட்டுல நான் இருந்தாலும் என் மகளப் பார்க்கவோ பேசவோ கூடாதுனு சொன்ன இல்ல? இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ. இதே வீட்டுல நீ இருந்தாலும் என் மகளுடைய முகத்தக் கூட உனக்குக் காட்ட மாட்டேன் தெரிஞ்சிக்கோ” என்று பதிலுக்குப் பதில் என்ற முறையில் சிற்பி அதே பிடிவாதத்தில் நிற்க

“நீயும் நானும் ஒண்ணா?” அதை கேட்கும் போதே அவள் கண்ணில் நீர் முட்டியது.

“ஏன் நீ வச்சிருக்கற அன்பு பாசத்தை விட என் மகள் மேல நான் வச்சிருக்கற அன்பு பாசம் எந்த விதத்துல குறைந்தது?”

“ச்சீ.. வாய மூடு.. நீ எல்லாம் மனுஷனே இல்லை!”

“என்னைக்கு டி நான் உனக்கு மனுஷனா தெரிந்திருக்கேன் இப்போ தெரிய? வேலைக்குப் போகாம என் மகளப் பார்த்துகிட்டு வீட்டிலேயே இரு. அப்போ பார்க்க விடுறேன்” ஏதோ தன் பரம்பரை எதிரியிடம் பேசுவது போல் சிற்பி தன் மனைவிக்கு இக்கட்டு வைக்க

அந்த நேரம் உள்ளே நுழைந்த சிற்பியின் மாமா ரதியின் கலங்கிய முகத்தைப் பார்த்ததும்

“என்ன தேவிமா என்ன ஆச்சி?” என்று கேட்க

தன் நெஞ்சின் மேல் ஏதோ பாராங்கல்லை வைத்து அழுதியது போல் வலிக்க அவர் முன் எதையும் செய்யவோ சொல்லவோ முடியாமல் துடித்தவள் கண்ணிலிருந்து வழியும் நீரோடு

“நான் பாப்பாவப் பார்க்கணும்” என்று மட்டும் சொல்ல

“ஏன் மா பாப்பா எங்கே? பாப்பாக்கு என்ன ஆச்சு?” என்று அவர் பதற

“பாப்பாவுக்கு ஒண்ணுமில்ல மாமா. ரூம்ல தான் தூங்க வெச்சிருக்கேன். இனி வேலைக்குப் போக மாட்டேனு இவளைச் சொல்ல சொல்லுங்க அப்புறம் வேணா இவ குழந்தையைப் பார்க்க நான் விடுறேன்” என்று சிற்பி தன் மாமாவிடம் எதிர் வாதம் வைக்க

அதைக் கேட்டு அடுத்த நொடியே சிற்பியின் சட்டையைக் கொத்தெனப் பிடித்து மாறி மாறி அவன் கன்னத்தில் அறைந்தவரோ

“என்ன டா நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? நேற்று இந்த பொண்ணு இப்படிப் பட்ட ஒரு கொடுமையை அந்த குழந்தைக்கு செய்ததுனா இன்னைக்கு நீ அந்த குழந்தைக்குப் பெரிய பாவத்தையே செய்றியே டா. உங்க ரெண்டு பேரோட எண்ணமும் முடிவும் தான் என்ன? அந்த குழந்தையை உயிரோட சாகடிக்கிறது என்ற முடிவு தானா அது? அங்கெங்கே குழந்தை இல்லாம கணவன் மனைவி ஏங்கறாங்க. தவமா தவமிருந்து பார்க்கற தெய்வங்க கிட்ட எல்லாம் கையேந்தி பிச்சை கேட்கறாங்க.

ஆனா இது எதுவும் இல்லாம உங்களுக்கு சுலபமா கிடைத்ததும் அந்த குழந்தையோட மதிப்பு தெரியாம ஆடறிங்க இல்ல? தெரியாம இல்ல தெரிந்தும் உங்க இரண்டு பேரோட பிடிவாதம் ஈகோ வெறுப்பு தான் உங்க முன்னாடி நிற்குது. அப்படி தான? சாகறவரை அதை விட்டுடாதிங்க. இப்படியே வீம்பு பிடிச்சிட்டு நில்லுங்க. அப்பறம் வயது ஏறி ரத்தம் சுண்டிப் போய் உடம்பு தளர்ந்த பிறகு நீங்களே வாழணும்னு நினைத்தாலும் உங்க வாழ்க்கை உங்க கையில இருக்காது.

இப்படி நிற்கற உங்க இரண்டு பேர் கிட்டையும் அந்த குழந்தையை விட்டுக்கொடுத்துவிட்டு நான் சும்மா பார்த்துக்கிட்டு இருப்பேனு மட்டும் நினைக்காதிங்க. அது என் வீட்டு வாரிசு. அன்று என் தங்கை சந்திராவை நான் வளர்த்தேன் பிறகு உன்னை வளர்த்தேன். இன்று என் பேத்தி உறவுல திரும்பவும் என் தங்கை சந்திரா வந்து பிறந்திருக்கா. அவளை நான் மறுபடியும் வளர்த்துக்கிறேன். அதுவும் சாகறவரை அந்த குழந்தைக்கு ஒரு நல்ல தாய் தந்தையா இருப்பேன். நிச்சயம் உங்களை மாதிரி இருக்க மாட்டேன்” என்றவர் பிடித்திருந்த சிற்பியின் சட்டையை விட்டவரோ

“நான் ஒண்ணு கேட்கிறன் அதுக்கு உண்மையான பதில் சொல்லு வர்மா!” என்று சொல்லி அவர் அவனை தீட்சயமான பார்வை ஒன்றை பார்த்தவர்

“நான் சொன்ன ஒரே காரணத்திற்காகத் தான் உன்னை வளர்த்தவன் என்ற ஒரே மரியாதைக்காகத் தான் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தேவியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்படி இருந்தா இந்த நிமிடமே அதை சொல்லிடு. நானே உங்க ரெண்டு பேரையும் பிரித்து வெச்சிடுறேன். தேவையில்லாம என்னால எதுக்கு உங்க இரண்டு பேர் வாழ்க்கையும் கெடணும்?..” என்று கேட்க அவரின் பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தான் சிற்பி.

அதே வேகத்துடன் தேவியின் பக்கம் திரும்பியவர்
“அன்றே உன் அப்பா இந்த திருமணம் உனக்கு வேணுமா வேண்டாமா என்ற முடிவ எடுக்கறதுக்கான அவகாசத்த தந்தார் இல்ல? உன்ன கைய காலைக் கட்டி மணமேடையில் அமர வைக்கல இல்ல அவர்? இல்ல நீ தான் திருமணத்திற்குப் பிறகு வர்ற கஷ்ட நஷ்டங்கள் பிரச்சனைகள் பற்றி தெரியாத சின்னப் பெண்ணா?

எல்லாம் தெரிந்து சம்மதிச்சிட்டு இன்னைக்கு உன் கடமைகள செய்ய மாட்டனோ இல்ல இப்படி எல்லாம் தான் என் இஷ்டத்துக்கு நடப்பனு பிடிவாதம் பிடித்தா என்ன அர்த்தம்?” இப்போ உன் வாழ்க்கைய விட்டுட்டு பிறகு அப்பான்னாலும் வாழ்க்கை வராது அம்மான்னாலும் திரும்ப கிடைக்காது. புரிஞ்சி நடந்துக்க” என்று அவளையும் நாலு கேள்வி கேட்டவர்

“சாவியைக் கொடு டா” என்ற சொல்லுடன் அவர் கை நீட்ட எந்த மறுப்புமில்லாமல் சிற்பி சாவியை வைக்கவும்

“இப்பவும் சொல்றன் சந்திராவ நான் வளர்த்துக்கிறேன். இனி உங்க மகளுக்கு நல்ல தாய் தந்தையரா இருக்கறதுனா மட்டும் அந்த குழந்தையிடம் நெருங்குங்க..” என்ற வாக்கியத்தை அவர் முடிப்பதற்குள் அவர் கையிலிருந்த சாவியை வேகமாகப் பறித்தவள் அதே வேகத்துடன் கதவைத் திறந்து காற்றென உள்ளே நுழைந்திருந்தால் ரதி.

இதோ கணவன் மனைவிக்குள் பிடிவாதத்துடன் கூடிய பிரச்சனை நடந்து இன்றோடு இரண்டு தினங்கள் ஆகி விட்டது. இந்த இரண்டு தினத்தில் இருவரும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தாத நிமிடமே இல்லை என்றானது. அப்படி அவர்களை வருந்தித் துடிக்க வைத்திருந்தாள் அவர்கள் மகள் சந்திரா.

பாட்டில் பால் கொடுத்ததால் குழந்தைக்கு வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டு அதனால் குழந்தை ரொம்பவே சிரமப்பட அதைப் பார்த்து இருவருக்கும் நெஞ்சில் நெருஞ்சி முள்ளே குத்தியது. டாக்டரிடம் அழைத்துச் செல்ல அவர் இருவரையும் சரமாரியாக தாளித்து விட்டார்.

“ரெண்டு பேரும் படிச்சவங்க தான? இப்படித் தான் மூணு மாத குழந்தைக்குத் தாய்ப்பால தவிர்ப்பீங்களா? பிள்ளைகள பெத்துட்டா மட்டும் போதாது. அவர்கள வளர்க்கவும் தெரிஞ்சிருக்கணும். இதுக்கு தான் பெரியவங்க யாராவது வீட்டுல இருக்கணும்னு சொல்றது” என்று பொங்கிய அந்த வயதான டாக்டருக்கு இந்த தலைமுறையினர் மேல் அப்படி என்ன கோபமோ போதும் போதும் என்ற அளவுக்குத் அவர்களை திட்டி அனுப்பினார் அவர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN